-மேகலா இராமமூர்த்தி

பறவை, புழுவைச் சரியாகக் கவ்வியிருக்கும் செவ்வி பார்த்து அதனைத் தம் படப்பெட்டியில் கச்சிதமாய் அடக்கி வந்திருக்கின்றார் திருமிகு. கீதாமதி. இவ்வரிய படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. பெண்மணிகள் இருவருக்கும் என் நன்றி மலர்களை உரித்தாக்குகின்றேன்.

ஓருயிர் மற்றோர் உயிர்க்கு உணவாவது இயற்கையே எனினும் சிற்றுயிரொன்று படும் வாதையும் அருள்நெஞ்சினோருக்கு வேதனையளிக்கவே செய்கின்றது.

இப்படத்தைக் காணும் நம் கவிஞர்களின் எண்ணவோட்டம் என்ன சொல்கின்றது என்பதை அறிவதுதானே நம் அடுத்த வேலை! புறப்படுங்கள் என்னோடு கவிதைகளைச் சுவைக்க!

*****

”உணவுத் தேடல் ஒருபுறம்; உயிரின் வாடல் மறுபுறம்;
உற்றுநோக்கினால் வலியது பிழைக்கும் என்ற உலகின் இயக்க விதி உதிக்கிறது” என்றுரைத்துத் தக்கன பிழைக்குமெனும் இயற்கை விதியை தக்கவகையில் தம் கவிதையில் கோத்திருக்கின்றார் திரு. யாழ் பாஸ்கரன்.

புலர் காலை வனப்பில்
புல் வெளிப் பரப்பில் ஒரு படுகொலை!
புள் அலகினில் அகப்பட்ட
புழு துடிக்கிறது மனதும் கூட வலிக்கிறது!

உயிர்ப் போராட்டம் இரண்டுக்கும்
உருவாக்கிவிட்டது யாரோ?
உருவாக்கியவனாலா? இல்லை
உருவானவையாலா?

உணவுத் தேடல் ஒருபுறம்
உயிரின் வாடல் மறுபுறம்

உற்றுநோக்கினால் வலியது பிழைக்கும் என்ற
உலகின் இயக்க விதி உதிக்கிறது!

வாழ்வியல் உண்மைகளை
வழமையாகச் சொல்லிச் செல்கிறது
வாழ வாய்ப்பளித்த இயற்கை வெளி
வழக்கமான தடுமாற்றங்களுடனே நாம்!

கல்லாய்க் கரடாய்க் கிடந்த மண்ணில்
புல்லாய்ப் பூண்டாய் பூத்த செடிகளும் கொடிகளும்
புள்ளினமும் புழுவினமும் இன்ன பிறவும்
புதிர்களைப் போட்டு அவிழ்க்கின்றன புரிதலுடனே!

புரியாத மானுடம் மட்டும்
புதிது புதிதாய்ப் பேராசை கொள்கிறது
புவியின் புணர்ச்சி விதி தெரியாமல்
புலம்பித் தவித்து பழியைப் பலர்மீதும் போட்டு!

*****

”பறவைக் குஞ்சுகளுக்குப் புழு இரையாகக் கிடைத்தவேளையில், புழுக்கள் தம் தாயை இழந்த அவலம் நேர்ந்ததே! இயற்கையின் இந்தச் சட்டத்திலிருந்து பறவையும் தப்பமுடியாது!” என்று இயற்கை விதியை எடுத்தியம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.    

இயற்கைச் சட்டம்…

குஞ்சுகளின் பசிதீர்க்கக்
கிடைத்தது பறவைக்கு
புழு ஒன்று,
அது
தன் குஞ்சுகளுக்கு இரை
தேடிவந்தபோது…

பறவைக் குஞ்சுகளுக்கு
இரை கிடைக்கும்போது

இல்லாமல் போனதே
புழுவின் குஞ்சுகளுக்குத் தாய்…

இதுதான்
இயற்கைச் சட்டமோ…?

இதோ இங்கே,
காத்திருக்கிறான் மனிதன்-
பறவைக்காக…!

*****

”புழு பூச்சி அனைத்தையும் உண்டு வானில் பறந்து திரியும் பறவையினமே! உமைப் போலவே பறந்து திரிய ஏங்குகின்றதே எம் மனமே!” என்கிறார் திருமிகு. சுதா மாதவன்.

வாயில் உன் உணவு
வானத்தில் என்னப் பார்க்கிறாய்?
நிலத்தில் நிரம்ப உணவுண்டு
நீர்நிலைகளில் மிதக்கிறாய்

பசுமைச் செடிகொடி இலைகளிலே
பாய்ந்து பறந்து பிடிக்கின்றாய்
புழு பூச்சி புல்பூண்டு
என்றே சொன்னால் மிகையாகா
அனைத்தும் உங்களின் உணவன்றோ!
அதிசயப் பிறவி நீங்களன்றோ!

பறவையினமே உங்களைப் போல்
பறந்து திரிய நினைக்கிறோமே!
பாடியாட மனம் தவிக்கிறதே

உனைப் பார்ப்பதால் மனம் களிக்கிறதே!

*****

பறவையும் அதன் வாயில் சிக்கிய புழுவும் நம் கவிஞர்களின் சிந்தனைகளைக் கிளறி சீரிய கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கக் காண்கின்றேன். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

இரையாகத் துடிக்கும் புழுக்கள்!

கருமுட்டைதனிலிருந்து
உயிர் கொண்டு,
மேல்புழுவாய் வளர்ந்து
சிறகு வளர்த்து
சீர்வண்ணப் பூச்சியாகி
உலகளந்து ஊர் மெச்ச வலம்வந்து
மலரமர்ந்து
மதுரத்தேன் தான் குடித்து
முழுவாழ்க்கை வாழ்ந்திடாமல்
சிறுதொகைக்கும்
சிற்றின்ப போதைக்கும்
சாதிமதச் சார்பு கொண்டும்
மதுக்கோப்பைக் குப்பிக்கும்,
ஆள்பவரை அமர்த்தவைக்கும்
வாய்ப்பதனைத் தவறவிட்டு
ஆண்டுகள் ஐந்தும் அழுதுநின்று
அரசியல் வல்லூறுகளின் அலகினிலே
இரையாகத் துடிக்கும் புழுக்களெனப்
புரியாமல் தவிக்கின்றோம்…

புதுத்தேர்தல் வரும் நேரம்!
புதுப்பாதை வகுப்போமா? – அன்றிப்
புதைசேற்றில் வெளியேற வழியின்றி
புலம்பல்களை மொழியாக்கித்
தலைவிதியை நொந்திருந்து
தவிப்பதையே தொடர்வோமா?

அரசியல் வல்லூறுகளின் அலகுகளில் இரையாகும் புழுக்களைப்போல், நல்லாரை விட்டு அல்லாரைச் சாதி மத சார்புக்கும் மதுக் கோப்பைக்கும் அடிமையாகி அமர்த்திவிட்டு அல்லற்படும் நம் அவலநிலை புதுத் தேர்தல் வரும் நேரம் மாறுமா? என்று ஏக்கத்தோடு வினா எழுப்பியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *