கிருத்திகா

இரயில் புறப்படுவதற்கு இன்னும் 10 நிமிடங்கள் இருந்தன. மரகதம் ஏறி அமர்ந்து கொண்டாள். 56 வயதிலும் சுறுசுறுப்பும், திடமும் குறையவில்லை.

18 வருடங்களுக்கு முன் தன் கணவர் தன்னை விட்டு பிரிந்த பின், தன்னால் இயன்ற வேலைகளைச் செய்து, தன் மகன் உதயாவை எந்த குறையும் தெரியாமல் வளர்த்தாள். அப்போது அவனுக்கு வயது 10 தான். தன் தாயை விட்டு எங்கும் செல்ல மாட்டான்.

பள்ளி, கல்லூரி என எல்லா இடங்களிலும் படிப்பில் முதல் மாணவனாக தேர்ச்சி பெறுவான். பின் சென்னையில் நல்ல வேலையும் கிடைத்தது. அவனுக்கு தாயை விட்டு செல்ல விருப்பம் இல்லை. மரகதத்திற்கு அவனுடைய எதிர்கால வாழ்வுதான் கண் முன் நின்றது. ஆனால் அவளுக்கு தன் சொந்த மண்ணை விட்டு செல்லவும் மனது ஒப்பவில்லை. இறுதியாக அவனை மட்டும் அனுப்பி வைத்தாள்.

விடுமுறை நாட்களில் தவறாது வந்து விடுவான். சரியான தருணத்தில், அவனுக்கும் பிரியாவிற்கும் திருமணம் செய்து வைத்து தன் கடமையை முடித்துவிட்டாள், மரகதம். இவர்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கும் கண்ணேறு பட்டுவிட்டது. இன்னும் மழலை மொழி அந்த வீட்டில் கேட்கவில்லை…..

பேரக்குழந்தைகளை பார்த்துவிட்டு தன் வாழ்க்கை முடிந்தால் போதும் என்ற கனவுகளை அவள் மனம் எப்போதும் சுமந்து கொண்டிருக்கும்.  அப்போதுதான் திடீரென்று ஒரு நாள் உதயா போன் செய்து, “அம்மா!! நான் உங்களிடம் முக்கியமான விசயம் பேசனும்…… நீங்க ஊருக்கு உடனே கிளம்பி வாங்க……!!! “, என்றான்.

அவளுக்கு எதுவும் புரியவில்லை. இருப்பினும், காரணம் இல்லாமல் அவன் பேசமாட்டான். எனவே, அடுத்த இரயிலுக்கு உடனே புறப்பட்டு விட்டடாள்.

சென்னை சென்ட்ரல் வந்துவிட்டதை ஒலிபெருக்கி அறிவித்துக் கொண்டிருந்தது.தன் பைகளை எடுத்துக் கொண்டு இறங்கினாள். அங்கே உதயா அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான்.

காரில் செல்லும்போது, “ எதுக்குடா, இவ்வளவு அவசரமா வரச் சொன்ன…..??” என்று கேட்டாள்.

“அம்மா….. அது முக்கியமான விசயம்னு தான் உங்களை நேர்ல வரச் சொன்னேன்…..  ஆனா இத உங்ககிட்ட எப்படி சொல்றதுனு தான் தெரியாம குழம்பி போயிருக்கேன்…..”

“என்கிட்ட சொல்ல எதுக்குப்பா குழப்பம்…… உன்னோட நெருங்கிய தோழியா நினைச்சு என்கிட்ட சொல்லுப்பா… உன் முகத்த பார்க்கும் போதே ஏதோ முக்கியமான விசயம்னு புரியுது….”

”அம்மா…. வீட்டிக்கு போனதும் சொல்றேன்ம்மா…”

வீட்டிற்குள் நுழையும்போதே உள்ளிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அவள் உதயாவை புரியாமல் பார்த்தாள்.      அவன் சொன்னான்: ”அம்மா..!! குழந்தை இல்லைனு வருத்தப்பட்டுகிட்டே இருக்கறதை விட, ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கிலாம்னு முடிவு பண்ணினோம். அத உங்ககிட்ட எப்படி சொல்றதுனு தெரியல… அதனால தான் உங்களை நேராகவே வர சொன்னேன்… ” இது தான் சரியான சமயம் என சொல்லி விட்டான்.

”ஆனா…. நீ தான் எனக்கு சொல்றதுக்கு முன்னாடியே குழந்தையை கூட்டிட்டு வந்துட்டியேப்பா… அப்பறம் எதுக்கு இவ்வளவு நேரம் சொல்ல கஷ்டப்பட்ட.. இது தான் என் குழந்தைனு ஒரு வார்த்தைல சொல்லிருக்கிலாமே.. நீ ரொம்ப பெரிய மனுஷன் ஆகிட்ட… இனி எல்லா முடிவையும் என்னை கேக்கனும்னு எந்த அவசியமும் இல்லையே…..” பொய்க் கோபத்துடன் பேசினாள்.

“இல்லீங்க அத்தை.. நாங்க எப்பவும் உங்களை கேக்காம எதையும் செய்ய மாட்டோம்..” வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தாள், அவளுடைய செல்ல மருமகள் பிரியா. அவளை தொடர்ந்து கையில் குழந்தையுடன் ஒரு பெண் உள்ளிருந்து வெளியே வந்தாள்.

மரகதம் சுதாரித்துக் கொண்டாள். பின் “ டேய்.. உதயா இப்பவே காரை எடுடா.. என்னோட பேரனை உடனே போய் கூட்டிட்டு வரலாம்…”  சொன்னதுடன் நில்லாமல் வேகமாக காரை நோக்கி சென்று விட்டாள்.

உதயாவும், பிரியாவும் இதை சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அவளை சம்மதிக்க வைக்க பல திட்டங்களை யோசித்திருந்தார்கள். ஆனால் இப்போது அதற்கு தேவையே இல்லாமல் போகிவிட்டது.

காரில் அமர்ந்திருந்த மரகதத்திற்கு தெரியும்..

‘குழந்தையை தத்து எடுப்பது’ வேண்டாம் என மரகதம் நினைத்திருந்தால், இன்று உதயா என்றொரு மகன் இருந்திருக்க மாட்டான்…..    என்ற உண்மை..!!!!

2 thoughts on “வாரிசு

  1. அருமை. வாழ்த்துக்கள் கிருத்திகா…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க