Tag: நிர்மலா ராகவன்

  • அன்புக்குரிய மணிமொழி

    நிர்மலா ராகவன்

    எனது அன்புக்குரிய மணிமொழி,

    நினைத்தாலே எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.

    ஓ! உன் நலத்தைப்பற்றி விசாரிக்க மறந்துவிட்டேனோ? சரி. சரி. நீ நலமாக இருப்பதால்தானே இதைப் படிக்க முடிகிறது! நமக்குள் என்ன formalities!

    எதற்கு இவ்வளவு கோபம் என்கிறாயா? பின்னே என்ன?

    என் பாடல்களைப் பதிவு செய்ய, நாடு விட்டு நாடு போயிருந்தது உனக்குத் தெரியுமல்லவா? அங்கே ஒரு — அவர் மொழியில் சொல்லப்போனால், ஒரு வாத்தியக்காரர். (`பக்கவாத்தியம்’ என்று தன்னைப் போன்றவர்களைக் குறிப்பிடுவது மரியாதைக்குறைவு என்று விவாதம் செய்வார். எதற்கு வம்பு!)

    அவரைப்பற்றி கொஞ்சம்.

    நாடளாவிய போட்டிகளில் பரிசு பெற்றதுகூட அவருக்குப் போதவில்லை. சகட்டுமேனிக்கு (அப்படியென்றால் என்ன?) எல்லாரையும் பழித்து, அதில் ஒரு ஆனந்தம் காண்பவர்.

    வாய் ஓயாது, தன் அசாத்திய திறமைகளைப் பற்றியும், பிற கலைஞர்களின் புளுகு, சவடால் இவற்றைப் பற்றியும் பேசுவதால், தான் உயர்ந்த நிலையிலிருக்கிறோம் என்று நம்புபவர். அவர் எத்தனை முறை சொன்னதையே சொன்னாலும், சிரிக்கத் தயாராக இருந்த மாணவர்கள் வாய்த்திருந்தது அவரது அதிர்ஷ்டமா, அல்லது மாணவர்களின் குருபக்தியா, முட்டாள்தனமா? நீயே மண்டையை உடைத்துக்கொள்.

    நான் இசையைத் தொழிலாகக் கொள்ளவில்லை, அதாவது, நான் கற்றதை பிறருக்குச் சொல்லிக்கொடுத்து நாலு காசு பார்க்கவில்லை என்பதால் மாற்றுக்குறைவு என்பதுபோல் நடத்துவார். காரியம் நடக்க வேண்டுமே என்று நான் வாயைத் திறக்கவே இல்லை. `பின்னே எப்படி பாடினாய்?’என்று அசட்டுப்பிசட்டென்று கேட்காதே! அடி விழும்!

    ஒரு பாட்டைப் பாடி முடித்தவுடன், அதே தாளத்தில் அடுத்த பாட்டுக்குப் போக அவசரப்படுத்துவார். உயிரே போய்விட்டது.

    ஒரு வழியாக ரெக்கார்டிங் முடிந்தது. நான் அந்த ஊரைவிட்டு வந்துவிட்டேன். என்னை அழைத்து என்ன கூறினார், தெரியுமா?

    மணிமொழி, நீ ஒரு நல்ல பேராசிரியை. மாணவிகளின் உள்ளம் கவர்ந்தவள். சொன்னால் நம்பமாட்டாய். தன் சிஷ்யன் தன்னைவிட நன்றாக வாசித்துவிட்டான் என்று அதிர்ச்சியுடன் கூறி, அவனைத் திரும்ப ஒரு முறை, சற்று சுமாராக எல்லா பாட்டுக்கும் வாசிக்கவைத்ததாக அவர் சொன்னார். நான்தான் நிலக்கரி ஆயிற்றே! அதாவது, மெதுவாகத்தான் பற்றிக்கொள்வேன். உனக்குத் தெரியும். அவர் சொன்னதன் முழு அர்த்தம் உடனே புரியவில்லை. சும்மா கேட்டுக்கொண்டேன். அதோடு, என்னை எங்கே பேசவிட்டார்!

    பதிவு செய்யப்பட்ட பாடல்களைக் கேட்டபிறகுதான் விளங்கியது. அவ்வப்போது நான் மூச்சு விட்டுக்கொள்ளும்போது, சாதாரணமாக வயலினோ, புல்லாங்குழலோ அந்த இடைவெளியில் நுழைந்துவிடும். அவர்கள் வாசித்தது கேட்கவில்லை.

    மூச்சு சப்தத்தை வெகு சுலபமாக கணினியில் அழித்துவிட முடியும். அதையும் செய்யவில்லை. வாய்ப்பாட்டோ, பிற வாத்தியக்காரர்களின் உழைப்போ எதுவுமே சரியாகக் கேட்கவில்லை — நான் குறிப்பிட்டவரது வாத்தியத்தைத் தவிர. விட்டு விட்டுப் பாடுவதுபோல், பரிதாபமாகக் கேட்டது.

    ஏழு பாடல்களுக்கு பத்து மணி நேரம் எடிட் செய்யவேண்டியிருக்கும் என்று கதை அளந்து, முன்னதாகவே பணத்தைப் பெற்றுக்கொண்டார்கள். அந்தக் கால அவகாசத்தில் தன்னைத்தவிர பிற கலைஞர்களின் வாசிப்பு எடுபட்டு விடக்கூடாது என்று பெருமுயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்! இவர் வாடிக்கை பிடித்துத் தருவதால், ஸ்டூடியோக்காரரும் ஒத்துழைத்திருக்கிறார். இருவர் செய்ததுமே அவர்கள் தொழிலுக்குத் துரோகம்.

    பாடல் பதிவு செய்வது, அல்லது மேடையில் பாடுவது ஒரு கூட்டு முயற்சி. தான் மட்டும் சிறக்க வேண்டும் என்று ஒரு `அரை சமர்த்து’ எண்ணி, வேலை மெனக்கெட்டு பிறரைத் தாழ்த்த கடும் முயற்சிகள் எடுத்துக்கொண்டால் என்ன ஆகும்?

    இப்போது, அந்தப் பதிவுகளை நான் பயன்படுத்த முடியவில்லை என்பது என் வருத்தம். நவராத்திரிக்கு என்னை அழைத்துவிட்டு, காது சரியாகக் கேட்காத மாமிகள், “நன்னாப் பாடிண்டு இருந்தியேடி! இப்போ என்ன ஆச்சு!” என்று போலியாக வருத்தப்பட்டு, என்னை மட்டம் தட்டி விட்டதில் அடைந்த அல்ப சந்தோஷத்தை நான் பிறருக்குக் கொடுக்க விரும்பவில்லை.

    அநியாயமான வழியில் காசைக் கறந்துவிட்டார்களே என்ற ஆத்திரத்தைவிட, இவ்வளவு திறமையைக் கொடுத்த கலைவாணி இவர்களைப் போன்றவர்களுக்கு கொஞ்சூண்டு நல்ல குணத்தையும் ஏன் கொடுக்காமல் போனாள் என்றுதான் வருத்தமாக இருக்கிறது. ஒரு வேளை, அது அவளுடைய டிபார்ட்மெண்ட் இல்லையோ?

    ரொம்ப போரடித்துவிட்டேனா?

    எனக்கும்தான் உன்னைவிட்டால் யார் இருக்கிறார்கள், சொல்லி அழ? நீ சகித்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

    நிர்மலா

    Share
  • புது மாப்பிள்ளை, பெண்ணுக்கு

    நிர்மலா ராகவன்

    உங்கள் திருமணத்துக்கு நாள் குறித்தாகிவிட்டது. நீங்கள் மாப்பிள்ளையாகின், சற்று வீரமாக, பொறுப்பானவனாக உணர்வீர்கள். ஏனெனில், இதுவரை பெற்றோர், அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள் யாவரும் சொற்படி நடந்த உங்களுக்கு, இப்போது நம் அதிகாரத்தைப் பிரயோகிக்க ஒரு நல்ல சந்தர்ப்பம் என்ற பெருமை எழக்கூடும்.

    புது மனைவியிடம், `உனக்கு சிவப்புப் புடவைதான் அழகாக இருக்கிறது. பச்சை வேண்டாமே!’ என்னும்போது, `கணவருக்குத்தான் நம்மீது எவ்வளவு ஆழ்ந்த அன்பு!’ என்று அவளும் உங்கள் விருப்பப்படியே நடக்கிறாள்.

    தான் சொல்வதை மந்திரமாக ஏற்று நடக்கும் மனைவியால் உங்கள் சுயமதிப்பு கூடுகிறது. அவளை இன்னும் அதிகமாக அடக்க முயற்சிக்கிறீர்கள். அதைப்பற்றி நண்பர்களிடமும் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறீர்கள்.  அவளும் விட்டுக்கொடுத்துக் கொண்டே போகிறாளா? பத்திரம்! ஒட்டகத்தின் மேல் சுமத்தப்பட்ட கடைசி இழை வைக்கோலைப்போல் அவள் முதுகு உடையும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

    ஒரு பெண் சுரத்தின்றி, எதிர்ப்பேச்சு பேசாது அடங்கிவிட்டால்,  அவள் கலகலப்பாக இல்லையே என்ற குறை கணவனுக்கு எழும். வெளியுலகில் பார்க்கும் பிற சுதந்திரமான பெண்களைப் பார்த்து, `எனக்கு ஏன் இப்படி ஒரு ஜடம் வாய்த்தது!’ என்று குறைபடுகிறான்.

    தன் பேச்சுக்கு மறுபேச்சே இருக்கக்கூடாது என்பதுபோல் நடக்கும் ஆண்களின் நிலை இதுதான்.

    (இப்படிப்பட்ட ஒருவரின் மனைவியை எனக்குத் தெரியும்.  நன்கு படித்து, உத்தியோகத்தில் இருப்பவள் ஆயினும், யாராவது பேசினால், அவர்களுடைய ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் சிரித்து வைப்பாள். அவளுடைய அபிப்ராயத்தைச் சொல்லும் உரிமை கல்யாணம் ஆனதுமே அவளிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. காலங்கடந்து அவர் விசனப்படுகிறார்).

    தனது ஆண்மையைத் தானே மெச்சி, மனைவியை நாலு பேர் முன்னிலையில் `முட்டாள்’ என்று திட்டி, அல்லது காரணமில்லாமல் பலத்த குரலில் திட்டி, அல்லது அவள் செய்த `முட்டாள்தனமான’ காரியம் எதையாவது தண்டோரா போட்டுச் சொல்லும் ஆண்கள் சற்று யோசிக்க வேண்டும். இப்படிச் செய்வதால், நீங்கள் உயர்ந்துவிட்டதாக யாரும் எண்ணப் போவதில்லை — உங்களைத் தவிர்த்து.

    பரிதாபத்துக்குரிய மனைவியோ, முகத்தில் எந்த சலனமும் இல்லாது உட்கார்ந்திருப்பாள். அவளுக்கு அவருடைய ஏச்சுப்பேச்சு பழகிவிட்டது. `எனக்கு வருத்தமாக இருக்கிறது. இப்படி என்னை மட்டம் தட்டிப் பேசாதீர்கள்,’ என்று கெஞ்சினாலும் அவர் மாற மாட்டார் என்பதை நடைமுறையில் கண்டவள் அவள்.

    “திரும்பக் கத்திப் பாருங்களேன்! எதற்காக இவ்வளவு  அவமரியாதையைப் பொறுத்துப் போகிறீர்கள்?”– கேட்டது நான்.

    பதில் உடனே வந்தது. “அது மரியாதை இல்லை!”

    பெண் மட்டும்தானா மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும்? யோசியுங்கள்!

    நீங்கள் பெண்ணானால்:

    பெண்பார்க்கும் வைபவம் முடிந்து, உங்களை மணக்கவும் சம்மதம் தெரிவித்துவிட்டார் ஒருவர். மூன்று மாதங்களுக்குப் பிறகு திருமணம் — நீங்கள் ஆவலோடு காத்திருந்த நன்னாள்.

    நிம்மதியுடன், இனி என்ன வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற நிம்மதி ஏற்படுகிறதா? (`நீ இப்படி குண்டா, வாயாடியா இருந்தா, ஒருத்தனும் ஒன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டான்!’ நம் பெண்களுக்கு அடிக்கடி வழங்கப்படும் இலவச போதனை).

    ஓர் ஆண்மகனை வளைத்துப்போடவா இத்தனை வருடங்களும் நீங்கள் உங்கள் மேனியழகைப் பாதுகாத்து வந்தீர்கள்?

    இல்லை, பிற ஆண்கள் உங்கள் அழகை ரசித்தால், கணவருக்குப் பிடிக்காதோ என்ற அச்சமா?

    எதுவாக இருந்தாலும், உங்கள் போக்கு சரியல்ல. உடம்பைச் சரிவர பராமரிப்பது வெளியழகுக்காக மட்டுமல்ல. ஆரோக்கியம் என்று ஒன்று இருக்கிறதே, தெரியாது? அளவுக்கு  அதிகமாகச் சாப்பிட்டு, நாற்பத்தைந்து வயதிலேயே சர்க்கரை வியாதி, ஓயாத கால்வலி, ரத்த அழுத்தம் என்றெல்லாம் நீங்கள் புலம்ப ஆரம்பித்தால், யாருக்கும் சுகமில்லை.

    கல்யாணமான முதல் கொஞ்ச நாட்கள் கணவர் நைச்சியமாகப் பேசி உங்களை `விரட்ட’ ஆரம்பித்தால் (அதாவது, அவருக்குப் பிடித்தமாதிரியே நீங்கள் எப்போதும் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தால்), ஒரேயடியாகப் பணிந்து போகாதீர்கள். உங்கள் தனித்தன்மையை இழந்து விடுவீர்கள். `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்று பயந்தே வாழ்க்கையைக் கழிப்பது நமக்கு தாமே அளித்துக்கொள்ளும் தண்டனை.

    எந்த ஒரு பந்தத்திலும், சந்தோஷம் அல்லது துயரம் மட்டுமே நிலைத்திருப்பது கிடையாது. உங்கள் போக்கிற்கு ஒருவர் விடவில்லை என்றால், உடனே உறவை முறித்துக்கொள்வதும் தகுந்த தீர்வு இல்லை. வாரத்தில் ஒரு நாளாவது சண்டை போடாமல், இருவரும் சேர்ந்து எங்காவது சென்று வந்தால்கூடப் போதும். மற்ற நாட்களில் கிடைக்காத மன ஒற்றுமை கிட்டிவிடும். (இது என் சொந்த அனுபவம்).

    மணந்தவரை (மணந்தவளை) மாற்ற முயல்வது ஒரு நாயைப் பூனையாக்கும் முயற்சிதான். ஒருவரையொருவர் அப்படியே ஏற்றுக்கொண்டால், புரிந்துணர்வு ஏற்பட, உறவு பலப்படும்.

    (இந்த ரீதியில் நான் மலேசிய ஆங்கில தினசரி ஒன்றில் எழுதியவைகளைப் படித்த சில ஆண்கள்,`My marriage has improved because of you!’ என்று நேரில் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்).

    Share
  • ஆண்களின் உலகம்

    நிர்மலா ராகவன்

    “எல்லாரும்தான் கல்யாணம் பண்ணிக்கறாங்க! நாம்ப கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது செய்து பாப்போமேன்னுதான்..!” நான் கேட்காமலேயே விளக்கம் தந்தாள்.

    அவள் — கமலினி. கலைத்துறைக்காக வைத்துக்கொண்ட பெயர். பெற்றோர் வைத்த பெயர் கோமளம் என்று எங்கோ, எப்போதோ, படித்த நினைவு.

    “உங்களுடைய எழுத்தை ஒன்றுவிடாமல் படித்திருக்கிறேன், ஆன்ட்டி! பெண்கள் தைரியமாக இருக்கவேண்டிய அவசியத்தைப் பற்றி உங்களை மாதிரி யார் எழுத முடியும்!’ என்று ஏதோ இலக்கிய விழாவில், தானே வந்து பாராட்டினாள்.

    பெருமையுடன், அந்தப் பெண்மேல் பச்சாதாபமும் உண்டாயிற்று. தெரிந்தவர்கள் பலரும் கேட்டிருக்கக் கூடும், `காலாகாலத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல், சினிமா, டிராமான்னு ஏன் அலையறே?’ என்று.

    பள்ளி நாட்களிலேயே அவள் புகழ் பெற்றிருந்தது அக்கம்பக்கத்தினர்  வெறும் வாயை மெல்லக் கிடைத்த அவல்.

    கோலாலம்பூரின் பெருமிதச் சின்னமான இரட்டைக் கோபுரம் கண்ணுக்கு அருகே தெரியும் புறம்போக்கு நிலத்தில், சுவர்கள் மரப்பலகையாலும், தரையில் மட்டும் சிமெண்டாலும் கட்டப்பட்ட வீட்டில் வளர்ந்தவள் கமலினி.

    குடித்தே தன் சொற்ப சம்பாத்தியத்தையும் அழித்துவிடும் தொழிலாளிக்கு ஆறில் ஒரு குழந்தையாகப் பிறந்தவள் இப்படி நாடு முழுவதும் அறிந்தவளாகிவிட்டாளே என்று வயிற்றெரிச்சல் பட்டிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லைதான்.

    `டி.வியில ஆடுது, பாடுது! இதுக்கெல்லாம் என்ன குடுத்திச்சோ!’ என்று தமக்குள் பேசிக்கொண்டிருப்பார்கள்.

    எனக்கு அவர்கள் யாரும் அறிமுகம் இல்லைதான். ஆனாலும், எனக்கு உலகம் தெரியும்.

    `பெண்களே பெண்களுக்கு ஏன் எதிரி ஆகிறார்கள், தெரியுமா? அவர்கள் தம் முழு அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தாமல் இருப்பதால்தான்!’ அமெரிக்காவில் பெண்களுக்கென பிரத்தியேகமான ஸ்மித் கல்லூரியில் எனக்குக் கற்பிக்கப்பட்ட  முதல் பாடம்.

    பிறரது ஏச்சுப்பேச்சுக்கு பயந்துவிடாது, தான் எடுத்த முடிவில் நிலையாக நின்ற இந்த சின்னப் பெண்ணைப் பார்த்து எனக்குப் பெருமையாக இருந்தது. எத்தனை தமிழ்ப் பெண்களுக்கு இந்த தைரியம் வரும்!

    கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இவளைப் பார்த்து வருகிறேன், திரையில். இன்றும் பதினெட்டு வயதுப் பெண்ணாகத்தான் இருந்தாள். எனக்கோ இன்னும் நாற்பது வயதுகூட ஆகவில்லை. என்னை `ஆன்ட்டி’ என்று உரிமையுடன் அழைக்கிறாள்! என் அபரிமிதமான சாப்பாட்டு ஆசையும், ஓயாது படித்து, உடற்பயிற்சியை அலட்சியம் செய்வதும் காரணமோ? அவளிடம் ஒரு சிறிய கோபம் எழுந்தது.

    ஒருவேளை,  மலேசிய வழக்கப்படி, தன்னைவிட நான்கே வயது பெரியவர்களாக, அது கடைக்காரரோ, டாக்ஸி டிரைவரோ ஆனாலும், `அங்கிள்,’ `ஆன்ட்டி’ என்று அதிமரியாதையுடன் அழைத்துப் பழகியதால் இருக்கலாம் என்று என்னையே நான் சமாதானம் செய்துகொண்டேன்.

    நான் இப்படி குண்டாகப் போயிருப்பது இந்த ஆண்களால்தான் என்று ஒட்டுமொத்தமாக எல்லா ஆண்களையும் மனதுக்குள் வைதேன்.

    பின்னே என்னவாம்? பழைய ஓவியங்களையும், கோயில் சிற்பங்களையும் பாருங்கள்! எத்தனை பெண்கள் இப்படி உருண்டு திரண்டு இருக்கிறார்கள், இல்லை, இருந்திருப்பார்கள்? எல்லாம் இந்த ஆண் ஓவியர்கள், சிலை வடிப்பவர்கள் செய்த திரிசமன். அவர்களுடைய கனவுலகில் இருக்கும் பெண்களை நனவாக்கிக்கொள்ளும் அற்பர்கள்!

    தாம் ஏதோ விதத்தில் மட்டமானவர்கள் என்று பல பெண்கள் சுருங்கிப்போவது இந்தமாதிரி ஆண்களால்தான்! அதனால்தான் நான் வேண்டுமென்றே உடலழகை அலட்சியம் செய்தேன்.

    `இக்கல்லூரியில் உங்களது எல்லையை விரிவாக்கப் போகிறோம். உலகெங்கும் இருக்கும் பெண்களின் நிலையை நீங்கள் உயர்த்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு! நம் கல்லூரியில் படித்த நான்ஸி ரீகன் அமெரிக்காவின் முதல் பெண்மணியானார் என்பதை மறவாதீர்கள்!’ எங்களது போதனைகள் அந்த ரீதியில் அமைந்ததால், நான் குதிரைச் சவாரி, உயிர்காக்கும் ரப்பர் உபகரணங்கள் எதுவுமின்றி ஆழ்கடலில் நீச்சல் எல்லாம்  பழகினேன்.

    `என்னால் இவ்வளவெல்லாம் செய்ய முடிகிறதே!’ என்ற வியப்பு எழுந்தபோதே, ஆண்களின்பால் விதைக்கப்பட்ட கசப்பு அதிகரித்தது. தாம் இரண்டாந்தார மக்கள்தாம்  என்று பெண்களை எவ்வளவு காலமாக நம்ப வைத்திருக்கிறார்கள்!

    அப்படி எண்ணாத ஒருவர் என்னை மணக்க விரும்பியபோது, அதிக யோசனை செய்யாது அவரை மணந்தேன்.

    ஆனால், ஆண்களின் மொத்தப் பிரதிநிதி என்றவரைப் பாவித்து, சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் நான் அவரைத் தாக்குவேன் என்று நாங்கள் இருவருமே அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை.

    நான் வெளிநாட்டில் தங்கிப் படித்த அனுபவத்தைப் பிறருடன் பகிர்ந்துகொண்டேன், எழுத்து மூலமாக. என் பெண்ணியக் கருத்துகளை இளம்பெண்கள் ஆர்வமாகப் படித்தார்கள். (வயதான பெண்மணிகளைத் திருத்த அவர்களைப் படைத்த இறைவனால்கூட முடியாது).

    “ஒரு பெண் கொஞ்சம் முன்னுக்கு வந்தாலே அவளைப்பத்தி இல்லாததையும், பொல்லாததையும் பேசறவங்களைப்பத்தி என்ன நினைக்கறீங்க, ஆன்ட்டி?” கமலினி கேட்டபோது, புன்னகைத்தேன்.

    “இந்த ஒலகம் இருக்கே, அது நாம்ப வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும் ஏசும். எப்படியும்தான் பேசப்போறாங்க! நாம்ப புகழோட வாழ்ந்து, மத்தவங்களுக்கு பேச ஒரு வாய்ப்பு குடுப்போமே!” கல்லூரியில் எனக்குக் கொடுக்கப்பட்ட உபகாரச் சம்பளம் வீண்போகவில்லை என்ற பெருமிதம் ஏற்பட்டது.

    ஓசையெழாமல் அவள் கைதட்டினாள். “நல்லவேளை, நீங்க வர்றது தெரிஞ்சு இன்னிக்கு ஒங்களைப் பாக்க வந்தேன்! என் மனசில இருந்த குழப்பமெல்லாம் போயிடுச்சு!”

    என்ன குழப்பம் என்று நான் கேட்கவில்லை.

    தானே தெரிந்தது, சில மாதங்களுக்குள். எல்லா தமிழ் தினசரிகளின் ஞாயிறு பதிப்புகளிலும் முதல் பக்கத்திலேயே போட்டிருந்தார்கள், `நம்ப கமலினி கோலிவுட்டில் நடிக்கப் போகிறார்!’ என்று. உள்ளே அந்தப் பெண்ணின் முழுப்பக்க பேட்டி, புகைப்படத்துடன்.

    அவளுடைய போட்டோ ஆண்களின் மனத்தைக் கவரவென்றே எடுக்கப்பட்டது என்று எனக்குத் தோன்றியது. கணுக்கால் தெரிய, இடுப்பை அகலமாகக் காட்டும் பாவாடை. கண்ணைக் குத்துவதுபோன்ற, இயற்கைக்குப் புறம்பான அளவில் இருந்த மார்பகங்களை மேலும் எடுத்துக் காட்டவென்றே உடலைப் பிடிக்கத் தைக்கப்பட்ட மேல்சட்டை.

    முன்பு சுமாராக இருந்த அவள் முகத்தில் நிறைய வித்தியாசம். முன்னாள் உலக அழகியின் சாயலைக் காப்பி அடித்தமாதிரி வெகு அழகாக மாறியிருந்தாள்.

    ஓ! முகத்தின் பல பாகங்களிலும், மார்பகத்திலும் தாராளமாக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருக்கிறாள்! லேசாகச் சிரிப்பு வந்தது.

    அன்று மத்தியானம் நான் தனியாக அமர்ந்து தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது, சின்னத்திரையில் கமலினி வந்தாள். ஆங்கில உச்சரிப்புடன் தமிழில் ஏதோ பேசினாள். உற்சாகமாக அவரைக் கூவி அழைத்தேன்.

    “இது இந்த ஊர் பொண்ணு! இப்போ..,” நான் தொடர்வதற்குள், அவர் தன் கையாலேயே என்னைத் தடுத்தார்.

    “இதுக்கா அவ்வளவு அவசரமா என்னைக் கூப்பிட்டே? யார் எப்படிப் போனா நமக்கென்ன?” அபூர்வமாகத்தான் அவர் குரலை உயர்த்துவார்.  “நாம்ப மத்தவங்களைப்பத்தி வம்படிச்சா, அப்புறம் நம்மைப்பத்தி மத்தவங்க என்ன சொல்வாங்களோன்னு பயந்துக்கிட்டே காலந்தள்ளணும்!”

    நாலடி நடந்தவர், என்னைத் திரும்பிப் பார்த்தார். “இவ்வளவு படிச்சும், நீ இப்படி பாமரத்தனமா பேசறது ஆச்சரியமா இருக்கு!”

    எனக்கு அவமானமாக இருந்தது. பட்டென்று டி.வியை நிறுத்தினேன். அன்று பூராவும் ஏதேதோ வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டேன். சோயா பீன்ஸை வெந்நீரில் ஊறவைத்து அரைத்து, வடிகட்டிய பாலைக் கொதிக்க வைத்தேன்.

    `எனக்கு ஓய்வே கிடையாதா!’ என்று கெஞ்சுவதுபோல் தோள் வலிக்க, அதைப் பிடித்துவிட்டுக் கொண்டேன். அதை அவர் பார்த்திருக்க வேண்டாம்.

    “கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோயேன். எதுக்கு ஓயாம வேலை செய்யறே? இப்போ உயிரைக் குடுத்து இதைப் பண்ணணுமா? கடையில நாலு பாக்கெட் வாங்கினாப் போச்சு!”

    அவரது கரிசனம் ஏற்கெனவே கொந்தளித்துக்கொண்டிருந்த என்னை மேலும் உசுப்பியது. “ஒங்களை யாரும் கேக்கல. எல்லாம் எனக்குத் தெரியும்!” என்று சீறினேன்.

    `இப்போது நான் என்ன செய்தேன்!’ என்பதுபோல் ஒரு புதிரான பார்வை பார்த்துவிட்டு, அவர் அந்த இடத்தைவிட்டு அகன்றார்.

    `நான் ஏன் இப்படி இருக்கிறேன்!’ என்ற வருத்தம் எழுந்தது.

    நீர்க்க இருக்காமல், நிஜமான சர்க்கரை போட்டு, நாமே வீட்டில் சோயா பால் பண்ணினால் உடம்புக்கு நல்லது என்று நான் செய்ததை அவர் பாராட்டவில்லையே என்ற வருத்தமா?

    சிறிது யோசித்தபின், உண்மைக் காரணம் அதுவல்ல என்று புரிந்தது. நான் அந்த நடிகையைப்பற்றிப் பேசியதை அவர் ரசித்துக் கேட்கவில்லை என்ற கோபம் எனக்கு.

    என் கோபம் தணியும்வரை அவர் என் கண்ணிலேயே படமாட்டார் என்பது தெரிந்ததுதான். கம்ப்யூட்டர் அறையிலேயே இரவில் வெகு நேரம் உலக சமாசாரங்கள், அதனுடன் செஸ் விளையாட்டு. அப்புறம் அங்கேயே படுக்கை என்று பொழுதைக் கழிப்பார்.

    நானே அவ்வளவு சோயா பாலையும் குடித்துத் தொலைத்தேன்.

    `ஆணும் பெண்ணும் சமம்’ என்று போதித்தார்களே எங்கள் கல்லூரியில், அடிப்படையிலேயே அவர்களிடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை மறந்துவிட்டு! அவர்கள்தான் சொன்னால், என் புத்தி எங்கே போயிற்று? அறிவாளி என்று பெயர்தான்!

    என்னால் தூங்க முடியவில்லை. எண்ணமெல்லாம் அந்தப் பெண்ணையே சுற்றிச் சுற்றி வந்தது. கமலினியின் நடையுடை பாவனைகள் எல்லாமே ஆண்களை மனதில் வைத்துத்தான் என்று தோன்றியது.

    `பிறர் முன்னுக்கு வரவிடாமல் செய்கிறார்கள்!’ என்று பெண்களின்மேல் குற்றம் சாட்டியவள்,`அவர்கள் என்ன சொல்வது!’ என்ற மிதப்புடன், ஒரேயடியாக ஆண்கள் பக்கம் சாய்ந்துவிட்டாளே என்ற வருத்தமா?

    அவள் இப்படி ஆக, நானும் ஒரு வகையில் காரணம் ஆகிவிட்டேனோ, பெண்களைப் பழித்ததால்?

    `இது ஆண்களின் உலகம்!’ என் பேராசிரியரே சொல்வதுபோல் காதருகே கேட்டது.

    எனக்குக் கோபம் வந்தது. உடனே படபடப்பு உண்டாயிற்று.

    `நீங்கள் எடையைக் குறைக்க வேண்டும்!’ ஒவ்வொரு முறையும் டாக்டர் என்னிடம் கெஞ்சுதலாகச் சொன்னது நினைவுக்கு வந்தது.

    முதல்முறை நான் இதனை என் கணவரிடம் தெரிவித்தபோது, அவர் மெல்லச் சிரித்தபடி, “உன்னைமாதிரி அறிவுஜீவிகளுக்கு மூளையை விரிவு படுத்தத்தான் நேரம் சரியாக இருக்கிறது!”என்று குரல் அதிராது சொன்னாலும், மறுநாளே ஆயிரம் ரிங்கிட்டுக்குமேல் கொடுத்து, வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய ஒரு சாதனம் வாங்கிவந்தார்.

    `நீ குண்டு!’ என்று சொல்லாமல் சொல்கிறார்!

    `உங்கள் ஒட்டடைக்குச்சி உடம்பிற்கு இது எவ்வளவோ தேவலாம்!’ என்று மனதுக்குள் கறுவிக்கொண்டே அப்பால் சென்றேன். எதுவும் பேசப் பிடிக்கவில்லை. பணத்தைப் பாழ் செய்து வாங்கிய பொருள் தூசு படிந்து கிடக்கும்போது அவரே புரிந்துகொள்ளட்டும்!

    வழக்கம்போல் எங்கள் கோபம் ஓரிரண்டு நாட்களே நீடித்தது.

    `எவ்வளவு வயதானாலும், என்ன இப்படி சின்னக் குழந்தைபோல நடந்து கொள்கிறேன்!’

    அறிவு வளர்ந்த அளவுக்கு உணர்ச்சிகள் வளரவில்லையோ? நினைக்கும்போதே அயர்ச்சி வந்தது.

    இந்த லட்சணத்தில், பிறருக்கு அறிவுரை கூறும் தகுதி எனக்கு இருக்கிறதா!

    நத்தைபோல் என்னுள்ளேயே சுருங்கிக்கொண்டு, ஓயாமல் படித்தேன்.

    அந்த தினசரியின் முதல் பக்கத்தில் கமலினியின் போட்டோ!

    அடக்க முடியாத ஆர்வத்துடன் பார்த்தேன்.

    தலைப்பே அதிரவைத்தது. `விபசாரக் கேஸில் மாட்டிய நடிகை!’ மேற்கொண்டு படிக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. பேப்பரை வீசியெறிந்தேன்.

    `ஒரு ஆணுக்கு மனைவியாக, அடங்கி வாழ்வதில் என்ன சிறப்பு?’ என்றவள், தெரிந்தே பல ஆண்களுக்குக் கைப்பாவையாக ஆகியிருக்கிறாள்!

    `பாவம்! அந்த ஏழைப்பெண் எப்படித்தான் குறுகிய காலத்தில் நிறைய பணமும் புகழும் சம்பாதிப்பது!’ என்று அறிவு வாதாடினாலும், கசப்பான ஒர் உண்மை புலப்பட்டது.

    இது ஆண்களின் உலகம்தான். சில அப்பாவிகளை எதிர்ப்பதால் மட்டும் அதை மாற்றிவிட முடியாது.

    உடற்பயிற்சி செய்யும் கருவியைத் தூசி தட்டினேன். போகாத ஊருக்கு உயிரை விட்டுக்கொண்டு, அந்த சைக்கிளின் பெடலை அமுக்கினேன்.

    பார்த்தும் பாராததுபோல அப்பால் நகர்ந்தார் என் கணவர்.

    Share
  • தண்டனை

    நிர்மலா ராகவன்

    தந்தை இறந்துவிட்டார் என்று தந்தி வந்திருக்கிறது. அதைப் பொருட்படுத்தாது, கிடாரில் ஸ்ருதி சேர்த்துக்கொண்டு இருந்த நடராஜனைப் பார்த்தான் மனோகர்.

    “புறப்படலே?” என்று கேட்டான், அவன் போய் கொள்ளி போட வேண்டிய அவசியத்தை உணர்த்த விரும்பியவனாக.

    நடராஜன் சூள் கொட்டினான். “உசிரோட இருந்தப்போ பிள்ளைங்கமேல அவர் பாசத்தைக் கொட்டினது பாழாப் போச்சு! இப்ப என் கையால கொள்ளி வாங்கத்தான் அந்த மனுஷனோட ஆத்மா காத்துக்கிட்டு இருக்காக்கும்! அது சாந்தி அடைஞ்சா என்ன, இல்லாட்டி, பேயா..!”

    ஹாஸ்டல் நண்பன் குறுக்கிட்டுப் பேசினான், உரிமையோடு. “செத்தவங்கமேல நீ இப்படி வன்மம் பாராட்டறநு நல்லாவே இல்லே, நடா. அவருக்காக இல்லாட்டியும், ஒங்க அம்மாவுக்காக..!”

    நடராஜன் உடனே இளகினான். “பாவம், அம்மா! நாலு குழந்தைகளைப் பெத்ததுக்கு அப்புறமும், மத்த பொண்ணுங்ககிட்டே எங்கப்பா விட்ட ஜொள்ளு இருக்கே! ஒங்கிட்டதான் சொல்லி இருக்கேனே!”

    நண்பன் தலையை ஆட்டினான், ஒரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாது.

    “எங்க அக்காங்களோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரைக் கூட்டிக்குவார். சினிமா, பீச்சுனு போவோம். அப்போ..,” ஐந்து வருடங்களுக்குமுன் நடந்ததுதான். ஆனால், சிறு குழந்தைகளுடன் விளையாடுவதுபோல அப்பருவப் பெண்களின் கன்னத்தைத் தடவியும், இடுப்பில் கையைப் போட்டும் அப்பா ஆட்டம் போட்டது இந்த ஜன்மத்தில் மறக்குமா!

    முதலில் அவனும் விளையாட்டு என்று நினைத்துச் சிரித்தாலும், மீசை முளைத்ததும், பிறர் எதிரிலேயே இப்படி நடந்துகொள்பவர் அவர்களில் யாராவது ஒருவருடன் உலாவப் போகையில், செய்யக் கூடாத என்னென்னவோ செய்வார் என்பது சந்தேகமறப் புரிந்து போயிற்று.

    அக்கம்பக்கத்தில் இருந்தவர்களைவிட அப்பா நிறையப் படித்து, பெரிய வேலையில் இருந்தது பிறரை அவர்மேல் நம்பிக்கை கொள்ள வைத்தது.

    ஒல்லியும் குள்ளமுமான உடல்வாகு. அலாதிச் சுறுசுறுப்பு. தானாகப் போய் பிறருக்கு உதவுவார். எல்லாரிடமும் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார் — மனைவியையும், குழந்தைகளையும் தவிர. வீட்டுக்கு வந்துவிட்டால், பேசவே மாட்டார். தன் அறையிலேயே அடைந்து கிடப்பார். அப்பாவும் அம்மாவும் சுமுகமாக நாலு வார்த்தைகள் பேசிக்கொண்டதாக அவனுக்கு ஞாபகமே இல்லை.

    அம்மா! அப்பாவுக்கு நேர் எதிரிடை உருவத்திலும், குணத்திலும். அப்பாவுடைய பராமுகத்தால்தான் அப்படி ஆனாள் என்பதில் அவனுக்குச் சந்தேகமே கிடையாது.

    நினைத்து நினைத்து அழுவாள். காரணம் எதுவும் இருக்காது. நாள் தவறாது குளிப்பது, தலையை வாரிக் கொள்வது இதெல்லாம் கிடையாது. எங்கோ வெறித்துப் பார்த்தபடி, தரையில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பாள். எப்போதாவது தமிழ் பத்திரிகைகள் படிப்பாள். அனாவசியமாக நடக்காமல், உட்கார்ந்த நிலையிலேயே அளவுக்கு மீறி சாப்பிட்டதில், உடல் பருத்தது. உபாதைகள் அதிகரித்தன.

    மனோதத்துவம் சற்று புரிய ஆரம்பித்தபின், எதையோ விழுங்கவோ, அல்லது சீரணிக்கவோ முடியாது, அதற்குப் பதிலாக உணவையாவது ஓயாது விழுங்குகிறாள் என்று நடராஜனுக்குத் தோன்றியது.

    அம்மாவைப்பற்றி நல்ல விதமாக ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், தான் பெற்ற பிள்ளைகள்மேல் அவள் வைத்திருந்த அபார பாசத்தைத்தான் குறிப்பிட வேண்டும். அவர்களைப் பக்கத்தில் உட்காரச் செய்து, தடவித் தடவிக் கொடுப்பாள், பசு தன் கன்றை நாவால் நக்குவதுபோல்.

    என்றாவது மற்ற அம்மாக்களைப்போல் அம்மாவும் அழகாகச் சிங்காரித்துக் கொண்டு, அப்பாவுடனேயோ, அல்லது தனியாகவோ தங்களை வெளியே அழைத்துப் போயிருக்கிறாளா என்று நடராஜன் யோசித்துப் பார்த்தான்.

    அட, அதெல்லாம் வேண்டாம். தான் பெற்ற குழந்தைகளுக்காக ஏன் தானே வகைவகையாகச் சமைத்து, பரிமாறக்கூட இல்லை? நடக்கக்கூட அவள் கஷ்டப்பட்டதில், பாவம், பெரியக்காதான் பதின்மூன்று வயதிலேயே கரண்டி பிடிக்க வேண்டியதாயிற்று.

    அவர்கள் வீட்டில் ஒரு போட்டோ இருந்தது. சித்தப்பா எடுத்ததாம். மூன்று பெண்களுக்குப்பின் பிறந்த அருமை மகனாகிய அவன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான் — அம்மா மடியில். பக்கத்தில் அப்பா விறைப்பாக உட்கார்ந்திருந்தார், முகத்தைக் கடு கடுவென வைத்துக்கொண்டு. பெற்றோரின் காலடியில் மூன்று அக்காமார்களும் உட்கார்ந்திருந்தார்கள், ஒரேயடியாக இளித்தபடி.

    `ஏண்டா, நம்ப அப்பா எல்லா அப்பாவையும்போல நம்பகிட்ட ஆசையா இல்ல?’ என்று, இவனைவிட இரண்டே வயது பெரியவளான நளினி இவனிடம் எத்தனை முறை கேட்டிருப்பாள்!

    இவனும், `எனக்கும் இந்த அப்பாவைக் கண்டாலே பிடிக்கலே,’ என்று ஒத்துப் பாடுவான்.

    பெற்றோர் இருவருமே உருப்படியாக இல்லாததால், அண்ணன் குழந்தைகள் ரொம்பத் தவிக்கிறார்களே என்றோ, என்னவோ, பாலு சித்தப்பா வருடம் தப்பாது அமெரிக்காவிலிருந்து வருவார். அவர்கள் வயதுக்கும், திறமைக்கும் ஏற்றபடி, பெரிய பெட்டி நிறைய விளையாட்டுச் சாமான்கள் வாங்கி வருவார். ஆசை ஆசையாய், எல்லா இடங்களுக்கும் அழைத்துப் போவார், வாடகைக்குக் கார் எடுத்து. ஓரிரு வாரங்களே ஆனாலும், அப்போது அனுபவிக்கும் மகிழ்ச்சி அந்தக் குழந்தைகளின் நெஞ்சில் நெடுநாட்கள் நிலைத்திருக்கும்.

    ஆனாலும், குடும்பத்தின் தலைவர் சரியாக இல்லாததால், எல்லாமே கோணலாகப் போயிற்று.

    மூத்த அக்கா, `மலடி’ என்று கணவரிடமும், மாமியாரிடமும் அடிபட்டுச் சாகிறாள். அவளைப் பொறுத்தவரை, `கல்யாணம்’ என்ற ஒன்று செய்துகொள்வது துன்பம் அனுபவிக்க. இது அம்மாவிடமிருந்து கற்ற பாடம்.

    இரண்டாவது அக்காவின் ஒரே பிள்ளைக்கும் மூளைக்கோளாறு. மூன்றாவதான நளினிதான் அம்மாவைப் பார்த்துக்கொள்கிறாள். `கல்யாணத்தைப்பத்தி நினைக்கவே பயமா இருக்குடா!’ என்று அவனிடம் பல முறை சொல்லி இருக்கிறாள்.

    யாரோ அவர்கள் குடும்பத்தைச் சபித்து விட்டார்கள் என்று அவனுக்குத் தோன்றும்.

    வேறு யார், அப்பாவால் கசக்கப்பட்ட பெண்கள், அல்லது அவர்களுடைய பெற்றோராகத்தான் இருக்கும் என்ற கசப்பு எழும். அப்படி ஒரு பெண்ணின் கணவர், `இவர் ஒருத்தரோட சுத்தினாளாமே!’என்று அவளை வீட்டுக்கே அனுப்பவில்லை?

    இப்போது, அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியை அறவே குலைத்த அப்பா ஒருவழியாகச் செத்திருக்கிறார். அப்பா இல்லாத வீட்டுக்குப் போகப்போகிறோம் என்ற நினைவே நடராஜனுக்குச் சற்று நிம்மதியை அளித்தது.

    எப்போதும், நடராஜன் நளினிக்காக துணிமணிகள் வாங்கிப்போவது வழக்கம். அப்போது அதிசயமாக அவள் முகம் மலர்வதைப் பார்ப்பதில் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி. இம்முறையும் அப்படிப் போவது நன்றாக இராது என்று அடக்கிக் கொண்டான். மீண்டும் அப்பாவின்மேல் கோபம் எழுந்தது. `இருந்தும் கெடுத்தார், செத்தும் கெடுத்தார்!’ என்று மனதுக்குள் வைதான்.

    இப்போது அம்மா எப்படி இருப்பாள்? உலகத்திற்காக, ஒப்புக்கு அழுது வைப்பாளா, இல்லை, நிம்மதியாக இருப்பாளா? இந்தமாதிரி புருஷன் போனால், அம்மா எதற்காக துக்கம் அனுஷ்டிக்க வேண்டுமாம்? `தொலைந்தான்’ என்று, இனியாவது எல்லாரும் ஒரு நல்ல வாழ்க்கையைத் தேடிக்கொள்ளச் சொல்ல வேண்டும்.

    சற்று தயக்கத்துடனேயே இழவு வீட்டுக்குள் நுழைந்தான் நடராஜன். தீப்பெட்டிபோல் வரிசை வரிசையாக கட்டப்பட்டிருந்த இரண்டடுக்கு வீடுகளில் கோடி வீடு. காம்பவுண்டு சுவர்வரை தோட்டம் போட நிறைய இடம் இருந்தது. நளினி எல்லா நேரத்தையும் அங்குதான் கழிப்பாள்.

    இனியும் அவள் தனிமையில் வாட வேண்டியதில்லை. `நீ பக்கத்தில் இருப்பதால் அம்மாவுக்கு எவ்வளவு ஆதரவு! உனக்கு வயதான காலத்தில் அப்படி ஒருத்தர் வேண்டாமா?’ என்று வாதாடி, அக்குடும்பத்தின் ஒரே ஆண்பிள்ளையாய் லட்சணமாய், அவளுக்கு ஒரு நல்ல வரனைத் தேடி முடிக்க வேண்டும். நினைக்கும்போதே பெருமையாக இருந்தது.

    வானம் இருட்டியிருந்தது. நாளைவரை எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. கைக்கடிகாரத்தில் அவன் கண்கள் பதிந்தன. அவன் கல்லூரியில் சேர்ந்தபோது, சித்தப்பா வாங்கி வந்த பரிசு. மணி, தேதியுடன், குறிப்பிட்ட நாடுகளில் என்ன நேரம் என்பதையும் காட்டும்.

    அந்த மாதிரி அப்பா அவனுக்காக என்ன செய்திருக்கிறார் என்று எழுந்த நினைப்பை ஒதுக்கினான். சின்னப் பையனாக இருந்தபோது, தலைமுடி வெட்டிக்கொள்ளக்கூட பெரியக்காதானே அழைத்துப் போவாள்!

    வீட்டு வாசலிலேயே நளினி நின்றிருந்தாள். கண்கள் சிவந்திருந்தன. மூக்கை உறிஞ்சிக் கொண்டவளை ஆச்சரியத்துடன் பார்த்தான் நடராஜன்.

    `அம்மா?’ என்று உதடுகளை மட்டும் அசைத்து, ஓசையெழுப்பாமல் கேட்டவனிடம், மாடியறையைச் சமிக்ஞையால் காட்டினாள். “இன்னும் யாருக்கும் சொல்லி விடல. நீ வரவரைக்கும் காத்திட்டு இருக்கணும்னு அம்மா சொல்லிட்டாங்க!” என்று ரகசியக் குரலில் தெரிவித்தாள்.

    குழப்பத்துடன் படியேறிப் போனான்.

    அது அப்பாவின் படுக்கையறை. அப்பா கட்டிலில் படுத்திருந்தார். அவரது நெற்றியில் ஒரு நரம்பு புடைத்திருந்தது — அந்த ஆத்மா நிம்மதியைத் தேடி அலைகிறது என்பதை உணர்த்துவதுபோல.

    கட்டிலில் அவர் அருகே — மிக அருகே — அம்மா உட்கார்ந்திருந்தாள்.  அப்படி அவர்கள் இருவரையும் அருகருகே பார்த்தது அவனுக்கு என்னமோபோல் இருந்தது. தன்னிடம் அணுக்கமாக இருந்த அம்மா இப்போது இன்னொரு ஆண்மகனுடன், அது அப்பாவாகவே இருந்தாலும், நெருக்கமாக அமர்ந்திருந்ததை அவன் மனம் ஏற்கவில்லை. செத்தால் எல்லாம் சரியாகப் போயிற்றா? இல்லை, ஊருக்காக வேஷமா? அவனுடைய கோபம் அம்மாவின்மேல் திரும்பியது.

    அவனைப் பார்த்ததும், “அப்பா நம்பளையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாருடா!” என்று அலறினாள் அம்மா.

    அவனுக்கு வெறி பிறந்தது. “நீங்க ரெண்டு பேரும் வாழ்ந்த லட்சணம் தெரியாதா? இந்தக் கேடுகெட்ட மனுசனுக்காக எதுக்கு துக்கம் கொண்டாடணும்?” என்று கத்தினான்.

    அம்மா சட்டேன ஒரு நிலைக்கு வந்தாள். “கிட்ட வா. ஒங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்!” அவள் குரலிலிருந்த அலாதி அமைதி அவனுக்கு அச்சசத்தை விளைவித்தது.

    என்று இப்படிப் பேசி இருக்கிறாள்?

    என்ன சொல்லப் போகிறாள்?

    “நீ ஆத்திரப்பட வேண்டியது என்மேலதான்!” மூச்சை உள்ளுக்கிழுத்துக் கொண்டாள். அப்பாவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டாள். “தப்பு பண்ணினது இவரில்ல, நான்தான்!”

    அதிர்ச்சி தாங்காது, அப்படியே தரையில் விழாதகுறையாக உட்கார்ந்தான் நடராஜன்.

    “அவருக்குத் துரோகம் பண்ணின என்னையும், நான் பெத்த பிள்ளைங்களையும் தெருவில அலைய விடாம..!” விம்மலோடு பேசிய அம்மாவின் குரல் கம்மிக்கொண்டே போனதில், அவள் பேசியது அவனுக்குச் சரியாக விளங்கவில்லை.

    ஆனால், ஒன்று மட்டும் தெளிவாகியது. அப்பாவென்று நம்பி, தான் அடியோடு வெறுத்தவர் தன் அப்பா இல்லை.

    அப்படியானால், தன் அப்பா யார்?

    சித்தப்பா?

    `அவரேதான்!’ வீட்டுக்கு வரும்போதெல்லாம் சித்தப்பாவும், அம்மாவும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள்போல் நடந்து கொண்டதற்கு இப்போது ஒரு புதிய அர்த்தம் கிடைத்தது.

    அண்ணாவுக்குத் தான் இழைத்த கொடுமைக்கு விமோசனமாகத்தான் அவர் அண்ணாவின் குழந்தைகளிடம் அவ்வளவு ஈடுபாடு காட்டினாரா! கல்யாணமே செய்து கொள்ளவும் இல்லை!

    கட்டிலில் படுத்திருந்தவரின் இறுகிய முகத்தை ஒரு கணம் பார்த்தான். இந்த அப்பாவி மனிதரிடம் காலமெல்லாம் பகைமை பாராட்டினோமே! யாருக்கோ பிறந்த தன்னை வளர்த்து, படிக்க வைத்து..! நடராஜனுக்கு அழுகை வந்தது.

    அவருடைய போக்கிற்கு அர்த்தமும் புரிந்தது.

    மாற்றான் ஒருவனிடம் மனைவிக்குத் தொடர்பு இருக்கிறது  என்பது சந்தேகமறப் புரிந்து போக, தனது ஆண்மை தனக்கே சந்தேகக் குறி ஆகிவிட, `நானும் ஆண்பிள்ளைதான்!’ என்று தனக்கே உணர்த்திக்கொள்ள எந்த ஆணுக்குத்தான் தோன்றாது!

    மனைவியைப்போல் இல்லாது, கள்ளங்கபடமற்ற சின்னப் பெண்களின் அன்பு அவருக்கு அருமருந்தாகத் தேவைப்பட்டு இருக்கிறது!

    நடராஜனின் கண்கள் சடலத்தின் பக்கம் போயின. அவர் முகத்தருகே குனிந்து, `என்னை மன்னிச்சுடுங்கப்பா. இப்பவாவது ஒங்களுக்கு நிம்மதி கிடைக்கட்டும்!’ என்று மனதுக்குள் திரும்பத் திரும்ப வேண்டினான். அவன் உதடுகள் விம்மின.

    “மணி என்ன ஆச்சுப்பா?” அம்மாவின் குரல் அவனை உசுப்பியது.

    அவன் கண்கள் இடது மணிக்கட்டில் பதிந்தன. சித்தப்பா அளித்த பரிசு! அந்த எண்ணமே கசப்பை விளைவிக்க, விலையுயர்ந்த கடிகாரத்தைக் கழற்றி, பக்கத்திலிருந்த மேசைமேல் வீசி எறிந்தான்.

    திரும்பியபோது, அப்பாவின் நெற்றி நரம்பு சமனாகி, இந்த மானுட உலகத்துடன் அவருக்கு இருந்த எல்லாத் தொடர்பையும் துண்டித்துக்கொண்டதுபோல் முகத்தில் சவக்களை வந்திருந்தது தெரிந்தது.

    பக்கத்தில் உடம்பைக் குறுக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள் அம்மா. சற்றுமுன் அசாதாரணமாகப் பேசியவளின் பார்வை இப்போது வெறித்திருந்தது.

    அம்மா மனநோயாளியாக ஆனது அப்பாவின் நடத்தையால் அல்ல. தன்மேலேயே அவளுக்கு எழுந்த வெறுப்பால்.

    அவள் பட்டதெல்லாம் போதும், தான் வேறு தண்டிக்க வேண்டுமா என்ன்று தோன்றிப்போக, “அப்பாவுக்கு மொதல்ல என்ன செய்யணும்மா?” என்று கனிவுடன் கேட்டான்.

    Share
  • அந்த முடிவு

     நிர்மலா ராகவன்

    “இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?”

    தொலைகாட்சிப் பெட்டியிலிருந்து தன் கவனத்தைக் கஷ்டப்பட்டு மனைவியிடம் திருப்பினார் அம்பலம். முப்பது வருட தாம்பத்தியத்தில் அவர் கற்றுக்கொண்ட ஒரு பாடம், மனைவி பேச்சுக்கு எதிர்பேச்சு பேசாதிருந்தால் வாழ்வில் அமைதி நிலவும் என்பதுதான்.

    ஆறு மாதத்திற்குமுன் மணமாகிப் போன கடைக்குட்டி பார்வதி அன்று சாயங்காலம் திடுதிப்பென்று வந்திருந்தாள். அதுவும் தனியாக. ஏதோ புருஷன் பெண்டாட்டி சண்டையாக இருக்கும் என்று இவரும் எதுவும் கேட்கவில்லை.

    இப்போது, எல்லாரும் சாப்பிட்டு முடிந்து, தூங்கப்போகும் சமயத்தில் அவள் வரவின் காரணத்தை மனைவி ஒன்றுக்குப் பத்தாகக் கூற வந்திருப்பாள் என அசுவாரசியமாகப் பார்த்தார்.

    “ஏங்க? எதுக்காக கல்யாணம் பண்ணிக்கறது? இல்ல, எதுக்காகன்னு கேக்கறேன்!”

    நான்கு பிள்ளைகளைப் பெற்றபின் அவளுக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம் எழுந்தது? அம்பலத்திற்குச் சிரிப்பு வந்தது. மனைவியின் கோபத்தை உத்தேசித்து அடக்கிக் கொண்டார்.

    “அட, கேக்கறேன், இல்லே?” என்று முடுக்கினாள்.

    வாயில் வந்தது எதையாவது சொல்லித் தொலைத்தாலே ஒழிய இவள் அப்பால் நகர மாட்டாள் என்று, “ஏதோ.. பிள்ளை குட்டி பெத்து, கடைசி காலத்தை அவங்க நிழல்லே..,” என்ற் மென்று முழுங்கினார். இந்த விஷயங்களை எல்லாம் வெளிப்படையாகப் பேசுவார்களா யாரேனும்!

    “இவரு கடைசி காலத்துக்குப் போயிட்டாரு! இங்க மொதலுக்கே மோசமா இருக்காம்!” நொடித்தபடி அவள் சொல்லாமல் சொன்னது லேசாகப் புரிய, அதை நம்ப முடியாது, திகைப்புடன் அவளைப் பார்த்தார்.

    அவர் கண்ணில் தேங்கியிருந்த கேள்விக்கு அதே ரீதியில் பதிலளித்தாள் மனைவி.

    “ஏதுடா, தங்கமானவங்களா இருக்காங்களே சம்பந்தி வீட்டுக்காரங்க; `ஒங்க பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. நீங்க செய்யறதைச் செய்யுங்க’ன்னு அவங்க தேனாப் பேசினதில நான்கூட இல்ல ஏமாந்துட்டேன்!” ஆண்மை இல்லாத ஒருவனைத் தங்கள் பெண் தலையில் கட்டிவிட்டார்களே என்ற ஆத்திரத்தில் குமுறினாள் பொன்னம்மா.

    “இனிமே என்ன செய்ய முடியும்?”

    “என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? இனிமேதான் செய்யணும். `இந்த மாதிரி இருக்கு. எனக்கு அவரோட சேர்ந்து வாழ விருப்பமில்லே!’ அப்படின்னு பார்வதி கோர்ட்டில அடிச்சுச் சொன்னா, விவாகரத்து வாங்கிடலாம். ஜீவனாம்சம்கூட கிடைக்கும்!”.

    அம்பலத்துக்கு குழப்பம் அதிகரித்தது. “எதுக்கு அவசரம், பொன்னம்மா? மாப்பிள்ளை அம்மாவுக்கு ஒரே பிள்ளை! இன்னும் சின்னக் குழந்தைன்னே நினைச்சு, அருமையா நடத்தி இருப்பாங்க! அதான் இப்படி..! கொஞ்சம் விட்டுப் பிடிச்சா..!” மனைவியை எதிர்த்து, ஒரே மூச்சில் அவர் இவ்வளவு பேசியதே அதிகம்.

    அப்போது அவரே எதிர்பாராதவண்ணம் மகள் புயலென சீறியபடி உள்ளேயிருந்து வந்தாள்.

    “நான் இனிமே அந்த வீட்டுக்குப் போக மாட்டேம்பா. எங்க வீட்டுக்காரருக்கு சாப்பாடு போடக்கூட விடறதில்ல அவங்கம்மா. அவரும், `ஒரே களைப்பா இருக்கு. என்னைத் தொந்தரவு செய்யாதே’ன்னு தினமும் கட்டிலைவிட்டுக் கீழே படுத்துக்கிறாரு!” தன் இளமையும், பெண்மையும் கட்டியவருக்குக்கூட ஒரு பொருட்டாகப் படவில்லையே என்ற அவமான உணர்வில் அழுகை பொங்கியது அவளுக்கு.

    மகளுடைய துயரம் தாயையும் பாதிக்க, “இன்னும் என்ன கதை கேக்கறீங்க? பேசாம, நான் சொலறபடி செய்யுங்க!” என்று ஆணை பிறப்பித்துவிட்டு, “நீ வாடா, கண்ணு! யாரோ செய்யற தப்புக்கு நாம்ப எதுக்கு அழணும்?” என்று மகளை அணைத்தபடி உள்ளே அழைத்துப் போனாள்.

    நீதிமன்றத்தில் பேசவும் வாயெழாது, அவமானத்துடன் தலைகுனிந்த வண்ணம் பிறர் தன்னை விமர்சிப்பதைக் கேட்டு, அங்கமெல்லாம் சுருங்கியவனாக நின்றிருந்த மாப்பிள்ளை கிருஷ்ணனின் நிலை பொன்னம்மாவைப் பாதிக்கவில்லை. `இவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்ததற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்!’ என்று நினைத்துக் கொண்டாள்.

    அப்போது அவள் எதிர்பார்க்கவில்லை, தான் பெற்ற பிள்ளைகளே தன் முடிவை வன்மையாக எதிர்ப்பார்கள் என்று.

    “எங்களையும் ஒரு வார்த்தை கேக்கணும்னு ஒங்களுக்குத் தோணலியா? ஒரு பொண்ணுக்குக் கல்யாணம் ஆவறதே பெரும் பாடு. ஜாதி, ஜாதகம், சீருன்னு ஆயிரம் பிடுங்கல்! நம்ப மாப்பிள்ளைக்கோ நல்ல வேலை! பாக்கவும் லட்சணமா இருக்காரு!” என்று மூத்த மகன் இன்னொரு ஆண்மகனுக்குப் பரிந்து பேசியபோது, பொன்னம்மாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. தன்னை ஒருவன், அதிலும் தன் வயிற்றில் பிறந்த மகன், தட்டிக் கேட்பதாவது!

    “அழகும், பணமும் இருந்தா மட்டும் ஒருத்தன் ஆம்பளையாகிட முடியுமா?” என்று விரசமாகக் கத்தினாள். தங்கள் குடும்பத்துடன் இருந்த உறவை முறித்துக்கொண்டு பெற்ற பிள்ளைகளே போனபோதும் கலங்கவில்லை.`என் மகளுக்கு படிப்பிருக்கு. சுயமா நிக்கற தெம்பிருக்கு!’ என்று திமிராகச் சொல்லிவந்தாள்.

    பார்வதியும் அதை நம்பினாள். ஆனால், இடையில் எதுவும் நடக்காததுபோல, பழையபடியே வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, தான் எதையோ இழந்துவிட்டது போன்றதொரு வெறுமை ஏற்பட்டது அவளுக்கு.

    தன்னையொத்த பெண்கள் கணவன்மாரோடு உரசியபடி நடப்பதைப் பார்க்கும்போதும், தாம் பெற்ற குழந்தைகளைக் கொஞ்சுவதைப் பார்க்கும்போதும் அவளுக்குத் தன்மேலேயே பரிதாபம் மிகும். எல்லாருக்கும் சர்வசாதாரணமாகக் கிடைக்கும் இன்பங்கள் தனக்கு மட்டும் ஏன் அரிதாகப் போய்விட்டன?

    உலகத்தைச் சரிவரப் புரிந்து கொண்டிருக்காத வயதில் அம்மா சொற்படி கேட்டு நடந்தது தவறோ?

    இந்த அப்பாதான் ஆகட்டும், குடும்பத் தலைவராய் லட்சணமாய், யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்கக் கூடாதா!

    `என்ன முடிவு?’ என்று உடனே விரக்தி எழும்.

    கணவருடன் சேர்ந்து இருந்திருந்தால், உலகை வேண்டுமானால் ஏமாற்றி இருக்கலாம். ஆனால், தனக்குள் பொங்கிப் பொங்கி எழுந்த அவமான உணர்ச்சியையும், விரக தாபத்தையும் எப்படி சகித்து இருக்க முடியும்!

    ஆரம்பத்தில் அனுசரணையாக இருந்த அம்மாகூட, தெரிந்தவர்களும், உறவினர்களும் காட்டிய பராமுகத்தால் மாறிப்போனாள். `துக்கிரி! எந்த வேளையில் பிறந்திச்சோ! இதுக்கு ஒரு நல்லது செய்யப்போய், எனக்கு யாருமே இல்லாம போயிட்டாங்க!’ என்று மகளைக் கரிக்க ஆரம்பித்தாள்.

    இப்படி ஒரு அம்மாவுடன் காலமெல்லாம் எப்படித் தள்ளப் போகிறோம் என்ற மலைப்பு எழுந்தது பார்வதிக்கு.

    ஆயிற்று, இப்போதே முப்பத்தி இரண்டு வயதாகிவிட்டது. இன்னும் இப்படியே இருபது இல்லை, முப்பது வருடங்கள் தள்ளிவிட்டு.. நினைக்கும்போதே அயர்ச்சியாக இருந்தது.

    வயிற்றுப்பாடு ஒரு பிரச்னையாக இல்லைதான். ஆனால், தனிமை?

    படைத்தவன் மனிதர்களுக்குத் துன்பத்தைத் தருவதே அவர்களைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளத்தானாம். பார்வதி அடிக்கடி கோயிலுக்குப் போக ஆரம்பித்தாள். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கோயில்.

    அங்கெல்லாம் அம்மாவின் ஓயாத புலம்பலைக் கேட்காமல் இருப்பதே நிம்மதியாக இருந்தது.

    அன்று கோலாலும்பூர், ஈப்போ ரோடிலிருந்த தண்டாயுதபாணி கோயிலுக்கு வந்திருந்தாள். சிறுவயதில் அண்ணன்மார்களுடன் ஓடிப் பிடித்து விளையாடிய மகிழமரம் ஒரு சிறு நெகிழ்ச்சியை உண்டடுபண்ணியது. ஆலமரத்தடியில் அக்கடா என்று இருந்த பிள்ளையார் இப்போது ஒரு சிறு கோயிலுக்குள். கலை, இந்து மத சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடக்கும் பெரிய `செட்டியார் ஹால்’.

    அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த முருகனைப் பிரார்த்தித்துவிட்டு, பிரதட்சணம் செய்யப்போனாள். நீண்ட உட்பிராகாரம், வெளிப் பிராகாரம் இரண்டின் தரையிலும் சலவைக்கல் பதிக்கப்பட்டு இருந்தது.

    “பாப்பா! ஓடாதே!”

    எங்கோ கேட்ட குரலாக இருக்கவே, திரும்பினாள்.

    அவளைப் பார்த்துச் சற்றே துணுக்குற்றவன், “நல்லா இருக்கீங்களா?” என்று விசாரித்தான், உபசாரமாக.

    இனியும் தன் மனைவியாக இல்லாதவளை ஒருமையில் விளிப்பது மரியாதை இல்லை என்ற அவனது பண்பு பார்வதியை என்னவோ செய்தது.

    “ம்!” என்றாள் முனகலாக. அவள் பார்வை எல்லாம் கிருஷ்ணனின் பிடியிலிருந்து திமிற முயற்சித்துக் கொண்டிருந்த குழந்தையிடமே பதிந்து இருந்தது.

    “என் பெண்!” அவன் குரலில் எக்காளம் இல்லை. சாதாரணமாகத்தான் சொன்னான். ஆனால், அது அவளுடைய கன்னத்தில் அறைந்ததுபோல் இருந்தது.

    `தீர யோசியாது, விளக்கம் தர எனக்கொரு சந்தர்ப்பமே அளிக்காது, பலபேர் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தினாயே!’ என்று கூறாமல் கூறுகிறாரோ?

    “அத்தை..ம்.. ஒங்கம்மா நல்லா இருக்காங்களா?” பேச்சை மாற்றினாள்.

    “கேசில தீர்ப்புச் சொன்னதுமே அம்மா இருதய நோயாளியா ஆகிட்டாங்க. அவங்க போய் பத்து வருஷமாயிடுச்சு!”

    எதையோ சொல்லலாமா, வேண்டாமா என்று தயங்கியவனாய், முன்னாள் மனைவியையே பார்த்தான் கிருஷ்ணன்.  பின், ஒரு முடிவுக்கு வந்தவனாக, வேகமாகப் பேசினான்: “இப்ப நினைச்சா, அதிசயமா இருக்கு — இருபத்து நாலு வயசிலே நான்தான் எவ்வளவு ஜடமா இருந்திருக்கேன்! அப்பாவைத்தான் தெரியுமே! சினிமாப் பாட்டே வீட்டிலே கேக்கக்கூடாது, ஆண்-பெண் விவகாரம் எல்லாம் வாய்விட்டுப் பேசற விஷயம் இல்லே, அப்படி, இப்படின்னு ஏகக் கண்டிப்பு! பதினஞ்சு வயசில, நான் ஒரு பொம்பளை படம் வரைஞ்சதுக்காக கையை மடக்கச் சொல்லி, இரும்புத் தடியால போட்டிருக்காரு பாரு, ஸாரி, பாருங்க!”

    `உரிமையுடன், ஒருமையில் பேசுங்களேன்!’ என்று கதறவேண்டும்போல இருந்தது பார்வதிக்கு.

    “அம்மாதான் ரொம்ப அழுதாங்க. `எனக்கு இப்படி ஒரு கொறைன்னு நீ சொல்லவே இல்லியேடா! வீணாலும் ஒரு கல்யாணத்தைச் செஞ்சுவெச்சு, அந்தப் பொண்ணோட பாவத்தைக் கொட்டிக்கிட்டோமே!’ன்னு!

    தாயின் நினைவில் சற்று நேரம் மௌனித்திருந்தவன், தொடர்ந்து பேசினான். “ரொம்ப ஒருஷம் சிகிச்சை குடுத்தாங்க எனக்கு. ஒடம்பு, மனசு எல்லாத்துக்கும்தான். நான் ஆம்பளைதான்னு உறுதியானதும், உன்கிட்ட ஓடி வந்து அதைச் சொல்லணும்போல இருந்திச்சு. நீதான் அந்த சந்தோஷத்தை என்கூட பங்கிட்டுக் கொள்ளணும்னு ஒரு வெறி. ஆனா, அதே சமயத்திலே தயக்கமாவும் இருந்திச்சு!”

    எப்பேற்பட்ட இழப்பு அவளுடையது! எங்கே அவனெதிரே அழுதுவிடப் போகிறோமோ என்று பயந்தவளாக, “இருட்டப் போகுது. போகணும்,” என்று முணுமுணுத்தாள் பார்வதி.

    “வா பாப்பா!” என்றபடி, கிருஷ்ணன் நடக்க, அடக்க முடியாது கேட்டாள் பார்வதி. “இவங்கம்மா வரலியா?”

    திரும்பியவன், ஒரு வரட்சியான சிரிப்பை உதிர்த்தான். “எனக்குப் பொண்டாட்டி ராசி இல்ல போலிருக்கு. இந்தக் குழந்தையைப் பெத்துப் போட்டுட்டு, இவங்கம்மாவும் போயிட்டாங்க. அதாவது, செத்துப் போயிட்டாங்க!”

    `உன்னை மாதிரி, உயிரோடேயே கொண்டவனை நிர்க்கதியாக விடவில்லை!’ என்று அவன் மறைமுகமாக பழிப்பதாக எடுத்துக்கொண்டு, குன்றிப்போனாள் பார்வதி.

    `வீட்டுக்கு வாங்க,’ என்று அவனை அழைக்க ஆசையாக இருந்தது. ஆனால், எந்த முகத்துடன் அழைப்பது?

    “யாருப்பா இது?” என்ற குழந்தையின் கேள்விக்கு, “ரொம்ப வருஷத்துக்கு முந்தி எனக்குத் தெரிஞ்சவங்கம்மா,” என்று மாஜி கணவன் அளித்த விடையிலேயே அவன் அவளைவிட்டுத் தொலைதூரம் சென்றுவிட்டது தெரிந்தது.

    Share
  • பூ மரம்கூட புது தினுசுதான்

    நிர்மலா ராகவன்

     

    விமானத்தில் தனது இருக்கையைத் தேடியபடி, மேலே இருந்த எண்களைப் பார்த்தபடி நடந்தாள் சுபத்ரா.

    அவள் ஒருவழியாக அமர்ந்ததும், பக்கத்திலிருந்தவர் புன்னகையுடன் அவளை வரவேற்றார்.

    “ஸ்டேட்ஸுக்கா?” அனாவசியமாகக் கேட்டாள். கோலாலம்பூரில் புறப்பட்டால், அந்த மாஸ் விமானம் அங்குதான் போகிறது — வழியில் ஒரு மணி நேரம் துபாயில் நிற்பதைச் சேர்க்காவிட்டால்.

    தலையை ஆட்டினார் அந்த இளைஞர்.

    “நானும்தான்!” என்றாள் பெருமையுடன். “ என் பெண் — ஒரே பெண்தான் எனக்கு — அங்கே போய் பத்து வருஷமாச்சு…,“ முதன்முறை விமானப் பயணம் என்பதால் உண்டான படபடப்புடன் மூச்சு விடாமல் பேசினாள் சுபத்ரா.

    ஏதோ, மரியாதைக்குச் சிரித்துவைத்தால், வரப் போகும் இருபது மணி நேரத்திற்குமேல் இவள் பேசித் துளைத்து விடுவாளோ என்ற பயம் எழுந்ததோ, என்னவோ, அவள் பக்கம் திரும்பாது, முன்னிருக்கையின் பின்பகுதியிலிருந்த பையைத் துழாவி, விமானத் தொலைகாட்சியைப் பற்றிய விவரங்கள் அடங்கிய குறிப்பேட்டை எடுத்து முகத்துக்கு நேராகப் பிடித்துக்கொண்டார் சகபயணி.

    சுபத்ரா கைப்பைக்குள் எதையோ தேடி எடுத்தாள். வெளிர் நீலக் காகிதம் — விமானத் தபாலில் வந்த வேற்று நாட்டுக் கடிதம் என்பதைப் பறைசாற்றியது. இரண்டே வாக்கியங்கள் தாம்:

    அன்புள்ள  அம்மா,

    இத்துடன் ஒரு டிக்கட் அனுப்பி இருக்கிறேன். முதலில் விசா எடுத்துக் கொள்ளவும்.

    சாரு

    பத்து வருடங்களாக அவள் எங்கே, எப்படி இருக்கிறாள் என்பதுகூடத் தெரியாது. தான் தவித்த தவிப்பு மகளுக்குப் புரிந்திருக்குமா? எல்லாவற்றிற்கும் பிராயச்சித்தமாகத்தான் இப்போது — தாயின் கடைசிக் காலத்தில் — அவளைத் தன்னுடன் வைத்துக்கொள்ளத் தோன்றியிருக்க வேண்டும்.

    கடந்து போனதை நினைக்கும்போது, கோபமோ, வருத்தமோ எழவில்லை. எத்தனையோ அழுதாகிவிட்டது. மனம் மரத்துப் போயிருந்தது. என்ன நடக்கும், ஏன் நடந்தது என்பதே புரியாததுதான் வாழ்க்கை. எல்லாவற்றிற்கும் அர்த்தம் தேடிக் கொண்டிருந்தால், அமைதி கெடுவதுதான் மிச்சம். மாற்ற முடியாததை ஏற்பதுதான் விவேகம். ஐம்பது வருட வாழ்க்கை அவளுக்குக் கற்றுக் கொடுத்திருந்த பாடம் அது.

    கைக்குழந்தையுடன் பூவிழந்து நின்றிருந்தவளைத் தன்னுடன் சிற்றூரில் வைத்துக்கொண்டால், அவள் சமூகத்தின் வாயினாலேயே சிறுகச் சிறுகச் சாகடிக்கப் படுவாள் என்று புரிந்துகொண்டிருந்த தந்தை செய்த உபகாரம் அவளை நகர்ப்புறத்தில் இருந்த ஹாஸ்டலில் சேர்த்து, மேற்படிப்பு படிக்கவைத்தது. உத்தியோகம் கிடைத்து, ஒரு வாடகை வீட்டில் குடிபுகுந்தாள். வயிற்றுப்பாட்டைச் சமாளிக்க முடிந்தது. ஆனால், இருபத்து இரண்டே வயதாகி இருந்தவளின் உணர்வுகளால், `உன்னை அனுபவிக்க கணவன் இல்லை. எல்லா ஆசாபாசங்களையும் துறந்துவிட்டு, கருமத்திலேயே கண்ணாக இருந்து, போகிற வழிக்குப் புண்ணியம் தேடிக்கொள்!’ என்னும் எழுதப்படாத நிர்ப்பந்தத்தை ஏற்கத்தான் முடியவில்லை.

    அவளுடைய வீட்டின் ஓர் அறையில் குடியிருந்தான் அவன். “நீங்க வீட்டு வேலை செய்யறப்போ, பாப்பாவை நான் பாத்துக்கிறேன்! ரொம்ப திண்டாடறீங்களே! எனக்கும் பொழுது போன மாதிரி இருக்கும்!” என்று வலிய வந்து நட்பு கொண்டபோது, அவனைத் தவறாக நினைக்கத் தோன்றவில்லை. தனியாளாக இருக்கிறான், பாவம்! அதுதான் பிறருடைய ஆதரவு வேண்டியிருக்கிறது என்றுதான் எண்ணினாள்.

    “சாருக்குட்டி ஒங்க சாயல் இல்லீங்க. அவங்கப்பா மாதிரியோ?” என்பான் கலகலப்பாக.

    `அவருடைய முகம்கூட எனக்குச் சரியாக நினைவில்லை!’ என்று சொல்லவா முடியும்!

    “குழந்தைக்கு உடம்பு இப்படி கொதிக்குதே! இனிமே டாக்ஸி பிடிச்சு, டாக்டர்கிட்ட போக நேரமாகிடும். வாங்க! என் பைக்கில போகலாம். அட, ஆபத்துக்குப் பாவமில்லீங்க!” அவனுடைய வற்புறுத்தலில் அவளுடைய தயக்கம் சிறிது குறைந்தாலும், அவன் தோளில் ஒரு கை பதிக்கையில் சுபத்ராவின் உடல் லேசாக அதிர்ந்தது.

    “குழந்தைக்கு டிப்தீரியா. கொஞ்சம் தாமதமா வந்திருந்தா..,” என்று டாக்டர் பயமுறுத்தியபோது, ஆபத்பாந்தவனாக  வந்த அவன்மேல் நன்றி சுரந்தது. தனக்கு நெருங்கியவன் என்று தோன்றிப் போயிற்று.

    அதை உணர்ந்தவனாக அவனும், “இந்தக் காலத்திலே யாராவது ஒங்கமாதிரி எப்பவும் வெள்ளைப் புடவையே கட்டுவாங்களா? அப்படி என்ன வயசாகிடுச்சு ஒங்களுக்கு, ஒலகத்தையே துறக்க?” என்று உரிமையுடன் கோபித்தான்.

    பல வருடங்களுக்குப்பின், முதன்முதலாக நீலவண்ணப் புடவை அணிந்தபோது, பயமும் வருத்தமும் மகிழ்வும் கலந்து வந்தன. பட்ட மரம் புத்துயிர் பெற்றது போலிருந்தது.

    எங்கோ புறப்பட்டுக் கொண்டிருந்தவன், அவளைக் கண்டதும், விழிகள் விரிய நின்றான். “நீங்களா! யாரோன்னு நினைச்சேன்!”

    சுபத்ராவுக்குப் பெருமையும், வெட்கமுமாக இருந்தது.

    மறுநாள் அவள் வேலைக்குப் புறப்பட்டபோது, “வாங்களேன்! நானே கொண்டு விடறேன்,” என்று அவன் அழைத்தபோது, ஏனோ மனம் துள்ளியது. அவனுடைய குட்டையான, குண்டு உடலுக்கு அப்பால் இருந்த எதுவோ அவளை அவன்பால் ஈர்த்தது.

    `பஸ்ஸில் கும்பலில் இடிபட்டுக்கொண்டு, பலரும் உரசப் போகும் கண்ராவிக்கு இது தேவலை!’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டாள்.  அவளது கை தோளில் பதிந்தபோது, திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தான் அவன்.

    அவர்கள் உறவில் எப்போது, எப்படி நெருக்கம் ஏற்பட்டது என்றெல்லாம் அவள் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. அவளது மனக்குமுறலை வாய்திறவாது கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, இறுதியில் ஆதரவுடன் அவன் ஏதாவது சொல்வதைக் கேட்கும்போது, வாழ்க்கை அவ்வளவு தனிமையாக, வறண்டதாக இல்லை.

    அவனுடைய அணைப்பில் படுத்திருக்கும்போது எழுந்த குற்ற உணர்ச்சி கோபமாக மாறியது. தன்னை இப்படி நிராதரவாக விட்டுப்போனது அகாலமாக மறைந்த கணவனின் குற்றம்.

    விவரம் தெரிந்த நாளாய், ஒரு பெண் தனியாக வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்று, ஒப்புக்கு தம்பியையாவது துணைக்கு அனுப்பிய தாயின் குற்றம்.

    `ஆண்கள் சாப்பிட்டபின்தான் பெண்கள் சாப்பிடலாம்; ஆண்கள் பேசும்போது குறுக்கே பேசக்கூடாது; அவர்கள் செய்வது தப்பாகத் தோன்றினாலும், அதை வெளிப்படையாகச் சொல்லிவிடக் கூடாது; ஆண்கள் பிற பெண்களை மட்டம் தட்டினால், அதை ஆமோதிப்பதுபோல் சிரித்துவைக்க வேண்டும்’ — இவ்வாறு சிறு சிறு வழிகளில் தம்மையும் அறியாது, `ஆண்களைச் சார்ந்து நிற்க வேண்டும்’ என்று கற்கிறார்கள் பெண்கள். வெள்ளை ஆடையும் விபூதியும் அணிந்தால் மட்டும் ஆசாபாசங்கள் ஒழிந்து விடுமா?

    தன்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது, அனுசரணையாக இருந்தவனின் உறவு சுபத்ராவுக்கு வேண்டியிருந்தது. இதனால் மற்றுமொரு நெருங்கிய உறவு துண்டித்து விடலாம் என்பதை அவள் நினைத்துப் பார்க்கவுமில்லை.

    விவரம் புரிந்ததும், மகள் சாரு அவனோடு தாயையும் தவிர்த்தாள்.

    “நான் அமெரிக்கா போறேன், அடுத்த வாரம்!”

    `நீயுமா என்னைத் தனியாக விட்டுப் போகப் போகிறாய்?’ என்று கேட்க நினைத்த சுபத்ரா, “எதுக்கு சாரு?” என்று ஆழ்ந்த வருத்தத்துடன் கேட்டாள்.

    “என்னால தாங்க முடியலேம்மா. இந்தக் கண்ராவியைப் பாக்கக் கூடாதுன்னுதான் அப்பா போயிட்டார்,” என்று பொருமினாள்.

    எதையும் பதிலாக அளிக்க முடியாமல், அத்தாயால் அழத்தான் முடிந்தது. கணவர் இருந்திருந்தால், அவள் ஏன் இப்படி இழிந்து போயிருக்கப்போகிறாள்!

    அழுகையினூடே வாதமும் சமாதானமும் செய்துகொண்டாள். சாருவுக்கு இன்னும் விவரம் புரியவில்லை. தாயைப்போல் தானும் சமுதாயம் பழிக்கும் வண்ணம் நெறி தவறி நடந்து விடுவோமோ என்ற பயம் இந்தப் பருவத்தில் ஏற்படுவது சகஜம்தான். தானே நாலு இடங்களுக்குப் போய், பலதரப்பட்ட மனிதர்களோடு பழகினால், அப்போது புரியும் — தான் செய்யாத குற்றத்துக்கு எவ்வளவு துன்பம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது ஒரு தமிழ்ப் பெண் என்று!

    யாரோ தோளில் தட்ட, நினைவுலகத்துக்கு மீண்டாள் சுபத்ரா. “விரைவில் உங்கள் உணவு வருகிறது. தயவு செய்து நேராக உட்காருங்கள்!” பெண்மையின் வளைவுகளை ரசனையுடன் வெளிப்படுத்திக் கொண்டிருந்த, உடலை ஒட்டிய பாத்தேக் உடை, மாறாத புன்முறுவலுடன் நின்றிருந்தாள் விமான பணிப்பெண். `அது எப்படி சிலருக்கு எப்போதும் சிரித்த முகமாக இருக்க முடிகிறது? அவர்களுக்கெல்லாம் துயரமே கிடையாதோ?’ என்று யோசித்தாள் சுபத்ரா.

    உப்பு சப்பில்லாத சாப்பாட்டை விழுங்கி வைத்தாலும், உட்கார்ந்த நிலையில் தூங்குவது எளிதாக இல்லை. விட்ட இடத்திலிருந்து நினைவுகள் நீண்டன.

    சாரு போன மறு ஆண்டிலேயே, “வீட்டிலே எனக்கு கல்யாணம் நிச்சயிச்சு இருக்காங்க,” என்று சுவற்றைப் பார்த்தபடி கூறிவிட்டு, அவள் திகைப்பைக் கவனியாதவன்போல, அறையைக் காலி செய்துகொண்டு போனான் அவன். நாற்பது வயதுக்காரியுடன் இனியும் என்ன சல்லாபம் என்று நினைத்தானோ!

    அவனைத் தட்டிக் கேட்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது? தாலி கட்டியவளாக இருந்தால், இப்படி எளிதாக உதறிவிட்டுப் போக முடிந்திருக்குமா?

    என்னுடைய இளமையையும், தனிமையையும் அவனுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு…ஹூம்! நடந்ததற்கு அவன் மட்டுமா குற்றவாளி?

    அடுத்தடுத்து வந்த வருடங்கள் கசப்பிலும் சுயநிந்தனையிலும் கரைந்தன. சாருவின் கடிதம் அதை மாற்றியது. இனி வரப்போவது புதிய, இனிமையான வாழ்வு.

    உற்சாகத்துடன் பாத்ரூமில் தலை வாரி, அங்கே வைக்கப்பட்டிருந்த லோஷனை வறண்டிருந்த முகத்தில் பூசிக்கொண்டாள் சுபத்ரா.

    ஒரு நாள் பொழுதுக்கும் மேலாக விமானம் விண்வெளியில் பறந்தபோது அமைதியாக உட்கார்ந்திருந்த பயணிகள், அது தரையைத் தொட்டதும் அதற்கு மேலும் பொறுக்காதவர்களாக, நெருக்கியடித்து அதன் வாசலுக்கு வந்தார்கள்.

    கூட்டத்தைப் பின் தொடர்ந்தாள் சுபத்ரா. சுங்கப் பரிசோதனை முடிந்து, வெளித்தளத்திற்கு வந்தாள். தெரிந்த மொழிதான். ஆனாலும், பேசும் விதத்தில் மாறுபட்டு, வேற்றுமொழியாகக் கேட்டது. எல்லாருமே எதையோ பிடிக்க ஓடுவதுபோல் தோன்றியது.

    `இந்தக் கும்பலில் சாருவை எப்படித் தேடுவது?’ என்ற அச்சம் எழுந்தபோதே, இரு கைகள் அவளைப் பின்னாலிருந்து அணைத்துக் கொண்டன. “அம்..மா!” தொனி மேலிருந்து கீழே இறங்கிற்று, கொஞ்சலாக.

    யார், சாருவா இது?!

    ஒரு உபசாரத்திற்குக்கூட சிரிக்கத் தோன்றாது, தாய்மைப் பூரிப்புடன் இருந்த மகளின் உருவத்தையே விறைத்துப் பார்த்தாள் சுபத்ரா.

    “எப்போ கல்யாணம் ஆச்சு?” ஏக்கமாகக் கேட்டாள். `இதைக்கூட எனக்குத் தெரிவிக்காமல் இருந்துவிட்டாய், பார்த்தாயா?’ என்ற குற்றச்சாட்டு அதில் தொக்கி இருந்தது.

    “ஆகலே!” மகள் புன்னகைத்தாள். தாயின் திகைப்பைக் கண்டு சிரித்தாள்.

    “இங்கே அப்படித்தாம்மா. ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்தா, சேர்ந்திருக்கலாம். கல்யாணம் செய்துக்கிட்டு, அப்புறம் சண்டை பிடிச்சுக்கிட்டு, டைவோர்ஸ், அது, இதுன்னு திண்டாடறது பெரிய முட்டாள்தனம். மனக்கசப்பு ஏற்பட்டா, சுமுகமா பிரிஞ்சு, ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம். மனசுக்குப் பிடிச்சவரா, இன்னொருத்தர் கிடைக்காமலா போயிடுவார்?”

    “குழந்தை?”

    “மூணு வருஷம் சேர்ந்திருந்தா, கூட இருக்கிற பார்ட்னர்தான் அதோட அப்பா”.

    அவளையும் அறியாமல், சுபத்ராவின் நினைவில் அவன் வந்து போனான்.

    “ரொம்ப முன்னேற்றமான நாடும்மா இது. நீங்க இனிமே இங்கேயே இருக்கலாம். அங்கே சமைக்கிறதை இங்கே சமைச்சுட்டுப் போங்களேன்! பேரனைக் கொஞ்சிய மாதிரியும் இருக்கும்.” நைச்சியமாகப் பேசினாள் சாரு.  “இங்கே பச்சைக் குழந்தையை யார்கிட்டேயாவது விட்டுட்டு, வேலை முடிஞ்சபிறகு ராத்திரி அழைச்சிட்டு வரணும். ஏகப்பட்ட செலவு, அலைச்சல்!”

    சுபத்ராவின் உற்சாகம் மறைந்தது. தாய்மீது உள்ள பாசத்தால் தன்னை நாடு விட்டு நாடு வரவழைக்கவில்லை இவள். பிறக்கப் போகும் குழந்தைக்கு சம்பளம் இல்லாத வேலைக்காரி, ஆயா நான்!

    “என்னம்மா, பேச்சே காணோம்?”

    வெளியில் பார்வையை ஓடவிட்டு, “இங்கே எல்லாமே — பூ, மரம்கூட — நான் இதுவரைக்கும் பாக்காத தினுசா இருக்கு!” என்று பெருமூச்செறிந்தாள் சுபத்ரா.

    Share
  • அரிசிச் சோறு!..

    நிர்மலா ராகவன்

    அம்மா அழைத்தது தனலட்சுமியின் செவிகளில் விழவில்லை. அவ்வளவு தூரம் தொலைகாட்சியில் மூழ்கியிருந்தாள்.

    “சாப்பிட வா, தனம்!” மீண்டும் அம்மா அழைத்தாள், சற்று உரக்க.

    இப்போது தனலட்சுமிக்குக் கேட்டது. ஆனாலும், காதில் விழாததுபோல் நடித்தாள்.

    `எப்போதும் அரிசிச் சோறுதான். ஒரு சப்பாத்தி, பூரி என்று ஏதாவது மாறுதல் உண்டா? கேட்டால், தோள்வலி என்பார்கள் இந்த அம்மா!` என்று க்குள் அலுத்துக்கொண்டாள்.

    சமையலறையிலிருந்து அம்மா வெளிப்பட்டாள். சாய்வு நாற்காலியில், சரிந்து விழாதகுறையாக அமர்ந்துகொண்டிருந்த மகளைப் பார்த்ததும் ஆத்திரம் உண்டாயிற்று. அந்த நாற்காலி தனலட்சுமியின் தாத்தாவுடையது. அவர் போய்விட்டார். ஆனால், நாற்காலி இருந்தது, தனலட்சுமியின் ஏகபோக உரிமையாக.

    “கரடியாகக் கத்தினேனே! காது செவிடாகிவிட்டதா?” என்று இரைந்தாள்.

    “எனக்குப் பசிக்கவில்லை,” என்றாள் மகள், தாயின் முகத்தைப் பாராமலேயே.

    அவள் மறுத்த காரணம் அம்மாவுக்கும் தெரியும். வருத்தத்துடன் உள்ளே சென்றாள்.

    திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து பிறந்த மகள் என்று அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்ததன் விளைவு.

    பெரியவர்களின் பேச்சை அச்சிறுமி கேட்பதற்குப் பதில், அவள் போக்கிற்கு விடவேண்டியதாகி விட்டது.

    தன் வயதொத்தவர்களையும் அதிகாரம் செய்ததால், அவளுடன் யாரும் பழகப் பிரியப்படவில்லை. தமது வேலை முடிந்து, சீருடை அணிந்த அப்பா விடு திரும்பினார். மகிழுந்து ஓட்டும் உத்தியோகம் அவருக்கு.

    “சாப்பிட்டு விட்டாயா, தனம்?” என்றார் அன்புடன்.

    “உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன், அப்பா!” இன்னொரு பொய்.

    சாப்பிடும்போது, “உன்னைப் பார்த்தால், பதினோறு வயதுப் பெண் மாதிரியாகவா இருக்கிறது! ஒரே ஆண்டு நிறைந்த குழந்தைகூட உன்னைவிட அதிகமாகச் சாப்பிடும். அது போகட்டும், ஒரு நாளைக்கு எட்டு கோப்பை தண்ணீராவது பருக வேண்டுமாம். பலமுறை சொல்லி இருக்கிறேனே! அதையாவது செய்கிறாயா?” என்றார் சற்றுக் கடுமையாக.

    தனலட்சுமி தன்னுடைய ஆயுதத்தை வீசினாள்.

    தந்தையைப் பார்த்து வசீகரமாகச் சிரித்தாள். தலையை ஆட்டிவைத்தாள். அவ்வளவுதான். அவர் மனம் இளகிவிட்டது. இடது கையால் அவளுடைய முதுகை வருடினார்.

    “நாளையிலிருந்து ஒரு வாரம் பள்ளி விடுமுறைதானே! உன்னை வெளியூர் அழைத்துப் போகப் போகிறேன்,” என்று அப்பா ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார்.

    அவள் ஓயாமல் தொலைகாட்சி பார்த்ததால், சிறு வயதிலேயே மூக்குக்கண்ணாடி அணிய வேண்டி வந்துவிட்டது. காற்றோட்டமான வெளியில் ஓடி விளையாடாததாலும் கண் கெடும் என்று கண் மருத்துவர் கூறியிருந்தார். நேராக அமராது, சாய்ந்தே உட்காருவது பழக்கமாகிவிட்டதால், முதுகுவேறு கூனியிருந்தது. எல்லாவற்றையும் யோசித்துதான் அப்பா அந்த முடிவை எடுத்திருந்தார்.

    “இப்பொழுது எதற்கு அநாவசியமான செலவு?” என்று அம்மா ஆட்சேபித்தாள்.

    சற்றே பயந்து, “அம்மாவையும் அழைத்துப் போகலாம் அப்பா!” என்று சிபாரிசு செய்தாள் தனலட்சுமி.
    அப்பா சிரித்தார்.

    கடந்த முறை பினாங்கிற்குச் சென்றபோது, புதிய சட்டை, வளையல், மாலை எல்லாம் வாங்கிக் கொடுத்தாரே, அப்பா! இம்முறையும் ஏதாவது வாங்காமலா போய்விடுவார் என்றெல்லாம் இரவு நெடுநேரம்வரை, இதழ்கள் புன்னகையால் விரிய, யோசித்துக் கொண்டிருந்தாலும், மறுநாள் அதிகாலையிலேயே எழுந்திருந்தாள் தனலட்சுமி.

    வழக்கம்போல் அவளை எழுப்ப வந்த அம்மாவிற்கு அதிசயமாக இருந்தது.

    “காலை வணக்கம், அம்மா!” என்று தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கொஞ்சினாள் மகள். வெளியூர் போனால், பள்ளிக்கூடம் போக வேண்டியதில்லை. அதனால் வீட்டுப் பாடமும் கிடையாது. அது மட்டுமா, `வெங்காயம் அரிந்து கொடு, சிறிய பாத்திரங்களைக் கழுவு,` என்று அம்மா வேலை ஏவ மாட்டார்கள். ஏனெனில், சாப்பாடு எல்லாம் கடைகளில்தானே!

    பினாங்கைத் தாண்டிப் போனார்கள். தனலட்சுமிக்கு ஆர்வம் தாங்கவில்லை.

    அவள் கேளாத கேள்விக்கு அப்பா பதிலளித்தார். “நம் நாட்டின் வடக்குக்கோடியில் இருக்கும் மாநிலத்தை நீ பார்த்ததே இல்லையே!”

    “கெடாவா!” வாயைப் பிளந்தாள் மகள்.

    வழியெங்கிலும் பசுமையான வயல்கள். “கொஞ்சம் நிறுத்துகிறீர்களா அப்பா?” என்று கெஞ்சலும், கொஞ்சலுமாகக் கேட்டாள் தனலட்சுமி.

    மறு பேச்சின்றி, அவள் சொல்படி நடந்தார் அப்பா.

    “அம்மா! வயலில் அந்த தாத்தா என்னம்மா செய்துகொண்டிருக்கிறார்?”

    இதற்கு அப்பாவே பதிலளித்தார். “நீயே போய் கேளு, தனம்!”

    அவள் தயங்கியதும், தானும் இறங்கினார்.

    வயலில் கணுக்காலுக்குமேல் இருந்த நீரில் ஒரு முதியவர் நின்றிருந்தார். அவரது இடக்கையில் கத்தை கத்தையாக ஏதோ பயிர். ஓரடி உயரம் இருக்கலாம் என்று ஊகித்தாள் தனலட்சுமி. முதலில் அவருக்கு வணக்கம் தெரிவித்தாள். பள்ளியில் கற்ற நற்பழக்கம் அது. “இது என்ன செடி, தாத்தா?” என்று கேட்ட சிறுமியைப் பார்த்துச் சிரித்தார் அவர்.
    “நீ தினமும் சாப்பிடுகிற சோறு எதிலேயிருந்து வருகிறது?” என்று எதிர்க் கேள்வி கேட்டார்.
    தனலட்சுமிக்குப் புரிந்தது. “ஓ! நெற்பயிரா?”

    “ஆமாம். நான் நாற்று நடுகிறேன்,” என்றபடி, ஒரு சிறிய கத்தையை அப்படியே நீரில் வைத்தார். அது சாயாமல், அல்லது ஓடாமல் அதே இடத்தில் நின்றது தனலட்சுமிக்கு ஆச்சரியத்தை விளைவித்தது.

    “நம் நாட்டில வெப்பம் அதிகம். இல்லையா? அதனால் அரிசிச் சோறுதான் உகந்தது. அதிக சக்தி கொடுக்கும்,” என்று அன்புடன் விளக்கியவரிடம், “சப்பாத்தி?” என்று வினவினாள்.

    முதியவர் சிரித்தார். “அது கோதுமைப் பண்டம். அதிலும் வெப்பம்தான். ஆகையால், குளிர்ச்சியான நாடுகளில் அதைச் சாப்பிடுவார்கள்”.

    திரும்பப் போகும் வழியில், “அந்த தாத்தாவின் முதுகு ஏன் அப்படி வளைந்திருக்கிறது?” என்று மெல்லக் கேட்டாள் தனலட்சுமி.

    “நீயும், நானும், நம்மைப் போன்ற பலரும் சாப்பிடுவதற்காக அவர் கடும் வெயிலில் எப்படி உழைக்கிறார், பார்! அதிக நேரம் குனிந்தே வேலை செய்வதால், முதுகுத் தண்டு வளைந்துவிட்டது,” என்று விளக்கினார்.

    “பாவம்!” என்ற தனலட்சுமிக்கு ஏதோ உறைத்தது. தன் முதுகும் வளைந்திருக்கிறது என்று ஆசிரியை தினமும் குறைகூறுகிறார். முதுகில் தட்டி, “நிமிர்,” என்று மிரட்டுகிறார். தான் அப்படி என்ன வேலை செய்து கிழிக்கிறோம்!

    வீடு திரும்பியதும், ஒரு கனமான புத்தகத்தைத் தலையில் வைத்துக்கொண்டு, நடந்து பழக வேண்டும். அது விழாமல் இருக்கவென நிமிர்ந்து நடந்தால், நாளடைவில் முதுகு நேராகிவிடும் என்று ஆசிரியை அறிவுறுத்தவில்லை?

    அன்றிரவும் வீட்டில் அம்மா அரிசிச் சோறுதான் சமைத்திருந்தாள்.

    சாப்பிடுகையில், வயலில் பார்த்த தாத்தாவின் முதுகே தனலட்சுமியின் நினைவில் நின்றது.

    ஒரு பருக்கைகூட விடாது உண்ட மகளை ஆச்சரியத்துடன் பார்த்தாள் தாய்.

    Share
  • வேண்டாம் இந்த அம்மா

    நிர்மலா ராகவன்    

    “டேய் பத்மா! இந்த ஒரு தடவையாவது எங்களோட வாடா!” நண்பர்கள் வற்புறுத்தினார்கள்.

    “அவன் வரமாட்டாண்டா. எந்தச் சனிக்கிழமைதான் நாம்ப கூப்பிட்டு அவன் வந்திருக்கான்?”

    பத்மராசனுக்கு அழுகைதான் வந்தது. அவர்களிடம் உண்மையைச் சொல்ல முடியுமா?

    அது ஏன் இவனுடைய அம்மா மட்டும் எல்லா அம்மாக்களையும்போல் இல்லை?

    பாலாவின் அம்மாவைப் பார்த்தால், யாரும் அவளுக்கு மீசை முளைத்துக்கொண்டிருக்கிற மகன் இருக்கிறான் என்றால் நம்பமாட்டார்கள். ஏன், ஒரு தடவை அவர்கள் நண்பர்களிலேயே சற்று தடியாக இருந்த அர்ஜூன் சொல்லவில்லை, `கூட்டாளியோட அம்மாவாப் போயிட்டாங்க! இல்லாட்டி, `சைட்’அடிச்சிருப்பேன்,’ என்று?

    இவன் மட்டும், அம்மா உயிரோடு இருந்தும், இறந்துவிட்ட அப்பாவோடேயே போய்விட்டதாக நினைவு தெரிந்த நாள்முதல் சொல்லித் தொலைக்க வேண்டிய நிலை.

    அட, அழகும், இளமையும் இல்லாவிட்டால்கூடப் பரவாயில்லை. இப்படி, பேச்செல்லாம் குளறிப்போய், கண்களில் சிறிதுகூட ஒளி இல்லாமல், ஆண்பிள்ளைபோல் குட்டை முடியுடன், முழங்கால்வரையே தொங்கும் கவுனைப் போட்டுக்கொண்டிருந்த அந்த உருவத்தை `அம்மா’ என்று ஏற்றுக்கொள்ளவே எவ்வளவு கடினமாக இருந்தது!

    அப்பா தவறிப்போனபோது அவனுக்கு ஒரு வயதுகூட நிரம்பவில்லையாம். அக்காதான் சொல்வாள். அவனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள் அம்மா. தெரு ஓரமாக நடந்துகொண்டிருந்த அப்பாமேல் போதையிலிருந்த பஸ் டிரைவர் தனது வாகனத்தை ஏற்ற, தலத்திலேயே அப்பாவின் உயிர் பிரிந்ததை காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கூறக் கேட்டு, கைக்குழந்தையை நழுவவிட்டு, பித்தான்கள் நீக்கப்பட்டு இருந்த ஜாக்கெட்டை புடவைத் தலைப்பால் மறைத்துக்கொள்ளும் பிரக்ஞைகூட இல்லாது, அலறியபடி வெளியே ஓடியவள்தான் அம்மா. அவளைக் கட்டுப்படுத்த முடியாது, சில மாதங்களுக்குள் தஞ்சோங் ரம்புத்தானிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டார்கள் தாத்தாவும், பாட்டியும்.

    கோலாலம்பூரின் வடக்குப் பகுதியில், பேராக் மாநிலத்தில் இருந்த தஞ்சோங் ரம்புத்தானில் 1911 ஆண்டே மனநிலை சரியாக இல்லாதவர்களுக்காகவென ஆஸ்பத்திரி துவங்கப்பட்டது.  அந்த இடத்தின் பெயரைக் கேட்டாலே, விவரம் புரியாத பலரும் கேலிச் சிரிப்பு சிரிப்பார்கள். `இவன் சரியான தஞ்சோங் ரம்புத்தான்!’ என்று சிறுவர்கள் ஒருவரையொருவர் சீண்டிக் கொள்வதுண்டு.

    இதெல்லாம் புரிந்து, வேறு ஊருக்கு மாறினார்கள். பாட்டி மட்டும் மாதம் தவறாது, அம்மாவைப்போய் பார்த்து வருவாள். அப்போதெல்லாம், “ராசா, ராசான்னு ஒம்மேல உசிரையே வெச்சிருந்தாளே, பாவி! இப்படி, தன் பேருகூடத் தெரியாம ஆகிட்டாளே!” என்று  புலம்புவாள். பத்மராசாவுக்குத் தர்மசங்கடமாக இருக்கும். எப்போதாவது அக்காவும் பாட்டிக்குத் துணையாகப் போவாள்.

    “நீ அம்மாவைப் பாத்ததே இல்லியே, பத்மா. எங்ககூட வாடா,” என்று அக்கா ஒருமுறை இழுத்துப்போனாள் அவனை.

    “நம்ப ராசா பாத்தியாம்மா? இப்ப பெரியவனா ஆகிட்டான், பாரு. ஸ்கூலுக்குப் போறான்ல!” வலிய வரவழைத்துக்கொண்ட உற்சாகத்துடன், பெற்றவளுக்கே மகனை அறிமுகப்படுத்தினாள், அக்கா.

    எங்கோ வெறித்தபடி உட்கார்ந்திருந்த அம்மா சட்டெனத் திரும்பினாள். விரைந்து வந்து அணைத்தாள். அவளுடைய பிடியின் இறுக்கத்தில் சிறுவன் மிரண்டு போனான். அம்மா முத்தமாரி பொழிய ஆரம்பித்ததும், அழ ஆரம்பித்தான்.

    அதைக் கவனிக்கும் மனநிலையில் அவள் இருக்கவில்லை. “ராசாக்குட்டி!  ராசாக்குட்டி!” வெறிபிடித்தவளாய் கத்தினாள். உபயோகமற்று இருந்த குரல் கரகரப்பாக இருந்தது.

    ஆனால், அடைந்து கிடந்த உணர்வுகள் வெளிப்பட்டதால், நாளடைவில் அவளுடைய நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. அம்மாவை வீட்டுக்கே திரும்ப அழைத்து வந்தார்கள்.

    கணவருடனேயே அவளுடைய புத்தி ஸ்வாதீனம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு விட்டது என்பது பிறகுதான் புரிந்தது. ஆடை அணிய மறுத்தாள். வாழ்நாள் பூராவும் மருந்து சாப்பிடவேண்டும் என்ற மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறினாள். `எனக்கு விஷம் கொடுத்து கொல்லப் பாக்கறீங்களா?’ என்று, கத்தியைக்  கையில் எடுத்துக்கொண்டு அவள் மிரட்ட, வேறு வழியின்றி, ஆஸ்பத்திரியிலேயே மீண்டும் கொண்டுவிட்டார்கள். அங்கு, உச்சந்தலையில் மின் அதிர்வு வைத்துச் சிகிச்சை அளித்து சாதுவாக்கிய அம்மாவை மீண்டும் வீட்டுக்கே அழைத்துப் போகலாம் என்று தகவல் கொடுத்தார்கள்.

    `அவளை எங்களால் பார்த்துக்கொள்ள முடியவில்லையே!’ என்று பாட்டியும், அக்காவும் போய் மன்றாட, அருகிலிருந்த ஒரு இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்தார் பெரிய டாக்டர்.

    `இவர்களால் பிறருக்கு ஆபத்து இல்லை,’ என்ற நிலையிலிருந்த பிற பெண்கள் தங்கியிருந்த இடம் அது. எல்லாருமே மனநிலை பிறழ்ந்து, தீவிர சிகிச்சைக்குப்பின் அங்கு அனுப்பப்பட்டவர்கள். நாள் தவறாது, மூன்று வேளை மருந்தும், மாதம் ஒரு ஊசியுமாக, ஒருவித போதை நிலையிலிருந்த பிறருடன் அம்மாவும் ஒருத்தியாகிப் போனாள்.

    “ஒன்னைப் பாக்கிறதுக்காகவே ஒங்கம்மா உசிரை வெச்சுக்கிட்டிருக்கா, ராசா. வாரம் தவறாம போய் பாத்துட்டு வா. வேற என்னதான் இருக்கு அவளுக்கு, பாவம்!” மரணப் படுக்கையிலிருந்த பாட்டி சும்மா போகாமல், சத்தியம் வாங்கிக்கொண்டுதான் போனாள்.

    அப்போது பத்மராசாவுக்கு பத்து வயது. இருபது வயதான அக்கா கல்யாணத்தைப்பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலையில் இருந்தாள். வேலைக்குப் போனாள். மாதாமாதம் அம்மாவுக்காக ஒரு பெருந்தொகையை எடுத்துவைக்க வேண்டுமே!

    சற்று விவரம் புரிய ஆரம்பிக்க, பத்மராசாவுக்கு அம்மாவின்மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தன் வயதுப் பையன்களெல்லாம் ஒன்று சேர்ந்து பேரங்காடிகளில் சுற்றிக்கொண்டும், சினிமா பார்த்துக்கொண்டும் உல்லாசமாகக் கழிக்கையில், தன் விதி மட்டும் ஏன் இப்படிப் போயிற்று? வாரம் பூராவும்தான் பள்ளிக்கூடமும், டியூஷனும் இருக்கவே இருக்கின்றன. ஒவ்வொரு சனியன்றும் பஸ் பிடித்துப்போய், அந்த அழகான அம்மாவைத் தரிசனம்! அந்தக் கசப்பிலிருந்து மீள அடுத்த நாளும் அனேகமாக விரயமாகிவிடும்.

    தன்னைப்பற்றி மறக்கவேபோல், ஓயாது படித்ததில், வகுப்பில் இவன்தான் முதல். ஆனால், நண்பர்களிடமிருந்து இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் உண்மையை மறைக்க முடியும்! உண்மை வெளியாகிவிட்டால், `பைத்தியத்தோட பிள்ளை டோய்!” என்று ஏளனம் செய்வார்களோ?

    “இப்படி முகத்தை சிடுசிடுன்னு வெச்சுக்கிட்டு அம்மாவைப் பாக்கவந்தா நல்லாவேயில்ல, பத்மா!” ரகசியக் குரலில் அக்கா அதட்டினாள்.

    உதட்டைச் சுழித்துக்கொண்டான் பையன். பத்து வயதுவரை அம்மாவிடம் தலை வாரிப் பின்னிக்கொண்டு, அம்மா கதை கதையாகச் சொல்ல சாப்பிட்டு, தரையில் அமர்ந்து வீட்டுப்பாடம் பண்ணிய நினைவுகளையெல்லாம் அக்கா பத்திரப்படுத்தி வைத்திருந்தாள். தானும் அவளும் ஒன்றா?

    அவனைப் பார்த்ததும் லேசாகச் சிரித்தாள் அம்மா. “நல்லாப் படிக்கிறயாமே, ராசா?” என்று எடுத்த எடுப்பிலேயே விசாரித்தாள். “அக்காவுக்கு நான்தான் பாடம் சொல்லிக் கொடுப்பேன்!” அவளுடைய பழைய நினைவு சற்றே திரும்பியிருந்தது.

    “இப்ப அவனுக்கு நான் சொல்லிக் குடுக்கிறேம்மா!” அக்கா முந்திக்கொண்டாள், அநாவசியமான வருத்தத்தால் அம்மாவின் நிலை மறுபடியும் மோசமாகிவிட்டால் என்ன செய்வது என்று பயந்தவளாக.

    “எனக்கு ஒங்ககூடவே வந்துடணும்போல இருக்கு. ஆனா, இங்க இருக்கிறதுங்க வேலை செய்யறதுக்காக என்னைப் பிடிச்சு வெச்சிருக்குங்க!” தனது உண்மை நிலை புரியாது பேசியவளைப் பார்த்தால் பாவமாக இருந்தது பத்மராசாவுக்கு. ஆறுதலாக ஏதாவது சொல்லவேண்டும் என்று தோன்றியது. “இங்கே எவ்வளவு அழகா தோட்டம் போட்டிருக்காங்க! ஒரே போகன்விலா செடியில எத்தனை கலர் பூ!” என்று வியந்தான்.

    அம்மாவின் கண்களில் அபூர்வமாக ஒரு ஒளி. “ஆர்கிட் தோட்டம்கூட இருக்கு. பாக்கறியா?” எதிரே இருந்த ஐந்தரை அடி மகனை, தான் என்றோ விட்டு வந்த குழந்தையாகவே பாவித்து, ஆசையோடு அவன் முகவாயைப் பிடித்தாள் அம்மா. “காட்டறேன், வா!”

    இவளுடன் தான் நடப்பதா?

    அந்த எண்ணமே கோபம், பயம், அருவருப்பு, இன்னும் ஏதேதோ உணர்வுகளைத் தோற்றுவிக்க,`வேண்டாம்,’ என்பதுபோல் வேகமாகத் தலையாட்டிவிட்டு, அவளுடைய கையை முரட்டுத்தனமாக விலக்கியவன், சட்டென எழுந்து, திரும்பிப் பாராது வாயிலை நோக்கி நடந்தான். அம்மா வெறி பிடித்தவளாக ஏதோ கத்தியது அவனைப் பாதிக்கவில்லை.

    அவ்வாரமே, தன் தலைமுடியை வெட்ட வந்தவளின் கையிலிருந்த கத்தரிக்கோலைப் பிடுங்கி, என்ன நடக்கிறதென்று பிறர் புரிந்துகொள்ளுமுன், அதைத் தன் வயிற்றில் செருகிக்கொண்டாள் பத்மராசாவின் அம்மா. பெற்ற மகனுக்கே வேண்டாதவளாகப் போய்விட்டோம், இனி உயிரோடு இருந்துதான் என்ன பயன் என்று அவளுக்கு மிச்சம் மீதியிருந்த அறிவுக்குப் புலனாகிவிட்டதோ!

    உலகம் அறியாத அவனுடைய அம்மாவுக்கு சொற்ப ஈமக்கடன்களைச் செய்து முடித்தான் மகன். அழுகைதான் வரவில்லை. உள்ளத்தில் பீறிட்ட நிம்மதியாவது வெளியே தெரியாமல் இருக்க வேண்டுமே என்று அவன் எடுத்துக்கொண்ட முயற்சி இறுகிப் போயிருந்த முகத்தில் தெரிந்தது.

    Share
  • நெடுஞ்சாலையில் ஒரு பயணம்

    நிர்மலா ராகவன்

    ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் ​தெரியுதா?

    கண்ணுக்கு எட்டியவரை நீல வானும், நீலக் கடலுமாக அழகு கொப்பளித்தது அந்த இடத்தில். அந்த இனிமையைக் குலைப்பதுபோல், அபஸ்வரமாக ஒலித்தது விசாலியின் கட்டைக் குரல்.

    தன்னைத் தாக்கிய மனைவியின் குரல் காதில் விழுந்தும், தற்காலிகமாகச் செவிடாகி விட்டதுபோல் வாளாவிருந்தார் பராங்குசம். எல்லாம் முப்பது வருட இல்லற வாழ்வில் பெற்ற விவேகம்தான்.

    ஆரம்பத்தில், `ஏன் ​தெரியாது? ஒன்னைக் கல்யாணம் பண்ணிக்கலே?` என்று வீராவேசமாகக் கேட்டுவிட்டு, அந்த வார்த்தைகளால் தோன்றிய பூரிப்பை மறைக்க முயன்றபடி, `போதும். ரொம்பத்தான் வழியாதீங்க!` என்று அவள் கடிந்துகொண்டது மறக்கக் கூடியதா!

    அது ஏன், தான் எது செய்தாலும் இவளுக்கு மாற்றுக் குறைவாகவே படுகிறது என்று யோசித்து யோசித்து, அவர் முடியெல்லாம் உதிர்ந்ததுதான் கண்ட பலன். அவரால் விசாலியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

    தன்னால் அவளுக்கு புத்திர பாக்கியத்தைக் கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு மிக, அவள் தன்னைக் குறைத்து மதிப்பிடும்போது அசட்டுச் சிரிப்பு சிரித்துவிடுவது, இல்லை ஊமையாகிவிடுவது என்று புத்திசாலித்தனமாக முடிவெடுத்திருந்தார்.

    இதனால், மனைவியிடம் பராங்குசத்துக்கு அன்பு இல்லை என்று எண்ணிவிடக் கூடாது.

    இல்லாவிட்டால், அவள் தற்செயலாகச் சொல்வதுபோல், “என் சிநேகிதி புவனா இருக்காளே, மாசாமாசம் மாரிப், போர்ட் டிக்ஸன் (PORT DICKSON), பங்கோர்னு (PANGKOR) ஏதாவது பீச்சுக்குப் போறாளாம். அவ மகனுக்கு ஆடிசம்னு ஏதோ வியாதியாம். தானே பேசிக்குவான். அப்படியே பேசினாலும், ரோபாட் பேசறமாதிரி, உணர்ச்சியில்லாமதான். யார்கிட்ட என்ன பேசறதுன்னு ​தெரியாது. டாக்டர் சொன்னாராம், அடிக்கடி கடல்ல குளிச்சா, நல்ல உடற்பயிற்சி, அதனால அவனும் கட்டுக்கடங்கி இருப்பான்னு!” என்று, விசாலி ஏக்கத்துடன் விவரித்தபோது, அவளைக் கேட்காமலேயே தீபகற்ப மலேசியாவின் கிழக்குப் பகுதியிலிருந்த செராட்டிங் (CHERATING) கடற்கரைக்கு அவளை அழைத்துப் போக திட்டமிட்டிருப்பாரா!

    அவள் தோழி போகாத இடம் என்பதால், விசாலி அவளிடம் பெருமையாகப் பேசிக் கொள்ளவும் முடியும் என்று கணக்குப் போட்டிருந்தார்.

    “இப்ப எதுக்கு கடலும், மண்ணாங்கட்டியும்?” என்று முதலில் பிகு செய்துகொண்டவள், கோலாலும்பூர் புடு (PUDU) பகுதியிலுள்ள வெளியூர் பஸ் நிறுத்தத்துக்கு வந்ததும் கலகலப்பானாள்.

    `ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் ​தெரியுதா?` என்று அன்று பூராவும் அவள் கேட்காததுபற்றி பராங்குசத்துக்கு ரொம்ப மகிழ்ச்சி. பேருந்தின் முன்னிருக்கையில் விரல்களால் தாளம் போடலானார்.

    சும்மாவா நாட்டுக்கு `மலாயா` என்று பெயர் வைத்திருந்தார்கள்! மலைப் பாதையில் சுற்றிச் சுற்றிப் போனபோது, விசாலிக்குத் தலைசுற்றல் வந்தது. நல்லவேளை, அவர் தாராளமாக பன்னிரண்டு வெள்ளி கொடுத்து, ஒரு கிலோ திராட்சைப் பழத்தை வாங்கி வந்திருந்தார். மனைவி ஒரு விரலால் நெற்றியைச் சுட்டி, சுழற்றும் போதெல்லாம், ஒரு பழத்தை அவள் வாய்க்குள் போட்டார்.

    பஸ்ஸிலிருந்து இறங்கியவுடனேயே விசாலிக்குத் தெம்பு வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், “ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் ​தெரியுதா? கடற்கரைக்குப் போக ஆசையா இருக்குன்னு ஒங்ககிட்ட வந்து நான் கேட்டேனா? வயத்தைப் புரட்டுது. டிவி தொடர்வேற விட்டுப் போயிடும்,” என்று பாய்ந்திருப்பாளா?

    அவள் பழையபடி ஆனதில் அவருக்குத் திருப்தியாக இருந்தது.

    `நான் என்னம்மா கண்டேன், இந்த பஸ்காரன் டோலுக்குப் பயந்து, இப்படி சுத்திச் சுத்தி வருவான்னு!` என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டார். உரக்கச் சொல்லி, அதற்கு வேறு அவள் ஏதாவது பதிலடி கொடுத்து வைத்தால்?

    `மௌனம் தங்கத்திற்குச் சமானம்,` என்று ஆங்கிலத்தில் சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்!

    கடற்கரையிலேயே அமைந்திருந்த சிறு சிறு மர வீடுகளுள் ஒன்றில் நுழைந்தார்கள். மலாய் கம்பத்து (கிராமிய) பாணியிலான குடில். தரையிலிருந்து மூன்றடி மேலே இருந்தது. எல்லாம், வருடம் முழுவதும் கொட்டும் மழைக்கான எச்சரிக்கைதான். வீட்டைத் தாங்க, நான்கு மூலைகளிலும் மரத்தூண்கள். அதன் அடியில், தாய்க்கோழியின் பின்னால், ஆசிரியரைப் பின்தொடரும் சிறு பிள்ளைகள்போல், கோழிக்குஞ்சுகள் அணிவகுத்துச் சென்றன.

    அந்தப் புதுமாதிரியான சூழ்நிலையில், விசாலி குதூகலித்தாள். “தேவலியே! ஒங்களுக்குக்கூட உருப்படியா ஒரு காரியம் பண்ணத் ​தெரியுதே! எப்படி இந்த இடத்தைப் பிடிச்சீங்க?” என்று அவள் பாராட்டியபோது, சொர்க்கமே ​தெரிந்தது பராங்குசத்திற்கு.

    காலையிலும், மாலையிலும் சமுத்திர ஸ்நானம், இடையில் சாப்பாடு, தூக்கம் என்று பொழுதை உல்லாசமாகக் கழித்தார்கள். இந்திய உணவு கிடைக்காததை விசாலி ​பெரிது பண்ணவில்லை என்பது பற்றி பராங்குசத்துக்கு நிம்மதி.

    சில சமயம், அவர்கள் குடில் வாசலிலிருந்த வராந்தாவில் போடப்பட்டிருந்த நிறம் மங்கிப்போன பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்தார்கள், ஓய்வாக. ஜட்டி மட்டுமே அணிந்து, அல்லது முழு நிர்வாணமான மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள், மணலில் வீடு கட்டி, அவைகளின்மீது சிப்பிகளையோ, அல்லது கடற்கரையைச் சார்ந்து இயற்கையாகவே வளர்ந்திருந்த சவுக்கு மரங்களின் கூரான இலைகளையோ வைத்து அழகுபடுத்துவதை கண்கொட்டாது பார்த்தபடி இருந்த விசாலி ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

    அதை ஓரக்கண்ணால் கவனித்த பராங்குசத்துக்கு அவள்மேல் பரிதாபம் பொங்கியது. `நல்லா தூங்கினியா?` `அடுத்த தடவை பினாங்கு போகலாம், என்ன? அங்க சாப்பாடு நல்லா இருக்கும்,` என்று பரிந்தார்.

    மூன்று இரவுகள் போனதே ​தெரியவில்லை.

    முதல் நாளே விசாலி கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள், `என்னால இனிமே அந்த பாடாவதி பஸ்ஸில ஏற முடியாது. ஏதாவது டாக்ஸி பாருங்க!` என்று.

    அவளது கட்டளையைச் சிரமேற்கொண்டு, இந்த வாடகைக் காரை ஏற்பாடு செய்திருந்தார் பராங்குசம்.

    வண்டியோட்டியை ஒரு பார்வை பார்த்தாள் விசாலி. அவ்வளவுதான். (இப்போது கதையின் முதல் வரியை நினைவுபடுத்திக் கொள்ளவும்).

    கணவர் பரிதாபமாக, “இப்பல்லாம் இங்கேயிருந்து கே.எல் (K.L, கோலாலும்பூர்) போக நானூறு வெள்ளியாம். 280 கிலோமீட்டர் தொலைவில்ல! இவன் ஒருத்தன் மட்டும் முன்னூறு சொன்னான். அதான்..,” என்று இழுத்தார். `இதுக்கே பஸ் கட்டணத்தைவிட மூன்று மடங்கு அழணும், ​தெரியுமா? ஒன் பிடிவாதத்தினாலதான் இப்படி!` என்ற விமரிசனத்தை சாமர்த்தியமாக மறைத்தார்.

    “இந்த ஆளோட முகமே சரியா இல்ல. எலும்பா இருக்கான். கண்ணு வேற கலங்கி இருக்கு. சரியான போதைப் பித்தன்! எப்படித்தான் அவ்வளவு தூரம் ஓட்டப் போறானோ!” டிரைவர் தமிழனில்லை என்ற ​தைரியத்தில், அவள் அங்கலாய்ப்பு உரக்கவே ஒலித்தது.

    பராங்குசத்துக்குக் கூசியது. ஒருவரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, அவரைப் பற்றி இழிவாகப் பேசுவது யாராக இருந்தாலும்… அது அவரது ஆசை மனைவியாகவே இருந்தாலும்… அது தப்புதான் என்று தோன்றிற்று அவருக்கு. ஆனால், அவள் வாயை அடக்கப்போய், அவள் ஏட்டிக்குப் போட்டியாக கத்த ஆரம்பித்தால்.., மொழி ​தெரியாதவராக இருந்தாலும், இன்னொருவரால் புரிந்துகொள்ள முடியாதா, என்ன!

    மௌனம் என்ற ஒன்றுதான் பல சமயங்களில் எப்படி கை கொடுக்கிறது என்ற அயர்ந்துபோய் அமர்ந்திருந்தார்.

    காரோட்டி, “ஸாயா (நான்).. யாஹ்யா!” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, கையை நீட்டியபோது, விசாலி திகைத்துப்போனாள். ஒரு வினாடி தயங்கிவிட்டு, கையை நீட்டினாள்.

    முன் கதவைத் திறந்து, பராங்குசம் ஏற யத்தனித்தபோது, “இந்த புரோடான் ஸாகா (PROTON SAGA, மலேசியாவில் தயாரிக்கப்படும் கார்), அதோட டிரைவர் மாதிரியே, பாத்தா பரிதாபமா இருக்கு. பின்னால ஒக்காந்தா, எனக்கு மறுபடியும் வயத்தைப் புரட்டும். என்னால முடியாதுப்பா!” என்றபடி, அவரைத் தள்ளாத குறையாக முன்னால் ஏறிக்கொண்டாள். `அம்பது வயசு ஆகப்போகுது. ஆம்பளைங்க பக்கத்தில ஒக்காந்தா, என்னா தப்பு! அதான் கையைக் குலுக்கியாச்சே!` என்று முணுமுணுத்துக்கொண்டாள்.

    காரை ஓட்ட ஆரம்பிப்பதற்குள், காரோட்டி நிறைய நிபந்தனைகள் விதித்தார்.

    “நான் மெதுவாத்தான் போவேன். முந்தி பென்ஸ் கார் வெச்சிருந்தேன். அதில நூத்துப் பத்து என்ன, நூத்து நாப்பதுகூடப் போகலாம். ஆனா, இதில..,” என்று சிரித்தவர், “இன்னிக்குக் காரை மெகானிக்கிட்ட விடறதா இருந்தேன்,” என்று ஏதோ சாக்குபோக்கு சொல்ல ஆரம்பித்தார்.

    உள்ளே குளிர்சாதன வசதி இருந்ததென்று பெயர்தான். சன்னல் கண்ணாடியை முழுமையாக அடைக்க முடியாதுபோக, வெளியே வீசிய அனல்காற்றும், அந்த நெடுஞ்சாலையில் விரைந்துகொண்டிருந்த பிற வாகனங்கள் பெருமூச்சாக விட்ட புகையும் உள்ளே நுழைந்தன.

    பற்களைக் கடித்துக்கொண்டு, விசாலி தூங்க முயற்சித்தாள். மனதுக்குள் சுலோகம் சொல்லிப் பார்த்தாள். இருப்பினும் ஒன்றரை மணிக்குமேல் அவளால் தாக்குப்பிடிக்க இயலவில்லை.

    “நல்ல காடி வெச்சிருக்கான் இந்த ஆளு! பஸ்ஸே தேவலாம்னு இருக்கு,” என்று, தலையைத் திருப்பி, கணவரிடம் கூறினாள்.

    “என்ன சொல்றாங்க?” என்று விசா​ரித்தார் யாஹ்யா.

    “பாத்ரூம் போகணுமாம்!” சமயோசிதமாகப் புளுகினார் பராங்குசம்.

    “கே.எல் போக இன்னும் எத்தனை நேரமாகும்?” இத்தனை நேரம் டிரைவரின் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்ததில், அவருடன் பேசும் துணிவு வந்திருந்தது விசாலிக்கு.

    “இன்னும் மூணு மணியாவது ஆகும். நாம்ப என்ன, வால்வோ கார்லேயா போறோம்?” என்று சிரித்துவிட்டு, “நீங்க ரெண்டுபேரும் போயிட்டு வாங்க,” என்று விடை கொடுத்தார்.

    கதவை உள்பக்கத்திலிருந்து திறக்கும் சாதனம் உடைந்து போயிருந்தது. அசட்டுச் சிரிப்புடன், “இன்னிக்குக் காரை மெகானிக்கிட்ட விடறதா இருந்தேன்,” என்றபடி, யாஹ்யா வெளியே வந்து, திறந்துவிட்டார்.

    “எனக்கென்னமோ சந்தேகமா இருக்குங்க. அந்த ஆளு பத்துப் பதினஞ்சு நிமிஷத்துக்கு ஒருவாட்டி எதையோ குடிக்கறான். எல்லாத்துக்கும் சிரிக்கறான். தண்ணியில ஏதாவது போதை மருந்து போட்டு கலக்கியிருப்பானோ?”

    அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாது, “அந்தப் பக்கம் இருக்கு,” என்று அநாவசியமாக, பெண் படத்தைக் கதவில் தாங்கியிருந்த கழிப்பறையைக் காட்டிவிட்டு, தன்பாட்டில் விரைந்தார் பராங்குசம்.

    விசாலி திரும்ப வரும்போது, அவள் கரத்தில் கொட்டையில்லாத கொய்யாத் துண்டங்கள் நிரம்பிய சிறிய பிளாஸ்டிக் கை.

    “இந்தாங்க!”

    கையை நீட்டினார் கணவர்.

    ஆனால், அவள் யாஹ்யாவை நோக்கி நீட்டிக்கொண்டிருந்தாள்.

    அவருடைய முகத்தில் நன்றி கலந்த முறுவல். “வேணாம்மா. என்னால சாப்பிட முடியாது!” என்றபடி, பல பற்களை இழந்திருந்த வாயைத் திறந்து காட்டினார். பின், “எனக்குத் தொண்டையில கான்சர்!” என்று அசாயாசமாகத் ​தெரிவித்தார். குரலில் வருத்தமில்லை. `இன்னிக்கு மழை வரும்,` என்று சொல்வதுபோல் இருந்தது.

    விசாலி அதிர்ந்தாள். பையைத் தவறவிட்டாள். நல்லவேளையாக, அது அவள் மடியில் விழுந்தது.

    “கீமோ சிகிச்சை குடுத்தாங்களா! அதில பல்லெல்லாம் போயிடுச்சு. என் வாயில உமிழ்நீர் சுரக்கிறதில்ல. அதனால, அப்பப்போ, கொஞ்சம் தண்ணியால நனைச்சுக்கணும்”.

    வருடந்தவறாது, கடலில் இருபதாயிரம் மைல் நீந்தி, மே மாதம் முதல் செப்டம்பர்வரை, இரவு வேளைகளில் செராட்டிங் கடற்கரைக்கு முட்டையிட வரும் ஆமையைப்போல, விசாலியின் தலை கழுத்துக்குள் நுழைந்தது.

    அதைக் கவனியாது, தன்பாட்டில் பேசிக்கொண்டே போனார் மற்றவர். “தொண்டையில ஓட்டை போட்டு, சாப்பாட்டை உள்ளே இறக்கலாம்னாங்க. எனக்குப் பிடிக்கல. வெண்டைக்காய், கீரை, கோபீஸ் எல்லாத்தையும் வேகவெச்சு அரைச்சு, சாதத்தோட திரும்பவும் ஒண்ணா அரைச்சுடுவேன். அதைக் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட ஒரு மணி நேரம் பிடிக்கும். அதனால வீட்டை விடறதுக்கு முந்தி சாப்பிட்டுட்டுத்தான் புறப்படுவேன்”.

    “வீட்டுக்கு வெளியே வந்தா, என்ன சாப்பிடுவீங்க?” விசாலியின் குரல் மங்கியிருந்தது.

    “ஐஸ்கிரீம். இல்லாட்டி, நல்லா மசிச்ச உருளைக்கிழங்கு — கெண்டகி சிக்கன் கடையில கிடைக்குதில்ல!” என்று மகிழ்ச்சியுடன் ​தெரிவித்தார்.

    போத்தலைத் திறந்து ஒரு ஸ்பூன் அளவு தண்ணீரை அவர் வாயில் கவிழ்த்துக்கொண்டபோது, ஏதேனும் பேச வேண்டும்போல இருந்தது அவளுக்கு. “ஒங்க வீடு செராட்டிங்கிலேயே இருக்கா?” என்று கேட்டுவைத்தாள்.

    “நான் கே.எல்.காரன்தாம்மா.  ஒரு கார் கம்பெனியில ​பெரிய வேலையில இருந்தேன். என்னோட நிலைமை இப்படி ஆனதும், எல்லாரும் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க — பெண்டாட்டி, பிள்ளைங்ககூட!” லேசான வருத்தம் குரலில். “பென்ஸ் காரையும் விக்க வேண்டியதாப்போச்சு. மத்தவங்க கையை எதிர்பாக்கறது அசிங்கம், இல்லியா? அதனால, இங்கேயே ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கிட்டு இருக்கேன்”.

    “தனியாவா இருக்கீங்க?”

    யாஹ்யா ​​பெரிதாகச் சிரித்தார். “தனியாத்தானே வந்தேன்? தனியாத்தான் போகவும் போறேன்!” என்று தத்துவம் பேசிவிட்டுத் தொடர்ந்தார். “இது சின்ன கிராமம். அதனால மனுஷன் இன்னும் மனுஷனாவே இருக்கான். எனக்கு உடம்பு ரொம்ப முடியாட்டி, அக்கம்பக்கத்துக்காரங்க உதவி செய்வாங்க. நான் சொந்தமா தோட்டம் போட்டு, எனக்கு வேண்டியதைப் பயிரிட்டுக்கறேன். என் சிகிச்சை, மருந்துச் செலவுக்கு எல்லாம்… உடம்பு ஒத்துழைக்கறப்போ, இப்படி சவாரி ஏத்திக்கிட்டுப் போவேன். ஒரு நாளைக்கு ஐம்பது மாத்திரைகளை இல்ல விழுங்கித் தொலைக்க வேண்டியிருக்கு!”

    அங்கு சிறிது நேரம் மௌனம் நிலவியது. யாஹ்யா சொன்னவற்றை சீரணித்துக்கொள்ள முயன்றுகொண்டிருந்தாள் விசாலி. சிறிது யோசனைக்குப்பின், “நமக்கு ஏன் இப்படி வந்திடுச்சுன்னு ஒங்களுக்கு வருத்தமா இல்ல?” என்று துருவினாள்.

    “வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது! சாகாம யாராவது இருக்காங்களா? நாம்ப சாகறதுக்கு ஏதோ ஒரு வழி. அவ்வளவுதான். ஒல்லியா இருந்தா, ஏன் இப்படி ஒடிஞ்சு விழறமாதிரி  இருக்கேன்னு கேள்வி. முந்தி ரொம்ப குண்டா இருந்தேன். இருநூறு பவுண்டில்ல! அப்ப, `ஏன் இப்படி குண்டோதரனா இருக்கே?`ன்னு கேட்டாங்க!” சிரித்தார்.  “ஏன், ஏன்னு கேட்டுட்டு இருந்தா, அதுக்கு முடிவே இல்ல,” என்று அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கிவிட்டு, “இப்படிப் பேசிக்கிட்டே மெதுவா கார் ஓட்டறது ரொம்ப ரிலாக்ஸிங்கா இருக்கு. நான் ஏத்திட்டுப் போறவங்க எல்லாருமே ஒங்கமாதிரிதான் — அன்பாப் பழகறாங்க. அவங்க கஷ்டத்தை எங்கிட்ட சொல்லிக்கிறாங்க. போன வாரம் பாருங்க..!” என்று ஆரம்பித்தார்.

    பேசிக்கொண்டே வந்ததில், கண்ணாடி சரியாக மூடாத ஜன்னல்வழி உள்ளே வந்த புகையோ, வீடு வந்து சேர்ந்ததோ எதுவுமே ​தெரியவில்லை விசாலிக்கு. கைகளைக் கூப்பியபடி, யாஹ்யாவிடம் விடைபெற்றுக்கொண்டாள்.

    “சாமானை நான் எடுத்துக் குடுக்கறேன்,” என்றபடி யாஹ்யா பின்னால் விரைந்தபோது, விசாலி கணவரைப் பார்த்து முறைத்தாள். “நீங்க போய் எடுங்க. அதான் மூணு நாள் ஒரு வேலையும் செய்யாம, ஜாலியா இருந்தாச்சில்ல! இன்னும் என்ன சோம்பல்?”

    கார் கண்ணிலிருந்து மறைந்தபின், “எவ்வளவு குடுத்தீங்க?” என்று கேட்டாள். குரல் அனாவசியமாக, ரகசியமாக ஒலித்தது.

    “அதான் அங்கேயே சொன்னேனே — முந்நூறுதான்!” என்று அவர் அலட்சியமாகக் கூறியபோது, சற்றும் எதிர்பாராதவண்ணம், அவர்மேல் பாய்ந்தாள் தர்மபத்தினி.

    “நாம்ப எல்லாம் ஒரு தலைவலி, காய்ச்சலுக்கே என்ன அமர்க்களப்படுத்தறோம்! அவரு சொந்தக்காலில நிக்கறாரு, இவ்வளவு ​பெரிய வியாதியோட போராடிக்கிட்டு!” ஆத்திரத்தில் பெருமூச்சு வாங்கியது அவளுக்கு. “எதையுமே கூழா அரைச்சுத்தான் சாப்பிடுவாராமே, பாவம்! கூட ஒரு அம்பதோ, நூறோ போட்டுக் குடுத்திருந்தா குறைஞ்சா போயிடுவீங்க? ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் ​தெரியுதா?”.

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    வெ.திவாகர் 

    ஆதி காலத்திலிருந்து பார்க்கிறோம்.. பெண்கள் என்றால் பொதுவாக போகப் பொருளாகத்தான் சமூகத்தில் சிற்சில ஆண்களின் கண்களுக்குத் தெரிகின்றார்களோ என்னவோ,. பெண்களின் அழகை வர்ணிப்பதென்றால் போதும்.. இந்தக் கவிஞர்களுக்குக் கற்பனா சக்தி விண்ணைத் தொடும் அளவுக்கு பறக்கும். பூ என்பார்கள், பூவினும் மெல்லிய இதழென்பார்கள்.. மென்மைக்கு மறுபெயரே பெண்மை என்பார்கள்.. ஆனால் பெண்கள் வன்கொடுமை என வரும்போது இவர்கள் வர்ணனைக்கு நேர்மாறாக நடக்கும்போது நல்நெஞ்சம் கொண்டோர் அவர் ஆணாயினும் பெண்ணாயினும் நெஞ்சம் பதறத்தானே செய்வர்.

    பெண்கள் வன்கொடுமை இந்தியாவில் இப்போது அதிகம் நடப்பதாகச் செய்திகள், தொலைக்காட்சிகள் தெரிவித்தாலும் இது உலகம் முழுமைக்கும் ஒரே கதைதான் என்பது நம் பார்வையைச் சற்று அகல விரித்தால் புரியும்.. இதற்கான சமுதாயக் காரணங்களாக ஆண்களின் ஆதிக்கத் தன்மையை அதிகமாகக் காண்பித்தாலும், மனோதத்துவ ரீதியாகப் பார்க்கையில் ஆண்களின் தாழ்வு மனப்பான்மையும் அந்தத் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக அவர்கள் மனத்தில் தோன்றும் வெறித்தனமும், அந்த வெறித்தனத்தின் பயனாக அது பெண்ணின் மீது உடல்ரீதியாகத் துன்புறுத்தும்போது அது வன்கொடுமையாக மாறுகிறது. இயற்கையாகவே பெண்களின் மன உறுதி, ஆண்களை விடச் சற்று பலமானதுதான். ஆனால் வன்கொடுமை என வரும்போது பெண்ணின் மன உறுதி குலைக்கப்படுகிறது என்பது வாஸ்தவம்தானே..

    இந்த வாரம் வல்லமையில் ஒரு கதை படித்தேன். ‘நிமிர்ந்த நினைவு’ (http://www.vallamai.com/?p=39956) கதை இந்த வன்கொடுமையினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டமும்,  பலம் உடைய அவள் எப்படியெல்லாம் மனோரீதியாக உடல்நீதியாக பாதிக்கப்படுகிறாள் என்பதையும் விவரிப்பது.

    பெண்கள் ஆண்களோடு பிறந்தவர்கள். தாயாய், சகோதரியாய் பிறவியிலிருந்து ஆண்களோடு வாழ்பவர்கள். பின்னர் மகளாக வருபவள். இத்தனை உறவும் ஆண் ஒரு பெண்ணோடு இணைந்துதான் பெறுகிறான் என்றாலும் இந்த தாய் சகோதரி, மகள்,உறவுமுறைகள் அவனுக்கு நேர்மையாகப் புரியவேண்டும். சமுதாயம் சில நல்ல குறிக்கோள்களை ஆண்வர்க்கத்துக்கு அழுத்தமாகத் தெரியப்படுத்தவேண்டும். இதில் முக்கியமானது பெண்ணை வன்கொடுமைக்கு பலியாக்குவதை அடியோடு ஒழித்துத் தடுப்பதே.

    இந்த வகையில் திருமதி நிர்மலா ராகவன் எழுதிய நிமிர்ந்த நினைவு சிறுகதை என்பது, சமுதாயம் மூலமாக உலகுக்குத் தரும் நல்ல குறிக்கோளின் ஒரு பகுதியாகத்தான் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். பெண் மதிக்கப்படுவதை விட முதலில் அவளுக்கு இழைக்கப்படும் உடல்ரீதியான, மனரீதியான கொடுமைகளைத் தடுக்க முன் வரவேண்டும். இந்தக் கொடுமைகள் தடுக்கப்பட்டாலே பெண் தானாகவே மதிக்கப்படும் நிலை உருவாகிவிடும்.

    நல்லதொரு கதையை வழங்கிய திருமதி நிர்மலா ராகவனை இந்த வார வல்லமையாளராக விருது கொடுத்துக் கௌரவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசிபாரா: குறட்டையைப் பற்றி திரு. சம்பத் (’வளையம்’ பின்னூட்டம்)

    ஒரு முறை ஹவ்ரா மெயிலில் விசாகப்பட்டிணம் செல்லும் போது சக பயணி ஒருவர் பயங்கரமாகக் குறட்டை விட்டு அடியேனின் தூக்கத்தைக் கலைத்து விட்டார். அடுத்த நாள் காலையில் வண்டி விஜயவாடா சேர்ந்தது. இருவரும் காபியை சுவைத்தவாறு பேச ஆரம்பித்தோம்.

    மெள்ள நான் அவரது முன்னிரவு குறட்டையைப் பற்றி பிரஸ்தாபித்தேன். பொறுமையாக என் புகாரைக் கேட்டபின், “ஐயா, நீங்கள் சொல்கிறீர்கள், நான் சொல்லவில்லை. அதுதான் வித்தியாசம்” என்று ஒரு போடு போட்டார்.

    Share
  • நிமிர்ந்த நினைவு

    நிர்மலா ராகவன்

    ஒரு ​பெரிய காம்பவுண்டுக்குள் இருந்தது அந்த சிறிய வீடு. வாசலைச் சுற்றி உயரமான சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. மூடப்பட்ட கேட்டில் பெரிய  பூட்டு. ஏதோ சிறை போன்றிருந்தது.

    அலுவலகத்தினுள் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மாது. எதிரே, ரேணு — குனிந்த தலையுடன். நகத்தைக் கடிக்க வேண்டுமென்ற துடிப்பை அடக்கிக்கொள்ள பெரும் பிரயத்தனப் பட்டுக்கொண்டு.

    “பெரிய படிப்பு படிச்சவங்க நீங்க! இந்த இடத்துக்கு வரலாமா?” அங்கலாய்ப்புடன் கேட்டாள் லீலா.

    `என்றுமே என் உலகம் தனிதான்!` என்ற அயர்ச்சி எழ, ரேணுவின் முகத்தசைகள் இறுகின.

    அவ்வீட்டில் பெண்களும், குழந்தைகளும் மட்டும்தான். பன்னிரண்டு வயதுக்குமேல் ஆன எந்த ஆணுக்குமே அதற்குள் நுழைய அனுமதி கிடையாது. அவளைப் போன்றே கணவனிடம் வதைபட்டு, காவல் துறை அனுப்பியதாலோ, அல்லது தன்னிச்சையாகவோ வந்திருந்த, மலாய், சீனர் உள்பட, மற்றும் இருபது பெண்கள் அந்த ஆதரவு மையத்தில் இருந்தாலும், அவர்களைப்போல் தன் மணவாழ்க்கையின் அவலத்தை உரக்கப் பகிர்ந்துகொள்ளவோ, அல்லது தினசரி யார் என்ன வேலை செய்வது என்று வாய்ச்சண்டையில் பொழுதைப் போக்கவோ அவளால் முடியவில்லை.

    இல்லத் தலைவியான லீலாவின் பரிதாபத்தை எதிர்கொள்ள முடியாது முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

    ஏழெட்டு ஆண்டுகளாக பெரும்பாடுபட்டு மறைத்து வைத்திருந்த அவலம் இப்படி பகிரங்கமாகி விட்டதே என்ற அவமானம்.

    காலையில் படுக்கையில் படுத்தபடியே கண்களைத் திறந்தபோது, தான் எங்கே இருக்கிறோம் என்றுகூட புரியாது திகைத்துப்போய், சொல்லவொண்ணாத பயம் மேலெழ, மீண்டும் கண்களை இறுக மூடிக் கொண்டது நினைவுக்கு வந்தது.

    பயம்…பயம்…

    கிட்டத்தட்ட பத்து வருடங்களாக. அதாவது, திருமணமாகி ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே, வேறு எந்தவித உணர்ச்சியுமே மனிதப் பிறவிக்குக் கிடையாது என்பதுபோல் அல்லவா பயம் அவளை அலைக்கழிந்திருந்தது!

    `அது என்ன சில வருடங்கள்?` உள்மனம் கடுமையாக ஆட்சேபித்தது.

    லீலா ஏதோ சொல்வதுகேட்டது. “சீனச்சி, `எதுக்கும் இருக்கட்டும்`னு புருஷனுக்குத் ​தெரியாம, அப்பப்போ கொஞ்சம் பணத்தைப் பதுக்கி வைச்சுக்குவா. பிள்ளைங்களுக்கு விவரம் ​தெரியற வயசு வந்ததும், அவங்ககிட்ட சொல்லிட்டு, தனியா போயிடுவா. ஆயுசு பூராவும் அடி வாங்கிச் சாக மாட்டா. மலாய், தமிழ்ப் பொண்ணுங்கதான் இப்படி — கட்டினவன் என்ன செஞ்சாலும், பொறுத்துப்போறது!” உணர்ச்சியற்ற குரலில் சொன்னதைக் கேட்டால், பல​பேரிடம் இதையே திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கலாம் என்று ஊகிக்கும்படி இருந்தது. “ஒங்களுக்குத்தான் சுய சம்பாத்தியம் இருக்கே! தனியா போயிருக்கலாமே!”

    ரேணு மௌனம் சாதித்தாள்.`அவர் மாறுவாரென்று நம்பிக்கிட்டு இருந்தேன்,` என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனம் என்று அவளுக்கே புரிந்தது.

    “ஒங்க வீட்டுக்காரருக்கோ வேலை இல்லை. என்னமோ தில்லுமுல்லு பண்ணினதில, வக்கீல் தொழில் செய்யற லைசன்சைப் பிடுங்கிக்கிட்டாங்க. நீங்க அப்படியா! சரி.. எப்படிப் பாத்தாலும், ஒங்க கைதானே ஓங்கியிருக்கணும்? ஆனா, நெசமாவே அவரோட கை ஓங்கி இருந்திருக்கு. அதுக்கு ஒங்க ஒடம்பு முழுவதும் அத்தாட்சி!” நம்ப முடியாதவளாக தலையை ஆட்டிக்கொண்டாள் லீலா. “எத்தனை எலும்பு முறிஞ்சிருக்கு! பொறுமைக்கும் ஒரு அளவு கிடையாதா, என்ன ரேணு? இங்க வந்து சேர்ந்திருக்காட்டி, ஒங்க உசிரே போயிருந்தாக்கூட ஆச்சரியமில்லை”. வதைபட்ட பெண்களுக்கு நல்வாழ்வு காட்டுவதிலேயே தன் காலத்தைச் செலவழித்திருந்தவள் லீலா. “இப்படி சுவரையே வெறிச்சுப பாத்துக்கிட்டிருக்காம, ஏதாவது பேசுங்க. நீங்க எல்லாத்தையும் மனம்விட்டுச் சொன்னாதான்  நாங்க ஒங்களுக்கு உதவ முடியும். நீங்களும் ஒரு தீர்வு காண முடியும்”.

    “தீர்வா?”

    “அதான், திரும்ப ஒங்க கணவர்கிட்ட போகப்போறீங்களா, இல்ல விவாகரத்துக்கு மனு போடப்போறீங்களான்னு..”

    “விவாகரத்து வேணாம்..” அவசரமாகச் சொன்னாள் ரேணு. கல்லூரி நாட்களில், அறிவார்த்தமாகத் தன்னுடன் பேசிப் பழகி, மரியாதையாக நடத்திய கிரியை இனி காண்போமா என்ற ஏக்கம் எழுந்தது.

    “நீங்க எந்த முடிவு எடுத்தாலும் எங்க பக்கபலம் உண்டு. ஆனா, திரும்பத் திரும்ப ரத்தக்களரியா இங்கே திரும்பி வரமுடியாது. எங்க விதிப்படி, ஒருத்தர் மூணு தடவைதான் வரலாம்”.

    உடல் உயரமாக இருந்தாலும், குறுகியபடி எதிரே அமர்ந்திருந்தவளின் மன இறுக்கத்தைக் குறைக்க ஒரே வழி தான் நிறைய பேசுவதுதான் என்று அனுபவத்தில் உணர்ந்திருந்த லீலா, “எனக்கு ஒண்ணுதான் புரியல. ஒங்களைப்பத்தி நீங்க பெருமையா நினைச்சு நடந்திருக்கணும். அது எப்படி  ஒங்களை இவ்வளவு மட்டமா ஒருவர்.., அது ஒங்க கணவரே ஆனாலும், நடத்த விட்டீங்க? ப்ளீஸ் ரேணு!  என்னை ஒரு தோழியா நினைச்சுச் சொல்லுங்க!”

    தோழி!

    இதுநாள்வரை தனக்கு நெருக்கமான ஒரு தோழிகூட கிடையாது என்ற உண்மை கசப்பாக அடிநாக்கில் படிந்தது. ரேணு விம்மினாள்.

    அவளை அழவிட்டுக் காத்திருந்தாள் மற்றவள்.

    எல்லாப் பெண்களையும்போல் தான் எந்த ஆடவனையும் சார்ந்து வாழ முடியாது என்றுதான் ரேணு நினைத்திருந்தாள், கிரியைச் சந்திக்கும்வரை. அந்த நினைப்பின் வித்து பக்கத்து வீட்டுக் கிழவர் அவளது ஆடைகளைக் களைந்து, ஏதேதோ செய்தபோது அவளது உள்மனத்தில் ஆழமாக விழுந்திருந்தது.

    தான் ஏதோ தப்பு செய்கிறோம் என்றவரை அந்தக் குழந்தை மனதுக்குப் புரிந்தது. ஆனால், பாவாடை அழுக்கானால்கூட திட்டும் தாயிடம் தாழிட்ட அறைக்குள் அடிக்கடி நடந்ததை எப்படிப் பகிர்ந்துகொள்வது?

    அவளால் முடிந்ததெல்லாம் தன் உடலை ஆக்கிரமிக்கும் தாத்தாவைக் கண்டு பயப்படுவது ஒன்றுதான். அந்த பயமே அவருக்குச் சாதகமானது புரியும் வயதாகவில்லை அப்போது.

    அடுத்த வருடமே ரேணுவின் பெற்றோர் வேறு வீட்டிற்கு மாறிப் போய்விட்டாலும், அந்த நாட்களின் பாதிப்பு வாழ்நாட்கள் பூராவும் தன்னை உறுத்தும் என்று அப்போது ரேணு எதிர்பார்த்திருக்கவில்லையே!

    தான் மிகவும் கேவலமானவள், இல்லாவிட்டால் தன்னை ஒருவர் இப்படியெல்லாம் நடத்தி இருக்கமாட்டார் என்ற குற்ற உணர்ச்சி அவளோடு தானும் வளர்ந்தது. மற்ற பெண்களைவிட எப்போதும், எல்லாவற்றிலும் தான் ஒரு படி மேலே நிற்க வேண்டும் என்ற வீம்பு உண்டாயிற்று.

    பதினாறு வயதில் சக மாணவிகள் ஆண்களைப்பற்றி கூடிக் கூடிப் பேசி, காரணமில்லாமல் சிரித்தபோது, அந்த மாதிரி பேச்சுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்பதுபோல் விட்டேற்றியாக நடந்துகொண்டாள்.

    “இப்படி இந்த வயசிலேயே சாமியாரா இருந்தா, யாராலதான் கிளாசில எப்பவும் முதலாக வரமுடியாது?” என்றெல்லாம் வயிற்​றெரிச்சலுடன் அவர்கள் பேசியது அவள் காதிலும் விழாமல் இல்லை. தன்னைப் பார்த்துப் பிறர் பொறாமைப்படும் அளவுக்கு உயர்ந்திருப்பதை எண்ணி பெருமைப்பட முடியவில்லை. இப்படி எல்லாரிடமிருந்தும் மாறுபட்டுப் போனோமே என்ற வருத்தம்தான் எழுந்தது அவளுக்கு.

    அப்போதெல்லாம், தன்னை இப்படி ஒரு கேலிப்பொருளாக, அரைப் பைத்தியமாக ஆக்கி விட்டிருந்த அந்தக் கிழவரின்மேல் ஆத்திரம் மூளும். அவர் என்றோ இறந்து போயிருக்கக்கூடும். ஆனால் அவர் செயலின் பாதிப்பு நிரந்தரமாகத் தங்கிவிட்டது அவளிடம்.

    இனி என்னதான் யோசித்தாலும், நடந்ததை மாற்றவா முடியும் என்ற உண்மை உறைக்கையில், இரண்டு மூன்று நாட்கள் ஏதோ அடியற்ற பாதாளத்தில் விழுந்துவிட்டதைப்போல் இருக்கும். மிகுந்த பிரயாசை செய்து, மேல் எழுவாள். அத்தகைய சமயங்களில் கொழுகொம்பாக அமைந்தது படிப்பு. மேலும் மேலும் புத்தகங்களுக்குள்ளேயே மூழ்கி, தனித்துப் போனாள்.

    `இப்படியே இருந்துவிட்டால் போதும்,` என்று சிறிது நிம்மதி எழுந்தபோதுதான் கிரி அவள் வாழ்க்கையில் புகுந்தான்.

    ரேணுவின் போக்கே புதுமையாக, ஒரு சுவாரசியத்தை உண்டு பண்ணுவதாக இருந்தது அவனுக்கு. அவன் நெருங்க நெருங்க, அவள் ஒதுங்கிப் போனது சவாலாக இருந்தது.

    `மற்ற பெண்களைவிட நீங்கள்தான் எத்தனை வித்தியாசமாக இருக்கிறீர்கள்!`

    `எவ்வளவு விஷயம் ​தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! பூர்வ ஜன்ம வாசனையாகத்தான் இருக்க முடியும்`.

    கடல் அலையால் ஓயாது அலைக்கழைக்கப்படும் பாறாங்கல்லே நாளடைவில் தன் கூர்மையை இழந்து, உருண்டையாக ஆகிவிடுகிறது. இவள் கேவலம், உயரமும், ஒல்லியுமான பெண். சற்றுக் கூனல் வேறு என்று கணக்குப் போட்டான். மாற்ற முடியாதா, என்ன!

    `இன்னும் என்னென்ன செய்தால் இவளை வழிக்குக் கொண்டு வரலாம்?` என்று யோசித்து யோசித்து திட்டம் போடுவதே ​பேரின்பமாக இருந்தது. ஓடும் விலங்கை துரத்தித் துரத்திப் பிடிப்பதில்தானே வேடுவனுக்கு உற்சாகம்!

    நாலடி தள்ளியே நின்று, அறிவுபூர்வமாக எதையாவது விவாதிக்கும்போது அவள் முகத்தின் இறுக்கம் குறைகிறது என்று புரிந்துகொண்டான். வழக்கமான தனது மன்மத ஆட்டங்களைக் குறைத்துக்கொண்டு, பல்வேறு பொருட்களில் அமைந்த புத்தகங்களைத் தேடிப் படித்தான். மறுநாள் வாசகசாலையிலோ, உணவு விடுதியிலோ ரேணுவைத் `தற்செயலாகச்` சந்தித்து, தன் அறிவுத்திறமையை வெளிப்படுத்திக் கொண்டான்.

    `என்னை மாதிரியே இவரும் ஒரு தனிமை விரும்பி. ஓயாது படிக்கிறாரே! என்ன துயரமோ, பாவம்!` என்று ஆரம்பத்தில் பரிவு காட்டியவள், தனிமையிலேயே வாடும் இருவர் ஒருவரை ஒருவர் சார்ந்தால், வாழ்க்கை எத்துணை இனிமையாக இருக்கும் என்று எண்ண ஆரம்பித்தாள்.

    பழம் கனிந்துவிட்டதை உணர்ந்தான் கிரி. இவளை அனுபவித்துவிட்டு ஓடிவிட ஒத்துக்கொள்ளமாட்டாள், கல்யாணம் ஒன்றுதான் வழி என்பதைப் புரிந்துகொண்டிருந்ததால், தன் கோரிக்கையை மெள்ள வெளியிட்டான்.

    உடனே அவள் சம்மதித்தபோது, தன் ஆற்றலில் மிகுந்த கர்வம் உண்டாயிற்று கிரிக்கு.

    முதல் வருடம், அவன் என்ன பேசினாலும் மெய்மறந்து, அவனுடைய முகத்தையே பார்த்த மனைவியால் கிரியின் ஆண்மை பெருமிதம் கொண்டது.

    போகப் போக, ஒரு இளம்பெண்ணுக்குரிய துடிப்பு சற்றுமின்றி, கண்ணிலும் ஒளியின்றி அவள் மந்தமாக இருந்தது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

    அவனுடைய உடலின் நெருக்கத்தை அவள் வேண்டாவெறுப்பாகப் பொறுத்துப் போவதுபோல்தான் பட்டது.  `இவளுக்கு மரத்தால் செய்த உடம்பா என்ன,` என்ற ஆத்திரம் வந்தது அவனுக்கு.

    அவனுக்குப் புரியவில்லை, என்றோ மனதில் படிந்த பயம், அத்தருணங்களில் தன் உடலின் மேலேயே அவளுக்கு உண்டான அருவருப்பு, `இதெல்லாம் தவறு` என்ற உறுதியான எண்ணம் முதலியவைதான் அவள் போக்கிற்குக் காரணமென்று.

    புதுமோகம் எழுந்த வேகத்திலேயே மறைய, பிற பெண்களை நாடினான். மனைவியிடம் சிடுசிடுக்க ஆரம்பித்தவனுடைய போக்கை எந்தவித எதிர்ப்பும் காட்டாது அவள் ஏற்றது அவனுடைய ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியது.

    `போயும் போயும் இப்படி ஒரு உம்மணாமூஞ்சியை மயக்கவா அவ்வளவு பாடுபட்டேன்!` நனவுலகத்தின் கசப்பை மாற்ற குடித்தான். குடித்ததால், இன்னும் கேவலமாக ஆனான்.

    ஒரு நாள் ரேணுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் கிரி — ரசத்தில் உப்பு போட மறந்துவிட்ட குற்றத்துக்காக. உடனே, சம்பளத்தை அப்படியே தன் கையில் கொடுத்துவிடும் சாதுவான மனைவியைப் பகைத்துக் கொள்வதா சupதானா என்ற நினைப்பு எழுந்தது. ஆனால், ரேணுவின் கண்களில் அவனைவிட அதிக பயம் தென்பட்டபோது, அவனுக்குள் ஒரு பூரிப்பு. ஒரு போதை. தான் எப்படி வதைத்தாலும் இவள் எதிர்ப்பு காட்டமாட்டாள் என்று சந்தேகமற புரிந்தபோது, அவனுடைய கொடுமையும் அதிகரித்தது.

    `நான் ஒரு ஈனமான பிறவி. ஆண்கள் ஏதோ விதத்தில் என்னைப் பந்தாடுவதற்காகவே பிறந்து தொலைத்திருக்கிறேன் போலிருக்கிறது!` என்று, எது நடந்தாலும் அதைத் தன் குற்றமாக ரேணு ஏற்றது அவனுடைய போதையை அதிகரிக்கச் செய்தது.

    இரண்டு நாட்களுக்கு முன்னர், தேத்தண்ணீரில் சீனி குறைவாக இருந்ததென்று,  எண்ணை போத்தலால் நெற்றிப் பொட்டில் அடிக்கப்பட்டு, ரத்தம் பீறிட மயங்கிக் கிடந்தவளை பக்கத்து வீட்டினர் மருத்துவமனையில் சேர்த்திராவிட்டால், அந்தச் சமூக சேவகி சொல்லியதுபோல், இந்நேரம் அவள் கதை முடிந்திருக்கும்.

    ரேணுவின் நினைவோட்டம் நிகழ் காலத்தை வந்தடைந்துவிட்டதை முகத்தின்வழி உணர்ந்துகொண்ட லீலா தொடர்ந்து பேசினாள்: “மாஸ்டர்ஸ் பட்டமில்ல வாங்கி இருக்கீங்க! எவ்வளவு அறிவு! எவ்வளவு உழைப்பு! தனியார் பள்ளியில தலைமை அதிகாரியா இருக்கீங்க!”

    “உதவி தலைமை அதிகாரிதான்!” ரேணு முணுமுணுத்தாள்.

    “ச​உை. மத்தவங்க ஒங்களை இந்த அளவுக்கு தாழ்த்த எப்படி விட்டீங்க, ரேணு?”

    ரேணுவின் ஆள்காட்டி விரல் தன்னிச்சையாக வாய்க்குள் போய், மேல்பற்களுக்கும் கீழ்பற்களுக்குமிடையே மாட்டிக்கொண்டது.

    “அட, படிப்பை விடுங்க. படிச்சிருக்கீங்களோ இல்லியோ, நீங்களும் ஓர் ஆத்மா. ஓர் உயிர். நம்ப எல்லாருக்கும் சுதந்திரமா, பயமில்லாம வாழற உரிமை இருக்கு”. அழுத்தந்திருந்தமாக லீலா கூறியது மனதைத் தைத்தது.

    `இனியும் என்மேல் ஒருவர் ஆதிக்கம் செலுத்தி, கண்டபடி ஆட்டிவைக்க விடக் கூடாது`. உறுதி செய்துகொள்ள முயலும்போதே அது அவ்வளவு எளிதல்ல என்பதும் புரிந்தது.

    பிறருக்கு அடங்கியே பழகிவிட்ட நான் மாற முடியுமா?

    ஆனால், தான் இப்படியே இருந்தால், தன்மீது இன்னும் இன்னும் மதிப்பு குன்றி, வெறுப்பே தோன்றிவிடும் என்ற பயம் எழுந்தது.

    பயம்.

    இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் உணர்வுகள் முழுமையாக வளராத குழந்தையாக, எல்லா சந்தர்ப்பங்களிலும் பயந்து நடுங்கியே காலத்தைக் கழிப்பது!

    எந்த மனிதப்  பிறவியும் தனிமரமில்லை. `பிறருக்கு நன்மை செய்வதே வாழ்வெடுத்ததன் பயன்` என்று நினைக்கும் லீலா போன்ற நல்லவர்களும் இந்த உலகில் இல்லாமல் போகவில்லை.

    அந்த நிதரிசனமே துணிச்சலைத் தர, ரேணுவின் முகத்தில் சிறு நகை பூத்தது.

    லீலாவும் அதில் பங்கு கொண்டாள். “என்ன முடிவு எடுத்திருக்கீங்க? ரொம்ப அவசரப்படுத்தறேனோ?”

    “இல்ல.. மொதல்ல, ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்,” ரேணு ஆரம்பித்தாள். “அப்போ எனக்கு ஏழு, இல்ல எட்டு வயசு இருக்கும்”. விம்மல் எழுந்தது, காலதாமதமாக.

    “எங்கம்மா என்னை பக்கத்து வீட்டில விட்டுட்டு, வேலைக்குப் போவாங்க..” பாம்புச் சுருளாய் இறுகிப் போயிருந்த நினைவுகள் சிறிது சிறிதாக நீள, குறுகியிருந்த ரேணுவின் நெடிய உருவமும் நிமிர ஆரம்பித்ததது.

    Share