நிர்மலா ராகவன்

எனது அன்புக்குரிய மணிமொழி,

நினைத்தாலே எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.

ஓ! உன் நலத்தைப்பற்றி விசாரிக்க மறந்துவிட்டேனோ? சரி. சரி. நீ நலமாக இருப்பதால்தானே இதைப் படிக்க முடிகிறது! நமக்குள் என்ன formalities!

எதற்கு இவ்வளவு கோபம் என்கிறாயா? பின்னே என்ன?

என் பாடல்களைப் பதிவு செய்ய, நாடு விட்டு நாடு போயிருந்தது உனக்குத் தெரியுமல்லவா? அங்கே ஒரு — அவர் மொழியில் சொல்லப்போனால், ஒரு வாத்தியக்காரர். (`பக்கவாத்தியம்’ என்று தன்னைப் போன்றவர்களைக் குறிப்பிடுவது மரியாதைக்குறைவு என்று விவாதம் செய்வார். எதற்கு வம்பு!)

அவரைப்பற்றி கொஞ்சம்.

நாடளாவிய போட்டிகளில் பரிசு பெற்றதுகூட அவருக்குப் போதவில்லை. சகட்டுமேனிக்கு (அப்படியென்றால் என்ன?) எல்லாரையும் பழித்து, அதில் ஒரு ஆனந்தம் காண்பவர்.

வாய் ஓயாது, தன் அசாத்திய திறமைகளைப் பற்றியும், பிற கலைஞர்களின் புளுகு, சவடால் இவற்றைப் பற்றியும் பேசுவதால், தான் உயர்ந்த நிலையிலிருக்கிறோம் என்று நம்புபவர். அவர் எத்தனை முறை சொன்னதையே சொன்னாலும், சிரிக்கத் தயாராக இருந்த மாணவர்கள் வாய்த்திருந்தது அவரது அதிர்ஷ்டமா, அல்லது மாணவர்களின் குருபக்தியா, முட்டாள்தனமா? நீயே மண்டையை உடைத்துக்கொள்.

நான் இசையைத் தொழிலாகக் கொள்ளவில்லை, அதாவது, நான் கற்றதை பிறருக்குச் சொல்லிக்கொடுத்து நாலு காசு பார்க்கவில்லை என்பதால் மாற்றுக்குறைவு என்பதுபோல் நடத்துவார். காரியம் நடக்க வேண்டுமே என்று நான் வாயைத் திறக்கவே இல்லை. `பின்னே எப்படி பாடினாய்?’என்று அசட்டுப்பிசட்டென்று கேட்காதே! அடி விழும்!

ஒரு பாட்டைப் பாடி முடித்தவுடன், அதே தாளத்தில் அடுத்த பாட்டுக்குப் போக அவசரப்படுத்துவார். உயிரே போய்விட்டது.

ஒரு வழியாக ரெக்கார்டிங் முடிந்தது. நான் அந்த ஊரைவிட்டு வந்துவிட்டேன். என்னை அழைத்து என்ன கூறினார், தெரியுமா?

மணிமொழி, நீ ஒரு நல்ல பேராசிரியை. மாணவிகளின் உள்ளம் கவர்ந்தவள். சொன்னால் நம்பமாட்டாய். தன் சிஷ்யன் தன்னைவிட நன்றாக வாசித்துவிட்டான் என்று அதிர்ச்சியுடன் கூறி, அவனைத் திரும்ப ஒரு முறை, சற்று சுமாராக எல்லா பாட்டுக்கும் வாசிக்கவைத்ததாக அவர் சொன்னார். நான்தான் நிலக்கரி ஆயிற்றே! அதாவது, மெதுவாகத்தான் பற்றிக்கொள்வேன். உனக்குத் தெரியும். அவர் சொன்னதன் முழு அர்த்தம் உடனே புரியவில்லை. சும்மா கேட்டுக்கொண்டேன். அதோடு, என்னை எங்கே பேசவிட்டார்!

பதிவு செய்யப்பட்ட பாடல்களைக் கேட்டபிறகுதான் விளங்கியது. அவ்வப்போது நான் மூச்சு விட்டுக்கொள்ளும்போது, சாதாரணமாக வயலினோ, புல்லாங்குழலோ அந்த இடைவெளியில் நுழைந்துவிடும். அவர்கள் வாசித்தது கேட்கவில்லை.

மூச்சு சப்தத்தை வெகு சுலபமாக கணினியில் அழித்துவிட முடியும். அதையும் செய்யவில்லை. வாய்ப்பாட்டோ, பிற வாத்தியக்காரர்களின் உழைப்போ எதுவுமே சரியாகக் கேட்கவில்லை — நான் குறிப்பிட்டவரது வாத்தியத்தைத் தவிர. விட்டு விட்டுப் பாடுவதுபோல், பரிதாபமாகக் கேட்டது.

ஏழு பாடல்களுக்கு பத்து மணி நேரம் எடிட் செய்யவேண்டியிருக்கும் என்று கதை அளந்து, முன்னதாகவே பணத்தைப் பெற்றுக்கொண்டார்கள். அந்தக் கால அவகாசத்தில் தன்னைத்தவிர பிற கலைஞர்களின் வாசிப்பு எடுபட்டு விடக்கூடாது என்று பெருமுயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்! இவர் வாடிக்கை பிடித்துத் தருவதால், ஸ்டூடியோக்காரரும் ஒத்துழைத்திருக்கிறார். இருவர் செய்ததுமே அவர்கள் தொழிலுக்குத் துரோகம்.

பாடல் பதிவு செய்வது, அல்லது மேடையில் பாடுவது ஒரு கூட்டு முயற்சி. தான் மட்டும் சிறக்க வேண்டும் என்று ஒரு `அரை சமர்த்து’ எண்ணி, வேலை மெனக்கெட்டு பிறரைத் தாழ்த்த கடும் முயற்சிகள் எடுத்துக்கொண்டால் என்ன ஆகும்?

இப்போது, அந்தப் பதிவுகளை நான் பயன்படுத்த முடியவில்லை என்பது என் வருத்தம். நவராத்திரிக்கு என்னை அழைத்துவிட்டு, காது சரியாகக் கேட்காத மாமிகள், “நன்னாப் பாடிண்டு இருந்தியேடி! இப்போ என்ன ஆச்சு!” என்று போலியாக வருத்தப்பட்டு, என்னை மட்டம் தட்டி விட்டதில் அடைந்த அல்ப சந்தோஷத்தை நான் பிறருக்குக் கொடுக்க விரும்பவில்லை.

அநியாயமான வழியில் காசைக் கறந்துவிட்டார்களே என்ற ஆத்திரத்தைவிட, இவ்வளவு திறமையைக் கொடுத்த கலைவாணி இவர்களைப் போன்றவர்களுக்கு கொஞ்சூண்டு நல்ல குணத்தையும் ஏன் கொடுக்காமல் போனாள் என்றுதான் வருத்தமாக இருக்கிறது. ஒரு வேளை, அது அவளுடைய டிபார்ட்மெண்ட் இல்லையோ?

ரொம்ப போரடித்துவிட்டேனா?

எனக்கும்தான் உன்னைவிட்டால் யார் இருக்கிறார்கள், சொல்லி அழ? நீ சகித்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

நிர்மலா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.