குறளின் கதிர்களாய்…(167)

செண்பக ஜெகதீசன்

 

 

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு                                     

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

       -திருக்குறள் -307(வெகுளாமை)

 

புதுக் கவிதையில்…

 

கோபத்தைத் தன்

ஆற்றலென

வைத்துக்கொண்டவனின் அழிவு,

நிலத்தில் அறைந்தவன் கை

நோவுக்குத் தப்பாதது போன்றதே…!

 

குறும்பாவில்…

 

குணமெனக் கோபத்தைக் கொண்டவனழிவு,

நிலத்திலடித்தவன் கைபடும் துன்பம்போல்

நிச்சயமானதே…!

 

மரபுக் கவிதையில்…

 

பொறுமை குணத்தைக் கொள்ளாதே

     பொங்கி யெழுந்திடும் கோபமெனும்

சிறுமைக் குணமதை யாற்றலெனச்

     சேர்த்துக் கொண்டவன் அழிவதுவும்,

வெறுங்கை கொண்டே நிலத்தடித்தால்

     வேதனை கொள்ளத் தப்பாததும்,

உறுதி யென்பதை யுணர்ந்தேதான்

     உதறிடு கோபம் கொள்வதையே…!

 

லிமரைக்கூ..

 

ஆற்றலெனக் கொண்ட கோபம், 

நிலத்தடித்தவன் கைபெறும் நோவுபோல்    

நமையே யழித்திடும் சாபம்…!

 

கிராமிய பாணியில்…

 

கொள்ளாத கொள்ளாத கோவங்கொள்ளாத

குடியக்கெடுக்கும் கோவங்கொள்ளாத..

 

கோவத்தக் கொணமுண்ணி

கொண்டுவாழ்ந்தா அழிவுதான்..

அது

கையால நெலத்திலடிச்சவன்

கைபடும் வேதனபோல அழிவுதான்,

கட்டாயம் பேரழிவுதான்..

 

அதால,

கொள்ளாத கொள்ளாத கோவங்கொள்ளாத

குடியக்கெடுக்கும் கோவங்கொள்ளாத…!

 

-செண்பக ஜெகதீசன்…

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *