குறளின் கதிர்களாய்…(229)

 

செண்பக ஜெகதீசன்

 

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முற்

சொல்லா திருக்கப் பெறின்.                                                

       -திருக்குறள் -403(கல்லாமை)

 

புதுக் கவிதையில்…

 

பயன்தரும் நூலெதுவும்

படிக்காத ஒருவனும்

நல்லவனாகிவிடுகிறான்,

படித்தவர்கள் முன்னிலையில்

ஏதும்

பேசாமல் இருந்துவிட்டால்…!

 

குறும்பாவில்…

 

கல்லாதவனும் நல்லவனாகிவிடுகிறான்,                 

கற்றோர் முன்னிலையில் எதுவும்   

சொல்லாமல் இருந்துவிட்டாலே…!

 

மரபுக் கவிதையில்…

 

நல்ல நூற்கள் பலகற்று

     நலந்தரும் தேர்ச்சி பெறாதவனாம்

கல்லா ஒருவன் முன்சென்றே

     கற்றவர் நிறைந்த சபையிலேதும்

சொல்லா திருந்தால் போதுமவன்

     சிறப்புப் பெறுவான் வாழ்வினிலே,

எல்லா வரையும் விடநல்லான்

     என்னும் பேரைப் பெறுவதாலே…!

 

லிமரைக்கூ..

 

நல்லவனெனப் பேர்பெறுகிறான் கல்லாமலே,      

கற்றவர் முன்னாலவன் இருந்தால்போதும்                     

வார்த்தை யொன்றும் சொல்லாமலே…!

 

கிராமிய பாணியில்…

 

பேசாதே பேசாதே

படிக்காத நீ

பேசாதே பேசாதே..

 

ஒண்ணும் படிக்காதவன்

படிச்சவங்க சபயில

முன்னால போய் ஏதும்

பேசாம இருக்கணும்..

 

அப்புடி இருந்தாலே அவன்

எல்லாரையும்விட

ரெம்ப நல்லவன்..

 

அதால

பேசாதே பேசாதே

படிக்காத நீ

பேசாதே பேசாதே…!

 

செண்பக ஜெகதீசன்…

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *