Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்

நவீனத்துவ தொடக்கமும் ஆதவனின் பிரதியாக்கமும்

-செ.ர. கார்த்திக் குமரன்

இலக்கியம் தொன்றுதொட்டு பலவிதப் பரிணாமங்களை எய்தியுள்ளது. அதைப்பொறுத்து அதனுடைய வடிவமுறைகளும் மாற்றம்பெற்றே வந்துள்ளது. இம்மாற்றங்களை ஏற்படுத்திய இலக்கியவாதிகள் ஒரு சிலரைக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வெளித்தெரியாமல் செய்துவிடுகின்ற நிலையும் தற்காலச் சூழலில் ஏற்படுகின்றது. அந்தவகையில், நவீன இலக்கியத்தில் தனக்கான தனித்த எழுத்தினைப் பதிவுசெய்த ஆதவன் என்ற படைப்பாளர் தற்காலத்தில் அதிகம் பேசப்படுவது கிடையாது. இதேபோல் கோபிகிருஷ்ணன், எம்.வி. வெங்கட்ராம், க.நா.சு, கிருஷ்ணன் நம்பி, நகுலன், ஜி.நாகராஜன், சம்பத், கரிச்சான் குஞ்சு என இதன் பட்டியல் நீள்கிறது. இவ்வெழுத்தாளர்களைப் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சில கட்டுரைகள் தற்போதுள்ள இதழ்களில் வெளிவருவது வரவேற்கத்தக்கது. மேலும், இதனை வாசிக்கும்போது நிகழ்ந்த ஆர்வமே, ஆதவன் குறித்த இக்கட்டுரை எழுதத்தூண்டியது.

ஐரோப்பியர்களின் வருகையினாலும் நவீனக் கல்விமுறையில் அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தினாலும் இலக்கியம் பல்வகை அர்த்தக்கட்டுமானங்களை உள்ளடக்கங்களாகக் கொண்டு பிரதிகள் வெளிவந்துள்ளன. இத்துடன், நவீனக் கோட்பாடுகளின் தாக்கங்களும், படைப்பாக்கத்தினால் பல புதிய புரிதல்களை இலக்கிய உலகிற்கு அளித்ததோடு, வாசகர்களின் ஆய்வாளர்களின் கல்வியாளர்களின் மனங்களில் சிந்தனை ரீதியாக மாற்றங்களுக்கும் வித்திட்டன. இதனால், எழுத்தாளர்கள் பலதரப்பட்ட விஷயங்களையும் கருத்துக்களையும் வெளிப்படையாகவே வெளிப்படுத்தி உள்ளனர். இதில் ஆதவன் தன் எழுத்தினூடாக நவீன இலக்கியத்திற்கு அளித்த பங்கினைக் காண்பதாகவே இக்கட்டுரை அமைவுபெறுகிறது.

கே.எஸ்.சுந்தரம் என்ற இயற்பெயரைக் கொண்ட ஆதவன், 1942இல் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். 1960களில் எழுதத்தொடங்கிய இவர், தமிழ்ப் படைப்புலகில் பலவாறான நவீனச் சிந்தனைகளை எடுத்துரைக்கும் வகையில் படைப்புகளைப் படைத்தவர். மத்தியதர வர்க்கத்தின் நிலைகளையும் நவீன சமூகத்தில் ஆண் – பெண்ணுக்கு ஏற்படும் காதல் மனஉணர்வுகளையும் அதனால் ஏற்படும் நெருக்கடிகளையும் அவர்கள் அணியும் முகமூடிகளையும் போடும் வேஷங்களையும் தோலுரித்துக் காட்டுவதாக இவருடைய கதைகள் அமைந்துள்ளன. “என் பெயர் ராமசேஷன்”, “காகித மலர்கள்” ஆகிய இரு புதினங்களும் அறுபது சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவர் படைத்த இப்புனைகதைகளின் வாயிலாகத் தற்காலச் சூழலின் இயங்குநிலையையும் அறியமுடிகின்றது. இவர் எழுதிய காலகட்டத்தில் நவீனத்துவ கோட்பாடானது பரவலாகப் பேசப்பட்டது. மேலும், இவருடைய எழுத்துக்களானது அக்கோட்பாட்டைச் சார்ந்ததாகவே உள்ளதோடு, இவருடைய எழுத்துக்களைத் தவிர்த்து நவீனத்துவத்தை புரிந்துகொள்ள முடியாத சூழலும் உள்ளது எனலாம்.

நவீனம் (Modern) – நவீனமயமாதல் (Modernity)- நவீனத்துவம் (Modernism)

நவீனம் என்பதை ஒரு கண்ணோட்டம், அணுகுமுறை மற்றும் வாழ்க்கைமுறை என்றே கூறலாம். இது, கி.பி.18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் நிலவி வந்த அறிவொளிக் காலத்தில் எழுந்தது. “நவீன என்கிற அடைமொழி காலத்தைக் குறிக்கிறது. காலத்தினால் நமது இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் நெருங்கிய சம்பந்தமுடையது என்பதையும், அதனுடன் இந்தக் காலத்தில் சிறப்பாக எழுதப்பட்டதையும் குறிக்கிற வார்த்தை அது.”1   1127ஆம் ஆண்டு பாரிஸிலிருந்த ஒரு தேவாலயம் சீரமைக்கப்பட்டபோது சுசர் என்பவர், அது ‘நவீனப்’படுத்தப்பட்டதாகக் கூறியபோது தான் இச்சொல் புழக்கத்தில் வந்தது எனலாம். கட்டடக்கலையில் தோன்றிய இச்சொல்லானது, பிறகு ஓவியம், கலை இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக, நவீனம் என்ற சொல்லுக்கு அகராதியில் பழையதிலிருந்து மாறுபட்டு, புதிய மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மையையும் கொண்டு அமைவது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய 20ஆம் நூற்றாண்டுக்காலம் வரைப்பட்ட சிந்தனைகளை உள்ளடக்கிய தத்துவக் காலகட்டத்தை நவீன காலம் என்பர்.”2 இக்காலகட்டத்தில் தான் அறிவியல் வளர்ச்சியின் மூலம் சமூக அமைப்பே மாறியது. ஐரோப்பியர்கள் காலனிய நாடுகளில் ஏற்படுத்திய வணிகத்தின் காரணமாக பிரபுத்துவச் சமூகம் இல்லாமலாகி முதலாளித்துவச் சமூகம் தோற்றம் பெற்றதுடன், புதிய புதிய போக்குகளுக்கும் சிந்தனைகளுக்கும் வழிவகை செய்தது.

இதனை அடியொற்றி தோன்றிய நவீனமயமாதல் என்ற பெயர்ச்சொல், புதுமை, தற்காலம், புத்தியல் ஆகிய பொருண்மையைத் தருகிறது. இத்துடன் புதிய சாதனங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் வாயிலாக தற்காலத் தேவைக்கேற்ப பலனை அதிகப்படுத்துவதின் நோக்கில் மாற்றியமைத்தலையும் இச்சொல் குறிக்கிறது. இதனால், உற்பத்திப் பொருட்களில் புதுமைகளைப் புகுத்தி, அதன் தரத்தை கூட்டுவதற்கும் அதிகளவு பொருட்களைத் தயாரித்து, உலக சந்தையை கவர்வதற்கும் இது பயன்பட்டது. மேலுமிதைப் பல துறைகளிலும் கொண்டு சென்று, தங்களின் சுயத்தை நிலைநாட்டி, நிர்வாகம் சார்ந்த அமைப்பிலும் தன் முத்திரையைப் பதியச் செய்தனர்.

“15ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய, இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி உள்ளிட்ட காலகட்டத் தத்துவமாக ‘நவீனத்துவம்’ அடையாளங்காணப்படுகிறது.” இத்துடன் ‘நவீனத்துவம்’ என்றால் என்ன? இதன் பண்புகள் எவையென அறிய முற்படுமிடத்து,    எம்.ஜி.சுரேஷ் எடுத்தாளும் ஹ்கோவான் ஹாஃப்மன்ஸ்தால்  தரும் விளக்கம் பொருத்தமாக இருக்கும். “இன்று இரண்டு விதமான விஷயங்கள் நவீனமானவையாக இருக்கின்றன. வாழ்க்கையை ஆய்வு செய்தல், வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லுதல். மனித மனத்தின் உள்ளார்ந்த வாழ்கையை அல்லது கனவுகளைப் பகுப்பாய்வு செய்வதையும், நம்ப முடியாத மாயத்தோற்றங்கள், கண்ணாடியில் தோன்றுவது போன்ற மாயப்பிம்பங்கள், கனவுத் தோற்றங்கள் போன்றவை மீது கவனம் செலுத்துவதையும் இதோடு சேர்த்துக் கொள்ளலாம். பழைய மேசை  நாற்காலிகளைப் போலவே புதிய கண்டுபிடிப்பான நியுரானும் நவீனமானதே. அறிவொளிக் காலத்தின் ‘நெருக்கடி’க்குள்ளான அறிவும் ரொமாண்டிச யுகத்தின் புத்தாய்வை நாடும் ஆர்வமும் சேர்ந்ததே நவீனத்துவத்தின் பண்பாகும் என்பனவே நவீனத்துவங்குறித்த விளக்கமாக இவரால் முன்வைக்கப்படுகின்றன. இவர் மேலும், 1890 முதல் 1930 வரையிலான காலகட்டத்தை நவீனத்துவத்தின் உச்சக்கட்டமாக மால்கம் பிராட்பரி, ஜேம்ஸ்மக் ஃபர்லேன் போன்ற கலை இலக்கிய ஆய்வாளர்கள் வரையறுத்துள்ளனர் எனவும் கூறுவர்.”3 நவீனத்துவத்தின் வாயிலாக கல்வி வளர்ச்சி, போக்குவரத்து வளர்ச்சி, கனரக இயந்திரங்கள் மூலம் அபரிமிதமான உற்பத்தி, தொழில் துறையில் முன்னேற்றம், மக்களாட்சிக் கோட்பாடுகளின் வருகை போன்றவைகள் இக்காலத்தில்தான் ஏற்பட்டது. இதன் இயல்புகளாக, எதையும் அப்படியே ஏற்காமல் தர்க்கபூர்வமான முறையில் ஆராய்ந்து, வர்ணனைகள், விவரணைகள் கொடுத்து வளர்க்காமல், சுருக்கமான முறையில் வெளிப்படுத்தி, தனிமனித மனஉணர்வுகளைப் புலப்படுத்தும் வகையில் அமையும். “பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தீவிரங்கொண்ட நவீனத்துவம் நகர்மயமாதல், வெகுசனமயமாதல், ஒருமுகமாதல் என மனித இயக்கங்களில் அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம், தொழில் என அனைத்துத் துறைகளையும் புதிய தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளது.”4 இந்நவீனத்துவத்தின் சாரம்சமாக, நிலவுடைமைச் சமூகத்தின் வீழ்ச்சியையும் முதலாளித்துவத்தின் ஊடாக அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஏகாதிபத்தியத்தின் தோற்றத்தையும் குறிப்பிடலாம்.

என் பெயர் ராமசேஷன்

சமகால நவீனத்துவப் போக்கினை நாவல்களில் சிறந்த முறையில் உருவாக்கியவர் ஆதவன். மத்தியதர வர்க்கத்தின் சிந்தனைகளை, உணர்வுகளை, செயல்களை அப்பட்டமாக சித்திரித்தவர். நவீன வாழ்நிலையில் இளைஞன், தன் சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பையும் அடையாளத் தேடலையும் வெளிப்படுத்துவதாக இந்நாவல் படைத்துள்ளார். ராமசேஷன் என்ற இளைஞனை மையப்படுத்திய இக்கதை, விடுதியில் தங்கி, பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது அவனுக்கு ஏற்படும் அனுவங்களை, கிண்டல்களை, உணர்வுகளைச் சொல்வதாக உள்ளது. மேல்தட்டு வர்க்கத்தின் இயல்புகளையும் குணங்களையும் சகநண்பனின் குரோதத்தையும் கீழ் மத்தியதரப் பின்னணி கொண்ட ராமசேஷன் உணர்கிறான்.  இதிலிருந்து தான் விடுபடவும் சுயநிரூபனம் அடையவும் முயல்கிறான். எனினும் தன் (மத்தியதர வர்க்க)  உணர்வுகள் அவனை நிலைகுலைய வைக்கின்றன. இதனால், தனக்கு நேரும் விளைவுகளை ராமசேஷன் பிரதியின் வாயிலாக எள்ளலாக எடுத்துரைக்கிறான்.

“முதல் நாள் என்னைப் பார்த்தவுடனேயே நான் எப்படிப்பட்டவனென்று தனக்குத் தெரிந்துவிட்டதாக மாமி சொன்னாள். என் கண்களைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது (முழுக்க முழுக்க விஷமத்தனம்). அவள் முட்டாளில்லை. என் போன்றவர்களை உள்ளும் புறமும் அவள் அறிவாள். … உன் நண்பனுடைய தாயையும் தங்கையையும் உன் தாயையும் தங்கையையும் போல நினைப்பது சிரமமானது. இந்தச் சிரமத்தை உங்கள் தலைமுறையினர் படத் தயாராயில்லை. இவை அனாவசியக் கட்டுப்பாடுகளாக, ஹிப்போக்ரிஸியாக உங்களுக்குத் தோன்றுகின்றன. உங்களைச் சொல்லியும் குற்றமில்லை. நீங்கள் வளரும் சூழ்நிலை அப்படியிருக்கிறது. … உன் மனதில் ஓடுவது ஒவ்வொன்றும் அணுஅணுவாகத் தெரியும். கீழ் மத்தியதர வகுப்புக்கே உரிய வஞ்சிக்கப்பட்டுவிட்ட களை உன் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கிறது. … நீ எங்களுக்கு புழுவுக்கு சமானம். எங்கள் மட்டத்துக்கு ஏற்ற சமூக நாகரிகத்தை ஒட்டி நாங்கள் காட்டும் நேச பாவத்தையும் இனிமையையும் உன் அசட்டு மனம் எப்படியெல்லாம் தப்பர்த்தம் செய்துகொண்டிருக்கிறதோ, என்னவோ … நீ இனி இந்த வீட்டுப்பக்கம் வராதேயென்று நான் சொல்லப்போவதில்லை. தாராளமாக வா. ஆனால் ஒரு ஜென்டில்மேனாக லட்சணமாக இரு. Don’t try your dirty tricks here…5 மத்தியதர வர்க்கத்தின் போக்கினையும் அவர்களுடைய சிந்தனையையும் வெளிப்படையாகவும் அழுத்தமாகவும் காட்டியுள்ளார். நவீனகாலப் போக்கினால் இளைஞர்களுக்கு ஏற்படும் மாற்றத்தினை, மேல்தட்டு வர்க்கம் புரிந்துகொண்டதையும் மேலுமவர்கள் எச்சரிக்கைச் செய்வதையும் ஆதவன் தெளிவுபடுத்தியுள்ளார். தனிமனித, கல்லூரி மாணவனின் யதார்த்தப் போக்கினையும் மரபுகளிலிருந்து விடுபட்டு வாழ நினைப்பதையும் நவீனகாலத்திய இயங்குதளத்தில் ஏற்படும் நெருக்கடிகளையும் இப்பிரதியின் வழி ஆதவன் சித்திரித்துள்ளார். நவீனத்துவ இலக்கியப் போக்கினை முன்னெடுத்தவர்களில் மிகவும் முக்கியமானவராகவும் இவர் கருதப்படுபவர்.

அப்பர் பெர்த்

தில்லியிருந்து சென்னைக்கு இரயிலில் மூன்றாம் வகுப்பு அப்பர் பெர்த்தில் பயணம் செய்யும் சிதம்பரம் என்ற நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்த இளைஞனின் சுயதேடல் மற்றும் நவீன உலகில் தன் இருத்தல் குறித்த சிந்தனைகளை வெளிக்கொணரும் விதமாக இச்சிறுகதை அமைந்துள்ளது. மேலும், இவ்விளைஞன் தில்லி சமூகவாழ்க்கையில் திளைத்ததினால் ஏற்பட்ட உளவியல் (பாலின்ப) சார்ந்த உணர்வுகளையும் செயல்களையும் சொல்வதுடன், இந்திய – தமிழ்ப்பெண்களின் பாரம்பரிய பண்பாட்டு உணர்வுகளையும் மிக நேர்த்தியாக தன் எழுத்தினூடே சித்திரித்துள்ளார். “அவளை ஆதரவுடன் அணைத்துக்கொண்டு, ‘உன் மனசு எனக்குத் தெரியும், அபர்ணா!’ என்று மெல்லிய குரலில் அவளிடமும், ‘இவள்தான் என் உண்மைக்காதலி, தெரிந்துகொள்ளுங்கள்!’ , என்று மற்றவர்களிடமும் உரக்கச் சொல்லிவிட்டு, ரயிலைத் தவறவிட்டு அவளுடனேயே இருந்துவிடலாமா என்று தோன்றியது. … அபர்ணாவை மணந்துகொண்டால் வாழ்க்கையில் என்றைக்குமே அமைதியும் அழகும் மிளிரும். ஆனால், அவனுடைய ஆசைகள்? கனவுகள்? என்றும் சாதாரணமானவனாகவோ இருந்துவிட அவன் விரும்பவில்லை. என்றாவது ஒரு நாள் சமூகத்தில் பெரிய புள்ளியாக வர வேண்டும். ஒரு புத்திசாலித்தனமான கல்யாணத்தின் மூலம்இதற்கு அவன் அடிகோலலாம். காதலா, வாழ்வின் மேன்மையா என்று யோசித்தபொழுது, பிந்தையதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.”6  நவீன சமூகத்தில் செய்யும் காதலுக்கும் கல்யாணத்திற்கும் இடையே வாழ்வின் மேன்மையை அடைவதுதான் புத்திசாலித்தனம் என்ற சுயநலப்போக்கினைச் சொல்வதோடு, சாதாரணமாகவே தான் ஒருபோதும் இருந்துவிடக்கூடாது என்பதையும் சமூகத்தில் தனக்கான இடம்பெற, இளைஞர்கள் செய்யவேண்டியவற்றையும் எடுத்துரைக்கிறது.

“எதிரே தூங்கிக்கொண்டிருந்த பெண்மணியின் தோற்றம் அவன் உள்ளத்தில் ஏதேதோ கற்பனைகளைக் கிளர்ந்தெழச் செய்தது!…

காப்பிக்குப் பிறகு, பேச்சு. சிதம்பரம் நம் சினிமாக்களைக் கேலி செய்து ஏதேதோ பேசினான். அவள் சிரித்தாள். பிறகு அவளும் ஏதோ பேசினாள். இருவரும் பேசினார்கள். நிறையப் பேசினார்கள். அலுக்காமல் பேசினார்கள்.

சிதம்பரத்துக்கு மெல்ல நம்பிக்கை பிறந்தது. தான் பாயக்கூடிய தொலைவுக்குள் வந்துவிட்ட இரையைப் பார்த்த புலிபோல, அவன் தயாரானான். …

அடுத்த குகைக்குள் ரயில் நுழைந்ததும் அவன் யோசிக்கவே இல்லை. சட்டென்று அவளைக் கட்டியணைத்துக் கொண்டான். அவனுடைய கைப்பிடியில் அவளுடைய சதை அழுந்தியது. திடுக்கிட்டுத்தான் போய்விட்டான் அவன். எதிர்பாராத அதிர்ச்சியில் செயலற்றுப் போனாள். ஆனால் ஒரு கணம்தான். மறுகணமே பளாரென்று அவன் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. நெருப்பைத் தீண்டினவன் போல அவன் சரேலென்று கைகளை எடுத்துக்கொண்டான்.”7 தில்லியின் சமூகச்சூழல்களில் வாழ்ந்த சிதம்பரம், அங்கு பழகிய பெண்களின் இயல்பு ஆகியவற்றைக் கொண்டு, அடுத்தவனின் மனைவியாகிய இப்பெண்ணினுடைய கணவனின் இயலாமையை அறிந்து, தன்போக்கில் நடந்துகொண்டான். வேண்டிய பொருட்கள் எல்லாம் தன் கையில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தான் செய்த செயலானது, அவனுக்கு அவநம்பிக்கையையும் வெட்கத்தையும் கொடுத்தது. ஃபிராய்ட் பிரித்த (இன்பமனம் – id, நீதிமனம் – ego, ஆழ்மனம் – super ego) மனிதமனங்களில் முதலாவதாக இருக்கும் இன்பமனத்தை நாடிய நவீன இளைஞன், மரபான பண்பாட்டு உணர்வுகொண்ட இந்தியச் சூழலில் அதனைத் தவிர்க்கும் நிலை உள்ளதை ஆதவன் தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அவன் இத்தகைய கேவலங்களை எல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல், வாழ்க்கையில் தான் அப்பர் பெர்த்தாகவே இருக்க, செய்யவேண்டிய செயல்களைப் பற்றிச் சிந்திப்பதாக கதை முடிவடைகிறது.

இதைப்போலவே இவருடைய நிழல்கள் என்ற சிறுகதையும் ஆணின் காதல் குறித்த பார்வையும் நவீனச்சூழலில் பெண்ணின் உடல்சார்ந்த தற்காப்பு நிலையும் ஆண் x பெண், காதல் (உடல்) x கற்பு ஆகிய இரட்டை எதிர்நிலைகளுடன் (Binary Opposition) எழுத்துருவாக்கியுள்ளார். சமகாலத்திய காதல் பற்றிய கருத்தாக்கங்களை இருநிலைகளில் அதாவது ஆண், பெண் என்ற இருமனங்களின் உணர்வுகளினூடாக பதிவுசெய்துள்ளார்.

“இந்தத் திரைகள் அவசியந்தானென்று நீ நினைக்கிறாயா?

 ‘இது கற்காலமல்ல.’

 ‘இதோ பார் – உன்னிடமிருந்து நான் வேண்டுவது அதுவல்ல – ஏதோ ஒன்றை நான் கவர முயற்சிப்பதாகவும் நீ காப்பாற்றுவதாகவும் நினைக்கிறாயே, அதுவல்ல; எனக்கு வேண்டியது நீ – பூரணமான திரைகளற்ற நீ; முழுமையான நீ – புரிகிறதா உனக்கு? எனக்கு வேண்டியது அதுமட்டுந்தான் என்றால், எங்கேயாவது ஒரு நாற்றமடிக்கும் சந்தில் யாரையாவது ….’

‘வெளிச்சம் வரும்போது, கூடவே நிழல்களும் வந்துவிடுகின்றன’ என்று அவன் நினைத்தான்.”8 கற்பு குறித்து மாற்றுக்கருத்துக்கள்கொண்ட (அக்னிப்பிரவேசம், பொன்னரகம்) போன்ற சிறுகதைகளினூடே, இக்கதை கற்பினைத் தாண்டிய பூரண மனஉணர்வை வெளிப்படுத்துகிறது. இன்றைய காலங்களில் பெண்களைப் பாலின வன்கொடுமைகளுக்கு ஆளாக்கும் பட்சத்தில் இக்கதையானது, பெண்ணுடலை மீறிய தத்துவார்த்தச் சித்தாந்தத்தை ஆணின் பார்வையில் எடுத்தியம்புகிறது. சமூகக் கட்டுமானங்களைத் தனிமனிதர்கள் மாற்றுத் திசையில் கொண்டு செல்ல முடியும் என்பதை ஆதவன் இதன்வழி தெரியப்படுத்தியுள்ளார்.

இதற்கடுத்ததாக இவருடைய ‘இண்டர்வியூ’ மற்றும் ‘கனவுக்குமிழிகள்’ போன்ற கதைகள் தனிமனிதப் பிரச்சினைகளை, சுதந்திரத்தைக் கோருகின்றன. பொருளாதார நிலையில் ஒருவன் உயர்மட்டத்தை அடையவேண்டுமெனில் தன் சுயவிருப்பங்களுடன் செயல்படவேண்டுமென்றும் பிற உறவுகளைத் தவிர்க்கவேண்டுமென்றும் இதில் கூறப்படுகின்றது. பணம்தான் எல்லாம் என்ற தற்காலச் சமூகச்சூழலில்  ஆழ்ந்த அறிவுபெற்றிருந்தாலும் பணமில்லையென்றால் ஏற்படும் அவலநிலையையும் இது சித்திரிக்கிறது. மேலும், இந்தியாவின் படித்த இளைஞர்களின் மனத்தை, வாழ்க்கையை துல்லியமாகவும் தத்ரூபமாகவும் தம் படைப்புகளில் படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இவருடைய ‘சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல்…’, ‘புதுமைப்பித்தனின் துரோகம்’, ‘முதலில் இரவு வரும்’, ‘புகைச்சல்கள்’ போன்ற கதைகளும் முறையே ‘ஆண் – பெண்ணுக்கு இடையே நிலவும் egoக்கள்’ ‘எழுத்தாளனுடைய வாழ்க்கையைப் பற்றிய புரிதல்கள்’, ‘முந்தைய தலைமுறைச் சார்ந்த பெற்றோர் மனங்களில் விளையும் சிக்கல்கள்’, ‘திருமணம் முடிந்து, பாலின்ப வேட்கை தணிந்த பிறகு எழும் நிறை – குறைகள்’ எனத் தற்கால புதுயுக மாற்றத்தினால் நிகழும் பிரச்சினைகளைத் தன்னளவில் பிரத்யேகமான முறையில் எழுத்துருவாக்கியுள்ளார்.

சமகாலப் படைப்பிலக்கியச் சூழலில் ஆதவனின் பிரதியாக்க முறையானது இன்றும் தனித்துவம் மிக்கதாகத் திகழ்வதுடன், காலத்திற்கேற்றவாறு மனிதமனங்களின் பிரக்ஞைகள் மாற்றம்பெறுவதை நுணுக்கமாகவும் அழகியல் தன்மையுடனும் நவீன இலக்கியத்திற்கு அளித்துள்ளதை இவரை வாசிக்கும் யாராலும் மறுக்க இயலாது.

மேற்கோள் விளக்கக் குறிப்புகள்

 1. காவ்யா சண்முகசுந்தரம் (தொ.ஆ.), க.நா.சு. (க.ஆ.), இலக்கிய விமர்சனங்கள், க.நா.சு. கட்டுரைகள் – II, ‘நவீன இலக்கியம்’, ப.857.
 2. ஆ. பூமிச்செல்வம், பின்னை நவீனத்துவம், ப.40.
 3. மேலது., பக். 45-46.
 4. மேலது., ப.47.
 5. ஆதவன், என் பெயர் ராமசேஷன், பக்.41-42.
 6. ஆதவன் சிறுகதைகள், ‘அப்பர் பெர்த்’, ப.22.
 7. மேலது., பக். 36-37.
 8. ஆதவன் சிறுகதைகள், ‘நிழல்கள்’, ப.221.

துணைநூற்பட்டியல்

 1. இலக்கிய விமர்சனங்கள், க.நா.சு. கட்டுரைகள் – II, காவ்யா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு : 2005.
 2. ஆதவன், என் பெயர் ராமசேஷன், உயிர்மை பதிப்பகம், சென்னை, நான்காம் பதிப்பு: நவம்பர் 2014.
 3. ஆதவன் சிறுகதைகள், கிழக்கு பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு: டிசம்பர் 2005.
 4. ஆ. பூமிச்செல்வம், பின்னை நவீனத்துவம், அகரம் பதிப்பகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு: 2014.

*****

கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,                  தியாகராசர் கல்லூரி, மதுரை.                                                                  செல் : 99443 77853, 70924 44193.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க