எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா

apj-abdul-kalam-650-ap_650x400_71438008626
வல்லரசு நல்லரசு எனமனதில் கொண்டுநிதம்
வல்லவராய் நல்லாவராய் வாழ்ந்துநின்ற மாமனிதர்
எல்லோரின் மனங்களிலும் இருந்தமர்ந்த கலாமவர்கள்
இல்லை என்றுசொல்லிவிட எம்மனது அழுகிறது !

ஈடில்லா விஞ்ஞானி எமைவிட்டுப் போனசெய்தி
நாடெல்லாம் நினைந்தழவே நமன்கூட நடுங்குகிறான்
விஞ்ஞானி தனையழைத்து விண்ணவரோ மகிழுகின்றார்
மண்மீது இருப்போரோ மனம்நொந்து தவிக்கின்றார் !

அப்துல்கலாம் ஐயா அனைவருமே அழுகின்றார்
அணுத்துறையும் உமைத்தேடி அலமந்து நிற்கிறது
அமைதியாய் இருந்துகொண்டு அனைத்தையும் செய்துநின்றாய்
அழுகின்றோம் கலாமையா அழகுமுகம் காணாது !

கனவுகாணச் சொல்லிவிட்டு காணாமல் போனதெங்கே
கனவுநனைவு எல்லாமே கலாமாக இருக்கிறது
காலனிடம் சென்றநீங்கள் கனவுகாணச் சொல்லிவிட்டு
கடுகதியாய் இங்குவந்து காட்டிடுங்கள் முகத்தையையா !

இங்கிருக்கும் பிள்ளைகளோ ஏக்கமுடன் இருக்கின்றார்
எங்கள்கலாம் ஐயாவை எப்படிநாம் பார்ப்பதென
தங்கத் தமிழ்மகனே தரமிக்க தமிழ்க் கவியே
உங்களது இழப்பாலே உலகமே அழுகிறது !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *