தன்வந்திரி பீடத்தில் லட்ச ஜப நவக்கிரஹ நட்சத்திர சாந்தி பரிஹார தசாபுத்தி ஹோமத்துடன் காலச்சக்கர பூஜை
தன்வந்திரி பீடத்தில் 04.11.2016 அன்று மண் வளம், மழை வளம், மக்கள் நலம் வேண்டி லட்ச ஜப நவக்கிரஹ நட்சத்திர சாந்தி பரிஹார தசாபுத்தி ஹோமத்துடன் காலச்சக்கர பூஜை நடைபெற உள்ளது
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 04/11/2016 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணியளவில் கோபூஜை, யாகசாலை பூஜையுடன் 15க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு நவக்கிரஹங்களில் உள்ள ஒவ்வொரு கிரஹங்களுக்கும் 10,000 ஜபம் வீதம், 9 தசாபுத்திகளுக்கு 10,000 ஜபம் வீதமும் “ஒரு லட்ச நவக்கிரஹ மூல மந்திர ஜபம் செய்து 10,000 ஆவர்த்திகள்” என்ற முறையில் மாபெரும் லட்ச ஜப நவக்கிரஹ நட்சத்திர சாந்தி பரிஹார தசாபுத்தி ஹோமம் நடைபெற உள்ளது.
இந்த யாகத்தின் பலன்.
மண் வளம், மழை வளம், மக்கள் நலம் வேண்டி நடைபெறுகிற இந்த, ஹோமத்தில் பங்கேற்கும் பக்தர்கள் நவக்கிரஹக தோஷங்கள் நீங்கி வாழ்வில் எதிர்வரும் தொல்லைகள் நீங்கி நன்மை பெறலாம். திருமணத்தடை விலகவும், சர்ப்ப தோஷம், நாக தோஷம், அகலவும், பித்ருக்களை திருப்திப் படுத்தவும், பஞ்ச பட்சி தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறவும், நிலம், வீடு, மனை, பாக்கியம் பெறவும், தொழில் தடை நீங்கி மேன்மைபெறவும், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இன்னல்கள் அகலவும், மழை பெய்து விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சி பெறவும், ஆலயங்கள் அபிவிருத்தி பெறவும், ஆலயங்களில் நடைபெறும் திருப்பணிகள் விரைவாக செய்து முடிக்கவும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த யாகம் நடைபெறுகிறது. யாகத்தின் நிறைவாக காலச் சக்கரமாக பீடத்தில் அமைந்துள்ள, நவக்கிரஹ, ராசி, நட்சத்திர விருட்சங்களுக்கு விருட்ச பூஜை நடைபெற உள்ளது.
ஜெனனி ஜென்ம சௌக்கியானாம்
வர்த்தினி குல சம்பதாம்
பதவி பூர்வ புண்ணியானாம்
லிக்கியதே ஜென்ம பத்திரிகா..
என்பதற்கு இணங்க நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்கும் காரணம் நவகிரஹங்கள் தான் என்பது நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, அவர்கள் தங்கள் பணியை செய்கிறார்கள். என்பது உண்மை.
இதைதான் வாங்கி வந்த வரம் என்கிறார்கள். இவர்கள் நம் வாழ்க்கையில் புகுந்து விளையாடுவதால் தான் நாம் பரிகாரம் செய்கிறோம். அதனால் நவகிரஹங்களை வணங்கி பூஜிக்க வேண்டும் என்பது ஜோதிடர்களின் வார்த்தையாகும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் மூலமந்திரம், வேதமந்திரம், காயத்ரி மந்திரம், பிராத்தனை மந்திரம் என்ற நான்கு உண்டு.
உதாரணமாக மூல மந்திரம் என்பது பீஜாச்சரம் கொண்டு சொல்வது. அது ஓம் ஸ்ரீம் ரீம் என்று வரும். வேத மந்திரம் என்பது ஒலி அலைகளால் நன்மை பெறுவது.
காயத்திரி மந்திரம் என்பது எந்த தெய்வத்தை நோக்கி ஹோமம் செய்கிறோமோ அவரின் புகழுரைகளை எடுத்துச் சொல்வது.
பிரார்த்தனை மந்திரம் என்பது நம் வேண்டுதல்களில் பலிதம் ஏற்பட சிரம் தாழ்த்தி, கை கூப்பி, மனதார இறைவனை பிரார்த்திப்பதாகும்.
நம் இந்து சாஸ்திரப்படி , இறைவனுக்கு எதையேனும் நாம் அளிக்க விரும்பினால், அதை அக்னி மூலம் தான் அளிக்க முடியும். அர்ப்பணிப்பு உணர்வுடன் மிக சிரத்தையுடன் நாம் மேற்கொள்ளும் ஹோமத்திற்க்கு அளவில்லா பெரும் பலன் கிட்டுவது நிச்சயம். நம் வேதங்களில் அக்னிபகவான் வழிபாடு மிக சிறந்த முறையில் நடந்து வந்ததை தெரிவிக்கின்றன. அக்னிக்கு அளிக்கப்படும் அனைத்தும் சூரியபகவான் உதவியுடன் இறைவனை மற்றும் எவர் குறித்து ஹோமம் நடத்தப்படுகிறதோ அவரை சென்றடைகிறது. அதே போல் சூரியபகவான் மூலமாகவே அதற்குறிய பலனும் நம்மை அடைகிறது.
அக்னிக்கு அளிக்கப்படும் பொருட்கள் பஸ்பம் ஆவது மட்டுமே நம் கண்களுக்கு தெரியும். மாறாக அதன் பலன் இறைவனை அடைவது சூட்சம ரகசியம். அது உரிய முறையில் காலத்தே நம்மை வந்து பிரதி பலன்களை அளிக்கும். நம் தேவைக்கு ஏற்றவாறும், பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காணவும் ஹோமங்கள் மிக அவசியம் என்பதால், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தில் இதுவரை ஆயிரக்கணக்கான ஹோமங்களை உலக நலன் கருதி செய்து வருகிறார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. இந்த யாகத்தில், அந்தந்த கிரஹத்துகுரிய தானியங்கள், சமித்துக்கள், பழங்கள், புஷ்பங்கள், பட்சணங்கள், நிவேதனங்கள் கொண்டும் தேன், நெய், விஷேச மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளன. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.