( எம் .ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்த்திரேலியா )

 

 

நூல்கள்பல கற்றாலும்

நுண்ணறிவைக் காணவில்லை

மால்மருகா வேல்முருகா

மனமெல்லாம் குழப்பமையா

நால்வேதப் பொருளோனே

நம்பியவர்க் கருள்பவனே

நாளுமுனைத் துதிபாட

நற்கருணை தாருமையா !

 

 

சூரர்தமை அழிப்பதற்கு

சுடராக வந்தவனே

பாரினிலே பலசூரர்

பாதகங்கள் செய்கின்றார்

யாருமே அவர்பக்கம்

பார்ப்பதற்கு அஞ்சுகிறார்

வேலவனே உன்வேலை

விட்டுவிடு விரைவுடனே !

 

ஆணவத்தை அழிப்பதற்கு

அரனுன்னை அனுப்பிவைத்தார்

ஆணவமோ இவ்வுலகில்

அரியணையில் இருக்கிறதே

ஆண்டவனை இப்போது

வேண்டாது எனக்கூறும்

ஆணவத்தை அழிப்பதற்கு

ஐயாநீ வேலைவிடு !

 

சஷ்டிவிரதம் இருப்பார்க்கு

சங்கடங்கள் போகுமென்பார்

கஷ்டம்பல இருந்தாலும்

சஷ்டியை நாம்விடுவதில்லை

துஷ்டர்பலர் வந்திங்கு

கஷ்டம்பல கொடுக்கின்றார்

இஷ்டமுடன் நீயிரங்கி

எமக்கருள்வாய் கந்தவேளே !

 

முருகாவுன் திருநாமம் முழுவுலகம் ஒலிக்கிறது

தெருவெங்கும் உன்கோவில் சிறந்தோங்கி இருக்கிறது

அருளான உன்னாட்சி அகிலமதைக் காப்பதற்கு

ஐயாவுன் அருள்நோக்கே அனைவருக்கும் வேண்டுமையா !

 

விழுந்தாலும் உன்நாமம் எழுந்தாலும் உன்நாமம்

விருப்பமுடன் எம்மனதில் வீறுகொண்டு வருகிறது

விண்ணவரைக் காப்பதற்காய் வேலுடனே வந்தவனே

மண்ணுலகில் உள்ளார்கள் மனம்திருந்த வரம்தருவாய் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *