”கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை”
கிரேசி மோகன்
இன்று ”கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின்” பிறந்த நாளில் அடியேனின் மலரும் நினைவுகள்….இளமையில் ”தண்டமிழ் கொண்டல் சிதம்பரம் ஸ்வாமினாதன்” தலைமையில் ”சிந்தனைக் கோட்டம்” என்ற அமைப்பில், வாராவாரம் கவிஞர்கள் சுகி சிவம், வானவில் பண்பாட்டு நிலையத்தின் தலைவர் வக்கீல்/ கவிஞர் க.ரவி, எனது தோழன் சு.இரவி எல்லோரும் கூடி கவிகளை பாடி மகிழ்வார்கள்….இந்த அஷ்ட திக் கஜங்களுக்கு மத்தியில் அடியேன் தெனாலி ராமன் போல் அமர்வதுண்டு….அப்போது எங்கள் கிருஷ்ண தேவராயர் ”தண்டமிழ் கொண்டல்” ‘ துலங்குவெண் நீறு துனிப்பிறைக் கோடு துணைக்கரங்கள்” என்று துவங்கும் கட்டளைக் கலித்துறை பாடல் இன்னமும் என் காதில் ஒலிக்கிறது….அதே போல் ”கொத்து வேப்பிலை கைத்தலத்திடை-வைத்த நற்குங்குமச் சிலை-தொழ- வாடும் உன் மன்மதக் கலை” என்ற சுகி சிவத்தின் பாடல் எனது முதல் கவிதை அறிமுகம்….க.ரவி நன்றாக ஆழ்ந்த பொருளோடு மேடையில் கம்பீரமாகப் பேசுவார்….நாங்கள் எல்லோரும் பிற்காலத்தில் ”சுகி சிவம்” சிறந்த கவிஞராகவும், மகாகவி பாரதியாரின் தத்துப் பிள்ளை ”க.ரவி” சிறந்த பேச்சாளராகவும் வருவார் என்று பேசிக் கொள்வதுண்டு….ஆனால் ”சுகி சிவத்தை” வீராவேசமாகப் பேசும் மேடைப் பேச்சாளராகவும், ”க.ரவியை” நளினமான யதார்த்தக் கவியாகவும் ”காலமாம் மரத்தில் அண்ட -கோலமா மரத்தின் மீது -காளி சக்தி என்ற பெயர் கொண்டு -ரீங்காரம் இட்டு உலவும் ஒரு வண்டு”, பிரகருதி எங்கள் எண்ணத்திற்கு மாறாக மாற்றி அமைத்து விட்டது….வெற்றியையும் அருளியது….வாழ்க சக்தி….ஒரு கவிமன்றத்திற்காக நாங்கள் ”ஆம்பூர்” சென்றபோது, தொத்திக் கொண்ட என்னையும் மேடையில் கவிதை கத்தச் சொல்லி கட்டளைக் கலித்துறை இட்டார் ”தண்டமிழ் கொண்டல்” அய்யா…தட்ட முடியாது….காரணம் அவர் என் தம்பிக்கு தமிழ் ட்யூஷன் வாத்தியார்….வேறு வழியில்லாமல் ஆம்பூர் சத்திர தொட்டியில் குளித்தபடி ஒரு கவிதை யோசித்துப் பாடினேன்….அது….”முகிலாண்ட இமயத்து, முக்கண்ணன் இதயத்தில்-முருகாக நின்ற உமையே-அகிலாண்ட நாயகி, அகலாதென் உள்ளத்தில் அணுவாக நின்ற சுமையே- அகிலுண்ட வாசத்தின் அலையான கேசத்தின் – ஆறாத பாரத்தினால்-துகிலாண்ட இடைசற்று துவளவே நடையிட்டு-துணையாக வா காளி நீ”….என் முதல் கவிதை இது….அப்போது என் தோழன் சு.இரவி, அடிக்கடி ”கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின்” உமர்கய்யாம் மொழிபெயர்ப்பை என்னிடம் மனதில் பதியும் வண்ணம் கூறுவான்….”வெய்யிலுக்கு ஏற்ற நிழலுண்டு-வீசும் தென்றல் காற்றுண்டு-கையில் கம்பன் கவி உண்டு-கலசம் நிறைய மதுவுண்டு”…..இந்த எளிமையான வரிகளின் தாக்கம் இன்னமும் எனக்குண்டு….பிற்காலத்தில் தேசிக வினாயகம் பிள்ளையின் இந்த மீட்டரில் அடியேன் க்ரேசிக வினாயகம் பிள்ளை(கவிதைக் குழந்தை) எழுதிய பாடலை பகிர்ந்து கொள்கிறேன்….
இட்டிலி சாம்பார் வடையுண்டு
இனிக்கும் டிகிரி காப்பியுண்டு
பட்டுத் துளிர்வெற் றிலையுண்டு
புகையிலை வறுவல் சீவலுண்டு
விட்டம் சுற்றும் ஃபேன் உண்டு
வீசும் ஏஸிக் காற்றுண்டு
கட்டுரை கதைகள் பலவுண்டு
கல்கி தேவன் அதிலுண்டு….கிரேசி மோகன்….