எட்டுக் கோணல் பண்டிதன் – 15

தி. இரா. மீனா
அத்தியாயம் பத்தொன்பது
ஜனகர் தன் அனுபவ ஞானத்தால் விகற்ப நினைவனைத்தையும் நீக்கி, சுயமஹிமையில் நிலைத்துள்ள தனக்கு அதைத் தவிர வேறெதுவும் எண்ணத்தில் இல்லை என சுவானுபவம் உரைத்தல் இவ்வத்தியாய மாகும்.
1. தத்துவ ஞான அனுபவத்தை உள்வாங்கிக் கொண்டு மனதிலிருந்து பலவகையான ஆலோசனைகளாகிய முட்களை வெளியே எடுத்தேன்.
2. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு அறம், பொருள், இன்பங்களேது? துவைதமேது? அத்வைதமேது?
3. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு இறந்த, நிகழ் எதிர் காலங்களேது? இடமேது? என்றென்றும் என்பதேது?
4. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு ஆத்மாவேது? அனாத்மாவேது? நன்மை தீமைகளேது? நினைப்பும் நினைப்பின்மையும் ஏது?
5. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு கனவேது தூக்கமேது்? விழிப்பேது பயமேது? தைரியமேது?
6. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு தொலைவேது? அருகேது? உள்ளேது? வெளியேது? நுட்பமேது? தூலமேது?
7. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு சாவேது? வாழ்வேது? உலகங்களேது? உலகியலேது?ஒடுக்கமேது? சமாதியேது?
8. ஆத்மாவில் அமைதியடையும் எனக்குப் யோக வரலாறும், ஞான வரலா றும் போதும்! போதும்!
அத்தியாயம் இருபது
ஜனகர் தூய அறிவாகிய தன்னிடம் கருவி,கரணாதிகள்,இரட்டைகள், வினைகள், உலகம், ஜீவர்கள், மாயை, சம்சாரம், மோட்சம் முதலான எதுவுமில்லை என்று கூறுதல் இவ்வத்தியாயமாகும்.
1. மாசில்லாத என் சொரூபத்தில் பூதங்களேது, உடலேது, பொறிகளேது, மனமேது, சூன்யமேது, அவாவின்மையேது?
2. என்றும் இரட்டையில்லாத எனக்குச் சாத்திரமேது, ஆத்மஞானமேது, நினைப்பில்லாத மனமேது, நிறைவேது, ஆசையில்லாத தன்மையேது?
3. அறிவு அறியாமைகளேது, நானேது, இதுவேது, எனதேது, பந்த முக்தி களேது, சொரூபத்திற்கு வடிவமேது?
4. என்றும் வகுக்க முடியாத வினைகளேது, ஜீவன் முக்தியேது, விதேக முக்தியேது?
5. புரிபவனேது, புசிப்பவனேது, வினையில்லாத விளக்கமேது, எந்தக் காலத் திலும் குணமற்ற எனக்கு ரோஷமும் அதன் பயனுமேது?
6. நானேயாகின்ற ஒரே சொரூபத்தில் உலகமெங்கே, யோகியும், ஞானியும், பக்தனும், முக்தனும் எங்கே?
7. நானேயாகின்ற ஒரே சொரூபத்தில் படைத்தலும், அழித்தலுமேது? சாதிப் பிற்குரியதும், சாதனையும், சாதகனும், சித்தியுமேது?
8. அறிபவனும், அறநெறியும், அறிபொருளும், அறிவுமேது? என்றும் தூயவ னாகிய எனக்கு ஒன்றென்பதும், ஒன்றுமில்லை என்பதுமேது?
9. என்றும் வினையில்லாத எனக்குச் சிதறுவதும், குவிவதுமேது? அறிவு அறியாமைகளேது?மகிழ்ச்சியும், துன்பமுமேது?
10. எப்போதும் நினைப்பில்லாத எனக்கு விவகாரமேது, அமைதியேது? சுக துக்கங்களேது?
11. என்றும் மாசில்லாத எனக்கு மாயையேது, சம்சாரமேது? விருப்பமும், வெறுப்புமேது? ஜீவனும், அதுவெனும் பிரம்மமுமேது?
12. மாறாத பரம்பொருளினும் வேறில்லாத தானாயிருக்கும் எனக்கு இணைவ தேது, விலகலேது?, பந்தமேது, விதுதலையேது?
13. உபாதையற்ற சிவமாகிய எனக்கு உபதேசமேது, சாத்திரமேது, சீடனேது, குருவேது? அடைவதற்குரிய பேறு என்று என்ன இருக்கிறது?
14. இருப்பேது .இன்மையேது? ஒன்றேது, இரண்டேது? பலவாறு இப்படிக் கூறுவது எதற்கு? எனக்கு முன் எதுவுமேயில்லை.
[முற்றும்]
இந்தப் பகுதியுடன் இந்தத் தொடர் நிறைவு பெறுகிறது. அஷ்டவக்கிரர் குறித்து மிகக் குறைந்த அளவே தெரிந்திருந்த நிலையில், அவரைக் குறித்தும் அவரது வாதங்கள், அறிவுரைகள், தத்துவங்கள் குறித்தும் விரிவாக அறிய முடிந்தது. இந்தச் சிறந்த முயற்சியை வெற்றிகரமாக முழுமை செய்த தி.இரா.மீனா அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறோம்.