படக்கவிதைப் போட்டி – 283
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (08.11.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
கலையை ரசிப்போம்…
கண்ணுக் கழகாய்க் கட்டைவண்டி
கட்டை மரத்தில் செய்துவிட்டார்,
வண்ணம் பலவும் பூசியேதான்
வனப்பு மிக்கதாய் ஆக்கிவிட்டார்,
உண்மை வண்டிபோ லிருந்தாலும்
உண்மையில் வண்டிகள் மறைந்தனவே,
எண்ணிப் பார்ப்போம் அந்தநாளை
எழுதிய கலைஞனை வாழ்த்திவிட்டே…!
செண்பக ஜெகதீசன்…
படக்கவிதைப் போட்டி 283
இரட்டை காளைப் பூட்டி விட்ட எங்க மாட்டு வண்டி
இறுக்கிப் பிடிச்சக் கயிற்றோட வண்டிக்கார அண்ணே
ஆடியாடி உடம்பை அசைக்கும் எங்க பாசக்கார அண்ணி
எல்லா சுமையும் சுமக்கத்தானே எங்க மாட்டு வண்டி
சல்சல்லுனு பறக்கப் போற எங்க வண்டியப் பாரு
சீறிப் பாயும் சிங்கமாக கிளம்பப் போறான் பாரு
தாவித்தாவிப் புழுதிக் கிளப்ப தயாராயிட்டான் பாரு
மொத்தத்திலே நம்ம விமானம் இது என்பதேக் கூறு
கிராமத்துக்கேப் பெருமை சேர்க்க இந்த மாட்டுவண்டி
குடும்பத்தோடு குதூகலமாய் நாம் போகப்போற வண்டி
மனசு முழுக்க சந்தோசத்தை வாரிக் கொடுக்கும் வண்டி
வாங்க நாமும் பயணம் செய்வோம்
நம்ம மாட்டு வண்டி
அட நம்ம இரட்டை மாட்டு வண்டி
வாழ்க்கை தத்துவம் சொல்லுற வண்டி
சுதா மாதவன்
முக்கணங்கயிறு
உழைக்கும் மக்கள் பிழைத்து வாழும் வழிகள் ஏதும் கிடைக்கவில்லை
அழைக்கும் திசையில் அலையும் நிலைமை
மாற்றம் ஏதும் கிட்டவில்லை
வசதிகள் வாய்ப்புகள் வண்டிகள் எல்லாம்
சகதியில் வாழ்வோருக்கு வாய்க்கவில்லை
திகதிகள் மாதங்கள் ஆண்டுகள் மாறினும்
அகதியாய் வாழ்வதில் மாற்றமில்லை
ஏழைகள் பாழைகள் வசதிகள் பெற்றிட
ஏதும் செய்திட நாம் முனைவதில்லை
ஊழலில் கொழுத்தோர் ஏறி முன்னேற
இழுமாடுகள் போலே மாறிவிட்டோம்
வாக்குகள் விற்று நல்லோரை வீழ்த்தி
முக்கணங்கயிற்றை அவரிடம் கொடுத்துவிட்டோம்
அமிழ்தம் கிட்ட வாய்ப்புகள் இருந்தும்
கழுநீர்ப் பானையில் சுவைக்கின்றோம்