நிர்மலா ராகவன்    

“டேய் பத்மா! இந்த ஒரு தடவையாவது எங்களோட வாடா!” நண்பர்கள் வற்புறுத்தினார்கள்.

“அவன் வரமாட்டாண்டா. எந்தச் சனிக்கிழமைதான் நாம்ப கூப்பிட்டு அவன் வந்திருக்கான்?”

பத்மராசனுக்கு அழுகைதான் வந்தது. அவர்களிடம் உண்மையைச் சொல்ல முடியுமா?

அது ஏன் இவனுடைய அம்மா மட்டும் எல்லா அம்மாக்களையும்போல் இல்லை?

பாலாவின் அம்மாவைப் பார்த்தால், யாரும் அவளுக்கு மீசை முளைத்துக்கொண்டிருக்கிற மகன் இருக்கிறான் என்றால் நம்பமாட்டார்கள். ஏன், ஒரு தடவை அவர்கள் நண்பர்களிலேயே சற்று தடியாக இருந்த அர்ஜூன் சொல்லவில்லை, `கூட்டாளியோட அம்மாவாப் போயிட்டாங்க! இல்லாட்டி, `சைட்’அடிச்சிருப்பேன்,’ என்று?

இவன் மட்டும், அம்மா உயிரோடு இருந்தும், இறந்துவிட்ட அப்பாவோடேயே போய்விட்டதாக நினைவு தெரிந்த நாள்முதல் சொல்லித் தொலைக்க வேண்டிய நிலை.

அட, அழகும், இளமையும் இல்லாவிட்டால்கூடப் பரவாயில்லை. இப்படி, பேச்செல்லாம் குளறிப்போய், கண்களில் சிறிதுகூட ஒளி இல்லாமல், ஆண்பிள்ளைபோல் குட்டை முடியுடன், முழங்கால்வரையே தொங்கும் கவுனைப் போட்டுக்கொண்டிருந்த அந்த உருவத்தை `அம்மா’ என்று ஏற்றுக்கொள்ளவே எவ்வளவு கடினமாக இருந்தது!

அப்பா தவறிப்போனபோது அவனுக்கு ஒரு வயதுகூட நிரம்பவில்லையாம். அக்காதான் சொல்வாள். அவனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள் அம்மா. தெரு ஓரமாக நடந்துகொண்டிருந்த அப்பாமேல் போதையிலிருந்த பஸ் டிரைவர் தனது வாகனத்தை ஏற்ற, தலத்திலேயே அப்பாவின் உயிர் பிரிந்ததை காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கூறக் கேட்டு, கைக்குழந்தையை நழுவவிட்டு, பித்தான்கள் நீக்கப்பட்டு இருந்த ஜாக்கெட்டை புடவைத் தலைப்பால் மறைத்துக்கொள்ளும் பிரக்ஞைகூட இல்லாது, அலறியபடி வெளியே ஓடியவள்தான் அம்மா. அவளைக் கட்டுப்படுத்த முடியாது, சில மாதங்களுக்குள் தஞ்சோங் ரம்புத்தானிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டார்கள் தாத்தாவும், பாட்டியும்.

கோலாலம்பூரின் வடக்குப் பகுதியில், பேராக் மாநிலத்தில் இருந்த தஞ்சோங் ரம்புத்தானில் 1911 ஆண்டே மனநிலை சரியாக இல்லாதவர்களுக்காகவென ஆஸ்பத்திரி துவங்கப்பட்டது.  அந்த இடத்தின் பெயரைக் கேட்டாலே, விவரம் புரியாத பலரும் கேலிச் சிரிப்பு சிரிப்பார்கள். `இவன் சரியான தஞ்சோங் ரம்புத்தான்!’ என்று சிறுவர்கள் ஒருவரையொருவர் சீண்டிக் கொள்வதுண்டு.

இதெல்லாம் புரிந்து, வேறு ஊருக்கு மாறினார்கள். பாட்டி மட்டும் மாதம் தவறாது, அம்மாவைப்போய் பார்த்து வருவாள். அப்போதெல்லாம், “ராசா, ராசான்னு ஒம்மேல உசிரையே வெச்சிருந்தாளே, பாவி! இப்படி, தன் பேருகூடத் தெரியாம ஆகிட்டாளே!” என்று  புலம்புவாள். பத்மராசாவுக்குத் தர்மசங்கடமாக இருக்கும். எப்போதாவது அக்காவும் பாட்டிக்குத் துணையாகப் போவாள்.

“நீ அம்மாவைப் பாத்ததே இல்லியே, பத்மா. எங்ககூட வாடா,” என்று அக்கா ஒருமுறை இழுத்துப்போனாள் அவனை.

“நம்ப ராசா பாத்தியாம்மா? இப்ப பெரியவனா ஆகிட்டான், பாரு. ஸ்கூலுக்குப் போறான்ல!” வலிய வரவழைத்துக்கொண்ட உற்சாகத்துடன், பெற்றவளுக்கே மகனை அறிமுகப்படுத்தினாள், அக்கா.

எங்கோ வெறித்தபடி உட்கார்ந்திருந்த அம்மா சட்டெனத் திரும்பினாள். விரைந்து வந்து அணைத்தாள். அவளுடைய பிடியின் இறுக்கத்தில் சிறுவன் மிரண்டு போனான். அம்மா முத்தமாரி பொழிய ஆரம்பித்ததும், அழ ஆரம்பித்தான்.

அதைக் கவனிக்கும் மனநிலையில் அவள் இருக்கவில்லை. “ராசாக்குட்டி!  ராசாக்குட்டி!” வெறிபிடித்தவளாய் கத்தினாள். உபயோகமற்று இருந்த குரல் கரகரப்பாக இருந்தது.

ஆனால், அடைந்து கிடந்த உணர்வுகள் வெளிப்பட்டதால், நாளடைவில் அவளுடைய நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. அம்மாவை வீட்டுக்கே திரும்ப அழைத்து வந்தார்கள்.

கணவருடனேயே அவளுடைய புத்தி ஸ்வாதீனம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு விட்டது என்பது பிறகுதான் புரிந்தது. ஆடை அணிய மறுத்தாள். வாழ்நாள் பூராவும் மருந்து சாப்பிடவேண்டும் என்ற மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறினாள். `எனக்கு விஷம் கொடுத்து கொல்லப் பாக்கறீங்களா?’ என்று, கத்தியைக்  கையில் எடுத்துக்கொண்டு அவள் மிரட்ட, வேறு வழியின்றி, ஆஸ்பத்திரியிலேயே மீண்டும் கொண்டுவிட்டார்கள். அங்கு, உச்சந்தலையில் மின் அதிர்வு வைத்துச் சிகிச்சை அளித்து சாதுவாக்கிய அம்மாவை மீண்டும் வீட்டுக்கே அழைத்துப் போகலாம் என்று தகவல் கொடுத்தார்கள்.

`அவளை எங்களால் பார்த்துக்கொள்ள முடியவில்லையே!’ என்று பாட்டியும், அக்காவும் போய் மன்றாட, அருகிலிருந்த ஒரு இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்தார் பெரிய டாக்டர்.

`இவர்களால் பிறருக்கு ஆபத்து இல்லை,’ என்ற நிலையிலிருந்த பிற பெண்கள் தங்கியிருந்த இடம் அது. எல்லாருமே மனநிலை பிறழ்ந்து, தீவிர சிகிச்சைக்குப்பின் அங்கு அனுப்பப்பட்டவர்கள். நாள் தவறாது, மூன்று வேளை மருந்தும், மாதம் ஒரு ஊசியுமாக, ஒருவித போதை நிலையிலிருந்த பிறருடன் அம்மாவும் ஒருத்தியாகிப் போனாள்.

“ஒன்னைப் பாக்கிறதுக்காகவே ஒங்கம்மா உசிரை வெச்சுக்கிட்டிருக்கா, ராசா. வாரம் தவறாம போய் பாத்துட்டு வா. வேற என்னதான் இருக்கு அவளுக்கு, பாவம்!” மரணப் படுக்கையிலிருந்த பாட்டி சும்மா போகாமல், சத்தியம் வாங்கிக்கொண்டுதான் போனாள்.

அப்போது பத்மராசாவுக்கு பத்து வயது. இருபது வயதான அக்கா கல்யாணத்தைப்பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலையில் இருந்தாள். வேலைக்குப் போனாள். மாதாமாதம் அம்மாவுக்காக ஒரு பெருந்தொகையை எடுத்துவைக்க வேண்டுமே!

சற்று விவரம் புரிய ஆரம்பிக்க, பத்மராசாவுக்கு அம்மாவின்மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தன் வயதுப் பையன்களெல்லாம் ஒன்று சேர்ந்து பேரங்காடிகளில் சுற்றிக்கொண்டும், சினிமா பார்த்துக்கொண்டும் உல்லாசமாகக் கழிக்கையில், தன் விதி மட்டும் ஏன் இப்படிப் போயிற்று? வாரம் பூராவும்தான் பள்ளிக்கூடமும், டியூஷனும் இருக்கவே இருக்கின்றன. ஒவ்வொரு சனியன்றும் பஸ் பிடித்துப்போய், அந்த அழகான அம்மாவைத் தரிசனம்! அந்தக் கசப்பிலிருந்து மீள அடுத்த நாளும் அனேகமாக விரயமாகிவிடும்.

தன்னைப்பற்றி மறக்கவேபோல், ஓயாது படித்ததில், வகுப்பில் இவன்தான் முதல். ஆனால், நண்பர்களிடமிருந்து இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் உண்மையை மறைக்க முடியும்! உண்மை வெளியாகிவிட்டால், `பைத்தியத்தோட பிள்ளை டோய்!” என்று ஏளனம் செய்வார்களோ?

“இப்படி முகத்தை சிடுசிடுன்னு வெச்சுக்கிட்டு அம்மாவைப் பாக்கவந்தா நல்லாவேயில்ல, பத்மா!” ரகசியக் குரலில் அக்கா அதட்டினாள்.

உதட்டைச் சுழித்துக்கொண்டான் பையன். பத்து வயதுவரை அம்மாவிடம் தலை வாரிப் பின்னிக்கொண்டு, அம்மா கதை கதையாகச் சொல்ல சாப்பிட்டு, தரையில் அமர்ந்து வீட்டுப்பாடம் பண்ணிய நினைவுகளையெல்லாம் அக்கா பத்திரப்படுத்தி வைத்திருந்தாள். தானும் அவளும் ஒன்றா?

அவனைப் பார்த்ததும் லேசாகச் சிரித்தாள் அம்மா. “நல்லாப் படிக்கிறயாமே, ராசா?” என்று எடுத்த எடுப்பிலேயே விசாரித்தாள். “அக்காவுக்கு நான்தான் பாடம் சொல்லிக் கொடுப்பேன்!” அவளுடைய பழைய நினைவு சற்றே திரும்பியிருந்தது.

“இப்ப அவனுக்கு நான் சொல்லிக் குடுக்கிறேம்மா!” அக்கா முந்திக்கொண்டாள், அநாவசியமான வருத்தத்தால் அம்மாவின் நிலை மறுபடியும் மோசமாகிவிட்டால் என்ன செய்வது என்று பயந்தவளாக.

“எனக்கு ஒங்ககூடவே வந்துடணும்போல இருக்கு. ஆனா, இங்க இருக்கிறதுங்க வேலை செய்யறதுக்காக என்னைப் பிடிச்சு வெச்சிருக்குங்க!” தனது உண்மை நிலை புரியாது பேசியவளைப் பார்த்தால் பாவமாக இருந்தது பத்மராசாவுக்கு. ஆறுதலாக ஏதாவது சொல்லவேண்டும் என்று தோன்றியது. “இங்கே எவ்வளவு அழகா தோட்டம் போட்டிருக்காங்க! ஒரே போகன்விலா செடியில எத்தனை கலர் பூ!” என்று வியந்தான்.

அம்மாவின் கண்களில் அபூர்வமாக ஒரு ஒளி. “ஆர்கிட் தோட்டம்கூட இருக்கு. பாக்கறியா?” எதிரே இருந்த ஐந்தரை அடி மகனை, தான் என்றோ விட்டு வந்த குழந்தையாகவே பாவித்து, ஆசையோடு அவன் முகவாயைப் பிடித்தாள் அம்மா. “காட்டறேன், வா!”

இவளுடன் தான் நடப்பதா?

அந்த எண்ணமே கோபம், பயம், அருவருப்பு, இன்னும் ஏதேதோ உணர்வுகளைத் தோற்றுவிக்க,`வேண்டாம்,’ என்பதுபோல் வேகமாகத் தலையாட்டிவிட்டு, அவளுடைய கையை முரட்டுத்தனமாக விலக்கியவன், சட்டென எழுந்து, திரும்பிப் பாராது வாயிலை நோக்கி நடந்தான். அம்மா வெறி பிடித்தவளாக ஏதோ கத்தியது அவனைப் பாதிக்கவில்லை.

அவ்வாரமே, தன் தலைமுடியை வெட்ட வந்தவளின் கையிலிருந்த கத்தரிக்கோலைப் பிடுங்கி, என்ன நடக்கிறதென்று பிறர் புரிந்துகொள்ளுமுன், அதைத் தன் வயிற்றில் செருகிக்கொண்டாள் பத்மராசாவின் அம்மா. பெற்ற மகனுக்கே வேண்டாதவளாகப் போய்விட்டோம், இனி உயிரோடு இருந்துதான் என்ன பயன் என்று அவளுக்கு மிச்சம் மீதியிருந்த அறிவுக்குப் புலனாகிவிட்டதோ!

உலகம் அறியாத அவனுடைய அம்மாவுக்கு சொற்ப ஈமக்கடன்களைச் செய்து முடித்தான் மகன். அழுகைதான் வரவில்லை. உள்ளத்தில் பீறிட்ட நிம்மதியாவது வெளியே தெரியாமல் இருக்க வேண்டுமே என்று அவன் எடுத்துக்கொண்ட முயற்சி இறுகிப் போயிருந்த முகத்தில் தெரிந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வேண்டாம் இந்த அம்மா

 1. நிர்மலா!
  நீங்கள் நிர்மலமாக எழுதுகிறீர்கள்.
  ‘பிரக்ஞைகூட இல்லாது’ – அது ‘இல்லாமல்’ நின்று விட்டால் தான் பைத்தியம்.
  ‘சத்தியம் வாங்கிக்கொண்டுதான் போனாள்.’ அது தான் சாத்தியமான வழி.
  ‘நினைவுகளையெல்லாம் அக்கா பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்’ – அது தான் பொக்கிஷம். 
  ஒரு சமாச்சாரம்: 
  பொறுப்புள்ள டாக்டர்கள் கோமாவில் இருக்கும் பேஷண்ட்கள் முன்னால் கேலிப்பேச்சு பேசமாட்டார்கள்.
  அடுத்தது: தாமஸ் ஸாஜ் (Saaz) என்ற மனோதத்துவ பேராசிரியர் தன் மாணவர்களை தஞ்சோங் ரம்புத்தான் ஆஸ்பத்திரி போன்ற இடத்துக்கு ஆய்வு செய்ய தங்களை ‘பைத்தியமாக’ அட்மிட் செய்ய வைத்தார். ஆய்வு முடிவு: அங்குள்ள சிலர் வெளியில் இருக்க வேண்டியவர்கள். வெளியில் இருக்கும் சிலர் உள்ளே இருக்க வேண்டியவர்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *