ஜெயஸ்ரீ ஷங்கர்

த்ரீஃபோர்த் ஜீன்ஸும், ஸ்லீவ்லெஸ் டீ ஷர்டும், காதிலிருந்து  கழுத்துவரை தொங்கியபடி ஊஞ்சலாடியது தங்கச் சங்கிலி. பச்சை ஜேட் ஜெம் மாலை கழுத்தைப் பிடித்து இழுக்காத குறையாக கனத்தது.  தலை முடியை மொத்தமாகத் தூக்கி பனானா கிளிப் போட்டும் சில முடிகளை உதிரியாக பறக்க விட்டும் புதுமையான ஹேர் ஸ்டைலில் அம்சமாக இருந்தாள் ப்ரீத்தி. மஞ்சள் முகத்தில் இரண்டு கரு வண்டுகளும் ஒரு ஸ்ட்ராபெர்ரிக்கு குறி வைத்துக் காத்திருப்பது போல முகமே சொன்னது.  ‘விளம்பர மாடல்’ அழகியாகக் அலங்காரம் செய்து கொண்டு கண்ணாடி முன் நின்று டச் அப் செய்து கொண்டேஅதன் வழியாக ரேனுவைப் பார்த்தவளின் கண்களில் குறும்பும், வெட்கமும் ஒன்று சேர,

என்னடி ப்ரீத்தி….’சண்டே’யும் அதுவுமா இன்னைக்கு இவ்ளோ ஸ்பெஷல்..? இப்படிக் கிளாமரா எங்கடி கிளம்புற? சம்திங் ராங்… என்கிட்ட சொல்லேன்….சந்தோஷப் பட்டுட்டுப் போறேன்…ப்ரீத்தியைப் பார்த்து புன்சிரிப்புடன் கேட்கிறாள் ரேணுகா.

‘டேட்டிங்’……என்று சொல்லிவிட்டு உதட்டைக் குவித்து மெல்லிய விசிலடித்தபடியே கஷ்டப்பட்டுத் திரும்பிப் பின் அழகையும் பார்த்து திருப்திப் புன்னகை தவழ ரேணுகாவை நோக்கி புயலென வந்தவள் தொப்பென்று அவளருகில் உட்கார்ந்து கொள்கிறாள் ப்ரீத்தி.

யாருடி.அது?..புதுக்கதையா இருக்கு…உங்க வீட்டுல தெரிஞ்சா…’டின்னு’ கட்டிடுவாங்க, தெரியுமொன்னோ? “ஊரு விட்டு ஊரு வந்து…..காதல் கீதல் பண்ணாதடீ …பேரு கெட்டுப் போகும்படி…ஆப்பு உனக்கே வைக்காதடி…” என்று கட்டைத் தொண்டையில் பாடிக் காண்பிக்கிறாள் ரேணு.

சீ….லூஸு  லூஸு …..உன் தகர ‘வாயை வெச்சுகிட்டு சும்மா இருடி’….! என்று பதிலுக்கு ராகம் பாடிவிட்டு, ரேணுவின் அவளது தோளில் கையைப் போட்டுக் கொண்டு….” விஷ்ணு, அதான் அந்த ‘மலையாள மம்மூட்டி’…..இந்த சண்டே டேட்டிங் போகலாம் வரியான்னு கூப்பிட்டான்….அவனுக்கு என் மேலே ஒரு கண்ணு இருந்ததை விட எனக்கு அவன் மேலே ரெண்டு கண்ணும் மனசும் இருந்தது….அதான்.. சும்மாப் போய் அப்படி என்ன தான் இருக்கு இந்த டேட்டிங்குலன்னு பார்த்துட்டு வந்துடலாம்னு போறேன்.

எங்க போகப் போறே..? சொல்லித் தொலைச்சிட்டுப் போ….! ஆனா….நீ இப்படிப் பண்றது எனக்குப் பிடிக்கலை. அவனே ஒரு அம்மாஞ்சி மாதிரி இருப்பான்….உனக்கும் அவனுக்கும் செட்டே ஆவாது…விட்ரு. போயும் போயும் நீ தான் அந்த ட்யூப் லைட்ட….சைட் அடிக்கிறே…!
வம்புக்கிழுத்தாள் ரேணு.

போதும்….உன்னோட ஜோசியம்…! உனக்கு பொறாமை வந்திருச்சு…? ப்ரீத்தி சிரித்துக் கொண்டே சொல்கிறாள்..

அதெல்லாம் ஒரு மண்ணும் கெடையாது…..நீ எவன் கூட வேணா டேட்டிங்,போட்டிங் எங்க வேணாப்  போ….உங்க வீட்டுல தெரிஞ்சி உன்னை ஷூட்டிங் பண்ணினா அதுக்கு  நான் பொறுப்பில்ல…! என்னை நம்பி அனுப்பிச்சிருக்காங்க ஞாபகம் இருக்கட்டும், என்ற ரேணுகா தலையணையைக் கட்டிக் கொண்டு நான் இன்னிக்குப் பூரா நல்லாப் படுத்துத்  தூங்கப் போறேனே…என்னைக் கடிக்கிற எறும்பு இன்னிக்கு ஊர்கோலம் போகப்போவுதாம்…. என்று கவிழ்ந்து படுத்துக் கொள்கிறாள். ப்ரீத்தி கிளம்பத் தயாராகிறாள்.

ஏய்….ரேணு….உன் ‘கைனியை’ எடுத்துட்டுப் போவா…என்று அவளது ‘கைனெடிக் ஹோண்டா’ வின் சாவியை எடுக்கப் போனதும், துள்ளிக் குதித்து எழுந்த ரேணு….அதத் தொட்டீன்னா பாரு…..! ஏன்…விஷ்ணுவுக்கு வாகனம் ஒண்ணும் இல்லியா? வெச்சிருப்பானே…..ஒரு தகர டப்பா …! அதை உருட்டிட்டு வரச்சொல்லி  வந்து கூட்டீட்டு போய்ட்டு கொண்டு வந்து விடச் சொல்லு…சுத்த மக்காயிருக்கியே..நேத்துத் தான் நான் என் வண்டிக்கு  ‘டாங்க் ஃபுல்’ பண்ணினேன்….அம்மாடி…! நீ எடுத்துட்டு போய் மொத்த சிட்டியை சுத்தி உரிஞ்சிட்டு கடைசீல காய்ஞ்ச கூடா கொண்டு வந்து நிப்பாடிடுவ…..அனுபவம் பேசுதும்மா ..அனுபவம் பேசுது..! என்று விவேக் ஸ்டைலில் சொல்லிவிட்டு சாவியை எடுத்துத் தலையணை அடியில் வைத்துக் கொள்கிறாள் ரேணுகா.

அல்பம்…அல்பம்…..என்று திட்டிய ப்ரீத்தி…..நாளைக்கு ப்ராஜெக்ட்ல ‘இது டௌட்டு’ன்னு என்கிட்டே வருவேல்ல …அப்புடு சூடு…! என்று ஷூவில் காலை நுழைத்துக் கொண்டே…..”பை..டி அல்பம்….என் வண்டியவே எடுத்துட்டுப் போறேன்….என்ன..! அதுக்கும் என்னை மாதிரியே பிரேக் இல்லை…!…எங்கியாச்சும் முட்டி…..என்று ப்ரீத்தி முடிக்கவில்லை….

இந்தா…..தொலை….மனசு கேட்கலை….என்று சாவியைத் தூக்கி ப்ரீத்தியிடம் வீச, அவள் லபக் கென்று பிடித்தவள்….உன்கிட்ட  செண்டிமெண்ட் பிட்டு தான் வொர்க் அவுட் ஆகுது…! நல்லபடியாக் கேட்டால்…..கொடுக்க மாட்டே…அனாவசியமா இன்னிக்கு என்னைப் பொய் சொல்ல வெச்சுட்டே…ம்ம்ம்..எனிவே ….. பை…என்று கதவைச் சார்த்தி விட்டு மறைந்தாள் ப்ரீத்தி.

னா …ன …னா ….ன …ன ன ன் னா ….னா…ன ….னா …னா …ப்ரீத்தி,  பாடிக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் பண்ணியது ரேணுவுக்கும் கேட்டது.அதைத் தொடர்ந்து கைனி  உறுமிவிட்டு மறைந்தது.

அறை திடீரென வெறிச்சோடியது போலிருந்தது ரேணுவுக்கு. ப்ரீத்தியும் ரேணுவும் பல வருடப் பழக்கம். ஒரே பள்ளி, ஒரே காலேஜ் என சேர்ந்து கும்மி அடித்து விட்டு…கேம்பஸ் இண்டர்வியூல  ரெண்டு பேரும் சேர்ந்து செலெக்ட்  ஆன விஷயம் தெரிஞ்சதும்…ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டாடி….சென்னையிலிருந்து பெங்களூருக்கு வேலைக்கு வந்தவர்கள். ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கிக் கொண்டு வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள்.

எட்டு மாதங்கள் ஒழுங்கா ஓடின வண்டி….இப்பத் தான் தடம் மாற ஆரம்பிச்சுருக்கு…அதுவும் ப்ரீத்திக்கு. அவங்க வீட்டுல அவளுக்கு மும்முரமாக வரன் பார்த்துக் கொண்டிருக்கும் விஷயம் ரேணுவுக்கும் தெரியும்.இதெல்லாம் எங்க கொண்டு போய் விடப் போகுதோ? என்று எண்ணியவள், “சீக்கிரமா வந்து சேரு”. என்று ப்ரீத்திக்கு ஒரு மெசேஜ், அடித்து அனுப்பி விட்டு, எழுந்து அறையைப் பூட்டி விட்டு உறங்கிப் போனாள் .

தூக்கம் ரேணுகாவை கனவுலகத்திற்கு அழைத்துச் சென்றது.வித விதமான ஆடையில் ப்ரீத்தி விஷ்ணுவுடன் ஆடியபடி கூடவே கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாத பாடலும் ஒலித்துக் கொண்டிருந்தது. எத்தனை மணி நேரம் தூங்கினாளோ, புரண்டு படுத்தவளை சாம்சங் ”
“அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே… ” என்று அழைத்தது…

மின்னிய கைபேசியை எடுத்து…..ராட்ஷசி ….வந்துட்டா போலிருக்கு….நினைத்துக் கொண்டே….எழுந்து கைபேசியை மூடி வைத்துவிட்டு கதவைத் திறக்கிறாள்.

காலையில் பனிமலர் போலப் போனவள் ப்ரீத்தி வரும்போது அலைந்து திரிந்து அலுத்துப் போய் கசங்கிய காகிதமாய் நின்றிருந்தாள் .

அவளது அந்தக் திருக்கோலத்தைப் பார்த்த ரேணுகா….னா …ன …னா ….ன …ன ன ன் னா ….னா…ன ….னா …னா….என்று பாடியவள்,,
வா…வா… ப்ரீத்தி….ஒரே நாள்ல இப்படித் தேய்ஞ்சு போய் வந்திருக்கே….என்னாச்சுடி ? ரேணுவின்  அதிர்ச்சி  அவள் குரலாக பேசியது.

ஹப்பாடி…..! என்ற ப்ரீத்தி அப்படியே கட்டிலில் சாய்ந்தாள் . கனவெல்லாம் கலைஞ்சு போச்சு…ஆனால் ரொம்ப நிம்மதியா இருக்கு என்று சொல்லிக் கொண்டே, அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பை மனம் விட்டு, வாய் விட்டு கல கலவென்று பெரிதாகச் சிரித்தாள்

என்ன ஒரே நாள்ல இப்படி மந்திரிச்சி விட்டுட்டானே அவன்…? படுக்குறா…புரளுறா …..சிரிக்கிறா….இவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே…ப்ரீத்தி சத்தமாகப் பாடினாள்.

என்னாச்சுடி உனக்கு? காதல் கிறுக்கு பிடிச்சிருச்சா? போச்சு போ..நீ விழுந்துட்டே…இனிமேல் அவ்ளோதான். இத்தனை நேரமா எங்கெல்லாம் போனீங்க?

நேரா பானர்கட்டா ரோட்ல இருக்குற ‘கோபாலன் இன்னோவேஷன் மால்’ தான் போனோம்….விஷுக்கு அங்க போகணும்னு ரொம்ப நாளா ஆசையாம். எனக்கும் பார்க்கணும்னு தான் இருந்துச்சு, சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.

ஒரே நாள்ல விஷ்ணு உனக்கு விஷுவாகிப் போனானா? சரி..அந்த ‘ஜெயதேவா ஃப்ளை ஓவர்’ பக்கத்துல இருக்கே அதுவா..? வாய் பிளந்தவள், அங்கெல்லாம் போனா நம்ம சொத்தை எழுதி வாங்கி நடுத்தெருவுல விட்டுருவாங்கடி…அவ்ளோ டெம்ப்டிங்கா இருக்குமே…..நானும் வந்திருப்பேன்…என்று அலுத்த குரலில் மெல்லச் சொல்கிறாள் ரேணுகா.

நடந்து நடந்து செருப்பு ரெண்டு இன்ச் தேஞ்சு போச்சு.  ‘கார்டை’ இழுத்து இழுத்து ‘கத்தையும்’ கரைஞ்சு போச்சுடி …! ‘ஸ்வைப் பண்ணும்போது மஜாவா இருந்துச்சு…..வெளில வந்து மனசுக்குள்ள கணக்குப் போட்டதும், ‘பகீர்’ னுச்சு .

க்ரெடிட்டா ….டெபிட்டா …?

ஆத்திரத்தை  மூட்டாதடி….நானே……ஹி ……ஹி ……ஹி …….ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி …!

என்னடிது  பிரகாஷ் ராஜ் ஸ்டைல்ல…..சிரிக்கிற…? அவரு தான் டென்ஷன் வந்தா இந்த மாதிரி சிரிப்பாரு…உனக்கும் அது தொத்திக்கிச்சா என்ன..? கட்டிப்புடி வைத்தியம் தான் பண்ணணுமா …..? இல்ல பண்ணியாச்சா..?

தேவுடா…தேவுடா…எழுமல தேவுடா…சூடுடா..சூடுடா…இந்தப் பக்கம் சூடுடா…! கட்டை தொண்டையில் பாடியபடியே  ரேணு…இன்டக்ஷனை  ஆன் பண்ணி பாலைச் சூடு செய்தாள். ” காலேல ஒன்பது மணிக்குப் போன பொண்ணு இப்படி ராத்திரி பத்தரைக்கு வந்து நின்னு,,பைத்தியமட்டமா சிரிச்சா….நான் எங்கிட்டுப் போவேன்…டீ …..பயமுறுத்தாதடி …பொழுது விடிஞ்சா டூட்டிக்கு போகணும். இப்படிச் சிரிச்சு கூத்தடிக்கும்படிக்கு அப்படி என்ன தான் ஆச்சு உன் டேட்டிங்கு…? கேள்வி கேட்டா இந்தச் சிரிப்பு சிரிக்கிற…?

ஆஃபீஸ்ல அந்த விஷ்ணு உன்னை லோ லோன்னு  ஃபாலோ  பண்றான்னு எனக்கும் தெரியும்….நீயும் கண்டும் காணாத மாதிரி மனசுக்குள்ள ‘பல்பை’ எரியவிட்டுட்டு ரெக்கையெல்லாம் கட்டிக்கிட்டுப் பறந்து பறந்து உள்ளுக்குள்ளே புழுங்குறதும் எனக்குத் தெரியும்.அவன் சரியான ‘ட்யூப்’ டி. ப்ரீத்தி..! ஆமா…ஷாப்பிங் பண்ணினியே ஒரு கவரையும் காணோம்….எங்கியாச்சும் சிரிச்சுட்டே விட்டுட்டு வந்துட்டியா என்ன? என்னெல்லாம் வாங்கித் தந்தான் உன் விஷ்ணு?

இதைக் கேட்டதும்…மறுபடியும் ஹி ஹி ஹி ஹி ஹி  என்று விட்டு நிறுத்தியவள்…..’உட்லண்ட்ஸ் ஷூ’… ‘ரெய்ட் & டேலர்’ல ரெண்டு செட் ஃபார்மல்ஸ் , கோபாலன் சினிமாஸ்ல போய்  ‘நோ ப்ராளம்” ஹிந்தி மூவி பார்த்துட்டு, ‘சாய் சிவ சாகர்ல’ ‘சவுத்  இந்தியன் ஃபுட்’ ஒரு கட்டு கட்டிட்டு , ‘பாஸ்கின் ராபின்ஸ்ல’ டெசெர்ட்….ம்ம்ம்…அமேசிங்….என்று ரேணுகாவின் வயிற்றில் நெய்யை ஊற்றினாள் ப்ரீத்தி.

அடடா….அடடா…..என்று பாலை ஆத்திக்கொண்டே… எங்கே ஷூவைக் காமி..பாக்கறேன் ..! நீ ரொம்ப லக்கிடி..ப்ரீத்தி. சந்திச்ச முதல் நாள்லயே…லக்கி ப்ரைஸ் அடிச்சாப்பல இத்தனை வாங்கிட்டு வந்திருக்கே..? விஷ்ணு ரொம்ப நல்ல ஆள்டி …அவனை  கை நழுவ விட்டுடாதே. இந்தக் காலத்துல ஹஸ்பண்ட் எல்லாம் வொய்ஃ ப்புக்கு எது வாங்கணும்னாலும் கணக்குப் பார்க்குறாங்களாம். எங்க அண்ணி சொல்லி வருத்தப்பட்டுச்சு. சரி நீங்க என்னென்ன பேசினீங்க…சொல்ல விருப்பப்பட்டா சொல்லு இல்லாட்டி வேண்டாம்…எனக்குத் தூக்கம் வருது….பிகு  பண்ணிக் கொண்ட ரேணுகா ”ய்ஷ்ஷ் ஷ் ஷ் ‘என்று டம்ப்ளரை உதட்டோடு வைத்து க் கொண்டு முகத்தை உயர்த்திக் கடைசி சொட்டுப் பாலை உறிஞ்சிக் குடித்தாள் .

பேசினோம்….நிறைய….பேசினோம்….!அதாவது, அவங்களுக்கு கேரளாவுல திரிச்சூர் பக்கத்துல ‘சாலக்குடி’ ல ஒரு ஒட்டு வீடு சொந்தமா இருக்காம். கூடவே ரெண்டு தங்கச்சிகளாம். அப்பா இல்லியாம்…அம்மா மட்டும் தானாம். அம்மா ஒரு ஹார்ட் பேஷன்டாம்…தங்கச்சி ரெண்டு பேருக்கும் படிப்பு வராமால் பத்தாவதோட நிப்பாட்டி இப்போ வரன் பார்த்துண்டு இருக்காங்களாம்.வீட்டுல ரெண்டு பலா மரம், நாலு மாமரம், ஆறு தென்ன மரம், ஒரு சந்தன மரம் கூட இருக்காம்…!

ரெண்டு நாய்….ஒரு டஜன் பூனை, பாம்பு….தேளு …இதெல்லாம் இருக்கறதா சொல்லவே இல்லியா…? இடைமறித்த ரேணு…நான் தான் சொன்னேன்ல….அவன் ஒத்து வரமாட்டான்னு….நீ சொல்றதைக் கேட்கும்போதே ஆஸ்பத்திரி வாடை வருது…பேசாமே கழண்டுக்க…!
நீ அவுங்க வீட்டுக்குப் போனேன்னு வெய்யி…உன்னியும் சந்தன மரம் கணக்காத் தான் பார்ப்பானுங்க…அப்டியா விஷயம்….ஆளு நல்லா எடை போட்டுத் தான் வெரட்டிருக்கான்.

கொஞ்சம் உன் ஸ்பீக்கரை மூட்றியா ?  அவன் அவனோட குடும்பத்தைப் பத்தி உண்மையைத் தான சொன்னான்….அப்படி இப்படின்னு பொளந்து கட்டி அளந்து பொய் சொல்லலியே. அந்த நேர்மை எனக்குப் பிடிச்சிருந்தது.

போச்சுடா…….! நீ கண்டிப்பா அக்மார்க் லூஸு தான்னு அவன் நினைச்சிருப்பான்டி .

அப்பறம்?

ம்ம்ம்ம்..என் குடும்பத்தைப் பத்திக் கேட்டான்..

ஹோஹோ…..நீயும் சொல்லிருப்பியே…எங்கப்பா பெரிய டாக்டர், அம்மா ஒரு காலேஜ்ல பிரின்சிபால், நான் என் ஆத்துல ஒரே பொண்ணு,சென்னையில சொந்தமா போரூர்ல ரெண்டு பங்களா இருக்கு. பத்தாததுக்கு அப்பாவுக்கு ஒரு நர்சிங் ஹோம் வேற இருக்கு, நான் எஸ் ஆர் எம் காலேஜுல  என்ஜினீயரிங் ஐ.டி  முடிச்சுட்டு நேரா இங்க வேலைக்கு சேர்ந்தாச்சு…எடுத்த எடுப்புல முப்பதாயிரம் சம்பளம்…நீயும் இப்படில்லாம் ‘பீலா’ விட்டியா?.அப்டியே என்னைப் பத்தியும் சொல்லி வெச்சியா?

போடி…இப்படியெல்லாம் சொன்னால் நான் ஏதோ என்னைப் பத்திப் பீத்திக்கிறேன்னு நினைச்சிட மாட்டானா..? அதனால அதெல்லாம் ஒண்ணுமே  சொல்லலை.

அப்பறம்..?

நானும் சாதாரண குடும்பத்துலேர்ந்து தான் வரேன்னு சொல்லி வெச்சேன்.

இப்பத் தான் நீ புத்திசாலியா யோசிச்சிருக்கே..அவன் நினைச்சா மாதிரி நீ வசதியா இருக்கலைன்னு நினைச்சி இப்ப ஐயா கழண்டுக்கப் பார்த்திருப்பானே.

அது தான் இல்லை…..”அம்மா….ரொம்ப நல்லதாப் போச்சு”ன்னு மட்டும் சொன்னான்.

அப்பறம் என்ன தாண்டி நடந்துச்சு….?

ரெண்டு பேருமா மூவி போனோமா, அங்கே ….

அங்கே….?

உன் மூஞ்சி….நெனைப்பைப் பாரு…இவ்ளோ கியூரியஸா…?

படம் ‘ரொம்ப போர்’ன்னு சொன்னான். உடனே நானும், சரி…வா போகலாம்…எனக்கும் பிடிக்லைன்னு படத்துல பாதீலயே  கிளம்பிட்டோம். வெளிய வந்ததும், ஆயிரம் ரூபாய் தண்டம்…ன்னு சொல்லிண்டான். நானும் நினைச்சேன்..என்னோட ஒரு நாள் சம்பளம் கோவிந்தா….ன்னு. என்றாள்  ப்ரீத்தி.

அவனோட காசு தானே..போட்டும்…இப்பவே நீ ஏன் கவலைப் படறே? .விடு.

கடுப்பக் கிளப்பற பார்த்தியா….அம்புட்டும் என் துட்டுடி….! அவன்  பர்ஸையே தொறக்கலை. உன்னை மாதிரியே அவனும் அல்பம்…!

சொல்ல மாட்டே…என் வண்டில பெட்ரோல் கீதா….இல்ல எம்டியா? அல்பத்துக்கே ஆப்பு வெய்க்கிறவ நீ..! சரி இது கிடக்கட்டும் நீ சொல்லு…நம்ம ஹீரோ பத்தி.

அதான் சொன்னேனே…சுத்த ஜீரோ ன்னு..! அவன் ஷாப்பிங்ல ஒண்ணுமே வாங்கலை. இருந்தும் நான் தான் உனக்கு இது நல்லா இருக்கும்னு சொல்லி  இதை வாங்கிக்க….அதை வாங்கிக்க…ன்னு வாங்கினேன்…! விஷு வேண்டவே  வேண்டாம்னு தான் சொன்னான்.

நீ…சுத்த ஏமாளி டீ …என்ன ஒரு பத்தாயிரத்தைப் பந்தாடியிருப்பியா?

பாக்கியை யாரு ஆடுவா….? மொத்தம் இருபதாயிரம் ஆச்சு…!

இந்த மாசம் வாடகையை முழுசும் நீயே கட்டிடு….! என்று வம்புக்கு இழுத்தாள் ரேணுகா..!

எலி ஏரோப்பிளேன் ஓட்டச் சொல்லுதாக்கும்…? ப்ரீத்தி ரேணுகாவைப் பார்த்து கிளியின் குரலில் பேசினாள்.

கேக்குறவ கேனையா இருந்தா, எலி கூட எலிகாஃப்டர் ஒட்டிச்சுன்னு சொல்லலாம்னு  தான் சொல்லுவாங்க…ம்ம்..அப்பறம் என்னாச்சுடி….எனக்குத் தூக்கம் வருது. சீக்கிரம் போன கதையைச் சொல்லி முடி.

ரேணு……எப்படியும் எங்க வீட்ல எனக்கு ரொம்ப மும்முரமா மாப்பிள்ளை பார்க்குறாங்க, இல்லையா, இந்த நேரத்துல நானே விஷ்ணுவைப் பத்தி எங்க ஆஃபீஸ்ல வேலை பார்க்கிறான்னு சொல்லி விஷயத்தைச் சொன்னால் , எங்க வீட்ல அப்பா, அம்மா, பெரிசா எதிர்ப்பு ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. கல்யாணத்துக்கு நாள் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க.சரிதானே நான் சொல்லுறது?

ஆமாம்…..கரெக்ட் தான்…ஆனால் நீ இப்படி ஊரைச் சுத்தினா….?

வீட்ல பார்க்குற மாப்பிள்ளை கிட்டக் கூட கொஞ்சம் தனியாப் பேச அனுமதி கொடுப்பாங்க. அந்த நிமிஷத்துல நம்மால அவரைப் பத்தி என்னத்தப்  பெரிசா கண்டு பிடிச்சிட முடியும்?  அதனால தான் நானே விஷ்ணுவைத் தெரிந்தெடுத்தேன், ஆனாலும் எனக்கொரு டௌட்.
அவனோட கொஞ்ச நாள் பழகிப் புரிஞ்சுண்டா நாளைக்கே ஃபியூச்சர்ல எந்தப்  ப்ராப்ளம் வந்தாலும் அதுக்கு நானே பொறுப்புன்னு சொல்லிக்கலாம்.அதனால தான் இந்த டேட்டிங்க்கு நானும் சரின்னு கிளம்பினேன்.

ஆனா…

விஷு எதுக்குமே ஒரு காசு கூட செலவு செய்யலைடி …ஒரு கிஃப்ட் கூட வாங்கி இந்தான்னு தரத் தோணலை. என்னைப் பத்தி எதுவுமே சரியாக் கேட்டுத் தெரிஞ்சுக்கலை. பூரா பூரா அவன் வீட்டுப் புராணம் தான். நான் அப்பவே முடிவு பண்ணிட்டேன்…இவன் நமக்கு சரிப்பட்டு வரமாட்டான்னு.  இதுல ஒரு ஜோக் என்ன தெரியுமா?

ம்ம்ம்……என்ன?

கிளம்பும்போது சொல்றான்….’என் தங்கையோட ஷாப்பிங் வந்த ஒரு ஹாப்பினெஸ் இருக்குன்னு’ அப்படியே,  தாங்கியூ  ஃபார் யுவர் கிஃப்ட்ஸ்…ன்னு சொல்லிட்டு கிளம்பினான்.

அடப்பாவி…! ரேணுகா திறந்த வாயை மூடாமல் நின்றாள். வெச்சானா உனக்கு சரியான ‘ஆப்பு’.

நல்ல வேளை ……விஷுவைப் பத்திப் புரிஞ்சுண்டேன்….இல்லாட்டி அவன் பாக்குறான்…பாக்குறான்னு …ஒரு ‘இது’ வை டெவெலப் பண்ணிக்கிட்டு பிரச்சனையில் விழறதுக்கு முந்தி,  நல்லவேளை தப்பிச்சேன். இப்பக் கூட அவனைப் பாக்கும்போது அவன் கடைசில சொன்ன வார்த்தை மட்டும் தான் மனசுல நிக்கும்…சொல்லிக் கொண்டே….. னா …ன …னா ….ன …ன ன ன் னா ….னா…ன ….னா …னா..என்று சந்தோஷமாகப் பாடும் ப்ரீத்தியுடன் இணைந்து ரேணுவும் பாடுகிறாள்.

தனது அறையை நோக்கி வண்டியில் சென்று  கொண்டிருகந்த விஷ்ணுவுக்கு மனசுக்குள் மிகவும் நிம்மதியாக இருந்தது.
“எத்தர தான் நன்னாயிட்டுச் சம்பாதிச்சாலும், இப்படியா செலவு செய்வா? பணத்தைப் பத்தின ஒரு பிரக்ஞையே இல்லாமே கண்டதெல்லாம் வாங்கி பணத்தை தண்ணியா செலவு செய்து, அம்மா, தங்கைகள், நான் கூட இப்படி எல்லாரும் நம்மாத்தில் ஒருமிச்சு ரொம்ப சிக்கனமா இருக்கச்சே.இவள் மாத்ரம்  இப்படி ‘தூம்தாம்’ பண்ணினா, கண்டிப்பா பிற்பாடு பல பிரச்சனை தானாத் தேடி வரும்.நல்லவேளையா, ரூம்மேட் ராகுல் கொடுத்த ஐடியாப் படி ‘இந்த முதல் சந்திப்புலயே’ டீசண்டா கழண்டுக்க முடிஞ்சது. ரூமுக்குப் போனதும் அம்மாவுக்கு கடுதாசி, சிக்கனமா இருக்கத் தெரிஞ்ச ஒரு பொண்ணைச் சீக்கிரமாப் பார்த்து கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லி  எழுதி வைக்கணம், என்று தனக்குள் நினைத்துக் கொள்கிறான்.

ஜெயஸ்ரீ ஷங்கர்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *