நாகேஸ்வரி அண்ணாமலை

கடந்த ஒரு மாதமாக நியுயார்க்கில் இருக்கும் இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராக பணிபுரிந்த தேவயானி கோர்பகாடே சம்பந்தப்பட்ட விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.  இதில் யாருக்கு வெற்றி?  அமெரிக்கா தனக்கு வெற்றி கிடைத்திருப்பதாக மார்தட்டிக்கொள்ளவில்லை.  ஆனால் இந்தியாவில்தான் பல தரப்பு அரசியல்வாதிகளும் ஏதோ இந்தியா கொடுமைக்கார அமெரிக்காவை வென்றுவிட்டதாகப் பீற்றிக்கொள்ளுகிறார்கள்.

அமெரிக்க நாட்டுச் சட்டப்படி அமெரிக்கா நடந்துகொண்டிருக்கிறது.  கோர்பகாடே தன்னுடைய குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கும் வீட்டு வேலைகள் செய்வதற்கும் தேர்ந்தெடுத்த பெண்ணுக்கு அமெரிக்காவிற்கு வருவதற்கு விசா வாங்கும் வகையில் பல பொய்கள் சொல்லியிருக்கிறார்.  விசா விண்ணப்பத்தில் வாரம் ஒரு முறை விடுமுறை கொடுப்பதாகவும் உடல்நலமில்லாமல் இருக்கும்போதும் விடுமுறையில் பிரயாணம் செய்யும்போதும் எல்லோருக்கும் பொதுவான விடுமுறை நாட்களிலும் சம்பளம் கொடுப்பதாகவும் அதுவும் மணிக்கு 9.5 டாலர் கொடுப்பதாகவும் வாரத்திற்கு நாற்பது மணி நேரமே வேலை வாங்குவதாகவும் அதற்கு மேல் அந்தப் பெண் வேலைசெய்ய நேரிட்டால் ஓவர்டைம் சம்பளம் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார்.  இந்த விதிகள் எல்லாம் அமெரிக்கச் சட்டப்படி வீட்டில் வேலைசெய்பவர்களுக்கு அவர்களை வேலைக்கு வைத்திருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை.  இப்படி ஒப்பந்தம் போட்டால்தான் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து தன்னுடன் வீட்டுவேலைக்குக் கூட்டிப் போகும் பெண்ணுக்கு விசா வாங்கலாம் என்பதால், முதல் ஒப்பந்தத்தில் தானும் கையெழுத்திட்டு அந்தப் பெண்ணையும் அவருடைய கணவரையும் கையெழுத்திட வைத்திருக்கிறார்.

விசா வாங்கி முடித்த பிறகு அந்தப் பெண்ணோடு இன்னொரு ஒப்பந்தம் தயார்செய்திருக்கிறார்.  அதில் மேலே குறிப்பிட்டுள்ள விதிகளை எல்லாம் மீறி செயல்பட்டிருக்கிறார்.  இரண்டாவது ஒப்பந்தத்தின்படி மணிக்கு 3.3 டாலர் கொடுப்பதாகக் கூறியிருக்கிறார்.  ஆனால் எத்தனை மணி நேரம் வேலைசெய்ய வேண்டும், ஓவர்டைம் சம்பளம் எவ்வளவு என்பது பற்றி எல்லாம் ஒன்றும் இல்லை.  ஒரு வேளை வேலைக்குக் கூட்டிவந்த பெண் பின்னால் தன் மேல் வழக்குப் போட்டால் இருக்கட்டும் என்று இரண்டாவது ஒப்பந்தத்தைத் தயாரித்திருக்கிறார்.  அதிலும் அந்தப் பெண்ணின் கையெழுத்தையும் அவர் கணவரின் கையெழுத்தையும் பெற்றிருக்கிறார்.  அமெரிக்காவைப் பொறுத்தவரை இரண்டாவது ஒப்பந்தத்தில் கூறியவை சட்டப்படி தவறானவை.  அதனால் அது மிகப் பெரிய குற்றம்.   அமெரிக்காவில் சட்டம் எல்லோருக்கும் பொது.  அரசியல்வாதிகள், பணம் படைத்தவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் என்று சட்டத்தை வேண்டும்போல் வளைக்க முடியாது.

இந்தியாவில் சட்டம் செயல்படும் முறை இதற்கு மாறானது.  பணம் படைத்தவர்களும் செல்வாக்கு மிக்கவர்களும் அரசியல்வாதிகளும் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம்.  அதற்கு மேல் இருக்கவே இருக்கிறது லஞ்சம்.  யாரையும் லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம்.  இது இந்தியாவின் தலைவிதி.  அதுவும் ஏழைகளை எப்படியும் நடத்தலாம் என்ற எழுதப்படாத சட்டம் இருக்கிறது.  மணிக்கணக்கில் சம்பளமா? வாரத்திற்கு ஒரு முறை விடுமுறையா?  உடல்நலக்குறைவு என்றால் அதற்கும் வேலைக்காரர்களுக்குச் செலவழிக்கவேண்டுமா?  இதெல்லாம் இந்தியாவில் கேள்விப்படாத விஷயங்கள்.  அதனால்தான் வேலைசெய்ய அழைத்துச்சென்ற பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி ஒன்றும் பேசாமல், இந்திய தூதரகத்தில் வேலைபார்த்த ஒரு பெண் தன் சொந்த விஷயத்தில் செய்த சட்ட மீறலைக் கண்டிக்கத் துணிந்த அமெரிக்க அரசின் சட்டத்துறையின் செயலை ‘அமெரிக்கா இந்தியாவை அவமானப்படுத்திவிட்டது’ என்று எல்லாக் கட்சி அரசியல்வாதிகளும் குறை கூறுகிறார்கள்.  பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவழியினர் ஒருவர் கோப்ரகடேவை அமெரிக்கா நடத்தியது சரியில்லை என்று கூறியிருக்கிறார்.  எத்தனை ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இந்திய மனப்பாங்கு அவரிடம் இன்னும் இருப்பது வேதனை தருகிறது.

இந்தியாவுடனான தன் உறவு இன்னும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் இதை இப்படியே இழுத்துக்கொண்டு போக வேண்டாம் என்பதற்காகவும் அமெரிக்கா ஒரு முடிவுக்கு வந்தது.  தங்கள் சட்டப்படி குற்றம் செய்த கோப்ரகடேயை குற்றம் புரியவில்லை என்று சொல்லவும் விரும்பவில்லை; அதே நேரத்தில் கோப்ரகடேயின் மீது வழக்கைத் தொடர்ந்து இந்திய அரசுக்கு மேலும் வெறுப்பேற்றவும் விரும்பவில்லை.  இதனால்தான் கோப்ரகடேயை நாட்டை விட்டே வெளியேற்றுவது என்று முடிவுசெய்தது.  கோப்ரகடேயை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற ஒரு அதிகாரி, ‘இப்படி நடந்ததற்கு வருந்துகிறோம்’ என்று சொன்னதற்கு கோப்ரகடே, ‘நீங்கள் ஒரு நண்பரை இழந்துவிட்டீர்கள்.  பதிலாக ஒரு வேலைக்காரப் பெண்ணையும் அவளுடைய கணவனான ஒரு குடிகார டிரைவரையும் பெற்றிருக்கிறீர்கள்’ என்றாராம்.  குற்றம் புரிந்த கோப்ரகடேக்கு, தன்னுடைய குற்றத்தை வெளிக்குக் கொண்டுவந்த பெண்ணை விட தான் அந்தஸ்தில் மேலானவள் என்ற அகங்காரம் இருக்கிறது.  அதனால்தான் அப்படிப் பேசியிருக்கிறார்.  கோப்ரகடே வீட்டில் வேலைசெய்ய வந்த பெண் தலைமறைவாகி இவர் மேல் புகார்கொடுத்ததும் இந்தியாவில் இருந்த அந்தப் பெண்ணின் கணவரை மனைவியின் இருப்பிடம் கேட்டுத் தொந்தரவு செய்திருக்கிறார்கள் கோப்ரகடேயின் உறவினர்கள்.  இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

கோப்ரகடே தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்.  அப்படித் தவறே செய்யவில்லையென்றால் நீதிமன்றத்தில் ஆஜராகி அதை நிரூபித்திருக்கலாமே.  ஏன் இந்தியாவுக்குத் தப்பி வந்திருக்க வேண்டும்?

இப்படி வந்தவருக்கு விமானநிலையத்தில் அப்படி ஒரு வரவேற்பாம்.  அவரை வரவேற்க வந்த அவர் தந்தை பத்திரிக்கையாளர்களை நோக்கி ‘எங்கள் குடும்பம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது நீங்கள் எனக்கு ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள்.  120 கோடி மக்கள் ஒன்று சேர்ந்தால் நியாயம் கிடைத்தே தீரும்’ என்று பேசியிருக்கிறார்.  கோப்ரகடே அமெரிக்கச் சட்டத்திற்குப் பயந்து இந்தியாவுக்கு ஓடி வந்ததா இந்தியாவின் வெற்றி?  மேலும் தன்னையும் தன்னுடைய மகளையும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் நிற்கும்படி அரசியல் கட்சிகள் கேட்டுக்கொண்டனவாம்.  அவர் தேர்தலில் போட்டியிடும் சாத்தியம் இருக்கிறதாம்.  குற்றம் புரிந்துவிட்டு அமெரிக்காவிலிருந்து தப்பி ஓடி வந்துவிட்ட ஒருவரையும் அவரது தந்தையையும் ஆளும் வர்க்கத்தில் சேர்க்க இந்திய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன.  என்னே இந்தியப் பண்பாடு?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *