பழகத் தெரிய வேணும் – 41

நிர்மலா ராகவன்

நேயத்தை உணர்த்தும் இயற்கை

மனிதருக்கு மனிதர் எத்தனையோ விதங்களில் மாறுபட்டாலும், பிறரை நாடவேண்டியிருக்கும் சூழ்நிலைகள் அமையாமலில்லை.

அண்மையில் உலகம் முழுவதும் பரவியிருக்கும் தொற்றுநோய் ஒரு நன்மையையும் விளைவித்திருக்கிறது.

எந்த நாடாவது, `இது என் சொந்தப்பிரச்னை. பிறர் தலையீடு அவசியமில்லை!’ என்று இப்போது முறுக்கிக்கொள்கிறதா? போர், போட்டி, பொறாமை எல்லாமே சற்று ஒதுங்கி உள்ளன.

`மனிதா, உன் நேயம் எங்கு தொலைந்தது?’ என்று இயற்கை நமக்கு உணர்த்தும் பாடமோ இது?

எல்லா உயிர்களிடமும் அன்பு வைப்பதே நற்குணமுடைய மனிதர்களுக்கு அடையாளம்.

எங்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறது ஒரு பூனை. நாளுக்கு நாள் இளைத்துக்கொண்டே வருவதைப் பார்த்தால், அதற்குச் சரியான ஆகாரம் கிடைக்கவில்லை என்று புரிகிறது.

`முதலில் ஆரோக்கியமாக, குண்டாக இருந்ததே?’ என்று யோசித்தபோது ஒன்று புரிந்தது.

குட்டியாக இருந்தபோது, அப்பூனையின் விளையாட்டுத்தனத்தில் சிரித்து மகிழ்ந்து வளர்த்தவர்கள் அதற்கு வயதாகிவிட்டதும், துரத்திவிட்டார்கள்!

வயதான பெற்றோரையே பராமரிக்க மறுக்கும் உலகமல்லவா இது?

அண்மையில், ஒரு பொது இடத்தில், `என் பர்ஸ் தொலைந்துவிட்டது. வீடு திரும்ப காசு வேண்டும்,’ என்று முதியவர் ஒருவர் பணம் கேட்டார்.

(இதே காரணம் காட்டி, ஓர் இளம்பெண் காசு கேட்டபடி இருந்தாள் ஒரு பேரங்காடியில்).

இவர்கள் குண்டர்களிடம் மாட்டிக்கொண்டவர்களாக இருக்கலாம். அப்பாவி மனிதர்களின் பரிதாபத்தைத் தூண்ட அப்படிச் சொல்லிக்கொடுத்து, அனுப்பியிருப்பார்கள்.

நாம் பணம் கொடுக்காவிட்டால் என்ன ஆகும்?

`சம்பாதிக்கத் துப்பில்லையே!’ என்று அடிப்பார்களாம், பட்டினி போட்டு.

அந்த நிலை ஒரு முதியவருக்கு வரக்கூடாது என்று இரங்கி, சிலர் கைநிறையக் கொடுத்தார்கள்.

மிருக நேயம்

எங்கள் வீட்டுப் பூனை தொலைக்காட்சியில் ஏதாவது உணர்ச்சிகரமான காட்சி (சண்டை அல்லது துக்கம்) வந்தால், பின்னணி இசையைப் பொறுக்க முடியாது, என்னை அடிக்கும். அன்பைத்தவிர வேறு எதையும் அறியாத பூனை அது.

நான் எழுதிக்கொண்டிருந்த கதையில், ஒரு பணிப்பெண் தன் பொறுப்பிலிருக்கும் குழந்தையைக் கொன்று புதைத்துவிடுகிறாள் என்ற கட்டம் வந்தது. துடித்தபடி என்னிடம் வந்தது அந்தப் பூனை. தான் அறியாத, தனக்குச் சம்பந்தமே இல்லாத ஓர் உயிரின் அவலமான நிலை அதன் நுண்ணிய அறிவுக்கு எட்டியிருக்கிறது!

`ஒண்ணுமில்லேம்மா!’ என்று அதைத் தடவி சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.

மொழி புரிகிறதோ, இல்லையோ, `பரிவு’ `பச்சாதாபம்’ போன்ற குணங்கள் மிருகங்களுக்கும் புரியும். அவற்றை குருடர்களும் பார்க்க முடியும், செவிடர்களுக்கும் அது கேட்கும்.

“எனக்கு மனித நேயம் பிடிக்கும். மனிதர்களைத்தான் பிடிக்காது!” என்கிறார் ஐன்ஸ்டீன். அவரைச் சொல்லிக் குற்றமில்லை.

எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மனிதத்தன்மையே இல்லாது நடப்பவர்கள் மலிந்துவிட்ட காலமல்லவா இது!

வேடதாரிகள்

தனது சுயரூபத்தை மறைத்து, நாடகம் ஆடுகிறவர்கள் உண்மையில் தைரியசாலிகள் இல்லை.

`எனக்குக் கடவுள் பக்தி அதிகம்!’ என்று பறைசாற்றுவதுபோல் வெளிப்பகட்டு காட்டுகிறவர் பிறருடைய நன்மைக்காக ஏதாவது செய்கிறாரா என்பது கேள்விக்குறி. (இதனால்தான், `உலகம் ஒரு நாடகமேடை’ என்கிறார்களோ?)

இத்தகையவரைவிட, `நான் கடவுளை நம்புவதில்லை, எனக்கு மதமெல்லாம் கிடையாது!’ என்று சொல்லிக்கொண்டாலும், சகமனிதர்களுக்காக இரக்கப்பட்டு, பிரதி உபகாரம் எதிர்பாராது தம்மாலான உதவி செய்பவரே மேலானவர்.

`அசோக சக்கரவர்த்தி சாலைகளில் மரம் நட்டார்’ என்று சிறு வயதில் உருப்போட்டபோது, அச்செய்கையில் என்ன சிறப்பு என்று புரியவில்லை.

அந்த மரங்கள் அவர் வாழ்நாளிலேயே பெரிதாக வளர்ந்து, அவருக்குப் பயன்படும் என்ற எதிர்பார்ப்பிலா செய்தார்?

நற்காரியம் செய்யும் துணிச்சல்

சில சமயம், நல்ல காரியம் செய்யக்கூட யோசிக்க வேண்டியிருக்கிறது, `இதனால் நமக்கு ஏதாவது கெடுதல் விளையுமோ?’ என்று.

அங்குதான் துணிச்சல் தேவைப்படுகிறது.

`நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறதே!’ என்று பேசிப் பேசி என்ன பயன்?

சவால்களிலிருந்து விலகிவிடுவது எளிது. அவைகளை எதிர்கொண்டால்தான் பலன் கிடைக்கும்.

கதை

என் மூன்று வயது மகன் சசியை பாலர் பள்ளியில் துன்புறுத்தினாள் ஆசிரியை ஒருத்தி.

அதன் விளைவாக, ஏதாவது உரத்த குரல் கேட்டாலே, அச்சத்துடன் இரு காது மடல்களையும் பிடித்துக்கொள்வான். ஓயாது பயந்ததால் உடல் மிகவும் இளைக்க, அவனுடைய தந்தை அந்த ஆசிரியையிடம் கெஞ்சலாகக் கூறினார், ஒன்றுமறியாத அப்பாலகனை அப்படித் தண்டிக்க வேண்டாமென்று.

அதன்பின், அவளும் அப்படித் தண்டிக்கவில்லை. ஆத்திரத்துடன், அன்றே அவனைக் கழிப்பறையில் தள்ளி, வெளியே பூட்டிவிட்டாள்.

(அந்த நிகழ்ச்சியை நான் விவரித்தபோது, `நல்லவேளை, என் குழந்தைகளுக்கு இந்தமாதிரி நிகழவில்லை!’ என்ற அற்பதிருப்தி அடைந்தாள் என் சக ஆசிரியை ஒருத்தி.

அவளுக்குத் துன்பம் வரும்போது பிறர் உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது மட்டும் என்ன நியாயம்?

அவளைப்போன்றவர்கள் எளிதில் மனம் உடைகிறவர்கள். பயந்தாங்கொள்ளிகள்).

வீடு திரும்பியதும், உணர்ச்சிக்கொந்தளிப்புடன் குழந்தை கூறியது எனக்குப் புரிந்தது.

விடுமுறை நாட்களிலும், பள்ளிச்சீருடை அணியவேண்டும் என்று அடம் பிடிப்பவன், பள்ளியிலிருந்து திரும்பியதுமே, “யூனிஃபார்ம் ஸ்டுபிட்!” என்று கதறியபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில், “சசி?” என்று மட்டும்தான் கேட்கமுடிந்தது. அப்போதுதான் தெரிவித்தான், “Teacher lock Sashi in the toilet,” என்று.

பிறகு ஒரு சிறுவன் கூறினான், `சசியை டீச்சர் டாய்லெட்டுக்குள் வைத்துப் பூட்டினாள். நாங்கள் எல்லாரும் அழுதோம்!’ என்று.

சிறுகுழந்தைகளுக்கு இருக்கும் மன ஒற்றுமை, பச்சாதாபம், வளர்ந்தவர்களுக்கு ஏனோ மறைந்துவிடுகிறது.

நடந்த அசம்பாவிதத்தைப்பற்றி தினசரிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். எழுதுமுன், பிறர் எச்சரித்தார்கள், அப்பள்ளியை நடத்தும் சீனப் பெண்மணி குண்டர்களைவிட்டு குடும்பத்திற்கு ஏதாவது கெடுதல் விளைவித்துவிடுவாள் என்று. ஆனால், நான் பின்வாங்கவில்லை.

ஆற்றை நீந்தியே கடக்க ஆரம்பித்தபோது, புறப்பட்ட கரையையே திரும்பித் திரும்பிப் பார்க்கலாமா?

பிரசுரிக்கிறார்களோ, இல்லையோ, துணிந்து அனுப்பினேன்.

“எதற்கெல்லாம் அஞ்சக்கூடாது என்ற தெளிவுதான் துணிச்சல்” (கிரேக்க ஞானி பிளேட்டோ).

பல நாட்கள் கழித்து அது வெளியாகியது. விசாரித்திருப்பார்கள்.

உடனே அந்தப் பள்ளித் தலைவியை தினசரியின் நிருபர் பேட்டி கண்டார், `அவளுடைய சிரிப்பு மாறவேயில்லை,’ என்ற குறிப்புடன். (நான் எந்தப் பள்ளி என்று குறிப்பிட்டிருக்கவில்லை).

விரைவிலேயே, பெற்றோரிடமிருந்து நிறையச் சம்பளம் வசூலித்துவந்த அந்த `உயர்ந்த’ பள்ளி மூடப்பட்டது.

ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி எனக்குக் கிடைத்தது. இல்லாவிட்டால், கேட்பாரின்றி இன்னும் எத்தனை குழந்தைகள் வதைக்கப்பட்டிருப்பார்களோ!

தம்மைப் பிறர் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் அதைப்பற்றிப் புகார் சொல்லும் குணம் குழந்தைகளுக்குக் கிடையாது. இதுவே வதை செய்பவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது.

அம்மாதிரி சந்தர்ப்பங்களில்தான் நாம் `காளி அவதாரம்‘ எடுத்து, தமக்கே உதவி செய்துகொள்ள முடியாதவர்களின் பிரச்னைகளில் மூக்கை நுழைக்கவேண்டியிருக்கிறது.

சசிக்குத்தான் வருத்தம், அம்மாவிடம் ஏன் உண்மையைச் சொன்னோம், தன் வயதையொத்த நண்பர்களுடன் விளையாட முடியவில்லையே என்று.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.