நிர்மலா ராகவன்

எனக்கு மட்டுமே சொந்தம்

என் உறவினரின் மூன்று வயது மகளைச் சிறிது காலம் என் பொறுப்பில் விட்டிருந்தார்கள், அவளுடைய தாய் பூரணி கர்ப்பமாக இருந்தபோது.

விவரம் புரியாது, `அம்மா’ என்று என்னை அழைத்துக்கொண்டிருந்தாள் குழந்தை.

வெளியூரிலிருந்த வந்த பூரணி குழந்தையைப் பார்த்தவுடனே செய்த முதல் காரியம்: மிகுந்த பிரயாசையுடன் நான் அழகாக அலங்கரித்திருந்த தலைமயிரைக் கலைத்ததுதான்!

ஏதோ செய்யக் கூடாததைச் செய்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது எனக்கு.

`இது என் குழந்தை. நீ கை வைக்காதே!’ என்று அந்தத் தாய் சூசகமாக உணர்த்தி இருக்கிறாள்!

இன்னொரு கதை

திருமணமாகிப் பல ஆண்டுகள் கழிந்த பின்னர், உரிய சிகிச்சைக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். தன் அருமைக் குழந்தையை அவனுடைய தந்தைகூடத் தூக்க விடமாட்டாள் தாய்.

“இப்போதான் தூக்க முடியும். இல்லியா?” என்று தந்தை மன்றாடுவார்.

“எப்பவும் தூக்கி வெச்சுக்கணும்னு அழுவான்,” என்று காரணம் கற்பித்தாள் தாய்.

தன் பொம்மையை வேறு ஒருவர் தொட்டுவிட்டால் வரும் ஆத்திரத்தை பொம்மையிடம் காட்டும் மூன்று வயதுப் பெண்குழந்தை. பொம்மையை `அசடு!’ என்று திட்டுவதோடு நில்லாமல், தூக்கியும் எறிவாள்.

வளர்ந்த பின்னும் அதே மனப்பான்மையா?

எத்தனை வயதாகியும், குழந்தைக்காகத் தான்தானே நிறைய சிரமப்பட்டிருக்கிறோம், அதனால் அவனுக்குத் தன்னை மட்டுமே பிடிக்கவேண்டும் என்று ஒரு தாய் நினைப்பது சிறுபிள்ளைத்தனம்.

இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் பிற்காலத்தில் தாயை வெறுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அப்படி வளர்ந்த ஒரு பதின்ம வயதுப் பையன், “எத்தனை வயதானாலும் குழந்தைகளை இறுகப் பிடித்துக்கொள்வதைச் சிலர் விடவேண்டும்!” என்று என்னிடம் கசப்புடன் சொன்னான். அம்மாவை நேரடியாகத் தாக்க அவனுக்கு மனமில்லை.

கூட்டுக்குடும்பத்தில் வளரும் குழந்தைகளைப் பலரும் கண்டிப்பார்கள், கேலி செய்வார்கள். ஓயாது புத்தியும் சொல்வார்கள். தாய் எதையும் கண்டுகொள்ள மாட்டாள். பெரியவர்களானதும், அவர்கள் முதலில் நாடுவது தாயைத்தான்.

இம்மாதிரி சொந்தம் கொண்டாடுவதை ஆண்-பெண் உறவிலும் காணலாம்.

கதை

பெரிய பணக்காரனான சுந்தர் அறிவும், அழகும், பெரிய படிப்பும் ஒன்றாக அமைந்த சுதாவைக் காதலித்து, அச்சாரமாக மோதிரமும் பரிசாக அளித்தான்.

சுதாவிற்குப் பிறகுதான் தெரியவந்தது அவனுக்கு ஏற்கெனவே கல்யாணமாகியிருந்த சமாசாரம்.

அந்த மனைவிக்கு சித்த சுவாதீனம் இல்லை, அவன் அவளை விவாகரத்து செய்ய ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறான் என்ற நம்பகமான தகவல் கிடைக்க சமாதானமானாள். அவர்கள் உறவு தொடர்ந்தது.

`வருங்கால மனைவியையாவது நான் என்றும் பிரியாது இருக்கவேண்டும்,’ என்று சுந்தர் நினைத்தான்.

அதன் விளைவாக, ஒவ்வொரு நாளும் காதலி யாருடன் பேசலாம், என்ன அணியலாம் என்று எல்லா விதத்திலும் கட்டுப்படுத்த ஆரம்பித்தபோது அவளால் பொறுக்க முடியவில்லை. எதிர்த்தாள்.

“எனக்கு உன்மேல் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், ஆண்களின் வக்கிரபுத்தி உனக்குத் தெரியாது. நான் உன்னைப் பாதுகாக்க நினைக்கிறேன். என்னைத் தவறாகப் புரிந்துகொள்கிறாயே!” என்று உருக்கமாகப் பேசி, சமாதானம் செய்வான். பரிசுப் பொருட்கள் தொடரும்.

ஆரம்பத்தில் சுதாவும் அவனை நம்பினாள்.

`இது என் வாழ்க்கை. நான் தவறு செய்தால் என்ன? அதிலிருந்து கற்றுவிட்டுப் போகிறேன்!’ என்று நினைக்க ஆரம்பித்தாள்.

மேலும் பல யோசனைகள் எழுந்தன: `வாழ்நாளெல்லாம் சண்டை போட்டுக்கொண்டே இருக்கப் போகிறோமா, இல்லை, விட்டுக் கொடுத்துவிட்டு, எதையோ இழந்தது போன்ற நிராசையுடன் வாழ்க்கையைக் கழிக்கப் போகிறோமா?’

ஒருவர் எவ்வளவுதான் கொட்டிக் கொடுத்துத் தன் அன்பை வெளிக்காட்டினாலும், இழந்த சுதந்திரத்திற்கு அதெல்லாம் ஈடாகாது என்று தோன்றிப்போக, சுதா அவர்கள் உறவை முறித்துக்கொண்டாள்.

சிறு வயதில் பெற்றோரில் ஒருவரையோ, அல்லது இருவரையும் பிரிந்து வாழ நேரிட்ட சிலரும் சுந்தரைப்போல்தான் தமக்குப் பிடித்தவர்களை இறுகப் பற்றிக்கொள்வார்கள்.

`இந்த உறவும் இல்லாது போய்விடுமோ!’ என்று அவர்கள் அஞ்சலாம். ஆனால், ஓயாத கட்டுப்பாட்டால் தம்மிடம் அன்பு கொண்டவர்களை, தம்மையும் அறியாது, விலக்குகிறோம் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

“உறவுகளில் பொறாமை, உணவில் உப்பைப் போன்றது. அளவுக்கு மிஞ்சினால் பொறுக்க முடியாது!” என்கிறார் புத்திசாலியான ஒரு பெண்மணி.

பெண்களையும் இந்தக் குணம் விட்டுவைப்பதில்லை.

கதை

திருமணத்துக்கு முன் பல ஆண்கள் அவளைப் பெண்பார்க்க வந்துவிட்டு, ஏதேதோ காரணம் கூறி நிராகரித்துவிட்டதில் தங்கம்மா பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானாள்.

அவளுக்குக் கல்யாணம் நடந்து முடிந்து, அன்பான கணவர் வாய்த்தபின்னரும், மௌன கீதங்கள் படத்தில் வரும் கதாநாயகி சரிதாவைப் போல், `என்னை விட்டுப் போயிடாதீங்க,’ என்று தினமும் அவரிடம் கதறுவாள்.

`எனக்கு மற்ற பெண்களிடம் நாட்டமே கிடையாது,’ என்று அந்த அப்பாவிக் கணவர் எத்தனை முறை சமாதானப்படுத்தியும் தங்கம்மாவின் மனம் நிம்மதி அடையவில்லை.

தன்னை அவள் சந்தேகிக்கிறாள்! அந்த மனிதருக்கு வெறுத்துப்போய், அவளைத் தவிர்க்க ஆரம்பித்தார்.

கதை

“என் மனைவி நான் ஏதாவது ஒரு சினிமா நடிகையின் அழகையோ, நடிப்பையோ புகழ்ந்து பேசினாலே சண்டை பிடிக்கிறாள்!’ என்று ஒருவர் தன் நண்பனிடம் குறைப்பட்டார். `உன் வீட்டில் எப்படி?”

“என் மனைவி, `இன்று உங்களுக்குப் பிடித்த நடிகையின் படம் தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள், சீக்கிரம் வந்துவிடுங்கள்,’ என்று தொலைபேசியில் அழைத்துக் கூறுவாள்,” என்று பெருமையுடன் கூடிய பதில் வந்தது.

இரண்டாவது நபரின் மனைவி தன்னம்பிக்கை நிறைந்தவள். அவளுக்குத் தெரிந்திருந்தது, அந்த நடிகையின் முன் கணவர் போய் நின்றாலும், அவளுக்கு அவரை அடையாளம் தெரியப் போவதில்லையென்று!

உறவு என்றால், அதனால் இருவரும் பயனடைய வேண்டும். சுதந்திரம் வேண்டுபவர் பிறருடன் ஒத்து வாழமுடியுமா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை.

கணவர் விளையாட்டு வீரராகவும், மனைவி ஒரே இடத்தில் அமர்ந்து ஏதாவதொரு பொழுதுபோக்கில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தாலும்தான் என்ன?

குடும்பத்தில் பேசுவதற்கு வேறு ஏதாவது சமாசாரங்கள் இருக்காதா?

தம்பதியர் இருவருக்கும் ஒரே மாதிரி குறைபாடுகள் அமைவது நல்லதல்ல.

ஒருவர் பயந்தவர் என்றால், அவருக்கு வாய்ப்பவர் தைரியசாலியாக இருந்தால் இருவருமே பயனடைவார்கள். ஒருவருக்கு உடலில் பலம், இன்னொருவருக்கு மனோபலம். வேறு ஒருவருக்கு.. போதும்!

வித்தியாசமான தன்மைகள் இருந்தால், எதிரெதிர் துருவங்களைப் போல் ஒருவரை மற்றவர் நாடுவார். உறவு பலப்படும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *