கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 21
-மேகலா இராமமூர்த்தி
இராமன் பதற்றத்தோடும் கவலையோடும் இலக்குவனும் சீதையும் தங்கியிருக்கும் இலைக்குடில் நோக்கி விரைந்துவந்துகொண்டிருந்த வேளையில் ஆங்குச் சீதையின் நிலை என்ன என்பதைக் கவனிப்போம்.
மாரீசன் இராமன் குரலில் ”சீதா! இலக்குவா!” என்று கத்திவிட்டு உயிர்நீத்ததால் சீதை கலக்கமடையக் கூடும் என்று இராமன் ஊகித்ததுபோலவேதான் நடந்தது. இராமனின் ஓலக்குரல் காதில் விழுந்ததும் துணுக்குற்ற சீதை, இராமனுக்கு ஏதோ பேராபத்து நேர்ந்துவிட்டது என்றெண்ணி மயங்கிக் கீழே விழுந்தாள்.
இடியுண்ட நாகம்போல் துன்புற்ற அவள், மானைப் பிடித்து வா என்று ஏவி, கணவனோடு கூடிவாழும் நல்வாழ்வைப் பேதையாகிய நான் முடித்துக்கொண்டேனே என்று வருந்தினாள். அருகில் எவ்விதப் பதைபதைப்பும் இன்றி இலக்குவன் நின்றுகொண்டிருந்ததைக் கவனித்தவள் வெகுண்டாள்.
”எவ்விதக் குற்றமுமற்ற என் தலைவன் இராமன் அங்கே அரக்கரின் வஞ்சத்தால் வீழ்ந்துபட்டது கண்டும், அவருடைய தம்பியாம் நீ ஒருவனும் அசையாது நிற்கின்றாய்! என்று சீறினாள்.
குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன்
மற்று அவ் வாள் அரக்கன் புரி மாயையால்
இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல்
நிற்றியோ இளையோய் ஒரு நீ என்றாள். (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3420)
”தன் கணவனுக்குத் துன்பம் நேர்வதை இலக்குவன் விரும்புகின்றான்” என்ற உட்பொருள் தொனிக்கும் வகையிலும் ”இவனும் இராமனுக்குத் தம்பி” என்ற எள்ளல் குறிப்போடும் இவ்விடத்தில் சீதையின் பேச்சை நுட்பமாக அமைத்திருக்கின்றார் கம்பர்.
அதைக்கேட்ட இலக்குவன், ”அன்னையே! அண்ணனை வெல்லக்கூடிய வலிமை வாய்ந்தோர் யாரும் இப்பூவுலகில் இல்லை; வீணாகக் கவலைப்படாதீர்கள்! அண்ணன் என்னை உங்களுக்குக் காவலாக இங்கேயே இருக்கச் சொல்லி ஆணையிட்டிருக்கிறார்; அவர் ஆணைப்படி நடப்பது என் கடமை!” என்று மொழிந்தான்.
அதைக் கேட்டுக் கொதித்தெழுந்த சீதை, இலக்குவனின் நடத்தையைச் சந்தேகித்து அவனை மிக அநாகரிக மொழிகளில் ஏசத் தொடங்குகின்றாள் மூலநூலான வான்மீகத்தில்!
”சுமித்திரையின் மைந்தனே! இராமனின் தோழன்போல் பாசாங்கு செய்துகொண்டு எங்களோடு வனத்துக்கு வந்தாய். இப்போது என் கணவர் ஆபத்தில் சிக்கிக்கொண்டிருக்கும்போது அதை வரவேற்பவன்போல் நின்றுகொண்டிருக்கிறாய். ஏனென்று கேட்டால்… அவர் ஆணைப்படி இங்கேயே காத்திருப்பேன் என்று கூறுகின்றாய். உன் நோக்கம் எனக்குப் புரிந்துவிட்டது. என் கணவர் இறந்துபட்டதும் என்னை உனக்கு உரியவள் ஆக்கிக்கொள்வது உன் திட்டம்; அஃது ஒருநாளும் நிறைவேறாது! நீ மட்டும் இப்போது இங்கிருந்து புறப்பட்டு என் கணவரைக் காக்கப் போகாவிட்டால் நான் இப்போதே கோதாவரியில் குதித்து என்னை மாய்த்துக்கொள்வேன்!” என்கிறாள்.
தமிழ் மரபுக்கேற்ற வகையில் தேவையான இடங்களிலெல்லாம் இராமகாதையில் மாற்றங்கள் செய்துவரும் கம்பர், இங்கே வரம்புகடந்து செல்லும் சீதையின் அநாகரிக மொழிகள் அவளுக்குப் பெருமை தரா என்று கருதி, அப்பேச்சின் நீளத்தைக் குறைத்ததோடல்லாமல் அவள் பேசுகின்ற சொற்கள் கோபத்திலும் நாகரிகத்தோடு வெளிப்படும் வகையில் மாற்றியமைத்துவிட்டார்.
கம்பர் படைத்த சீதை இலக்குவனிடம்,
”ஒருநாள் பழகினவராயினும் உண்மையான அன்புடையார் தாம் பழகியவர்க்காகத் தம் உயிரையும் கொடுத்து உதவுவர். ஆனால் நீயோ ஆண்களில் சிறந்தவனான இராமனுக்குத் துன்பம் வந்திருக்கின்றது என்பதைக் காதால் கேட்டும் அதற்காகச் சிறிதும் அஞ்சவில்லை. இனி எனக்கு வேறொரு வழியும் தெரியவில்லை; நான் இவ்விடத்திலேயே எரியில் விழுந்து சாகின்றேன்!” என்கின்றாள்.
ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்
பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் நீ
வெருவலை நின்றனை வேறு என் யான் இனி
எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு எனா. (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3429)
சீதையை நெருப்பில் விழாமல் காக்கும்பொருட்டு அவள் திருவடி தொழுத இலக்குவன், ”உங்கள் கட்டளையை ஏற்று நான் அண்ணனைத் தேடிப் போகின்றேன். விதி நம்மை மிகுந்த கோபத்தோடு சோதிக்கின்றது. நான் மனம் வெந்து, நெஞ்சு நொந்து இங்கிருந்து போகின்றேன்!” என்று கூறியவாறு புறப்பட்டான். சீதைக்கு ஏதேனும் தீங்குநேருமாயின் அப்பகுதியில் வசிப்பவனான கழுகரசன் சடாயு தன்னாலியன்ற அளவு காப்பான் என்ற எண்ணம் இலக்குவன் மனத்தில் தோன்றவே, அதைச் சீதையிடம் வெளிப்படுத்திவிட்டு அங்கிருந்து அகன்றான்.
அதற்காகவே அங்கே மறைவாகக் காத்திருந்த இராவணன், திரிதண்டம் ஏந்திய தவசி வேடம்பூண்டு, தன் நெஞ்சகத்தில் குடியிருந்த வஞ்சக எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டு இலைக்குடில் நோக்கி வந்தான்.
திரிதண்டம் என்பது மூன்று தண்டுகளை உடையது. காமம் வெகுளி மயக்கம் எனும் மும்மலங்களையும் வென்றவர்கள் கையில் ஏந்துகின்ற முக்கோல் அது. அதனை ஏந்தியவர்களை ’முக்கோற் பகவர்’ என்று குறித்தனர் நம் முன்னோர்.
போலி சந்நியாசியான இராவணன், முக்கோலுடன் இளைத்த மேனியனாய், பூணூல் அணிந்த மார்பினனாய், கூன்விழுந்த முதிய வடிவினனாய், சாம வேதம் இசைத்துக்கொண்டு, ஓர் அந்தணத் துறவி வடிவில் இலைக்குடிலின் வாயிலுக்கு வந்து “இங்கே இருப்பது யார்?” என்று நா நடுக்குற வினவினான்.
முதிய சந்நியாசி ஒருவர் குடில் வாயிலில் நிற்பதுகண்ட சீதை, அவரை ”உள்ளே வாருங்கள்” என்று அன்போடு வரவேற்றாள்.
இதுவரை உருவெளியாகக் கண்டு வந்தவளின் திருவுருவை முதன்முறையாக நேரில் கண்டான் இராவணன். குயிலின் குரலோடும் தேவலோக மங்கையரினும் விஞ்சிய அழகோடும் நின்றிருந்த அவளைக் கண்டதும் ஏற்பட்ட மகிழ்ச்சியில் இராவணனின் வீரத்தோள்கள் ஒருகணம் பூரித்தன; மறுகணம் அவளை அடைவது எங்ஙனம் என்ற ஏக்கத்தில் மெலிந்தன என்கிறார் கம்பர்.
தூங்கல்இல் குயில் கெழு
சொல்லின் உம்பரின்
ஓங்கிய அழகினாள்
உருவம் காண்டலும்
ஏங்கினன் மன நிலை யாது
என்று உன்னுவாம்
வீங்கின மெலிந்தன
வீரத் தோள்களே. (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3443)
சீதையின் அழகெனும் தேனை இராவணனின் கண்களாகிய வண்டுகள் அள்ளிப் பருகின. திருமகளையொத்த இவளைக் கண்டுமகிழ எனக்கு இருப்பவை இருபது கண்கள்தாமே; ஆயிரம் இல்லையே என்று வருந்தியது ஆசைக்கடலில் தத்தளித்த அவனுள்ளம்!
அவன் வஞ்ச உள்ளத்தை ஓராத வஞ்சியாள் சீதை, அவனை வரவேற்று பிரம்பு இருக்கையில் அமரச்செய்தாள். அமர்ந்தவன் இந்த இலைக்குடிலில் உறைபவர்கள் யார் என்று அது குறித்துத் தான் ஏதுமறியாதவன்போல் சீதையை விசாரிக்கவே, ”பழைமையான இட்சுவாகு குலத்தில் தோன்றிய தயரதனின் மகன் தம் தம்பியோடு, தம் அன்னையின் விருப்பப்படி, இங்கே உறைகின்றார். அவரைப் பற்றித் தாங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடுமே?” என்றாள் அவள்.
”கேள்விப்பட்டிருக்கின்றேன்; ஆனால் நேரில் கண்டதில்லை. மருதவளம் நிறைந்த அயோத்தி பக்கம் ஒருமுறை போயிருக்கிறேன்” என்றுரைத்த துறவு வேடத்தான், ”வாள்போலும் நீண்ட கண்களையுடையவளே! நீவிர் யாருடைய மாமகள்? வாழ்வின் அரிய நாட்களை ஏன் இந்தக் கொடிய காட்டிடை கழிக்கின்றீர்? என்று கேட்டான் சீதைக்காகத் தான் பெரிதும் வருந்துபவன்போல் காட்டிக்கொள்ள!
நும்மையொத்த குற்றமிலாத் தவசீலர்களையே தெய்வமெனக் கருதும் சனகனின் மகள் நான்; என் பெயர் சானகி. காகுத்தன் மரபில் வந்த இராமனின் மனைவி என்று தன்னைப் பற்றிச் சொன்னாள் பொற்புடைக் கற்பினளாகிய சீதை.
அனக மா நெறி படர்
அடிகள் நும் அலால்
நினைவது ஓர் தெய்வம் வேறு
இலாத நெஞ்சினான்
சனகன் மா மகள் பெயர்
சனகி காகுத்தன்
மனைவி யான் என்றனள்
மறு இல் கற்பினாள் (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3455)
சொல்லிவிட்டு, “பெருமூதாளராய் இருக்கும் நீவிர் இந்தக் கொடிய காட்டிற்கு எங்கிருந்து வருகின்றீர்?” என்று வந்திருந்தவரைப் பார்த்து வினவினாள் பரிவோடு.
இராவண சந்நியாசி தான் அங்குவந்த காரணத்தை விளக்கத் தொடங்கி்னான்.
”இந்திரனுக்கு இந்திரனாகவும், ஓவியத்தில் எழுதவொண்ணாச் சுந்தரனாகவும், அனைத்து உலகங்களையும் வென்றவனாகவும் விளங்குகின்ற நான்முகன் மரபில் வந்த மாவீரன் ஒருவன் இருக்கின்றான். அவன் சிவனார் உறையும் கைலாய மலையைப் பெயர்த்தெடுக்கும் ஆற்றலான்; தேவர்கள் ஏவல்செய்யும் கடல்சூழ் இலங்கையை ஆளுகின்றவன்; நல்லொழுக்கமுடையவன்; விரிந்த வேதங்களை ஓதி உணர்ந்தவன்; அனைத்துலகிலுமுள்ள அழகிற் சிறந்த மங்கையரெல்லாம் அவன் அருளுக்காக ஏங்கி நிற்க, அவனோ தன் மனத்துக்கினியாளைத் தேடுகின்றான்.
அந்த அற்புதத் தலைவன் ஆட்சிபுரிகின்ற இலங்கை மாநகரில் சிலகாலம் தங்கியிருக்கச் சென்றேன்; ஆனால் அவனைப் பிரிய மனமின்றி அங்கேயே நெடுங்காலம் தங்கிவிட்டேன்; பிறகு இங்கு வருகின்றேன்” என்று வேண்டிய அளவுக்கு இராவணனின் சிறப்புக்களை விதந்தோதி, சீதையின் மனத்தில் இராவணன் குறித்த நல்லெண்ணத்தை விதைக்க விழைந்தான் அந்தப் போலித் துறவி.
ஆனால் சீதை அடுத்துத் தொடுத்த வினாவோ அந்தத் துறவியின் எண்ணத்திற்கு நேர்மாறாய் இருந்தது.
[தொடரும்]
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
- கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
- கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
- கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
- கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17