படக்கவிதைப் போட்டி 288இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி
நடன நங்கையர் நயத்தொடு பிடிக்கும் அபிநயத்தை அழகாகப் படம்பிடித்திருக்கிறார் திருமிகு. ராமலக்ஷ்மி. இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருக்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளருக்கு என் நன்றி!
ஆடற்கலையின் நுட்பங்களையும் அபிநய வகைகளையும் சிலப்பதிகாரத்தில் மாதவி நடன அரங்கேற்றத்தினைக் காட்சிப்படுத்தும் ‘அரங்கேற்று காதை’யில் விரிவாகவும் விளக்கமாகவும் உரைக்கின்றார் இளங்கோவடிகள்!
”காண்போரைத் தான்மயக்கிக் கவனத்தைக் கவர்கின்ற
மாண்பமை ஆடலுக்கு ஈடுண்டோ இவ்வுலகில்?” என்றே சொல்லத் தோன்றுகின்றது இந்நளின நங்கையரின் நடனத்தை நோக்குகையில்.
கவிசொல்லக் காத்திருக்கும் கவிஞர் பெருமக்களைக் கனிவோடு வரவேற்போம் இனி!
*****
”அணங்குகள் தம் முகமதில் காட்டும் நவரசங்கள் நம் அகமது குளிர வைத்திடும்; சங்கரன் தொடங்கிய இக்கலையை வளர்த்திடுவோம் வகையாக!” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
கலை வளர்ப்போம்…
முகமதில் காட்டும் நவரசங்கள்
முத்திரை பதிக்கும் உடலசைவு,
அகமது குளிர நடனமிடும்
அணங்குகள் ஆட்டம் அழகேதான்,
சகலரும் ரசிக்கும் ஆட்டமிது
சங்கரன் தொடங்கி வைத்ததுதான்,
வகைவகை யாக வந்தாலும்
வளர்ந்திட வைப்போம் இதுதனியே…!
*****
”கலைகளின் தேவியென்று பெண்ணைக் கொண்டாடி வணங்கவும் வேண்டாம்; சதிராடும் தாசியென்று சாக்கடையில் எறியவும் வேண்டாம்!” என்று சினந்துரைக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.
கொத்தடிமைக் கடவுள்கள்!
பொதுவெளியில்….
பெண் சக்தி தெய்வமென்று
கற்சிலைக் கடவுளாக்கிப்
பூசனைகள் பல செய்து
கருவறையில் தொழுதிருப்போம்!
வீட்டினிலோ….
படுக்கையைறைத் தாசியாக்கிப்
பணிவிடைகள் செய்ய வைத்துக்
காரிகையைக் கொத்தடிமையாக்கி
அடுக்களையில் அடைத்து வைப்போம்!
கலைகளின் தேவியென்று
கொண்டாடி வணங்கவும் வேண்டாம்!
சதிராடும் தாசியென்று
சாக்கடையில் எறியவும் வேண்டாம்!
அன்னையடி நீயென்று
அன்புச் சங்கிலி போட்டு
அடிமையாக்கி வைத்திருக்கும்
அவலநிலை இனி வேண்டாம்!
சக மனிதப் பெண்ணுக்கு
சம உரிமை கிட்டி – அவள்
சாதனைகள் சபையேறும்
சமச்சீர்மை நிலை போதும்!!!
*****
சிந்தனையைத் தூண்டும் சிறப்பான கவிதைகளைத் தந்தமைக்குக் கவிஞர்களைப் பாராட்டுகின்றேன்!
அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…
சந்திர ஒளியையொத்த முகம்
கண்களில் கனலை வீசுவது ஏன்?
குளிர்காற்றைப் போல் வருடும் விரலதுவோ
சினத்தை வாரி இறைப்பது ஏன்?
செம்மொழி சிந்தும் மலரிதழ்கள்
நகைமொழி மறந்த நாட்டியம் ஏன்?
உடைதனின் நிறத்தைக் கொண்டுள்ள
குருதியின் குவலயமாய் அதுதான் ஏன்?
கால்களின் சலங்கை ஜதி போடத்
தாவிப் படையெடுக்கப் பறப்பது ஏன்?
அறிந்தேன் புரிந்தேன் தெரிந்தேன்
ஒன்றிவிட்டீர் நாட்டியக் கருத்தோடு
ஒன்றிவிட்டீர்!
பார் புகழ் பாரதம்
பாரதம் புகழ் பரதம்
வாழ்க நம் கலைகள்
வளர்க மங்கா புகழ்!!
”கலையோடு ஒன்றி இக்கலையரசிகள் காட்டும் முகபாவத்தில்தான் எத்தனை வகைகள்! பரதக்கலை பாரதத்தின் புகழைப் பாரெங்கும் பரப்பும் கலையன்றோ? என்று கவின்கலையாம் பரதத்தை நயந்துரைக்கும் இக்கவிதையைத் தீட்டியிருக்கும் திருமிகு. சுதா மாதவனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.