ஆறுபடைவீடு (6) – திருத்தணிகை

க. பாலசுப்பிரமணியன்

morepic_9647486

கந்தா கந்தாவெனக் கொஞ்சியே அழைத்திட

இந்தோ இந்தோவென வந்திடும் மயிலே!

குமரா குமராவெனக் கனிவுடன் கூப்பிட

வந்தேன் வந்தேனென வந்திடும் வேலே!

 

பொல்லா நினைவுகள் பொடியாய் விழுந்திடும்

எல்லாத் திசையிலும் துணையாய் நிற்கும்

கல்லா மனிதருக்கும் கலங்கரை விளக்கம்

கந்தாவெனும் சொல்லே காலங்கள் கடத்தும் !

 

வென்றெனென்று சொல்லிட வாழ்வில் இல்லை

கொன்றைஅணிந்த குமரன் வரும் வரை !

நன்றேநன்றே நாளும்  உந்தன் நினைவுகள்

குன்றில்வாழும் குமரா குறைகள் களைவாய் !

 

படியாய் படியாய் வாழ்வில் படிப்படியாய்

பிடியாய் மனமே கந்தனைப் பிடியாய்

படியாத்  துயரங்கள் பனியாய் மறைய

முடிவாய் முதலாய் முருகனை வைப்பாய் !

 

இடியின் முழக்கம் நிலத்தின் நடுக்கம்

இசையாய் இனிக்கும் இதயத்தில் இருந்தால்

இமையனின் மகனே ! இணையில்லாக் குமரா !

இதயத்தில் அமர்ந்திடு இருதுணை அணைத்து !

 

தனியாய் வந்தேன் விடைகள் தேடி

தணிகை நாதா ! சஷ்டியில் வேண்டி

தடைகள் நீக்கிடத் தருணம் இதுவே

தருவாய் அருளை வருவாய் வேலா !

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *