இந்த வார வல்லமையாளர்!
திவாகர்
ஸ்ரீரங்கம் அல்லது திருவரங்கம் என்னும் புகழ்பெற்ற நகரைப் பற்றிய சரித்திரங்கள் சுவாரசியமானவை. அதுவும் ரங்கநாதனைப் பற்றிய வரலாறுகள் ஒவ்வொன்றும் ஒருவிதமானவையாக இருந்தாலும் எல்லா விஷயங்களுமே சுவையானவைதான். அரங்கமாநகரை தன்னுள்ளே வைத்திருக்கும் பாசுரங்கள் எல்லாமே அழகான தமிழால் அரங்கனுக்கு சாத்தப்பட்ட பூமாலைதான். தமிழ் இலக்கிய, பக்திப் பாடல்களில் மிக அதிக அளவில் இடம்பெற்ற நகரம் கூட அரங்கமாநகரம்தான். இந்த நகரைப் பற்றியும் நகரத்தில் கோயில் கொண்ட அரங்கத்தான் பற்றியும் புத்தகங்கள் நிறைய உள்ளன. அதிக அளவில் வைணவ ஆச்சாரியர்களின் ஈடுகள் பேசுகின்றன.
திருமங்கை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் காலத்தில் இந்த நகரம் மிகப் பெரிதாக விரிவுபடுத்தியிருக்க வேண்டும் என நாம் தோராயமாகச் சொல்லலாம். ஆழ்வார் பாடல்களில் பல இடங்களில் திருவரங்கத்தின் சுற்றுப்புறப் பெருமைகள் பேசப்படுகின்றன. இத்தகைய உயர்ந்த தலத்தின் கோயில் கொண்டுள்ள பெருமாள் அரங்கநாதனுக்கும் மிகப் பெரிய ஒரு சோதனையான கட்டமாக பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விளைந்த மாலிக்காபூர் படையெடுப்பைச் சொல்வார்கள். அந்தச் சமயத்தில் வைணவ ஆச்சாரியராக இருந்த மன்னுபுகழ் வேதாந்த தேசிகர் அரங்கனின் உற்சவமூர்த்தியை எடுத்துச் சென்று திருப்பதியில் வைத்ததாக இன்றைக்கும் திருமலை கோயிலில் ஒரு அறிக்கை மாட்டி வைத்திருப்பதைப் பார்க்கலாம். அரங்கன் உற்சவத் திருமேனி திருமலை ஏறிவிட்டாலும், ஸ்ரீராமனின் குலதெய்வமான மூலவநாதன் திருவரங்கன் அங்கே பள்ளி கொண்டிருந்தானே அவன் என்ன ஆனான்..
இதோ கோவையைச் சேர்ந்த திரு கிருஷ்ணமூர்த்தி தரும் சுவையான தகவல்கள் அவர் எழுத்திலேயே பார்க்கலாமா
பரிதாபி ஆண்டு, வைகாசி திங்கள் 17ம் நாள். ரங்க நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. நாற்பத்தியெட்டு வருடங்களுக்கு முன்னால் தன் இருப்பிடத்திலிருந்து அவசரஅவசரமாய் வெளியேறிய அழகிய மணவாளன் காவிரியின் தென்கரையை அடைந்து, பின் தொண்டைமான் காட்டிற்குள் புகுந்து, திருக்கோஷ்டியூர், திருமால் இருஞ்சோலை, யானைமலை, மதுரை, திருக்குருகூர், நாகர்கோவில், திருஅனந்தன்புரம், கோழிக்கூடு, திருநாராயணபுரம், திருமலைக் காடுகள், திருமலை, செஞ்சி, அழகிய மணவாளம் வழியாக தென் தேசங்களை பிரதக்ஷணம் செய்து இப்போது காவிரியின் வடகரை கடந்து ரங்கத்திற்குள் மீண்டும் பிரவேசிக்கிறார். கேட்க வேண்டுமா ரங்கத்தினர் உற்சாகத்திற்கு? வீட்டு வாசல்கள் தெளிக்கப்பட்டு மாக்கோலங்கள். வாழைகள். மாவிலைத் தோரணங்கள். பூ மாலைகள். மேள தாளத்துடன் மங்கல இசை. விண்ணைப் பிளக்கும் வேத கோஷங்கள். தமிழ் மறை பிரபந்தங்கள். போரில் வெற்றி கண்ட கம்பண, கோபணருக்கு ஜய கோஷங்கள். வீதியெங்கும் மகிழ்ச்சி கூத்தாடல்கள். பல்லக்கில் நெஞ்சு நிறைந்து பவனி வரும் ரங்கனுக்கும், அதை சுமக்கும் விஜய நகர அரசன், படைத் தளபதிகளுக்கு ஆரத்திகள், அவர்கள் அனைவரின் மீதும் வாரி இறைக்கப் படும் பூக்கள், கொட்டும் முரசுகளின் பேரொலிகள் என திருவரங்கம் அதிர்ந்து கொண்டிருந்தது.
இக்கொண்டாட்டங்களை எல்லாம் பார்த்துக் கொண்டும், குழுமி இருந்த ஜன சமுத்திரத்தின் ‘ரங்கா, ரங்கா’ (அரை நூற்றாண்டுகளுக்கு முன்னால் இதே ரங்கா, ரங்கா முழக்கத்தோடு அவனுக்காக உயிர் துறந்த ரங்க வீரர்களின் வம்சா வழி வந்தவர்களே இவர்கள்) எனும் சந்தோஷ கூச்சல்களை கேட்டுக் கொண்டும், அவர்களின் ஊடே புன்னகை தவழும் முகத்துடன் ஊர்வலமாய் சென்று தன் சாம்ராஜ்ஜிய பீடத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக புளகாங்கிதமாய் எழுந்தருளினார் அரங்கன். (காணாமல் போன நாச்சியார் உற்சவ பேரங்கள் இப்போது எப்படி வந்தன? இவ்விக்ரஹங்கள் வேறு. இவை, அழகிய மணவாளர் திருமலையில் தங்கி இருந்த போது சந்திரகிரி அரசர் யாதவராயரால் செய்து வைக்கப் பட்டவை).
ஆனால், இங்கென்ன கூட்டத்தினரிடையே சலசலப்பு? ஆ இதென்ன இன்னொரு ரங்கர்? ஆமாம், பல வருடங்களுக்கு முன்னால், ரங்கம் சற்று அமைதியானவுடன், அரங்கன் ஆலயத்தில் மாற்று மூலவர்களுக்கு பூஜைகள் பிறர் அறியா வண்ணம் நடக்க ஆரம்பித்தது. அக்காலத்தில், இவர்தான் அவர் என்று வேறொரு அரங்க உற்சவர் வந்து சேர்ந்தார். இப்போது புதிதாய் ஒருவர். இதில் யார் உண்மையான பழைய உற்சவர் என்று எப்படி தீர்மானிப்பது? இது நாள் வரை தாங்கள் புஜித்தவரை ஒதுக்குவதா? இதுதான் முனுமுனுப்புகளுக்கும், சர்ச்சைக்கும் காரணம்.
இச்சமயத்தில்தான் விஜய நகரத்தார் போரில் வெற்றி பெற்றதை ஸ்வாமி வேதாந்த தேசிகரிடம் நேரில் கூறி அவரை திருவரங்கம் அழைத்து வந்திருந்தனர். எவர் முன்னிலையில் நாற்பத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் மூலவரை மறைக்கும் வகையில் குலசேகரன் வாயிலில் சுவர் எழுப்பப்பட்டதோ, நூறு பிராயத்தை கடந்திருந்த அவரே இப்போது முன் நின்று அக்கற்தடுப்பை தகர்த்து ரங்கனை மீண்டும் உலகத்தாருக்கு வெளிப்படுத்தினார். அரங்கனை முதன் முறையாய் தரிசித்தவர்கள் பரவசமாகி ‘ரங்கா, ரங்கா’ என கூக்குரலிட்டனர். பலரின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர். பிறகு, ரங்கனுக்கு முறைப்படி வெகு விமர்சையாக பூஜைகள் நடந்தது. ஸ்வாமி தேசிகர், சுல்தானுக்கு எதிரான போரில் விஜய நகர படைகளுக்கு தலைமை வகித்து வெற்றி கண்ட கோபணரை போற்றி ஒரு ஸ்லோகம் எழுதினர். அது கல்லில் பொறிக்கப்பட்டு இன்றும் காணக் கிடைக்கிறது.
சரி, நாம் தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம். யார் பழைய உற்சவ அழகிய மணவாளன்? தேசிகர் முன்னிலையில் விவாதம் நடந்தது. ஐம்பது வருடங்களுக்கு முன்னால் அவரை வெகு அருகாமையில் தரிசித்தவர் எவரேனும் இப்போது ரங்கத்தில் இருந்தால் அவர் வந்து அடையாளம் காட்ட வேண்டும் என்று முடிவாயிற்று. ஆனால், ஒருவரேனும் முன் வரவில்லை. இந்நிலையில்தான், இரு கண்களிலும் பார்வை இழந்த அந்த ஈரங்கொல்லி (வண்ணான்) ‘நான் அடையாளம் காட்ட முயற்சிக்கலாமா? என்று கேட்டபடி வந்தான்.
பெருமாள் திருமஞ்சன நீராடும் போது அணியும் வஸ்திரங்களை நான் துவைத்து தருவது வழக்கம். அப்போது, அத்துணியை பிழிந்து அந்நீரை தீர்த்தமாகப் பருகுவேன். அதற்கென ஒரு சுவை உண்டு. இப்போது, இரு மூர்த்தங்களையும் நீராட்டி வஸ்திரங்களைக் கொடுத்தால் நான் அவற்றின் சுவை கொண்டு எதை அணிந்தவர் பழைய உற்சவர் என்று சொல்ல முடியும் எனக் கூறினான். அனைவரும் அவன் சொன்னதை ஏற்றனர். அவன் தீர்த்தங்களை பருகி, கோபணர் கொண்டு வந்த அரங்கனின் வஸ்திரத்தை கையில் வைத்துக் கொண்டு இதை அணிந்தவரே ‘நம் பெருமாள்’ என்றான். அதன் பின்னர் ரங்க உற்சவருக்கு ‘நம் பெருமாள்’ என்பதே பெயராயிற்று.
மேலும் படிக்க திரு கிருஷ்ணமூர்த்தியின் ஃபேஸ் புக்’ விலாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
https://www.facebook.com/krishnamurthy.krishnaiyer
அரங்கன் தகவல்கள் என்றாலே இனிப்பவை என்று முதலிலேயே குறிப்பிட்டேன். இப்படி இனிக்க இனிக்க தகவல்களை அள்ளித் தரும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களை இந்த வார வல்லமையாளராக அறிவிக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகள்.
கடைசி பாரா: மேகலா ராமமூர்த்தி அவர்களின் ’சிலம்பு காட்டும் கோவலனின் மறுபக்கம்’ – வல்லமையில்.
மற்ற காப்பியங்கள் எல்லாம் அரசர்களையோ, குறுநில மன்னர்களையோ, அல்லது வள்ளல்களையோ பெரிதும் போற்றுவதாகவும், அவர்தம் கொடைச் சிறப்பினையும், போர் வெற்றிகளையும் வானளாவப் புகழ்வதாகவுமே இயற்றப்பட்டிருக்க, அவற்றினின்று முற்றிலும் மாறுபட்டுச் சாதாரணக் குடிமக்களைக் காப்பியத் தலைவனாகவும், தலைவியாகவும் தேர்ந்தெடுத்து அவர்தம் வாழ்வையே காப்பியக் களனாக்கிய ’புரட்சிச் சிந்தனையாளர்’ இளங்கோவடிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
வரலாற்று நிகழ்சிகளை சுவைபட விவரித்த இவ்வார வல்லமையாளருக்கும், கோவலனின் மறுபக்கம் பற்றிய கட்டுரையில் இளங்கோவடிகளின் புகழ்பாடிய மேகலாவிற்கும் வாழ்த்துக்கள்.
இவ்வார வல்லமையாளராய்த் தெரிவாகியிருக்கும் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
என்னுடைய ’கோவலனின் மறுபக்கம்’ கட்டுரையின் வரிகளைக் ’கடைசிப் பாரா’வில் சேர்த்துப் பெருமைப்படுத்திய திவாகர் ஐயாவிற்கும், வல்லமை ஆசிரியர் குழுவிற்கும், வாழ்த்துரைத்த தேமொழிக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
மிக்கநன்றி. உங்களைப்போன்றஒருசரித்திர நாவல் ஆசிரியரிடமிருந்து பாராட்டைபெறுவது பெருமையான விஷயம். ரொம்ப ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும்இருக்கிறது. தேமொழி அவர்களுக்கும்நன்றிகள். மேகலாஇராமமூர்த்தி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
அரங்கனின் பெருமையை, அவன் சம்மந்தப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை விவரித்துள்ள இந்தவார வல்லமையாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், “கோவலனின் மறுபக்கம்” கட்டுரையின் மூலம் அவனது குண நலன்களை விரிவாக எழுதியுள்ள திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வல்லமையாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், கடைசி பாராவில் இடம் பிடித்த திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!!.