சிரித்தாலும் கண்ணீர் வரும்.. அழுதாலும் கண்ணீர் வரும்..- கவியரசு கண்ணதாசன்
கவிஞர் காவிரி மைந்தன்
சிரித்தாலும் கண்ணீர் வரும்..
அழுதாலும் கண்ணீர் வரும்..
மனித ஜாதியின் மகத்துவம் சிரிப்பினிலும் அழுகையிலும்தான் கலந்திருக்கிறது. எந்த நிலையிலும் இந்த இருகூறுகள் மட்டுமே இவ்வுலகை இயக்கி வருகின்றன என்றுகூட கூறலாம். மனித மனதை ஆள்கின்ற இரண்டு உணர்வுகள் அல்லவா இவை? இவைகளைக் கடந்த மனிதன் இன்னும் பிறக்கவில்லையே! இன்ப துன்பங்களின் கலவையில் மனித வாழ்க்கை நெய்யப்பட்டிருக்கிறதோ? இரண்டிற்கும் அடிப்படைக் காரணம் மனமே என்றும் சொல்லப்பட்டிருக்கிறது! கண்கள் பார்வையைத் தருகின்றன! பாதையையும் காட்டுகின்றன! பெண்கள் இன்பத்திற்கும் காரணமாகின்றனர்! துன்பத்திற்கும் அவள்தானே மூலமாகிறாள் .. இந்தக் குற்றச்சாட்டு ஆண் வர்க்கத்தின் அப்பட்டமான குற்றச்சாட்டு!! பேதமை, மடமை என்கிற சமுதாயப் பூச்சுகளிடப்பட்ட வரலாற்றில்.. பெண் என் செய்வாள்?
பெண் என்றால் பெண் என்கிற திரைப்படத்தில் .. கவிஞரின் எண்ணரதம் வருகிறது பாருங்கள்! கதையின் போக்கில் கதாநாயகன் சிரிப்பை ஏற்கிறான். பாடல் வரிகளில்அதன் பரிணமிப்பு இடம்பெறுகிறது. கதையின் நாயகி.. கண்ணீரைச் சுமக்கிறாள்.. கருத்திலும் அதை நிறைக்கிறாள்.. ஏதோ பாடலலல்ல! இதயம் தொடும் பாடல்!
ஒவ்வொரு வரியிலும் உண்மை பட்டவர்த்தனமாய் உலா வருகிறது! அது என்ன கண்ணதாசன் என்ன எழுதினாலும் இப்படி நியதிகள் பதிவாகிவிடுகின்றன என்று கூட நான் எண்ணியதுண்டு! இந்தப் பாடல் அதற்கான அத்தாட்சி!
குழந்தை உள்ளம்..
கனிந்த எண்ணம்
கொண்டு பார்த்தால் புன்னகை
காதல் பாதி
கவலை பாதி
கலந்து பார்த்தால் சஞ்சலம்
காதல் மன்னன் ஜெமினி கணேசனும் நடிகை.. விஜயகுமாரியும் கலந்து தந்திருக்கிறார்கள்..
இன்பம் என்ன துன்பம் என்ன
மனதுதானே காரணம்..
மனது பாடும் பாட்டுக்கெல்லாம்
கண்கள்தானே காரணம்..
கண்கள் பார்க்கும் பார்வைக்கெல்லாம்
பெண்கள்தானே காரணம்..
பெண்கள் வாழும் வாழ்வுக்கெல்லாம்..
(ஆண்கள் தானே காரணம் என்றல்லவா வர வேண்டும்) …
தெய்வம்தானே காரணம்.. என்றே முடிக்கிறார்!
திரைப்படம் – பெண் என்றால் பெண்
பாடல் – கவிஞர் கண்ணதாசன்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்கள் – டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா
சிரித்தாலும் கண்ணீர் வரும்..
அழுதாலும் கண்ணீர் வரும்
உறவினிலே சிரிப்பு வரும்
பிரிவினிலே அழுகை வரும்
அழுதாலும் சிரித்தாலும்
சுகமாக அமைதி வரும்.. (சிரித்தாலும்)
குழந்தை உள்ளம்.. கனிந்த எண்ணம்
கொண்டு பார்த்தால் புன்னகை
காதல் பாதி கவலை பாதி
கலந்து பார்த்தால் சஞ்சலம் (சிரித்தாலும்)
இன்பம் என்ன துன்பம் என்ன
மனதுதானே காரணம்..
மனது பாடும் பாட்டுக்கெல்லாம்
கண்கள்தானே காரணம்..
கண்கள் பார்க்கும் பார்வைக்கெல்லாம்
பெண்கள்தானே காரணம்..
பெண்கள் வாழும் வாழ்வுக்கெல்லாம்..
தெய்வம்தானே காரணம்.. (சிரித்தாலும்)
கால வெள்ளங்களைத் தாண்டி இதோ மானுட இனத்திற்காக கண்ணதாசன் வரைந்திருக்கும் மற்றுமொரு சாசனம் பாடலாக!!