படக்கவிதைப் போட்டி – 288
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
புகைப்படக் கலைஞர் ராமலக்ஷ்மி எடுத்த இப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தில் இருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (13.12.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
கலை வளர்ப்போம்…
முகமதில் காட்டும் நவரசங்கள்
முத்திரை பதிக்கும் உடலசைவு,
அகமது குளிர நடனமிடும்
அணங்குகள் ஆட்டம் அழகேதான்,
சகலரும் ரசிக்கும் ஆட்டமிது
சங்கரன் தொடங்கி வைத்ததுதான்,
வகைவகை யாக வந்தாலும்
வளர்ந்திட வைப்போம் இதுதனியே…!
செண்பக ஜெகதீசன்…
கொத்தடிமைக் கடவுள்கள்
பொதுவெளியில்….
பெண் சக்தி தெய்வமென்று
கற்சிலைக் கடவுளாக்கிப்
பூசனைகள் பல செய்து
கருவரையில் தொழுதிருப்போம்!
விட்டினிலோ….
படுக்கையைறை தாசியாக்கி
பணிவிடைகள் செய்ய வைத்து
காரிகையைக் கொத்தடிமையாக்கி
அடுக்களையில் அடைத்து வைப்போம்!
கலைகளின் தேவியென்று
கொண்டாடி வணங்கவும் வேண்டாம்
சதிராடும் தாசியென்று
சாக்கடையில் எறியவும் வேண்டாம்!
அன்னையடி நீயென்று
அன்புச் சங்கிலிப் போட்டு
அடிமையாக்கி வைத்திருக்கும்
அவலநிலை இனி வேண்டாம்!
சக மனிதப் பெண்ணுக்கு
சம உரிமைக் கிட்டி – அவள்
சாதனைகள் சபையேறும்
சமச்சீர்மை நிலை போதும்!!!
படக்கவிதைப் போட்டி 288
சந்நிர ஒளியையொத்த முகம்
கண்களில் கனலை வீசுவது ஏன்
குளிர்க் காற்றைப் போல் வருடும் விரலதுவோ
சினத்தை வாரி இறைப்பது ஏன்
செம்மொழி சிந்தும் மலரிதழ்கள்
நகைமொழி மறந்த நாட்டியம் ஏன்
உடைதனின் நிறத்தை கொண்டுள்ள
குருதியின் குவலயமாய் அதுதான் ஏன்
கால்களின் சலங்கை ஜதிப் போட
தாவிப் படையெடுக்க பறப்பது ஏன்
அறிந்தேன் புரிந்தேன் தெரிந்தேன்
ஒன்றி வீட்டீர் நாட்டியக் கருத்தோடு
ஒன்றி வீட்டீர்
பார் புகழ் பாரதம்
பாரதம் புகழ் பரதம்
வாழ்க நம் கலைகள்
வளர்க மங்கா புகழ்!!
சுதா மாதவன்