இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (216)

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள்.

உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் தாம் வாழும்காலம் மட்டும் உடல்நலக் குறைவுகளை நிவர்த்தி செய்யும் உரிமை ஒரே விதத்தில்தான் அமைந்துள்ளது. ஆனால் அது எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியப்படுகிறது என்பது கேள்விக்குறியே! ஒவ்வொரு மனிதனுடைய பொருளாதார நிலையும் வித்தியாசப்படுவது இயற்கையே. ஆனால் அவர்களுக்குக் கிடைக்கும் வைத்திய வசதிகள் அவர்களின் பொருளாதாரத்தில் தங்கியிருப்பது இந்த 20ஆம் நூற்றாண்டில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வா?

எமது பின்புல நாடுகளில் பணமிருப்பவர்கள் தனியார் மருத்துவமனைகளில் தமது வசதிகளுக்கேற்ப நவீன வசதியுடன் சிகிச்சைகளைப் பெறுவதும், வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் அரசாங்க வைத்தியமனைகளில் கிடைக்கக்கூடிய சிகிச்சையை மட்டுமே பெறும் நிலை காணப்படுவது சகஜமாக ஏற்றுக்கொள்ளப் படுகிறது. இங்கிலாந்தில் இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று 1946ஆம் ஆண்டு முதல் கோஷம் முன்வைக்கப்பட்டது. சிகிச்சையைப் பொறுத்தஅளவில் பொருளாதாரத்தில் எந்நிலையில் இருந்தாலும் அனைவரும் சிகிச்சை பெறுமிடத்தில் ஒரே தராதரத்தில் சிகிச்சை பெற வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதன் விளைவாக 1948ஆம் ஆண்டு அது சட்டமாக்கப்பட்டது. அதன் விளைவே இன்று நாம் இங்கிலாந்தில் அனுபவிக்கும் சிகிச்சை வழிகள். இந்த அரசாங்க அமைப்பு “தேசியச் சுகாதார சேவை ( National Health Service – NHS) என்றழைக்கப்படுகிறது.

பணிபுரியும் அனைவருடமிருந்தும் அவர்களது ஊதியத்தில் ஒரு சிறுஅளவு அரசாங்கத்தினால் தேசியப் பாதுகாப்பு நிதிக்காக அளவிடப்படுகிறது. அதன் காரணமாக நாட்டிலுள்ள அனைவருமே இலவச சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இப்போது பல கேள்விகள் பலமுனைகளில் இருந்து கிளம்பியுள்ளது. இன்றைய பொருளாதாரச் சிக்கலான காலகட்டத்தில் இங்கிலாந்து அரசாங்கத்தினால் இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த இலவசச் சுகாதரச் சேவையைத் தொடர முடியும்? என்பது பொதுவான ஒரு கேள்வியாகிறது. சுமார் 60 வருடங்களுக்கு முன்னால் இருந்த இங்கிலாந்துக்கும் இன்றைய இங்கிலாந்துக்கும் இடையில் பல வேறுபாடுகளுண்டு. ஜனத்தொகையின் பெருக்கம் பல மடங்காகியுள்ளது. அது மட்டுமின்றி பல நவீன மருந்துகளினால் மனிதர்களின் வாழ்க்கைக் காலம் நீட்சியடைந்துள்ளது. அதிகமான முதியவர்கள் தமது 90 வயதுகளையும் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான வைத்தியத் தேவைகள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமுள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தினால் இச்சுகாதாரச் சேவைக்காக ஒதுக்கப்படும் நிதியில் பெரிய பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் பல வைத்தியசாலைகளில் அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் குன்றிப்போயுள்ளதாக பல புகார்கள் வந்த வண்ணமுள்ளது. டாக்டர்கள், தாதிமார்கள் மற்றைய பணியாளர்களின் ஊதியம் பலகாலமாக மிகவும் குறைந்த அளவிலான வீதத்திலேயே அதிகரிக்கப்பட்டிருப்பதால் இத்துறைகளில் பணிபுரிவோர் அதிக அளவில் பணிகளுக்காக அந்நியநாடுகளுக்குச் செல்லும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய ஒரு சூழலில் இப்போது ஒரு பிரச்சனை பூதாகரகமாகக் கிளம்பியுள்ளது. இதுவரைக் காலமும் யாராவது இங்கிலாந்துக்குச் சுற்றுலாப் பயணிகளாக வந்த இடத்தில் உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால், அவர்களுக்கான சிகிச்சையும் இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் சில வருடங்க:ளுக்கு முன்னால் அரசாங்கம் இங்கிலாந்துக்குச் சுற்றுலாப் பயணிகளாகவோ அன்றி உறவினர்களைப் பார்ப்பதற்காகவோ வரும் எவரும் இங்கிலாந்துப் பிரஜைகளாக அன்றி இங்கிலாந்தில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெற்றவர்களாக இல்லாதவிடத்து வைத்தியச் செலவுகள் அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டும் எனும் சட்டம் இயற்றியது. ஆனால் இன்றுவரை இந்தச் சட்டம் முழுமையாக அமுல் நடத்தப்படுவதில்லை என்றும் ஏறத்தாழ 250 மில்லியன் வரையிலான இங்கிலாந்து பவுண்ட்ஸை இங்கிலாந்து வைத்தியத்துறை வருடமொன்றுக்கு இழக்கிறது என்றும் ஒருதரப்பினால் கணிக்கப்பட்டுக் கூறப்படுகிறது.

இதுபற்றிய செய்தி ஒன்றுக்கு இங்கிலாந்து ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கடந்தவாரம் செய்தி வெளியிட்டிருந்தது. இங்கிலாந்தின் ஒரு முன்னணி வானொலி ஊடகமான எல்.பி.சி. எனும் வானொலி நிலையத்தின் நிகழ்வொன்றை நான் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது சமீபத்தில் செவிமடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. காலநேரம் திரு. நிக் வெராரி என்பவரால் நடத்தப்படும் ஒரு நேயர்களுடனான சம்பாஷணை நிகழ்வாகும். அப்போது ஊடகங்களில் பிரஸ்தாபிக்கப்பட்ட அந்தச் செய்தி ” ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப்பெண்  நைஜீரியா நாட்டிலிருந்து விருந்தினராக இங்கிலாந்துக்கு வந்திருக்கும்போது மூன்று குழந்தைகளுக்குத் தாயாகிறார். அவருக்கான பிரசவ வைத்தியம் இங்கிலாந்து வைத்தியர்களினால் இலவசமாகச் சகல வசதிகளுடனும் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவு 146000 இங்கிலாந்துப் பவுண்ட்ஸ்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. “இந்தப் பணம் ஏன் அவரிடமிருந்து அறவிடப்படவில்லை?” என்பதுதான் ஊடகங்களின் கேள்வியும் குற்றச்சாட்டும்.

அதுபற்றிய தொடர்ந்த தொலைபேசிச் சம்பாஷணையில் வானொலி நிலையத்தைத் தொடர்பு கொண்ட நைஜீரியப் பின்புலத்தைக் கொண்ட ஒரு நேயர் “நைஜீரியாவைப் பின்புலமாகக் கொண்ட பலர் இந்நாட்டில் சட்டபூர்வமாகப் பணிபுரிந்து அரசாங்கத்துக்கு வரி செலுத்தி வருகிறார்கள், பின் எதற்காக நீங்கள் நைஜீரிய மக்களைப் பற்றிக் குறைவாக விமர்சிக்கிறீர்கள்?” என்று அந்நிகழ்ச்சித் தொகுப்பாளரான நிக் வெராரியிடம் கேட்டார். அதற்கு அவர் மிக அமைதியாக “ஒரு ஊடகவியலாளரின் பார்வையில் எது முக்கியச் செய்தியாகிறதோ அதை அலசுவதே எனது பணி. இம்முக்கியச் செய்தியின் சாரம் அப்பணத்தை அறவிடாத நிர்வாகக் குறையைச் சுட்டிக் காட்டுவதேயன்றி அந்த நைஜீரியப் பெண்மணியின் மீது குற்றம் கூறுவதல்ல. இச்செய்தியில் சம்பந்தப்பட்டவர் நைஜீரியப் பென்மணி அல்லாது ஒரு அவுஸ்திரேலியப் பெண்மணியாக இருப்பினும் விளைவு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உங்களைப் போலவே நானும் இந்நாட்டில் சட்டபூர்வமாக வரி செலுத்தி வாழும் பல நைஜீரிய பிரித்தானிய பிரஜைகளை அறிவேன். எனவே தயவுசெய்து இது நைஜீரிய நாட்டினருக்கெதிரான ஒரு விமர்சனம் என்று பார்க்காதீர்கள்”என்றார்.

இந்நிகழ்வினைக் கேட்டதும் என் மனத்திலும் சிந்தனைகள் பறக்கத் தொடங்கின. இந்நாட்டில் சிறுபான்மையினர் எனும் எண்ணத்தோடு நாம் வாழும்வரைச் செய்திகளில் எம்மவர்கள் சம்பந்தப்பட்டால் அது எம்மீது தொடுக்கப்பட்ட ஒரு கெளரவப்பிரச்சனையாகச் சிந்திக்காமலே முடிவெடுத்து விடுகிறோமோ எனும் எண்ணம் என்னுள் கிளர்ந்தது. இந்நாடு நம் அனைவருக்கும் பொதுவானது. இந்நாட்டின்வளர்ச்சியும், தாழ்ச்சியும் எம்மையும், எமது சந்ததியையும் தான் பாதிக்கப்போகிறது. இந்நாட்டின் நிர்வாகம் சரியாக நடத்தப்படாததையிட்டு நாமும்தான் வருந்த வேண்டும். ஆனால் அதில் எம்மைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் ஏனோ அதனுள் இருக்கும் உண்மையான செய்திகளை மனம் உள்வாங்கிக் கொள்ள மறுப்பது எமது தனிமனிதக் குறைபாடா? இல்லை ஒட்டுமொத்தமாக எமது கலாசாரக் குறைபாடா?

மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

Leave a Reply

Your email address will not be published.