குறளின் கதிர்களாய்… (18)
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
-திருக்குறள்- 435 (குற்றங்கடிதல்)
புதுக் கவிதையில்…
எளிதில் பற்றி
எரிந்து சாம்பலாகிவிடும்
தீயின்முன் வைக்கோல்..
தெரிந்திடு இதை,
குற்றம்
வருமுன்னே காத்திடு
வாழ்க்கையைக் காத்திட,
வைக்கோலாய் அழியுமுன்னே…!
குறும்பாவில்…
தீமுன்னே வைக்கோலாய் அழிவு,
குற்றம் வருவதற்குள்
காத்திடாதார் வாழ்வு…!
மரபுக் கவிதையில்…
எரியும் தீயின் முன்பிருந்தால்
எரிந்தே சாம்பலாய் வைக்கோலும்
திரிந்திடும் கதைதான் தெரிந்ததுவே,
தேவை இக்கதை இக்கணம்தான்
வருத்திடும் குற்றம் வருமுன்னே
விரைவாய்க் காத்திடு வாழ்வதையே,
அருகில் வந்தபின் அழுதாலும்
அழிந்திடும் வாழ்வெனும் வைக்கோலே…!
லிமரைக்கூ…
முன்விழுந்த வைக்கோலை எரித்திடுமே தீ,
முன்காத்திடா குற்றமது
முடித்திடும் மனிதவாழ்வை தெரிந்திடு நீ…!
கிராமியப் பாணியில்…
காத்திடுநீ காத்திடு- கொடுங்
குத்தம் வருமுன்ன காத்திடு..
குத்தம் வந்தா வாழ்வழியொம்- மனுச
வாழ்வழியொம்,
குத்தம் வந்தா கெட்டழியொம்- எல்லாம்
கெட்டழியொம்..
தீக்க முன்ன வக்கோலுபோல
தீஞ்சழியொம்- வாழ்க்க
தீஞ்சழியொம்..
அதால,
காத்திடுநீ காத்திடு- கொடுங்
குத்தம் வருமுன்ன காத்திடு…!
படத்துக்கு நன்றி
http://olegvolk.net/newsite/texturelibrary/textures-artificial.html
அருமை நண்பரே! வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நினைத்துப் பார்க்க வேண்டிய குறள் இது. அனைத்துக் கவிதை வடிவங்களும் அழகு எனினும் வழக்கம் போல் கிராமிய பாணியில் அசத்தி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.