பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

11802085_867732629947604_440588056_n

திரு. சுரேஷ் ராம் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (01.08.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

18 thoughts on “படக்கவிதைப் போட்டி – 23

 1. வலை
   – பத்மநாபபுரம் அரவிந்தன் –
   வலையைப் போல் வாழ்வும் 
  வாழ்வைப் போல் வலையும்
  சிக்கலாய் இருக்கிறது ..

  வலை வீசி மீன் கிடைத்தால் 
  தற்கால சிக்கலின் முடிச்சுகள்
  சில அவிழும்..

  வீசி வீசி கைவலித்து
  மீனொன்றும் சிக்காமல் 
  வெறும் கையாய் போகயில்த் தான் 
  சிக்கலின் பெரு முடிச்சு  
  அவிழாமல் அடம் பிடிக்கும்.. 

  மீனோடு வரும் நாளில் 
  ஏராளம் பொருளிருக்கும் 
  பேத்திக்கு கொண்டுதர …

  வெறும் வலையாய் போய்நிற்க   
  தளிர் முகத்தில் வாடல் தொற்றி 
  நிலை புரிந்து தளர்ந்தாலும் 
  புன்னகைக்கும் அவள் முகத்தில் 
  புதுத் தெம்பின் மருந்திருக்கும்…

  ‘நாளைக்கு கிடைக்கும் தாத்தா’,
  என்றவள் சொல்லும் போது
  நம்பிக்கை பெருக்கெடுத்து 
  மனதினுள் பூ பூத்து 
  இரு முடிச்சும் அவிழ்ந்து விடும்.. 

 2. வலை வீசி மீன் கிடைத்தால் 
  தற்கால சிக்கலின் முடிச்சுகள்
  சில அவிழும்..

  வெறும் கையாய் போகயில்த் தான் 
  சிக்கலின் பெரு முடிச்சு  
  அவிழாமல் அடம் பிடிக்கும்.. படத்திற்கேற்ற நல்ல வரிகள்..  பத்மநாபபுரம் அரவிந்தன்.. வாழ்த்துக்கள் ….
     
    -சிவகுமாரி- 

 3. குலத்தொழில் இழிவா ?

  சி. ஜெயபாரதன்

  குலத்தொழில் செய்வதில்
  இழிவில்லை !
  இராஜாஜி வாழ்க !
  பாமர மக்களுக்கு
  இலவச உணவு தயார் செய்த
  காமராஜர் வாழ்க !
  ஆயினும் ஒதுக்கப் பட்டோர்
  விடுதலை நாட்டில்
  படிக்க முடிய வில்லை !
  ஆயிரக் கணக்கில்
  பணம் கப்பம் கட்ட என்னால்
  ஆகாது !
  பட்டம் பெற்றாலும், நாட்டில்
  சட்டம் இட்டாலும்
  என் ஜாதிக் காரனுக்கு 
  இருப்பதில்லை 
  ஒரு வேலை !
  கடவுள் படைத்த உப்புக்
  கடல் இருக்குது !
  முயன்று வாழ எனக்குப்
  படகு இருக்குது !
  பயரங்கர வேலை !
  ஆனால் மீன் பிடித்தால் எங்கள்
  வயிறும் நிரம்புது ! 
  வாழ்வும் செழிக்குது !
  வாழ்க இராஜாஜி !

  ++++++++++++++

 4. மீன் சுழல
  வலை சுழல
  நிற்கும் பரிசலும் சுழல

  மீனுக்குக் காத்திருக்கும் 
  முதியவருக்கு மட்டும் 
  தலை சுற்றவில்லை.

  மீனைப் பிடித்தே வீடு திரும்புவார்.
  அப்பொழுதுதான் வாழ்வு சுழலும்.

 5. வலை வீசி வாழும் வாழ்க்கையில்
  வாழ்க்கையே வலை வீசுகிறது,
  சிக்காத மீன்களாய் நாங்கள்….

  ஓட்டை விழுந்தால் நீரில்
  மூழ்கும் பரிசல் வாழக்கை,
  ஓட்டையை அடைத்துக்கொண்டு நாங்கள்….

  மீன்பிடி வலையில்
  சிக்கல் விழுந்த வாழ்க்கை,
  வலையில் சிக்கா மீன்களாய் நாங்கள்……

  தண்ணீருக்குள் தத்தளிக்கும்
  தடுமாற்றத் தவிப்பில் வாழ்க்கை,
  நிலைநிறுத்தும் கட்டுக்கயிறாய் நாங்கள்…..

  வாழ்க்கை ஒருமுறை தான்,
  வாழ்ந்து பார்க்க தினமும்
  கற்றுக்கொடுக்கும்
  பரிசலும் ஆற்றுநீரும்
  சிக்கல் விழும் வலைகளும்
  சிக்கியும் நழுவும் மீன்களுமே…..
          ,      இளவல் ஹரிஹரன், மதுரை.
          

 6. நேர்மை வீணையை மீட்டி
  மறைந்த கடலோரக் கவிதையே!
  ஆழம்காணா ஆயிரம் ஆழி  மனங்களின்
  உண்மைமுகம் காணத் துடிக்கின்றேன்!
  வாழ்க்கைப் படகுப் போராட்டத்தில்
  நீ வென்ற பாதையிலே
  விரைவாக நடைபோடக் காத்திருக்கும்
  இளைய சமுதாயம் எங்கே?
  சப்தஸ்வரங்களின் இன்னிசையாய்
  2020-வலிமை பாரதம் வழிகாண
  எத்தொழிலும் பேதமில்லை!
  பிச்சைத்தொழில்கூட
  தொழிலாகிவிட்ட கறைதுடைக்க
  எங்கே செல்வது சட்டக் கறை நீக்கி மருந்திற்கு?
  ஆயிரங்கோடி அறிவை அகிலத்திற்களித்த
  அற்புத ஒளிவிளக்கே!
  இன்று அறிவுஒளி இருட்டாகிக்கிடக்கிறது!
  தமிழகம் பெற்றெடுத்த நல்முத்தே!
  உன்னைப்போன்ற நல்முத்தை
  உலகெங்கும் வலைவீசித்தான் பார்க்கின்றேன்!
  வீசிய வலையில் இலஞ்ச சுறாக்கள்
  கடித்த வேதனையில் மனிதவலை
  சொல்லாமலே வாழ்க்கைக்கடலின்
  மண்பார்த்து வெகுநாளாகிவிட்டது!
  சாதித்திமிங்கிலங்கள் விழுங்கக் காத்திருக்கும்
  ஒற்றுமையின்மை சமுதாயம் காக்க
  இனி யார் வருவார்?
  ஔவைத்தமிழால் நடை பழகிய
   ஊக்க ஒளிவிளக்கே!
  உன் ஊக்கமருந்து வெளிச்சத்தில்
  இன்று வான்வெளியில் வரவேற்க 
  சொர்க்கத்தில் புஷ்பக்கூடைப் பல்லக்கு 
  தயாராகி வந்துகொண்டிருக்கிறது! 
  ஆயிரங்கோடி அறிவை அகிலத்திற்களித்த
  அற்புத ஒளிவிளக்கே!
  நீ பிறந்த தீவினிலே நானும்தானே
  ஓட்டுகின்றேன்!
  ஒரு சாண் வயிறு வளர்க்க
  ஓடாய்த் தேய்ந்தாலும் 
  தமிழ்வழிக்கல்வி செழிக்க வாய்ப்பில்லை!
   தொழில்நுட்பத்தமிழ் கல்விகாண
   உழைத்தவரே! 
  கோடி மூலையிலே நீ பிறந்திருந்தாலும்
  சாதி,மதமே இல்லா ஒற்றுமை உலகு காண
  இன்னொருமுறை பிறப்பாயா!

 7. வேடிக்கை மனிதன்

  தொடர்ச்சிகளில் 
  வெட்டுண்டு கிடக்கிறது 
  சிந்தனை…

  சிந்திக்கும் 
  கணத்துக்குள் படர்கிறது 
  தொடர்புகள்…

  இரண்டுக்குமான இடை
  வெளிக்குள் தைக்கப் படுகிறது 
  தூரங்கள்…

  தூர தேசத்துள் 
  புகாத சிறகுகளில்
  வானமேல்லை… 

  வானமே எல்லை என்பதில் 
  அக் கரை 
  இருப்பதில்லை…

  வேடிக்கை மனிதனை காணாது 
  செய்வதில் தேர்ச்சி பெறுகிறது 
  தொடர்ச்சி….

  கவிஜி 

 8. உழைப்பு

  சி. ஜெயபாரதன்

  நெற்றி வேர்வையை 
  நிலத்தில் சொட்ட வைத்தால்
  நெல் விளையும்.
  கடலில் பொழிந்தால் 
  சிப்பிக்குள்
  முத்துக்கள் கிடைக்கலாம்.
  உடலில் உயிருள்ள 
  மட்டும்
  உழைத்து உண்பதும்
  உவப்புடன்
  பகிர்ந்து கொள்வதும்
  பிறவிப் பணி.
  தாரணியில்
  உழைத்துண்டு வாழ்வாரே
  வாழ்வார்;
  மற்றெல்லாரும் அவர் நிழலில்
  பிழைத்துண்டு 
  பின் செல்பவர் தான் ! 

  +++++++++++++

 9. அரக்க எச்சம்

  வருவது
  வலை என அறியாது
  வாழ்விழக்கும் மீன்

  வாழ்விழந்த மீனால்
  வாழ்வுறும் வலைஞர்

  எங்கிருந்தோ
  இவரை குறி பார்க்கும்
  இலங்கை அரக்கன்

  உயிர்மைக்கானப் போராட்டம்
  உடன்வரும் இடரை
  உணர்வதில்லை

  கொல்வதற்கும்
  கொல்லப்படுவதற்கும்
  நியாயங்கள் உண்டு

  முன் இரண்டும்
  இயற்கை அங்கீகரித்த
  எல்லா உயிர்க்குமான
  அடிப்படை விதி

  மூன்றாவது மட்டும்
  பரிணாம வளர்ச்சியில்
  மனிதன் பெற்ற 
  அரக்க எச்சம்!

 10. கரை சேருமா வாழ்வு….
  கவனங்கொள் மனிதா!

  கரையில் மனைவி
  கைக்குழந்தையுடன்…..
  நினைவில் கொள் மனிதா!

  வலையில் விழுந்த சிக்கல்
  வாழ்வில் விழும் முன்
  தீர்வைத் தேடிக் கொள!

  சிக்கவில்லை மீன்களெனச்
  சிக்கலில் தவிக்காதே….
  இக்கரையில் கவலையுடன்
  இங்கோர் உயிர் கண்ணீரில்….

  பரிசல் பயணம்தரும்
  பரிசு உனக்கு மட்டுமல்ல…நீ
  கரை சேரும் வரை தாலிக்
  கயிற்றைக் கெட்டியாய்க் கொண்ட
  மனைவி மக்களுக்குமே….

  கவனங் கொள்
  நினைவில் கொள்
  கவலை தீர்
  கரையேறு
  கரையேறும் உன் வாழ்வு.
                இளவல் ஹரிஹரன்

   

 11. தன் மானம் உள்ள மனிதன்

  கடல் நீரில் கரிக்கும் உப்பு அவன்
  கண்களின் வழிந்த கண்ணீரின் செறிவு!
  ஆடும் அலைகளின் நிரந்தரம் சொல்லும்
  அவன் வாழ்வு விளிம்பின் தராதரம்!
  இரு கைகள் பற்றிய வலைகளோ அவன்
  இரும்பு மனத்தின் இறுக்கம் போல்!
  தளராத உழைப்பைப் பகிர்ந்திட – ஓடம்
  அளவிலா நிறைவுடன் நகர்ந்திடும்
  வாழ்க்கைத் தத்துவம் உணர்த்தியே!
  மானம் உள்ள மனிதனின் உழைப்பை
  உன்னதாமாக்கியே மிதக்கிறது ஓடம்!
  புனிதா கணேசன்
  31/07/2015

 12. ஆழங்காணாக் கடலில்
  மூழ்கிய தமிழைத்
  தேடுகிறேன்!
  தமிழ்ப் பண்பாடு
  காணாததால்
  வெட்கப்பட்டு ஒளிந்ததோ!
  வான் கடலுக்கும்
  எல்லையில்லை!
  வாழ்கின்ற மனிதருக்கும்
  எதுவும் சொந்தமில்லை!
  ஆறடி மண்கூட
  கடலில் மறைந்தால்
  சொந்தம் கிடையாது!
  கங்குகரை காணா தமிழ்க்கடலே!
  பண்பாட்டை மறந்த
  மக்களுக்கு யார் கற்றுத் தருவார்
  யாதும் ஊரே யாவரும் கேளிர்!

 13. தகிக்கும் வெயிலானால் என்ன
  நடுநடுங்கும் குளிரானால் என்ன
  உழைத்தால் தானிங்கு
  எண்சான் வயிறு நிரம்பும் !
  துள்ளித் தாவும் மீன்கள்
  காணும் கண்களை
  கவர்ந்திழுத்தாலும் – இங்கு
  வலையில் துள்ளும் மீன்களே
  எம் உள்ளந்தனை
  நிறைவாக்கும் !
  கொட்டும் மழைக்காய்
  இங்கே நாளும் தவம் –
  நிரம்பியோடும் நீரே
  எம் வாழ்வாதாரம் !
  படகும் வலையும்
  எமக்கு அன்னமிடும் !
  வயிறும் தான் வாடாது
  நாளும் காத்திடும் !
  உழைப்பு மட்டுமே
   உறுதுணை ஆகும் !
  உறுதியுடன் – அயர்விலா
  முயற்சியுடன் – சுழலும்
  எம் வாழ்வு நாளும்
  இப் புவியின் மடி மீதே !

 14. வலை வீசு…

  வலையை வீசி மீன்பிடித்தல்
       வாழ்க்கை யதனின் தத்துவமே,
  நிலையே யில்லா வாழ்வதுவும்
       நினைப்பது போல அமைந்திடாது,
  வலையில் என்றும் கிடைப்பதில்லை
       வருகையில் நிறைய சேர்ந்துவரும்,
  இலையாம் தாமரை நீர்போல
       இருந்திடு செயல்படு வென்றிடவே…!

  -செண்பக ஜெகதீசன்…

 15.   படம் 23 
  கலங்காது வாழ்வை….

  கூடை நிரம்பும் வரை வலையெறிதல்
  கூடியுண்ண வைக்கும் குடும்பத்தை, இங்கு
  கொட்டும் மழையானால் என்ன! தகிக்கும் 
  கொடுமை வெயிலானால் என்ன! சாவுக்கும்
  வாழ்விற்கும் நடக்கும் போராட்டமே வலையெறிதல்!
  வீழ்ந்து அல்லலுறுவது பலர் வாழ்வு
  இலங்கையர் இந்தியரென்று, எல்லை மீறுதலென்று
  கலங்காது வாழ்வை சுகித்தல் என்றோ!

 16. அலைதவழும் ஆழியிலே 
  குலைநடுக்கும் குளிரினிலும் 
  உலைகொதிக்க வேண்டுமெனில் 
  தொலைதூரம் படகில்போய் 
  வலைவீசி மீன்பிடித்து
  கலையாத கனவோடு 
  விலைபோகு மென்றுநம்பும் 
  நிலைதானே நித்தமுமே …!!

 17. வயது முதிர்ந்த அம்மா அப்பா 
  மனைவி ஆறுக்குழந்தைகள்  
  அதிலும்
  ஐந்துக்குழந்தைகள் பெண் யென
  எல்லாம் எனக்கு தந்த கடவுள் 
  வறுமையும் தரும் வள்ளலாகி போனான்
   
  அந்த வள்ளல் தந்த 
  வாழ்வை வாழ
  பலரையும் வாழ வைக்கும் 
  தாய்மடியாம் உன்னிடம் 
  கை ஏந்துகிறேன் வலை வீசி

  உயிரானவற்றை கொன்று தீன்றும் 
  மனிதனுக்கு உயிரான உறை
  பொருளானவற்றை உன்னிடம் கேட்கிறேன் 
  நான் வலை வீசி 
  நீ இரக்கப்பட்டு வலிய
  தந்த மீன்களுக்கும் 
  கரையிலிருந்தபடி ஒருவன்
  அடிமாட்டு விலைக்கு பிடிங்கிக் கொள்கிறான்

  பொதுவுடைமை பேசும் பலரும் 
  பேசி மட்டுமே கொண்டிருப்பார்கள் 
  எம் நாட்டில் 
  மெய் வருத்த கூலி தரும் 
  பழமொழி யெல்லாம்  பழைய மொழியானது
  எனது வறுமையில் 

  மீதம் கொண்ட பணத்தை கொண்டு 
  என் மனது வாழக் கற்றுக்கொண்டாலும் 
  வயிறு வாழக் கற்றுக் கொள்வதில்லை
   
  அரை வயிற்றை நிறைத்து 
  அரை வயிற்றை  ஈரத்துணியால் 
  கட்டுவதில் தான் எங்கள் வாழ்வில் ஆனந்தமோ  
  எங்கள் விழிகளில் கசியும் 
  உவர்ந்த நீரூக்கு மட்டும் தெரியும்…………..

                                           -பாரதி.செ

         

 18. அலை மேல் மிதக்கவிட்டான் – எங்களை
  அய்யகோ  அழவும்விட்டான்
  வலையை விரிக்கவைத்து – எங்களை
  மீன் போல் துடிக்கவிட்டான் 
  மண்   மேல் துடிக்கவிட்டான் 
  ()

  படகைபோல்  என்பு தோலினை கொடுத்து
  துளையைப் போட்டவன் யாரோ
  செதில்செதிலாக சிதைத்தே வாழ்வினை
  வினையெனச் சொல்லிடுவாரோ
  வறுமையோடும் பசிப்பிணியோடும் 
  பிறந்துவிட்டோம் பெரும் துயரம்
  கடமையென்றென கடன்பட்டோம் – இக்
  கடலிடம் எங்களின் மரணம் ()

  காற்றும் வீசிடும் திசையில் சென்றிடின்
  எல்லைத் தாண்டிட சிறைதான்
  வீசிடும் வலையினில் சிக்காமல்மீன்
  கூட்டமும் வஞ்சனைக் கிறைதான்
  பார்க்கும் வரையினில் தண்ணீர்தானே
  தாகம் தணித்திட வருமோ
  ஊரும் நாடும் ஆளும் அரசும்
  உதவிட கைகள் தருமோ  ()

Leave a Reply

Your email address will not be published.