டவுன் வித் அப்ஸ்கர்ட் பிக்ச்சர்ஸ்
தேமொழி
மேடையில் பரதநாட்டியம் ஆடிய அந்த மாணவி மெய் மறந்து, கலையுடன் தன்னை இணைத்துக் கொண்டு பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள். அது அந்தப் பல்கலைக் கழகத்தின் முதுகலை மாணவ மாணவியரின் பிரிவுஉபச்சார விழா. அவளும் இறுதியாண்டில் பயிலும் மாணவிதான். ஆடிக்கொண்டிருக்கும் மாணவியை அதன் பிறகு அந்தக் கல்லூரி வளாகத்தில் பார்ப்பதென்பதே அரிதாகிவிடும். அவள் எங்கு போவாளோ, மேற்கொண்டு படிப்பாளோ, பணியில் அமர்வாளோ, கலைப்பயணத்தைத் தொடர்வாளோ என்பது போன்ற கேள்விகள் அவள் ஆடிய விதத்தைக் கண்ட பொழுது மனதில் எழுந்தது. அந்த விழாவில் அந்தத்துறையைச் சார்ந்த அனைவருமே பங்கு பெற்றனர். மூத்த மாணாக்கர்கள், இளைய மாணாக்கர்கள், பேராசிரியர்கள், கல்லூரியின் ஊழியர்கள் யாவரும் நடனத்தைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
அவள் வகுப்பில் படிக்கும் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட உடன் பயிலும் மாணவன் ஒருவன் அவர்கள் வகுப்பு நிகழ்சிகளை, விழா நடனங்களை, உல்லாசப் பயணங்களை உற்சாகமாகப் படம் பிடிப்பான். படங்களை வேண்டுபவருக்கும் பிரதி எடுத்து வழங்குவான். அன்றும் வழக்கம் போலவே புகைப்படம் எடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, தனது வகுப்புத் தோழியின் நடனத்தைப் பல கோணங்களிலும் ஓடி ஓடிப் படம் பிடித்தான். திடீரென யாரும் எதிர்பாராவண்ணம் நடனமாடியவளின் முந்தானை இருக்க வேண்டிய இடத்தை விட்டு நெகிழ்ந்து நழுவியது, அவள் அணிந்திருந்த சோளி, அவளது மார்பு சேலையினால் சரிவர மறைக்கபடாமல் போனது.
ஆண்களும் பெண்களும் கலந்து இருந்த அவையில் அவ்வாறு நிகழ்ந்ததும் பெண்கள் அனைவருக்கும் சங்கடமானது. கூச்ச உணர்வில் நெளிந்தனர். நடனமாடிய மாணவிக்கு இது தெரியவில்லையா அல்லது நடனத்தில் இருந்த தீவிர ஈடுபாட்டில் அதனைப் பொருட்படுத்தவில்லையா என்றும் புரியவில்லை. அவளது வகுப்புத் தோழன் அத்துடன் மேற்கொண்டு படம் பிடிப்பதை நிறுத்தினான். கேமேராவின் லென்ஸ் கவரைப் போட்டு மூடிக் கொண்டே தனது இடத்திற்குத் திரும்பிவிட்டான். அவனது அந்த செய்கை மனதை விட்டு அகலாமல் கால்நூற்றாண்டு ஆகியும் நினைவில் தங்கி அவன் மீது அளவு கடந்த மதிப்பைத் தந்த வண்ணம் இருக்கிறது. இது ஓர் உண்மை நிகழ்ச்சியே.
அன்று பெண்கள் மதிப்பில் மிகவும் உயர்ந்த இடத்தைப் பிடித்தான் அவன். அவன் தொடர்ந்து படம் எடுப்பது தவறா இல்லையா? அதில் என்ன தவறு? என்பது ஒவ்வொருவர் கோணத்திலும் வேறுபடலாம். ஆனால் அவன் செய்த செய்கையை அறிந்தால் அவனது தாய் மிகவும் பெருமைப் பட்டிருப்பார். சகோதரிகள் (இருந்திருந்தால்) அவர்களும் மகிழ்ந்திருப்பர். அதுவரை அவனுடன் படித்த அவனது வகுப்புத் தோழியரான மாணவிகளும், ஆசிரியைகளும் அவனை மனதிற்குள் பாராட்டியிருப்பார்கள் என்பதை அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அத்துறை மாணவியர் அவன் பண்பாட்டைக் குறிப்பிட்டுப் பேசிய பொழுது தெரிந்தது.
இது பண்பாட்டிற்கு, பெண்களை மதிக்கும் பண்பிற்கு நல்லதோர் சான்று. ஆனால் நாம் வாழும் உலகில் இருப்பவர் அனைவருமே இந்த மாணவனைப் போன்றவர்களாக இல்லாதிருப்பதே பெண்களுக்குத் துயரம் தரும் விதமாக அமைந்துவிடுகிறது.
இந்நாட்களில் படம்பிடிக்கும் கருவியுடன் கைபேசி வந்ததும், பெண்கள் அறியாவண்ணம் அவர்கள் மீது நிகழ்த்தும் அத்துமீறல்கள் அதிகமாகிவிட்டன. அனுமதியின்றி யாரையும் படம் எடுப்பது தவறு. அது தனிமனித உரிமை மீறல். பொது இடங்களில் பெண்கள் கவனிக்காத பொழுது, அவர்கள் குனிந்து நிமிரும் பொழுதும், அரக்கப் பரக்க அவசர அவசரமாக ஓடும்பொழுதும், பேருந்துகளில் அமர்ந்திரருக்கும் பொழுது நின்றவண்ணம் மேலிருந்து பார்த்துத் தங்களுக்குக் கிடைக்கும் கோணத்தில் அவர்களது மார்பு, பின்புறம், இடை என அவர்களது உடல் உறுப்புக் காட்சிகளைப் படம் பிடித்து வைத்துக் கொள்வதும், அதை இணையத்தில் பரப்புவதும் விரைவில் வெகுவாகப் பரவிவிட்டது. அது போலவே நம்பிக்கைக்குரிய தோழர்களாக இருந்த பொழுது எடுத்த படங்களை நட்பு முறிந்தவுடன் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதும், பெண்கள் தங்கள் காதல் துணையுடன் தனிமையில் இருக்கும் நிகழ்வுகளையும், குளிக்கும் அறையில் ஆடையற்று உள்ள நிலைகளையும் காணொளியாக எடுத்து வைத்துக் கொண்டு அதை வைத்தே அவர்களை மிரட்டி அலைக்கழிப்பதும், தன்னிசையைத் தீர்த்துக் கொள்வதும் தொழில்நுட்பம் வந்தபிறகு அதன் மூலம் பெண்கள் மீது நிகழ்த்தும் புதிய வகை வன்முறையாக மாறியுள்ளது.
தானே வலிய விரும்பி அரைகுறை ஆடையுடன் அலையும் பெண்களையும், அது போன்ற ஆபாசக் கோணங்களில் தங்களைப் படம் எடுத்துக் கொள்ள விரும்பும் பெண்களையும் இணைத்து இங்குக் குழப்புவது நிலைமையின் தீவிரத்தை, கண்டனத்திற்குரிய செய்கையை மட்டுப்படுத்தி நீர்த்துப் போகும் என்பதால், அதனைத் தவிர்ப்போம். பெண்களே ஆபாசமாக அலையும் பொழுது அப்படித்தான் படம் எடுக்க விரும்புவார்கள் என்று கூறுவது பிரச்சனையைத் திசைத் திருப்ப விரும்பும் விதண்டாவாதம். கண்ணியத்தைக் கடைபிடிக்க விரும்புபவர்கள் இது போன்ற வாதங்களைத் தவிர்க்க வேண்டும். யாரும் எப்படியும் இருந்தாலும் நான் ஒழுக்க நெறியைப் பின்பற்றுவேன் என்பதுதான் பண்பாடாக இருக்க வேண்டுமே அல்லாமல், வீடு திறந்து இருந்தால் திருடுவதில் என்ன தவறு என்று கேட்பது ஒழுக்கத்தில் அடங்காது. கள்ளத்தனத்தில் அடங்கும். இது போன்ற நோக்கம் கொண்டு விவாதிப்பவர்களால் குற்றவாளிகளும் தப்பிப்பது எளிதாகிவிடும். பெண்களையும் சிறுமிகளையும், அவர்களது அனுமதியின்றி, அதுவும் அவர்கள் விரும்பத்தகாதவகையில் படம் பிடித்து மகிழும் கீழ்த்தர எண்ணம் கொண்டவர்களை கண்டிப்பது ஒன்றே இங்கு நமது நோக்கம்.
என்றோ உருவாக்கிய சட்டம் தற்காலக் குற்றத்தைத் தண்டிக்க இயலாத வகையில் அதில் ஓட்டைகளுடன் குற்றவாளிகளைத் தப்பவிட நேர்ந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியை நிலைநிறுத்த ஒத்துழைக்காவிட்டால், அதனை நாம் அன்றே மாற்றவேண்டும். இக்கருத்தை வலியுறுத்த இவ்வார நிகழ்ச்சி ஒன்றினைச் சான்றாக முன் வைக்கிறேன். இந்நிகழ்ச்சி, மேலை நாட்டினர் என்றாலே பண்பாட்டில் குறைந்தவர்கள், கலாச்சாரமற்றவர்கள், பெண்களை போகப்பொருளாக மதிப்பவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நம் பாரத மக்களின் அறியாமையைக் கண்களைத் திறக்கும்.
பெண்களின் அந்தரங்கத்தில் ஊடுருவும் செயலைச் செய்து அற்ப மகிழ்ச்சி அடையும் ஆண்கள், இன்று நேற்றல்ல, பல காலமாக இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் அவர்களை ‘பீப்பிங் டாம்’ (Peeping Tom) என்ற அடைமொழியிட்டு அழைப்பார்கள். அத்துடன் பொது இடங்களில் இருக்கும் பெண்களின் ஆடைக்குள் காமெராவை நுழைத்து அவர்களது உள்ளாடையை, பிறப்புறுப்பை இக்கயவர்கள் எடுக்கும் படங்களை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ (upskirt photos) என்று அழைப்பார்கள்.
சென்ற புதனன்று (மார்ச் 5, 2014), அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் அவ்வாறு பெண்களை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ பிடித்த தடியன் ஒருவனை நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். அம்மாநிலத்தின் சட்டப்படி முடிவெடுக்க வேண்டுமானால், அவன் செய்ததில் தவறில்லை என்ற தீர்ப்பை எழுதும் நிலைக்கு நீதிபதிகள் உள்ளானார்கள். அம்மாநிலத்தின் ‘பீப்பிங் டாம்’ சட்டப்படி ஒரு பெண் தனியிடமான ஆடைமாற்றும் அறையிலோ, குளியலறையிலோ, அவள் ஆடையற்று அல்லது அரைகுறை ஆடையுடன் இருக்கும் பொழுது படம் எடுப்பதையே சட்டப்படித் தண்டிக்க முடியும். ஆனால் நிர்வாண நிலையில் இல்லாமல், உடல் முழுவதும் மறைக்கும் ஆடை அணிந்து, பொது இடத்தில் உள்ள பெண்ணை ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ எடுப்பதைத் தண்டிக்கச் சட்டத்தில் வழியில்லை என்று கூறியது அம்மாநில உயர்நீதிமன்றம்.
இத்தீர்ப்பால் கொதித்தெழுந்த அம்மாநில மக்களும் சட்டமன்ற உறுபினர்களும் மறுநாளே (வியாழக்கிழமை, மார்ச் 6, 2014) பெண்களை அவமதித்து இவ்வாறு ‘அப்ஸ்கர்ட் படங்கள்’ எடுத்து அவர்களைப் பாதுகாப்பற்றவர்களாக உணரச் செய்யும் நிலையைப் போக்க வேண்டும் என்று அறிவித்ததுடன், குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டரை ஆண்டுகளிலிருந்து பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 டாலர்கள் வரை அபராதமும் கட்ட வேண்டும் என்ற சட்டமியற்றி அதனை நடைமுறைப்படுத்தவும் வழி செய்துவிட்டனர். முதல்நாள் குற்றமற்றவன் என்று கருதப்பட்டவன், மறுநாளே மாற்றி எழுதப்பட்ட சட்டத்தினால் குற்றவாளியாகித் தண்டனை அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டான். அம்மாநிலப் பெண்களுக்கு இது இந்த ஆண்டிற்கான சிறந்த “உலக மகளிர் தினப்பரிசு” என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
உலகில் பல நாடுகளில் இவ்வாறு தனி மனுத உரிமைக்கு ஊறு விளைவிக்கும் செயலைத் தண்டிக்கப்பட வேண்டியக் குற்றம் எனச் சட்டமியற்றப் பட்டாகிவிட்டது, அதில் இந்தியாவும் அடங்கும். இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66இ பிரிவுப்படி (under section 66E, of the Information Technology Act) இது போன்ற செயல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் பெண்கள் முன்னைவிட எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. எதையும், யாரையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து எச்சரிக்கையாக இருப்பது இன்றியமையாததாகிறது. ஸ்கைப் போன்ற காணொளி வழி அலுவலக தொழிலின் காரணமாக கலந்துரையாடல் நடக்கும் பொழுது, ஆண்கள் பெண்களுடன் உரையாடுவதை சாக்காக்கிக் கொண்டு அவர்களை மார்புவரை காமெரா கோணத்தை வைக்கச் சொல்லும் பொழுது பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த ஆண் ஒரு முதியோராக இருந்தாலும் கூட இந்த அறிவுரை பொருந்தும். பெரும்பாலும் வயோதிக ஆண் என்றால், தங்கள் தந்தை வயது உள்ளவர் என்று அன்புடனும் பாசத்துடனும் அவர்களை நினைப்பது பெண்களின் வழக்கம். ஆனால் பல முதியோர்களும் வல்லூறுகள் போலவே நடந்து கொள்வார்கள் என்பதையும், தனது ஒத்த வயது தோழர்களிடம் கூட எதிர்பார்க்க இயலாத முறையற்ற செயல்களுக்கும் அம்முதியோர்கள் துணிந்தவர்கள் என்பதையும் பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும். யாரையும் நம்பக்கூடாது என்பதே பெண்கள் முதலில் படிக்க வேண்டிய அரிச்சுவடிப் பாடம். தாங்கள் அறிந்த பெண்களையும், தங்களது மகள்களையும் இதனை நினைவுபடுத்தி நல்வழி காட்டவேண்டியது இன்றையத் தாய்க்குலச் சக்திகளின் கடமை.
தலைப்பே ஜோர்! இதைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். மனிதனுக்கு ஏன் இப்படி புத்தி போகிறது?
இன்றைய சூழலுக்கு, மிகத் தேவையான அறிவுரையைச் சொல்லியிருக்கிறீர்கள்!.. அருமையான பகிர்வு. மிக்க நன்றி!
தகவல் தொழில்நுட்பம் நன்மைகளைவிடத் தீமைகளையே அதிகம் செய்கின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது பல திடுக்கிடும் உண்மைகளை நாம் அறிந்துகொள்ளும்போது!
மகளிர் தினத்தில் நல்ல விழிப்புணர்வுச் சிந்தனையைக் கட்டுரை வாயிலாகப் விதைத்துள்ளீர்கள் தேமொழி. பாராட்டுக்கள்!
நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை. நன்றி சகோதரி! முறையான பாலியல் கல்வி எதிர்காலத்தில் இதுபோன்ற மனப்பிறழ்ச்சி உள்ள ஆண்களை உருவாக்காமல் தடுக்க வாய்ப்பிருக்கிறது.
///தலைப்பே ஜோர்! இதைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். மனிதனுக்கு ஏன் இப்படி புத்தி போகிறது? ///
பாராட்டிற்கு நன்றி நிர்மலா. ஏமாறுபவர்கள் இருப்பவர்கள் வரை ஏமாற்றுபவர்களுக்குக் கொண்டாட்டம்தான், இல்லையா?
///இன்றைய சூழலுக்கு, மிகத் தேவையான அறிவுரையைச் சொல்லியிருக்கிறீர்கள்!.. அருமையான பகிர்வு. மிக்க நன்றி!///
பாராட்டிற்கு நன்றி பார்வதி, குற்றவாளிகள் எவ்வாறு சிந்திப்பார்கள் என்று காவல்துறையினர் சிந்திக்கும் கோணத்திலேயே பெண்களும் நாள் முழுவதும் சிந்திக்க வேண்டும் போலிருக்கிறது.
///மகளிர் தினத்தில் நல்ல விழிப்புணர்வுச் சிந்தனையைக் கட்டுரை வாயிலாகப் விதைத்துள்ளீர்கள் தேமொழி. பாராட்டுக்கள்!///
உங்கள் மனம் நிறைந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி மேகலா.
///நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை. நன்றி சகோதரி! முறையான பாலியல் கல்வி எதிர்காலத்தில் இதுபோன்ற மனப்பிறழ்ச்சி உள்ள ஆண்களை உருவாக்காமல் தடுக்க வாய்ப்பிருக்கிறது.///
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை கவிஞர் சச்சிதானந்தம். உங்களது பாராட்டிற்கு மிக்க நன்றி.
தாமதமாகவே படித்தேன். பயனுள்ள கட்டுரை பாராட்டுக்கள்.
பாராட்டிற்கு நன்றி அமீர் :)))