திவாகர்

மௌனமே மிகச் சிறந்த தவச்செயல் என்பதற்கு நிறையக் காரணம் சொல்லலாம் போல. பிரச்சனைக்குத் தீர்வு காணும்போது கூட மௌனத்தை விட சிறந்த பதில் ஏதுமில்லை. அது போல மௌனத்தை விட கடினமான செயலும் ஏதுமில்லை. சும்மா இரு, சொல்லற’ என்று சும்மாவா சொல்லிச் சென்றார்கள் பெரியவர்கள்? மௌனமாக இருப்பது என்பது மனிதனால் அவ்வளவு எளிதான செயலாக எப்போதும் இருந்ததில்லை.

மனிதனுக்கு ஆதியில் எப்போது பேசும் சக்தி கிடைத்ததோ அப்போதிலிருந்து தன் பிராண சக்தியில் பாதி பலம் இழந்துவிட்டானோ என்றும் படுகிறது. எல்லோருக்கும் பேசத் தெரியுமென்பதால் பேசிப் பேசியே நாட்டைக் கெடுத்து தானும் கெட்டவர்கள் பலபேர். சும்மா இருப்பதால் சுகம் அதிகம் என்பதோடு பேசினால் கெடுதலே அதிகம் என்பதை உணர்ந்தவர் பெரியோர்கள்.

ஆகையினால் மௌனத்தில் சக்தி அதிகம். மௌனத்தால் கிடைத்த சக்தியைப் பயன்படுத்தியே ஆதிகாலத்தில் நம் சனாதன தர்மத்தை நம் முன்னோர்களான ரிஷிகள் நிலைநிறுத்தினார்கள் என்று சொல்வர். காஞ்சிப் பெரியவர்களின் மௌன விரதமும், ஸ்ரீரமண மகரிஷிகளின் மௌன விரதமும் பல பயன்களைப் பெற்றுத் தந்தன என்பதை மறுக்கமுடியுமா.. பிரபல தத்துவாசிரியர் பால் பிரண்டன் எப்படி வாய்மூடி மௌனமாக இருந்த ரமணமகரிஷியின் கண்களிலிருந்தே குருபோதனை தன்னை நோக்கி வந்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். காதலிலும் மௌனம் பேரங்கம் வகிக்கிறது. வாய்பேசுவதை விட மௌனத்துக்கு காதலில் பலவகைப் பதில்கள் காணலாம் என்பதை திருக்குறளிலிருந்து கம்பராமாயணம் வரை பல நூல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட மௌனத்தின் பேரழகையும் பேராற்றலையும் வர்ணிக்கும் கவிதையொன்று:

மௌனத்தின் பாடல்:

சொற்கூச்சல் பொழுதுகளில்Fakhrudeen (Ibnu Hamdun)
உன் மகத்தான பேரழகு வெளிப்படுகிறது.
நேசத் தென்றல் வீசும் இதயங்களை
வார்த்தைகளற்று வசீகரிக்கிறாய்.
காலக் காற்று
தலைமுடி கலைக்கையில்
சற்றே சங்கடமாகவும் உணர்கிறாய்
வார்த்தைகள் புதைந்த
வெட்கத்தில் சம்மதம் கொள்கிறாய்
முகிழ்க்கும் மோனப் பொழுதுகளில்
ஒரு தவம் போல் நீள்கிறாய்
வெளிப்படாத உன் குரலில் எப்போதும்
ஒளி(ர்)ந்தபடியிருக்கிறது ஒரு கவிதை.

 

அறியாமையின் நர்த்தனத்தை
ஏளனப் பார்வையால் வீழ்த்தி
மடிகறக்க எண்ணும் கரங்களுக்கு
புறக்கணிப்பைப் பரிசளிக்கிறாய்.
குறுமனப் பேய்கள் குதித்தாடுகையில்
நீயே ஆயுதமாகி விரட்டி அடிக்கிறாய்.
அவ்வப்போது நாற்றமெடுக்கும்
ஆணவ நோய்க்கு மருந்துமாகி..
பேசாப் பொருளின் ப்ரிய பொழுதுகளில்
வாழ்வாங்கு வாழ்கிறாய்.

பின்
பேச்சுகள் வெடித்தெழும் ஒரு தருணம்
‘அமைதி’யாய் வாய்க்கும் ஒரு மரணம்.

அந்தக் கடைசி இரண்டு வரிகளில் பேச்சுகள் வெடித்தெழும் தருணத்தையும் மௌனத்தின் மரணத்தையும் எளிமையாகவும் அருமையாகவும் விவரித்த திரு இப்னு ஹம்துன் அவர்களின் கவிதைக்காக இந்தவார வல்லமையாளர் விருது பெறுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகள்.

கடைசி பாரா: திரு அண்ணா கண்ணனின் தொலைக்காட்சி கவிதை

பஞ்சுண்டு தீயுண்டு முள்ளுண்டு மலருண்டு உண்டுண்டு பாடம் உண்டு
நெஞ்சுண்டு நெறியுண்டு நிழலுண்டு நிஜமுண்டு உண்டுண்டு நீதி உண்டு

வினையுண்டு விளைவுண்டு விழியுண்டு விடிவுண்டு உண்டுண்டு வெற்றி உண்டு
முனையுண்டு கணையுண்டு முதலுண்டு பதிலுண்டு உண்டுண்டு காலம் உண்டு

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்!

  1. மௌனத்தைப் பற்றிய கவிதையை வழங்கியுள்ள இந்தவார வல்லமையாளர் திரு.பக்ருதீன் அவர்களுக்கும், உண்டுண்டு என்ற சொல்கொண்டு அழகான கவிதை படைத்து கடைசி பாராவில் பாராட்டப்பட்டுள்ள திரு.அண்ணா கண்ணன் அவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *