பூ மரம்கூட புது தினுசுதான்

நிர்மலா ராகவன்

 

விமானத்தில் தனது இருக்கையைத் தேடியபடி, மேலே இருந்த எண்களைப் பார்த்தபடி நடந்தாள் சுபத்ரா.

அவள் ஒருவழியாக அமர்ந்ததும், பக்கத்திலிருந்தவர் புன்னகையுடன் அவளை வரவேற்றார்.

“ஸ்டேட்ஸுக்கா?” அனாவசியமாகக் கேட்டாள். கோலாலம்பூரில் புறப்பட்டால், அந்த மாஸ் விமானம் அங்குதான் போகிறது — வழியில் ஒரு மணி நேரம் துபாயில் நிற்பதைச் சேர்க்காவிட்டால்.

தலையை ஆட்டினார் அந்த இளைஞர்.

“நானும்தான்!” என்றாள் பெருமையுடன். “ என் பெண் — ஒரே பெண்தான் எனக்கு — அங்கே போய் பத்து வருஷமாச்சு…,“ முதன்முறை விமானப் பயணம் என்பதால் உண்டான படபடப்புடன் மூச்சு விடாமல் பேசினாள் சுபத்ரா.

ஏதோ, மரியாதைக்குச் சிரித்துவைத்தால், வரப் போகும் இருபது மணி நேரத்திற்குமேல் இவள் பேசித் துளைத்து விடுவாளோ என்ற பயம் எழுந்ததோ, என்னவோ, அவள் பக்கம் திரும்பாது, முன்னிருக்கையின் பின்பகுதியிலிருந்த பையைத் துழாவி, விமானத் தொலைகாட்சியைப் பற்றிய விவரங்கள் அடங்கிய குறிப்பேட்டை எடுத்து முகத்துக்கு நேராகப் பிடித்துக்கொண்டார் சகபயணி.

சுபத்ரா கைப்பைக்குள் எதையோ தேடி எடுத்தாள். வெளிர் நீலக் காகிதம் — விமானத் தபாலில் வந்த வேற்று நாட்டுக் கடிதம் என்பதைப் பறைசாற்றியது. இரண்டே வாக்கியங்கள் தாம்:

அன்புள்ள  அம்மா,

இத்துடன் ஒரு டிக்கட் அனுப்பி இருக்கிறேன். முதலில் விசா எடுத்துக் கொள்ளவும்.

சாரு

பத்து வருடங்களாக அவள் எங்கே, எப்படி இருக்கிறாள் என்பதுகூடத் தெரியாது. தான் தவித்த தவிப்பு மகளுக்குப் புரிந்திருக்குமா? எல்லாவற்றிற்கும் பிராயச்சித்தமாகத்தான் இப்போது — தாயின் கடைசிக் காலத்தில் — அவளைத் தன்னுடன் வைத்துக்கொள்ளத் தோன்றியிருக்க வேண்டும்.

கடந்து போனதை நினைக்கும்போது, கோபமோ, வருத்தமோ எழவில்லை. எத்தனையோ அழுதாகிவிட்டது. மனம் மரத்துப் போயிருந்தது. என்ன நடக்கும், ஏன் நடந்தது என்பதே புரியாததுதான் வாழ்க்கை. எல்லாவற்றிற்கும் அர்த்தம் தேடிக் கொண்டிருந்தால், அமைதி கெடுவதுதான் மிச்சம். மாற்ற முடியாததை ஏற்பதுதான் விவேகம். ஐம்பது வருட வாழ்க்கை அவளுக்குக் கற்றுக் கொடுத்திருந்த பாடம் அது.

கைக்குழந்தையுடன் பூவிழந்து நின்றிருந்தவளைத் தன்னுடன் சிற்றூரில் வைத்துக்கொண்டால், அவள் சமூகத்தின் வாயினாலேயே சிறுகச் சிறுகச் சாகடிக்கப் படுவாள் என்று புரிந்துகொண்டிருந்த தந்தை செய்த உபகாரம் அவளை நகர்ப்புறத்தில் இருந்த ஹாஸ்டலில் சேர்த்து, மேற்படிப்பு படிக்கவைத்தது. உத்தியோகம் கிடைத்து, ஒரு வாடகை வீட்டில் குடிபுகுந்தாள். வயிற்றுப்பாட்டைச் சமாளிக்க முடிந்தது. ஆனால், இருபத்து இரண்டே வயதாகி இருந்தவளின் உணர்வுகளால், `உன்னை அனுபவிக்க கணவன் இல்லை. எல்லா ஆசாபாசங்களையும் துறந்துவிட்டு, கருமத்திலேயே கண்ணாக இருந்து, போகிற வழிக்குப் புண்ணியம் தேடிக்கொள்!’ என்னும் எழுதப்படாத நிர்ப்பந்தத்தை ஏற்கத்தான் முடியவில்லை.

அவளுடைய வீட்டின் ஓர் அறையில் குடியிருந்தான் அவன். “நீங்க வீட்டு வேலை செய்யறப்போ, பாப்பாவை நான் பாத்துக்கிறேன்! ரொம்ப திண்டாடறீங்களே! எனக்கும் பொழுது போன மாதிரி இருக்கும்!” என்று வலிய வந்து நட்பு கொண்டபோது, அவனைத் தவறாக நினைக்கத் தோன்றவில்லை. தனியாளாக இருக்கிறான், பாவம்! அதுதான் பிறருடைய ஆதரவு வேண்டியிருக்கிறது என்றுதான் எண்ணினாள்.

“சாருக்குட்டி ஒங்க சாயல் இல்லீங்க. அவங்கப்பா மாதிரியோ?” என்பான் கலகலப்பாக.

`அவருடைய முகம்கூட எனக்குச் சரியாக நினைவில்லை!’ என்று சொல்லவா முடியும்!

“குழந்தைக்கு உடம்பு இப்படி கொதிக்குதே! இனிமே டாக்ஸி பிடிச்சு, டாக்டர்கிட்ட போக நேரமாகிடும். வாங்க! என் பைக்கில போகலாம். அட, ஆபத்துக்குப் பாவமில்லீங்க!” அவனுடைய வற்புறுத்தலில் அவளுடைய தயக்கம் சிறிது குறைந்தாலும், அவன் தோளில் ஒரு கை பதிக்கையில் சுபத்ராவின் உடல் லேசாக அதிர்ந்தது.

“குழந்தைக்கு டிப்தீரியா. கொஞ்சம் தாமதமா வந்திருந்தா..,” என்று டாக்டர் பயமுறுத்தியபோது, ஆபத்பாந்தவனாக  வந்த அவன்மேல் நன்றி சுரந்தது. தனக்கு நெருங்கியவன் என்று தோன்றிப் போயிற்று.

அதை உணர்ந்தவனாக அவனும், “இந்தக் காலத்திலே யாராவது ஒங்கமாதிரி எப்பவும் வெள்ளைப் புடவையே கட்டுவாங்களா? அப்படி என்ன வயசாகிடுச்சு ஒங்களுக்கு, ஒலகத்தையே துறக்க?” என்று உரிமையுடன் கோபித்தான்.

பல வருடங்களுக்குப்பின், முதன்முதலாக நீலவண்ணப் புடவை அணிந்தபோது, பயமும் வருத்தமும் மகிழ்வும் கலந்து வந்தன. பட்ட மரம் புத்துயிர் பெற்றது போலிருந்தது.

எங்கோ புறப்பட்டுக் கொண்டிருந்தவன், அவளைக் கண்டதும், விழிகள் விரிய நின்றான். “நீங்களா! யாரோன்னு நினைச்சேன்!”

சுபத்ராவுக்குப் பெருமையும், வெட்கமுமாக இருந்தது.

மறுநாள் அவள் வேலைக்குப் புறப்பட்டபோது, “வாங்களேன்! நானே கொண்டு விடறேன்,” என்று அவன் அழைத்தபோது, ஏனோ மனம் துள்ளியது. அவனுடைய குட்டையான, குண்டு உடலுக்கு அப்பால் இருந்த எதுவோ அவளை அவன்பால் ஈர்த்தது.

`பஸ்ஸில் கும்பலில் இடிபட்டுக்கொண்டு, பலரும் உரசப் போகும் கண்ராவிக்கு இது தேவலை!’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டாள்.  அவளது கை தோளில் பதிந்தபோது, திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தான் அவன்.

அவர்கள் உறவில் எப்போது, எப்படி நெருக்கம் ஏற்பட்டது என்றெல்லாம் அவள் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. அவளது மனக்குமுறலை வாய்திறவாது கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, இறுதியில் ஆதரவுடன் அவன் ஏதாவது சொல்வதைக் கேட்கும்போது, வாழ்க்கை அவ்வளவு தனிமையாக, வறண்டதாக இல்லை.

அவனுடைய அணைப்பில் படுத்திருக்கும்போது எழுந்த குற்ற உணர்ச்சி கோபமாக மாறியது. தன்னை இப்படி நிராதரவாக விட்டுப்போனது அகாலமாக மறைந்த கணவனின் குற்றம்.

விவரம் தெரிந்த நாளாய், ஒரு பெண் தனியாக வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்று, ஒப்புக்கு தம்பியையாவது துணைக்கு அனுப்பிய தாயின் குற்றம்.

`ஆண்கள் சாப்பிட்டபின்தான் பெண்கள் சாப்பிடலாம்; ஆண்கள் பேசும்போது குறுக்கே பேசக்கூடாது; அவர்கள் செய்வது தப்பாகத் தோன்றினாலும், அதை வெளிப்படையாகச் சொல்லிவிடக் கூடாது; ஆண்கள் பிற பெண்களை மட்டம் தட்டினால், அதை ஆமோதிப்பதுபோல் சிரித்துவைக்க வேண்டும்’ — இவ்வாறு சிறு சிறு வழிகளில் தம்மையும் அறியாது, `ஆண்களைச் சார்ந்து நிற்க வேண்டும்’ என்று கற்கிறார்கள் பெண்கள். வெள்ளை ஆடையும் விபூதியும் அணிந்தால் மட்டும் ஆசாபாசங்கள் ஒழிந்து விடுமா?

தன்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது, அனுசரணையாக இருந்தவனின் உறவு சுபத்ராவுக்கு வேண்டியிருந்தது. இதனால் மற்றுமொரு நெருங்கிய உறவு துண்டித்து விடலாம் என்பதை அவள் நினைத்துப் பார்க்கவுமில்லை.

விவரம் புரிந்ததும், மகள் சாரு அவனோடு தாயையும் தவிர்த்தாள்.

“நான் அமெரிக்கா போறேன், அடுத்த வாரம்!”

`நீயுமா என்னைத் தனியாக விட்டுப் போகப் போகிறாய்?’ என்று கேட்க நினைத்த சுபத்ரா, “எதுக்கு சாரு?” என்று ஆழ்ந்த வருத்தத்துடன் கேட்டாள்.

“என்னால தாங்க முடியலேம்மா. இந்தக் கண்ராவியைப் பாக்கக் கூடாதுன்னுதான் அப்பா போயிட்டார்,” என்று பொருமினாள்.

எதையும் பதிலாக அளிக்க முடியாமல், அத்தாயால் அழத்தான் முடிந்தது. கணவர் இருந்திருந்தால், அவள் ஏன் இப்படி இழிந்து போயிருக்கப்போகிறாள்!

அழுகையினூடே வாதமும் சமாதானமும் செய்துகொண்டாள். சாருவுக்கு இன்னும் விவரம் புரியவில்லை. தாயைப்போல் தானும் சமுதாயம் பழிக்கும் வண்ணம் நெறி தவறி நடந்து விடுவோமோ என்ற பயம் இந்தப் பருவத்தில் ஏற்படுவது சகஜம்தான். தானே நாலு இடங்களுக்குப் போய், பலதரப்பட்ட மனிதர்களோடு பழகினால், அப்போது புரியும் — தான் செய்யாத குற்றத்துக்கு எவ்வளவு துன்பம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது ஒரு தமிழ்ப் பெண் என்று!

யாரோ தோளில் தட்ட, நினைவுலகத்துக்கு மீண்டாள் சுபத்ரா. “விரைவில் உங்கள் உணவு வருகிறது. தயவு செய்து நேராக உட்காருங்கள்!” பெண்மையின் வளைவுகளை ரசனையுடன் வெளிப்படுத்திக் கொண்டிருந்த, உடலை ஒட்டிய பாத்தேக் உடை, மாறாத புன்முறுவலுடன் நின்றிருந்தாள் விமான பணிப்பெண். `அது எப்படி சிலருக்கு எப்போதும் சிரித்த முகமாக இருக்க முடிகிறது? அவர்களுக்கெல்லாம் துயரமே கிடையாதோ?’ என்று யோசித்தாள் சுபத்ரா.

உப்பு சப்பில்லாத சாப்பாட்டை விழுங்கி வைத்தாலும், உட்கார்ந்த நிலையில் தூங்குவது எளிதாக இல்லை. விட்ட இடத்திலிருந்து நினைவுகள் நீண்டன.

சாரு போன மறு ஆண்டிலேயே, “வீட்டிலே எனக்கு கல்யாணம் நிச்சயிச்சு இருக்காங்க,” என்று சுவற்றைப் பார்த்தபடி கூறிவிட்டு, அவள் திகைப்பைக் கவனியாதவன்போல, அறையைக் காலி செய்துகொண்டு போனான் அவன். நாற்பது வயதுக்காரியுடன் இனியும் என்ன சல்லாபம் என்று நினைத்தானோ!

அவனைத் தட்டிக் கேட்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது? தாலி கட்டியவளாக இருந்தால், இப்படி எளிதாக உதறிவிட்டுப் போக முடிந்திருக்குமா?

என்னுடைய இளமையையும், தனிமையையும் அவனுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு…ஹூம்! நடந்ததற்கு அவன் மட்டுமா குற்றவாளி?

அடுத்தடுத்து வந்த வருடங்கள் கசப்பிலும் சுயநிந்தனையிலும் கரைந்தன. சாருவின் கடிதம் அதை மாற்றியது. இனி வரப்போவது புதிய, இனிமையான வாழ்வு.

உற்சாகத்துடன் பாத்ரூமில் தலை வாரி, அங்கே வைக்கப்பட்டிருந்த லோஷனை வறண்டிருந்த முகத்தில் பூசிக்கொண்டாள் சுபத்ரா.

ஒரு நாள் பொழுதுக்கும் மேலாக விமானம் விண்வெளியில் பறந்தபோது அமைதியாக உட்கார்ந்திருந்த பயணிகள், அது தரையைத் தொட்டதும் அதற்கு மேலும் பொறுக்காதவர்களாக, நெருக்கியடித்து அதன் வாசலுக்கு வந்தார்கள்.

கூட்டத்தைப் பின் தொடர்ந்தாள் சுபத்ரா. சுங்கப் பரிசோதனை முடிந்து, வெளித்தளத்திற்கு வந்தாள். தெரிந்த மொழிதான். ஆனாலும், பேசும் விதத்தில் மாறுபட்டு, வேற்றுமொழியாகக் கேட்டது. எல்லாருமே எதையோ பிடிக்க ஓடுவதுபோல் தோன்றியது.

`இந்தக் கும்பலில் சாருவை எப்படித் தேடுவது?’ என்ற அச்சம் எழுந்தபோதே, இரு கைகள் அவளைப் பின்னாலிருந்து அணைத்துக் கொண்டன. “அம்..மா!” தொனி மேலிருந்து கீழே இறங்கிற்று, கொஞ்சலாக.

யார், சாருவா இது?!

ஒரு உபசாரத்திற்குக்கூட சிரிக்கத் தோன்றாது, தாய்மைப் பூரிப்புடன் இருந்த மகளின் உருவத்தையே விறைத்துப் பார்த்தாள் சுபத்ரா.

“எப்போ கல்யாணம் ஆச்சு?” ஏக்கமாகக் கேட்டாள். `இதைக்கூட எனக்குத் தெரிவிக்காமல் இருந்துவிட்டாய், பார்த்தாயா?’ என்ற குற்றச்சாட்டு அதில் தொக்கி இருந்தது.

“ஆகலே!” மகள் புன்னகைத்தாள். தாயின் திகைப்பைக் கண்டு சிரித்தாள்.

“இங்கே அப்படித்தாம்மா. ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்தா, சேர்ந்திருக்கலாம். கல்யாணம் செய்துக்கிட்டு, அப்புறம் சண்டை பிடிச்சுக்கிட்டு, டைவோர்ஸ், அது, இதுன்னு திண்டாடறது பெரிய முட்டாள்தனம். மனக்கசப்பு ஏற்பட்டா, சுமுகமா பிரிஞ்சு, ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம். மனசுக்குப் பிடிச்சவரா, இன்னொருத்தர் கிடைக்காமலா போயிடுவார்?”

“குழந்தை?”

“மூணு வருஷம் சேர்ந்திருந்தா, கூட இருக்கிற பார்ட்னர்தான் அதோட அப்பா”.

அவளையும் அறியாமல், சுபத்ராவின் நினைவில் அவன் வந்து போனான்.

“ரொம்ப முன்னேற்றமான நாடும்மா இது. நீங்க இனிமே இங்கேயே இருக்கலாம். அங்கே சமைக்கிறதை இங்கே சமைச்சுட்டுப் போங்களேன்! பேரனைக் கொஞ்சிய மாதிரியும் இருக்கும்.” நைச்சியமாகப் பேசினாள் சாரு.  “இங்கே பச்சைக் குழந்தையை யார்கிட்டேயாவது விட்டுட்டு, வேலை முடிஞ்சபிறகு ராத்திரி அழைச்சிட்டு வரணும். ஏகப்பட்ட செலவு, அலைச்சல்!”

சுபத்ராவின் உற்சாகம் மறைந்தது. தாய்மீது உள்ள பாசத்தால் தன்னை நாடு விட்டு நாடு வரவழைக்கவில்லை இவள். பிறக்கப் போகும் குழந்தைக்கு சம்பளம் இல்லாத வேலைக்காரி, ஆயா நான்!

“என்னம்மா, பேச்சே காணோம்?”

வெளியில் பார்வையை ஓடவிட்டு, “இங்கே எல்லாமே — பூ, மரம்கூட — நான் இதுவரைக்கும் பாக்காத தினுசா இருக்கு!” என்று பெருமூச்செறிந்தாள் சுபத்ரா.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க