க. பாலசுப்பிரமணியன்

 

திருவேரகம் (சுவாமிமலை)

images-5

பிரணவத்தின் பொருளை அறியாது நிற்கும்

பிரம்மனின் புகழுக்குப் பழியும் வந்திடுமோ?

பிரியாது இமைகளைச்  செதுக்கிய தேவரும்

புரியாது புதுப் பொருளை நாடினாரோ?

 

அலைமகளும், கலைமகளும், மலைமகளும் அணிசேர

அரங்கனோடு அரனும் ஆறுமுகன் அரங்கத்தில் !

அறிவுச்சுடரோ? எழுந்தது அருள்ஞானக் கடலோ?

அதிசயமே! அண்டங்கள் அறியாத தரிசனமே !

 

அப்பன் சாமியே !அன்னையின் சக்தியே !

தப்பெல்லாம் களைந்து தருமத்தை காப்பாய் !

செப்பிடக் குறைகள் ஆயிரம் இருந்தும்

சிந்தையில் வைத்தால் விந்தையாய் விலகிடும் !

 

ஆறுமுகம் கண்டு அகிலமே வியந்திட

ஒருமுகம் கொண்டே உலகினை வென்றாய்

நறுமணம் கமழும் பெயரினைச் சொன்னால்

நானிலம் அனைத்தும் நன்மையே பெருகும் !

 

திருவேரகத்தை நாடிவிட்டால் நித்தம் திருநாளே

வேறகத்தைத் தேடவேண்டாம் வேதனைகள் நீங்கிவிடும்

வானகத்தைத் தொடுகின்ற சாதனைகள் செய்திடலாம்

மாதவத்தின் பலன்தருவான் மனதினில் வைத்தவுடன் !

 

இருள்நீக்கி ஒளிபெருக்க இன்றே வருவாய்

மருளில்லா மனம்கொண்டு மதியாள அருள்வாய்

குறைவின்றிக் கொடுக்கின்ற மதியென்றும் தருவாய்

குமரா! உறவாக என்றென்றும் உள்ளிருப்பாய் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *