மகளிர் அடைந்துள்ள ஏற்றங்களும், எதிர்நோக்கும் மாற்றங்களும்!

2

மேகலா இராமமூர்த்தி

மகளிர் தமது அடிப்படை உரிமைகளை அடைவதற்கும், வாழ்வில் சந்தித்த பல்வேறு அவலங்களை அகற்றுதற்கும் பெருமளவில் போராட்டங்களை நடத்தவேண்டிய சூழல் சென்ற நூற்றாண்டில் நிலவியது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்ற அம்மையார் (a freedom fighter, significant women activist and a social reformer) பெண்களுக்கெதிரான தேவதாசி முறையை ஒழித்துப் பள்ளியறைப் பதுமைகளாக இருந்த பெண்கள் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்பதற்கு வழிகோலினார். பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியார் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் நடத்தப்பட வேண்டும்; அவர்தம் விருப்பங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று கொள்கை முழக்கமிட்டார்.

’பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!

பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!’ என்று பெண்மையை வாழ்த்திப்பாடி அவர்களை நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட புதுமைப் பெண்களாய் வாழ வலியுறுத்தினான் மானுடம் போற்றும் மாகவி பாரதி!

’கல்வியில் லாத பெண்கள்
களர்நிலம் அந்நி லத்தில்
புல்விளைந் திடலாம் நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை!’
என்றான் புரட்சிக்கவி.

களர் நிலங்களாக இருந்த பெண்களின் தளர்நிலை இன்று வெகுவாக மாறியுள்ளது எனலாம். கல்வியெனும் விதையால் அறிவுப்பயிர் செழித்து வளர்ந்து சிந்தனைமலர்கள் மணம்வீசி வெற்றிக்கனிகளை எட்டிப்பறித்து வருகின்றனர் இன்றைய பெண்கள்! பள்ளிகளும் கல்லூரிகளும் ஆண்களுக்கே ஏகபோக உரிமையாய் இருந்ததுபோக இன்று ’எங்கெங்கு காணினும் சக்தியடா!’ என்று ஆனந்தக் கூத்தாடும் வகையில் சக்தி வடிவங்களான பெண்கள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அதிக அளவில் பயின்று வருகின்றனர். அதுமட்டுமா? ஆண்களைக் காட்டிலும் மங்கையர் திலகங்களே தேர்வுகளிலும் அதிக விழுக்காட்டில் தேர்ச்சி பெறுகின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள்.

இல்லத்தரசி என்ற பட்டத்தோடு பெயரளவில் ’அரசியாய்’ உண்மையில் அடுக்களை துடைத்தும், படுக்கையை விரித்தும் வீட்டினர் அனைவர்க்கும் அடிமையாய் வா(தா)ழ்ந்து வந்த பெண்கள் இன்று நாட்டையே ஆள்கின்றனர்! சந்திரனைக் காட்டிக் குழந்தைக்குச் சோறூட்டிக்கொண்டிருந்த மகளிர் இன்று சந்திர மண்டலத்திற்கே சென்று வருகின்றனர். அன்ன நடையால் வீட்டை மட்டுமே அளந்து கொண்டிருந்தவர்கள் இன்று வானை அளக்கின்றனர்; கடல் மீனை அளக்கின்றனர்.

அலுவலகங்களிலும், ஆராய்ச்சிக் கூடங்களிலும், கணினி நிறுவனங்களிலும், கார்பரேட் கம்பெனிகளிலும் அற்புதமாய்ப் பணியாற்றி வருகின்றனர் இன்றைய பெண்கள் என்பதை எண்ண எண்ண இனிக்கவே செய்கின்றது! வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர்கள் இன்று தலைகுனிவைச் சந்தித்துவருவது மகளிர்க்கு மட்டற்ற மகிழ்ச்சி தருவதாய் உள்ளது.

இவ்வாறு பெண்களின் முன்னேற்றமும் வளர்ச்சியும் இந்த 21-ஆம் நூற்றாண்டில் கணிசமான அளவில் உள்ளது என்றபோதிலும், அவர்களின் வெற்றியைக் குலைக்கவும், நிம்மதியைக் கெடுக்கவும், நல்வாழ்வை நாசமாக்கவும் நடைபெற்றுவரும் முயற்சிகளுக்கும், சதிகளுக்கும் பஞ்சமேயில்லை.

வன்கொடுமைகள், பாலியல் தொந்தரவுகள் போன்றவற்றைப் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண்களும், அலுவலங்களில் பணிபுரியும் பெண்களும் அதிக அளவில் சந்தித்துவருகின்றனர். இத்தகைய கொடுமைகளால் உடலாலும், உள்ளத்தாலும் பாதிக்கப்படும் பெண்களில் சிலர் தற்கொலை செய்துகொள்வதும் தொடர்கதையாகி வருவதைப் பத்திரிகைகள் தினமும் பத்தி பத்தியாய் வெளியிடுகின்றனவே!

இத்துணைப் பிரச்சனைகளுக்கு இடையிலும் விடாமுயற்சியுடன் தளராது பணியிடங்களில் உழைக்கும் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான அங்கிகாரமும், பதவி உயர்வும் கிடைப்பதில்லை என்பது கசப்பான உண்மையாகும். ஓரளவிற்குமேல் பெண்கள் உயர்பதவிகளுக்குச் செல்வதை ஆணாதிக்கச் சமுதாயம் பல்வேறு வகைகளில் தடைசெய்கின்றது; அனுமதிக்க மறுக்கின்றது. ’Glass Ceiling’ எனும் கண்ணுக்குத் தெரியாத இந்தத் தடுப்புச்சுவர் பெண்களின் உயர்வுக்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய முட்டுக்கட்டையாய் இருப்பது வேதனையளிக்கின்றது. அதுபோல் ஒரே வேலையைச் செய்கின்ற ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே அளவிலான ஊதியமும் (சில இடங்களில்) வழங்கப்படுவதில்லை. தினக்கூலித் தொழிலாளர்களிடையே ’gender pay gap’ எனும் இவ்வூதிய வேற்றுமையை இன்றும்  நாம் கண்கூடாகக் காணமுடியும். இவையெல்லாம் பெண்களின் வளர்ச்சி கண்டு பொறுக்காத, அழுக்காறு மிகுந்த ஆண் அதிகாரவர்க்கத்தின் வேலையே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை அல்லவா!

வெளியில் பெண்களுக்கு இழைக்கப்படும் தீங்குகளும் தொல்லைகளும் ஒருபுறம் என்றால்….மறுபுறம் வீடுகளில் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அவற்றிற்குச் சற்றும் குறைந்தவையல்ல. திருமணமான பெண்களில் சிலர் புக்ககத்தினரின் நாகரிகமற்ற பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் பொறுமையோடு தாங்கிக்கொள்ளவேண்டியுள்ள அவலநிலை இன்றும் நீடிக்கின்றது. திருமணமான உடனே பெண் பிள்ளைபெறத் தவறினால் சொல்லவே நாக்கூசும் ‘மலடி’ என்ற பட்டத்தை எந்தப் பல்கலைக்கழகத்திடமும் அனுமதி பெறாமல் இந்தச் சமூகம் அவளுக்குச் சூட்டுகின்றது! அதுபோக, குடும்பத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் அடுத்தடுத்துப் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டாலோ….அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கும் வசவுகளுக்கோர் அளவில்லை.

மருத்துவ உண்மைகள் அனைத்தையும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வீட்டின் வரவேற்பறைக்கே வந்து வழங்கிவிட்டுப் போகின்ற இந்த நவீன யுகத்தில் மெத்தப் படித்ததாய் மார்தட்டிக்கொள்ளும் இன்றைய சமூகத்தினர் குழந்தைப்பேறு வாய்க்காமல் போவதற்கும், பெண் குழந்தைகள் தொடர்ந்து பிறப்பதற்கும், பெண்ணை மட்டுமே குறைசொல்லும் மடமையை, சிறுபிள்ளைத்தனத்தை எங்கு கற்றார்கள்?? ஆடவர்க்கென்று ஒரு (பொன்) தராசும் பெண்களுக்கென்று வேறொரு (மண்) தராசும் வாங்கி எடைபோடும் அற்புதப் பயிற்சியை எங்கு பெற்றார்கள்??

இவையல்லாமல், குடியைக் கெடுக்கும் குடிக்கு அடிமையான கணவன்மார்களை மணந்துகொண்ட பெண்களின் துயர நிலையோ வார்த்தைகளின் விவரணைகளுக்கு அப்பாற்பட்டது!!

அடுத்து, வரதட்சணை என்ற பெயரில் நடத்தப்படும் ’பணக்கொள்ளை’ இன்னமும் ஒழிந்தபாடில்லை; சொல்லப்போனால் அதிகரித்திருக்கின்றது என்பதே இன்றைய உண்மை நிலை. இதனால் வசதியில்லாத பெற்றோர்பலர் தங்கள் பெண்களின் எதிர்காலத்தை எண்ணி எண்ணிக் கலங்குகின்றனர்.

’பெண்ணியம்’ என்ற கொள்கை இப்பொழுது பலராலும் பரவலாகப் பேசவும் விவாதிக்கவும்படுகின்றது. ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பெறுவதும், வேலை வாய்ப்புக்களிலும், ஊதிய அளவுகளிலும் சமநிலை காண்பதும் அதன் அடிப்படைக் கோட்பாடுகள் ஆகும். அத்தோடு நில்லாமல், பெண்களின் சிந்தனைச் சுதந்திரத்தைத் தடைசெய்து அவர்களின் விருப்பத்திற்கெதிரான செயல்களை அவர்கள்மீது திணிப்பதையும், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளையும் பெண்ணியம் கடுமையாகக் கண்டிக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்!

இத்தகைய பெண்ணியச் சிந்தனைகள் இன்று எந்த அளவிற்குச் செயல்வடிவம் கண்டிருக்கின்றன என்பதை நடுநிலையான பார்வையோடு சிந்தித்துப் பார்த்தால் பெண்களின் நிலை இன்றைய சமூகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளது என்றபோதிலும் இவ்வளர்ச்சி போதுமானது என்று சொல்வதற்கில்லை. அரசியலிலும், பொதுப்பணிகளிலும் இப்போதும் பெண்களின் பங்களிப்பு மிகக்குறைவே. இந்நிலை மாறவேண்டும். அரசியலிலும் பொதுப்பணிகளிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் ஈடுபடவேண்டும். ’பெண்கள் தங்கள் உரிமைகளைத் தவறாது பெறுவதற்கு அவர்கள் தயக்கமின்றிப் பொதுப்பணிகளில் ஈடுபடவேண்டும்!’ என்று தந்தை பெரியார் கூறியதை நாம் இவ்வேளையில் நினைவுகூர்வது நல்லது!

மேடைகளில் மட்டும் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதையும், வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக அமர்ந்துகொண்டு பெண்களின் நலன் குறித்து விவாதிப்பதையும் விடுத்துப் பெண்கள் ஒன்றுகூடி வீதிகளில் போராட வேண்டும். ‘கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்’ என்றோர் பழமொழி உண்டு. நாட்டின் எந்த மூலையில் எந்தப் பெண்ணுக்குப் பிரச்சனை என்றாலும் எல்லாப் பெண்களும், பெண்ணுரிமை அமைப்புக்களும் ஒன்றுபட்டுத் தட்டிக்கேட்க வேண்டும், எதிர்ப்புக்குரல் எழுப்பவேண்டும். கிராமங்களுக்கும், நாட்டின் மூலை முடுக்குகளுக்கும் சென்று பெண்ணுரிமை குறித்தும், அவை மறுக்கப்படும்போது மேற்கொள்ளவேண்டிய சட்ட வழிமுறைகள் குறித்தும் மகளிர் அமைப்புக்கள் கிராமப்புறப் பெண்களுக்குக் கற்பிக்கவேண்டும்.

அணு மிகச்சிறியதுதான்; ஆனால் அது பிளக்கப்படும்போது வெளிப்படும் ஆற்றல் அளப்பரியது! அதுபோல் பலவீனமானவர்கள் (weaker sex) என்ற எண்ணத்தில் அநீதிகளுக்கு உட்படுத்தப்படும், அவலங்களுக்கு ஆட்படுத்தப்படும் பெண்ணினமும் ஒன்றுதிரண்டால் ‘ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி!’ என்று பாரதி எக்காளமிட்டதுபோல் மீண்டும் ஓர் யுகப்புரட்சியை நாடு சந்திக்கும் நிலை வரலாம். எனவே சமுதாயம் பெண்களைச் சுயமாகச் சிந்தித்துச் செயற்படவும், சுயமரியாதையோடு வாழவும் அனுமதிக்க வேண்டும். அதுபோல், பெண்களும் தம் எதிர்காலத்தை வளமானதாக மாற்றுவதற்கான முயற்சிகளில் தாமே ஈடுபடுவதும், அதற்கு ஏற்படும் தடைகளைத் தகர்த்துத் துணிச்சலோடு முன்னேறுவதும் அவர்களுக்கு ஏற்றத்தையும் எதிர்நோக்கும் மாற்றத்தையும் உறுதியாகத் தரும் என்பதில் ஐயமில்லை.

’உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
ஓது பற்பல நூல்வகை கற்கவும்
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்’

என்ற முண்டாசுக் கவிஞனின் முத்தான வரிகளை மனத்தில் கொண்டு அயராது உழைத்தால் இந்தப் பாரையே வென்று சரித்திரம் படைப்பர் பாவையர்!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on "மகளிர் அடைந்துள்ள ஏற்றங்களும், எதிர்நோக்கும் மாற்றங்களும்!"

  1. தெள்ளத் தெளிவான, அருமையான நடையில் அற்புதமான பகிர்வு மேகலா!.. பாராட்ட வார்த்தைகளில்லை.. ஆணித்தரமாக, ஒவ்வொரு கருத்தையும் எடுத்து வைத்திருக்கிறீர்கள்.. மனமார்ந்த நன்றி பகிர்வுக்கு!

  2. பெண்கள் தடைகள் பல கடந்து வந்திருந்தாலும், தற்கால உலகில் இன்னமும் என்ன வகையான புதியத் தடைகள் எங்கெங்கு இருக்கின்றன என்று சரியாகச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள் மேகலா. ஆம், நீங்கள் சொல்வது போல கல்வி என்ற ஆயுதம் கொண்டே தனக்கு விதிக்கப்பட்ட தடைகளைக் கண்டறிந்து அவற்றை நீக்கவும் பெண்கள் துணிவு கொள்ள வேண்டும். பெண்கள் ஒருங்கிணைந்து விழிப்புறச் செய்யும் செயல்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நல்லதொரு கட்டுரை, நன்றி. பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.