Month: November 2016

  • அனைவருக்கும் வேண்டுமையா !

       ( எம் .ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்த்திரேலியா )

     

     

    நூல்கள்பல கற்றாலும்

    நுண்ணறிவைக் காணவில்லை

    மால்மருகா வேல்முருகா

    மனமெல்லாம் குழப்பமையா

    நால்வேதப் பொருளோனே

    நம்பியவர்க் கருள்பவனே

    நாளுமுனைத் துதிபாட

    நற்கருணை தாருமையா !

     

     

    சூரர்தமை அழிப்பதற்கு

    சுடராக வந்தவனே

    பாரினிலே பலசூரர்

    பாதகங்கள் செய்கின்றார்

    யாருமே அவர்பக்கம்

    பார்ப்பதற்கு அஞ்சுகிறார்

    வேலவனே உன்வேலை

    விட்டுவிடு விரைவுடனே !

     

    ஆணவத்தை அழிப்பதற்கு

    அரனுன்னை அனுப்பிவைத்தார்

    ஆணவமோ இவ்வுலகில்

    அரியணையில் இருக்கிறதே

    ஆண்டவனை இப்போது

    வேண்டாது எனக்கூறும்

    ஆணவத்தை அழிப்பதற்கு

    ஐயாநீ வேலைவிடு !

     

    சஷ்டிவிரதம் இருப்பார்க்கு

    சங்கடங்கள் போகுமென்பார்

    கஷ்டம்பல இருந்தாலும்

    சஷ்டியை நாம்விடுவதில்லை

    துஷ்டர்பலர் வந்திங்கு

    கஷ்டம்பல கொடுக்கின்றார்

    இஷ்டமுடன் நீயிரங்கி

    எமக்கருள்வாய் கந்தவேளே !

     

    முருகாவுன் திருநாமம் முழுவுலகம் ஒலிக்கிறது

    தெருவெங்கும் உன்கோவில் சிறந்தோங்கி இருக்கிறது

    அருளான உன்னாட்சி அகிலமதைக் காப்பதற்கு

    ஐயாவுன் அருள்நோக்கே அனைவருக்கும் வேண்டுமையா !

     

    விழுந்தாலும் உன்நாமம் எழுந்தாலும் உன்நாமம்

    விருப்பமுடன் எம்மனதில் வீறுகொண்டு வருகிறது

    விண்ணவரைக் காப்பதற்காய் வேலுடனே வந்தவனே

    மண்ணுலகில் உள்ளார்கள் மனம்திருந்த வரம்தருவாய் !

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (216)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் தாம் வாழும்காலம் மட்டும் உடல்நலக் குறைவுகளை நிவர்த்தி செய்யும் உரிமை ஒரே விதத்தில்தான் அமைந்துள்ளது. ஆனால் அது எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியப்படுகிறது என்பது கேள்விக்குறியே! ஒவ்வொரு மனிதனுடைய பொருளாதார நிலையும் வித்தியாசப்படுவது இயற்கையே. ஆனால் அவர்களுக்குக் கிடைக்கும் வைத்திய வசதிகள் அவர்களின் பொருளாதாரத்தில் தங்கியிருப்பது இந்த 20ஆம் நூற்றாண்டில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வா?

    எமது பின்புல நாடுகளில் பணமிருப்பவர்கள் தனியார் மருத்துவமனைகளில் தமது வசதிகளுக்கேற்ப நவீன வசதியுடன் சிகிச்சைகளைப் பெறுவதும், வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் அரசாங்க வைத்தியமனைகளில் கிடைக்கக்கூடிய சிகிச்சையை மட்டுமே பெறும் நிலை காணப்படுவது சகஜமாக ஏற்றுக்கொள்ளப் படுகிறது. இங்கிலாந்தில் இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று 1946ஆம் ஆண்டு முதல் கோஷம் முன்வைக்கப்பட்டது. சிகிச்சையைப் பொறுத்தஅளவில் பொருளாதாரத்தில் எந்நிலையில் இருந்தாலும் அனைவரும் சிகிச்சை பெறுமிடத்தில் ஒரே தராதரத்தில் சிகிச்சை பெற வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதன் விளைவாக 1948ஆம் ஆண்டு அது சட்டமாக்கப்பட்டது. அதன் விளைவே இன்று நாம் இங்கிலாந்தில் அனுபவிக்கும் சிகிச்சை வழிகள். இந்த அரசாங்க அமைப்பு “தேசியச் சுகாதார சேவை ( National Health Service – NHS) என்றழைக்கப்படுகிறது.

    பணிபுரியும் அனைவருடமிருந்தும் அவர்களது ஊதியத்தில் ஒரு சிறுஅளவு அரசாங்கத்தினால் தேசியப் பாதுகாப்பு நிதிக்காக அளவிடப்படுகிறது. அதன் காரணமாக நாட்டிலுள்ள அனைவருமே இலவச சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இப்போது பல கேள்விகள் பலமுனைகளில் இருந்து கிளம்பியுள்ளது. இன்றைய பொருளாதாரச் சிக்கலான காலகட்டத்தில் இங்கிலாந்து அரசாங்கத்தினால் இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த இலவசச் சுகாதரச் சேவையைத் தொடர முடியும்? என்பது பொதுவான ஒரு கேள்வியாகிறது. சுமார் 60 வருடங்களுக்கு முன்னால் இருந்த இங்கிலாந்துக்கும் இன்றைய இங்கிலாந்துக்கும் இடையில் பல வேறுபாடுகளுண்டு. ஜனத்தொகையின் பெருக்கம் பல மடங்காகியுள்ளது. அது மட்டுமின்றி பல நவீன மருந்துகளினால் மனிதர்களின் வாழ்க்கைக் காலம் நீட்சியடைந்துள்ளது. அதிகமான முதியவர்கள் தமது 90 வயதுகளையும் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான வைத்தியத் தேவைகள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமுள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தினால் இச்சுகாதாரச் சேவைக்காக ஒதுக்கப்படும் நிதியில் பெரிய பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் பல வைத்தியசாலைகளில் அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் குன்றிப்போயுள்ளதாக பல புகார்கள் வந்த வண்ணமுள்ளது. டாக்டர்கள், தாதிமார்கள் மற்றைய பணியாளர்களின் ஊதியம் பலகாலமாக மிகவும் குறைந்த அளவிலான வீதத்திலேயே அதிகரிக்கப்பட்டிருப்பதால் இத்துறைகளில் பணிபுரிவோர் அதிக அளவில் பணிகளுக்காக அந்நியநாடுகளுக்குச் செல்லும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இத்தகைய ஒரு சூழலில் இப்போது ஒரு பிரச்சனை பூதாகரகமாகக் கிளம்பியுள்ளது. இதுவரைக் காலமும் யாராவது இங்கிலாந்துக்குச் சுற்றுலாப் பயணிகளாக வந்த இடத்தில் உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால், அவர்களுக்கான சிகிச்சையும் இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் சில வருடங்க:ளுக்கு முன்னால் அரசாங்கம் இங்கிலாந்துக்குச் சுற்றுலாப் பயணிகளாகவோ அன்றி உறவினர்களைப் பார்ப்பதற்காகவோ வரும் எவரும் இங்கிலாந்துப் பிரஜைகளாக அன்றி இங்கிலாந்தில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெற்றவர்களாக இல்லாதவிடத்து வைத்தியச் செலவுகள் அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டும் எனும் சட்டம் இயற்றியது. ஆனால் இன்றுவரை இந்தச் சட்டம் முழுமையாக அமுல் நடத்தப்படுவதில்லை என்றும் ஏறத்தாழ 250 மில்லியன் வரையிலான இங்கிலாந்து பவுண்ட்ஸை இங்கிலாந்து வைத்தியத்துறை வருடமொன்றுக்கு இழக்கிறது என்றும் ஒருதரப்பினால் கணிக்கப்பட்டுக் கூறப்படுகிறது.

    இதுபற்றிய செய்தி ஒன்றுக்கு இங்கிலாந்து ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கடந்தவாரம் செய்தி வெளியிட்டிருந்தது. இங்கிலாந்தின் ஒரு முன்னணி வானொலி ஊடகமான எல்.பி.சி. எனும் வானொலி நிலையத்தின் நிகழ்வொன்றை நான் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது சமீபத்தில் செவிமடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. காலநேரம் திரு. நிக் வெராரி என்பவரால் நடத்தப்படும் ஒரு நேயர்களுடனான சம்பாஷணை நிகழ்வாகும். அப்போது ஊடகங்களில் பிரஸ்தாபிக்கப்பட்ட அந்தச் செய்தி ” ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப்பெண்  நைஜீரியா நாட்டிலிருந்து விருந்தினராக இங்கிலாந்துக்கு வந்திருக்கும்போது மூன்று குழந்தைகளுக்குத் தாயாகிறார். அவருக்கான பிரசவ வைத்தியம் இங்கிலாந்து வைத்தியர்களினால் இலவசமாகச் சகல வசதிகளுடனும் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவு 146000 இங்கிலாந்துப் பவுண்ட்ஸ்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. “இந்தப் பணம் ஏன் அவரிடமிருந்து அறவிடப்படவில்லை?” என்பதுதான் ஊடகங்களின் கேள்வியும் குற்றச்சாட்டும்.

    அதுபற்றிய தொடர்ந்த தொலைபேசிச் சம்பாஷணையில் வானொலி நிலையத்தைத் தொடர்பு கொண்ட நைஜீரியப் பின்புலத்தைக் கொண்ட ஒரு நேயர் “நைஜீரியாவைப் பின்புலமாகக் கொண்ட பலர் இந்நாட்டில் சட்டபூர்வமாகப் பணிபுரிந்து அரசாங்கத்துக்கு வரி செலுத்தி வருகிறார்கள், பின் எதற்காக நீங்கள் நைஜீரிய மக்களைப் பற்றிக் குறைவாக விமர்சிக்கிறீர்கள்?” என்று அந்நிகழ்ச்சித் தொகுப்பாளரான நிக் வெராரியிடம் கேட்டார். அதற்கு அவர் மிக அமைதியாக “ஒரு ஊடகவியலாளரின் பார்வையில் எது முக்கியச் செய்தியாகிறதோ அதை அலசுவதே எனது பணி. இம்முக்கியச் செய்தியின் சாரம் அப்பணத்தை அறவிடாத நிர்வாகக் குறையைச் சுட்டிக் காட்டுவதேயன்றி அந்த நைஜீரியப் பெண்மணியின் மீது குற்றம் கூறுவதல்ல. இச்செய்தியில் சம்பந்தப்பட்டவர் நைஜீரியப் பென்மணி அல்லாது ஒரு அவுஸ்திரேலியப் பெண்மணியாக இருப்பினும் விளைவு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உங்களைப் போலவே நானும் இந்நாட்டில் சட்டபூர்வமாக வரி செலுத்தி வாழும் பல நைஜீரிய பிரித்தானிய பிரஜைகளை அறிவேன். எனவே தயவுசெய்து இது நைஜீரிய நாட்டினருக்கெதிரான ஒரு விமர்சனம் என்று பார்க்காதீர்கள்”என்றார்.

    இந்நிகழ்வினைக் கேட்டதும் என் மனத்திலும் சிந்தனைகள் பறக்கத் தொடங்கின. இந்நாட்டில் சிறுபான்மையினர் எனும் எண்ணத்தோடு நாம் வாழும்வரைச் செய்திகளில் எம்மவர்கள் சம்பந்தப்பட்டால் அது எம்மீது தொடுக்கப்பட்ட ஒரு கெளரவப்பிரச்சனையாகச் சிந்திக்காமலே முடிவெடுத்து விடுகிறோமோ எனும் எண்ணம் என்னுள் கிளர்ந்தது. இந்நாடு நம் அனைவருக்கும் பொதுவானது. இந்நாட்டின்வளர்ச்சியும், தாழ்ச்சியும் எம்மையும், எமது சந்ததியையும் தான் பாதிக்கப்போகிறது. இந்நாட்டின் நிர்வாகம் சரியாக நடத்தப்படாததையிட்டு நாமும்தான் வருந்த வேண்டும். ஆனால் அதில் எம்மைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் ஏனோ அதனுள் இருக்கும் உண்மையான செய்திகளை மனம் உள்வாங்கிக் கொள்ள மறுப்பது எமது தனிமனிதக் குறைபாடா? இல்லை ஒட்டுமொத்தமாக எமது கலாசாரக் குறைபாடா?

    மீண்டும் அடுத்த மடலில்…
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • காவிரி புரக்கும் நாடு – 1

    -மேகலா இராமமூர்த்தி

    ஆற்றங்கரைகளில்தாம் பெரும்பான்மையான மனித நாகரிகங்கள் தோற்றங்கொண்டன என்பது ஆய்வாளர்கள் கருத்து. நைல் (Nile) நதிக்கரையில் தோன்றிய எகிப்திய நாகரிகமும், யூப்ரடிஸ் (Euphrates), டைகரிஸ் (Tigris) நதிக்கரைகளில் தோன்றிய சுமேரிய (இன்றைய ஈராக்) நாகரிகமும், சிந்துநதிக்கரையில் (Indus River aka Sindhu River) தோன்றிய சிந்துசமவெளி நாகரிகமும் ஆய்வாளர்களின் கருத்துக்கு அரண்சேர்ப்பதாய் அமைகின்றன.

    குறிஞ்சி (மலைசார் நிலம்), முல்லை (காடுசார் நிலம்), நெய்தல் (கடல்சார் நிலம்) என்று எத்தனையோ வாழிடங்களை இயற்கை மனிதர்களுக்குத் தந்திருக்க, மருதநிலப்பகுதியாக அறியப்படும் ஆற்றங்கரைகளில் மட்டும் நாகரிகம் தோன்றுவானேன் என்று நாம் வினவலாம்.

    “மனிதர்கள் வேளாண்மைசெய்யக் கற்றுக்கொண்டது மருதநிலத்தில் குடியேறிய பின்னர்தான்! நகரங்கள் முதன்முதல் தோன்றியதும் உழவுத்தொழிற்குச் சிறந்த மருதநிலத்திலேயே. உழவுத்தொழிலும் நிலையான குடியிருப்பும், ஊர்ப்பெருக்கமும் நாகரிகம் தோன்றுவதற்குப் பெரிதும் துணை செய்தன. உழவுத் தொழிலால் வேளாண்மையும், பதினெண் பக்கத் தொழில்களும், பிறதொழில் செய்வார்க்கும் போதியவுணவும், வாணிகமும் ஏற்பட்டன. நிலையாகக் குடியிருப்பதனால் உழவன் ’குடியானவன்’ எனப் பெற்றான். ’இல்வாழ்வான்’ என்று திருவள்ளுவரால் சிறப்பித்துச் சொல்லப் பெற்றவனும் உழவனே” என்று ஆற்றங்கரைகளில் நாகரிகம் தோன்றி வளர்ந்ததை விளக்குவார் பாவாணர்.

    நம் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் நல்லதோர் நாகரிகத்தை இங்கே தோற்றுவித்த பெருமை பூ விரியும் சோலைகளைத் தன்பாதையெங்கும் பரப்பிய காவிரியாற்றுக்கு உண்டு. வற்றாத சீவநதியாய், (ஒருகாலத்தில் திகழ்ந்த) காவிரிப்பேராறு தமிழகத்தை…குறிப்பாக, அன்றைய சோழநாட்டை வளங்கொழிக்கும் பொன்னாடாக்கியது வரலாற்றுண்மை! அதனால்தான் சோழநாட்டை ’வளநாடு’ என்றும் அதனையாண்ட அரசனை ’வளவன்’ என்றும் புலவர்களின் பொய்யாச் சிறுநா புகழ்ந்து பாடிற்று. ’சோழவளநாடு சோறுடைத்து’ எனும் பழமொழிக்குக் காவிரியே காரணம் என்பதை யாரே மறுப்பர்?

    cauvery1கன்னட நாட்டின் (கர்நாடகா) குடகுமலையிலுள்ள தலைக்காவிரி எனும் பகுதியே காவிரியின் பிறந்தகம். இதனையே ’குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி’ என்று மலைபடுகடாமும் குறிக்கின்றது. குட(கு)மலையிலிருந்து துள்ளிக்குதித்துவரும் காவிரிப்பெண்ணாள், ஹசன், மாண்டியா, மைசூரு, பெங்களூரு எனும் பல்வேறு கன்னட மாவட்டங்களைக் கடந்து தன் கடற்காதலனைத் தேடித் தமிழகத்துக்குள் நுழைகின்றாள். தருமபுரி, சேலம், ஈரோடு, திருச்சிராப்பள்ளி என்று ஒவ்வொரு பகுதியாகத் தாண்டி, காதலனைக்காண நெடும்பயணம் மேற்கொண்டுவரும் அவள், சிராப்பள்ளியைக் கடந்ததும் அகண்ட காவிரியாய் ஆர்ப்பரித்து வருகின்றாள். தஞ்சையை நெருங்க நெருங்கத் தன் தலைவனைச் சந்திக்கவேண்டும் எனும் ஆவல் மீதூர, அரிசிலாறு, வெண்ணாறு வெட்டாறு என்று பல கைகளை (இவை காவிரியின் கிளைகள்) நீட்டியபடிப் பாய்ந்தோடி வருகின்றாள் அப் பாவை.

    cauvery3முற்காலச் சோழர்களின் பொற்புடைத் தலைநகராய்த் திகழ்ந்த பூம்புகாரில் நுழைந்து, தனக்காக வழிமேல்விழிவைத்துக் காத்திருக்கும் வங்கக் கடலரசனோடு தன் தங்கக் கைகோக்கிறாள் அந்தத் தையல். சம்பு எனும் பெண்தெய்வத்தின் காவலில் இருந்தமையால் ’சம்பாபதி’ எனும் பழம்பெயர்கொண்டிருந்த பூம்புகார் நகரம், காவிரி தன்னுள் புகுந்து செல்வதனாலேயே ’காவிரிப்பூம்பட்டினம்’ எனும் புதுப்பெயர் கொண்டதாக மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகின்றது.

    கருநாடகம் தொடங்கித் தமிழகம் ஈராகக் கிட்டத்தட்ட 800 கி.மீ தூரம் பயணிக்கும் காவிரிப்பேராற்றின் நீளமும் பயணத்தூரமும் கன்னடத்தைவிடத் தமிழகத்திலேயே அதிகம் என்பது ஈண்டுக் கருதத்தக்கது.

    இனி, தமிழகத்தின் பெருவளத்துக்குக் காரணமாயிருந்த காவிரிப்பேராறு குறித்து நம் பைந்தமிழ் இலக்கியங்கள் செப்புவது என்ன என்பதைக் கண்ணுறுவோம்.

    சங்க இலக்கியங்கள் என்று குறிக்கப்படுபவை பாட்டும், தொகையும் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு). இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்றும் அழைப்பர். இச்சங்கநூல்கள் காவிரியாற்றைக் குறித்து ஒன்றல்ல… இரண்டல்ல…முப்பத்தேழு இடங்களில் வாயூறிப் பேசுகின்றன என்பதை அறியும்போது உண்மையில் வியப்பே மேலிடுகின்றது. அவற்றில் சிலவற்றை நாமும் அறிந்துகொள்வோம்!

    karikaala_chozanபத்துப்பாட்டு நூல்களில் இரண்டாவதாக வைத்தெண்ணப்படும் பொருநராற்றுப்படை, முடத்தாமக்கண்ணியார் எனும் நல்லிசைப்புலவர் கரிகாற்பெருவளத்தான்மீது பாடியதாகும். 248 அடிகளுடன், ஆசிரியமும் வஞ்சியும் விரவிய நடையுடைத்து இந்நூல். இதன் இறுதிப்பகுதி, புகாரைப் புரக்கும் காவிரியைக் கற்கண்டுச் சொற்கொண்டு வருணிக்கின்றது.

    ….பன்மாண்
    எல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்
    குல்லை கரியவுங் கோடெரி நைப்பவும்
    அருவி மாமலை நிழத்தவு மற்றக்
    கருவி வானங் கடற்கோள் மறப்பவும்
    பெருவற னாகிய பண்பில் காலையும்
    நறையும் நரந்தமு மகிலு மாரமும்
    துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி
    நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும்
    புனலாடு மகளிர் கதுமெனக் குடையக்
    கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து
    சூடுகோ டாகப் பிறக்கி நாடொறும்
    குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
    கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும்
    சாலி நெல்லின் சிறைகொள் வேலி
    ஆயிரம் விளையுட் டாகக்
    காவிரி புரக்கு நாடுகிழ வோனே.
    (பொரு: 232-248)

    கதிரவனின் கடும்வெப்பம் தாளாது கஞ்சாச்செடிகளும் (கஞ்சாச் செடி கடுமையான வெப்பத்தைத் தாங்கக்கூடியது) கருக, மரங்களெல்லாம் பட்டுப்போக, மாமலைகளில் அருவிகள் இல்லாதுபோக, முகில்கள் கடல்நீரை முகந்து மழைபொழிய மறக்க, பெரும் வறட்சியும், வற்கடமும் பூவுலகைப் பீடிக்கும் காலத்தும், நுங்கும் நுரையும் பொங்க ஆரவாரித்துவரும் காவிரிவெள்ளமானது நறைக்கொடி, நரந்தம்புல், அகில், சந்தனம் போன்ற மணப்பொருள்களையெல்லாம் சுமந்துவந்து துறைதோறும் புனலாடும் மகளிர்க்குப் பரிசுப்பொருள்களாய் நல்கும். வளைந்த வாயையுடைய அரிவாளால் அரிந்து குன்றெனக் குவிக்கப்பட்ட நெற்பொலி (நெல்குவியல்) மூ(ட்)டைகள் ஒன்றோடொன்று நெருக்கமாய் அடுக்கப்பட்டிருக்கும் என்று காவிரிதந்த வளம் கவினுறப் பேசப்படுகின்றது இங்கே!

    அன்று சோழவளநாட்டின் நெல்விளைச்சல் எவ்வளவு தெரியுமா? ஒருவேலி நிலத்தில் ஆயிரங்கலம் (நெல்) விளையுமாம்! அதுவும் சாதாரண நெல் இல்லை! ’சாலி’ என்று சொல்லப்படும் உயர்ரக நெல்லைப் பயிரிட்டு அமோக விளைச்சல் கண்டிருக்கின்றார்கள் அன்றைய சோணாட்டு உழவர்கள்.

    ஆயிரங்கலம் என்றால் எவ்வளவு என்று ஒரு கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒருகலம் என்பது 24 படி. அப்படியானால், ஆயிரங்கலம் என்பது 24000 படி. படிக்கும்போதே வாய்பிளக்கிறோமே…விளைவித்துப் பார்த்தவர்களின் பெருமிதத்தை விளக்கிச்சொல்ல வார்த்தை ஏது?

    இத்துணைப் பெருமைவாய்ந்த காவிரிபுரக்கும் நாட்டுக்கு உரிமையுடையோனாகிய கரிகால்வளவன் போற்றுதலுக்குரியவன்தானே?

    (தொடரும்)

     

    Share
  • இரட்சிக்க இறைஞ்சுகிறேன் !

    எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா

    image1

           செந்தமிழால் பாடிநிதம்

              கந்தாவுனை வேண்டுகிறேன்

           வந்தவினை போயகல

               வரமருள வேண்டுமையா

           சொந்தமெலாம் எனைச்சூழ

                சுகமுடனே வாழுதற்கு

           கந்தவேளே உந்தனருள்

                தந்துவிட வேண்டுகிறேன் !

     

          அசுரகுணம் அழிவதற்கு

              அவதாரம் எடுத்தவனே

          அசுரகுணம் எம்மிடத்தில்

                அழியாமல் இருக்கிறதே

          வழிமுழுக்க உனைவைத்து

                வணங்கிநாம் இருக்கின்றோம்

           வடிவேலா எமைத்திருத்தி

                 வரமருள வேண்டுகிறேன் !

     

             நீதிநெறி தவறாமல்

                 நான்வாழ வேண்டுமையா

             நெஞ்சமுள்ள வஞ்சனைகள்

                   நீறாக வேண்டுமையா

              சோதனையை நான்தாங்கும்

                    துணிவெனக்குத் தந்திடையா

                நாதனது திருப்புதல்வா

                      நல்லதுணை நீயன்றோ !

     

                 உன்நாமம் இப்போது

                      உலகமெங்கும் ஒலிக்குதையா

                 ஓங்காரப் பொருளுக்குள்

                        உலகமே அடங்குதையா

                  மண்மீது உள்ளாரின்

                        மனம்சிறக்க வைப்பதற்கு

                   மால்மருகா மனமிரங்கி

                         வரமருள வேண்டுகிறேன் !

     

                பட்டதுன்பம் போதுமையா

                   படித்துவிட்டேன்  பலபாடம்

                துட்டரது சகவாசம்

                      துயரமெலாம் தந்ததையா

                 இஷ்டமுடன் கந்தஷஷ்டி

                       இனிப்படிப்பேன் கந்தவேளே

                 இரக்கமுடன் எனைக்காத்து

                        இரட்சிக்க இறைஞ்சுகிறேன் !

    Share
  • அறுபடைவீடு (5)- திருமாலிருஞ்சோலை ( பழமுதிர்ச்சோலை )

    க. பாலசுப்பிரமணியன்

    pazhamuthirsolai

    தேன்மணக்கும் தினைமணக்கும் தமிழ்மணக்கும் நிலத்தினிலே

    பூமணக்கும் காய்மணக்கும்  கனிமணக்கும் சோலையிலே

    வான்மணக்கும் இசையமைக்கும் தெம்மாங்கின் அசைவினிலே

    வாய்மணக்கும் சொல்மணக்கும் கந்தாவென அழைத்திடவே !

     

    எட்டுக்குடி வேலனவன் எட்டாமல் நின்றிருப்பான்

    விட்டகுறை தொட்டகுறை வேதனைகள் விலக்கிடுவான்

    பட்டுமேனி தெய்வானை பாசமுள்ள குறமகளும்

    தொட்டிருக்கத் துணைகொண்டு துரிதமாய் காத்திடுவான் !

     

    விளையாடத் தமிழிருக்க இடையனாய் வந்திருப்பான்

    இசைக்கவிகள் இதழசைவில் இனியத்தமிழ் கேட்டிருப்பான்

    சுட்டப்பழம் தந்திருப்பான் சுடாதபழம் வைத்திருப்பான்

    பட்டமர வாழ்வினிலே கொட்டும்மழையாய் வந்திடுவான்!

     

    குறுஞ்சியென்ன நெய்தலென்ன குமரனுக்கு ச் சம்மதமேzg3yk-h5_em_44bn5mb1w21137

    குன்றென்று ஒன்றிருந்தால் கந்தனுக்கு உறைவிடமே

    குறைதீர்க்கக் கொடியேந்தி மயிலேறும் ஆறுமுகமே

    குறையில்லா இதயத்தில் குடியிருக்கும் இன்முகமே !

     

    வேலுண்டு வினையில்லை விரைவில் வந்திடுவாய்

    தாள்கண்டு தரணியிலே தாகங்கள் தீர்த்திடுவேன்

    கோளெல்லாம் உனைக்கண்டு குறைகள் நீக்கிடுமே

    நாளெல்லாம் துணையாக உனையன்றி யாரிருப்பார் ?

     

    தெளியாத அறிவோடு தெருவெல்லாம் அலைகின்றேன்

    தெவிட்டாத இன்பம் நீயன்றோ:? வாடுகின்றேன் !

    தோதாகப் பரிசொன்றும் உனக்கென்று கிடைக்கவில்லை

    தோத்திரங்கள் செய்கின்றேன் துரிதாக வந்திடுவாய் !

    Share
  • நாடிவந்து நிற்குமன்றோ !

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

    நாநயம் இருந்துவிட்டால்
    நாணயம் நமக்குவரும்
    பேய்மனம் கொண்டுவிட்டால்
    பிணம்போல ஆகிடுவர்
    தூய்மையது மனமேறின்
    துட்டகுணம் மறைந்துவிடும்
    நாமென்றும் வாழ்வினிலே
    நாணயத்தை காத்திடுவோம் !

    மேடைகளில் முழங்கிடுவார்
    விதம்விதமாய் எழுதிடுவார்
    விவாதங்கள் வந்துவிட்டால்
    மேதையெனக் காட்டிடுவார்
    போதைபற்றி கதைசொல்வார்
    பொறுப்புப்பற்றி பலசொல்வார்
    போதையுடன் வீடுவந்து
    பொங்கிடுவார் வீட்டினிலே !

    அறவழியை விட்டுவிட்டால்
    அனைவர்க்கும் தீமையென்பார்
    அஹிம்சைதனை அரவணைத்தல்
    அனைவர்க்கும் நன்மையென்பார்
    அன்புபாசம் யாவருக்கும்
    அத்திவாரம் தானென்பார்
    அசிங்கமுள்ள அத்தனையும்
    அரங்கேற்றம் செய்தும்வைப்பார் !

    வள்ளுவரை அருகழைப்பார்
    வாய்மைபற்றிப் பேசிடுவார்
    தெள்ளுதமிழ் தலைவனென்பார்
    தில்லுமுல்லு பலசெய்வார்
    உள்ளமெலாம் கள்ளமுடன்
    ஒழுக்கமின்றி அவரிருப்பார்
    நல்லதமிழ் காத்திடுவோம்
    நாட்டிலுள்ளோர் வாருமென்பார் !

    கண்ணகியைப் போற்றிடுவார்
    கற்புப்பற்றி நூல்செய்வார்
    எண்ணமெலாம் திருவருளே
    எனச்சொல்லி திருடிநிற்பார்
    தன்னைவிட மேதாவி
    தோன்றவில்லை எனவுரைப்பார்
    தலைதெறிக்கக் காரியங்கள்
    சமத்தாகச் செய்துநிற்பார் !

    பெண்ணடிமை ஒழிவதற்கு
    பிரசாரம் செய்திடுவார்
    பெண்பித்து தலைக்கேறி
    பெண்ணைப் பிய்த்துஎறிந்திடுவார்
    மண்மீது போதையது
    மடிவதற்கு முழங்கிடுவார்
    மதுமீது அவர்தவழ்ந்து
    வந்துநிற்பார் மனைக்குள்ளே !
    வீண்வார்த்தை பேசாதீர்
    வீண்வாதம் புரியாதீர்
    மாண்புடனே பேசிடுவீர்
    மாண்புடனே நடந்திடுவீர்
    தான்வாழும் சமுதாயம்
    தலைநிமிர வேண்டுமென்று
    தான்நினைத்து வாழ்பவரே
    தலைவனாய் உயர்ந்திடுவார் !
    உள்ளொன்றும் புறமொன்றும்
    உயர்வினுக்கு ஏற்றதல்ல
    உரைக்கின்ற வார்த்தையது
    உள்ளிருந்து வரவேண்டும்
    கள்ளமிலா உள்ளமொடு
    கருணையுடன் வாழ்வதுதான்
    நல்லதொரு வாழ்வாக
    நமக்கெல்லாம் அமைந்துவிடும் !

    நாணயமாய் வாழ்ந்துவிட்டால்
    நாட்டுக்கே நன்மையன்றோ
    நாட்டுக்கே இப்போது
    நாணயமே தேவையன்றோ
    நாநயத்தைக் காப்பாற்றி
    நாணயமாய் நாமிருந்தால்
    நன்மையெலாம் எமைநோக்கி
    நாடிவந்து நிற்குமன்றோ !

    Share
  • ஆறுபடைவீடு (4)

     க. பாலசுப்பிரமணியன்

     

    திருப்பரங்குன்றம்

    thiruparamgunram3

     பரங்குன்றத்துப் பேரழகே ! பார்புகழும் விண்ணழகே !

    பரமசிவன் விழியிருந்து பறந்துவந்த ஆணழகே!

    பழகுதமிழ் மொழிதந்து  பண்பரப்பும்  தமிழழகே !

    பாலோடு தேன்கலந்த பல்சுவைப் பெயரழகே !

     

    நாதத்தின் தலைவன் நினைப்பினிலே பிறந்தாய்

    வேதத்தின் பொருளாக வாழ்வினிலே நின்றாய்

    ஞானத்தின் வடிவாக ஞாலத்தைக் கவர்ந்தாய்

    காலத்தின் கருவே ! கருணைமிகு கந்தா !

     

    பொய்கையில் வளர்ந்த பொதிகைமலைத் தென்றலே

    பூமேவும் செங்கமலம் குருபரனுக்குக் கொடுத்தவனே

    புரியாத பிரணவத்தை பரமனுக்கும் சொன்னவனே

    புதிரான வாழ்வுக்குப்  புதுப்பொருளைக் கொடுப்பவனே !

     

    படியாத அகம்கொண்டு பழிகொண்ட சூரனை

    பரிவாக அருள்கொண்டு ஆட்கொண்ட அமரா !

    பரிசாக தெய்வானைக் கைப்பிடித்த பண்பாளா !

    பரங்குன்றம் புகழ்பாடும் மெய்ஞ்ஞான திருவே

     

    அவ்வையோடு அகத்தியனுக்கும அருள்செய்த ஆனந்தா !

    ஆலவாய் தமிழ்ச்சங்கம் அணிசெய்த அமுதா !

    ஆயிரம் பெயர்கொண்டு அழைத்தாலும் அசையாமல்

    அடியார்கள்  அன்பிற்கு  அருள்செய்யும் வேலவனே !

     

    குன்றுமேல் நீயிருக்கக்  குறைவின்றிப் பார்த்திருந்தேன்

    குகையுள்ளே நீஅமர்ந்தால் குமரா என்செய்வேன் ?

    குலம்காக்கும் கொழுந்தே நெஞ்சினிலே வருவாயோ?

    குறைநீக்கி அறம்காக்கக் குருவாக நிற்பாயோ ?

    Share
  • நீளும் பயணம்!

    பவள சங்கரி

     

    உம்இதய இச்சையின் உச்சம்
    நோக்கிய உயர்வில் இன்னொருவர்
    நீ கொள்ளையடித்த பணப்பையைக்
    களவாடி அதன்மீது மெழுகுக்
    கொழுப்பையும் பூசி அப்பொதியையும்
    இன்னொருவரை சுமக்கச்செய்பவரிடம்
    இரக்கம் காட்டுங்கள்! பாவம்
    அச்சதைப் பிண்டத்திற்கு ஏறுதலும்
    கடினம், பாதையும் நீண்டதாகிவிடும்!
    கலீல் கிப்ரான் (மொழிபெயர்ப்பு)

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-29

    மீனாட்சி பாலகணேஷ்

    தென்திருப்பேரை முகில்

    கிடந்தும் தவழ்ந்தும் இருக்கும் குழந்தை உருண்டு புரண்டெழுந்து அழகாகக் குத்துவிளக்கு போல எழுந்தமர்ந்து கொள்ளும்போது அதனைக்காணும் தாயின் மகிழ்ச்சி அளவிட இயலாதது. குழந்தையிடம், ‘கை வீசம்மா கைவீசு,’ என்றும், கைகளைக்கொட்டிச் சப்தமெழுப்பிச் சப்பாணி ( சஹ+ பாணி= சப்பாணி) கொட்டவும் கற்றுக் கொடுக்க முயல்வாள் அன்னை.

    சந்தன மரங்கள் அடர்ந்து செறிந்த சோலைகளைக்கொண்ட ஊர் திருப்பேரை எனும் திருமாலின் தலமாகும். இங்கு சின்னஞ்சிறுவனான, கருமுகில்வண்ணனான ஒரு குழந்தை உள்ளான். தெய்வக்குழந்தையான திருப்பேரை நாதனவன். பெயரும் மகரக்குழைக்காதன்! அவனைச் சப்பாணி கொட்டுமாறு வேண்டும்போது அக்கரங்களால் அவன்செய்த செயல்களைக் கூறுவது தானே முறைமை? அதற்கு நம் புலவரின் கற்பனை வளம் ஊற்றாகப் பெருகுகிறது!

    தன் சிவந்த கரங்கள் இன்னும் சிவக்கச் சப்பாணி கொட்டி விளையாடுகிறான் அந்தக்குட்டன்! யாரவன்? அவன் செய்த அரும்பெரும் செயல்களைப் பெருமையுடன் அடியாரான புலவர் விளக்குவதனைப் பார்க்கலாமா?

    am
    விசுவாமித்திரர் ஆகிய பெருந்தவ முனிவர்களின் தவத்தினை நாசம் செய்து பெரும் குற்றம்புரிந்து வந்த கருமை நிறங்கொண்ட தாடகை எனும் ஒரு அரக்கியை வதைத்தான். அவளுடைய கொடிய உயிரினைக் குடிக்கும் வண்ணம் வில்லினில் கணைகளைத் தொடுத்தான்; அவளை மிக எளிதாகக் கொன்றும் விட்டான். அவனே ஸ்ரீராமன் எனும் தசரதன் குலக்கொழுந்து. ‘இராமன் கணைகளைத் தொடுத்துத் தாடகையை அழித்தான்,’ என மட்டும் கூறாது, அதனை இன்னுமே விளக்கி, அக்கொடியவளின் உயிர் எவ்வாறு போயிற்றென விளக்குவதும் இன்னொரு புலமைநயம்: அம்பினால் அடிபட்டவளின் உடலிலிருந்து கொழுங்குருதி பெருக்கெடுக்கின்றது. நரிகள் அவளைச் சுற்றிச் சூழ்ந்து தசையினைப் பிடுங்கி உண்கின்றன. இயமன் இவ்வண்ணம் அவளது உயிரைக் குடிக்குமாறு செய்தான் ‘இராமன் எனும் இந்தத் தென்திருப்பேரையூர் உறையும் சிறுவன்’ என அவன் மேலேற்றிக் கூறுவார் புலவர்.

    தாடகை வதத்தைப்பற்றிக் கம்பர் கூறுகிறார்:

    am1

    ‘மார்பில் தைத்த அம்பினால் உண்டான புண்ணிலிருந்து பெருகிய இரத்தம் மாலையின் செவ்வானப் பரப்பு தரையில் வீழ்ந்ததுபோல, பாலைவனம் முழுதும் கடலாக மாறும்படி விழுந்து பரவியது,’ என்றும், ‘தாமரைமலரில் வாழும் பிரமனுக்கு ஒப்பான மாமுனி விசுவாமித்திரனின் கட்டளையை மறுக்காதவன் இராமன்; அவன் செய்யும் முதல்போர் (கன்னிப்போர்) இது. எமன் ஒருபக்கம் இந்த அரக்கர்குலத்தின் உயிரை உண்ணவேண்டும் எனும் ஆசையால் திரிந்து கொண்டிருக்கிறான்; ஆனாலும் வாளேந்திய அரக்கர்களைக் கண்டு அவனுக்கு ஒரு தயக்கம்; அச்சம். இன்று அவனுடைய ஆசையும் கொஞ்சம் நிறைவேறியது!’ எனவும் கவிதைநயம் மிளிரக் கூறுகிறார்.

    வாச நாள்மலரோன் அன்ன மாமுனி பணி மறாத
    காசு உலாம் கனகப் பைம்பூண் காகுத்தன் கன்னிப்போரில்
    கூசிவாள் அரக்கர் தங்கள் குலத்து உயிர்குடிக்க அஞ்சி
    ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்றே.
    (தாடகை வதைப்படலம்)

    கம்பரின் சொல்லாற்றலின் தாக்கத்தை இப்பிள்ளைத்தமிழ்ப் பாடல்களிலும் உணர முடிகின்றது. இவன் இவ்வாறு தாடகையினை அழித்ததனால் கௌசிகன் எனும் விசுவாமித்திர முனிவனின் வேள்வி வேதமுறையினின்று வழுவாமல் நடைபெறுமாறு முடித்தும் தந்தான்.

    am2

    பின்பு மிதிலைநகரினை அடைந்து சொல்லுதற்கரிய புகழ்படைத்த சனக மாமன்னன் வசமிருந்த வில்லினை (சிவதனுசை) முறிக்கிறான் அச்சிறுவன். எவ்வாறு? சும்மா முறிக்கவில்லை; கண்டதுண்டமாக ஒடித்துவிட்டான் எம்முடைய இந்தக்கோமகன் என்கிறார் புலவர்.

    கம்பர், ‘கையால் எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்,’ என்றார். கணப்பொழுதினில் வில்லை உடைத்து விட்டானாம் இராமன். இப்புலவர் இன்னும் ஒருபடி மேல்போய், ‘பலதுண்டங்களாக உடைத்து விட்டான்,’ என்கிறார்! ‘ஆகா’ எனத் தலையசைத்து இரசிக்கிறோம்!

    இவனுடைய இச்செயல் சிவசங்கரக்கடவுளின் கண்களைக் குளிர்வித்ததாம்.

    இந்தத் தென்திருப்பேரை முகில் வண்ணக் குழந்தையை புகழ்வாய்ந்த செயல்களைச் செய்த தனது கைகளைக்கொண்டு சப்பாணி கொட்டி அருளுமாறு வேண்டுகிறார் புலவர்.

    கம்பரைப்போல இவனது கைவண்ணத்தை அழகுறக் காட்டியருளுகிறார்.

    அருமையான கற்பனை! கம்பர் வழியிலேயே சென்று தமது பிள்ளைத்தமிழ் நூலை வடிவமைத்துள்ள புலமைநயம் புதுமை!

    கக்கக் கொழுங் குருதி நரிபிடுங்கத்தசை
    கவர்ந்துயிர் குடிப்ப மறலி
    கருநிறத் தாடகையை வதை படுத்தசிலைக்
    கடை குழைத்தடிகணை தொடுந்
    தொக்கிற் பெருந்தவக் கௌசிகன் வேள்வியும்
    சுருதிநூல் முறை முடித்துச்
    சொல்லரிய மிதிலாபுரிச் சனகன்வில்
    கண்டதுண்டப் படுத்து மெங்கோன்
    செக்கச் சிவக்குங் கொழும்பவள வார்க்கதிர்ச்
    செஞ்சுடாவி மணிமுடிச்
    சிவசங்கரக் கடவுள் கண்கள்களி கூரச்
    சிறந்தருள் புரிந்து சங்கு
    சக்கரத்துணை செங்கை யொக்கச் சிவப்பவொரு
    சப்பாணி கொட்டி யருளே,
    சந்தனச் சோலைசெறி தென்திருப்பேரை முகில்
    சப்பாணி கொட்டி யருளே
    (ஸ்ரீ மகரக் குழைக்காதர் பிள்ளைத் தமிழ்- சப்பாணிப்பருவம்)

     

    இந்நூலின் பாட்டுடைத்தலைவனை இராமனாகக்கொண்டு அவன் சிவதனுசை முறித்து, சானகியை மணந்ததையும், தாடகை முதலான அரக்கர்களையும் அழித்த வீரச்செயல்களையும், இன்னும் பலவற்றையும் புலவர் பாடியுள்ளார். இந்நூலை இயற்றியவர் இன்னாரென அறிய இயலவில்லை. இனிய எளிய சொற்களைக்கொண்டு மிக அருமையாக இப்பிள்ளைத்தமிழ் நூல் அமைந்துள்ளது.

    அடுத்து சிற்றில் பருவத்திலிருந்து ஒரு மாறுபட்ட கற்பனைகொண்ட பாடலைக் காணலாமா?

    சிறுவன் திருப்பேரைநாதன் சிறுமிகள் இழைத்து விளையாடும் சிற்றிலைக் காலால் எற்றி உதைத்து அழிக்க முற்படுகிறான். அச்சிறுமிகள் மிகுந்த வாக்குசாதுரியத்துடன் அவனுடன் வார்த்தையாடுவது நமக்கு வியப்பினைத் தருகின்றது!

    இவர்கள் பாடுபட்டு வண்டல் மண்ணைக்கொழித்து, பதமாக நீர்சேர்த்துப் பிசைந்து, சிற்றில் இழைத்திருக்கிறார்கள். சிற்றில் இழைத்து விளையாடும்போது தாய் தந்தையாராகத் தம்மைக் கருதிக்கொண்டு பாவைகளை வைத்தும் விளையாடுவார்கள் சிறுபெண்கள். சிற்றிலை அழிக்க இச்சிறுவன் ஓடோடி வருகிறான். இவனோ அரசகுமாரன்; அவனிடம் ஒரு சிறுபெண், பெரிய பெண்மணி போல நீட்டி முழக்கிக் கூறுகிறாள்: “ஆசையாக, அன்பாக இந்தக் குழந்தையை நான் மார்போடு அணைத்துக்கொண்டு முலைப்பால் கொடுக்கிறேன். பின்பு அமுதம்போலும் புனல்நீரில் நீராட்டி, அதன் அழகான கடைக்கண்களுக்கு மையும் தீற்றியுள்ளேன். கழுத்தில் பொன்னாரத்தைத் திருத்தமாக அணிவித்து, பட்டாடையும் உடுத்தியுள்ள எனது குழந்தைக்கு புகழ்வாய்ந்த பெரியோனான உனது பெயரையே நான் இடுவேன். எப்போது? நாங்கள் பாடுபட்டுக் கட்டியுள்ள மாளிகை, மாடங்கள், அரங்கங்கள், வேதிகை கொண்ட இச்சிற்றிலை நீ அழிக்க ஓடோடி வரலாகாது காண்பாய்! எங்கள் சிற்றிலை அழிக்கமாட்டேன் எனக்கூறினால் நானும் கூறியபடி என் குழந்தைக்கு உன் பெயரை இடுவேன். நாங்கள் சின்னஞ்சிறு பேதைப்பெண்கள்; காலால் எங்கள் சிற்றிலை நீ எற்றினால் உன் மென்மையான (அடியார் தொழும்) திருவடியில் வண்டல் துகள்கள் ஒட்டிக்கொண்டு உறுத்துமே ஐயா!

    “ஆகவே அலைகள் வீசும் பொருநை நதிக்கரையிலமைந்த திருப்பேரையின் நாதனே! சிற்றில் சிதையேலே!” என வேண்டுவதாகப் பாடியுள்ளார். ஒப்பற்ற கற்பனை நயம்கொண்டு, சிறுமித்தன்மையின் பேதைமையையும் விளக்கிக்காட்டும் இனிய பாடல்.

    அன்போ டணைத்து முலைகொடுத்தின்
    அமுதூற்றறிருக்கும் புனலாட்டி
    அருங்கட் கடைக்கஞ் சனமெழுதி
    ஆரந் திருத்திப் பட்டுடுத்தி
    உன்பே ரிடுவே னென் குழவிக்
    குள்ள தயவாற் றனிசமைத்த
    உயர்மா ளிகையு மாடரங்கும்
    ஒளிர்வே திகையு நீயழிக்க
    வன்பா லோடி வரவுனக்கு
    வழக்கன் றுலகிற் சிறுபேதை
    மகளி ருந்து விளையாடும்
    வண்டற் றுகள்சே வடிபடுமே
    தென்பே ரையினங் குலநாத
    சிறியேஞ் சிற்றில் சிதையேலே
    திரையார் பொருநைத் தடந்துறைவா
    சிறியேஞ் சிற்றி்ல் சிதையேலே
    (ஸ்ரீ மகரக் குழைக்காதர் பிள்ளைத் தமிழ்- சிற்றிற்பருவம்)

    மேலும் காட்சிகளைக்கண்டு மகிழ்வோம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • ஆறுபடை வீடு (3) – திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)

    க. பாலசுப்பிரமணியன்

    tr3

    அளவில்லாக் கருணை கந்தனின் விழிகள்

    அறியாத சூரனின் அகந்தையின்  வேர்கள்

    ஆணவத்தில் எழுந்தன அழிவினைத் தேடி

    அலைவாய்க் கரையில் ஊழ்வினை நாடி !

     

    ஓமென ஓமென உயர்ந்தன அலைகள்

    ஒருதலை இருதலை மறுதலை மடிய

    தறுதலை ஆணவம் தரணியில் வீழ

    ஆறுதலை முருகன் அருளும் வெல்ல !

     

    மாயைகள் அனைத்தும் மண்ணில் வீழ்ந்தது

    மாலனின் மருகன் மனமே வென்றது

    காலனின் அணைப்பில் சூரனும் கதற

    வேலவன் ஆற்றலை  வானகம் புகழ்ந்தது

     

    கூரிய வேலும் கொடியவன் கூறிட

    கூவியே வந்தது கொடியினில் சேவலும்

    குமரனைச் சுமந்திடஅகவியே  மயிலும்

    குவலயம் மகிழ்ந்திடகந்தனின் தரிசனம் !

     

    சமரினை முடித்த சங்கரன் மகனும்

    சந்தனம் அணிந்தே சன்னிதி கொண்டான்

    தந்தனத்  தோமென தாளங்கள் போட்டு

    தாளிணைத் தேடி வந்தன காவடி !

     

    நாழிக் கிணற்றில் அகந்தையைக் கழுவி

    நாழிப் பொழுதும் கந்தனைக்  கண்டால்

    தாழிட்ட நெஞ்சங்கள் தானாய்த் திறக்கும்

    தாளினைப் போற்றியே தரணியில் வாழ்வோம் !

    Share
  • தீபாவளி பரிசு!

     

    பா.ராஜசேகர்

    அதிகாலை இளந்தென்றல்
    காலைக்கதிரவனின் கைவிரல்கள்
    மொட்டுக்கள் கட்டவிழும் இசை
    பறவைகளின் கொஞ்சல்
    சிட்டுகளின் சிணுங்கல்
    பட்டாம்பூச்சிகளின் நடனம்
    வண்டுகளின் ரீங்காரம்
    வளர்ப்புநாய்களின் வாலாட்டல்
    வயதுவந்தோர் நடைப்பயிற்சி
    நோயாளிகளின் நிம்மதி
    எதுவுமே இல்லை
    இன்று எனக்கானநாள்
    சுகாதாரமான வாழ்வு!

     

    Share
  • எதற்காக  எழுதுகிறேன்?

    -உமாஸ்ரீ

    book‘ராகிலா’ பெயர் விசித்திரமாக இருக்கிறதில்லையா? ராகிலா என்ற பெயரை எப்படி வைத்தார்கள் என்று அவரே கீழே கூறுகிறார்.  ராகிலா  ஒரு  கவிதாயினி; மற்றும் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவர் எழுதிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைப் படித்தேன். (”விடியலை நோக்கி…,”  “தெய்வத் தாய்”   இரண்டும்  மிக அற்புதமாக உள்ளன. அவருடன் ஒரு நேர்காணல்.

    1. தங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்…

    rakilaஎன் பெயர் ராகிலா. அப்பா பெயர் ராக்கன் அம்மா பெயர் கமலா . அப்பா அம்மா பெயரில் உள்ள ராக்கன் , கமலா இணைந்து ராகிலா என்றானது.

    இராஜபாளயம் தாலுக்காவிலுள்ள சொக்கலிங்கபுரம் என்னும் கிராமத்தில் வசிக்கிறேன்.

    எம்.ஏ., பி.எட், எம்.எட். படித்திருக்கும் நான் 17 வருடங்கள் ஆங்கிலப் பள்ளி ஆசிரியை. கடந்த ஏழு வருடங்களாக ஆங்கிலப் பள்ளியின் முதல்வராகப் பணியாற்றி உள்ளேன். சமீபத்தில் என் தாயார் தவறி விட்டதால் பள்ளி முதல்வர் வேலையை விட்டுவிட்டேன்.

    10 வருடங்கள் காலையில் பள்ளிக்கூடம், மாலையில் இராஜபாளையத்தில் உள்ள தானியார்த் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பளராக பணியாற்றியுள்ளேன். பட்டிமன்றம், கவியரங்கத்தில் பங்குகொள்கிறேன். தாமரைக்குளம் கவியரங்கத்தில் ‘கவிதாயினி’ என்ற பட்டமும் பெற்றுள்ளேன்.

    2. ’கவிதாயினி’ ராகிலா தாங்கள் எழுதிய கவிதைகளில் ஒன்றைப் பாடுங்கள்.

    நான் எழுதிய ஒரு கவிதை:

    உன்னில் நான் !

    உன்னில் நான் –
    என்னில் நீ!
    ஓருடல் ருயிர்
    ஆனோம் அன்று!
    ஓருடல் ஈருயிர்
    ஆனோம் இன்று!
    ஆம் உன் இதயம்
    எனக்குப் பொருத்தப்பட்டு!
    நீயோ என் நினைவுகளில்…

    3. எப்பொழுதிலிருந்து எழுதுகிறீர்கள்?

    1995-லிருந்து கிட்டத்தட்ட 21 வருடங்களாக எழுதுகிறேன். என்னுடைய துணுக்குகளும், படைப்புகளும் 1995இலிருந்து வந்து கொண்டிருக்கின்றன.

    நான் எழுதிய நூல்களின் எண்ணிக்கை:

    சிறுகதைத் தொகுப்புகள்  – 2
    நாவல்கள் – 7

    கிட்டத்தட்ட 100 சிறுகதைகள் எழுதியுள்ளேன். (40 சிறுகதைகள் புத்தகமாகவும்) மீதிச் சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

    4. படைப்புகளாக மாறிய சில அனுபவங்கள்…

    பெரிய விசயங்களை, எளிய நடையில் எல்லாருக்கும் புரியும் வண்ணம் எழுதுவதுதான் சிறுகதை.

    சிறுகதையில் மக்களை சிந்திக்கத் தூண்டும் வகையில் அதன் கரு இருக்க வேண்டும்.

    ’விடியலை நோக்கி’ என்ற எனது சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் நான் எழுதியுள்ள “குட்டச்சி கிழவி“ என்ற சிறுகதை எனது பாட்டியைப் பற்றிய கதை. சிறுவயதிலிருந்து பாட்டியின் சேவைஉள்ளத்தை பார்த்துப்பார்த்து வளர்ந்த நான், அதை ஒரு சிறுகதையாக எழுதி இருக்கிறேன்.

    ’தெய்வத் தாய்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் “அது உண்மையா?” என்று எழுதியுள்ள கதை – என் தாய்மாமாவுக்கு ஏற்பட்ட அனுபவமே.

    ”கருவேலங்காடு“ என்ற எனது நாவல் எனது அம்மாவின் அப்பா அதாவது என் தாத்தாவுடன் பிறந்த ஐந்து அண்ணன், தம்பி மற்றும் ஒரு தங்கை அவர்களின் அனுபவமே!

    5. எதற்காக எழுதுகிறேன்?

    * எழுதுவதால் எனக்குச் சுற்றுப்புறத்தை ஆழ்ந்துநோக்கும் ஆர்வம் பிறந்துள்ளது.

    ** மனஅமைதி கிடைக்கிறது.

    *** அறிவு விசாலமடைகிறது.

    6. எப்பொழுது எழுதுவீர்கள்?

    எப்போது நேரம் கிடைத்தாலும் எழுத உட்கார்ந்து விடுவேன். பள்ளிசெல்லும் நேரங்களிலும், இரவிலும், விடுமுறை நாட்களிலும் எழுதுவேன்.

    7. தாங்கள் எழுதியவைகளில் தங்களுக்கு மிகவும் பிடித்த படைப்பு எது?

    என் குழந்தைகளில் எந்தக் குழந்தை எனக்குப் பிடிக்கும் என்பதுபோல் உள்ளது இந்தக் கேள்வி. என் படைப்பில் எல்லாமே எனக்குப் பிடிக்கும். அதில் மிகப்பிடித்தது என்று பார்த்தோமானால், ”தெய்வத்தாய் ” என்ற சிறுகதையும், ” கருவேலங்காடு ” என்ற நாவலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    8. தாங்கள் படித்த புத்தகங்களில் மிகவும் பிடித்த புத்தகங்கள் யாவை?

    கவிஞர் வைரமுத்துவின் ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ மற்றும் கல்கியின்     ’சிவகாமியின் சபதம்’ ஆகிய இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த நாவல்கள்.

    9. எழுத விரும்புகிறவர்களுக்குத் தாங்கள் கூறும் யோசனை ஏதாவது…?

    பிறக்கும்போதே யாரும் எழுத்தாளராகப் பிறக்கவில்லை.  முயற்சியும் முறையான பயிற்சியும் இருந்து, நிறைய வாசிக்கும் ஆவலும் இருந்தால் கண்டிப்பாக ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளராக ஆகலாம்.

    ”சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற பழமொழிக்கேற்ப, பழகப்பழக எழுத்து வசப்படும்.”

    10. தாங்கள் கூற விரும்புவது ஏதாவது…

    அம்மா என்னும் கவிதையைச் சொல்ல விரும்புகிறேன்.

    என்னும் உயிர் எழுத்தாகி…
    ம்என்னும்  மெய் எழுத்தாகி…
    மாஎன்னும் உயிர்மெயெழுத்தாகி…
     உயிரும், மெய்யும் தந்தவள் அம்மா!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    blogger-image-1024008354

    “மாவிளக்கு ஏற்றிடும் மாதவன் கோயிலில்
    கோவிளக்கு ஆனதன் காரணம் :-தோவிளக்கம்
    கன்றே தகளியாய், கைவல்ய நெய்யூற்றி
    நின்றான் கிருஷ்ண நெருப்பு “….கிரேசி மோகன்….!

    Share
  • ஆறுபடை வீடு (2)

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருவேரகம் (சுவாமிமலை)

    images-5

    பிரணவத்தின் பொருளை அறியாது நிற்கும்

    பிரம்மனின் புகழுக்குப் பழியும் வந்திடுமோ?

    பிரியாது இமைகளைச்  செதுக்கிய தேவரும்

    புரியாது புதுப் பொருளை நாடினாரோ?

     

    அலைமகளும், கலைமகளும், மலைமகளும் அணிசேர

    அரங்கனோடு அரனும் ஆறுமுகன் அரங்கத்தில் !

    அறிவுச்சுடரோ? எழுந்தது அருள்ஞானக் கடலோ?

    அதிசயமே! அண்டங்கள் அறியாத தரிசனமே !

     

    அப்பன் சாமியே !அன்னையின் சக்தியே !

    தப்பெல்லாம் களைந்து தருமத்தை காப்பாய் !

    செப்பிடக் குறைகள் ஆயிரம் இருந்தும்

    சிந்தையில் வைத்தால் விந்தையாய் விலகிடும் !

     

    ஆறுமுகம் கண்டு அகிலமே வியந்திட

    ஒருமுகம் கொண்டே உலகினை வென்றாய்

    நறுமணம் கமழும் பெயரினைச் சொன்னால்

    நானிலம் அனைத்தும் நன்மையே பெருகும் !

     

    திருவேரகத்தை நாடிவிட்டால் நித்தம் திருநாளே

    வேறகத்தைத் தேடவேண்டாம் வேதனைகள் நீங்கிவிடும்

    வானகத்தைத் தொடுகின்ற சாதனைகள் செய்திடலாம்

    மாதவத்தின் பலன்தருவான் மனதினில் வைத்தவுடன் !

     

    இருள்நீக்கி ஒளிபெருக்க இன்றே வருவாய்

    மருளில்லா மனம்கொண்டு மதியாள அருள்வாய்

    குறைவின்றிக் கொடுக்கின்ற மதியென்றும் தருவாய்

    குமரா! உறவாக என்றென்றும் உள்ளிருப்பாய் !

    Share