
’’பசுவு பநிடதம், பால்காரக் கோனார்
விசுவனாதர், தோழர் விஜயர் -சிசுவருந்த(கன்று அருந்த)
கீதைப்பால் ஊட்டுவது கண்ண பரமாத்மா:
பாதை தெரியுது பார்’’….கிரேசி மோகன்….!
Month: February 2017
-
கேசவ் வண்ணம் – கிரேசி மோகன்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
சித்திமகன் உத்தமன் அத்தன் மடியமர
தத்துமகன் போல்வாழ்ந்த அத்துருவ -புத்திரனும்
தம்புரா(நாரதர்) சொன்னபடி தாவி விசும்பேறி(விசும்பு -வான்)
எம்பிரான் மீனால்(மச்சாவதாரர்)விண் மீன்’’….!மாண்டபின் செல்கின்ற மோட்சம் கொடுக்காது
ஆண்டுகள் முப்பத்தா றாயிரம் -ஆண்டபின்
வானில் துருவ விளங்குவாய் விண்மீனாய்
ஆணில்(புருஷோத்தமர்) சிறந்தோன் அளிப்பு….கிரேசி மோகன்….! -
கிளி ஜோஸ்யம் போய்ப் பாரீர்!
-கவியோகி வேதம்
கிளி ஜோஸ்யம் பார்ப்போனைக் கிறுக்(கு) என்பர்;
விஞ்ஞானம் வெளிச்சமிட்டுக் கூச்சலிடும் வேளை
இன்று!
அது மூடநம்பிக்கைதான்! எனினும், நண்பர்களே கெஞ்சுகிறேன்!
கும்பிடுவேன் உம்மைநான்! கூண்டுவைத்துப்
பிழைப்பவனைக்
கிறுக்கனாகப் பாராமல் கிளி ஜோஸ்யம் பாருமய்யா!
அருமையாய்க் குறிகேட்க அமருகிற வேளையில்தான்,
‘பறவை’ அதுஒருநிமிடம் பார்க்கிறது சுதந்திரத்தை!
குறி சொல்லி முடிந்தபின்போ, கொறிக்கிறது ஒரு நெல்லை!எங்கெல்லாம் கிளிக்கூண்டோ அங்கெல்லாம் போம் அய்யா!
அங்கு போய்ப் பாரும் உமததிர்ஷ்டத்தை இறைஞ்சுகிறேன்!
பிச்சைஎடுக்காமல் ஓர் பிழைப்பும் தெரியாமல்
எச்சில் கூட்டி உம்வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும்
வறுமைஎனும் கூண்டிற்குள் வத்தலைப் போல் மெலிந்திருக்கும்
பிறருக்கே குறிசொல்லும் பித்தனையே போய்ப் பாரும்!அடிக்கடிப் போனால் இறை அடியாரே நீர் அன்றோ?
படி அளக்கும் பரமனுக்குப் பலதொண்டு செய்வதினும்,
பறவைக்கும், மனிதனுக்கும், ஒரே சமயம் உதவுவதால்
சொர்க்கத்தின் இருகதவை ஒரேகையால் திறக்கின்றீர்! -
மணவை முஸ்தபா நினைவேந்தல் நிகழ்வு – 18 02 2017 சனிக்கிழமை
நாள்: 18 . 02. 2017 சனிக்கிழமை
நேரம்: மாலை 5.30 – 7.30 வரை
இடம்: இந்திய அலுவலர் சங்கக் கட்டிடம்
69, திரு.வி.க. நெடுஞ்சாலை
இராயப்பேட்டை , சென்னை – 600014
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :
டாக்டர்.திருமதி. மணிமேகலை கண்ணன்
தொடர்பு எண்கள் : 9841036222 , 8939462185 -
10.01 மில்லியன் குழந்தைகள் சாவு!
பவள சங்கரி
இந்தியாவில் மட்டும் ஆண்டிற்கு 10.01 மில்லியன் குழந்தைகள் சுற்றுச்சூழல் (AIR POLLUTION) பாதிப்பினால், காற்று மாசுபாட்டின் காரணமாக உயிர் துறக்கிறார்கள். இது சீனாவைவிட அதிகம். தில்லியில் இதுபோல் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு உச்சநீதி மன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுத்ததுபோல இந்தியா முழுவதும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
-
VALENTINE DAY வாழ்த்துக்கள்….!
கிரேசி மோகன்
—————————————————————-
”சேனை தளபதியாய் ,சூரனைக் கொன்றுதெய்
வானை கரம்பிடித்து, வெட்டியாக. -கானிலே
வேலன்TIME PASSசெய்ய வள்ளியைக் காதலிக்க
VALENTINE DAYயாச்சு வே”(நெல்லைத் தமிழ்)….காதலும் துறவும்….!
—————————————–
’’ஊரைவிட்(டு) ஓடலால், ஒன்றிக் கலத்தலால்
யாரிடமும் கூறாமல் ஏற்பதால் -பாரினில்
சாதலை வென்று சமாதியில் நிற்பதால்
தீதிலாக் காதல் துறவு’’….கிரேசி மோகன்….VALENTINE DAY WALKING வெண்பா வழி வாழ்த்துக்கள்….!
—————————————————————-”வாக்கிங் வெண்பா”…..
——————————-‘’ஓடிடும் முப்பது, ஓய்வெடுக்கும் மூப்பது,
தேடிடும் டீனேஜ் துணையை, -மாடொடுநாய்,
பேச்சேதும் பேசாது பன்னே(BUN) குறிக்கோளாய்,
பீச்சில் அலையும் பசிக்கு”….கிரேசி மோகன்….”சேனை தளபதியாய் ,சூரனைக் கொன்றுதெய்
வானை கரம்பிடித்து, வெட்டியாக. -கானிலே
வேலன்TIME PASSசெய்ய வள்ளியைக் காதலிக்க
VALENTINE DAYயாச்சு வே”(நெல்லைத் தமிழ்)…. -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்அப்
பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும் -மாலன்டைம்ஸ் நமக்கு என்றும் ‘’கேசவ்வால்’’….!”VALENTINE நாளின்று வேழம் முதலையை
மாலன்டைம்ஸ் ஆக்கி மடியிருத்தும் -நீலன்
பழகிடப் ஆனையே, பாய்ந்திடப் பல்முதலை
அழகிய சிங்கா அருள்….கிரேசி மோகன்….! -
எழிலரசி கிளியோபாத்ரா -2
எழிலரசி கிளியோபாத்ரா
[பேரங்க நாடகம்]
மூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷாதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++++++
வயது ஏறினும் வாடாது அவள் மேனி
வழக்க மரபுகளால் குலையாதவள் எழில்.
வரம்பிலா விதவித வனப்பு மாறுபாடு!
அவளது உடல் வனப்பை விளக்கப் போனால்,
எவரும் சொல்லால் வர்ணிக்க இயாலாது !
தோரணம் தொங்கும் அலங்காரப் பந்தலில்
ஆரணங்கு படுத்திருந்தாள், பொன்னிற மேனி !
இயற்கை மிஞ்சியக் கற்பனைச் சிற்பம்,
வீனஸ் அணங்கினும் மேம்பட்ட சிலை !வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]
பெர்னார்ட் ஷாவின் சீஸர் & கிளியோபாத்ரா நாடகத் துவக்கவுரை
[மெம்ஃபிஸில் எகிப்தின் தேவாதிபதி கழுகுத் தலையுடைய “ரா” தெய்வத்தின் ஆலயம் [Chief Egyptian Deity “Ra”] இருளடைந்து போயுள்ளது. அங்கிருந்து ஓர் அசரீரிக் குரல் எழுகிறது]
“அமைதி! அமைதி! கேளுங்கள் நான் கூறப் போவதை! எகிப்த் நாடு ரோமாபுரிச் சாம்ராஜியத்தின் கீழிருந்தது. நான்தான் “ரா” தெய்வ அதிபதி. எகிப்த் நாட்டில் ஃபெரோ வேந்தர்களின் உன்னதப் பராக்கிரமக் கடவுளாக இருந்தவன், ஒரு காலத்தில்! நான் வணங்கப்பட்ட போது ரோம் நகரம் பண்டைய ரோமாபுரி, புதிய ரோமாபுரி என்று துண்டு பட்டிருந்தது! இரண்டிற்கும் இடையே ரோமானிய மாந்தர் நசுக்கப்பட்டுக் குழப்பத்தில் திண்டாடினர்! பண்டைய ரோமாபுரி ஏழ்மையானது, பேராசை பிடித்தது, கொடூரமானது! தீய எண்ணங்கள் மிக்கது! பாழடைந்த அதன் மனது குறுகியது! சிறுமையும், வறுமையும், இல்லாமையும் நிரம்பியது! பிச்சைக்காரன் குதிரையில் ஏறி அமர்ந்தைப் போலிருந்தது! குதிரையில் உட்கார்ந்த பிச்சைக்காரன் நேராக பிசாசுகளை நோக்கிச் செல்வான், என்று ஒரு பழமொழி சொல்கிறது!
பண்டைய ரோமாபுரி வெறுங்கையில் வாளேந்திச் செல்வம் திரட்டும் வழியும், புகழடையும் முறையும் எதுவென்றால், ஏழ்மை நாடுகள் மீது படை யெடுத்துத் திருடிக் கொள்ளை அடிப்பது, மெலிந்தோரை அடிமையாக்கி மிதிப்பது! ரோமானியர் ஏழை மக்களின் நிலங்களைப் பறித்து ரோமாபுரியோடு சேர்த்துக் கொண்டே வந்தார். எகிப்தில் அவ்விதம் ரோமா புரிக்கு அடிமை ஆனபோது, நான் வேதனையில் குமுறிச் சிரித்தேன். காரணம், ரோமானியர் சாம்ராஜியம் பெருகிக் கொண்டே வருகையில், சிறுத்துப் போன அவரது நெஞ்சங்களின் பரிமாணம் மாறாமல் அப்படியே இருந்தது! அடிக்க அடிக்கத் தலை குனியும் எகிப்துக்கு ஆதரவாக ஜூலியஸ் சீஸர் விஜயம் செய்தார்.
ரோமானிய மாந்தர் இரண்டுபட்ட ரோமுக்கு இடையே முரண்டு செய்த போது, வல்லமை கொண்ட போர்த் தளபதி பாம்ப்பி என்பவர் ரோமாபுரியில் மேலோங்கி வந்தார். பாம்ப்பி பண்டைய ரோமைக் கட்டுப்படுத்தி ஆண்டுவந்த தளபதி! படையாட்கள் யாவரும் நோக்கிப் போவது மரணத்தை! படைத் தீரர்களே சமூகத்தில் மேலோங்கி வரமுடியும்! பிறகு அதே சமயத்தில் போர்த் தளப்தி ஜூலியஸ் சீஸர் மேலோங்கி வந்தார். ஆனால் அவர் புதிய ரோமாபுரியின் தீரர்! கடவுளாகப் போற்றப்படும் ஃபெரோ மன்னரின் எகிப்தியப் பரம்பரைகள் புதிய ரோமையும், புதிய ரோமா புரியின் வீரர் ஜூலியஸ் சீஸரையும் ஆதரித்து வரவேற்றனர்! பாம்ப்பேயின் நண்பரான ஜூலியஸ் சீஸர் எகிப்திய மன்னர் சார்பில் பண்டைய ரோமின் குறுகிய கட்டுப்பாடுக்கு அப்பால் புதிய வழியில் சென்றார். சீஸர் ஒரு பெரும் பேச்சாளர், சிறந்த அரசியல்வாதி! அண்டை நாடுகளைக் கைப்பற்றிப் பொன்னும், பொருளும் ஏராளமாகச் சேமித்து ரோமில் கொட்டினார்! மேலும் நாடுகளைக் கைப்பற்றிப் போர் வெற்றிகளை அடுத்தடுத்துச் சீஸர் கொண்டு வரவேண்டும் என்று ரோமானியர் எதிர்பார்த்தனர். சீஸர் அந்த வாணிபத்தில் இறங்கி வெற்றிமேல் வெற்றி பெற்றுப் போரில் பலரைக் கொன்றார். கிரேக்க வீரர் மகாஅலெக்சாண்டரைப் போல், வெற்றிப்படைத் தீரனாகப் பேரும் புகழும் பெற்றுத் தன் பெயரை நிலைநாட்டினார்.
ஆனால் ரோமானியர் சட்டம், கடமை பற்றி எப்போதும் பேசிய பாம்ப்பியின் மீது சலிப்புற்றனர். “பண்டைய ரோமின் கடூரச் சட்டங்களை முறிக்க வேண்டும். அப்போது தான் நான் புதிய ரோம சம்ராஜியத்தை ஆள முடியும்! அவ்விதம் நேராவிட்டால் கடவுள் எனக்களித்த நாடாளும் கொடைப்பரிசு பலன் தராது அழிந்து விடும்,” என்று சீஸர் கலங்கினார். நாளடைவில் நண்பர்கள் பகைவர் ஆயினர்! பாம்ப்பி மறுத்துக் கூறினார்: “சட்டந்தான் எல்லாவற்றும் மேலானது. அதை நீ முறித்தால், நீ உயிரிழக்க வேண்டிய திருக்கும்.” என்று சீஸருக்கு எச்சரிக்கை செய்தார்! சீஸர் நிமிர்ந்து சொன்னார், “சட்டத்தை முறிக்கிறேன் நான்! யார் என்னைக் கொல்ல வருகிறார் என்று பார்க்கிறேன்,” என்று சவால் விட்டு சட்டத்தை முறித்தார்.பழைய ரோமின் விதிகளைப் பாதுகாக்கப் பாம்ப்பி பெரும் படை திரட்டிச் சீஸர் மீது போர் தொடுத்தார். சீஸர் ஏட்டிரியாடிக் கடலைத் தாண்டி நழுவி ஓடி விட்டார்! சீஸரைக் கவிழ்த்து, உலகத்தின் முன்பு அவர் முகத்தில் கரியைப் பூச பழைய ரோம் புறப்பட்டது! அதே சமயத்தில் சட்டத்தைப் பின்பற்றும், உன்னத உள்ளம் படைத்த பாம்ப்பியை உயர்த்தினர், பழைய ரோமானியர். பாம்ப்பி சீஸரை விரட்டிக் கொண்டு எகிப்துக்குச் சென்றார். சீஸர் பாம்ப்பியை எதிர்த்து எகிப்தில் போரிட்டார். கடைசியில் இரண்டு ரோமனியப் படைகளும் மோதின! பாருங்கள் பாம்ப்பியின் ரோம் ஒருபுறம்! சீஸரின் ரோம் எதிர்ப்புறம்! இரண்டில் எப்போர் வீரன் மிக்க வலிமை கொண்டவனோ, எகிப்து அவனோடு சேர்ந்து கொண்டு நலிந்தவனை நசுக்க முற்பட்டது. போரின் முடிவில் பாம்ப்பியின் பேராற்றல் நொறுங்கிச் சிதைந்தது. பாம்ப்பியை வஞ்சகமாக வரவேற்ற ரோமானியத் தளபதி லூசியஸ் செப்டிமியஸ் அவனைத் தோற்கடித்தான். முடிவில் பாம்ப்பி கொல்லப் படுகிறான். எகிப்து வெற்றி வீரர் சீஸரை வரவேற்று உபசரித்தது!
ரோமானியரின் உட்புறச் சண்டைகளைக் கேட்டு சலிப்படைந்தீரா? பாருங்கள், இதோ வருகிறாள், கிளியோபாத்ரா! அந்த ஒழுக்கமற்ற நங்கையின் கதையைக் கேட்க வேண்டுமா? வசீகர மங்கை கிளியோபாத்ராவின் வரலாறைக் கேட்க ஆசைப் படுகிறீரா? அவள் வாலிபம் பெறாத ஓர் வனப்பு மங்கை! ஆயா ஒருத்தி ஆட்டிப் படைக்கும் கைப்பொம்மை அவள்! எமது எகிப்து நாட்டில் சீஸர் இப்போது கால்வைத்திருக்கிறார். இனிமேல் வரும் கதையை நான் சொல்ல மாட்டேன். நீங்களே அதைக் காணப் போகிறீர்! அமைதியாக அமர்ந்து நாடகத்தைப் பாருங்கள். வருகிறேன் நான்! தயவு செய்து எனக்குக் கைதட்டாதீர்!
******************************
அங்கம்: 1 பாகம்: 2
நாடகப் பாத்திரங்கள்:ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]ஃபிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [40 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [50 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [35 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூஃபியோ: சீஸரின் லெஃப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் செப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]அபெல்லோடோரஸ்: ஒரு ஸிசிலியன்
பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]
பெல் அஃப்பிரிஸ்: மெம்ஃபிஸ் “ரா” தேவாலயத்தின் மதாதிபதி.
ரோமானியப் படையாளிகள்.
கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள்.
எகிப்தின் படையாளிகள்++++++++++++++++
நாடகக் காலம், நேரம், இடம்:
கி.மு. 48. எகிப்தின் நீள நைல் நதிக்கருகில் உள்ள பாலைவனம். ஒளிமிக்க பௌர்ணமி முழுநிலவு பொங்கி எழுகிறது. நீல நிற வானில் காளான்கள் முளைப்பது போல் விண்மீன்கள் விழித்தெழுகின்றன. பிரமிட் பின்னால் நிற்க, முன்னால் பிரம்மாண்டமான மனிதத் தலைச் சிங்கம் படுத்திருக்கிறது!
நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், அவரது லெஃப்டினன்ட் ரூஃபியோ, ரோமானியக் காவலர் சிலர், கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன், எகிப்திய காவலர் சிலர் சிங்கச் சிற்பத்தின் அருகே நடமாடி வருகிறார்கள். திடகாத்திரமும், உடல் உறுதியும் படைத்த பெல்ஸானர் தூரத்தில் வரும் ரோமானியப் படைவீரர் கூட்டத்தைக் கண்டு வியப்புற்று நிற்கிறான்.
பெல்ஸானர்: அதோ ரோனியப் படையினர்! யாரது ரோமானியப் படைகள் முன்னே பீடு நடையிட்டு வருவது? எங்கோ பார்த்த முகம் போல் தெரிகிறது. யாராக இருக்க முடியும்? போருடை அணியாத வயதான மனிதராகத் தெரிகிறது! அடே அப்பா! என்ன உயரம்? என்ன கம்பீரமான தோற்றம்? பின்னால் வருவர் யாரென எனக்குத் தெரியும். ராணுவ உடையில் இருப்பவர் ரூஃபியோ. ஜூலியஸ் சீஸரின் ரோமானிய லெஃப்டினென்ட்! ரூஃபியோவுக்கு முன்னால் சிங்கம் போல் நிமிர்ந்து வருபவர் யார்?
உதவிக் காப்டன்: காப்டன்! பார்த்தால் ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸர் போல் தெரிகிறது. ஆமாம், அவருக்குப் பின்னால் வருபவர் நிச்சயம், லெஃப்டினன்ட் ரூஃபியோதான். ஆனால் சீஸர் எதற்காக போருடை யின்றி, மாறு வேடத்தில் வருவது போல் வர வேண்டும்? … அதோ சீஸர் சிங்கச் சிற்பத்தின் முன்பாக நிற்கிறார். மனிதச் சிங்கத்தை உற்று உற்றுப் பார்க்கிறார் சீஸர்! அதன் கம்பீரத் தோற்றத்தைக் கண்டு பிரமித்து நிற்கிறார்!
ஜூலியஸ் சீஸர்: [பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மனிதச் சிங்கச் சிற்பத்தை (Sphinx) நோக்கி] மனிதச் சிங்கமே! கால வெள்ளம் அடித்துச் செல்லாத ஸ்ஃபிங்ஸ் சிற்பமே! பாலை வனத்தில் மண்புயல் இழுத்துச் செல்லாத மகத்தான படைப்புச் சிற்பமே! வெற்றி மமதையுடன் நீ வீற்றிருக்கிறாய்! உனக்கு ஜூலியஸ் சீஸர் வணக்கம் செய்கிறார்! ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின் பாலைவனக் காவலனாக நிமிர்ந்து கண்ணிமைக்காது படுத்திருக்கிறாய்! முதிய உன் வயதுக்கும், பெருத்த உன் வடிவுக்கும் நான் தலை குனிந்து வணங்குகிறேன். பல நாடுகளைக் கைப்பற்றி நான் இப்போது உன் முன் நிற்கிறேன். உன் நாட்டை எங்கள் ரோமாபுரி அடிமைப் படுத்தினாலும், உன் முன் நான் தவழ்ந்து வரும் ஒரு சிறுவனே! பிரமிக்கத் தக்க பிரமிட்களைக் கட்டி ஃபெரோ மன்னர் உன்னைப் பாலைவனத்தில் உருவாக்க எத்தனை ஆண்டுகள் எடுத்தனரோ? எத்தனை ஆயிரம் பணியாட்கள் உன்னையும், உன் பின்னால் நிற்கும் பிரமிடையும் எழுப்பினாரோ? எத்தனை பேர் உங்களைப் படைக்கும் போது செத்தனரோ? உன்னை விட வயதில் நான் சின்னவன் ஆயினும், இந்தப் பாலை வனத்தில் உனக்கு நிகரானவன் நான்! சமமான வல்லமை படைத்தவன் நான்! நீ படுத்தே கிடக்கிறாய்! போர் தொடுத்தே நான் வாழ்கிறேன்! பொறுமையாக அமர்ந்து வேடிக்கை பார்க்கிறாய் நீ!
போராடிக் களைத்து ஓய்வெடுக்க வந்துள்ளேன் நானிங்கு! மகத்தான மனிதச் சிங்கமே! நீயும் நானும் ஒரே குறிக்கோள் உடையவர்! உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும்! சிறுவனாக உள்ள போது நான் உன்னைப் பற்றி அறிவேன்! உன் நிழலில் எனது பராக்கிரமும் வல்லமையும் வளர வேண்டும் என்று சிறு வயதில் கனவு கண்டதுண்டு! இன்று அக்கனவு மெய்யானது! உங்கள் எகிப்து நாட்டுக்கும் நான் ஓர் அதிபதி! ரோம் பைத்தியகாரின் விளையாட்டுத் தளம்! ஆனால் எகிப்து நாடு பொன்னும், பொருளும் குவிந்த நாடு! ரோம் உங்களது நாட்டால் செல்வ நாடாகச் செழித்திருக்கிறது! ரோம சாம்ராஜியத்தைத் தாங்கி நிற்கும் பிரதான தூண்களில் எகிப்தும் ஒன்று! உன் மகத்துவம், உன்னதம் வாழ்க! உனது நாட்டுக்கு இரண்டு மன்னர்! ஆண் மன்னர் டாலமி! பெண் மன்னர் கிளியோபாத்ரா! அவர்களிருவரும் ஒருவர் முகம் ஒருவர் பாராமல், ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்ட விழிப்பாக உள்ளார்! யார் தலை விழப் போகிற தென்று தெரிய வில்லை! அவரது சண்டையை நிறுத்த நான் வந்திருக்கிறேன். மன்னர் டாலமிக்கு 12 வயதாமே! அந்த பாலகன் இந்த நாட்டு வேந்தனா? விளையாட்டுப் பிள்ளை எப்படி வேந்தனாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான்? ஆமாம் கிளியோபாத்ராக்கு 20 வயதாமே! கவர்ச்சி நங்கையை நான் சந்திக்க வேண்டும். எங்கே ஓடிவிட்டாள் உங்கள் ராணி?
+++++++++++++++++
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
“பகவான் உவாச “….!
————————————————-”என்னை மறக்கா(து) எதையும் நினைக்காதே
உன்னைநான் உச்சிக்(கு) உயர்த்துவேன் -எண்ணை
திரியின்றி தானாய் எரியா(து) அதுபோல்
திரிநீஎண் ணைநான் தெளி’’….
“வேரோடு கிள்ளி விருட்சம் அகந்தையொடு –
போரோடு போராகப் போராடு -வீராநீ! –
வெற்றி உனக்கதை வீழ்த்துதல் தானன்றி –
சுற்றியுள்ள நூறு சடங்கு “…..கிரேசி மோகன் ….! -
அ.இ.அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவினரின் அபாரப் பணி!
பவள சங்கரி
தமிழக முதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக, ‘மிஸ்ட் கால்’ திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது 9289222028 என்ற கைபேசி எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுத்து விருப்பப்பட்ட பொது மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தார்கள். இதன் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களில் 35 இலட்சம் மக்கள் மிஸ்ட் கால் அதாவது தவறவிட்ட அழைப்புகள் மூலமாக தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதில் 3 இலட்சம் அழைப்புகள் வெளி மாநிலங்கள் மற்றும் 2 இலட்சம் அழைப்புகள் வெளி நாடுகளிலிருந்தும் வந்துள்ளதாம். இதுமட்டுமன்றி நேரில் வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ள பொது மக்களின் சுய விவரங்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு அவைகளும் இதுவரையில் 3 இலட்சங்களைத் தாண்டியுள்ளதாம். தவறவிட்ட அழைப்புகள் மூலம் தமக்கு ஆதரவு தெரிவித்த பொது மக்கள் ஒவ்வொருவருக்கும் தமது குரல் பதிவு மூலம் நன்றியும் தெரிவித்துள்ளார் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களும் தேர்தல் காலங்களில் தமக்கு ஆதரவு தெரிவித்த மக்களுக்கு தமது குரல் பதிவின் மூலம் நன்றி தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இசையும், நடனமும், கருத்தரங்கமும்
இன்னம்பூரான்
12 02 2017உய்ய வந்தவர் செழுந் தமிழ்ப் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார்.
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 179.4இன்று வைகறையில், எழுந்தவுடன் நரிமுகத்தில் விழித்தேன் போல. தருமமிகு சென்னையின் இன்றையபோக்கு பற்றி சொல்லும்படியாக ஒன்றும் இல்லையென்றாலும், அசாத்திய துணிவுடன் பயணித்து, பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. வீணையின் ரீங்காரமும், ஒத்த மத்தள சொல்லுக்கட்டு போன்ற ஆற்றல் மிகுந்த வாசிப்பும் அவைக்கு அலங்காரமாக அமைய, நடனம் அதற்கு மெருகேற்ற, ‘காலந்தோறும் தமிழ்!’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் இனிதே நடையேறியது. ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா,ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா,ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி , சென்னை,ஆதிரா பதிப்பகம், சென்னை நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடந்த விதத்தை பற்றி முதலில். அரங்கம், அருமையானது. மேடையில், நீதியரசர் தலைமையில் அமர்ந்திருந்த சான்றோர்கள் நல்லதொரு காட்சி. அதற்கு இணைந்தவாறே, மேடைக்கு முன்புறம், சற்றே தாழ்ந்த படியில் வரிசையாக ஒரு புஷ்ப அணி. கணக்குப்போட்ட மாதிரி, கால அளவை மதித்து உரையாடிய தமிழர் அணி. பானுமதி எனப்படும் ஆதீரா என்ற அதிகாரியினி தான் ஓடி ஆடிக்கொண்டிருந்தார். அவர் என் கட்டுரையை படித்து விட்டார் போல! அதே கருத்து. மலேசியா போல அரசு தமிழ் கருத்தரங்கம் நடத்தாததால், நாம் தான் முனைய வேண்டும் என்றார். ‘அதே! அதே! சபாபதே’ என்று மனனம் செய்து கொண்டு, தலைமை தாங்கிய நீதியரசர் எஸ்.மோஹன் அவர்கள் திருக்குறளை முன்வைத்து ஒரு கருத்துக்களஞ்சியமே வழங்கினார். தினமலர் ஆசிரியர் முனைவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நாணய ஆய்வு ஒன்றை அருளினார். எல்லாம் செல்லாக்காசு தான்! விலை மதிப்பற்ற தமிழ் வரலாற்றை பேசாமடந்தையாக முன் வைக்கும் நாணயங்கள். யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம். மலேசிய துணையமைச்சர் தத்தோ எம்.சரவணன் அவர்களை மலேசியா சென்று சந்தித்து, பாடம் படிக்கப்போகிறேன். என்ன பாடம்? தமிழ் உச்சரிப்பு என்ற கவின்கலை. மொழி நயமும், குரல் வளமும், குறையிலா உரை ஒலியும், சொல்லும், பொருளும், கருத்துமாக இணைந்து வந்தன.
இந்த நிகழ்வு ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்ற ரகம். முனைவர் கோ.பெரியண்ணன் முதல் திரு.எ.கலி வரதன் வரை ஏழு புலவர்கள் அடங்கிய குழு ஒன்று ‘காலந்தோறும் தமிழ்’ என்ற இந்த ஆய்வுக்கோவையை ( கை வலி: அத்தனை தடிமன்: 180 கட்டுரைகள். ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது, இதன் 1022 பக்கங்கள் திக்கெட்டும் செல்லும். என் குட்டுரை ( ஒரு மோதிரக்குட்டு வைக்கும் கட்டுரை: 25வது).
அரங்கம் இருந்த இடம்: ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி, பள்ளிக்கரணை, சென்னை. இத்தனை பரிசுத்தமான கல்லூரியை நான் இந்தியாவில் கண்டதில்லை. மாணவர்களின் நன்னடத்தை வெளிப்படையாக தெரிந்தது. கல்லூரித்தலைவர் முனைவர். எஸ். ராமநாதன் அவர்களின் பெருந்தன்மை கண்கூடு. அவர் எங்களுக்கு அவர்கள் கல்லூரி ஹோட்டல் துறை மாணவர்கள் தயாரித்து பரிமாறிய இரு சுவை விருந்து அளித்தார். பிரமாதம். அந்த இரு சுவை இனிப்பு. இனிய விருந்தாகியதால், மற்ற சுவைகள் என் நாவை அடையவில்லை. ஆகவே, இனிப்பு + இனிப்பு. மற்ற சான்றோர்களை பற்றி எழுதாதது கை வலியால்! பொறுத்தாள்க. மாலை அமர்வில் கவிஞர். வைரமுத்து வந்திருக்கிறார். விருந்து லாகிரியில், நான் துயில் கொண்டேன்.
நன்றி, வணக்கம்.இன்னம்பூரான்
மேற்கோளுக்கு நன்றி: இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு.
பின்குறிப்பு:
கைப்பையும் கரமழகு.
இன்னம்பூரான்
வல்லமை – மின்னிதழ்.காலந்தோறும் தமிழ்!
11 12 2016
ஞானத்தமிழ் என்ற சொல் ஒன்று உண்டு. அமுதம் என்றும் ஒரு சொல் உண்டு. ‘… திருந்துமொழிப் புலவ ரருந்தமி ழாய்ந்த சங்கமென்னுனும்துங்கமலி கடலுள் அரிதி னெழுந்த பரிபாட் டமுதம்.’ என்ற சிறப்புப் பாயிரமாயினும், ‘அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தையிடுதிரியா- நன்புருகி ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணற்குஞானத்தமிழ் புரிந்த நான்’ என்று பூதத்தாழ்வார், அன்பையும், ஆர்வத்தையும், இன்பத்தையும், சிந்தையையும் கலந்து இறைப்பற்று ஞானமுதமாக, நெக்குருகி பாடியது ஆயினும், ‘தமிழ்கூறு நல்லுலகத்து…’
என்று தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம் பாராட்டியது ஆயினும், ‘தண்தமிழ் வினைஞர் தம்மொடு கூடிக்கொண்டுஇனிது இயற்றிய கண்கவர் செய்வினை..’ என சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையில் சீராட்டியது ஆயினும், ‘தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே! என்று கம்பர் மெய்மறந்து கனிவுடன் அழைத்ததாயினும்,‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்தொழுது படித்தடடி பாப்பா’ என்று மகாகவி பாரதியார் மழலை அமுதமூட்டியது ஆயினும், ‘தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்!’ என்று தமிழமுதத்தை பாவேந்தர் புகழ்ந்ததாயினும், ‘தமிழன் என்றொரு இனம் உண்டு! தனியே அவர்க்கொரு குணம் உண்டு!’ என்று இனமும் குணமும் கண்டு நாமக்கல் கவிஞர் கவி இசைத்தது ஆயினும், அவற்றுடன்,
மலேசியாவின் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றமும், ஈகரைத் தமிழ்க் களஞ்சியமும், ‘அனைத்தும் ஒன்றே’ ஶ்ரீ நாராயண குருவின் பிரதம சீடராகிய மகாகவி குமரன் ஆசான் அவர்கள் நினைவை போற்றும் தமிழகக் கலை அறிவியல் கல்லூரியும், எம்மை இங்கு பிடித்திழுத்து வந்த ஆதிரா பதிப்பகமும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் நற்பயனாகவும் சரி,
காலந்தோறும் தமிழ் செழித்து ஓங்கவேண்டும்; பட்டி, தொட்டி, பளிங்கு மாளிகை, கூட கோபுரம் தோறும், இறவா வரமாகத் திகழவேண்டும் என்று தமிழ்த்தாயிடம் வேண்டிக்கொண்டு, அதன் பொருட்டு, வரலாற்றின் அடிப்படையில் சில கசப்பான உண்மைகளை முன்னிறுத்தி, வருங்காலந்தோறும் தமிழ்மணம் தரணி முழுதும் வீசுவதற்கான ஆயத்தங்கள் செய்வோமாக.
இந்தியா விடுதலை பெற்றபின், அரசும், சமுதாயமும், கல்வித்துறையும் தமிழுக்கு செய்த பணிகள் சொற்பம். உதட்டளவில் உதிர்த்த வாய்பேச்சு வீரதீரங்கள் வியர்த்தமாயின. ‘நல்லதோர் வீணையாகவும், மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமல செல்வியாகவும், அன்னை பராசக்தியாகவும் அவதரித்த உத்தமி தமிழன்னை ‘திக்கற்ற பார்வதியாக’ வாடுகிறாள் என்பது தான் வரலாற்று உண்மை.
நமது கிராமங்களில், நிறைகுடங்களாகவும், கலங்கரை விளக்குகளாகவும், பண்டைத்தமிழின் திறவுகோல்களாவும் பணி புரிந்த தமிழறிஞர்கள் திண்ணைப்பள்ளிக்கூடங்களில் இலவசமாக எடுத்த பாடங்கள் எங்கே? சுப்ரதீபக்கவிராயர் வீரமாமுனிவருக்கு பாடம் எடுத்த விதம் அதே. தமிழ்த்தாத்தா, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் கற்றுக்கொண்டவிதம், அதே. தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் தன் தந்தையிடம் படித்த விதம் அதே. அத்தகைய நன்முத்து வாசிப்புகள் ஏன் காணாமல் போயின?
கலோனிய அரசு தமிழுக்கு அளித்த பெருமிதம், விடுதலை அடைந்தபின் நமக்கு கிட்டவில்லை. 18ம் நூற்றாண்டில் துரைத்தனத்தாரால் உயர்நிலை பள்ளிகளில் படிக்க அமைத்த தமிழ் பாடபுத்தகம் ஒன்றுடன் தற்கால பட்டப்படிப்பு அட்டவணையை ஒப்பிட்டால், வெட்கி தலை குனிவோம். கலோனிய ஆட்சிமொழி சோற்றுக்கு ஒரு சோறு பதம், ஐ.சி.எஸ் பாடபுத்தகத்திலிருந்து:
1864 வருடம் ஜனவரி மீ 8 உ.”
‘மதிராஸ் ஜில்லா ஆக்டடிங்க் கலைக்டரவர்களாகிய ஜார்ஜி பான்புரி துரையவர்கள் சமூகததுக்கு,திருவள்ளூர் தாலூகா தாசீல்தார் நஜமுத்தீன் சாயபு எழுதிக்கொண்ட அர்ஜி.விடுதலை பெற்று பத்து வருடங்களுக்கு பிறகு தான் ஆட்சி மொழி சட்டம்! தொடக்க விழாவுக்கு மேலும் பத்து வருடம்! 1969 வருட ஆணை 2011 வரை கிடப்பில். 25 வருடங்கள் கழித்து, 1971ல் தனி அலுவலகம். மேலும், 25 வருடங்கள் கழித்து 1996ல் தனி அமைச்சகம்.
மைல்கல்களாக நட்டவை, கூப்பிடும்தூரத்து கூழாங்கல்களாக வலுவிழந்த வரலாற்றை புரிந்து கொண்டால் தான், பாசம் அவசரமாக பரவசமான உரு எடுக்கும்.
1956: டிசம்பர் 27: ‘தமிழ் ஆட்சி மொழி’ மசோதா. (த.நா.சட்டம் 39/1956) காமராசர் ஆட்சி. முன்மொழிந்த நிதி மந்திரி சி.சுப்ரமணியம்
இந்த நன்னாளைத் ‘தமிழன்னை அரியாசனம் அமரும் திருவிழா’வாகக் கருதும்படி கேட்டுக்கொண்டார்.
1966: ஆட்சி மொழி தமிழ் என்பதைச் செயற்படுத்தும் வகையில் ஆட்சி மொழிக்குழுவின் தொடக்க விழா!
1967: தி.முக. பதவியேற்பு:‘சென்னை மாநிலம்’ என்பதை அறிஞர் அண்ணா ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்தார்.
1969:ஸெப்டம்பர் 27: அரசின் ஒரு துறையிலிருந்து பிற துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
1969: நவம்பர் 13:சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சார்நிலையில் அமைந்திருக்கின்ற அனைத்து நீதி மன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும்,நீதிமன்ற சாட்சியங்களை 14.01.1970 முதல் தமிழில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆணையிடப்பட்டது.
1971: மே 28: அரசு நிருவாகம் முழுவதிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்குடன் தமிழ் வளர்ச்சி இயக்கம் எனத் தனி ஒரு அலுவலகம் உருவாக்கப்பட்டது.
1971:டிசம்பர் 2: அரசுச் செயலகத் துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டது.
1996: மே 13: அனைத்து நிலையிலும் படிப்படியாகத் தமிழை ஆட்சிமொழியாக உயர்த்திடும் முயற்சியின் உயர்நிலைப்பணியாக தமிழ் ஆட்சிமொழித்துறை தனி அமைச்சகமாக உருவாக்கப்பட்டது
2010: தமிழ்நாட்டு அரசின் இணையதளங்களில் பெரும்பாலும் ஆங்கிலப்பக்கங்கள்;தமிழ் பக்கங்கள் சரிவர இல்லை. சான்றாக, கிராமங்களின் எல்லை வகையறா ஆங்கிலத்தில் மட்டும்.
2010: மே 8: இந்த மாதம் 31-ந்தேதிக்குள் தமிழில் எழுதவேண்டும் என்று கெடு…தமிழில் எழுதப்படாத பெயர் பலகை அகற்றப்படும் என்ற வீராப்பு.
2010:சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழை சேர்ப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது..என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
2011: “ஆட்சி மொழி” என்றால் அரசாணைகள் மொழி.1947 ஆகஸ்ட் 15 வரை ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் ஆட்சி புரிந்தனர்.1966 லியே குஜராத்தி அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக வேரூன்றிவிட்டது.. அங்கு தமிழ்நாட்டை சார்ந்த மேலதிகாரிகள் குஜராத்தியில் உரையாடினர். இப்பொழுதும் கூட பல அரசு ஆவணங்கள் தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் தான் கிடைக்கின்றன.
2017: காலந்தோறும் தமிழ் மின்னொளி வீச, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடக்கும் இந்த நிகழ்வு அச்சாரமாக இருக்கட்டும் என்ற அவா;
2056: டிசம்பர் 27: ‘தமிழ் ஆட்சி மொழி’ மசோதா(த.நா.சட்டம் 39/1956) நிறைவேறிய தினத்தின் நூற்றாண்டு விழா நடந்தால்..’ என்று ஒரு பகடி கற்பனை: கடுஞ்சொற்களை மட்டுறுத்தியதால் எனக்கு மன அழுத்தம்.
அந்த விழாவில் ஏகோபித்தத் தீர்மானங்கள்:
ஓரம் கிராமத்தில் குடிகொண்டிருக்கும் தமிழன்னை சிலைக்கு வைரமூக்குத்தி;
அடுத்த நூற்றாண்டு விழாவுக்கு ஒரு அமைச்சரகம்;
தழிழில் எழுதுவதற்கும், பேசுவதற்கும் தடையேதுமில்லை என்றதோர் அன்புக்கட்டளை;
ஐ.நா.வில் தமிழில் தான் பேசுவோம் என்ற வீராப்பு.ஐயன்மீர்! அன்பு சகோதரிகளே! மாணவ மாணிக்கங்களே! இந்த பகடி கற்பனை உங்களை உசுப்பி எழுப்புவதற்கே. இன்று முதல் நாம் யாவரும் நாட்தோறும் இடை விடாமல் தமிழ் பாடங்கள் எடுப்போம்; தமிழ் பாடங்கள் கற்போம். அதுவே தமிழன்னையின் வேண்டுகோள் என்க.
-#-
சித்திரத்துக்கு நன்றி:
https://lh6.googleusercontent.com/proxy/NEOLFhSAtxrIzW8ts3p2YS7jE7q0FCsZhPnRS5K6gNo4ACtQ9fH-8qFQHMrUSLkgMRVFVb9dhBRW3AJWz2T5H5K4grC8bNsndCgcez_cW5tW3xYxeVWA49T9DSnb1L9kDNQ=w5000-h5000
உசாத்துணை:
Guide to Records, Coimbatore District, pg.139
Salem District Gazetteer – Richards, Volume – 1 Page.93
http://www.arignaranna.info/kalanj_mozhi.html
Madras Legislative Debates, ‘The Madras Official Language Bill| Dated: 28.12.1956, Pages: 393 to 422)
http://muvalar.blogspot.com/2010/07/blog-post.html
http://muvalar.blogspot.com/2010/07/2.html#more
http://www.natpu.in/?p=2404
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=31793 -
படக்கவிதைப் போட்டி 98-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திருமிகு. வெண்ணிலா பாலாஜி எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப்போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்களுக்கு நம் நன்றி உரித்தாகிறது!
செய்தித்தாளைக் கைகளிலும் முதுமையை உடலிலும் சுமந்திருக்கும் இந்தப் பெரியவரின் பார்வையின் கூர்மையில் ஏதோ ஒரு செய்தி ஒளிந்திருக்கக் காண்கிறேன்!
அந்த அரிய தகவலைத் துப்பறியும் வேலையைப் போட்டியாளர்களிடம் விட்டுவிடுவோம்!
நமக்குத் தொழில் கவிதைகளை இரசித்தல் மட்டுமே!
***
பாடுபட்டுப் படிக்கவைத்த பிள்ளைகள் தன்னை முதுமையில் பேணாது, நாடுவிட்டு நாடு சென்றாலும் அவர்பால் கொண்ட அன்பில் மாற்றங்கொள்ளாது, மனத்தில் ஏமாற்றங்கொள்ளாது, தன்னையே நம்பிவாழும் உத்தமரைக் காண்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்.
ஒரு தந்தையின் குரல்…
பாடுபட்டுச் சம்பாதித்து
படிக்கவைத்த பிள்ளைகள்
நாடுவிட்டுச் சென்றனர்,
நல்ல வாழ்வு தேடியே..உறுதுணையாயிருந்த
உத்தமியும்
உலகைவிட்டுச் சென்றுவிட்டாள்..வேறுதுணை ஏதுமில்லை,
உறவினரும்
எறெடுத்துப் பார்க்க
என்னிடம்
எதுவுமில்லை சொத்தாக..சோறு கேட்கும் வயிற்றுக்குச்
சொற்பமேனும் கொடுக்கத்தான்
வேறு எவரையோ நாடி
வேலைசெய்து பிழைக்கின்றேன்..சாகும்வரை யாரையும்
சார்ந்திடாமல் நடமாட
சக்திகொடு இறைவா..என்னைப்போல பலருண்டு
இங்கேதான்,
அதனால்
எங்கிருந்தாலும் வாழ்க
என்பிள்ளைகள் சுகமாய்…!***
”இளமையில் தாய்தந்தையரிடம் தாம்பெற்ற அன்பினை அவர்தம் முதுமைக்காலத்தில் அவர்களுக்குத் திருப்பித் தருதல் பிள்ளைகளின் கடனாகும். குறைந்துகொண்டே வரும் அம்முதியோரின் வாழ்வுக்கு இனிமைகூட்டுவது, இன்பமூட்டுவது அன்புவொன்றே!” என்பது திரு. பழ. செல்வமாணிக்கத்தின் கருத்து.
தனிமைக்கொரு தனிமை
குழி விழுந்த கண்கள்!
ஒளி மறந்த விளக்குகள்!
கண்ணீரை மறைக்க ஒரு
கண்ணாடி!
மேல் சட்டை முழுதும் அழுக்குக் கறை!
உள்ளத்தில் தூய்மையின்
வளர்பிறை!
நரை நிறைந்த சிகை!
வேதனை கலந்த ஒரு
புன்னகை!
கூடிக் கொண்டே போகும் அகவை!
குறைந்து கொண்டே வரும் வாழ்க்கை!
வறுமை இவர்களின் வாடிக்கை!
வசதியும், இறைவனும் இவர்களுக்கு
ஒன்று தான்!
இரண்டையும் இதுவரை இவர்கள்
பார்த்ததில்லை !
செய்தித் தாளில் இவர்
தேடுவது எதனை?
தொலைத்த தன் வாழ்க்கையையோ!
வாடிய பயிரைக் கண்டு வாடித்
தவித்தது ஒரு காலம்!
வாடிய உயிரையும், வேடிக்கை
பார்ப்பது இக்காலம்!
இவர்கள் வாழ்வில் என்று
வரும் வசந்தகாலம்!
இளமையில் வறுமை, கொடுமை
என்றாள் ஔவைப் பாட்டி!
உண்மையில் கொடுமை
முதுமையில் தனிமை!
பிறந்தவுடன் நீ தந்தைக்கு குழந்தை!
இன்றைக்கு அவர் தான் உன்
மூத்த குழந்தை!
திருப்பித் தருவாய் உன்
அன்பின் பகிர்வை!***
”முதுமை வேண்டுவது பொன்னையோ பொருளையோ அல்ல; பெற்ற பிள்ளைகளின் அன்பையும் அருளையுமே!” என்பதை எளிமையாய்த் தம் கவிதைகளில் காட்டியிருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!
இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருக்கும் கவிதையைக் காண்போம்!
உழைப்பும் தன்னம்பிக்கையும்!
எனக்ககவை எண்பதேயானாலும்
எனக்குற்ற துணையென்று “உழைப்பு” ஒன்றுதான்!என்கையே எனக்குதவியெனும் கருத்தில்
என்மன உறுதி! இன்றைக்கும் எனைவாழவைக்கும்!தள்ளாத வயதினில் சமுதாய மெனைத்
தள்ளிவைப்பதாக யான்நினைத்தாலும்…வெறுப்புற்று வாழவியலா நிலைகண்டுநான்
விரக்தியுற்றுத் துவளும்மனம் கொண்டதில்லை!முதியோரில்லம் சேர்ந்தங்கொரு கோடியில்
முடங்கி உறங்கி சுருங்கிக் கிடக்கவும் விரும்பவில்லை!மனிதரிலே மனிதராக நானும் பிறந்தேன்
இளமைமுதல் மானத்தோடு வாழ்வதிலே முயன்று முதியவனானேன்!“சோம்பித் திரிவர் தேம்பித் திரிவர்”!
“சோம்ப லிளமையில்” – “வறுமைமுதுமையில்”- யென்கிற..பழமொழியின் உட்பொருள்தனை யறிந்துநம் மனதை வழக்கப்படுத்தி நலம்வாழ முயற்சி செய்தால்பந்தங்களும் சொந்தங்களும் உதவாத போதும்நம்
பரிதாப நிலைகண்டொரு நாளும்பதற வேண்டியதில்லை!சிற்பம்தனில் ஒளிந்திருக்கும் சிறு உளியின்சக்திபோல
உடம்பினுள் ஒளிந்திருக்கும் உன்னதசக்தி நீயறிந்தால்!காலிழந்த நங்கையொருத்தி சிகரம்ஏறிய சாதனைபோல
நீயிழந்த நம்பிக்கை மீண்டுமெழ – நீயுமுண்டு வரலாற்றில்!பிறக்கும் போது தொட்டிலில் தொடங்கிய வாழ்க்கையை
இறக்கும்வரைக் கட்டிலில் வீழ்ந்துவாழ மனமில்லை!இளமையில் சேர்த்ததெல்லாம் எனைவிட்டு விலகினாலும்
உழைக்குமெண்ணம் முதுமையிலும் விலகவில்லை!உழைப்பவர் போலசிலர் வேடந்தான் போடுகின்றார்!
உண்மைஅறிந்து கொண்டபின்னே வெறுப்புதான் மிஞ்சும்!எண்பது வயதானாலும் உழைப்பயறாத..
என்முதுகில் கூன்விழ மறுப்பது இயற்கையன்றோ!நாளிதழ் தினமும் படிக்கின்றேன் கண்ணொளி இன்னும் மங்கவில்லை!
நலமுடன்வாழ நானிலத்தில் நானின்றும் உழைக்கின்றேன்!“நாடிவரும் அதிர்ஷ்ட மெனநினைத்து” உழைக்கமுயற்சி யிலையெனில்…
ஓடிவிடும் உடல்நலம் வீணாய் நமைவிட்டு
ஒப்பி நானும்…தளராது தன்னம்பிக்கையில்…தெரிந்தகைத் தொழில்செய்து
அயராது உழைத்தினிதே வாழ்வேன்அகவை நூறானாலும்!உட்கார்ந்த இடத்தினிலே, வயதான காலத்திலும்
உயர்வான எண்ணத்திலே, ஒருவருக்கும் தீங்கின்றிவேளையொரு சோற்றுக்குப் பிறரைவேண்டி வாழாமல்
சைக்கிளுக்குக் காற்றடித்துப் பஞ்சர் ஒட்டிஉழைத்துப் பிழைப்பேன்!முதியோர் இல்லம் சேர்ந்து முடங்கிவிட விரும்பாது,
”ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்” எனும் வள்ளுவத்துக்கு வாழும் சான்றாய், ”வண்டிக்குப் பஞ்சர் ஒட்டியேனும் என் வாழ்க்கை வண்டியைக் கண்ணியத்தோடு ஓட்டுவேன்!” எனும் நெஞ்சுரத்தோடு வாழும் நேர்மைமிகு பெரியவரைத் தன் கவிதையில் கம்பீரமாய்க் காட்சிப்படுத்தியிருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்து மகிழ்கிறேன். -
படக்கவிதைப் போட்டி – 99
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

ராஜ்குமார் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (18.02.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.













