இலக்கியம்கட்டுரைகள்

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 18

-மேகலா இராமமூர்த்தி

தங்கையின் அவலநிலை கண்ட தமையன் இராவணன், சினத்தால் உதடுகளை அதுக்கினான்; பிலமொத்த அவன் பத்து வாய்களிலிருந்தும் வெம்புகை வெளிப்பட, மீசைகள் பொசுங்கிவிடும்படிப் பெருமூச்சுக் கிளம்ப, “யாருடைய செயல் இது?” என்றான் இடிமுழக்கக் குரலில்.

மடித்த பில வாய்கள்தொறும்
     வந்து புகை முந்த
துடித்த தொடர் மீசைகள்
     சுறுக்கொள உயிர்ப்ப
கடித்த கதிர் வாள் எயிறு
     மின் கஞல மேகத்து
இடித்த உரும் ஒத்து உரறி
    யாவர் செயல் என்றான்.  (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3212)

”மானிடர் இருவரின் செயல் இது” எனச் சூர்ப்பனகை புகல, அதைக்கேட்டு அலட்சியமாக நகைத்தான் இராவணன்.

”ஆம் அண்ணா! நான் சொல்வது மெய்தான்! அரக்கர்களைத் துச்சமென மதிப்பவர்கள் அவர்கள்; தயரதனின் மைந்தர்கள்; இராமன், இலக்குவன் என்பன அவர்தம் பெயர்கள்” என்றாள் சூர்ப்பனகை.

அதைக் கேட்ட இராவணன், ”இந்த அவமானத்தை எனக்கு ஏற்படுத்தியிருக்கும் மானிடர்கள் இன்னும் உளர்; அவர்களின் உயிரும் அழிக்கப்படாமல் உளது; என் கையில் வாளும் உளது; நஞ்சினையுண்ட சிவனார் வழங்கிய வாணாளும் உளது; என் தோளும் உள; நானும் உளேன்!” என்றான் விரக்தியுடன்.

”தன் வாளும், தோளும் இருந்தும் மானிடரிடம் அரக்கர்குடித் தோற்கும்படி ஆனதே!” எனும் இராவணனின் கழிவிரக்கம் இப்பாடலில் கம்பரால் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மூளும் உளது ஆய பழி
     என்வயின் முடித்தோர்
ஆளும் உளதாம் அவரது ஆர்
    உயிரும் உண்டாம்
வாளும் உளது ஓத விடம்
     உண்டவன் வழங்கும்
நாளும் உள தோளும் உள
     நானும் உளென் அன்றோ. (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3223)

சூர்ப்பனகையை நோக்கிய இராவணன், ”கரன் முதலிய நம் நிருதர் குழாம் இம்மானுடர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லையா?” என்றான் சினத்துடன்.

”அதை ஏன் கேட்கிறீர்கள் அண்ணா? எனக்கு நேர்ந்த அவலத்தை அறிந்ததுமே கரனும் தூடணனும் விரைந்தெழுந்து, என்பொருட்டு இராமனொடு போர்புரியவே செய்தனர். ஆனால் என்ன பயன்? மூன்று நாழிகைப் போழ்தில் (1 நாழிகை = 24 நிமிடங்கள்; 3 நாழிகை = 72 நிமிடங்கள்) அவர்கள் அனைவரையும் எமனுலகுக்கு அனுப்பிவிட்டான் அந்தத் தாமரைக்கண்ணன் இராமன் என்றாள் சூர்ப்பனகை.

தன் சோதரர்கள் மாண்டுவிட்ட துயரச்செய்தியைச் சொல்லும்போதுகூட இராமனைக் கமலக்கண்ணன் என்று சூர்ப்பனகை வருணிப்பது இராமனின் அழகில் அவள் கொண்டுவிட்ட அளப்பரிய ஈடுபாட்டைக் குறிப்பால் உணர்த்துகின்றது.

சொல் என்று என் வாயில் கேட்டார்
     தொடர்ந்து எழு சேனையோடும்
கல் என்ற ஒலியில் சென்றார்
     கரன் முதல் காளை வீரர்
எல் ஒன்று கமலச் செங் கண் இராமன்
     என்று இசைத்த ஏந்தல்
வில் ஒன்றில் கடிகை மூன்றில்
     ஏறினர் விண்ணில் என்றாள். (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3227)

இச்செய்தி இராவணனின் சீற்றத்தை மேலும் ஊற்றமுறச்செய்தது. எனினும், தங்கையின் அங்கங்களை அம்மானிடர் அரியும் அளவுக்கு அவள்செய்த குற்றமென்ன என்று அறியும் நோக்கில், ”அது போகட்டும்! உன் அங்கங்களை அம்மானிடர் பங்கம் செய்யும் அளவுக்கு நீ செய்த குற்றமென்ன?” என்றான் அக் கொற்றவன்.

தன்பேரில் அண்ணன் பழிசொல்லா வண்ணமும், அண்ணனுக்கு நன்மை செய்யப்போய்த் தான் அவலமுற்றதுபோலவும் சாமர்த்தியமாக அந்நிகழ்வை விளக்கத் தொடங்கினாள் சூர்ப்பனகை.

”அண்ணா! அவர்களோடு பெண்ணொருத்தி இருக்கின்றாள். அவள் பெயர் சீதை! அவளை நான் எப்படி வருணிப்பேன்?! திருமகள் இருக்கிறாளே…அவள் இவளுக்குச் சேடியாக இருக்கக்கூடத் தகுதியற்றவள். மேகமொத்த கூந்தலும் பவளம்போன்ற விரல்களும் அமுதத்தில் தோய்த்தெடுத்த மொழிகளும் கடலன்ன அகன்ற விழிகளும்…அடடா! அவள் அழகின் அரசி!

காமனை ஈசன் தன் நெற்றிக்கண்ணைக் காட்டி எரித்துவிட்டதாகச் சொல்லுகிறார்களே…அது பொய்! இந்த வாச நறுங்குழலாளின் அழகைக்கண்டு ஆசைகொண்டு காமநோய் பிடித்தே அவன் தேய்ந்து உருவழிந்திருக்க வேண்டும்” என்றாள் சொலல்வல்லளான சூர்ப்பனகை.  

காமன் உருவமற்ற அநங்கனாக ஆனதற்குச் சூர்ப்பனகை படைத்துமொழியும் காரணமும் இரசிக்கும்படியாகத்தான் இருக்கின்றது!

ஈசனார் கண்ணின் வெந்தான்
     என்னும் ஈது இழுதைச் சொல் இவ்
வாசம் நாறு ஓதியாளைக் கண்டனன்
     வவ்வல் ஆற்றான்
பேசல் ஆம் தகைமைத்து அல்லாப் பெரும்
     பிணி பிணிப்ப நீண்ட
ஆசையால் அழிந்து தேய்ந்தான்
     அனங்கன் அவ் உருவம் அம்மா. (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3234)

மேலும் தொடர்ந்தவள்…”அண்ணா! அவள் தோளழகைச் சொல்லுவேனா? வாளைமீன் போன்ற அவள் கண்ணழகைச் சொல்லுவேனா? எதைச் சொல்லுவேன்? நீதான் அவளை நாளையே காணப்போகிறாயே…அப்போது நேரில் பார்த்துத் தெரிந்துகொள்!” என்றுரைத்து, இராவணன் உள்ளத்தில் சீதைபால் காமத்தையும் அவளை உடனே அவன் காணச்செல்ல வேண்டும் எனும் தன் எதிர்பார்ப்பையும் புலப்படுத்துகின்றாள்.

பார்ப்பதோடு அல்லாமல் இராவணன் அவளைக் கவர்ந்துவந்து தனக்குரியவளாக ஆக்கிக்கொள்ளவேண்டும் எனும் உட்கிடையும் சூர்ப்பனகைக்கு இருந்தது; அதனால்தான், ”சிவபெருமான் தன்தேவியை இடப்பாகத்தில் வைத்தான்; திருமால் பொன்மகளாகிய திருவைத் தன் மார்பில் வைத்தான்; பிரம்மதேவன் தன்தேவியை நாவில் குடியேற்றினான். விண்ணளவு உயர்ந்த தோள்களை உடைய வீரனே! மின்னலை வென்ற நுண்ணிடையாளான சீதையை நீ அடைந்தால் அவளை எங்கே இருத்தி வாழ்வாய்?” என்று கேட்கிறாள்.

பாகத்தில் ஒருவன் வைத்தான்
     பங்கயத்து இருந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான்
     அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற
     நுண் இடையினாளை
மாகத் தோள் வீர பெற்றால்
     எங்ஙனம் வைத்து வாழ்தி (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3239)

  எங்ஙனம் வைத்து வாழ்தி என்பது, ”எவ்விடத்தில் நீ அவளை வைத்து வாழப்போகிறாய்?” என்ற பொருளேயல்லாமல், ”நீ எங்கே அவளோடு வாழப்போகிறாய்?” என்ற எதிர்மறையான மற்றொரு குறிப்புப்பொருளையும் உணர்த்தும்வகையில் கம்பநாடன் இத்தொடரை அமைத்திருப்பது நயமுடைத்து!

இந்தப் பாடலைத்தான்,

“பரமசிவன் சக்தியை
ஓர் பாதியில் வைத்தான்; அந்தப்
பரமகுரு ரெண்டு பக்கம்
தேவியை வைத்தான்
பாற்கடலில் மாதவனோ
பக்கத்தில் வைத்தான்
ராஜாபத்மநாபன் ராணியைத் தன்
நெஞ்சினில் வைத்தான்!” என்று ’வியட்நாம் வீடு’ படப் பாடலாக, எளிய நடையில் மாற்றியிருப்பார் கண்ணதாசன்.

இவ்வாறு 14 பாடல்களில் சீதையின் அழகைக் கேசாதிபாதம் வருணித்து இராவணனின் மனத்தில் காமத்தீயை மூட்டுகின்றாள் சூர்ப்பனகை.

சீதையைப் பற்றிச் சூர்ப்பனகை சொல்லக்கேட்ட இராவணன், தங்கைக்கு நேர்ந்த அவலத்தை மறந்தான்; கர தூடணர்களின் அழிவை மறந்தான்; அரக்க குலத்துக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை மறந்தான்; ஆனால், மங்கை சீதையை மட்டும் மறக்கவியலாது அவள் நினைவிலேயே மூழ்கிப்போனான்!

”மெல்லிடை கொண்ட சீதை என்னும் பெயரும், என் மனமும் ஒன்றோடொன்று பொருந்திப் போய்விட்டால் சீதை என்ற ஒன்றின் பெயரை நீக்கி மற்றொன்றை எண்ணுதற்கு எனக்கு இன்னொரு மனமும் இருக்கின்றதா? இல்லை! சீதையை மறப்பதற்கு வழியேதும் உளதா? அதுவும் இல்லையே! ஒருவர் எவ்வளவுதான் கல்வியில் வல்லவராயினும், நன்மை தீமை பற்றி அறியும் ஞானம் அவர்க்கு இல்லையெனில் (பொருந்தா) காமத்தை வெல்லுதல் இயலுமோ? இயலாதே!” என்று தனக்குத்தானே சிந்தனையில் மூழ்கினான் இராவணன்.

சிற்றிடைச் சீதை என்னும்
     நாமமும் சிந்தைதானும்
உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று
     ஒழித்து ஒன்றை உன்ன
மற்றொரு மனமும் உண்டோ மறக்கல்
     ஆம் வழி மற்று யாதோ
கற்றவர் ஞானம் இன்றேல்
     காமத்தைக் கடத்தல் ஆமோ. (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3247)

சீதையை நினைத்துக் கலங்கும் தன் மனத்தை எண்ணி இன்னொரு மனமிருந்தால், அவளை மறந்து, வேறு செயல்களில் ஈடுபடலாமே என்று நினைக்கிறான் இலங்கைவேந்தன் இராவணன்.

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் இப்பாடலாலும் கவரப்பெற்ற கவியரசு கண்ணதாசன், ’வசந்த மாளிகை’ எனும் பாடத்தில் காதல் தோல்வியில் கதாநாயகன் கலங்கும்போது,

”இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று” எனும் பாடலாக இதனை மீளுருவாக்கம் செய்தார்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவைகம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க