நிர்மலா ராகவன்

உங்கள் திருமணத்துக்கு நாள் குறித்தாகிவிட்டது. நீங்கள் மாப்பிள்ளையாகின், சற்று வீரமாக, பொறுப்பானவனாக உணர்வீர்கள். ஏனெனில், இதுவரை பெற்றோர், அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள் யாவரும் சொற்படி நடந்த உங்களுக்கு, இப்போது நம் அதிகாரத்தைப் பிரயோகிக்க ஒரு நல்ல சந்தர்ப்பம் என்ற பெருமை எழக்கூடும்.

புது மனைவியிடம், `உனக்கு சிவப்புப் புடவைதான் அழகாக இருக்கிறது. பச்சை வேண்டாமே!’ என்னும்போது, `கணவருக்குத்தான் நம்மீது எவ்வளவு ஆழ்ந்த அன்பு!’ என்று அவளும் உங்கள் விருப்பப்படியே நடக்கிறாள்.

தான் சொல்வதை மந்திரமாக ஏற்று நடக்கும் மனைவியால் உங்கள் சுயமதிப்பு கூடுகிறது. அவளை இன்னும் அதிகமாக அடக்க முயற்சிக்கிறீர்கள். அதைப்பற்றி நண்பர்களிடமும் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறீர்கள்.  அவளும் விட்டுக்கொடுத்துக் கொண்டே போகிறாளா? பத்திரம்! ஒட்டகத்தின் மேல் சுமத்தப்பட்ட கடைசி இழை வைக்கோலைப்போல் அவள் முதுகு உடையும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

ஒரு பெண் சுரத்தின்றி, எதிர்ப்பேச்சு பேசாது அடங்கிவிட்டால்,  அவள் கலகலப்பாக இல்லையே என்ற குறை கணவனுக்கு எழும். வெளியுலகில் பார்க்கும் பிற சுதந்திரமான பெண்களைப் பார்த்து, `எனக்கு ஏன் இப்படி ஒரு ஜடம் வாய்த்தது!’ என்று குறைபடுகிறான்.

தன் பேச்சுக்கு மறுபேச்சே இருக்கக்கூடாது என்பதுபோல் நடக்கும் ஆண்களின் நிலை இதுதான்.

(இப்படிப்பட்ட ஒருவரின் மனைவியை எனக்குத் தெரியும்.  நன்கு படித்து, உத்தியோகத்தில் இருப்பவள் ஆயினும், யாராவது பேசினால், அவர்களுடைய ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் சிரித்து வைப்பாள். அவளுடைய அபிப்ராயத்தைச் சொல்லும் உரிமை கல்யாணம் ஆனதுமே அவளிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. காலங்கடந்து அவர் விசனப்படுகிறார்).

தனது ஆண்மையைத் தானே மெச்சி, மனைவியை நாலு பேர் முன்னிலையில் `முட்டாள்’ என்று திட்டி, அல்லது காரணமில்லாமல் பலத்த குரலில் திட்டி, அல்லது அவள் செய்த `முட்டாள்தனமான’ காரியம் எதையாவது தண்டோரா போட்டுச் சொல்லும் ஆண்கள் சற்று யோசிக்க வேண்டும். இப்படிச் செய்வதால், நீங்கள் உயர்ந்துவிட்டதாக யாரும் எண்ணப் போவதில்லை — உங்களைத் தவிர்த்து.

பரிதாபத்துக்குரிய மனைவியோ, முகத்தில் எந்த சலனமும் இல்லாது உட்கார்ந்திருப்பாள். அவளுக்கு அவருடைய ஏச்சுப்பேச்சு பழகிவிட்டது. `எனக்கு வருத்தமாக இருக்கிறது. இப்படி என்னை மட்டம் தட்டிப் பேசாதீர்கள்,’ என்று கெஞ்சினாலும் அவர் மாற மாட்டார் என்பதை நடைமுறையில் கண்டவள் அவள்.

“திரும்பக் கத்திப் பாருங்களேன்! எதற்காக இவ்வளவு  அவமரியாதையைப் பொறுத்துப் போகிறீர்கள்?”– கேட்டது நான்.

பதில் உடனே வந்தது. “அது மரியாதை இல்லை!”

பெண் மட்டும்தானா மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும்? யோசியுங்கள்!

நீங்கள் பெண்ணானால்:

பெண்பார்க்கும் வைபவம் முடிந்து, உங்களை மணக்கவும் சம்மதம் தெரிவித்துவிட்டார் ஒருவர். மூன்று மாதங்களுக்குப் பிறகு திருமணம் — நீங்கள் ஆவலோடு காத்திருந்த நன்னாள்.

நிம்மதியுடன், இனி என்ன வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற நிம்மதி ஏற்படுகிறதா? (`நீ இப்படி குண்டா, வாயாடியா இருந்தா, ஒருத்தனும் ஒன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டான்!’ நம் பெண்களுக்கு அடிக்கடி வழங்கப்படும் இலவச போதனை).

ஓர் ஆண்மகனை வளைத்துப்போடவா இத்தனை வருடங்களும் நீங்கள் உங்கள் மேனியழகைப் பாதுகாத்து வந்தீர்கள்?

இல்லை, பிற ஆண்கள் உங்கள் அழகை ரசித்தால், கணவருக்குப் பிடிக்காதோ என்ற அச்சமா?

எதுவாக இருந்தாலும், உங்கள் போக்கு சரியல்ல. உடம்பைச் சரிவர பராமரிப்பது வெளியழகுக்காக மட்டுமல்ல. ஆரோக்கியம் என்று ஒன்று இருக்கிறதே, தெரியாது? அளவுக்கு  அதிகமாகச் சாப்பிட்டு, நாற்பத்தைந்து வயதிலேயே சர்க்கரை வியாதி, ஓயாத கால்வலி, ரத்த அழுத்தம் என்றெல்லாம் நீங்கள் புலம்ப ஆரம்பித்தால், யாருக்கும் சுகமில்லை.

கல்யாணமான முதல் கொஞ்ச நாட்கள் கணவர் நைச்சியமாகப் பேசி உங்களை `விரட்ட’ ஆரம்பித்தால் (அதாவது, அவருக்குப் பிடித்தமாதிரியே நீங்கள் எப்போதும் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தால்), ஒரேயடியாகப் பணிந்து போகாதீர்கள். உங்கள் தனித்தன்மையை இழந்து விடுவீர்கள். `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்று பயந்தே வாழ்க்கையைக் கழிப்பது நமக்கு தாமே அளித்துக்கொள்ளும் தண்டனை.

எந்த ஒரு பந்தத்திலும், சந்தோஷம் அல்லது துயரம் மட்டுமே நிலைத்திருப்பது கிடையாது. உங்கள் போக்கிற்கு ஒருவர் விடவில்லை என்றால், உடனே உறவை முறித்துக்கொள்வதும் தகுந்த தீர்வு இல்லை. வாரத்தில் ஒரு நாளாவது சண்டை போடாமல், இருவரும் சேர்ந்து எங்காவது சென்று வந்தால்கூடப் போதும். மற்ற நாட்களில் கிடைக்காத மன ஒற்றுமை கிட்டிவிடும். (இது என் சொந்த அனுபவம்).

மணந்தவரை (மணந்தவளை) மாற்ற முயல்வது ஒரு நாயைப் பூனையாக்கும் முயற்சிதான். ஒருவரையொருவர் அப்படியே ஏற்றுக்கொண்டால், புரிந்துணர்வு ஏற்பட, உறவு பலப்படும்.

(இந்த ரீதியில் நான் மலேசிய ஆங்கில தினசரி ஒன்றில் எழுதியவைகளைப் படித்த சில ஆண்கள்,`My marriage has improved because of you!’ என்று நேரில் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்).

2 thoughts on “புது மாப்பிள்ளை, பெண்ணுக்கு

  1. சிந்திக்க வைக்கும் சிறந்த கருத்துக்கள்!.. பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ////திரும்பக் கத்திப் பாருங்களேன்! எதற்காக இவ்வளவு  அவமரியாதையைப் பொறுத்துப் போகிறீர்கள்?”– கேட்டது நான்.

    பதில் உடனே வந்தது. “அது மரியாதை இல்லை!”///

    தவறாக நினைக்கவில்லை என்றால் என் சொந்தக் கருத்து..

    இவ்வாறு கணவரின் பேச்சுக்கு பொதுவில் பெண் பதில் சொன்னால்,அதற்குக் கிடைக்கும் உடனடி பதில் ‘இவளும் வாய்தான் அதான் சரியா போடறான் புருஷன்!!’.. பேசாமல் இருந்தால் இரக்கமாவது படுவார்களே என்ற உணர்வே பெரும்பாலான பெண்களை வாயடைத்து விடுகின்றது.

  2. நல்ல நல்ல அறிவுரைகள் நிர்மலா. இருபாலருமே இந்த அறிவுரைகளைச் சிந்தித்தாலே நல்ல திருப்பம் கிடைக்கும் அவர்களது வாழ்க்கையில், கடைபிடித்தால் நல்ல பலனும் கிடைக்கும். ஆனால் வளர்க்கப் பட்ட முறையினால் நிறைய சிரமங்களைக் கடக்க வேண்டியிருக்கும். நன்றி. பாராட்டுகள்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க