நிர்மலா ராகவன்

உழைப்பும் சவாலும்

உத்தியோகத்திற்கான பேட்டி ஒன்றில்:

“இந்த வேலையில் சேர்ந்தால், நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்குமே!” என்று சவால்விட்டார் அதிகாரி.

“கடுமையான உழைப்பு யாரையும் சாகடித்தது கிடையாது!” இப்படிச் சொன்னவருக்கு வேலை கிடைத்தது.

`முயற்சி செய்கிறேன்,’ என்று சொல்லியிருந்தால், அது அரைமனதான பதிலாக இருந்திருக்கும் — `பார்க்கலாம்,’ என்று தட்டிக்கழிப்பதுபோல்.

ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய ஒத்துக்கொள்பவர், `சரி,’ அல்லது `இப்போது முடியாது,’ என்று கூறினால், அவர் முழுமனதுடன் அதில் ஈடுபடுவார் என்ற நம்பிக்கையாவது எழும்.

`எனக்கு அவனைவிடத் திறமை அதிகம். படிப்பிலும் நான் அவனை மிஞ்சியவன்! அவனுக்கு என்னமோ அதிர்ஷ்டம்!’ என்று தன்னை மிஞ்சிவிட்ட ஒரு நண்பனைப் பார்த்துப் பொருமுகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்.

அறிவும் திறமையும் முக்கியம்தான். ஆனால், அவற்றை முழுமையாக வெளிக்காட்ட கடும் உழைப்பு வேண்டாமா?

சிலர் ஒரு காரியத்தை ஆரம்பிப்பார்கள். ஆரம்பித்த வேலை நீண்டுகொண்டே போனால், `இதற்கு என்னதான் முடிவு!’ என்ற அலுப்பு ஏற்படும். அப்போது அரைகுறையாக, எப்படியோ செய்து முடிக்கத் தோன்றிவிடும்.

வேலை செய்யும் தருணங்களை ரசித்தால், செய்பவருக்கு மகிழ்ச்சி கிட்டும். எடுத்த காரியமும் சிறப்பாக அமையும்.

பிடிக்கிறதோ, இல்லையோ, செய்துதான் ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது, முழுமனதுடன் ஈடுபட்டால் செவ்வனே செய்து முடிக்க முடியும்.

படைப்பவர் ரசித்துச் செய்தால்தான் பிறருக்கு மகிழ்ச்சி ஏற்படும். சமையல், இசை, எழுத்து – எதுவாக இருந்தார் என்ன!

“சமைப்பது என்றால் எனக்கு வெறுப்பு! மிளகாய் நெடியால் தும்மிக்கொண்டே, எதற்கு அந்த வேலை!” என்று அலுத்துக்கொள்வாள் என் தோழி ஒருத்தி.

அவள் சமைத்ததை அன்றாடம் சாப்பிட வேண்டியிருக்கும் குடும்பத்தினரிடம் பரிதாபம்தான் எழுந்தது எனக்கு.

“நான் எத்தனை வருடங்களாக எழுதுகிறேன்! எனக்கு ஒரு பட்டம்கூடக் கிடைக்கவில்லை,” என்று என்னிடம் குறைப்பட்டார் ஒரு பத்திரிகை ஆசிரியர்.

பரிசுகளும், பட்டங்களும் பெறலாம் என்ற நோக்கத்துடன் எழுத ஆரம்பித்தால் அந்த இலக்கே சரியில்லை. எத்தனை கால அனுபவம் இருந்தாலும், புதிய விஷயங்களைக் கற்று, காலத்திற்கேற்ப எழுதுவது ஒருபுறமிருக்க, எழுதும்போதே மகிழ்ச்சியாக உணர்ந்தால்தான் ஒருவரது படைப்பு சிறப்பாக அமையும். எழுதுபவரது மகிழ்ச்சியும் பிறரை போய்ச்சேரும்.

எடுத்த காரியத்தை ஒரு சவாலாக ஏற்று, விடாமுயற்சியுடன் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும்.

வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதும் ஒரு சவால் என்று நினைத்து, அதன்படி செயல்படுகிறார்கள் சிலர்.

இது அறிவுடைமையா, முட்டாள்தனமா?

கதை

சரவணன் ஒரு பெண்ணை மணந்தான். காதல் வயப்பட்டு அல்ல. அவள்மேல் பரிதாபப்பட்டு. அவளுக்கு ஏதோ வியாதி. `நம்மை விட்டால் வேறு யார் இவளை மணக்கப்போகிறார்கள், பாவம்!’ என்று எண்ணினான்.

மணந்தபின், நோஞ்சானான அவளுடைய உருவத்துக்கும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று.

கணவனை வார்த்தைகளாலேயே துளைத்தாள் — தான் கிடைத்தற்கரிய பிறவி, அதனால்தான் இந்த முட்டாள் தேடிவந்து மணந்தான் என்றெண்ணியவளாக. `எந்த விஷயத்திலும்’ ஒத்துழைக்கவில்லை.

மிகவும் குழப்பத்திற்கும் வருத்தத்திற்கும் ஆளான சரவணன் என்னிடம் ஆலோசனை கேட்டபோது, “மனைவியாகத் தன் கடமையைச் செய்ய மறுப்பவளுடன் எதற்குச் சேர்ந்து வாழவேண்டும்? இவளை விவாகரத்து செய்ய வேண்டியதுதான்!” என்றேன்.

“அது பாவமில்ல?” என்று குழம்பியவனிடம், “உங்கள் சந்தோஷம் மட்டும் முக்கியமில்லையா? உங்களுக்கு இன்னும் இளமை இருக்கிறது. ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து, இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளுங்கள். எத்தனை காலம் இப்படியே நொந்துபோய் இருப்பீர்கள்?” என்றேன் வற்புறுத்தலாக. வேறு வழி தெரியவில்லை.

அப்படியே செய்தான். சில மாதங்களுக்குப்பின், “நீங்க சொன்னபடி செய்தேன். இப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன், ஆன்ட்டி,” என்று தெரிவித்தான்.

பெண்கள் இவ்வளவு சீக்கிரம் திருமண வாழ்வை முறித்துக்கொள்ள மாட்டார்கள்.

உயிர் போகும் நிலையில் காப்பாற்றப்பட்டு, அந்த மாது மறுவாழ்வு நிலையத்தில் இருந்தபோது சந்தித்தேன்.

சுமார் முப்பது வருடங்கள் கணவரிடம் வன்முறையைத் தவிர வேறு எதையும் அனுபவித்திராதவள், “அவர் மாறுவாருன்னு பொறுமையா இருந்தேங்க,” என்றாள். அப்போதும் அவளுக்கு அடுத்து என்ன செய்வது என்ற தெளிவு இருக்கவில்லை.

தன்னம்பிக்கையை இழந்தவர்களிடம் எந்த ஆற்றலையும் எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்குச் சவால் என்ற வார்த்தைக்குச் சரியான அர்த்தம் தெரியவில்லை என்றே தோன்றுகிறது.

கதை

கெண்டகி fried சிக்கன் நிறுவனத்தை ஆரம்பித்தபோது, கர்னல் ஸாண்டர்ஸ் என்பவருக்கு 67 வயது. அதற்குமுன், தெரு ஓரத்தில் ஒரு சிறிய உணவுக்கடை வைத்திருந்தார். வேறு ஒருவர் அப்பண்டத்தை விற்றபோது, அதில் குறை கண்டுபிடித்து, அதைவிடச் சிறப்பாகத் தயாரித்து, பெரும் வெற்றி பெற்றார்.

இளம்வயதில் பண்ணையாளாக, பஸ் கண்டக்டராகப் பணி புரிந்திருந்த ஒருவர் தனது 88-வது வயதில், உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்த துரித உணவுச் சங்கிலியின் (fast food chain) நிறுவனராக எப்படி ஆனார்?

தன் திறமையில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. பிறர் பாராட்டாவிட்டாலும், பின்வாங்காது தன் இலக்கைக் குறிவைத்துச் சென்றார்.

கடுமையாக உழைக்கப் பயந்து, பின் வருத்தப்படுவது எதற்காக? வழியில் எத்தனையோ தவறுகள் வந்திருக்கலாம். அவைகளிலிருந்து சரியான வழி எது என்று கற்றிருப்பார்.

பிறர் பொறாமைப்படுவதற்காகப் பெருமைப்படவேண்டுமே அல்லாது, பயந்துவிடக்கூடாது என்று புரிந்திருப்பார்.

`கிட்டத்தட்ட தொண்ணூறு வயதிலும் தன் அனுபவங்களையும், திறமையையும் கொண்டு சாதித்திருக்கிறாரே, இவருக்கெல்லாம் உடலில் அப்படி ஒரு பலமா!’ என்ற பெருவியப்பு எழுகிறதா?

மனிதனோ, மிருகமோ, என்றென்றும் ஆரோக்கியமாக இருப்பது என்பது நடக்காத காரியம். இது புரியாது, உடல்நலம் பாதிக்கப்பட்டால், தன்னைப் பார்த்துத் தானே பரிதாபப்பட்டுக்கொண்டு இருந்தால் யாருக்கு நஷ்டம்?

ஒருவருக்கு இடுப்புவலி. மருத்துவர் slip disc என்று ஏதோ பெரிய பெயர் சொல்ல. மனிதர் பயந்துவிட்டார். அதன்பின், உடல்நிலை சரியானபோதும், மாடிப்படிகளில் ஏற பயம்.

மிகக் கனமான சாமான்களைத் தூக்க முடியாது என்றால் நியாயம். நடக்கவே பயந்தால்?

இப்போதெல்லாம் வியாதியைப்பற்றிப் பேசுவது நாகரிகமாக ஆகிவிட்டது.

முன்பெல்லாம், வயது முதிர்ந்த பெண்கள் சந்தித்துக்கொள்ளும்போது, “சௌக்கியமா?” என்று விசாரிப்பார்கள். இப்போது அந்த முகமன், “என்னென்ன மருந்து சாப்பிடுகிறீர்கள்?” என்று மாறிவிட்டது.

தான் தன் உடல் உபாதையைப்பற்றி விவரிக்க, அடுத்தவர் அனுதாபம் காட்டவேண்டும் என்பதுதான் அவரது எதிர்பார்ப்பு. அதனால், உடல்நிலை சீராகிவிடுமா என்றெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது.

நாம் ஒவ்வொரு முறையும் நமக்கு வந்த, ஆனால் இப்போது சரியாகிவிட்ட, நோயைப்பற்றி ரசனையுடன் விவரித்தால் கேட்பவர்களுக்கு எப்படி இருக்குமோ, நம் உல்லாசம் பறிபோய்விடும்.

ஒரு சிலர், தாம் ஆரோக்கியமாக இருந்தாலும், தமக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் ஆகியோரின் உடல்நிலைக் குறைபற்றி விவரிப்பார்கள்.

`நமக்கு இப்படியெல்லாம் நேரவில்லேயே!’ என்ற நிம்மதியாலா?

அல்லது, தம் ஆரோக்கியக் குறைவை சில நொடிகளாவது மறப்பதற்காகவா?

எனக்குப் புரியத்தானில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.