விமலா ரமணி

மீண்டும் ஒரு மகளிர் தினம்.

ஒவ்வொரு   வருடமும் நாம் இந்த நாளைக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த நாளில் என்ன சாதிக்கறோம்  ?

பெண்மைக்கு  என்ன பெருமை சேர்க்கிறோம்?

எத்தனையோ தடைகளைத் தாண்டி வந்த பெண்மைக்கு என்ன மதிப்புத் தருகிறோம் ?

இன்றும் செய்தி  தாள்களைப் புரட்டினால் ஆங்காங்கே பெண்கள் கற்பழிக்கப் பட்ட செய்திகள்..

கணவனால் கொடுமைப் படுத்தப் பட்ட பெண்கள்..

வரதஷிணைக் கொடுமைக்காக எரிக்கப்பட்ட பெண்கள்

தந்தையே  தன் மகளைக் கற்பழிக்க முற்பட்ட  கயமைத் தனம் கல்வி கற்பிக்கும்  ஆசானே  மாணவியைக் கற்பழித்தல்….இப்படி எத்தனை எத்தனை செய்திகள்..

ஆசானுக்கே அரிச்சுவடியில்  சந்தேகம் வரலாமா ?

இன்னமும் அறியாமையிலும்  அவலத்திலும்  அடிபட்டு மிதிபட்டு அரைப் பைத்திய நிலையில்  அவதியுறும் பெண்கள்.

இந்தக் குடும்ப வன்முறை பற்றிய ஒரு கட்டுரையை  ‘இந்து ’   செய்தித் தாளில் சமீபத்தில் படித்தேன்.

நம் பாரதத்தின்   கிராமங்களில்  கூட அறிவியல் வளர்ச்சி வந்துவிட்டது.பெண்கள் கல்வி கற்க கிராமப் புறங்களிலுருந்து நகர்ப் புறங்களுக்கு வருகிறார்கள் கிராமம்  நகரம் என்ற நிலை மாறி. அனைவரும் நாகரீக வாழ்வைத் தேடி அலைகிறார்கள்.

தொழில் நுட்ப நிலையிலும்  பல கிராமப் பெண்கள் சாதனை புரிந்துள்ளார்கள்.

வாட்ச் மேன் மகள் சப் கலெக்டர் ஆகிறாள்.

ஏழ்மை நிலையிலும படிக்கும் ஆர்வத்தால் தொழில் கல்வி பயின்று

 கல்லுரியில்  முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் பெறுகிறாள்.  ஒரு மாணவி.

ஆனால் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வரும் பெண்களின் மனநிலை என்ன என்பதை அந்தக் கட்டுரை விளக்குகிறது.

தகப்பனால் அடி உதை வாங்கி அரைப்  பைத்திய நிலையில் இருக்கும் தாய்  ,எப்போதும் வறுமை எதிர் காலம் பற்றிய அச்சம்  ,தன் கற்புக்கு உத்திரவாதம் அற்ற நிலை , சமூகத்தின் பாலியல் பலாத்காரக்  கொடுமை …..

இந்நிலையில் குடும்ப  வன்முறைச் சட்டங்கள் எப்படி உதவுகின்றன?

தனி நீதி மன்றங்கள்   உதவும் அமைப்புக்கள் அத்தனையும் இருக்கின்றன.

இத்தனை இருந்தும் எப்படி இத்தனை அக்கிரமங்கள் நிகழு

கின்றன. ?

ஒரு பீட்சாவுக்கு ஆர்டர் கொடுத்தால் அரை மணியில்  பீட்சா நம் இல்லம் தேடி வந்து விடுகிறது.

அவதியுறும் பெண்மைக்குப் பாதுகாப்பு  தர அரை மணி  நேரம் போதாதா?  என்று வினா எழுப்புகிறார் கட்டுரையாளர்.

அரசாங்கம்   இதற்குத் தனி ஏற்பாடு செய்ய வேண்டும்  அவசரகால  உதவியாக ஏதாவது ஒரு ஏஜன்ஸியை  ஏற்படுத்த வேண்டும் என்கிறார் அவ்ர்.

ஒரு கதை உண்டு.

ஒரு தவளையை ராமபிரானின் வில் அழுத்தி கொண்டிருந்ததாம்

அதை உணர்ந்த ராமர் தன் வில்லை விலக்கிக் கொண்டு தவளையை பார்த்துக் கேட்டாராம்   ஏன் முன்பே நீ என்னிடம் முறையிடவில்லை?

 தவளை பதில் சொல்லியதாம்

 எனக்கு யாராவது துன்பம் தந்தால்  ராமா  என்று அழைப்பேன்

ஆனால் அந்த ராமனாலேயே எனக்குத் துன்பம் ஏற்பட்டால் யாரை அழைப்பேன்?

பல தகுதிகள் இருந்தும் திறமை இருந்தும் தன் திறமைகளைப் பெண்களால் முழுமையாக வெளிக் காட்ட முடியாமல் போவதின் காரணம் அவர்கள் குடும்ப சூழ்நிலைகளே

குடும்ப வன்முறையால் பெண் இனம் அழிந்து கொண்டிருக்கிறது.

வறுமையும் விரக்தியும்  அச்சமும் ஆட்க் கொண்ட நிலையில் அவர்களால் தம் இலக்கை  அடைய முடிவதில்லை.

தவிர தற்கால நவநாகரீகப் போக்கும் போலி விளம்பரங்களின்  ஆதிக்கங்களும் இவர்களைத் திசைமாறச் செய்கின்றன.

சிகப்பழகு தான் அழகு எனக் கூறும் விளம்பரங்கள்  முகச் சுருக்கம் இல்லாமல்  இருக்க செய்து கொள்ளப்படும் பொட்டக்ஸ் சிகிச்சை பற்றிய அறிவிப்புக்கள் அரை குறை ஆடைகளும் குட்டைப் பாவாடைகளும் இது தான் நாகரீகம் எனப் பறைசாற்றும் விளம்பரங்களும் பெண்மையின் அழகை ஜட்டி தெரிய  கீழே இருந்தபடி படம் பிடிக்கும் காமிராக் கோணங்களும்

இவைகள் எல்லாமே பெண்மையைப் பெருமையைப் படுத்தவில்லை

காதலர் தினத்தன்று பப்புக்குப் போய் பெண்கள் பீர் அருந்துவது  நாகரீகமல்ல

சரிநிகர் சமானம் என்பது இதுவல்ல என்பதைப் பெண்களும் உணரவேண்டும்

கணினியை திறந்தால் அது நம்மை டேட்டிங்கிற்கு அழைக்கிறது.

தனிமையாக இருப்பவர்களுக்கு ஜோடி சேர்க்கிறது.

நல்ல விஷயங்கள் எத்தனையோ கணினியில் இருக்க நாம் தேர்ந்ததெடுப்பது இதைத் தான்.

பேஸ் புக்கில் ஆரம்பிக்கும் நட்பு கடைசியில் நாசமாகி தற்கொலைக்கு வித்திடுகிறது இது அறிவியல் வளர்ச்சி அல்ல அறியாமையின் தளர்ச்சி

நடனப் போட்டி என்ற பெயரில் முன் பின் அறிமுகம் இல்லா  சிறுமிகள்  சிறுவர்களுடன் ஆட வைக்கப்படுகின்றனர்.

பெற்றோர்களும் அதைப் பார்த்து ஆனத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

அசிங்கமான அசைவுகள் ஆபாசப் பாடல்கள்  அர்த்தம் புரியாமலே ஆடும் இளம் சிறார்கள் பெற்றவர்களுக்குக் கூடவா அர்த்தம் தெரியாது.?

ஒரு  கேரள நடிகை தன் பிரசவத்தை  நேரடி ஒளிபரப்புச் செய்ய

 டி வி சேனல்களுக்கு  அனுமதி அளிக்க பாவம் அந்தச் சேனல்காரர்கள்  கையில் வீடியோ காமிராக்களுடன் அவருக்கு பிரசவ வலி எடுக்கும் நேரத்திற்காகக் காத்திருந்தனர். பாவம் அவர் கணவருக்குக் கூட இல்லாத அக்கறை  புகைப் பட நிபுணர்களுக்கு

  காரணம்…?பணம் மணி துட்டு

கடத்தல் கதையைச் சொல்லித் தரும் திரைப்படங்கள் அதைக் கடைப்பிடிக்கும்  மனிதர்கள்

பாட்டு இல்லாத சினிமாக்கள் கூட வரலாம் பாட்டில் இல்லாத சினிமாக்கள் இல்லை

இது நாகரீக வளர்ச்சியா? நச்சுத் தன்மை  வளர்ச்சியா?

இந்த நச்சுத்  தான் சமுதாயத்தில் புறையோடி பாலியல் வன்முறைக்கு வித்திடுகிறது.

அந்த்க காலப்பள்ளிகளில் மாரல் சயின்ஸ் என்றொரு வகுப்பு உண்டு.

நல்ல நல்ல கருத்துக்களை கூறும் வகுப்பு

இப்போது கூறுவதற்கும் ஆள் இல்லை கேட்கவும் காதுகள் இல்லை

குறிப்பாக இளைய சமுதாயம்

பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் வருவது போல்

ஆடை குலைவுற்று நின்றாள்.

ஆவெனத் துடித்தழுதாள்  வெறும்

மாடு நிகர்த்த துச்சாதனன் 

மைக்குழல் பற்றி இழுத்தான்

 என்பது போல்  இப்போது துச்சாதனர்கள் அதிகமாகி விட்டனர்.

பெண் அடிமைக்கு எதிராக முப்பதுகளில் பாரதி குரல் கொடுத்தான்.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்றான்.

நாம் அர்த்தம் புரிந்து கொள்ளாமல் பெண்களைக் கொளுத்திக் கொண்டிருக்கிறோம்

நாம் கட்டப் பஞ்சாயத்துப் பண்ணிக் கொண்டிருக்கிறோம்

வார்ட் பாயால் கற்பழிக்கப் பட்ட பெண் கோமா நிலைக்குத் தள்ளப் பட்டு கருணைக் கொலைக்கும் மறுப்பு கூறப்பட்டு மருத்துவமனையின் தாதிகளால் பல வருடங்கள் பராமரிக்கப் பட்டு இன்னமும்  நடைப் பிணமாய் உயிர் வாழ்ந்து கொண்டிக்கிற அவரைப்போல்  அபலைப் பெண்கள்  இன்னும் எத்தனை பேர்..

ஆசிட் வீசப்பட்டு அநியாமாய்  பலியான வித்யாக்களும். நிர்பயாக்களும்  எத்தனை பேர்..

ஐந்து வயதிலும்  பத்து வயதிலும் பள்ளியில் படிக்கும் மாணவிகள் கற்பழிக்கப் படுகிற கொடுமை

கற்புக்கு அர்த்தம் கூடத்  தெரியாத அந்தப் பிஞ்சு மலர்களைக் கசக்கிப்போட  எப்படி மனம் வருகிறது?

காரணம்,,,? குடி வெறி…?

நாமும் இந்தச் சமுதாயத்தில் தான் வாழ்ந்து  கொண்டிருக்கிறோம்.

ஒரு செய்தி உண்மைச் செய்தி  தில்லியில் நடந்தது.

கணவன் மனைவி இருவர் ஒரு ஹோட்டலில்   அறை எடுத்துத் தங்க

கணவன்  தன் வேலை நிமித்தம் வெளியே செல்ல

அரைக்கு வந்த அட்டண்டர் பையன்  தனியாக இருக்கும் அந்தப் பெண்ணிடம் பலாத்காரம் செய்ய

உதவி கேட்டு அந்தப் பெண் கதற

பக்கத்து அறைக்காரர் ஓடி வர

தனக்கு உதவி கிடைத்ததென்று அந்தப் பெண் மகிழ்ந்த நேரத்தில்  அந்தப் பெண்ணுக்குக் கிடைத்த உதவி என்ன தெரியுமா  ?

மேற்படி மனிதரும்  தன் வாய்ப்புக்காக க்யூவில் காத்திருக்கிறார்.

என்ன  கொடுமை இது ?

இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன ?நாம் மனிதாபிமானத்தை இழந்து விட்டோம்.

பெண்ணின் பெருமை எல்லாம் மேடைப் பேச்சோடு சரி என்ற நிலைக்கு வந்துவிட்டோம்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எல்லாத் துறைகளிலும் பரவிக் கிடக்கிறது.

அவர்களின் வறுமை இயலாமை குடும்பச் சூழ்நிலை  இதை வைத்து அவர்கள் சூறையாடப் படுகிறார்கள்.

மனம் ஆரோக்கியமான இருந்ததால் செயலில்  நேர்த்தி வரும்.

அந்த  ஆரோக்கியம் சமுதாயத்திலும்  எதிரொலிக்க வேண்டும்

தனி மனித சுதந்திரம் சுற்றுப் புறத்தையும்  செம்மைப் படுத்த வேண்டும்

நினைவு நல்லது வேண்டும் என்று பாரதி கேட்டதும் இதைத் தான்.

இது பெண்கள்  மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல.

நாட்டுப் பிரச்சனை

சமுதாயப் பிரச்சனை

அகலிகைக்கு சாப விமோசனம் கிட்டியது பழைய கதை

இன்று காத்திருக்கும் பெண்களுக்கு சாப விமோசனம் கிடைக்காது.

காரணம்,,,?அவள் எதிரே வருவது ராமர் பாதங்கள் அல்ல

ராவண பாதங்கள்

இவளுக்குக் காத்திருக்க நேரமும் இல்லை

நளாயினியைப் போல்  சூரியனை உதிக்காதே என்று  சாபமிட தவ வலிமையும் இல்லை

அதனால் தான் இவளுக்குச் சமுதாயப் பாதுகாப்பு தேவை

அரசாங்கத்தின் அரவணைப்புத் தேவை

சக நண்பர்களின்  ஒத்துழைப்புத் தேவை

சட்டத்தால் மட்டுமே இவளுக்குப் பாதுகாப்புக் கிடைக்காது

இது  நாம் இழந்துவிட்ட மனிதாபிமானத்தின்  பிரச்சனை

நான் இந்தியன் என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் போது

நான் நல்ல மனிதன் பாரதமாதா கி ஜெய் என்று என் நாட்டைத் தாயாக வணங்குவதைப்  போல்

பெண்கள் அனைவரையும்  (மனைவி நீங்கலாக) என் தாயாக சகோதரியாக  வணங்குவேன் என்று ஒவ்வொரு ஆணும் சபதம்

எடுத்துக் கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.

அன்று தான் உண்மையான பெண்கள் தினம்

பெருமைக் குரிய தினம்.

பெண்கள் உலகின் கண்கள் என்பார்கள்.

அந்தக் கண்களில் காட்டிராக்ட் வந்திருக்கிறது.

தக்க காலத்தில்  உரிய நேரத்தில் மருத்துவம் பார்க்க வேண்டும்

இல்லையென்றால்  குருட்டுப் பெண்ணின் வறட்டுப் பெருமையைத் தான் நாம் பேசிக் கொண்டிருப்போம்.

வாழ்க பெருமை

வாழ்க  பெண்கள் தினம்

*******************************************************

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “பெண்கள் உலகின் கண்கள்

 1. என் கட்டுரையைச் சிறந்த முறையில் வெளியிட்ட தங்களுக்கு நன்றி
  இந்தக் கட்டுரையின் விமர்சனத்தை எதிர் பார்க்கிறேன்.
  வல்லமையின் பணி சிறப்புற வாழ்த்துகிறேன்.
  அன்புடன்
  விமலா ரமணி

 2. நிகழ்கால கலாச்சார சீரழிவுகளை பட்டியலிட்டுருக்கிறீர்கள்.இவற்றுக்கெல்லாம் ஆக்கபூர்வ ஆலோசனைகள்தாம் வேண்டும்.
  வில்லவன்கோதை

 3. அன்பு விமலா ரமணி ஜி  வணக்கம் நல்ல சாட்டை அடி கொடுத்திருக்கிறீர்கள். எல்லாநிலைகளையும் எடுத்துக்கொண்டு  ஒரு நல்ல அலசல் . ஆனால் எத்தனை எழுதி என்ன ? எதாவது மாறுமா?  மாற வேண்டும் பாசிடிவாகவே நினைப்போம் . பேனாவுக்கு அத்தனை வலிமை உண்டே ! வாழ்த்துகள்      visalam 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *