Tag: நிர்மலா ராகவன்

  • பழகத் தெரிய வேணும் – 50

    பழகத் தெரிய வேணும் – 50

    நிர்மலா ராகவன்

    ஊக்கமும் உந்துதலும் உனக்குள்ளே

    “பலர் எழுதுவதும் அரைத்த மாவையே அரைப்பதுபோல் — ஒரே மாதிரி — இருக்கிறது. நீங்கள் எப்படி வித்தியாசமாக எழுதுகிறீர்கள்?” இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் என்மேல் தொடுக்கப்பட்ட கேள்வி இது.

    “எதையும், `இப்படித்தான் இருக்கவேண்டும்,’ என்று பிறர் சொல்வதை ஏற்காதீர்கள். அது குழந்தைகளுக்குத்தான் சரி. `ஏன் இப்படி இருக்கக்கூடாது?’ என்று சிந்தித்துப்பாருங்கள்,” என்றேன்.

    அதன்பின், என்னைத் தனிமையில் சந்தித்த ஒரு பெண்மணி, “நானும் உங்களைமாதிரிதான் — எல்லாவற்றையும் வித்தியாசமாக யோசிப்பேன். எழுதவேண்டும் என்று மிகவும் ஆசை,” என்றுவிட்டு, “ஆனால், பிறர் என்ன நினைப்பார்களோ என்று பயமாக இருக்கிறது!” என்றாள்.

    உலுக்கும் உலகு

    நம்மைச் சுற்றியிருக்கும் பலரும் நம்மைக் கீழே இழுக்கக் காத்திருப்பார்கள். நம் எண்ணத்தில் உறுதியாக இருந்தால், தோல்வி அடைவது அவர்களாகத்தான் இருக்கும்.

    இதை ஒட்டித்தான், “பழி வாங்குவது பலகீனமானவர்கள் செய்வது. மன்னிப்பது திடமானவர்களின் குணம். நம்மை உலுக்குபவர்களை அலட்சியம் செய்வது அறிவுடையோரின் தன்மை,” என்று அலசுகிறார் திரு.அனுபவசாலி.

    ஆசை இருக்கு. ஆனால் சந்தேகமும் கூடவே வருதே!

    நமக்கு என்னென்னவோ செய்யவேண்டும் என்ற ஆசைகள் இருக்கலாம். ஆனால், அதைப்பற்றியே யோசிக்கும்போது, வேண்டாத சந்தேகங்களும் எழத்தான் செய்யும். அவற்றைத் தவிர்க்கமுடியாது.

    அதற்காக, `இதைச் செய்யலாம், இதைச் செய்யலாம்,’ என்ற கனவுலகிலேயே சஞ்சரித்து, அதிலேயே திருப்தி அடைந்துவிட்டால் எப்படி? எதையும் ஆரம்பித்தால்தானே முடிக்க முடியும்?

    `இப்படிச் செய்யப்போகிறேன்,’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாலும் அபாயம்.

    கதை

    ரகுராமன் கனவுகளிலேயே நிறைவு காண்பவர். அறிவில் சிறந்திருந்தாலும், `அட! தனக்கு இவ்வளவு கற்பனை வளம் இருக்கிறதே!’ என்று ஆச்சரியம் கொண்டவராக, தான் நினைப்பதையெல்லாம் பிறரிடம் கூறுவார்.

    நெடுஞ்சாலைகளில் வளைந்த இடங்களில் வாகன விபத்துகள் அதிகம் நிகழ்கின்னறன என்று படித்ததும், அவருக்கு ஓர் எண்ணம் உதித்தது. சாலை ஓரமாக, வாகனம் ஓட்டுபவர்களின் கண்ணில் படும் நிலையில் ஒருவித விளக்குகள் பொருத்தினால் என்ன என்று யோசித்தார்.

    தன் எண்ணத்தை `நண்பன்’ என்று கருதிய ஒருவனிடம் ரகுராமன் தெரிவித்தபோது, அவன் `இதெல்லாம் நடைமுறைக்கு உதவாது,’ என்றான் அலட்சியமாக.

    தன்மீதுள்ள அக்கறை, தான் தோல்வியுறுக்கூடாது என்ற நல்லெண்ணம் நண்பனுக்கு என்று எண்ணினார் அந்த அப்பாவி.

    பெருமிதத்துடன், அதை எவ்வாறு தயாரித்து, எப்படிப் பொருத்தவேண்டும் என்று விரிவாக விளக்கினார். அதுதான் அவர் செய்த மாபெரும் தவறு.

    ரகுராமனுடைய கற்பனையில் உதித்த கண்டுபிடிப்பைத் தானே தயாரித்ததுபோல் அந்த நண்பன் தகுந்த இடத்தில் கூற, அது நடைமுறைக்கு வந்தது. திருடியவனுக்குப் பெருமளவு லாபம்!

    எந்தத் துறையானால் என்ன! நம் வாயைப்பிடுங்கி, நம் யோசனைகளையெல்லாம் தமது என்று சொல்லிக்கொள்ளும் இரண்டாந்தார மனிதர்கள் இல்லாமலா போவார்கள்!

    இவர்களுக்குச் சுயமாகச் சிந்திக்கும் திறன் கிடையாது. ஆனால், சிந்தனை வளம் உடையவர்களை ஏளனம் செய்வதுபோல் பாசாங்கு செய்து, உண்மையை வரவழைக்கும் சாமர்த்தியம் உண்டு.

    உன்னையே ஊக்கிக்கொள்

    நமக்குச் சரியென்று தோன்றுவதை, பிடித்ததைச் செய்யும்போது பிறரது உந்துதல் தேவையில்லை. பிறர் ஊக்கம் அளிக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் விளையும்.

    ஊக்கம் என்பது தனக்குத்தானே அளித்துக்கொள்வது.

    “தன்னையே நம்புகிறவன்தான் பிறருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாக முடியும்” (யூதர்களின் பழமொழி).

    ஒரே இடத்தில் உட்கார்ந்து, யோசனை செய்தபடியே இருந்தால் அவநம்பிக்கை பெருகிவிடும். அப்போதுதான் பிறரது ஆலோசனையை, அவர்களது பக்கபலத்தை, நாடத் தோன்றுகிறது. நாம் செய்யப்போகும் காரியத்திற்குப் பிறரது உத்தரவு ஏன்?

    `முடியாத காரியம்’ என்று நாம் கைவிட்டதைப் பிறர் எப்படிச் செய்து முடிக்கிறார்கள்?

    அவர்களுக்கு அதிகத் திறமை இல்லாமல் இருக்கலாம். பயம் எழும்போதெல்லாம், வேறொரு காரியத்தில் ஈடுபடுகிறார்கள். அதனால் தெளிவும் பெறுகிறார்கள். விருப்பத்துடன் உழைப்பதால் வெற்றி அடைகிறார்கள்.

    கதை

    நான் ஆங்கிலத்தில் மறைந்த என் மகனைப்பற்றி எழுத ஆரம்பிக்கும்போது, அதைப் பிரசுரிக்கும் எண்ணமே வரவில்லை. என் நினைவுகளைப் பதிவு செய்வதற்காக ஆரம்பித்தேன்.

    பல நினைவுகள் ஒரே சமயத்தில் எழ, சில நாட்கள் ஒரே மூச்சில் பதினாறு பக்கங்களைக் கைப்பிரதியாக எழுத முடிந்தது. பேசுவது குறைந்தது.

    “உனக்கு வேண்டுமானால் அது பெரிய துக்கமாக இருக்கலாம். மற்றவர்களுக்கு என்ன வந்தது? நீ எழுதுவதை ஏன் படிப்பார்கள்?” என்று அவநம்பிக்கை தெரிவித்தவள் பொறாமையால் பேசுவது புரிந்து, அவளை அலட்சியம் செய்தேன்.

    நான் எழுதும்போதே அதைப் படித்து, ஊக்கமளித்துவந்த என் கவுன்சிலர்-தோழியோ, `நீ கண்டிப்பாக இதைப் பிரசுரிக்கவேண்டும். இதனால் பலருக்கு நன்மை,’ என்று வற்புறுத்தினாள்.

    கதை

    குழந்தையே வேண்டாம் என்று உறுதியாக இருந்தாள் ஸியூ ஙா. என்னுடன் பணிபுரிந்த இளம்பெண் அவள்.

    நான் எழுதியதை உடனுக்குடன் படித்ததும், சிறு வயதில், தந்தை தன் குடும்பத்தைக் கொடுமை செய்திருந்தால் என்ன, தான் இப்போது ஒரு நல்ல அம்மாவாக இருக்கமுடியாதா என்ற எண்ணம் பிறந்தது அவளுக்கு.

    `தாய்-குழந்தைக்கு இடையே இவ்வளவு அருமையான நெருக்கம் இருக்க முடியுமா!’ என்று பிரமித்தாளாம். அதன் விளைவாக, தன் முடிவை மாற்றிக்கொண்டாள். சீக்கிரத்திலேயே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

    தோழி கூறிய இக்கதையைக் கேட்டவுடன், `யார் பிரசுரிப்பார்கள்?’ என்ற ஐயம் எழுந்தது.

    பதிப்பாளர்கள் நம்மைப்பற்றிப் பிறரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்வார்கள் என்பதால், `ஆங்கில தினசரிக்கு அடிக்கடி எழுது. அன்றாட நிகழ்வுகளை ஒட்டி இருக்கவேண்டும்,’ என்றெல்லாம் குடும்பத்தினரால் எனக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    வெளியாகும் ஏதாவது செய்தியைக் குறித்து என் கருத்துக்களை கணினியில் உடனுக்குடன் எழுதி அனுப்ப முடிந்தது. நான் அனுப்பிய பல கடிதங்கள் Letter of the day என்ற பகுதியில் வந்தன. அனுப்பிய அடுத்த நாளே பிரசுரமாக, நம்பிக்கை எழுந்தது.

    அத்துடன், இந்திய கலைத்துறையில் விமர்சனம், சமூக இயல் சம்பந்தமான, நகைச்சுவையுடன் கூடிய கட்டுரைகள். (அடிக்கடி என் கணவரின் மண்டை உருளும்!).

    சில நாட்களில், மூன்று வெவ்வேறு பகுதிகளில் ஒரே சமயத்தில் வெளியாகின.

    ஆரம்பத்தில் எழுந்த தயக்கம் மறைந்தது. பதினான்கு ஆண்டுகள் இப்படிக் கழிந்தன.

    `உங்கள் எழுத்துலக அனுபவங்கள்?’ என்று அயல்நாட்டு பதிப்பாளர் கேட்டு அனுமதிக்க, தமிழில் எழுதியவைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, புத்தக வடிவில் கொணர முடிந்தது.

    சிலரிடம் எதைப்பற்றியாவது விவாதித்தபின், “நீங்கள் எப்படி எழுதப்போகிறீர்கள்?” என்று ஆர்வத்துடன் விசாரிப்பார்கள்.

    “எப்படி எழுதப்போகிறேன் என்று எனக்கே இப்போது தெரியாதே!” என்று உண்மையை ஒப்புக்கொண்டால் கோபிப்பார்கள்.

    கரு கிடைத்தவுடன் எழுத ஆரம்பித்தால் அந்த அவசரம் எழுத்துப்படிவத்தில் வெளிப்பட்டுவிடும். படபடப்பு இல்லாது, நிதானமாக யோசித்து எழுதினால்தான் சுவையாக இருக்கும்.

    இது புரியாது, பிறர் நம்மைத் தவறாகப் புரிந்துகொண்டால்…, விடுங்கள்!

    மனிதர்களை மாற்ற முடியாது. புரிந்துகொண்டால் போதாதா?

    Share
  • பழகத் தெரிய வேணும் – 49

    பழகத் தெரிய வேணும் – 49

    நிர்மலா ராகவன்

    நல்லவரை இனங்காண்பது

    “என் மகள் கல்யாணத்திற்குமுன் கலகலப்பாக இருப்பாள். இப்போது அதிகம் பேசுவதில்லை. சாந்தமாக, பொறுப்பாக இருக்கிறாள்,” என்று கூறும் பெற்றோர் மகளின் மாற்றம் அவளுக்கு நல்லதுதானா, அல்லது வயது கூடியதால் நேர்ந்ததா என்று யோசிப்பதோ, அதனால் கவலைப்படுவதோ கிடையாது. ஏனெனில், அனேகமாக எல்லாப் பெண்களுமே இப்படித்தான் மாறுகிறார்கள்.

    கதை

    பல இளைஞர்கள் தங்கள் நண்பனுடைய திருமணத்திற்கு வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்தார்கள்.

    மணமகனுடைய உறவுக்காரப்பெண் மல்லிகா அவர்களுடன் கல்லூரியில் மேற்படிப்புப் படித்தவள். பழைய நண்பர்களைப் பார்த்ததும் உற்சாகம் பெருக, அவர்களுடன் உட்கார்ந்து, பழைய நாட்களைப்போல் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள்.

    ஆனால், ஒரு வித்தியாசம். மல்லிகாவுக்கு இப்போது கல்யாணம் ஆகி, பிள்ளைகளும் இருந்தார்கள். மாமியார் முகம் சுண்டிப்போயிற்று.

    கல்யாணத்திற்கு முன்பு எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். எப்போதும் அப்படியா!

    `இவள் கண்ட ஆண்களுடன் பேசினால், பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்!’ என்று ஆத்திரப்பட்டாள். தன் மகனுக்குத் தூபம் போட்டாள்.

    காதலித்து மணந்த மனைவியின் போக்கை அவன் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. “நாங்க எல்லாரும் ஒண்ணாப் படிச்சவங்கம்மா,” என்றான் அலட்சியமாக.

    கணவனோ, மாமியாரோ, ஒரு பெண் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் கூர்ந்து கவனித்துக்கொண்டு, அதில் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால் அப்பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்?

    `பெரியவர்களை மதித்து நட,’ என்று தாயும், கணவரும் போதிக்க, குடும்பத்தில் பிரச்னைகளைத் தவிர்க்க பழைய போக்கை மாற்றிக்கொள்வாள் — மகிழ்ச்சியுடன் என்று கூற முடியாது.

    கதை

    காமாட்சிக்குத் தான் பெற்ற குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதோடு திருப்தி கிடைக்கவில்லை.  வீட்டுக்குப் பெரியவள் என்ற முறையில், பேரக்குழந்தைகளுக்கும் தானே பெயர் வைக்கவேண்டும் என்பது அவள் நம்பிக்கை.

    ஆனால், புதுமையாக, நாகரிகமாக, தான் பெற்ற அருமை மகளுக்குப் பெயர் வைக்கவேண்டும் என்று ஒரு மருமகள் எண்ணினாள். அப்படி ஒரு பெயரை யோசித்தும் வைத்திருந்தாள்.

    `இந்தத் தெருவில் எல்லார் வீட்டிலும் அந்தப் பெயர்கொண்ட ஒரு சிறுமி இருக்கிறாள். நன்றாக இருப்பதால்தானே வைத்திருக்கிறார்கள்!’ என்பது காமாட்சிப்பாட்டியின் எண்ணம்.

    `நாளைக்கு என் குழந்தை தெருவில் போகும்போது அந்தப் பெயரைச் சொல்லி அழைத்தால், பல குழந்தைகள் திரும்பிப் பார்க்கும்!’ என்பது மருமகளுடைய வாதம்.

    `நான் சொல்வதை யார் கேட்பார்கள்!’ என்று மாமியார் அரற்றினாள். இறுதியில், அவள் பிடிவாதம்தான் வென்றது.

    இவ்வாறு, `நீ என்னைக் கஷ்டப்படுத்துகிறாய்!’ என்பதுபோல் தன்னிரக்கத்துடன் பேசுவதால் மற்றவர் மனதைத் துன்புறுத்துகிறோம் என்று சிலருக்குப் புரிவதில்லை.

    நம்மிடம் ஓயாது குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு, `உன் நன்மைக்காகத்தான் சொல்கிறேன்,’ என்று சப்பைக்கட்டுக் கட்டுபவர்கள் உற்றவர்கள் அல்லர்.

    கதை

    “என் பெண்ணின் முகத்தில் சிரிப்பே மறைந்துவிட்டது. `ஏன் எனக்குக் கல்யாணம் செய்துவைத்தாய்?’ என்று கோபிக்கிறாள்,” என்று ஒரு தாய் என்னிடம் குறைப்பட்டாள்.

    மாப்பிள்ளை நல்லமாதிரிதான். பின் என்ன குறை?

    “வெளியில் எங்காவது போனால், பட்டுப்புடவைதான் கட்டிக்கொண்டு போகவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறாளாம் மாமியார். இவளுக்கோ, நைலக்ஸ்தான் பிடிக்கிறது!’

    உடுத்துவது ஒவ்வொருவருடைய சொந்த விருப்பம். சிறு சமாசாரம்தான். ஆனால், ஒருமுறை விட்டுக்கொடுத்தால், தம் பிடியை இறுக்கிக்கொள்வார்களே, அதிகாரம் செலுத்துபவர்கள்!

    புன்சிரிப்பு மறையாது, `இதைத்தான் சாப்பிட வேண்டும், இப்படித்தான் நடக்கவேண்டும்,’ என்று பிறரைத் தொணதொணத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இறுதியில் ஏமாற்றம்தான் கிட்டும் – அவர்கள் எவ்வளவு இனிமையாகச் சொல்வதாக நினைத்தாலும்.

    இம்மாதிரியானவர்களால் நம் நேரம்தான் விரயமாகிறது. அவர்கள் சுயநலம் பிடித்தவர்கள், அல்லது பொறாமையால் அப்படிப் பேசுகிறார்கள் என்று புரிந்துகொண்டால் பிழைக்கலாம். ஏனெனில் அவர்கள் செய்வது உணர்ச்சிபூர்வமான வதை.

    கேள்வி: ஏன் வதை? அக்கறையுடன், நம் நன்மைக்குத்தானே சொல்கிறார்கள்?

    பதில்: “உனக்கு சந்தர்ப்பத்துக்குச் சரியாக நடக்கத் தெரியாது. அறிவோ, அனுபவமோ போதாது!” என்று மறைமுகமாக மட்டம் தட்டுவது போலில்லை?

    உடனிருப்பவர் பழித்துவிடுவாரே என்று பயந்து, எந்தக் காரியத்தைச் செய்யும்போதும் அதீத கவனத்துடன் செய்தால், அல்லது விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தால், ஒருவரது தன்னம்பிக்கை குறைந்துகொண்டே போய்விடாதா!

    “இம்மாதிரி ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து, உடலும் மனமும் ஒருங்கே பாதிக்கப்பட்டு வாழ்வதைவிட தனியாக இருந்து ஆரோக்கியமாக இருப்பது மேலானது,” என்கிறார் ஓர் அனுபவசாலி.

    உபயோகமான, மகிழ்ச்சி மட்டுமே அளிக்கும் உறவுகள் நம் கனவுகள் நனவாக கூடியவரை ஒத்துழைப்பார்கள். அப்படி இல்லாவிடினும், `இது நடக்கிற காரியமா!’ என்று அவநம்பிக்கை தெரிவிக்காமலாவது இருப்பார்கள்.

    ஒருவர் துக்கத்தில் ஆழ்ந்திருக்கையில் ஆறுதலாக இருக்கும் ஒரே நபர்தான் நல்ல நண்பர்.

    கதை

    ஒரு நாளிரவு, “உன்னை நாளைக்குப் பார்க்கமாட்டேன்னு தோணுது!” என்று கணவன் சொல்ல, சரோ சிரித்தாள். “ராத்திரி அப்படி எங்கே போயிடப்போறீங்க?”

    அப்போது இருவருமே எதிர்பார்க்கவில்லை, அவன் இவ்வுலகைவிட்டே போகப் போகிறான் என்று.

    சரோவால் அந்த அதிர்ச்சியைத் தாங்கவே முடியவில்லை.

    `முப்பது வயதுகூட நிரம்பவில்லை! இவள் என்ன பாவம் செய்தாளோ!’ என்பதுபோல், அவள் காதுபடவே சிலர் கரித்தார்கள்.

    அவளுடைய சுந்தரி வயதில் மூத்தவள். அடுத்த சில ஆண்டுகளில், சரோ மேற்படிப்பைத் தொடர்ந்து, நல்ல உத்தியோகத்திலும் அமர்ந்தாள். முன்பு பழித்தவர்கள் இப்போது சொந்தம் கொண்டாட வந்தபோது அவளுக்கு உலகம் புரிந்தது.

    வெளியூரில் இருந்த தன் இல்லத்திற்கு தூரத்து உறவினளான சுந்தரியை வற்புறுத்தி அழைத்து, நன்கு உபசரித்தாள்.

    `ஒரு மாதம், தினமும், இரண்டு மைல் தொலைவிலிருந்த என் வீட்டிற்கு நடந்தே வந்து, ஆறுதலாகப் பேசினீர்களே! அந்த நன்றியை மறக்கவே மாட்டேன்!’ என்று திரும்பத் திரும்பச் சொன்னாளாம், நன்றிப் பெருக்குடன்.

    இப்படிப்பட்ட நண்பர்கள் வெவ்வேறு துறையில் ஈடுபாடு கொண்டவராக இருக்கலாம். ஒத்த மனத்தினராக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. வயது வித்தியாசமும் பெரிதில்லை.

    நல்ல நண்பரை எப்படி இனங்கண்டுகொள்வது?

    அவருக்காக நாம் மாற வேண்டியிருக்காது. நம் கடந்த காலப் பிழைகள் அவருக்குத் தெரிய வந்தாலும், எதிர்காலம் சிறப்பாகத்தான் அமையும் என்ற நம்பிக்கையுடன் நாம் இருக்கிறபடியே நம்மை ஏற்பார்.

    பிரதிபலனை எதிர்பாராது, நம்மை ஊக்குவிப்பார்.

    நம்மையே நமக்கு உணர்த்துகிறவர். நம் வெற்றிக்காகப் பெருமைப்படுகிறவர்.

    நம் இழப்புகள், குறைகள் பெரிதாகத் தோன்றாதுபோக, நம்மை நம்மால் ஏற்கமுடியும்.

    அவர் அண்மையில் இருக்கையில், நாம் அதிகம் சிரிப்போம்.

    நாம் என்ன சொன்னாலும், மனதில் எதை நினைத்து அப்படிச் சொல்கிறோம் என்பது அவருக்குப் புரியும்.

    இப்படி ஒருவர் கிடைத்தால், அவரை SOULMATE (ஆத்மார்த்தி) என்கிறோம்.

    இப்போதெல்லாம், இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்தால் அவர் நாணுவதில்லை. நல்லவர்களை `ஏமாளி’ என்று எண்ணிவிடும் காலம் இது.

    நமக்கென்று சில உண்மையான நண்பர்கள் கிடைக்காமலா போவார்கள்!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 48

    பழகத் தெரிய வேணும் – 48

    நிர்மலா ராகவன்

    நேர்மறைச் சிந்தனை

    `என்னமோ, என் வாழ்க்கையிலே மகிழ்ச்சியே இல்லே,’ என்று அலுத்துக்கொள்கிறவர்கள் அவர்களுடைய சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

    ஏனெனில், மகிழ்ச்சி பிறரால் வருவதல்ல. ஒருவரது எண்ணத்தைப் பொறுத்தது.

    கோயில் ஒன்றில் இலவச நாட்டிய வகுப்பு நடத்தப்படுவதாகக் கேள்விப்பட்டு, அதை நடத்தும் ஆசிரியையிடம் சென்றார் ஒருவர். அவருடைய மகளை அந்த வகுப்பில் சேர்ப்பதற்காக இல்லை.

    முகத்தில் வருத்தத்தைத் தேக்கிக்கொண்டு, “இருக்கிறவங்க குடுக்கலாம். எங்களைமாதிரி இல்லாதவங்க என்ன செய்யமுடியும்?” என்று பூசை நடக்கும் இடத்திலேயே புலம்ப ஆரம்பித்தவர் ஓயவில்லை — “பேசுவதாக இருந்தால், அப்பால் செல்லுங்கள்,” என்று யாரோ ஒருவர் எரிச்சலுடன் மிரட்டும்வரை.

    `பிறரைப்போன்று நாம் இல்லையே!’ என்று வருந்த ஆரம்பித்தால், இந்த உலகில் எவருக்குமே நிம்மதி கிடைக்காது.

    பண வசதி இல்லாவிட்டால், அடுத்த தலைமுறையாவது தங்களைப்போல் கடினமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாம் என்று கல்வியில் ஈடுபடுத்துவதுதான் வசதி குறைந்தவர்கள் செய்யக்கூடிய செயல்.

    தம்முடைய தீய பழக்கங்களைப் பழகிக்கொள்ள வேண்டாம் என்று தம் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுபவர்களும் உண்டு.

    மாறாக, ஓயாத சிந்தனை எதிர்மறையாகவே எழுந்தால் (`எல்லாம் என் தலைவிதி!’) சக்திதான் விரயம்.

    தம் வருத்தத்தைக் கோபமாக மாற்றிக்கொள்வதால், குடும்பத்தினர் அனுபவிக்கும் துயரும் தொடர்ந்துவிடும் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை.

    நம்மால் செய்ய முடிந்தது ஏதாவது இருக்காதா! அதை எண்ணி திருப்தி அடையாது, முடியாததைப்பற்றிய கவலை ஏன்?

    அந்தக் கோயிலின் அருகே இருந்த ஏழை மாது ஒருத்தி தினமும் அதைப் பெருக்கி சுத்தப்படுத்துவாள். இன்னொருவர் கோயில் சுவற்றில் வெள்ளையடிப்பதுபோன்ற வேலையை தானாகச் செய்வார்.

    இருவரும் எந்த லாபத்தையும் எதிர்பாராது, உடலுழைப்பை வழங்குகிறார்கள். `வசதி இல்லையே!’ என்று ஏங்குவதில்லை. அதனால் அவர்களுக்கு `நம்மால் முடிந்ததைச் செய்கிறோம்!’ என்ற திருப்தி கிடைக்கிறது.

    (பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள் திருப்தி அடைந்துவிடுகிறார்களா, என்ன!)

    நிறைய சம்பளம் கிடைக்கும் என்ற நப்பாசையுடன் ஆர்வமில்லாத துறையில் பட்டம் வாங்கி, உத்தியோகத்திலும் அமர்ந்தபின்னர் மகிழ்ச்சியை இழந்து வாழ்கிறவர்கள் பலர்.

    வாய்த்த உத்தியோகத்தை நல்விதமாக வகித்தால்மட்டும் மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது. அதைக் கெடுக்கவும் ஒருசிலர் இருப்பார்கள்,

    கதை

    நான் ஆங்கிலத்தில் எழுதுவது என் மேலதிகாரியின் பொறாமையைக் கிளப்பிவிட்டது. அவளுக்குப் பிடிக்காத ஒருவரைப்பற்றி அவதூறாக எழுதச் சொன்னாள்.

    `நீயே எழுதேன்,’ என்று நான் மறுக்க, முடிந்தவரை எனக்குத் தொந்தரவு கொடுத்தாள்.

    அவள் அப்படி நடந்துகொண்டதில் என்மேல் தவறு இல்லை என்றவரை எனக்குப் புரிந்தது. இருந்தாலும், தினசரி வாழ்க்கையைக் கடப்பதே கடினமாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் முதன்முதலாகக் காலெடுத்துவைக்கும் குழந்தை முரண்டுபிடிக்குமே, அந்த மனநிலையில்தான் இருந்தேன்.

    நான் பட்ட அவதிகள் மட்டுமின்றி, பிறரது அனுபவங்களும் என் உணர்வுகளைப் பாதித்தால் அவற்றைச் சமாளிக்க நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். அவற்றை எழுத்துமூலம் வெளியிட்டபின், மனச்சுமை குறைந்தாற்போல் இருக்கும். அது ஒரு வடிகால். பிரசுரத்திற்காக அல்ல.

    `பிறரிடம் கூறி ஆறுதல் அடையலாமே?’ என்றால், யாரை நம்புவது? நம் மீதே தப்பு கண்டுபிடிப்பார்கள்.

    அப்படியே ஏமாற்றப்பட்டால் அனுபவம் என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    இனிமையான நினைவு ஒன்று

    அதே பள்ளியில் என் சக ஆசிரியை மிஸஸ் சென் ஓய்வுபெறும் நாள் வந்தது. நான் அவளுடன் அதிகம் பேசியதுகூடக் கிடையாது.

    ஆனால், என்னைத் தனியாக அழைத்து, “உன்னிடம் அபூர்வமான திறமை (rare talent) இருக்கிறது. அதனால் பிறர் பொறாமைப்படுகிறார்கள். Take it easy!” என்றாள், கனிவுடன். சம்பந்தப்பட்டவள் பெயரையோ, அவள் என்னைப் படுத்திய பாட்டையோ குறிப்பிடவில்லை.

    நான் குழம்பிப் போயிருந்ததை அவள் கவனித்திருக்கிறாள்!

    எனக்குப் புதிய பலம் வந்தது போலிருந்தது.

    அதுவரை, `எல்லாரும்தான் பேசுகிறார்கள்; எழுதுவதும் அதுபோல்தானே! என்ன பிரமாதம்!’ என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன்.

    மிஸஸ் சென் பல்வித விளையாட்டுகளில் தேர்ந்தவள். அதனாலோ என்னவோ, நம்மை மறைமுகமாக எதிர்ப்பவர்களை எப்படிச் சமாளிப்பது என்று தெரிந்துவைத்திருந்தாள்.

    மிஸஸ் சென்போலன்றி, புலம்புகிறவர்கள்தாம் உலகில் அதிகம். அவர்களுக்கு எத்தனையோ நல்லவை நடந்திருக்கும். ஆனால், நடக்காத, இயலாத, ஒன்றைப்பற்றியே பேசி மருகுவார்கள்.

    ஏன் புலம்பல்?

    `எளிது’ என்றெண்ணி ஒரு காரியத்தைத் தேர்ந்தெடுப்பதில் சில சங்கடங்கள் நேரும். தான் தேர்ந்தெடுத்த காரியம் தான் நினைத்தபடி இல்லையென்று தெரிந்ததும் மிரட்சியாக இருக்கும். `முடியும்,’ என்று தனக்குத்தானே தைரியம் அளித்துக்கொண்டு கடக்க வேண்டியதுதான்.

    என்னுடன் படித்த பிருந்தா “எங்கள் வீட்டில் நான் படித்தது போதும் என்றார்கள். நான்தான் பட்டம் வாங்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, கல்லூரியில் சேர்ந்தேன். இப்போது ஏனடா சேர்ந்தோம் என்றிருக்கிறது,” என்று ஓயாது அலுத்துக்கொள்வாள்.

    பிருந்தாவைப் போன்றவர்களுக்கு மாறும் எண்ணம் கிடையாது. மாறாக, தம்மைப்போல் இல்லாதவர்களுடன் இணைத்துக்கொள்வார்கள். அப்போதுதானே அவர்கள் மனதையும் கலைக்கமுடியும்?

    அம்மாதிரியானவர்களுடன் அதிகம் பழகினால், நமக்கும் அந்தக் குணம் படிந்துவிடும் அபாயம் உண்டு.

    `நல்லவேளை, நாம் இவர்களைப்போல் இல்லையே!’ என்று நமக்கு நாமே தைரியம் அளித்துக்கொள்ளவேண்டியதுதான்.

    பால்யப் பருவத்தில் துயர் அனுபவித்தவர்கள் சந்தர்ப்பம் மாறியபோதும், எப்போதோ பட்ட வேதனையிலிருந்து மீளாது இருந்தால் அவர்களுக்கு என்றுதான் நிம்மதி?

    கதை

    சிறுவயதிலேயே தாயை இழந்த ரவி தந்தைக்கும் வேண்டாதவனாகப் போனான். பாட்டி வீட்டுக்கு அனுப்பப்பட்டபோது, கேட்பாரில்லை என்று அவளும் அவனைக் கொடுமைப்படுத்தினாள்.

    மூன்று வயதுப் பிள்ளை விஷமம் செய்கிறான் என்று அவனைக் கட்டில் காலில் கட்டிப்போட்டு விட்டதைப் பெருமையாக எல்லாரிடமும் சொல்லிக்கொள்வாள்.

    எட்டு வயதில் ஒருவரின் தத்துப்பிள்ளையாகப் போனான். அங்கும் அசாத்தியக் கண்டிப்பு.

    புத்திசாலியாகவும் அழகாகவும் இருந்த ரவி பெரியவனாகி, அமெரிக்காவில் நல்ல வேலையில் அமர்ந்தான்.

    அவனுடைய குழந்தைபோன்ற நிராதரவான மனப்பான்மையால் எந்தப் பெண்ணின் தாய்மை உணர்வையும் எழுப்ப முடிந்தது. ஆனால், அறியாத வயதில், `தன்னை ஏன் யாருக்குமே பிடிக்கவில்லை?’ என்று அடைந்த குழப்பம் அவனுக்குள் நிலைத்திருந்தது.

    தன்னைக் காதலித்த ஒவ்வொரு பெண்ணையும் உடும்பாகப் பற்றிக்கொண்டான், `இவளுக்கும் நம்மைப் பிடிக்காது, விட்டுப் போய்விடுவாளோ?’ என்ற அச்சத்தால்.

    அவனுடைய கட்டுப்பாடும், எப்போதும் சார்ந்திருக்கும் மனப்பான்மையும் பொறுக்காது பெண்கள் ஒவ்வொருவராக அவனை விட்டுப்போனார்கள்.

    சிறுவயதில் அனுபவித்ததையே நினைத்துக்கொண்டிருந்ததால் அப்போது அவனிடம் அன்பு செலுத்தாதவர்கள்மேல் கொண்ட ஆத்திரமும் மாறவில்லை.

    இதற்குத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள், “LIVE IN THE PRESENT” (கடந்தகால நினைவுகளிலேயே ஆழ்ந்துபோகாது, நிகழ்காலத்திலேயே இரு) என்று.

    `இப்போது நான் சுதந்திரமானவன். அவர்களால் என்னைக் கஷ்டப்படுத்த முடியாது!’ என்று, நேர்மறைச் சிந்தனையுடன் தனக்குத்தானே தைரியம் அளித்துக்கொண்டிருந்தால் காலமெல்லாம் துயர்ப்பட வேண்டாமே!

    `முடிகிற காரியமா?’ என்கிறீர்களா?

    அப்படியானால், இத்தகைய சிந்தனையை உறுதிப்படுத்தவென உளவியல் மருத்துவர்களை நாடலாமே!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 47

    பழகத் தெரிய வேணும் – 47

    நிர்மலா ராகவன்

    எனக்கு மட்டுமே சொந்தம்

    என் உறவினரின் மூன்று வயது மகளைச் சிறிது காலம் என் பொறுப்பில் விட்டிருந்தார்கள், அவளுடைய தாய் பூரணி கர்ப்பமாக இருந்தபோது.

    விவரம் புரியாது, `அம்மா’ என்று என்னை அழைத்துக்கொண்டிருந்தாள் குழந்தை.

    வெளியூரிலிருந்த வந்த பூரணி குழந்தையைப் பார்த்தவுடனே செய்த முதல் காரியம்: மிகுந்த பிரயாசையுடன் நான் அழகாக அலங்கரித்திருந்த தலைமயிரைக் கலைத்ததுதான்!

    ஏதோ செய்யக் கூடாததைச் செய்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது எனக்கு.

    `இது என் குழந்தை. நீ கை வைக்காதே!’ என்று அந்தத் தாய் சூசகமாக உணர்த்தி இருக்கிறாள்!

    இன்னொரு கதை

    திருமணமாகிப் பல ஆண்டுகள் கழிந்த பின்னர், உரிய சிகிச்சைக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். தன் அருமைக் குழந்தையை அவனுடைய தந்தைகூடத் தூக்க விடமாட்டாள் தாய்.

    “இப்போதான் தூக்க முடியும். இல்லியா?” என்று தந்தை மன்றாடுவார்.

    “எப்பவும் தூக்கி வெச்சுக்கணும்னு அழுவான்,” என்று காரணம் கற்பித்தாள் தாய்.

    தன் பொம்மையை வேறு ஒருவர் தொட்டுவிட்டால் வரும் ஆத்திரத்தை பொம்மையிடம் காட்டும் மூன்று வயதுப் பெண்குழந்தை. பொம்மையை `அசடு!’ என்று திட்டுவதோடு நில்லாமல், தூக்கியும் எறிவாள்.

    வளர்ந்த பின்னும் அதே மனப்பான்மையா?

    எத்தனை வயதாகியும், குழந்தைக்காகத் தான்தானே நிறைய சிரமப்பட்டிருக்கிறோம், அதனால் அவனுக்குத் தன்னை மட்டுமே பிடிக்கவேண்டும் என்று ஒரு தாய் நினைப்பது சிறுபிள்ளைத்தனம்.

    இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் பிற்காலத்தில் தாயை வெறுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    அப்படி வளர்ந்த ஒரு பதின்ம வயதுப் பையன், “எத்தனை வயதானாலும் குழந்தைகளை இறுகப் பிடித்துக்கொள்வதைச் சிலர் விடவேண்டும்!” என்று என்னிடம் கசப்புடன் சொன்னான். அம்மாவை நேரடியாகத் தாக்க அவனுக்கு மனமில்லை.

    கூட்டுக்குடும்பத்தில் வளரும் குழந்தைகளைப் பலரும் கண்டிப்பார்கள், கேலி செய்வார்கள். ஓயாது புத்தியும் சொல்வார்கள். தாய் எதையும் கண்டுகொள்ள மாட்டாள். பெரியவர்களானதும், அவர்கள் முதலில் நாடுவது தாயைத்தான்.

    இம்மாதிரி சொந்தம் கொண்டாடுவதை ஆண்-பெண் உறவிலும் காணலாம்.

    கதை

    பெரிய பணக்காரனான சுந்தர் அறிவும், அழகும், பெரிய படிப்பும் ஒன்றாக அமைந்த சுதாவைக் காதலித்து, அச்சாரமாக மோதிரமும் பரிசாக அளித்தான்.

    சுதாவிற்குப் பிறகுதான் தெரியவந்தது அவனுக்கு ஏற்கெனவே கல்யாணமாகியிருந்த சமாசாரம்.

    அந்த மனைவிக்கு சித்த சுவாதீனம் இல்லை, அவன் அவளை விவாகரத்து செய்ய ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறான் என்ற நம்பகமான தகவல் கிடைக்க சமாதானமானாள். அவர்கள் உறவு தொடர்ந்தது.

    `வருங்கால மனைவியையாவது நான் என்றும் பிரியாது இருக்கவேண்டும்,’ என்று சுந்தர் நினைத்தான்.

    அதன் விளைவாக, ஒவ்வொரு நாளும் காதலி யாருடன் பேசலாம், என்ன அணியலாம் என்று எல்லா விதத்திலும் கட்டுப்படுத்த ஆரம்பித்தபோது அவளால் பொறுக்க முடியவில்லை. எதிர்த்தாள்.

    “எனக்கு உன்மேல் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், ஆண்களின் வக்கிரபுத்தி உனக்குத் தெரியாது. நான் உன்னைப் பாதுகாக்க நினைக்கிறேன். என்னைத் தவறாகப் புரிந்துகொள்கிறாயே!” என்று உருக்கமாகப் பேசி, சமாதானம் செய்வான். பரிசுப் பொருட்கள் தொடரும்.

    ஆரம்பத்தில் சுதாவும் அவனை நம்பினாள்.

    `இது என் வாழ்க்கை. நான் தவறு செய்தால் என்ன? அதிலிருந்து கற்றுவிட்டுப் போகிறேன்!’ என்று நினைக்க ஆரம்பித்தாள்.

    மேலும் பல யோசனைகள் எழுந்தன: `வாழ்நாளெல்லாம் சண்டை போட்டுக்கொண்டே இருக்கப் போகிறோமா, இல்லை, விட்டுக் கொடுத்துவிட்டு, எதையோ இழந்தது போன்ற நிராசையுடன் வாழ்க்கையைக் கழிக்கப் போகிறோமா?’

    ஒருவர் எவ்வளவுதான் கொட்டிக் கொடுத்துத் தன் அன்பை வெளிக்காட்டினாலும், இழந்த சுதந்திரத்திற்கு அதெல்லாம் ஈடாகாது என்று தோன்றிப்போக, சுதா அவர்கள் உறவை முறித்துக்கொண்டாள்.

    சிறு வயதில் பெற்றோரில் ஒருவரையோ, அல்லது இருவரையும் பிரிந்து வாழ நேரிட்ட சிலரும் சுந்தரைப்போல்தான் தமக்குப் பிடித்தவர்களை இறுகப் பற்றிக்கொள்வார்கள்.

    `இந்த உறவும் இல்லாது போய்விடுமோ!’ என்று அவர்கள் அஞ்சலாம். ஆனால், ஓயாத கட்டுப்பாட்டால் தம்மிடம் அன்பு கொண்டவர்களை, தம்மையும் அறியாது, விலக்குகிறோம் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

    “உறவுகளில் பொறாமை, உணவில் உப்பைப் போன்றது. அளவுக்கு மிஞ்சினால் பொறுக்க முடியாது!” என்கிறார் புத்திசாலியான ஒரு பெண்மணி.

    பெண்களையும் இந்தக் குணம் விட்டுவைப்பதில்லை.

    கதை

    திருமணத்துக்கு முன் பல ஆண்கள் அவளைப் பெண்பார்க்க வந்துவிட்டு, ஏதேதோ காரணம் கூறி நிராகரித்துவிட்டதில் தங்கம்மா பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானாள்.

    அவளுக்குக் கல்யாணம் நடந்து முடிந்து, அன்பான கணவர் வாய்த்தபின்னரும், மௌன கீதங்கள் படத்தில் வரும் கதாநாயகி சரிதாவைப் போல், `என்னை விட்டுப் போயிடாதீங்க,’ என்று தினமும் அவரிடம் கதறுவாள்.

    `எனக்கு மற்ற பெண்களிடம் நாட்டமே கிடையாது,’ என்று அந்த அப்பாவிக் கணவர் எத்தனை முறை சமாதானப்படுத்தியும் தங்கம்மாவின் மனம் நிம்மதி அடையவில்லை.

    தன்னை அவள் சந்தேகிக்கிறாள்! அந்த மனிதருக்கு வெறுத்துப்போய், அவளைத் தவிர்க்க ஆரம்பித்தார்.

    கதை

    “என் மனைவி நான் ஏதாவது ஒரு சினிமா நடிகையின் அழகையோ, நடிப்பையோ புகழ்ந்து பேசினாலே சண்டை பிடிக்கிறாள்!’ என்று ஒருவர் தன் நண்பனிடம் குறைப்பட்டார். `உன் வீட்டில் எப்படி?”

    “என் மனைவி, `இன்று உங்களுக்குப் பிடித்த நடிகையின் படம் தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள், சீக்கிரம் வந்துவிடுங்கள்,’ என்று தொலைபேசியில் அழைத்துக் கூறுவாள்,” என்று பெருமையுடன் கூடிய பதில் வந்தது.

    இரண்டாவது நபரின் மனைவி தன்னம்பிக்கை நிறைந்தவள். அவளுக்குத் தெரிந்திருந்தது, அந்த நடிகையின் முன் கணவர் போய் நின்றாலும், அவளுக்கு அவரை அடையாளம் தெரியப் போவதில்லையென்று!

    உறவு என்றால், அதனால் இருவரும் பயனடைய வேண்டும். சுதந்திரம் வேண்டுபவர் பிறருடன் ஒத்து வாழமுடியுமா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை.

    கணவர் விளையாட்டு வீரராகவும், மனைவி ஒரே இடத்தில் அமர்ந்து ஏதாவதொரு பொழுதுபோக்கில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தாலும்தான் என்ன?

    குடும்பத்தில் பேசுவதற்கு வேறு ஏதாவது சமாசாரங்கள் இருக்காதா?

    தம்பதியர் இருவருக்கும் ஒரே மாதிரி குறைபாடுகள் அமைவது நல்லதல்ல.

    ஒருவர் பயந்தவர் என்றால், அவருக்கு வாய்ப்பவர் தைரியசாலியாக இருந்தால் இருவருமே பயனடைவார்கள். ஒருவருக்கு உடலில் பலம், இன்னொருவருக்கு மனோபலம். வேறு ஒருவருக்கு.. போதும்!

    வித்தியாசமான தன்மைகள் இருந்தால், எதிரெதிர் துருவங்களைப் போல் ஒருவரை மற்றவர் நாடுவார். உறவு பலப்படும்.

    Share
  • பழகத்தெரிய வேணும் – 46

    பழகத்தெரிய வேணும் – 46

    நிர்மலா ராகவன்

    உழைப்பும் சவாலும்

    உத்தியோகத்திற்கான பேட்டி ஒன்றில்:

    “இந்த வேலையில் சேர்ந்தால், நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்குமே!” என்று சவால்விட்டார் அதிகாரி.

    “கடுமையான உழைப்பு யாரையும் சாகடித்தது கிடையாது!” இப்படிச் சொன்னவருக்கு வேலை கிடைத்தது.

    `முயற்சி செய்கிறேன்,’ என்று சொல்லியிருந்தால், அது அரைமனதான பதிலாக இருந்திருக்கும் — `பார்க்கலாம்,’ என்று தட்டிக்கழிப்பதுபோல்.

    ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய ஒத்துக்கொள்பவர், `சரி,’ அல்லது `இப்போது முடியாது,’ என்று கூறினால், அவர் முழுமனதுடன் அதில் ஈடுபடுவார் என்ற நம்பிக்கையாவது எழும்.

    `எனக்கு அவனைவிடத் திறமை அதிகம். படிப்பிலும் நான் அவனை மிஞ்சியவன்! அவனுக்கு என்னமோ அதிர்ஷ்டம்!’ என்று தன்னை மிஞ்சிவிட்ட ஒரு நண்பனைப் பார்த்துப் பொருமுகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்.

    அறிவும் திறமையும் முக்கியம்தான். ஆனால், அவற்றை முழுமையாக வெளிக்காட்ட கடும் உழைப்பு வேண்டாமா?

    சிலர் ஒரு காரியத்தை ஆரம்பிப்பார்கள். ஆரம்பித்த வேலை நீண்டுகொண்டே போனால், `இதற்கு என்னதான் முடிவு!’ என்ற அலுப்பு ஏற்படும். அப்போது அரைகுறையாக, எப்படியோ செய்து முடிக்கத் தோன்றிவிடும்.

    வேலை செய்யும் தருணங்களை ரசித்தால், செய்பவருக்கு மகிழ்ச்சி கிட்டும். எடுத்த காரியமும் சிறப்பாக அமையும்.

    பிடிக்கிறதோ, இல்லையோ, செய்துதான் ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது, முழுமனதுடன் ஈடுபட்டால் செவ்வனே செய்து முடிக்க முடியும்.

    படைப்பவர் ரசித்துச் செய்தால்தான் பிறருக்கு மகிழ்ச்சி ஏற்படும். சமையல், இசை, எழுத்து – எதுவாக இருந்தார் என்ன!

    “சமைப்பது என்றால் எனக்கு வெறுப்பு! மிளகாய் நெடியால் தும்மிக்கொண்டே, எதற்கு அந்த வேலை!” என்று அலுத்துக்கொள்வாள் என் தோழி ஒருத்தி.

    அவள் சமைத்ததை அன்றாடம் சாப்பிட வேண்டியிருக்கும் குடும்பத்தினரிடம் பரிதாபம்தான் எழுந்தது எனக்கு.

    “நான் எத்தனை வருடங்களாக எழுதுகிறேன்! எனக்கு ஒரு பட்டம்கூடக் கிடைக்கவில்லை,” என்று என்னிடம் குறைப்பட்டார் ஒரு பத்திரிகை ஆசிரியர்.

    பரிசுகளும், பட்டங்களும் பெறலாம் என்ற நோக்கத்துடன் எழுத ஆரம்பித்தால் அந்த இலக்கே சரியில்லை. எத்தனை கால அனுபவம் இருந்தாலும், புதிய விஷயங்களைக் கற்று, காலத்திற்கேற்ப எழுதுவது ஒருபுறமிருக்க, எழுதும்போதே மகிழ்ச்சியாக உணர்ந்தால்தான் ஒருவரது படைப்பு சிறப்பாக அமையும். எழுதுபவரது மகிழ்ச்சியும் பிறரை போய்ச்சேரும்.

    எடுத்த காரியத்தை ஒரு சவாலாக ஏற்று, விடாமுயற்சியுடன் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும்.

    வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதும் ஒரு சவால் என்று நினைத்து, அதன்படி செயல்படுகிறார்கள் சிலர்.

    இது அறிவுடைமையா, முட்டாள்தனமா?

    கதை

    சரவணன் ஒரு பெண்ணை மணந்தான். காதல் வயப்பட்டு அல்ல. அவள்மேல் பரிதாபப்பட்டு. அவளுக்கு ஏதோ வியாதி. `நம்மை விட்டால் வேறு யார் இவளை மணக்கப்போகிறார்கள், பாவம்!’ என்று எண்ணினான்.

    மணந்தபின், நோஞ்சானான அவளுடைய உருவத்துக்கும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று.

    கணவனை வார்த்தைகளாலேயே துளைத்தாள் — தான் கிடைத்தற்கரிய பிறவி, அதனால்தான் இந்த முட்டாள் தேடிவந்து மணந்தான் என்றெண்ணியவளாக. `எந்த விஷயத்திலும்’ ஒத்துழைக்கவில்லை.

    மிகவும் குழப்பத்திற்கும் வருத்தத்திற்கும் ஆளான சரவணன் என்னிடம் ஆலோசனை கேட்டபோது, “மனைவியாகத் தன் கடமையைச் செய்ய மறுப்பவளுடன் எதற்குச் சேர்ந்து வாழவேண்டும்? இவளை விவாகரத்து செய்ய வேண்டியதுதான்!” என்றேன்.

    “அது பாவமில்ல?” என்று குழம்பியவனிடம், “உங்கள் சந்தோஷம் மட்டும் முக்கியமில்லையா? உங்களுக்கு இன்னும் இளமை இருக்கிறது. ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து, இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளுங்கள். எத்தனை காலம் இப்படியே நொந்துபோய் இருப்பீர்கள்?” என்றேன் வற்புறுத்தலாக. வேறு வழி தெரியவில்லை.

    அப்படியே செய்தான். சில மாதங்களுக்குப்பின், “நீங்க சொன்னபடி செய்தேன். இப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன், ஆன்ட்டி,” என்று தெரிவித்தான்.

    பெண்கள் இவ்வளவு சீக்கிரம் திருமண வாழ்வை முறித்துக்கொள்ள மாட்டார்கள்.

    உயிர் போகும் நிலையில் காப்பாற்றப்பட்டு, அந்த மாது மறுவாழ்வு நிலையத்தில் இருந்தபோது சந்தித்தேன்.

    சுமார் முப்பது வருடங்கள் கணவரிடம் வன்முறையைத் தவிர வேறு எதையும் அனுபவித்திராதவள், “அவர் மாறுவாருன்னு பொறுமையா இருந்தேங்க,” என்றாள். அப்போதும் அவளுக்கு அடுத்து என்ன செய்வது என்ற தெளிவு இருக்கவில்லை.

    தன்னம்பிக்கையை இழந்தவர்களிடம் எந்த ஆற்றலையும் எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்குச் சவால் என்ற வார்த்தைக்குச் சரியான அர்த்தம் தெரியவில்லை என்றே தோன்றுகிறது.

    கதை

    கெண்டகி fried சிக்கன் நிறுவனத்தை ஆரம்பித்தபோது, கர்னல் ஸாண்டர்ஸ் என்பவருக்கு 67 வயது. அதற்குமுன், தெரு ஓரத்தில் ஒரு சிறிய உணவுக்கடை வைத்திருந்தார். வேறு ஒருவர் அப்பண்டத்தை விற்றபோது, அதில் குறை கண்டுபிடித்து, அதைவிடச் சிறப்பாகத் தயாரித்து, பெரும் வெற்றி பெற்றார்.

    இளம்வயதில் பண்ணையாளாக, பஸ் கண்டக்டராகப் பணி புரிந்திருந்த ஒருவர் தனது 88-வது வயதில், உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்த துரித உணவுச் சங்கிலியின் (fast food chain) நிறுவனராக எப்படி ஆனார்?

    தன் திறமையில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. பிறர் பாராட்டாவிட்டாலும், பின்வாங்காது தன் இலக்கைக் குறிவைத்துச் சென்றார்.

    கடுமையாக உழைக்கப் பயந்து, பின் வருத்தப்படுவது எதற்காக? வழியில் எத்தனையோ தவறுகள் வந்திருக்கலாம். அவைகளிலிருந்து சரியான வழி எது என்று கற்றிருப்பார்.

    பிறர் பொறாமைப்படுவதற்காகப் பெருமைப்படவேண்டுமே அல்லாது, பயந்துவிடக்கூடாது என்று புரிந்திருப்பார்.

    `கிட்டத்தட்ட தொண்ணூறு வயதிலும் தன் அனுபவங்களையும், திறமையையும் கொண்டு சாதித்திருக்கிறாரே, இவருக்கெல்லாம் உடலில் அப்படி ஒரு பலமா!’ என்ற பெருவியப்பு எழுகிறதா?

    மனிதனோ, மிருகமோ, என்றென்றும் ஆரோக்கியமாக இருப்பது என்பது நடக்காத காரியம். இது புரியாது, உடல்நலம் பாதிக்கப்பட்டால், தன்னைப் பார்த்துத் தானே பரிதாபப்பட்டுக்கொண்டு இருந்தால் யாருக்கு நஷ்டம்?

    ஒருவருக்கு இடுப்புவலி. மருத்துவர் slip disc என்று ஏதோ பெரிய பெயர் சொல்ல. மனிதர் பயந்துவிட்டார். அதன்பின், உடல்நிலை சரியானபோதும், மாடிப்படிகளில் ஏற பயம்.

    மிகக் கனமான சாமான்களைத் தூக்க முடியாது என்றால் நியாயம். நடக்கவே பயந்தால்?

    இப்போதெல்லாம் வியாதியைப்பற்றிப் பேசுவது நாகரிகமாக ஆகிவிட்டது.

    முன்பெல்லாம், வயது முதிர்ந்த பெண்கள் சந்தித்துக்கொள்ளும்போது, “சௌக்கியமா?” என்று விசாரிப்பார்கள். இப்போது அந்த முகமன், “என்னென்ன மருந்து சாப்பிடுகிறீர்கள்?” என்று மாறிவிட்டது.

    தான் தன் உடல் உபாதையைப்பற்றி விவரிக்க, அடுத்தவர் அனுதாபம் காட்டவேண்டும் என்பதுதான் அவரது எதிர்பார்ப்பு. அதனால், உடல்நிலை சீராகிவிடுமா என்றெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது.

    நாம் ஒவ்வொரு முறையும் நமக்கு வந்த, ஆனால் இப்போது சரியாகிவிட்ட, நோயைப்பற்றி ரசனையுடன் விவரித்தால் கேட்பவர்களுக்கு எப்படி இருக்குமோ, நம் உல்லாசம் பறிபோய்விடும்.

    ஒரு சிலர், தாம் ஆரோக்கியமாக இருந்தாலும், தமக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் ஆகியோரின் உடல்நிலைக் குறைபற்றி விவரிப்பார்கள்.

    `நமக்கு இப்படியெல்லாம் நேரவில்லேயே!’ என்ற நிம்மதியாலா?

    அல்லது, தம் ஆரோக்கியக் குறைவை சில நொடிகளாவது மறப்பதற்காகவா?

    எனக்குப் புரியத்தானில்லை.

    Share
  • தொலைத்தது (சிறுகதை)

    தொலைத்தது (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    அன்று பிரேமாவைப் பார்த்ததும் ஓடி ஒளிந்துகொள்ளத் தோன்றிற்று. அவளுடைய கல்யாணத்திற்கு நேரில் வந்து, எவ்வளவு வற்புறுத்தி அழைத்திருந்தாள்!

    கோயிலில் நடந்த அந்த வைபவத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு என் உடல்நிலைமேல்தான் பழி போடவேண்டும். சொன்னால் ஏற்றுக்கொள்வாளா?

    `இதெல்லாம் இயற்கை. தலைக்கு ஜலம் விட்டுக்கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே?’ என்று வாதாடுவாள் அந்த சண்டைக்காரி.

    மறைவான இடம் எங்கு இருக்கிறது என்று நான் விழித்துக்கொண்டிருந்தபோதே அவள் என்னைப் பார்த்துவிட்டாள். கழுத்தில் அழுக்கேறாத மஞ்சள் கயிறு.

    அந்த புது மணப்பெண் எதுவும் கேட்குமுன்னரே நான் முந்திக்கொண்டேன். “ஸாரி பிரேமா. ஒன் கல்யாணத்துக்கு வரமுடியல”.

    பிரேமா கலீரென்று சிரித்தாள். பேரழகியான அவள் முகத்திற்கு இன்னும் மெருகேற்றியது அந்தச் சிரிப்பு.

    “கல்யாணம் நடந்திருந்தாத்தானே!” சிரிப்பு பலத்தது.

    “பின்னே..?” என்ன கேட்பது, எப்படிக் கேட்பது என்ற தர்மசங்கடத்துடன் அவள் கழுத்தையே பார்த்தேன்.

    “சாயந்திரமா ஒங்க வீட்டுக்கு வந்து, விவரமா சொல்றேன், பானு. சாப்பாட்டு வேளை முடிஞ்சதும், ஒடனே வேலைக்கு வராட்டா, அந்த மானேஜர் பிசாசு கத்துவான்!”

    யாருக்கும் அடங்காத இவளை அவ்வளவு தூரம் பயமுறுத்தி வைத்திருக்கும் அந்த `மானேஜர் பிசாசைப்’ பார்க்க வேண்டும் போல் இருந்தது எனக்கு.

    பதினேழு வயதிலேயே உத்தியோகம் பார்த்துச் சம்பாதிக்க வேண்டும் என்று பிரேமாவுக்கு என்ன கட்டாயம்?

    `பொறுமையாக இரேன். அவள்தான் வீட்டுக்கு வந்து சொல்லப்போகிறாளே!’ நிதானமின்றி அலைந்த மனதை வைதேன்.

    பிரேமாவும் நானும் பேசிக்கொண்டிருந்தபோது, `இந்த தறுதலையோட என்ன பேச்சு!’ என்று அம்மா உள்ளே முணுமுணுத்துக்கொண்டிருந்தாள்.

    பிரேமாவின் காதிலும் விழுந்திருக்கும். ஆனால் யார் என்ன சொன்னாலும் அதனால் பாதிக்கப்படாததுபோல் நடந்துகொள்வாள்.

    “என்னைக் கேக்காம, அப்பா அந்தக் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டார். அந்தக் கறுப்பனை யார் கட்டிப்பாங்க! அதான், கல்யாணத்துக்கு மொதநாள் அவனோட அண்ணனோட ஓடிப்போயிட்டேன்!” மீண்டும் சிரிப்பு. “அவனோட பேர் என்ன தெரியுமா? ரெமோ! முழிக்காதே. ரெங்கசாமி மகன் மோகன்!”

    எனக்கு மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியவில்லை.

    “எனக்கு ஒங்கிட்ட மனம்விட்டுப் பேச முடியுது, பானு. நாம்ப சின்ன வயசிலேருந்து பழகினவங்க இல்லியா? அதான்,” என்றவள் தொடர்ந்தாள். “ரெமோவுக்கு இன்னும் படிப்பு முடியல. நான்தான் வேலை செஞ்சு சம்பாதிக்கிறேன்”.

    ஒரு வழியாக என் குரல் வெளிப்பட்டது. “ஒங்க வீட்டிலே?”

    பதிலுக்கு, இடி இடியென்று சிரித்தாள் பிரேமா. “நாங்க பண்ணின காரியத்துக்கு எந்த வீட்டிலே சேர்ப்பாங்க?”

    அதன்பின், பத்து வருடங்கள் கழித்துத்தான் நான் பிரேமாவைப் பார்த்தேன். அவளுடைய சிரிப்பு மட்டும் மாறாது, அப்படியே இருந்தது.

    “ரெமோவுக்குப் படிப்பு முடிஞ்சு, நல்ல வேலை கிடைச்சுடுச்சா?” நிறைய தங்க நகைகள் அணிந்திருந்தவளைப் பார்த்ததும் என்னையும் அறியாமல் அப்படி ஒரு கேள்வி எழுந்தது.

    “யாரு? ஓ, அவனா!”

    அப்படி என்ன அலட்சியம்?

    “இப்போ நான் அவனோட இல்லே”. இன்னொரு அதிர்ச்சியை அளித்தாள்.

    `நல்லவேளை, அம்மா அருகில் இல்லை, இவள் பேசுவதைக் கேட்க!’ என்று சிறிது நிம்மதி எழுந்தது எனக்குள்.

    “நான் முந்தி வேலை செஞ்சிட்டு இருந்தேன் பாரு, அந்தக் கடை முதலாளி என்மேல ஆசைப்பட்டார். `உன்னை ராணிமாதிரி வெச்சுக்கறேன்’னார். எதுக்காக ரெமோவுக்கு உழைச்சுக் கொட்டறது?”

    “இன்னொரு கல்யாணமா?” என் குரல் எனக்கே கேட்கவில்லை.

    “போதும். ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் பட்ட அவதி! `ஒனக்குப் பிறந்ததை நீயே வெச்சுக்கடா’ன்னுட்டு, என் மகனையும் அவங்கிட்ட குடுத்துட்டு, நான் ஜாலியா வெளியே வந்துட்டேன்!”

    இதற்கும் ஒரு சிரிப்பா?

    நான் முகத்தைச் சுளிக்காமல் இருக்கப் பாடுபட்டேன்.

    வெளிநாட்டில் பல வருடங்கள் கழித்துவிட்டு, அம்மாவைப் பார்க்கத் திரும்பி வந்தேன்.

    “பிரேமாவைப் பாத்தியா? எப்படிம்மா இருக்கா?” என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

    தலையைத் திருப்பிக்கொண்டு உள்ளே போனாள் அம்மா. காதில் விழவில்லை என்று நான் நினைத்துக் கொள்ளவேண்டுமாம்!

    ஒரு கதையின் முடிவைத் தெரிந்துகொள்ளாமல் போனதுபோல் தவிப்பாக இருந்தது எனக்கு.

    சொல்லி வைத்தாற்போல், அவளே என்னைத் தேடி வந்தாள்.

    “ஒங்கம்மாவை மார்க்கெட்டில பாத்தேன். நீ வந்திருக்கிறதா சொன்னாங்க,” என்று ஏதோ ஒப்பிப்பதுபோல் சொன்னாள்.

    இளமையின் உற்சாகம் எப்போதும் நிலைத்திருக்குமா? அவளுக்கும் இப்போது ஐம்பது வயதாகி இருக்காது?

    “எங்கேயாவது வெளியே போகலாமா, பானு?” என்றாள் மெள்ள.

    எனக்குப் புரிந்தது. அம்மா காதில் விழக்கூடாது!

    பிறர் நினைப்பதைப்பற்றி இவள் என்று கவலைப்பட்டிருக்கிறாள் என்ற ஆச்சரியமும் எழாமலில்லை.

    உணர்ச்சியற்ற குரலில், “ரெமோ செத்துப்போயிட்டான்,” என்று ஆரம்பித்தாள்.

    என்னதான் அவனை விட்டுப் பிரிந்திருந்தாலும், சட்டப்படி அவள் இன்னும் அவனுடைய மனைவிதானே! அந்த துக்கமோ?

    “எனக்கு யாரும் சொல்லிவிடலே. பேப்பரில பாத்துத் தெரிஞ்சுக்கிட்டேன். இறுதி யாத்திரை இந்த விலாசத்திலே, இத்தனை மணிக்குன்னு போட்டிருந்தாங்க. ரயில்ல அங்க போனேன்”. அதன்பின் நீண்ட மௌனம். அவள் பார்வை எங்கோ நிலைத்திருந்தது.

    “மொதல்ல என் மகனை எனக்கு அடையாளம் தெரியல. எப்பவோ, ரெண்டு வயசில பாத்தது. அவங்கப்பாமாதிரியே அழகா இருந்தான். அதை வெச்சுத்தான்..!”

    நான் சற்றும் எதிர்பாராவிதமாக பிரேமா விம்ம ஆரம்பித்தாள்.

    “அவன் எல்லார்கிட்டேயும் என்ன சொன்னான், தெரியுமா பானு? `எனக்கு ஒரு அம்மா இருக்கிறதே தெரியாது,’ அப்படின்னான். எங்கிட்ட வந்து, `இனிமே இங்க வராதீங்க,’ன்னு கறாரா..! என்னால அவனுக்கு அவமானமாம்! பெத்த தாய்னுகூட பாக்காம என்னை விரட்டி அடிச்சுட்டாண்டி!”

    பெரிய குரலெடுத்து அழுதவளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது?

    `ஒரு தாயாக நீ அவனுக்கு என்ன செய்தாய்?’ என்று கேட்கத்தான் தோன்றியது.

    ஆனால், என் கை வாயை முந்திக்கொண்டது. அவள் முதுகைப் பரிவுடன் தடவிக்கொடுத்தது.

    அடுக்கடுக்கான சங்கிலிகள்மேல் கை பட, பேச்சை மாற்றும் எண்ணத்துடன், “இவ்வளவு நகை போட்டுக்கிட்டு வெளியே வரலாமா, பிரேமா? தொலைஞ்சுடாது?” என்று செல்லமாகக் கடிந்தேன்.

    `எதை எதையோ தொலைத்துவிட்டேனே! நகை என்ன, கேவலம் உயிரில்லாத சாமான்!’ என்று எண்ணியிருப்பாள். இல்லாவிட்டால், அப்படிக் கதறியிருப்பாளா?

    பி.கு: எனக்குத் தெரிந்த மூன்று பெண்களின் குணாதிசயங்களை, அவற்றால் ஏற்பட்ட அனுபவங்களை, பிரேமா என்கிற ஒரு கதாபாத்திரத்துக்குள் புகுத்தியிருக்கிறேன்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 45

    பழகத் தெரிய வேணும் – 45

    நிர்மலா ராகவன்

    மனைவி கணவனது உடைமையா?

    ஆப்ரஹாம் லிங்கனிடம், “இந்த உலகில் நாம் செய்யும் எல்லா செயல்களும் சுயநலத்தின் அடிப்படையில் எழுந்தவைதான்,” என்று நண்பர் ஒருவர் கூற, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி அதை மறுத்தார்.

    “நான் பிறருக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன். அது எப்படி சுயநலமாகும்?” என்று கேட்டார்.

    நண்பர் அயராமல், “அப்படி உதவி செய்தால், உனக்கு என்ன கிடைக்கிறது?” என்று எதிர்க்கேள்வி கேட்டார்.

    “மகிழ்ச்சி,” என்று பதில் வர, “பார்த்தாயா? உன் மகிழ்ச்சிக்காகச் செய்வது சுயநலமில்லையா?” என்று மடக்கினார் நண்பர்.

    நம் நலனைக் கவனித்துக்கொள்வது அவ்வளவு விரும்பத்தகாத குணமா?

    `தன்னலமற்ற சேவை செய்பவர்’ என்று அபூர்வமான சிலரைப் போற்றுகிறோம்.

    ஒருவர் தன் சொந்த நலனைப் பெரிதாகப் பாராட்டாது, அறவே ஒதுக்கினால், அவரால் எப்படிப் பிறருக்குச் சேவை செய்யமுடியும் என்கின்ற கேள்வி எழுகிறதே!

    பொதுவாகவே, பெண்கள் இப்படி இருந்தால்தான் அவர்களுக்கு நல்ல பெயர் கிட்டுகிறது.

    கதை

    லட்சுமி சிறுவயதிலிருந்தே ஆண்கள் சொற்படி கேட்டு நடக்க வேண்டும் என்று போதிக்கப்பட்டு வளர்ந்திருந்தாள்.

    அவள் செய்யப்போகும் ஒவ்வொரு காரியமும் இப்படித்தான் இருக்கவேண்டும், தான் யாருடன் பேசலாம் என்று கூறுகிறோமோ அவருடன் மட்டும்தான் அவள் பேசவேண்டும் என்று பலவகையிலும் கணவர் கட்டுப்படுத்தியபோது அவரது போக்கைத் தவறாக நினைக்கத் தோன்றவில்லை அவளுக்கு.

    கைத்தொலைபேசியில் அவள் யாருடனெல்லாம் தொடர்பு கொள்கிறாள் என்று அவர் வேவு பார்த்தபோது, அவளுக்கு வாழ்வில் உற்சாகம் குறைந்துகொண்டே போயிற்று.

    கணவருடைய அன்புக்காக எதையும் விட்டுக்கொடுக்கலாம் என்று நினைத்தபோதும், தான் ஏன் மகிழ்ச்சியே இல்லாமல் இருக்கிறோம் என்று அவளுக்குப் புரியவில்லை. சிலமுறை கணவனின் போக்கை எதிர்த்துப்பார்த்தாள்.

    “எனக்கு உன்மேல் மிகுந்த அன்பு, அதனால்தான் நீ பிறருடன் பழகினால் பொறாமை வருகிறது,” என்று சமாதானப்படுத்தினான் அவன். அவளுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பது அவனுக்குப் புரியவில்லை.

    இம்மாதிரியான ஆணுக்கு மனைவிமேல் நம்பிக்கை கிடையாது என்பதில்லை. சுயநம்பிக்கை குறைவு. அவ்வளவுதான். தன்னைவிட அவள் எந்த விதத்திலாவது உயர்ந்தவள் என்று தோன்ற, அப்படி நடக்கிறான்.

    ஒருவர் தன் மகிழ்ச்சிக்காகவோ, இல்லை, சொந்த நலனுக்காகவோ பிறரைக் கஷ்டப்படுத்துவது அன்பில் சேர்த்தியில்லை.

    இப்படிப்பட்ட கணவனுக்காக விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தால் குடும்பத்தில் எவருக்குமே மகிழ்ச்சி கிட்டாது.

    ஒரேமாதிரி அனுபவம் வெவ்வேறு மனிதர்களிடம் வித்தியாசமான பாதிப்புகள் ஏற்படுத்தும்.

    கதை

    வனமாலா தன்னைக் கட்டுப்படுத்திய கணவனிடம் சிறிது காலம் அடங்கிப்போனாள். காதலனாக இருந்தபோது, அவனுக்கு விட்டுக்கொடுத்து நடந்தவள் அவள். ஆனால், அப்படியே நடந்தபோது, தன் இயல்பான குணாதிசயமே மாறிக்கொண்டு வருகிறது என்பதை உணர்ந்தாள்.

    எதிலும் சவாலை எதிர்நோக்கும் குணத்தால் இப்படி ஒருவரை மணந்துவிட்டோமோ என்று முதலில் குழம்பினாள் அந்த விளையாட்டு வீராங்கனை.

    பிறகு, `கணவனுக்குத் தீயகுணம்கொண்ட நண்பர்கள் இருந்தால் என்ன, இது என் வாழ்க்கை!’ என்று தெளிந்தாள். தனக்குப் பிடித்த, பிறருக்குத் தீங்கு விளைவிக்காதவற்றில் ஈடுபட்டாள்.

    கரடுமுரடான பாதையில் ஏறுவது கடினமாக இருந்தாலும், மனங்கலங்காது தொடர்ந்தால் அழகான காட்சிகள் அமையலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

    `சுயநலம் பிடித்தவள்!’ என்று கணவன் பழித்ததை அலட்சியம் செய்தாள். (அவன் மட்டும் சுயநலக்காரன் இல்லையா?)

    காதலனாக இருந்தபோது அவனிடம் அவளுக்கு அவனிடம் பிடித்த குணங்களை மீண்டும் கொண்டுவரலாம் என்ற நம்பிக்கை எழ, பொறுமையாக இருந்தாள்.

    தன் போக்கால் அவளுக்குத் தன்னிடம் அன்பு குறைந்து வருவது புரிய, முதலில் கேலி, பிறகு சண்டை என்று இருந்தவன் நாளடைவில் மாறினான். அவளைக் கட்டுப்படுத்துவதைக் குறைத்துக்கொண்டான்.

    கதை

    பெண்பார்க்கும் படலம் முடிந்ததும், `எனக்கு இந்தப் பெண் வேண்டாம். அவளுக்கு நிறைய சாதிக்கவேண்டும் என்ற கனவுகள் இருக்கின்றன,’ என்று ஓர் இளைஞன் மறுத்தான்.

    அவனைப் பொறுத்தவரை, ஓர் இலக்குடன் சாதிக்கும் வெறி நிறைந்த பெண்களிடம் பெண்மைக்குணம் இருக்காது.

    மனைவி அவனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு பொருள். அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்துகொடுத்தால் அவள் அன்பான மனைவி. அவளுக்குத் தனக்கென்று எந்த ஒரு லட்சியமோ, ஆசையோ இருக்கக்கூடாது என்ற எண்ணம் கொண்டவன்.

    அது மட்டுமா? பெண் என்றால் அதிர்ந்து பேசாது, அல்லது பிறர் எதிரில் வாயே திறக்காது, கணவனுக்குக் கீழ்ப்படிகிறவள்.

    அப்படிப்பட்ட ஒரு பெண் திருமணமானதும், குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டோமே, ஏன் வாழ்க்கை மகிழ்ச்சியற்றுப் போய்விட்டது என்று புரியாது தவித்தாள்.

    கதை

    “எல்லாப் பெண்களுக்கும் பிடித்த ஒன்று எது என்று கண்டுபிடித்து வா,” என்று அரசன் ஒருவனுக்குக் கட்டளையிட்டான்.

    அந்த மனிதன் எங்கெங்கோ தேடி, அறிவாளி என்று பிறர் சிபாரிசு செய்த ஒரு சூனியக் கிழவியிடம் அக்கேள்வியைக் கேட்டான்.

    `நான் விடையளித்தால் உன் உயிர் தப்பும். எனக்கு என்ன கிடைக்கும்?” என்று அவள் கேட்க, “நீ கேட்பதைத் தருகிறேன்,” என்று வாக்களித்தான்.

    எக்காலத்துக்கும் பொருந்தும் அவள் பதில்: “தான் சம்பந்தப்பட்ட சமாசாரங்களில் எந்தப் பெண்ணும் சுயமாக முடிவெடுக்கவே விரும்புகிறாள்”.

    அரசனுடைய பாராட்டுடன் அவளை மீண்டும் சந்தித்தவன், “உனக்கு வேண்டியதைக் கேள்,” என்றான்.

    “என்னை மணந்துகொள்,” என்றவள் ஒரு நிபந்தனையும் விதித்தாள். “நீ வெளியில் போகும்போது நான் கிழத்தோற்றத்துடன் வருவேன். வீட்டில் இளம்பெண்ணாக நடப்பேன். இல்லையேல், வீட்டில் கிழவி, வெளியில் இளம்பெண். உனக்கு எப்படி வேண்டும்?”

    “உன் விருப்பம்!”

    அவள் மகிழ்ந்து, எப்போதும் இளம்பெண்ணாகவே தோற்றமளிப்பதாக உறுதியளித்தாள்.

    `திருமண வாழ்க்கை நான் எதிர்பார்த்தபடி இல்லை,’ என்று இளம்பெண்கள் மனம் வெறுத்துப் பேசுகிறார்கள்.

    திருமணத்திற்கு முன்னால், திருமணத்திற்குப் பின்னால் என்று ஆராய்ந்தால், உறவில் நிறைய வேறுபாடுகள் இருக்கும்.

    எப்போதும் கணவன் அல்லது மனைவி தன்னையே நாடவேண்டும், தான் சொற்படி நடக்கவேண்டும், பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் நடைமுறைக்கு ஒவ்வாதது.

    நல்ல குடும்பம் என்றால், ஒவ்வொருவருடைய திறமையும் வெளிப்பட அவர்கள் நினைத்ததைச் சாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும் – அது ஆணோ, பெண்ணோ, குழந்தைகளோ! எவரிடமும் எதிர்பார்ப்பு இல்லாது செலுத்துவதே அன்பு.

    தான் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் வாழ்க்கைத்துணையிடம் சொல்லி, அனுமதி கேட்கும் நிலை வந்தால் அது அடிமைத்தனம்.

    “உங்களுக்காக எவ்வளவு செய்தேன்!” என்று சொல்லிக்காட்டினால், பெற்ற குழந்தைகள் கொண்டிருக்கும் அன்புகூட குறைந்துபோகும் அபாயம் இருக்கிறது.

    “நான் இப்போது செய்கிறேன். நீங்கள் நாளைக்குச் செய்யவேண்டும்!” என்பவர்களும் உண்டு. உறவுகள் என்ன, பண்டமாற்று வியாபாரமா?

    பெற்ற குழந்தைகளிடம் அன்பு செலுத்துவது அவர்கள் பிற்காலத்தில் நன்றியுடன் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனா?

    அல்லது, வயது முதிர்ந்த பிராயத்தில் அவர்கள் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்றா?

    குடும்பத்தினர் நல்லபடியாக வளர்வதைக் கண்டே மகிழ்ச்சி அடையலாமே!

    Share
  • என்னைப் புகழாதே! (சிறுகதை)

    என்னைப் புகழாதே! (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    (`அம்மா! நீ இன்னிக்கு அழகா இருக்கே!’ `அடீ, ஏதாவது வேணுமானா நேரடியா கேளு. இது என்ன கெட்ட வழக்கம், காரியம் ஆகணும்னு ஐஸ் வைக்கிறது!’)

    “இந்தாம்மா. வேண்டியவங்களுக்கெல்லாம் அனுப்பிடு. அழகா அச்சடிச்சிருக்கான்,” என்று அவளுடைய திருமண அழைப்பிதழ் கட்டை அப்பா கொடுத்தபோது, நினைத்தும் பார்த்திருப்பாளா, தொலைபேசியில் எல்லாரையும் அழைத்து, `கல்யாணம் நின்றுவிட்டது!’ என்று சொல்ல நேரிடும் என்று?

    பரிசுப்பொருட்களுடன் எல்லாரும் வந்துவைத்தால், அது வேறு துக்கம்.

    அந்த எண்ணம் உதிக்கையிலேயே, `அப்படி என்ன துக்கம் வந்துவிட்டது இப்போது?’ என்று தன்மீதே ஆத்திரப்பட்டாள் நளினி.

    `ஏதோ, இதுவரைக்கும் காலைச்சுற்றிய பாம்பு கடிக்காமல் விட்டதே’ என்று நிம்மதி அல்லவா அடையவேண்டும்!

    `பாம்பு யார், மணிவண்ணனா? நம் மனம்தான் எத்தனை சீக்கிரம் மாறுகிறது!’ லேசாகச் சிரிப்புகூட வந்தது நளினிக்கு.

    அடேயப்பா! அவனைப்பற்றி நினைக்கும்போதே தான் துடித்த துடிப்பென்ன, தனக்குத்தானே சிரித்துக்கொண்டதும், நிமிடத்துக்கு நிமிடம் கண்ணாடிமுன் நின்று தன் அழகை ரசித்ததும், பாட்டு முணுமுணுத்ததும்!

    முதன்முறையாக அவளைப் பார்த்தபோதே, “நீங்க எப்போ லைப்ரரிக்கு வந்தாலும், ஒங்களுக்குப் பக்கத்திலே எனக்கு இடம் பிடிச்சு வைங்க!” என்று சொல்வதானால், தான் அவரை எவ்வளவு தூரம் கவர்ந்திருக்கவேண்டும் என்ற பெருமைதான் உண்டாயிற்று அவளுக்கு.

    “நளினி! அன்னிக்கு, ஒன் பக்கத்திலே இடம் கேட்டேன். இப்போ, எப்பவும் என் பக்கத்திலேயே இருப்பியான்னு கேக்கத்தோணுது. ஒன் அழகைத் தரிசிச்சுக்கிட்டே இருக்கலாமில்ல?” என்று சினிமா வசனம் பேசினான், ஒரு நாள்.

    “எங்கப்பாகிட்ட வந்து பேசுங்க,” சற்றே நாணியபடி நளினி பதிலளித்தபோது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அந்த அப்பா `வேண்டாம்’ என்றால் வேறு ஒருவனுக்குக் கழுத்தை நீட்டிவிடுவாளோ?

    “ஒங்கப்பாவைக் கேட்டுக்கிட்டா என்னோட சுத்தினே?”

    எப்போதும் அதிராத குரலில் பேசியவர்! எதற்கு இந்தக் கோபம்?

    அவள் மிரண்டு போனதைப் பார்த்து மணிவண்ணனின் தைரியத்தில் சிறிதளவு திரும்பியது.

    அவள் தோளைப்பற்றி அணைத்துக்கொண்டான். “ஸாரிடா. எங்கே நீ என்னைவிட்டுப் போயிடுவியோங்கிற பயம்,” என்று மன்னிப்பும் கேட்டுக்கொண்டான்.

    அப்படியே ஒருவரை ஒருவர் உராய்ந்தபடி அந்தப் பூங்காவில் நடந்துகொண்டிருந்தபோது அந்தக் குரல் கேட்டது: “ஹலோ, நளினி!”

    “டேய் சங்கர்! நீயா? உன்னைப் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு! இந்த ஒலகத்திலேதான் இருக்கியா?” கலகலவென்று சிரித்தாள்.

    மணிவண்ணனின் முகம் சிறுத்தது. `யார் இந்த தடியன்? ஒரு மரியாதைக்காவது எனக்கு ஒரு ஹலோ சொல்லி இருக்கவேண்டாம்?’

    “என்னடா? முந்தி சோனியா இருப்பே. இப்ப ரொம்ப குண்டா ஆயிட்டியே!” உற்சாகமாகப் பொரிந்துதள்ளிய நளினியைக் கண்களைக் குறுக்கிக்கொண்டு பார்த்தான் மணிவண்ணன். சந்தேகமும் பொறாமையும் கொப்புளித்தன அப்பார்வையில்.

    அப்போதுதான் பக்கத்தில் ஒருவன் இருப்பதே நினைவு வந்தவளாக அறிமுகம் செய்ய ஆரம்பித்தாள்: “இது.. சங்கர். நாங்க ரெண்டு பேரும் கிண்டர் கார்டனிலேருந்து பன்னண்டு வருஷம் ஒண்ணாப் படிச்சோம். தமிழ்ச்சங்கத்திலே துடிப்பா இருப்போம். எத்தனை சண்டை போட்டிருக்கோம்! ஞாபகம் இருக்கா, சங்கர்?”

    பேசிக்கொண்டே போனவளை ஓர் அனல் பார்வை பார்த்துவிட்டு, எதிரிலிருந்த எதிரியைப் பார்த்து, “சரி, பாக்கலாம்,” என்று அவள் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அப்பால் நடந்தான் மணிவண்ணன்.

    பாலியத்தோழனிடம் விடைபெறவும் மறந்து, ஏதோ குற்றம் புரிந்தவள்போல், நிழலாகக் காதலனைத் தொடர்ந்தாள் நளினி.

    அவளை அடக்கிவிட்ட பெருமிதத்துடன், “எப்பவோ ஒண்ணாப் படிச்சிருந்தா என்ன? அதுக்காக இப்படி கண்ட ஆம்பளைகிட்ட கொஞ்சிக் குலாவணுமா?” என்று மிரட்டிய மணிவண்ணனின் தலையுடன் குரலும் உயர்ந்தது. “நாளைக்குக் கல்யாணம் ஆகிட்டாலும் இந்தக் குணம்தானே வரும்?”

    வாயடைத்துப்போயிற்று நளினிக்கு.

    செல்லமாக அவளை இடித்தான் மணிவண்ணன். “என்ன செய்யறது, நளினி? நீ எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்னு நான் ஆசைப்படறது தப்பா? என்னை அவ்வளவு பைத்தியமா அடிச்சிருக்கே நீ!”

    தன் தடுமாற்றத்தை மறைக்க நளினி சிரிக்க முயன்றாள்.

    `அதிகம் யோசிக்காது எதற்குள்ளேயோ காலை விட்டுவிட்டோமோ? இவரிடம் அப்படி என்ன பிடித்துப்போயிற்று எனக்கு?’

    அவளுடைய குழப்பத்தைக் கவனியாது, “எங்கம்மா அவங்க மருமகளைப் பாக்க ஆவலா இருக்காங்க, நளினி. இப்பவே வா!” என்று அழைத்துப்போனான்.

    நளினியை மேலும் கீழும் பார்த்த பார்வதி அம்மாளின் முகம் சுருங்கியது. “ஒரு தோடுதான் போட்டிருக்கே. அதுவும் கண்ணுக்குத் தெரியாதமாதிரி. மத்தபடி, பொட்டுத்தங்கத்தைக்கூடக் காணுமே! பாங்கிலேயாவது வெச்சிருக்கீங்களா?”

    அவமானத்தால் சுருங்கிய நளினியைப் பொருட்படுத்தாது, பார்வதி தன்போக்கில் அடுக்கினாள்: “மணி எனக்கு ஒரே மகன். கறுப்புதான். ஆனாலும், ஆம்பளை இல்லியா? அவனோட படிப்புக்கு அம்பதாயிரம், லட்சம்னு குடுத்து, அதோட அம்பது பவுன் நகையும் போட எங்க சொந்தக்காரங்களே தயாரா இருக்காங்க. ஏதோ, ஒன்னோட அதிர்ஷ்டம் அவனுக்கு ஒன்னைப் பிடிச்சுப்போச்சு. அதுக்காக சும்மா பண்ணிக்க முடியுமா? ஒரு இருபதாயிரம் ரிங்கிட்டாவது கையில குடுப்பாரில்ல ஒங்கப்பா?”

    மெள்ளத் திரும்பி காதலனை ஒரு பார்வை பார்த்தாள், `நீ கிடைக்க நான் குடுத்து வெச்சிருக்கணும்!’ என்று எப்போதும்போல் ஆதரவாக ஏதாவது சொல்வான் என்ற எதிர்பார்ப்புடன்.

    அவனோ, `எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை!’ என்பதுபோல் தலையைத் திருப்பி எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான்.

    நடந்ததைக் கேட்டு அப்பா ஏன் கொதித்தெழவில்லை என்று ஆச்சரியப்பட்டாள் நளினி.

    “பெண்ணைப் பெத்துட்டா, இதுக்கெல்லாம் பயப்பட முடியுமாம்மா? முப்பத்தஞ்சு வருஷம் உழைச்சு நான் சேத்து வெச்சிருக்கிறதை ஒனக்கில்லாம, வேற யாருக்காக செலவழிக்கப்போறேன்!” என்று பாசத்தைக் கொட்டினார்.

    உடனே, “அவசரமா அவ்வளவு புரட்ட முடியுமோ, என்னமோ!” என்று கவலைப்பட்டுவிட்டு, “வட்டிக்கு வாங்கினாப்போச்சு!” என்று வயதுக்குரிய நிதானத்துடன் பேசியபோது, தந்தையை ஒரு புதிய மரியாதையுடன் பார்த்தாள் நளினி.

    கல்யாணப் பத்திரிகையைக் கையில் எடுத்தபோது அதுவரை எழுந்த கவலை, குழப்பம் எல்லாம் மறைந்தன.

    “நளினி மணிவண்ணன்’ என்று மந்திரம் ஜபிப்பதுபோல் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்துக்கொண்டாள். அடிநாக்கில் இனித்தது.

    இனி யாருக்கும் பயந்து திரைப்படங்களுக்குப் போக வேண்டியதில்லை. உரிமையுடன் என் கணவரின் கையோடு என் கையைக் கோர்த்துக்கொண்டு எங்கு வேண்டுமானால் போகலாம்.

    நான் அணியவேண்டிய உடைகளை அவர் தேர்ந்தெடுப்பார். நான் அவருக்குப் பிடித்த வகைகளைச் சமைத்துப்போட்டு..!

    அத்தையிடம் கேட்கவேண்டும் அவருக்கு என்னென்ன பிடிக்கும் என்று.

    சிந்தனையில் ஒரு சறுக்கல்.

    `மாமியார்!’ என்று சொல்லி, ஒரு சிறு துரும்பை எடுத்துப்போட்டால்கூடத் துள்ளுமாமே!

    தலையை இருபுறமும் வேகமாக ஆட்டி, அந்த வேண்டாத எண்ணத்தைத் தள்ள முயன்றாள் நளினி.

    `ஆரம்பத்தில் அப்படித்தான் கெடுபிடியாக இருக்கும். ஒரு பேரனைப் பெற்றுக்கொடுத்தால்..!’ கற்பனை போன திசையை உணர்ந்து நளினியின் முகம் சிவந்தது.

    “நளினி! யார் வந்திருக்காங்க, பாரேன்!” தந்தையின் உற்சாகக் குரல் கேட்டது.

    “வாங்க மாப்பிள்ளை! உக்காருங்க!”

    `கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம்கூட இல்லை. அதுக்குள்ளே அவசரத்தைப் பாரு!’ போலிக்கோபமும் வெட்கமுமாக நளினி வெளியே வந்தாள்.

    `எத்தனை வருடப் பழக்கம்! இப்போது என்ன, புதிதாக வெட்கம்?’ தன்னிடம் தோன்றிய மாறுதல் அவளுக்கே வேடிக்கையாக இருந்தது.

    “ஒக்கார நேரமில்லே மாமா”. அவளைக் கவனியாது வேகமாகப் பேசினான் மணிவண்ணன். “அம்மா ஒரு சேதி சொல்லி அனுப்பினாங்க. நீங்க சொன்னதுக்குமேலே பத்து பவுனில ஒரு நெக்லஸ் போடணுமாம். அப்பத்தான் சபையில கௌரவமா இருக்கும்னாங்க”.

    அந்த இடத்தில் ஓர் அசாதாரணமான மௌனம் நிலவியது.

    “என்ன மாமா யோசனை? ஒங்க பொண்ணுக்குத்தானே செய்யச் சொல்றோம்? நானா வளையலும் நெக்லஸும் போட்டுக்கப்போறேன்?”

    அதற்குமேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை நளினியால். “இப்படி அம்மாபிள்ளையா இருக்கிறதுக்கு வளையல் போட்டுக்கிட்டா ஒண்ணும் தப்பில்லே, என்று ஆங்காரத்துடன் கத்தியவள், கையிலிருந்த பத்திரிகையை இரண்டாகக் கிழித்தாள்.

    “நளினி!” பதறினார் தந்தை.

    “சுயபுத்தி இல்லாம, அம்மா பேச்சுக்குத் தாளம் போடறவரோட என்னால வாழமுடியாதுப்பா. இவரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டா, அந்தப் பண்டிகை, இந்தப் பண்டிகைன்னு ஏதாவது சுரண்டிக்கிட்டே இருப்பாங்க,” என்று பொரிந்தவள், “நான் மட்டும் என்னப்பா, விலைபோகாத சாமானா?” என்றபோது குரல் கம்மியது. வெறுப்புடன் அவனைப் பார்த்தாள்.

    கரிய முகம் மேலும் கறுக்க, விறுவிறுவென்று வெளியே நடந்தான் மணிவண்ணன்.

    ஏதோ சொல்லவந்த தந்தையைப் பேசவிடாது, “நல்லவேளை, அவங்க குணம் கல்யாணத்துக்கு முன்னாலேயே தெரிஞ்சுபோச்சு! எனக்காக வேற ஒருத்தர் பிறந்திருக்கமாட்டாரா, என்ன!” என்று அந்த சமாசாரத்துக்கு ஒரு முடிவு கட்டினாள் நளினி.

    `இனிமேல் யார் என்ன புகழ்ந்தாலும் மயங்கிவிடக் கூடாது,’ என்று அவள் முடிவெடுத்தது அப்போதுதான்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 44

    பழகத் தெரிய வேணும் – 44

    நிர்மலா ராகவன்

    நம்மையே வருத்திக்கொள்ளலமா?

    எல்லா வயதிலும் மன அழுத்தம் உண்டாகிறது.

    `தவறு செய்தால் தாய் திட்டுவார்களோ!’ என்ற பயம் சிறுவர்களுக்கு.

    `தாய்’ என்ற வார்த்தைக்குப்பதில் அலுவலக மேலதிகாரி, வீட்டில் கணவன் அல்லது மனைவி என்று போட்டுப் பார்த்தால், அனேகருக்கும் பொருந்தும்.

    எல்லாத் தருணங்களிலும், பிறரை மகிழ்விக்க விரும்புவோருக்கு, `மாட்டேன்,’ `வேண்டாம்,’ என்றெல்லாம் கூறத் தெரியாது. இதனால், தம்மையே வருத்திக்கொள்கிறார்கள்.

    கதை

    திருமணமான முதல் வருடம் ஒரு பெண் அழுதுகொண்டே இருந்தாள். பொறுக்க முடியாது, அவளைத் தாய்வீட்டுக்கே அனுப்பினார் கணவர்.

    எந்நேரமும் அழுதுகொண்டிருந்தவளுக்கு என்ன குறை என்று புரியாத தந்தை உளவியல் சிகிச்சைக்கு அழைத்துப்போனார். அங்கு, தன்னால் தன் பழைய காதலனை மறக்க முடியவில்லை என்று மேலும் அழுதாள்.

    `காதலனைத்தவிர வேறு யாரையும் மணக்கமாட்டேன்,’ என்ற உறுதி அவளுக்கு இருக்கவில்லை. அப்போது நிதானமாக யோசித்து, தனக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுக்காதது அவளுடைய குற்றம்.

    கணவன்மேல் குற்றம் கண்டுபிடித்து, `காதலனை மணந்திருந்தால் இப்படியெல்லாம் ஆகியிருக்காதே!’ என்று சிலர் வருந்துவார்கள். அவனுக்கு மட்டும் குறைகளே இருந்திருக்காதா? காதலனாக இருக்கும்போது வெளிவராத பல குணாதிசயங்கள் கணவனானபிறகுதான் தெரியவரும்.

    சில சமயம், விரும்பி ஏற்ற உறவுகள் முறியலாம். ஆனால், ஆரம்பத்தில் மன ஒற்றுமை இருந்ததால்தானே இணைந்திருப்பார்கள்?

    கனடா நாட்டில் நான் சந்தித்த ஒரு பெண் தான் காதலித்து மணந்த கணவன் தன் அனுமதி இல்லாமல் தன்னுடன் உடலுறவு கொண்டான், அது வன்முறை என்று வழக்கு தொடுத்து, விவாகரத்து பெற்றிருந்தாள்.

    “ஆனால், எங்களுக்குள் சில இனிமையான தருணங்களும் இருந்தன,” என்று அந்த இளம்பெண் கூறியபோது, அந்த நேர்மை எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது.

    கீதோபதேசம்

    ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் அது நடந்தே ஆகும். `நடந்திருக்கக் கூடாதா!’ என்று காலங்கடந்து ஏங்கி என்ன பயன்?

    கதை

    நான் இயற்றிய பாடல்களை உடனுக்குடன் எழுதி வைத்துக்கொள்வேன். அலமாரியில் வைத்திருந்த நாலைந்து நோட்டுப் புத்தகங்களில் சிறு புழுக்கள் இருந்ததைப் பார்த்து அவைகளை வெயிலில் காயவைத்தேன். (புழுக்களை அல்ல).

    செய்த காரியத்தை மறந்துவிட்டு, வெளியில் போய் திரும்பியபோது, மழையில் புத்தகங்கள் நனைந்து, நுனியிலிருந்த எழுத்துக்கள் உருமாறி இருந்தன.

    `நடந்ததை இனி மாற்றவா முடியும்? என்று தோன்ற, நான் புத்தகங்களைக் காயவைத்ததோடு நிம்மதி அடைய வேண்டியதாயிற்று.

    `அதைப்பற்றி நினைக்காதே!’ என்று என்னை நானே கடிந்துகொண்டு, அதன்படி நடந்துகொண்டேன்.

    விடாமுயற்சி இங்கு உதவாது

    எதையாவது தொலைத்துவிட்டு, வெகு நேரம் தேடினாலும் அது கிடைக்காது. தேடும்போது மன உளைச்சலுக்கு ஆளாவதுதான் மிச்சம். பிறகு, நாம் எதிர்பாராத விதத்தில் எங்கிருந்தாவது கிடைத்துவிடும். இது புரியாது, தொலைந்ததை விடாது தேடி, மன உளைச்சலுக்குத் தம்மை ஆளாக்கிக்கொள்கிறவர்கள் பலர்.

    ஒரு கதையையோ, பாடலையோ எழுத ஆரம்பித்தபின், பாதியில் எப்படித் தொடர்வது என்று எனக்குப் புரியாதுபோகும். அதை அப்படியே விட்டுவிட்டு, வேறு காரியங்களில் கவனம் செலுத்துவேன். ஓரிரு மாதங்கள் கழிந்தபின், அது முற்றுப்பெற்றதும் உண்டு. இதனால், `பாதியில் நின்றுவிட்டதே! அப்புறம் என்னவென்று தெரியவில்லையே!’ என்று மனதைக் குழப்பிக்கொள்வது கிடையாது.

    நம் வாழ்வில் தினமுமே நம்மை ஆத்திரப்படவைக்கும், ஏமாறவைக்கும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றை அதிகம் பாராட்டாமல் இருந்தால் மனம் அமைதியாக இருக்கும்.

    வம்படித்துப் பொழுது போக்குகிறவர்

    நம்மை ஆத்திரப்படவைக்கிறாரா ஒருவர்?

    `அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று பெரியமனதுடன் விடவேண்டியதுதான்.

    பெண்கள் தமக்குப் பிடித்ததைப்பற்றியே பேசுவார்கள் என்று கூறுவதுண்டு. பிடிக்கிறதோ, இல்லையோ, கடந்த காலத்திலேயே நிலைத்திருப்பார்கள் சிலர். தம்மை நோகடித்ததைப்பற்றி, பலமுறை, பிற பெண்களிடம் கூறிக்கொள்வார்கள். அப்போது கிடைக்கும் அனுதாபம் அவர்களுக்கு அன்பாகத் தோன்றிவிடும்.

    அதேபோல், பிறர் வாழ்வில் நடந்த அசம்பாவிதங்களைப்பற்றியும் தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள். அப்போதுதானே, `நல்லவேளை, நமக்கு இப்படி நிகழவில்லையே!’ என்று திருப்தி அடையமுடியும்?

    “உன் மகனைப்பற்றிச் சொல்!” என்றாள் என்னுடன் எப்போதோ வேலைபார்த்த ஒருத்தி, சற்று அதிகாரமாக. அவன் மறைந்ததைப்பற்றி அவளுக்குத் தெரிந்திருந்தது. அவளைப் பொறுத்தவரை, பொழுதைப் போக்க அது ஒரு வழி. அவ்வளவுதான்.

    அது புரிந்து, “ஸாரி. நான் அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை,” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு, அப்பால் நகர்ந்தேன், தான் அலட்சியமாக நடத்தப்பட்டுவிட்டோமே என்ற அதிர்ச்சியை அவளுக்கு அளித்துவிட்டு.

    நம்மைப் பாதித்ததைப்பற்றி ஓயாது பேசினாலோ, வருந்தினாலோ அதன் பாதிப்பு குறைந்துவிடப்போவதில்லை. ஒவ்வொரு முறையும் மேலெழுந்து, நம்மை வாட்டும். மாற்ற முடியாததை ஏற்பதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும்?

    நம் துயரத்தைப் புரிந்துகொள்கிற ஓரிருவரிடம் மட்டும் கூறுவதுதான் விவேகம். ஆறுதல் கிடைக்கும்.

    ஏமாற்றத்தின் விளைவுகள் பலவிதம்

    சிறுவயதில் நாம் எதையாவது அடைய விரும்பி, அது கிடைக்காமல் போனால் ஏமாற்றம் விளையும். வளர்ந்தபின்னும் அதே மனநிலை இருந்தால் திண்டாட்டம்தான்.

    மன நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் நீண்டகாலம் தங்கியிருந்த ஓர் இளைஞனைப் பார்த்தேன்.

    தெரிந்த கதைதான். ஒரு பெண் அவனைக் காதலிப்பதாகச் சொல்லி நம்ப வைத்துவிட்டு, பிறகு ஏமாற்றிவிட்டாள்.

    நன்றாகப் படித்துக்கொண்டிருந்தவனுக்கு அதற்குப்பின் எல்லாவற்றிலும் ஆர்வம் போயிற்று.

    இதேபோன்று, ஒரு பெண் ஏமாற்றப்பட்டபோது, அவளுடைய நெருங்கிய தோழிகள் இருவர், `இது உன் தவறல்ல. உன் வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடவில்லை,’ என்று ஆதரவாக இருந்தனர்.

    பிறகு, வேறு ஒருவரைக் கல்யாணம் செய்துகொண்டாள். எப்போதாவது மனம் உறுத்தும். ஆனால், தனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு, அதைச் சமாதானப்படுத்திக்கொள்ள அவளுக்குத் தெரிந்திருந்தது.

    பல வருடங்கள் கழிந்ததும், `அந்த கயவன் செய்த காரியத்துக்காகவா அவ்வளவு வருத்தப்பட்டேன்!’ என்று தோன்றிப்போயிற்று.

    எதிர்மறையான உணர்வுகள் நம்மைத் தாக்கும்போது ஆக்கபூர்வமான, கடினமான எதையாவது செய்தால் மனநிலையில் மாற்றம் உண்டாகும். தோட்டவேலை, விளையாட்டு, நாட்டியம் – இப்படி அவரவர்களுக்குப் பிடித்தது ஏதாவது இருக்காதா?

    பொறுக்க முடியாததைப் பொறுத்தபின்

    வெளிநாட்டுக்கு உத்தியோக நிமித்தம் செல்பவர்களுக்கு, `வாழ்க்கை இத்தனை கடினமானதா!’ என்ற அயர்ச்சி உண்டாகும். புதிய இடம், வசதியின்மை, கலாசார மாறுபாடு, உறவினரைப் பிரிந்து, தனிமையில் வாடவேண்டிய கொடுமை என்று எவ்வளவு இல்லை!

    எப்படியோ சகித்துக்கொண்டு காலத்தை ஓட்டியபின், `நாம் எத்தனை இடர்களைத் தாங்கி, அவைகளைக் கடந்து வந்திருக்கிறோம்!’ என்ற மலைப்புடன், பெருமையும் எழும். பிறருக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு உயர்ந்திருப்பார்கள்.

    உனக்காகவும் நேரம் ஒதுக்கு

    நான் உத்தியோகம் பார்த்த காலத்தில், திங்கட்கிழமையிலிருந்து, சில சமயம், சனிக்கிழமைகூட வேலை செய்ய வேண்டியிருக்கும். எனக்கென்று ஞாயிற்றுக்கிழமையை ஒதுக்கி இருப்பேன் — கூடியவரை, அன்று பகலில் வெளியில் போவதைத் தவிர்த்துவிட்டு.

    இது சுயநலமா? எனக்கு முக்கியமான, பிடித்த காரியங்களில் நேரத்தைச் செலவிட முடிகிறதே!

    பிறருக்குப் பயந்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்துவிட்டு, மகிழ்ச்சியின்றி எதற்கு வாழ்வது?

    Share
  • பழகத் தெரிய வேணும் – 43

    பழகத் தெரிய வேணும் – 43

    நிர்மலா ராகவன்

    குழந்தைகளுக்குச் சுதந்திரம் எதற்கு?

    “அந்தப் பையனைப் பார்! எவ்வளவு சமர்த்தாக தனக்கு வேண்டும் என்கிறதைத் தானே கேட்டு வாங்கிக்கிறான்!”

    உணவுக்கடையொன்றில் அடுத்த மேசையிலிருந்த சிறுவனைக் காட்டி, தன் பேத்தியின் சாமர்த்தியம் இன்மையை மறைமுகமாகச் சுட்டிக் காட்டிக்கொண்டிருந்தாள் அந்த மூதாட்டி. பெண்ணுக்குச் சுமார் எட்டு வயதிருக்கும்.

    நானும் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். தனக்கு என்ன வேண்டும் என்று அவள் சொல்வதற்கே அவளுடன் வந்திருந்த அம்மாவும் பாட்டியும் அனுமதிக்கவில்லை. `இதைத்தான் நீ சாப்பிட வேண்டும்!’ என்று அவர்களே தீர்மானித்து, ஒவ்வொரு பிடியின்போதும், ஏதாவது குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தார்கள்.

    விருப்பப்படி சாப்பிடுவதற்குக்கூட விடாது, அவளுடைய சுதந்திரத்தைப் பறித்துக்கொண்டால், புதிய இடத்தில் எதைச் செய்யத்தான் அவளுக்குத் துணிச்சல் எழும்?

    எப்படி யோசிப்பது என்று கற்றுக்கொடுப்பதைவிட்டு, `இப்படித்தான் யோசிக்கவேண்டும்!’ என்றா கட்டாயப்படுத்துவார்கள்?

    `சிறு வயதிலிருந்தே இவனுக்குச் சுயமாக எதுவும் செய்துகொள்ளத் தெரியாது! நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டோம்!’ என்று சலித்துக்கொள்ளும் பெற்றோர் தம்மீதுதான் தவறு என்று உணர்வதில்லை.

    இப்போக்கைத்தான், `சொல்லிக்கொடுத்த வார்த்தையும் கட்டிக்கொடுத்த சோறும் எத்தனை நாட்களுக்கு வரும்?’ என்று மறைமுகமாகக் கண்டிக்கிறார்கள்.

    `வெளியே போறியா? முகக் கவசம் எடுத்துண்டு போ!’ தற்போது அடிக்கடி கேட்கும் வாசகம். அப்போது எழும் எரிச்சலில், `பெரியவர்கள் என்ன சொல்வது, நான் என்ன கேட்பது?’ என்று ஏறுமாறாக நடக்கத்தான் தோன்றும்.

    சொல்வதைவிட செய்துகாட்டுவதுதான் பயனளிக்கும்.

    `உன்னால் முடியும்!’ என்று நம்பினால், சிறுவர்களும் அதை நம்பிவிடுவார்கள்.

    கதை

    இரண்டு வயதாக இருந்தபோது, என் பேரனை குழந்தைகளுக்கான `ஜிம்’மிற்கு அழைத்துப் போயிருந்தேன். அங்கு நான்கடி உயரத்தில் ஏணியைப்போன்ற ஒரு சாதனம். ஆனால், படிகள் கிடையாது. இரு பக்கமும் கால் விரல்களை மட்டும் சிறு பள்ளத்தில் பதித்துக்கொண்டு ஏறவேண்டும்.

    பயத்தால் குழந்தையின் கண்கள் விரிந்தன.

    “ஏறு. விழமாட்டே. நான் பிடிச்சுக்கறேன்!” என்று தைரியம் அளித்து, அவன் உடலைச்சுற்றி ஒரு கையைப் போட்டு இறுக்கி, இன்னொரு கையால், “இப்போ இங்கே கால் வைக்கணும்,’ என்று காட்டி, ஒவ்வொரு அடியாகப் பழக்கினேன். ஏறி முடித்ததும், பாராட்டு.

    அடுத்த முறை நான் அவனைப் பிடித்துக்கொள்ளப்போக, “எனக்குத் தெரியும்,” என்று என் கையை விலக்கினான்.

    ஓரிரு முறை செய்துகாட்டி, மேற்பார்வை மட்டும் பார்த்தால் சிறுவர்களின் தைரியம் பெருகுகிறது. புதிய காரியங்களில் ஈடுபடும் துணிச்சல் வரும்.

    இது புரிந்துதான் பரம்பரைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தம் குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே சிறு, சிறு வேலைகளைக் கொடுத்துப் பழக்குகிறார்கள்.

    சமையலறையில், வேகவைத்த உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் ஆகியவைகளின் தோலை உரிப்பது என்று ஆரம்பித்து, பெண் குழந்தைகள் சிறுகச் சிறுக சமையல் கற்றுக்கொள்கிறார்கள்.

    எந்த வேலையையும், `இப்படிச் செய்!’ என்று அதிகாரமாகக் கூறுவதைவிட, `நான் இப்படிப் பண்ணுவேன். நீ உன் சௌகரிப்படி செய்!’ என்று விட்டுக்கொடுத்தால், நம்மைப்போலவே செய்வார்கள்! நம்மீது மதிப்பும் பெருகும்.

    குழந்தைகள் எப்போதும் பெரியவர்கள்போல் `நார்மலாக’ இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. (நம்மில் எத்தனை பேர் அப்படி இருக்கிறோம்?).

    தம் விளையாட்டுச் சாமான்களை தரை பூராவும் பரப்புவது அவர்களுக்குப் பிடித்தமான சமாசாரம்.

    `குப்பை போடாதே!’ என்று கண்டிப்பதைவிட்டு, `இந்த ஓரமா வெச்சுக்கோ,’ என்று ஒரு மூலையை ஒழித்துக்கொடுக்கலாம்.

    சில தாய்மார்கள் உடனுக்குடனே அந்த விளையாட்டுச் சாமான்களைத் திரட்டி வைத்துவிடுவார்கள். சொல்வதைக் கேட்காவிட்டால் தண்டனை. தாயை எதிர்க்கவும் முடியாத நிலையில், அவளிடம் அன்பைவிட அச்சம்தான் அதிகமாக எழும்.

    சிறுவயதில் எல்லாவற்றிற்கும் பயந்து வளர்பவன் முரடனாகிறான் — `நான் பெற்ற பயம் இவ்வையகமும் அடைக!’ என்பதுபோல். இல்லையேல், பயந்தாங்கொள்ளியாக ஆகிறான்.

    குழந்தைகளை அஞ்சவோ, அழவோ வைத்தால் ஒருவருடைய பலம் கூடிவிடுவது போன்ற உணர்வு ஏற்படலாம். அதற்காக சுயநலம் கொண்டவர்களாக ஆகலாமா?

    மகிழ்ச்சியாக வளரும் குழந்தைகளே நல்லவர்களாக வளர்கிறார்கள்.

    சுதந்திரத்திற்கு வயதில்லை

    ஒரு குழந்தையைத் புத்திசாலியாகவும் தைரியசாலியாகவும் வளர்ப்பது வளர்க்கிறவர்களுக்கும் உற்சாகமானதாக இருக்கும். அவர்களும் கூடவே வளர்வார்கள்.

    “உனக்கு இப்போ ஹார்லிக்ஸ் வேணுமா, மைலோ வேணுமா?” ஒன்றரை வயதானதும், என் குழந்தைகளைக் கேட்பேன். “இப்போ என்ன குடிக்கப்போறே?”

    நான் சொல்வது புரியாது, குழந்தை விழிக்கும்.

    “இது வெள்ளையா இருக்கு, பாரு! இன்னொண்ணு ப்ரௌன்,” என்று சந்தடி சாக்கில் வண்ண பேதத்தையும் சொல்லிக்கொடுப்பேன்.

    சற்று யோசித்துவிட்டு, “இது. இல்லை, இது!” என்று ஏதாவது ஒன்றைக் காலை வேளையில் குடிக்கத் தேர்ந்தெடுப்பார்கள்.

    ஒரு முறை, வெள்ளையான பானத்தைக் கொண்டுவந்து கொடுத்தாள் என் பன்னிரண்டு வயது மகள்.

    அவளுடைய தம்பி கால்களை உதைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தான். ஏனெனில், அவனுடைய தேர்வு மதிக்கப்படவில்லை.

    அவளைத் திட்டுவதுபோல் பாவனை செய்துவிட்டு, “இதிலேயே கொஞ்சம் மைலோ கலந்து கொண்டுவா!” என்றேன், ரகசியக்குரலில்.

    “சகிக்காது,” என்றாள். ஆனாலும் அப்படியே செய்தாள்.

    குழந்தை மகிழ்ச்சியுடன் குடித்தான். அவனைப் பொறுத்தவரை, காலையில் குடிக்க அவன் தேர்ந்தெடுத்தது கோக்கோ கலராக இருக்கும். அந்த வயதில், ருசியைப்பற்றிய அக்கறையோ, அறிவோ கிடையாது.

    என் மகளுக்கு ஒரு வயதானபோது, இதே வளர்ப்பு முறையை நான் கையாண்டேன்.

    அதைப் பார்த்த என் தாய், “இது என்ன, பெரிய மனுஷி? இதுகிட்ட கேக்கறே?” என்றாள்.

    “சுயமா யோசிக்க கத்துக் குடுக்கறேன்,” என்றேன். அவர்கள் சம்பந்தப்பட்ட சமாசாரங்களுக்கு அவர்கள்தாம் பொறுப்பு என்று மறைமுகமாக உணர்த்துவதாகத்தான் நான் நினைத்தேன்.

    ஆனால் அம்மாவோ, “ஒன் குழந்தைகளுக்குப் பைத்தியம்தான் பிடிக்கப்போறது!” என்றாள்!

    `அன்பு’ என்ற பெயரில் எட்டு வயதானபின்னும் தன் மகளைத் தூக்கி வைத்துக்கொள்ளும் தாய் அறிவதில்லை, அவளுக்குத் தீங்கு இழைக்கிறோம் என்று.

    பதினோரு மாதங்களே ஆன என் மகளின் கையைப் பிடித்து நான் தெருவில் நடந்தபோது, இந்தியாவில் பெண்கள் சிரித்தார்கள், ஏதோ பெரிய வேடிக்கையைக் கண்டுவிட்டதுபோல்.

    “இது ரொம்ப அநியாயம்!” என்று அவர்கள் சொல்லிக்கொண்டு போனது கேட்டது.

    நான் `கொடுமைப்படுத்துவதை’ பொறுக்கமுடியாத ஒருவர், “தூக்கிக்குங்கம்மா,” என்று சிபாரிசு செய்தார்.

    நடக்க ஆரம்பித்ததுமே, குழந்தைகள் ஓடுவார்கள். அடிக்கடி விழுந்தாலும், அடுத்த முறையும் ஓடுவார்கள். பதட்டப்படாது, `இதுதான் அவர்கள் பொழுதுபோக்கு!’ என்று விடவேண்டியதுதான்

    தாய் இரக்கம் காட்டும்போதுதான் சுயபரிதாபம் எழுகிறது. கவனிக்காததுபோல் இருந்தால் கீழே விழுந்தாலும், தாமே எழுந்துவிடுவார்கள்.

    எல்லா வயதிலும் `வீழ்ச்சி’ என்று ஒன்று இருக்கிறது. அப்போது அயர்ந்துபோய், கீழேயே கிடக்க வேண்டாம், மீண்டும் எழ வேண்டும் என்ற பாடத்தைச் சிறுவயதிலேயே புகட்டலாமே!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 42

    பழகத் தெரிய வேணும் – 42

    நிர்மலா ராகவன்

    பெண்களுக்கு அழகு எதற்கு?

    சீனாவில் சாவோயாங் (Chaoyang) என்ற மிக ஏழ்மையான ஒரு கிராமம். அருகிலுள்ள நகரம் இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

    அக்கிராமத்து ஆண்கள் வேலை வாய்ப்பைத் தேடி நகர்ப்புறங்களுக்குச் சென்றுவிட, பெண்களும் குழந்தைகளும் மட்டுமே எஞ்சியிருந்தனர். பல ஆண்கள் வருடத்திற்கு ஒருமுறைதான் திரும்பி வருவார்கள்.

    `நம் அழகைக் கண்டு ரசிக்க ஆண்கள் இல்லாத நிலையில் எதற்கு நல்ல ஆடைகளை அணிந்து, ஒப்பனையும் செய்துகொள்ள வேண்டும்?’ என்று பெண்கள் நினைக்கவில்லை. ஆனாலும், தம் புற அழகில் அசிரத்தையாக இருந்தார்கள்.

    அவர்களுடைய ஓயாத வேலை அப்படி.

    இஞ்சி, தர்பூசணி போன்றவைகளைப் பயிரிடுவதோடு, பன்றிகளையும் வளர்த்துவந்தார்கள். கடும்வெயிலைப் பொருட்படுத்தாது வேலை செய்துவிட்டு வந்தபின், குழந்தைகளையும் வீட்டு வேலைகளையும் கவனித்தாக வேண்டும்.

    இந்நிலையில், தங்களுக்காகவும் நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றாமல் போனதில் அதிசயமில்லை.

    அவ்வப்போது, நகர்ப்புறங்களில் வாழும் நாகரிகமான பெண்களுடன் தம்மை ஒப்பிட்டுக்கொண்டு, சிறுமை உணர்ச்சியுடன் காலந்தள்ளிவந்தார்கள்.

    ஒரே ஒரு இளம்பெண்ணுக்கு மட்டும் இந்நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அதைச் செயலாக்கினாள், பத்து ஆண்டுகளுக்குமுன்.

    சீனாவின் தலைநகருக்குப் போய் ஒப்பனைக்கலையைக் கற்றுக்கொண்டு, அவளுடைய கிராமத்துக்கு அருகே இருந்த நகரில் ஓர் அழகுநிலையத்தைத் திறந்தாள்.

    கடந்த பிப்ரவரி மாதம் கிராமத்திற்கு வந்தபோது, கோவிட் தொற்றுக் கட்டுப்பாட்டால் அங்கேயே தங்க நேர்ந்தது.

    அவளுடைய நாகரிகமான ஆடையணிகளுடன் ஒப்பனையால் நேர்த்தியாக இருந்த முகமும் பிற பெண்களின் கவனத்தைத் தூண்டியது. ஒப்பனையைப்பற்றி அவளை விசாரித்தாலும், அவர்களுக்கு ஏதோ தயக்கம். அதைப் போக்க முடிவெடுத்தாள் அந்த அழகுக்கலை நிபுணர்.

    அவளுடைய பாட்டிதான் அவளுடைய முதல் வாடிக்கையாளர்.

    ஓய்வு, ஒழிச்சல் இல்லாத வேலையால் அங்கிருந்த பிறரைப்போலவே பாட்டியின் கைகளும் காய்த்துப்போயிருந்தன. கால்களும் வெடித்துப்போயிருந்தன. அவற்றை மிருதுவாக்க முயற்சி எடுத்தாள் பேத்தி Zhou. (இப்பெயரைத் தமிழில் எப்படி எழுதுவது? ஜௌ என்றா?)

    பாட்டிக்கு முக ஒப்பனையும் உண்டு.

    அந்த மாற்றத்தைக் கண்ட பிற பெண்களுக்கு ஆச்சரியத்துடன், ஆசையும் எழுந்தது: `நம்மால்கூட அழகாக மாறமுடியும் போலிருக்கிறதே!’

    துணிந்து வந்தார்கள்.

    ஒப்பனை செய்துகொண்டதும், பண்டிகைக்காலங்களுக்கென்று வாங்கி வைத்திருந்த ஆடைகளை அணிந்து தம்மை அழகுபடுத்திக்கொண்டனர்.

    Zhou தன் உபகரணங்களுடன் தயாராக வைத்திருந்த கண்ணாடியைக் காட்டி, அவர்களும் அழகுதான் என்ற நம்பிக்கையை ஊட்டினாள். (பல பெண்களிடம் முகம் பார்க்கும் கண்ணாடிகூட கிடையாது). அவர்களது மாற்றத்தைப் புகைப்படத்தில் எடுத்தாள்.

    ஒரு பெண்மணிக்கு மட்டும் வீட்டில் எவ்வளவு தேடியும், நல்ல உடை எதுவும் கிடைக்கவில்லை.

    `என் குடும்பத்திற்காகவே உழைத்து வந்ததில், என்னைப்பற்றிய சிந்தனையே எனக்கு இல்லாமல் போய்விட்டது,’ என்ற வருத்தம் எழ, `இனிமேல், எனக்காகவும் ஏதாவது செய்துகொள்ளப்போகிறேன். அழகான ஆடைகளை உடுத்தப்போகிறேன்,’ என்று தீர்மானித்தாள்.

    இருபது பெண்களுக்கு மேற்பட்டவர்கள் அப்படி அழகாக மாறினார்கள். ஒப்பனை செய்துகொள்ள ஒவ்வொரு முறையும் ஒன்றரை மணிநேரம் செலவழிந்தாலும், அதனால் அவர்கள் மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது.

    `இப்போது, `நாம் ஒன்றும் நகர்ப்புற மக்களைவிட தாழ்ந்தவர்கள் இல்லை என்ற தன்னம்பிக்கை பிறந்துவிட்டது,’ என்ற ஒரு பெண்மணி, எப்போதோ விழுந்திருந்த பல்லுக்கு மாற்றுப்பல் பொருத்திக்கொண்டாளாம்!

    அலங்காரம் ஆண்களுக்காக அல்ல

    `ஆண் மயில் தோகை விரித்து ஆடுவது பெண் மயிலை மயக்கத்தான்! அதுபோல், பெண்கள் அலங்கரித்துக்கொள்வது ஆண்களுக்காகத்தான்!’ என்பது பெரும்பாலான ஆண்களின் கருத்து.

    `யாருக்காக இப்படி அழகாக அலங்கரித்துக்கொண்டிருக்கிறாய்?’ என்று மனைவியைப் பார்த்து ஒரு கணவன் கேட்டால், அவன் முட்டாள். பெண்களைப் புரிந்துகொள்ளத் தெரியாத, அல்லது விரும்பாத, ஆணாதிக்கவாதி.

    இரண்டே வயதான பெண்குழந்தைகூட ஒரு புதிய ஆடையோ, வளையோ அணிந்துகொண்டவுடன் கண்ணாடியை நோக்கி ஓடும் — தன்னை அழகுபார்த்துக்கொள்ள. யாரையும் கவர வேண்டும் என்பது அக்குழந்தையின் நோக்கமல்ல. தான் அழகாக இருக்கிறோம் என்பதில் ஒரு மகிழ்ச்சி.

    “நான் அழகா இருக்கேன். இல்லே?” என்று பெருமைப்பட்டுக்கொள்ள, தன்னம்பிக்கை கூடும்.

    பொதுவாகவே, பெண்கள் தம் மகிழ்ச்சிக்காகத்தான் அலங்கரித்துக்கொள்கிறார்கள்.

    `கல்யாணம் ஆகிவிட்டது. இனி எதற்கு அழகு?’

    `முப்பது வயதுக்குமேல் அலங்காரம் செய்துகொண்டால், பிறர் என்ன சொல்வார்களோ!’

    `நிமிர்ந்து நடப்பதும், உடலழகைப் பராமரிப்பதும் விமானப் பணிப்பெண்களுக்குத்தான்!’

    ஏதோ பயமே பெண்களை அப்படிப் பேசவைக்கிறது.

    அத்துடன், அழகைப் பராமரிக்க அளவான உணவு, உடற்பயிற்சி என்று உடலை வருத்திக்கொள்ள வேண்டியிருக்கிறதே! (சிறு வயதில் போதிய ஆகாரம் கிடைக்காது அவதிப்பட்டவர்கள் வசதி கிடைத்ததும், அளவுக்கு அதிகமாக உண்பார்கள்).

    தன்னம்பிக்கை வளர உணவைக் கட்டுப்படுத்து

    நான் எந்த மருத்துவரிடம் போனாலும், `எடையைச் சற்றுக் குறைக்கலாம்,’ என்பார், நைச்சியமாக.

    நாற்பத்து ஐந்து வயதுக்குமேல் உடற்பயிற்சி மட்டும் போதவில்லை. ஆகாரத்தையும் பாதியாகக் குறைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஐந்து வருடங்களுக்குப்பின், இன்னும் குறைத்துக்கொண்டேன். இல்லாவிட்டால், எடை ஏறிக்கொண்டே போனதை இடுப்பில் தொங்கிய சதை பறைசாற்றியது.

    கனமான வேலை செய்யாததாலும், உடல் வளர்ச்சி குன்றியதாலும் ஒரே அளவு ஆகாரமே எடையைக் கூட்டியது.

    `குண்டானால் என்ன!’ என்ற அலட்சியம் ஏற்படவில்லை. கால்வலி, சோம்பல், ஓயாத அசதி என்று எழுந்த வேண்டாத உபாதைகளைப் பொறுத்துப்போவதைவிட உணவுக் கட்டுப்பாடு உகந்ததாகப்பட்டது. பழங்களை நிறையச் சாப்பிட்டு, சர்க்கரையையும் வெகுவாகக் குறைத்துக்கொண்டேன்.

    எனக்கோ, இனிப்பு வகைகள் மிகவும் பிடிக்கும். முதலில், `நான் பாவம்!’ என்ற தன்னிரக்கம் ஏற்பட்டது. ஆனால், சுறுசுறுப்பு அதிகரிப்பது போலிருக்க என் `தியாகம்’ பெரிதாகப்படவில்லை.

    சீனக் கிராமத்துப் பெண்கள் தம் நலனைப் பெரிதாகக் கருதாது, கடமை உணர்வையே பெரிதாக மதித்ததால் அவர்களுடைய தன்னம்பிக்கை எப்படிப் பாதிக்கப்பட்டுவிட்டது, பார்த்தீர்களா?

    தனிப்பட்ட காரணங்களுக்காக நான் என் உடலைப் பராமரித்ததால் பிற பெண்களின் பொறாமைக்கு ஆளாக நேரிடும் என்று நினைத்ததில்லை.

    கதை

    மேற்பயிற்சிக்காக என்னைத் தலைநகரிலிருந்து மலேசியாவின் வடபகுதியிலிருந்த ஊருக்கு அனுப்பியிருந்தார்கள். எப்போதும்போல் இல்லாவிட்டால், புது இடத்தில் வெறுமை, சலிப்பு என்று ஏதாவது வரும் என்று தயாராகப் போயிருந்தேன்.

    மற்ற ஊர்களிலிருந்து வந்தவர்கள் என்னைப்பற்றி நிறைய வம்பு பேசினார்கள். உதட்டுச்சாயமும் காலணிகளும்கூட என் புடவை வண்ணத்தில் இருந்தது கண்டு அவர்களுக்கு ஆச்சரியம். மருதோன்றி உபயத்தில், தலைமயிர் சிவப்பு நிறத்தில் மின்னியது!

    நாற்பது வயதுக்கு மேற்பட்ட அந்த மலாய்பெண்கள் மத போதனைக்கான பாடத்தைக் கற்பிக்கிறவர்கள். கை, கால் இரண்டிற்கும் உறை அணிந்திருப்பார்கள். தலைமயிரும் வெளியில் தெரியாதபடி `தூடோங்’கால் (TUDUNG) மறைத்திருப்பார்கள்.

    வெளித்தோற்றத்தில் நான் வெகுவாக மாறுபட்டிருந்ததால்  அவநம்பிக்கை.

    அவர்களில் ஒருத்தி வயிற்றுவலியால் துடிக்க, “என்னால் உதவ முடியும். செய்யட்டுமா?” என்று கேட்டுவிட்டு, அவளுடைய விரல்களைப் பிடித்து அழுத்தி, சிகிச்சை அளித்தேன். சில நிமிடங்களில் குணமாகியது.

    பிறகு, ஒருத்தி ரகசியமாகத் தெரிவித்தாள்: “நீ அழகாக அலங்கரித்துக்கொள்வது ஆண்களைக் கவரத்தான் என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம்!”

    நான் தலையில் அடித்துக்கொள்ளாத குறை.

    அதன்பின், என்னைக் கண்டால் முகமலர்ந்து, கட்டி அணைத்துக்கொள்வார்கள்!

    உதவி செய்ததில் வித்தியாசங்கள் மறைந்துபோய்விட்டன!

    Share
  • விரலழுத்த மருத்துவம் – நிர்மலா ராகவன் நேர்காணல்

    விரலழுத்த மருத்துவம் – நிர்மலா ராகவன் நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    விரலழுத்த மருத்துவம் (Reflexology) என்பது 3,000 ஆண்டுகளுக்கு முன்னர், எகிப்து நாட்டு மருத்துவ முறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது என மருத்துவர் ஒருவரின் கல்லறையில் காணப்படும் சித்திரங்களிலிருந்து அறிய முடிகிறது. வாய்வழியாக அதைப் பரப்பியிருக்க வேண்டும். இந்தியாவிலும் சீனாவிலும் புத்தருடைய பாதங்களில் இம்முறை வைத்தியம் காணப்படுகிறது.

    மருத்துவர்கள் மட்டுமில்லாமல் இதை யார் வேண்டுமானாலும் எளிதாகக் கற்கலாம், நோயாளிகளுக்கு மட்டும்தான் இம்முறை பயன்படும் என்பதில்லை, உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க, பிறருக்கும் உதவி செய்ய முடியும் என்று டாக்டர் வில்லியம் பிட்ஸ்ஜெரால்டு (Dr.William Fitzgerald) என்பவர் 20ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார்.

    கை அல்லது கால் விரல் ஒன்றின் நுனியை இரு விரல்களால் அழுத்தினால், அதனுடன் தொடர்புள்ள வேறொரு பாகத்தில் சில விநாடிகள் சொரணை போய்விடும் – மயக்க மருந்து கொடுத்தாற்போல்.

    இதே உத்தியைப் பயன்படுத்தி, உடலில் எந்தப் பாகத்தில் சிக்கல் இருக்கிறது என்று கண்டறியலாம். அதே போல், அந்தச் சிக்கலை ஒரு குறிப்பிட்ட பாகத்தில் அழுத்துவதன் மூலம் சரி செய்யலாம். எந்தெந்தப் பாகத்தில் விரல்களால் அழுத்தினால் எந்தெந்தச் சிக்கல்களைச் சரி செய்யலாம் என்பதை இந்த அமர்வில் நிர்மலா ராகவன் விளக்குகிறார். அத்துடன் படுப்பதற்கான நிலைகள், சவாசனம் செய்யும் முறை, நீண்ட நேர விமானப் பயணத்தில் தூங்குவதற்கான வழிமுறை ஆகியவற்றையும் எடுத்துரைக்கிறார். விரலழுத்த மருத்துவத்தை மற்றவர்களுக்குச் செய்த பிறகு நமக்கு அது தொற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

    பயனுள்ள இந்த நேர்காணலைப் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நலவாழ்வுக்கு யோக முத்திரைகள் – 2

    நலவாழ்வுக்கு யோக முத்திரைகள் – 2

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    சக்தி வாய்ந்த யோக முத்திரைகளின் இரண்டாம் பாகம் இங்கே. உடலின் ஒவ்வோர் உறுப்புகளுக்கும் உரிய தனித் தனி முத்திரைகளைப் பார்த்து வருகிறோம். இந்த அமர்வில், இதய நலனுக்கான முத்திரைகள், வயிறு, செரிமானம், வயிற்றின் உள் உறுப்புகள் அனைத்திற்குமான முத்திரைகள், மலச்சிக்கலைப் போக்கும் முத்திரை உள்ளிட்ட பலவற்றையும் நிர்மலா ராகவன் விவரித்துள்ளார்.

    பணம் வருவதற்கான முத்திரையைத் தொடர்ந்து, நினைத்தது நடப்பதற்கான முத்திரையையும் போட்டியில் வெல்வதற்கான முத்திரையையும் செய்து காட்டியுள்ளார். பூமியிலிருந்து சக்தியைப் பெறுவதற்கான முத்திரை, கால்கள் வலிமை பெறுவதற்கான முத்திரை, தியான முத்திரை, உடலைத் தளர்த்தும் முத்திரை, மன அமைதி தரும் முத்திரை, மன்னிப்புக் கேட்பதற்கான முத்திரை ஆகியவற்றையும் விளக்கியுள்ளார்.

    நெற்றியில் பொட்டுவைப்பதற்குப் பின்னுள்ள காரணத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். அசைவ உணவு உண்ணும்போது எட்ட முடியாத தியான நிலைகளைச் சைவ உணவு உண்ணும்போது எட்ட முடிந்ததை உதாரணத்துடன் கூறியுள்ளார். மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் தலைவலி, வயிற்றுவலியைப் போக்குவதற்கான மருந்தையும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நேர்காணலைப் பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 41

    பழகத் தெரிய வேணும் – 41

    நிர்மலா ராகவன்

    நேயத்தை உணர்த்தும் இயற்கை

    மனிதருக்கு மனிதர் எத்தனையோ விதங்களில் மாறுபட்டாலும், பிறரை நாடவேண்டியிருக்கும் சூழ்நிலைகள் அமையாமலில்லை.

    அண்மையில் உலகம் முழுவதும் பரவியிருக்கும் தொற்றுநோய் ஒரு நன்மையையும் விளைவித்திருக்கிறது.

    எந்த நாடாவது, `இது என் சொந்தப்பிரச்னை. பிறர் தலையீடு அவசியமில்லை!’ என்று இப்போது முறுக்கிக்கொள்கிறதா? போர், போட்டி, பொறாமை எல்லாமே சற்று ஒதுங்கி உள்ளன.

    `மனிதா, உன் நேயம் எங்கு தொலைந்தது?’ என்று இயற்கை நமக்கு உணர்த்தும் பாடமோ இது?

    எல்லா உயிர்களிடமும் அன்பு வைப்பதே நற்குணமுடைய மனிதர்களுக்கு அடையாளம்.

    எங்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறது ஒரு பூனை. நாளுக்கு நாள் இளைத்துக்கொண்டே வருவதைப் பார்த்தால், அதற்குச் சரியான ஆகாரம் கிடைக்கவில்லை என்று புரிகிறது.

    `முதலில் ஆரோக்கியமாக, குண்டாக இருந்ததே?’ என்று யோசித்தபோது ஒன்று புரிந்தது.

    குட்டியாக இருந்தபோது, அப்பூனையின் விளையாட்டுத்தனத்தில் சிரித்து மகிழ்ந்து வளர்த்தவர்கள் அதற்கு வயதாகிவிட்டதும், துரத்திவிட்டார்கள்!

    வயதான பெற்றோரையே பராமரிக்க மறுக்கும் உலகமல்லவா இது?

    அண்மையில், ஒரு பொது இடத்தில், `என் பர்ஸ் தொலைந்துவிட்டது. வீடு திரும்ப காசு வேண்டும்,’ என்று முதியவர் ஒருவர் பணம் கேட்டார்.

    (இதே காரணம் காட்டி, ஓர் இளம்பெண் காசு கேட்டபடி இருந்தாள் ஒரு பேரங்காடியில்).

    இவர்கள் குண்டர்களிடம் மாட்டிக்கொண்டவர்களாக இருக்கலாம். அப்பாவி மனிதர்களின் பரிதாபத்தைத் தூண்ட அப்படிச் சொல்லிக்கொடுத்து, அனுப்பியிருப்பார்கள்.

    நாம் பணம் கொடுக்காவிட்டால் என்ன ஆகும்?

    `சம்பாதிக்கத் துப்பில்லையே!’ என்று அடிப்பார்களாம், பட்டினி போட்டு.

    அந்த நிலை ஒரு முதியவருக்கு வரக்கூடாது என்று இரங்கி, சிலர் கைநிறையக் கொடுத்தார்கள்.

    மிருக நேயம்

    எங்கள் வீட்டுப் பூனை தொலைக்காட்சியில் ஏதாவது உணர்ச்சிகரமான காட்சி (சண்டை அல்லது துக்கம்) வந்தால், பின்னணி இசையைப் பொறுக்க முடியாது, என்னை அடிக்கும். அன்பைத்தவிர வேறு எதையும் அறியாத பூனை அது.

    நான் எழுதிக்கொண்டிருந்த கதையில், ஒரு பணிப்பெண் தன் பொறுப்பிலிருக்கும் குழந்தையைக் கொன்று புதைத்துவிடுகிறாள் என்ற கட்டம் வந்தது. துடித்தபடி என்னிடம் வந்தது அந்தப் பூனை. தான் அறியாத, தனக்குச் சம்பந்தமே இல்லாத ஓர் உயிரின் அவலமான நிலை அதன் நுண்ணிய அறிவுக்கு எட்டியிருக்கிறது!

    `ஒண்ணுமில்லேம்மா!’ என்று அதைத் தடவி சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.

    மொழி புரிகிறதோ, இல்லையோ, `பரிவு’ `பச்சாதாபம்’ போன்ற குணங்கள் மிருகங்களுக்கும் புரியும். அவற்றை குருடர்களும் பார்க்க முடியும், செவிடர்களுக்கும் அது கேட்கும்.

    “எனக்கு மனித நேயம் பிடிக்கும். மனிதர்களைத்தான் பிடிக்காது!” என்கிறார் ஐன்ஸ்டீன். அவரைச் சொல்லிக் குற்றமில்லை.

    எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மனிதத்தன்மையே இல்லாது நடப்பவர்கள் மலிந்துவிட்ட காலமல்லவா இது!

    வேடதாரிகள்

    தனது சுயரூபத்தை மறைத்து, நாடகம் ஆடுகிறவர்கள் உண்மையில் தைரியசாலிகள் இல்லை.

    `எனக்குக் கடவுள் பக்தி அதிகம்!’ என்று பறைசாற்றுவதுபோல் வெளிப்பகட்டு காட்டுகிறவர் பிறருடைய நன்மைக்காக ஏதாவது செய்கிறாரா என்பது கேள்விக்குறி. (இதனால்தான், `உலகம் ஒரு நாடகமேடை’ என்கிறார்களோ?)

    இத்தகையவரைவிட, `நான் கடவுளை நம்புவதில்லை, எனக்கு மதமெல்லாம் கிடையாது!’ என்று சொல்லிக்கொண்டாலும், சகமனிதர்களுக்காக இரக்கப்பட்டு, பிரதி உபகாரம் எதிர்பாராது தம்மாலான உதவி செய்பவரே மேலானவர்.

    `அசோக சக்கரவர்த்தி சாலைகளில் மரம் நட்டார்’ என்று சிறு வயதில் உருப்போட்டபோது, அச்செய்கையில் என்ன சிறப்பு என்று புரியவில்லை.

    அந்த மரங்கள் அவர் வாழ்நாளிலேயே பெரிதாக வளர்ந்து, அவருக்குப் பயன்படும் என்ற எதிர்பார்ப்பிலா செய்தார்?

    நற்காரியம் செய்யும் துணிச்சல்

    சில சமயம், நல்ல காரியம் செய்யக்கூட யோசிக்க வேண்டியிருக்கிறது, `இதனால் நமக்கு ஏதாவது கெடுதல் விளையுமோ?’ என்று.

    அங்குதான் துணிச்சல் தேவைப்படுகிறது.

    `நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறதே!’ என்று பேசிப் பேசி என்ன பயன்?

    சவால்களிலிருந்து விலகிவிடுவது எளிது. அவைகளை எதிர்கொண்டால்தான் பலன் கிடைக்கும்.

    கதை

    என் மூன்று வயது மகன் சசியை பாலர் பள்ளியில் துன்புறுத்தினாள் ஆசிரியை ஒருத்தி.

    அதன் விளைவாக, ஏதாவது உரத்த குரல் கேட்டாலே, அச்சத்துடன் இரு காது மடல்களையும் பிடித்துக்கொள்வான். ஓயாது பயந்ததால் உடல் மிகவும் இளைக்க, அவனுடைய தந்தை அந்த ஆசிரியையிடம் கெஞ்சலாகக் கூறினார், ஒன்றுமறியாத அப்பாலகனை அப்படித் தண்டிக்க வேண்டாமென்று.

    அதன்பின், அவளும் அப்படித் தண்டிக்கவில்லை. ஆத்திரத்துடன், அன்றே அவனைக் கழிப்பறையில் தள்ளி, வெளியே பூட்டிவிட்டாள்.

    (அந்த நிகழ்ச்சியை நான் விவரித்தபோது, `நல்லவேளை, என் குழந்தைகளுக்கு இந்தமாதிரி நிகழவில்லை!’ என்ற அற்பதிருப்தி அடைந்தாள் என் சக ஆசிரியை ஒருத்தி.

    அவளுக்குத் துன்பம் வரும்போது பிறர் உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது மட்டும் என்ன நியாயம்?

    அவளைப்போன்றவர்கள் எளிதில் மனம் உடைகிறவர்கள். பயந்தாங்கொள்ளிகள்).

    வீடு திரும்பியதும், உணர்ச்சிக்கொந்தளிப்புடன் குழந்தை கூறியது எனக்குப் புரிந்தது.

    விடுமுறை நாட்களிலும், பள்ளிச்சீருடை அணியவேண்டும் என்று அடம் பிடிப்பவன், பள்ளியிலிருந்து திரும்பியதுமே, “யூனிஃபார்ம் ஸ்டுபிட்!” என்று கதறியபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில், “சசி?” என்று மட்டும்தான் கேட்கமுடிந்தது. அப்போதுதான் தெரிவித்தான், “Teacher lock Sashi in the toilet,” என்று.

    பிறகு ஒரு சிறுவன் கூறினான், `சசியை டீச்சர் டாய்லெட்டுக்குள் வைத்துப் பூட்டினாள். நாங்கள் எல்லாரும் அழுதோம்!’ என்று.

    சிறுகுழந்தைகளுக்கு இருக்கும் மன ஒற்றுமை, பச்சாதாபம், வளர்ந்தவர்களுக்கு ஏனோ மறைந்துவிடுகிறது.

    நடந்த அசம்பாவிதத்தைப்பற்றி தினசரிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். எழுதுமுன், பிறர் எச்சரித்தார்கள், அப்பள்ளியை நடத்தும் சீனப் பெண்மணி குண்டர்களைவிட்டு குடும்பத்திற்கு ஏதாவது கெடுதல் விளைவித்துவிடுவாள் என்று. ஆனால், நான் பின்வாங்கவில்லை.

    ஆற்றை நீந்தியே கடக்க ஆரம்பித்தபோது, புறப்பட்ட கரையையே திரும்பித் திரும்பிப் பார்க்கலாமா?

    பிரசுரிக்கிறார்களோ, இல்லையோ, துணிந்து அனுப்பினேன்.

    “எதற்கெல்லாம் அஞ்சக்கூடாது என்ற தெளிவுதான் துணிச்சல்” (கிரேக்க ஞானி பிளேட்டோ).

    பல நாட்கள் கழித்து அது வெளியாகியது. விசாரித்திருப்பார்கள்.

    உடனே அந்தப் பள்ளித் தலைவியை தினசரியின் நிருபர் பேட்டி கண்டார், `அவளுடைய சிரிப்பு மாறவேயில்லை,’ என்ற குறிப்புடன். (நான் எந்தப் பள்ளி என்று குறிப்பிட்டிருக்கவில்லை).

    விரைவிலேயே, பெற்றோரிடமிருந்து நிறையச் சம்பளம் வசூலித்துவந்த அந்த `உயர்ந்த’ பள்ளி மூடப்பட்டது.

    ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி எனக்குக் கிடைத்தது. இல்லாவிட்டால், கேட்பாரின்றி இன்னும் எத்தனை குழந்தைகள் வதைக்கப்பட்டிருப்பார்களோ!

    தம்மைப் பிறர் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் அதைப்பற்றிப் புகார் சொல்லும் குணம் குழந்தைகளுக்குக் கிடையாது. இதுவே வதை செய்பவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது.

    அம்மாதிரி சந்தர்ப்பங்களில்தான் நாம் `காளி அவதாரம்‘ எடுத்து, தமக்கே உதவி செய்துகொள்ள முடியாதவர்களின் பிரச்னைகளில் மூக்கை நுழைக்கவேண்டியிருக்கிறது.

    சசிக்குத்தான் வருத்தம், அம்மாவிடம் ஏன் உண்மையைச் சொன்னோம், தன் வயதையொத்த நண்பர்களுடன் விளையாட முடியவில்லையே என்று.

    Share
  • நலவாழ்வுக்கு யோக முத்திரைகள்

    நலவாழ்வுக்கு யோக முத்திரைகள்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    நம் மரபுவழி யோக முத்திரைகள், பல நோய்களை, வலிகளை, சிக்கல்களைத் தீர்க்க வல்லவை. இடர்கள் வராமலும் காக்க வல்லவை. உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் வலிமை சேர்க்கும் முத்திரைகள் உண்டு. தலைவலி தீர, மாதவிடாய்க் காலத்து வலி நீங்க, மூட்டுவலி அகல, இடுப்பு வலி விலக, இன்னும் கண் நலத்துக்கு, காதுக்கு, பல்லுக்கு, புருவத்துக்கு, தோலுக்கு, தொண்டைக்கு, சக்திக்கு, நினைவாற்றலுக்கு, நுரையீரலுக்கு நலம் புரியும் முத்திரைகள் உண்டு. மேலும் ஒவ்வாமை, மூச்சிரைப்பு, நெஞ்சுக்கட்டு ஆகியவை சரியாகவும் முத்திரைகள் உண்டு.

    பணம் வர வேண்டுமா? அதற்கும் ஒரு முத்திரை உண்டு. தலைமுடி உதிராமல் இருக்கவும் மேற்கொண்டு நன்றாக வளரவும் முத்திரை உண்டு. இவை அனைத்தையும் நமக்குச் செய்து காட்டுகிறார், நிர்மலா ராகவன்.

    மலேசியாவில் வாழும் எழுத்தாளரும் பரத நாட்டியக் கலைஞருமான இவர், இந்த முத்திரைகளைப் பல்லாண்டுகளாகப் பயின்று பலன் பெற்று வருகிறார். இவரிடமிருந்து கற்றுக்கொண்ட பலருக்கும் நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. இந்த அரிய முத்திரைகளை நம் நேயர்களுக்காக நிர்மலா ராகவன் செய்து காட்டுகிறார். இவற்றைப் பார்த்து நீங்களும் பயன் பெறுங்கள். உங்களுக்கு எத்தகைய பயன்கள் கிடைத்தன என்று உங்கள் அனுபவத்தை, பின்னூட்டத்தில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share