ராமன் வரும் வ​ரை காத்திரு… (7)

ராமஸ்வாமி ஸம்பத்

ரிச்யமுக மலையில் அச்சத்தோடு காத்திருந்த சுக்ரீவனுக்கு அனுமன் ராம லக்ஷ்மணர்களை அறிமுகம் செய்வித்து ”இவர்கள் ஸீதாதேவியை அரக்கன் ராவணனிடமிருந்து மீட்க தங்கள் உதவியை நாடி வந்திருக்கிறார்கள்” என்று பகர்ந்தான். அச்சம் நீங்கிய சுக்ரீவனும் தான் வாலியிடம் பட்டபாடு அனைத்தையும் விவரித்தான்..

…..நானும் அண்ணன் வாலியும் ரத்தபாசத்தோடு கிஷ்கிந்தையில் வாழ்ந்த நாட்களில் பலசாலியான மாயாவி என்னும் அரக்கன் வாலியை மல்யுத்தத்திற்கு அழைத்தான். இருவருக்குமிடையே நடந்த உக்கிரமான போரில் இருவரும் ஒரு குஹைக்குள் நுழைந்தனர். அண்ணன் என்னை வெளியே காத்திருக்கச் சொன்னான். நாட்கள் உருண்டோடின. ஒருநாள் குஹையிலிருந்து பெருகிவந்த குருதியைப் பார்த்து வாலியை மாயாவி கொன்றுவிட்டான் எனக்கருதி அவ்வரக்கன் வெளியே வராதபடி அக்குஹையை ஒரு பெரிய பாறையால் மூடிவிட்டு நகர் திரும்பினேன். வானர மூத்தோர் கேட்டுக்கொண்டபடி கிஷ்கிந்தை அரியணை ஏறினேன். திடீரென ஒரு நாள் வாலி நாடுதிரும்பி என்மீது சினம் கொண்டு, ‘மோசக்காரா, என்னைக் குஹையில் அடைத்துவிட்டு என்னரசை கைப்பற்றிவிட்டாயா’ என்று கூறி என்னை நையப்புடைத்து, ‘இனி உன் உறவு எனக்கு வேண்டாம்’ என்று சொல்லி என் மனைவி ருமையையும் பறித்துக்கொண்டு நாட்டைவிட்டே துரத்திவிட்டான். நானும் ஏனைய அமைச்சர்களும் எவ்வளவு விளக்கியும் வாலியின் கோபம் அடங்கவில்லை. மேலும் நான் எங்கு சென்றாலும் அங்கு வந்து என்னைத் துன்புறுத்த ஆரம்பித்தான். முன்பு துந்துபி எனும் அரக்கனைக் கொன்றபின் வாலி தன் காலால் அந்த சவத்தை உதைத்தபின் அது அருகாமையில் உள்ள மதங்கரின்  ஆசிரமத்தில் வந்து வீழ்ந்த்து. அதனால் சினம்கொண்ட அம்முனிவர், ‘எவனால் இப்புனித ஆசிரமம் கறையடைந்ததோ அவன் இம்மலையில் அடியெடுத்து வைத்தால் அவன் தலை சுக்குநூறாக உடையக்கடவது’ என சாபமிட்டார். அதனால் இங்கு வாலி வரமுடியாது. ஆகவே நான் இங்கு ஒளிந்து வாழ்கிறேன்…

“ராமா! நம்மிருவர் சோகமும் சமமாக இருப்பதால் நாம் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம். முதலில் நீங்கள் வாலியைக் கொன்று என் ருமையை மீட்டுக் கொடுத்தபின், நான் உங்களுக்கு ஸீதாதேவியை மீட்க உதவுகிறேன்” என்றான் சுக்ரீவன்.

“அப்படியே” என்றான் ராமன். பின்னர் அவர்கள் இருவரும் அக்கினி சாட்சியாக நட்பு செய்துகொண்டனர். அதேநேரத்தில் இலங்கைச் சிறையில் உள்ள ஸீதை, வாலி மற்றும் அரக்கர்கோன் ராவணன் இம்மூவரின் இடது கண்களும் துடித்தன.

இருந்தாலும் சுக்ரீவனுக்கு ’ராமனால் மகாபலம் பொருந்திய வாலியை வதம் செய்யமுடியுமா?’ எனும் ஓர் ஐயம் ஏற்பட்டது. மலைப்பகுதியில் கிடந்த துந்துபியின் எலும்புக்கூட்டினைக் காட்டி, ”தொலை தூரத்தில் உள்ள கிஷ்கிந்தையிலிருந்து வாலி தன் காலால் அவ்வரக்கனின் சடலத்தை இங்கு விழச்செய்தான். அத்தகைய பலசாலி என் அண்ணன்” என்றான். அவன் நோக்கத்தைப் புரிந்துகொண்ட ராமன் தன் வலது கால் கட்டைவிரலால் அந்த எலும்புக்கூட்டினை பல யோசனை துரத்திற்கப்பால் விழச்செய்தான். “இது இப்போது காய்ந்துபோன எலும்புக்கூடல்லவா?” என்று கூறிய சுக்ரீவன்மீது சினம் கொள்ளாமல், “நண்பா, உன் ஐயப்பாடு எனக்கு புரிகிறது. நான் என்ன செய்தால் உனக்கு என் பராக்கிரமத்தின்மீது நம்பிக்கை உண்டாகும்?” என்றான் ராமன்.

சுக்ரீவன் அம்மலையில் வளர்ந்திருக்கும் ஏழு மரா மரங்களைச் சுட்டிக்காட்டி, “சிறுவயதில் நானும் அண்ணனும் இங்கு விளையாட வருவோம். அப்போதெல்லாம் வாலி ஒரு மரத்தைப் பற்றி  வேகமாக ஆட்டுவான். உடனே ஏனைய மரங்களும் புயலில் சிக்கியதுபோல் ஆடும். அப்படிப்பட்ட வல்லவன் வாலி” என்றான்.

முகத்தில் இளநகையோட ராமன் தன் வில்லிலிருந்து ஒரு அம்பை எய்ய, ஒரே சீராக இல்லாமல் அங்கும் இங்குமாக இருந்த அவ்வேழு மரங்களும் சடசடவென சாய்ந்தன. மகிழ்ச்சியில் திளைத்த சுக்ரீவன், “ராமா என்னை மன்னியுங்கள். வாலியின் வலிமையை  நன்கறிந்த நான் அதனை உங்களுக்குச் சொல்ல முற்பட்டேன்” என்று கூறி அவன் அடிபணிந்தான்.

அவ்வளவில் அம்மரங்களின் வேரடியில் உறங்கிக் கொண்டிருந்த வாசுகி என்னும் அரவரசன் எழுந்து ராமன் கண்களுக்கு மட்டும் தெரிந்தவாறு, “அண்ணலே, கிருத யுகத்தில் அமிர்தத்திற்காக பாற்கடலில் வடவரையை மத்தாக்கி என்னை நாணாக்கிக் கடைந்தபோது, என் உடலில் ஏற்பட்ட காயங்களைத் தங்கள் திருக்கரத்தின் ஸ்பர்சத்தினால் ஆறவைத்தீர்கள். அப்போது நான் என் களைப்பு நீங்க உறங்க ஒரு இடம் தேவை என்றேன். ‘யாரும் சுலபமாக நெருங்க முடியாத ரிச்யமுகத்தில் உறக்கம்கொள். அடுத்த திரேதா யுகத்தில் நான் மானிடனாக ராமன் எனும் பெயரோடு அவதரித்து அங்கு வருவேன். அந்த ராமன் வரும் வரை காத்திரு. நெளிந்திருக்கும் உன் உடல்மீது ஏழு மரா மரங்கள் வளர்ந்து எனக்கு அடையாளம் காட்டியவாறு நிற்கும்  (அதனால்தான் வாலி ஒரு மரத்தை ஆட்டும்போது வாசுகியின் நெளிவால் இதர மரங்களும் ஆடின). உன்மீது வளர்ந்த அம்மரங்களை நான் வீழ்த்தியதும் நீ களைப்பு நீங்கி உன் இடத்திற்குச் செல்லலாம்’ என்றீர்கள். உங்கள் கருணைக்கு நன்றி. இப்போது எனக்கு விடை கொடுங்கள்” என்று கூறி வணங்கி தன்னிடம் சேர்ந்தான்.

வாசுகி அகன்றதும், ராமன், “சுக்ரீவா, இனி தாமதிக்க வேண்டாம். நாளை காலை நீ வாலியை வலுச்சண்டைக்கு இழு. நீங்கள் இருவரும் மல்யுத்தம் செய்யும்போது நான் வாலியைக் கொல்கிறேன்” என்றான்.

அப்படியே சுக்ரீவன் செய்ய, ராமன் சற்று ஆலோசனையில் விழுந்த அளவில் வாலி சுக்ரீவனை பலவாறு தாக்கி மண்ணில் புரட்டி எடுத்தான். அடிபட்ட இளவானரன் அலறியடித்துக் கொண்டு ராமனிடம் ஓடி வந்து, “உன்னால் வாலியைக் கொல்ல முடியாதென்றால் எதற்கு என்னை ஏவிவிட்டாய்? நான் பேசாமல் இங்கேயே இருந்திருப்பேன் அல்லவா?” என்று குரோதம் பொங்கக் கதறினான்.

ராமன் அவனை பரிவோடு தடவிக்கொடுத்து, “நண்பா, என்னை மன்னிக்கவேண்டும். இதற்கு முன் நான் வாலியைப் பார்த்ததில்லை. இரட்டையாரான நீங்கள் ஒரே உரு கொண்டிருப்பதால் என்னால் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. இப்போது லக்ஷ்மணன் உனக்கு ஒரு மலர்க்கொடியை மாலையாக அணிவிப்பான். இந்த வித்யாசத்தால் நான் வாலியை இலகுவாக அடையாளம் கண்டு கொண்டு அவனை வீழ்த்துகிறேன் பார்” என்றான்.

சுக்ரீவன் வாலியை மீண்டும் யுத்தம்புரிய விளித்தான். மனைவி தாரை தடுத்தும் கேளாமல் வாலி வெளிவந்து சுக்ரீவனோடு மல்யுத்தம் செய்தபோது ராமனின் அம்பு கிஷ்கிந்தை மன்னனைத் தாக்கி வீழ்த்தியது. தன்னைக் கொல்ல வல்லவன் யார் என்று நினைத்து அந்த அம்பினை வாலி நோக்கியபோது, கம்ப நாட்டாழ்வார் வர்ணிப்பது போல்,

மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே

இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்

செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக்கண்டான்.

[மூன்று உலகங்களுக்கும் முக்கிய மந்திரமாக உள்ளதும், தன்னை வணங்கும் அடியார்களுக்குத் தம்மையே முழுவதும் கொடுக்கும் ஒப்பில்லாத சொல்லாக விளங்குவதும், இப்பிறவியிலேயே இனிவரும் ஏழு பிறவி என்னும் நோய் வராது, தான் தனியே தடுக்கவல்ல உயர்ந்த மருந்து போன்றதுமான ‘இராம’ என்ற சிறப்பு பொருந்திய பெயரைத் தன் கண்களால் அந்த அம்பிலே வாலி கண்டான்]

உடனே சினம் மேலோங்க, “மறைவிலிருந்து கொல்வதுதான் சத்யபராக்கிரமனான உன் தர்மமோ?” என்று வாலி பரிகசித்து ராமன்மீது வசைமாரி பொழிந்தான். பின்னர் இருவருக்கும் நடந்த வாக்குவாத முடிவில் வாலி தன் பிறன் மனைவியைக் கவர்ந்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, “ராமா, நாங்கள் வானரர்கள். தவறு செய்வது எங்கள் இயல்பு. வருங்காலத்தில் என் தம்பி தவறேதேனும் செய்தால் அவன்மீது இதே அம்பை எய்துவிடாதே. அவனுக்கும் என் மகன் அங்கதனுக்கும் இனி நீதான் காப்பு” என்று சொல்லி உயிர் நீத்தான்.

(​தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “ராமன் வரும் வ​ரை காத்திரு… (7)

 1. கிஷ்கிந்தை சென்று வாலி வதம் நடந்த இடம், ஶ்ரீராமன், மழைக்காலத்தில் தங்கி இருந்த குகை எல்லாமும் பார்த்தோம். :))) இந்த வர்ணனைகளைப் படிக்கையில் அவை எல்லாம் நினைவில் வந்தது.  

  வாசுகி இங்கே மராமரங்களுக்கு அடியில் படுத்திருப்பதும், அவன் நெளிவால் தான் மராமரங்கள் வாலி ஆட்டியபோது ஆடியது என்பதும் முற்றிலும் அறியாத ஒன்று.  வால்மீகியில் படித்த நினைவு இல்லை.  இது எதில் வருகிறது? 

 2. அன்புள்ள கீதாம்மா!
  தங்கள் பின்னூட்டதிற்கு நன்றி.
  வாசுகியைப் பற்றிய இந்த உபகதை செவிவழியாய் (கர்ண பரம்பரை) வந்திருக்க வேண்டும். இது வால்மீகியில் இல்லை, கம்பனிலும் இல்லை. ஆந்திராவில் ஒரு பெளராணிகரின் உபன்யாசத்தில் இதனைக் கேட்டேன்.
  வணக்கத்துடன்,
  ஸம்பத்

Leave a Reply

Your email address will not be published.