இலக்கியம்கவிதைகள்பத்திகள்

அறுபடைவீடு (5)- திருமாலிருஞ்சோலை ( பழமுதிர்ச்சோலை )

க. பாலசுப்பிரமணியன்

pazhamuthirsolai

தேன்மணக்கும் தினைமணக்கும் தமிழ்மணக்கும் நிலத்தினிலே

பூமணக்கும் காய்மணக்கும்  கனிமணக்கும் சோலையிலே

வான்மணக்கும் இசையமைக்கும் தெம்மாங்கின் அசைவினிலே

வாய்மணக்கும் சொல்மணக்கும் கந்தாவென அழைத்திடவே !

 

எட்டுக்குடி வேலனவன் எட்டாமல் நின்றிருப்பான்

விட்டகுறை தொட்டகுறை வேதனைகள் விலக்கிடுவான்

பட்டுமேனி தெய்வானை பாசமுள்ள குறமகளும்

தொட்டிருக்கத் துணைகொண்டு துரிதமாய் காத்திடுவான் !

 

விளையாடத் தமிழிருக்க இடையனாய் வந்திருப்பான்

இசைக்கவிகள் இதழசைவில் இனியத்தமிழ் கேட்டிருப்பான்

சுட்டப்பழம் தந்திருப்பான் சுடாதபழம் வைத்திருப்பான்

பட்டமர வாழ்வினிலே கொட்டும்மழையாய் வந்திடுவான்!

 

குறுஞ்சியென்ன நெய்தலென்ன குமரனுக்கு ச் சம்மதமேzg3yk-h5_em_44bn5mb1w21137

குன்றென்று ஒன்றிருந்தால் கந்தனுக்கு உறைவிடமே

குறைதீர்க்கக் கொடியேந்தி மயிலேறும் ஆறுமுகமே

குறையில்லா இதயத்தில் குடியிருக்கும் இன்முகமே !

 

வேலுண்டு வினையில்லை விரைவில் வந்திடுவாய்

தாள்கண்டு தரணியிலே தாகங்கள் தீர்த்திடுவேன்

கோளெல்லாம் உனைக்கண்டு குறைகள் நீக்கிடுமே

நாளெல்லாம் துணையாக உனையன்றி யாரிருப்பார் ?

 

தெளியாத அறிவோடு தெருவெல்லாம் அலைகின்றேன்

தெவிட்டாத இன்பம் நீயன்றோ:? வாடுகின்றேன் !

தோதாகப் பரிசொன்றும் உனக்கென்று கிடைக்கவில்லை

தோத்திரங்கள் செய்கின்றேன் துரிதாக வந்திடுவாய் !

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க