Tag: இராஜராஜேஸ்வரி

  • புதுயுகம் படைக்கும் மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்..

    இராஜராஜேஸ்வரி

    ஏட்டையும் பெண்கள் தொடுவது தீது என்று

    எண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்;

     

    வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற

    விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

     

    வீ‌ட்டையு‌ம், நா‌ட்டையு‌ம் ஒரு சேர ஆள முடியு‌ம் எ‌ன்று

    பெண்கள்  ‌நிரூ‌பி‌த்து‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

    பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்

    பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;

    எட்டு மநிவினில் ஆணுக்கிங்கே பெண்

    இளைப்பில்லை காணென்று பலதுறைகளிலும்

    இணையற்று சாதனைகள் நிகழ்த்திவருகிறார்கள் பெண்கள்..

    வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்

    வேண்டிவந் தோமென்று வேதனைகள் தீர்க்கின்றனர் பெண்கள்..

    சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச்

    சாதி படைக்கவும் செய்திடுவோம்

    என பலதுறைகளிலும் முனைப்புடன் சாதனை படைத்துவருகிறாள் புதுயுக நவ யுவதியாக வலம் வரும் மகளிருக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள் சமர்ப்பிப்பதில் பெருமை அடைகிறோம் நாம்…

    வீறு கொண்டு எழுந்து வெற்றிச் சரித்திரம் படைக்கத் தொடங்கிவிட்ட காலமிது.

    புதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்து வைக்கும் திருநாளாய் மலர்ந்து மணம் வீசும் மகளிர் தினம் மகிழ்ச்சிக்குரியது ..

    மனிதப் பிறவியில் ஏறத்தாழ சரிபாதியாக விளங்கும் மகளிர் சமுதாயம் சமூக, அரசியல், பொருளாதார விடுதலை பெற்று முன்னேற வேண்டும் என்பதற்காக அனைத்து நாடுகளிலும் எழுச்சியுடன் கொண்டாடப்படும் திருநாள்!

    இந்தத் துறைதான் பெண்களின் சொந்தத் துறை என்ற நிலை மாறி, எந்தத் துறையும் பெண்களின் சொந்தத் துறைதான் என்ற உண்மை உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது.

    புதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்து வைக்கும் திருநாளாய் இந்த மகளிர் தினம் மலரட்டும்.

    தையலை உயர்வு செய்! என்னும் மகாகவி பாரதியின் கவிதைக் கட்டளை மானுடத்தின் பொதுச் சட்டமாக ஆகட்டும்

    இந்த நாடு பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது என்றால் –

    நிச்சயமாக நம்புங்கள் – அதில் பெண்களின் பங்கு சரிநிகர் சமமானதே.

     1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம்

    கொண்டாடப்பட்டு வருகிறது.

    1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.

     அனைத்து துறைகளிலும் பெண்கள் முழுமையாகவும் சமத்துவமாகவும் பங்குபற்றுவதன் மூலமே ஸ்திரமான சமாதானத்தையும் ஐ.நா. சாசனத்தின் கீழான சமூகத்தையும் நாம் எதிர்பார்க்க முடியும்’ என வலியுறுத்தும் வகையில் சிறப்பாக மகளிர் தினம் கவனத்தில் கொள்ளப்படுகிறது ..

    தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

    மகளிர் தினத்தையொட்டி சில ஆண்டுகளாக ஆண்கள் துணையின்றி பெண் விமானிகளே பங்கு பெறும் விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருவது  மகிழ்ச்சி அளிக்கிறது.

    விமானத்தை பெண்களே இயக்குவது ஒரு புதுவிதமான அனுபவம். . நவீன யுகத்தில் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் பெண்களுக்கு வழங்குவது ஊக்குவிப்பதாக உள்ளது.

    Share
  • இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்….!!

    ராஜேஸ்வரி ஜெகமணி

    ஆங்கில ஆண்டின் முதல் நாள் இது ..


    ஆனந்தமாய் வாழ்த்தும் பொன்னாள் இது..
    வெற்றி நம்மைத்தேடி வரும் நன்னாள் இது ..
    எண்ணப்படி வாழ்வு தரும்  இந்நாளில்
    இன்று போல் என்றும் வாழ புத்தாண்டு வாழ்த்துகள்….

    எண்ணிய முடிதல் வேண்டும்  
    நல்லவே எண்ணல்வேண்டும்;
    திண்ணிய நெஞ்சம் வேண்டும் ;
     தெளிந்தநல் லறிவு  வேண்டும்;

    மனதில் உறுதி வேண்டும்
       வாக்கினிலே  இனிமை வேண்டும்;
    நினைவு நல்லது வேண்டும்,
       நெருங்கின பொருள் கைப்பட  வேண்டும் ;

    கனவு மெய்பட வேண்டும்,
       கைவசமாவது விரைவில்  வேண்டும்
    தனமும் இன்பமும் வேண்டும்
       தரணியிலே பெருமை வேண்டும்;

    என்று  பொன் எழிலாய் பூத்திருக்கும் புத்தாண்டில் பிரார்த்திப்போம் …

    துன்ப மினியில்லை.சோர்வில்லை,தோற்பில்லை,
    அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட புத்தாண்டினை வரவேற்போம் …

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
    நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த
    ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

    இனிய நாளை இன்னிசையோடும் இன்பத்தோடும் , இனிப்போடும் கொண்டாடி மகிழ இனிய வாழ்த்துகள்….

    Share
  • ஆருத்ரா தரிசனம்

    ராஜேஸ்வரி ஜெகமணி

    ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
    கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
    கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
    ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்”

    திருமயிலையில் சாம்பலாகிய பெண்ணை உயிர்ப்பிக்க திருஞான சம்பந்தர் பாடிய மயிலையில் கொண்டாடப்படும் பல்வேறு சிறப்பு மிக்க திருவிழாக்களுள் திருவாதிரையும் ஒன்று.

    ஆருத்ரா தரிசனம் சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் ஒன்று

    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளோடு இணைந்து திருவாதிரை வருவதால் விண்ணிலிருந்து சந்திரன் தன்னை தலையில் அணிந்து சாப விமோசனம் அளித்த சிவபெருமானின் அன்பர்களை தன் பதினாறு அமுத கலைகளால் தழுவுகின்றான்.

    ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாக
    ஓருருவம் ஓர் நாமம் இல்லாத சிவ பெருமான் செம்பவள மேனி வண்ணன் என்பதனால் அவரை சிவப்பு நட்சத்திரமான திருவாதிரைக்கு உரியவனாக்கி அவரை திருவாதிரையான் என்றும் அழைத்தும் அந்த திருவாதிரையன்று, ஆடும் அந்த அம்பலக்கூத்தனை சிறப்பாக வழிபடுகின்றோம்..

    ஆருத்ரா என்பது ஆதிரையை குறிக்கும் சொல். சிவனுக்கு உரிய ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை. எனவேதான் இந்த திருவாதிரை நாளில் ஆடல் அரசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது

    ஆருத்ரா தரிசன விழா ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில்
    அருள்பாலிப்பார்.

    ஆண்டுக்கு ஓரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று சிலையில் சந்தனம் களையப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும்..

    கும்பகோணத்தில், மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெறும்.

    அன்று 16 கோயில்களிலிருந்து சிவகாமியுடன் நடராஜர் தனித்தனியே புறப்பட்டு, திருக்குடந்தைக்கு ராஜாவாகிய அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயிலைப் பிரதட்சணம் செய்கின்றனர்.

    தொடர்ந்து கிழக்கு வீதியில் ஒவ்வொரு கோயிலிலிருந்தும் வந்த நடராஜரும், ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வரர் சுவாமிக்கு தங்களுடைய மரியாதையைச் செலுத்தும் வகையில் அர்ச்சனைகள் நடைபெறும்.

    பதிலுக்கு,ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வர ஸ்வாமியும் அந்தந்த கோயிலுக்கு உண்டான ஸ்வாமிக்கு பதில் மரியாதை செய்வார்.

    திருமணமான பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்கக் காண வேண்டிய விழா ஆருத்ரா தரிசனம்.

    கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புண்ணிய ஸ்தலமான சுசீந்திரம் அறம் வளர்த்த நாச்சியார் கோவில் பிரசித்தமானது.

    “ஆடல்வல்லான்’ என்று போற்றப்படும் ஆனந்த தாண்டவமாடும் நடராஜரை வழிபட்டால், மகிழ்ச்சி என்றென்றும் நிலைக்கும்.

    சிவபெருமானுக்குரிய வடிவங்களில் முதன்மையானது நடராஜர் வடிவமே. இவர் ஆடுவது ஆனந்த தாண்டவம். அம்பலவாணர், சபாபதி, கூத்தப்பெருமான், நடேசன், சித்சபேசன், நடராஜன், கனகசபாபதி, பொன்னம்பலம் என்ற பெயர்கள் உண்டு.

    திருவாதிரை நட்சத்திரம் நாள் தில்லை அம்பலத்தரசனுக்கு சிறப்பான விரத நாளாகும்.

    திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் செய்து சகல பாவங்கள், தோஷங்கள், தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெறலாம் ..

    ஆருத்ரா தரிசனத்தன்று ஆதிரைக் களி படைக்கும் வழக்கம் உண்மையான பக்தியுடன் எளிமையான உணவு படைத்தாலும் ஆண்டவன் ஏற்றுக்கொள்வான் என்பதே தாத்பர்யம்

    திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி.

    எனவே மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது.

    திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி தின்னாதவர் நரகக்குழி என்பது பழமொழி மூலம் பிரசாதத்தின் மகிமை விளங்கும்.

    களி என்றால் ஆனந்தம் என்று ஒரு அர்த்தம் ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜரை நாம் உண்மையான உள்ளன்புடன் வழி பட்டால் அவர் நமக்கு உண்மையான ஆனந்தமான மோக்ஷத்தை வழங்குவார் என்பதை உணர்த்துவதே களி படைப்பதன் உள்ளார்த்தம்.

    கோவை பேருரில் எம்பெருமானின் பின்னே பின்னி தொங்கவிடப்பட்டிருக்கும் ஜடா முடியையும் நாம் கண்டு ஆனந்தம் பெறலாம்.

    சப்த விடங்க ஸ்தலமான திருநள்ளாற்றிலும் அருணோதய காலத்தில் ஒரே சமயம் நடராஜப் பெருமானுக்கும், தியாகராஜப் பெருமானுக்கும் அபிஷேகம் நடப்பதை நாம் கண்டு ஆனந்தம் அடையலாம்.

    சுயம்புவாக தோன்றி மிகப்பெரிய திருவுருவமாக விளங்கும் திருநல்லம் என்னும் கோனேரி ராஜபுரத்திலும் திருவாதிரைத்திருவிழா பத்து நாள் மாணிக்கவாசகர் விழாவாக கொண்டாடப்படுகின்றது.

    ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள்
    நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
    தேரார் வீதியில் தேவர்குழாங்கள் திசையணைத்தும்
    நிறைந்து
    பாரார் தொல் புகல் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.

    என்று ஆனந்த சேந்தன் பாடிப் பரவியபடி, திருமால், பிரம்மன், இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்து எம்பெருமான் ஆதிரைத் தேரோட்டத்தை காணும் அழகை தரிசிக்கும் திருநாளே திருவாதிரைத்திருநாள் ..

    கோயிலின் உள்ளே சென்று வழிபட முடியாதவர்களுக்காக தானே வெளியே வந்து தேரார் வீதியில் திருத்தேரில் வந்து நடராஜப் பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் அருட்காட்சி அளித்து ஆனந்தம் பொழியும் அற்புதத்திருநாள் ..!

    Share
  • கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்!

    ராஜராஜேஸ்வரி ஜெகமணி

    ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

    என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்

    துன்பத்தில் என் நல் துணை அவரே

    என்றென்றும் ஜீவிக்கிறார்

     செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது

    பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது

    அவர் சொல்லக் குருடனின் கண் திறந்தது

    அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்

     உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே

    என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே

    நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்

    உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே

    மக்களுக்கு நல்வழி காட்ட வந்த மகான் இயேசு கிறிஸ்துவின் தியாக குணமும் மன்னிக்கும் மாண்பும் பாரதியைக் கவர்ந்தன. நல்லவை எங்கு இருந்தாலும் யாரிடம் இருந்தாலும் அதைப் பாராட்டத் தயங்காத பாரதி இயேசுவை வணங்குகிறார். ஒரு கிறித்தவர் எப்படி உருகிப் பாடுவது போல் பாரதியின்  விளங்கும் பாடல்….

    ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்

         எழுந்து உயிர்த்தனன் நாள்ஒரு மூன்றில்

    நாசம் இன்றி நமைநித்தம் காப்பார்

         நம்அகந் தையை நாம்கொன்று விட்டால்!

    வானம் வால் நட்சத்திரம் இட்டு மகிழ்ச்சி காட்ட, ஏஞ்சல் பண் இசைத்து வாழ்த்த, நடுங்கும் குளிர் இன்பம் பொழிய என காட்சிப் பிம்பம் செதுக்கிய அற்புத திருவிழா கிறிஸ்துமஸ். உலகின் மிகப் பரவலான கொண்டாட்டம்

    கிறிஸ்து பிறப்புவிழா கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும்.

    பெரும்பாலான கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது .

    மாட்டுக் குடிலில் வைக்கோல் படுக்கையில் அன்பான மரியன்னைக்கு கிடைத்த பரிசுதான் யேசு எனும் இறைமகன்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை வண்ணமயமாக, கேளிக்கைகள், உறவினர், நண்பர்களுடனும் விருந்துகளுடனும் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்..

    ஒளிரும் நட்சத்திரங்களை வீட்டின் முன்பு தொங்கவிட்டும், பல வகை வண்ண விளக்குகளால் வீடுகள், கடைகள், அலுவலகங்களை அலங்கரித்தும் பிரியமானவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பியும், பரிசு வழங்கியும் சுவை மிகுந்த கேக்குகள், பலகாரங்கள் வழங்கியும் அறுசுவை உணவுகளை உண்டும் ஆனந்தமாகக் கொண்டாடுவார்கள்.

    இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிட்டு

    ஓ, எவ்வளவு அதிசயச் செயல் சூரியன் பிறந்த நாளில்…கிறிஸ்துவும் பிறந்தது”என்பார்கள்..

    டிசம்பர் 25 குளிர்கால சம இரவு பகல் நாள்..

    அன்பின் திருவுருவம், கருணையின் வடிவம், தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாள் ஆகும்.

    இயேசுபிரான் “அன்பே வாழ்வின் நெறி” என்று வாழ்ந்து காட்டிய திருமகன், இன்னா செய்தவர்கள் நாணும்படி அவர்களுக்கு நன்னயம் செய்த பெருமகன்.

    அவர் அன்பை போதித்தார்.

    அந்த போதனைகளுக்கு தனது வாழ்க்கையையே முன்னுதாரணமாக ஆக்கினார்.

    அன்பு வார்த்தையாலும், அன்பு வாழ்க்கையாலும் உலகை ஆட்கொண்ட இரக்கத்தின் வடிவமாம் இயேசுபிரான் பிறந்த நன்னாளாம்  இனிய திருநாளில் உலகமெங்கும் அன்பு தவழவும், அமைதி நிலவவும்,சத்தியம் நிலைக்கவும், சகோதரத்துவம் தழைக்கவும் பிரார்த்திப்போம்..

    அன்பின் ஒளியாய் கருணையின் வடிவாய் அவதரித்த இயேசுபிரான் பிறரின் பாவங்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர்.

    தன்னை சிலுவையில் அறைந்தவர்களைக் கூட மன்னிக்கும்படி பரமபிதாவிடம் மன்றாடியவர்.

    மன்னிப்பதன் மூலம் மன்னிக்கிறவர் மட்டுமல்லாமல், மன்னிக்கப்படுகிறவரும் உயருகிறார் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் இயேசுபிரான் அவர்கள் அவதரித்த  கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    ஒவ்வொரு குடும்பமும் தன் உறவுகளோடும் நட்புகளோடும், நேசங்களோடும் பகிர்ந்து கொள்கிற இதுபோன்ற விழாக்கள் ஒருநாட்டின் பண்பாட்டையும் கலாச்சார உறவுகளையும் வெற்றிடமின்றி நிரப்பிட உதவுகிறது ..

    இயேசு கிறிஸ்து ஏழைகளிடம் இயலாதவர்களிடம் கருணை கொண்டவர்.

    அன்பு, மனிதநேயத்தை உலகுக்குஉணர்த்தி தானும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர்.

    அன்பும் விட்டுக் கொடுக்கும் தன்மையும் பெருமைக்குரியது.

    அது நன்மை மட்டுமே செய்யும், பொறாமைப்படாது, தற்புகழ்ச்சி கொள்ளாது. ஏசுகிறிஸ்து அன்பே உருவானவர், நிபந்தனை இல்லாத அன்பு தான் அவருக்கு ஆயுதமாய், கேடயமாய், அனைத்துமாய் இருந்தது.

    அப்படி, அன்பால் மக்களின் வாழ்வை நெறியாக்க இறைவனின் மகனாய் இயேசு கிறிஸ்து மண்ணில் உதித்த இந்த புனித நாளே கிறிஸ்துமஸ் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    மக்களின் வாழ்க்கையின் பின்னிப் பிணைந்த ஒரு அம்சமாக   கிறிஸ்துமஸ் பண்டிகையில் கிறிஸ்துமஸ் மரம் மணிகள், எடை குறைந்த வர்ண உருண்டைகள், நகைகள், இனிப்புகள், மலர்கள், வண்ண அலங்காரங்கள், சிறிய தேவதைகளின் திரு உருவங்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப் படுகின்றது.

    கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியில் ஒரு உலோகத்தால்/ரப்பரால் ஆன ஒரு நட்சத்திரம் அல்லது ஒரு தேவதையின் உருவம் வைக்கப்படும். இது தேவ குமாரனாம் இயேசு பெத்லகேமில் பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தை – தேவதைகளை ‘சம்மனசுகள்’- நினைவூட்டுவதற்கான சின்னமாகும்.

    உலகம் முழுவதும் குளிர்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் போது ஆஸ்திரேலியாவில் மட்டும் உச்ச வெப்பகாலமாக இருக்கிறது …

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கிறிஸ்மஸ் தாத்தா போன்று வேடம் அணிந்து கலந்துகொண்டனர்.

    தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் ஓட்டபந்தயத்தில் பங்கேற்றனர்.

    கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடம் அணிந்த பலர் நீரில் சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினர்.

    Share
  • வைகுண்ட ஏகாதசி தத்துவம் …

    ராஜராஜேஸ்வரி ஜெகமணி

    காவிரி நதியின் நடுவில் ஏழு மதில்களால் சூழப்பட்டு, நடுவில் தாமரை மொட்டுப் போன்று விளங்கும் விமானத்தின் கீழ், மிகவும் மென்மையான ஆதிசேஷனின் உடலாகிய கட்டிலில் யோக நித்திரையில் துயில்பவரும், இடது கையை இடுப்பில் வைத்திருப்பவரும், ஸ்ரீதேவியும், பூதேவியும் தாங்கி நிற்கும் திருப்பாதங்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை வணங்குகிறேன்.

    அம்பரீஷன் என்னும் மஹாராஜா துர்வாச மகரிஷி தன் சடைமுடி ஒன்றை அம்பரீஷன் மீது ஏவி விட்டார்.

    அது பயங்கர பூதமாக மாறி அம்பரீஷனைத் துரத்தியது. அப்போது, மகாவிஷ்ணு அந்தப் பூதத்தின் மீது, தன் சுதர்சனச் சக்கரத்தை வீசி எறிந்தார். அச்சக்கரத்தின் வெப்பம் தாங்காமல் பூதம் எரிந்து சாம்பலானது.

    ”பக்தியோடு ஏகாதசி நாளில் என்னைக் குறித்து விரதம் இருக்கிறார்களோ, அவர்களுடைய இதயத்தில் நான் குடியிருக்கிறேன். அவர்களை காப்பது என் கடமை. அம்பரீஷனிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்படியானால் தான் சக்கரத்திடமிருந்து விடுதலை பெறுவீர்கள்,” என்றார் மஹாவிஷ்ணு ..

    துர்வாசரும் அம்பரீஷனிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டியதோடு, அவனுடன் உணவு அருந்தி, பல வரங்களையும் தந்து விட்டு கிளம்பினார்.

    ஏகாதசி விரதமிருப்பவர்கள் எவ்வளவு பெரிய துன்பத்தையும் தாங்கும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்வார்கள் ….

    ஏகாதசி விரதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனாகிய திருமாலே, இந்த விரதத்தினை மேற்கொள்கிறார் என்பார்கள். எனவே, இதன் மகிமையை அளவிட கருவியே இல்லை.

    அஸ்வமேத யாகம் செய்த பலனை அளிக்கும் விரதம் ..

    மார்கழி மாதம் இருபது நாட்கள் வைகுண்ட ஏகாதசித் திருவிழா ஸ்ரீரங்கத்தில் விசேஷமாக நடைபெறுகிறது.

    பகல் பத்து என பத்து நாட்களும், ராப்பத்து என பத்து நாட்களும் திருவிழா நடைபெறுகிறது.

    இந்த முதல் பத்து தினங்களில் மூலவர் சன்னதியிலிருந்து நம்பெருமாள் கீழ் நிலைக்கு இறங்கி வந்து நமக்காக யோகத்தைச் செய்து காண்பிக்கிறார்.

    சமாதி நிலையைக் கலைத்து இடை நிலையைக் கலைத்து, இடகலை, பிங்கலை வழியாக சந்திர கலை, சூர்யகலை, மும்மலங்கள் போன்றவற்றைக் கடந்து ஆறு ஆதாரங்களையும் கடந்து அர்ச்சுன மண்டபத்திற்குச் செல்கிறார்.

    யோகத்தை பத்து நாட்களும் செய்த பின் பத்தாவது நாள் மோகினித் திருக்கோலம் கொள்கிறார்.

    இதன் தத்துவம் குண்டலினி சக்தி புறப்பட்டு விட்டது என்பதை நமக்கு உணர்த்துவதாகும்.

    பத்தாம் நாள் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

    இது பிரம்ம மந்திரம் திறப்பதைக் குறிப்பதாகும்.

    பிரம்மநிலை என்பது ஆயிரங்கால் மண்டபம். அந்த இடமே ஜெகஜ்ஜோதியாய் திகழும். யோகாக்னி அதிகமாவதால் நல்ல ஆகாரம் வேண்டும்.

    அதனால் பெருமாளுக்கு 8 மணிக்கு பொங்கலும், மதியம் நெய்யிலே செய்யப்பட்ட சம்பார தோசையும் நிவேதிக்கப்படுகிறது.

    சராசரி உடல் ஆரோக்கியம் கொண்ட ஒருவர் ஒரே வேளையில் விதவிதமான உணவு வகைகளை உண்ண முடியாது. ஆனால், யோகிகளால் முடியும்.

    எனவேதான் ரங்கநாதருக்கு செல்வரப்பம், அரிசி வடை, தோசை, சர்க்கரைப் பொங்கல் போன்ற நைவேத்யங்கள் படைக்கப்படுகின்றன.

    எட்டாம் நாள் வேடுவர்பறி திருவிழா. இது 96 தத்துவங்களிலிருந்து விடுதலை பெற்றதைக் குறிக்கும்.

    முழுப் பட்டினியாக இருந்து பெருமாள் நாமத்தையே சுவாசித்து, புசித்து, உயிர்த்து வாழும் பக்தர்கள், பரந்தாமன் வழிகாட்ட, சொர்க்க வாசல் வழியாக சென்று அந்த நிறைவிலேயே தம் உண்ணா நோன்பை முடித்துக் கொள்வார்கள்.

    வேண்டியதை வேண்டியதற்கும் மேலே அருளும் திருவரங்கனை வைகுண்ட ஏகாதசி தினத்தன்று தரிசித்தால் இகபரசுகம் நிச்சயம்.

    பெருமாள் தங்கக் குதிரையில் உலாவருவார்.

    அது வாசியின் ஓட்டத்தைக் குறிக்கும். குதிரை என்பது மனது. குதிரைபோல மனதும் கட்டுக்கடங்காது முன்னும் பின்னும் ஓடும்.

    அதை நினைவுறுத்த குதிரைவாகனம் முன்னும் பின்னும் வேகமாக ஆடும்போது அதில் ஆரோகணித்திருக்கும் அரங்கனைக் காணக் கண் கோடி வேண்டும்.

    ராப்பத்து உற்சவத்தில் பரமபதவாசலைக்கடந்து திருமாமணி மண்டபத்தைச் சேர்வது ஜீவாத்மா சரீரத்தை விட்டு வைகுண்டத்தை அடைவதன் சாட்சியாகக் கருதப்படுகிறது.

    யோகத்தில் உள்ள சர்ப்பகதி, வியாக்ரகதி, கஜகதி, விருஷபகதி, சிம்ம கதி எனும் ஐந்து கதிகளிலும் பெருமாளின் வையாளி சேவை நடைபெறும்.

    இத்தகு பெருமை பெற்ற வைகுண்ட ஏகாதசியை சிரத்தையுடன் போற்றுவோம் …

    Share
  • கார்த்திகை தீப ஒளித் திருநாள்

     

    ராஜ ராஜேஸ்வரி  ஜெகமணி

    ”அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
    இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி
    ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
    ஞானத் தமிழ் புரிந்த நான் ”

    கார்த்திகை மாதத்தில்  மாலையில் விளக்கேற்றி வழிபட அருமையான துதி !

    சிவனுடன் சக்தி சேர்ந்த பொன்னாள்

    ஆறுமுகம் அவதரித்த சுப நாள் கார்த்திகை  தீபத் திருநாள்..!

    அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவது அஷ்டலட்சுமிகளும்  இல்லத்தில் இஷ்டமாக வந்து குடியேறி மங்களங்கள் மலர்விக்கும் பொன்னாளாகத் திகழ்கிறது…

    தமிழ் மக்களின் வாழ்வியலில் கலாசார பண்பாடுகளில் சிறப்புக்குரிய  ஒளித்திருநாளாக கார்த்திகைத் தீபம் கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது….

    .

     பஞ்சபூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்  இவைகளால் ஆனதே பிரபஞ்சம்.

    அவற்றுள் நெருப்பை வழிபடுவதுதான் தீபத் திருவிழா.

    நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில்தான். மகா தீபம் ஏற்றப்பட்டு பதினேழு நாட்களுக்கு பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.

    கார்த்திகைப் பெளர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்தால் சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக அன்று இறைவன் இருக்கிறான்.
     
    நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

    தீபத் திருவிழா நாட்களில் தேரோட்டம் நடைபெறும்;

    உண்ணா மலை அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்துச் செல்கிறார்கள்….

    தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் பரணி தீபமும், மாலையில் மலையுச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகின்றன.

    திருவண்ணாமலை ஜோதிக்கு நிகர் வேறெதுவும் இல்லை. பஞ்சபூத லிங்கத்தில் அக்னி லிங்கமாய் முதன்மையாய் விளங்குவது திருவண்ணாமலையாம் அருணாசலமே.

    திருவண்ணாமலை கிரிவலத்தில் முதல் அடியில் உலகை வலம் வந்த பலனும்,
    இரண்டாவது அடியில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனும்,
    மூன்றாவது அடியில் அஸ்வமேத யாகம் செய்த பலனும்,
    நான்காவது அடியில் அஷ்டாங்கயோகம் செய்த பலனும் கிடைக்கும்.

    திருவண்ணாமலையில் குன்றின் சிகரத்தில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது, உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் என்பது ஐதீகம்.

    அருட் பெருஞ்ஜோதியாம் ஆண்டவன் அருவமாகவும், உருவமாகவும் விளங்குவது போன்று அக்னியும் பிரகாசிக்கின்றது.

    அக்னியிலே பல விதமான தீபங்கள் தோன்றுவது போல் ‘சிவம்’ என்ற நாமம் ஒன்றே பல தத்துவங்களைக் கடந்து பற்பல ஜோதி ஸ்வரூபமாகக் காட்சி தருகிறது.

    அக்கினியின் சக்தியால் அழுக்கு களையப்படுகிறது.

    பிரம்மாவும், திருமாலும் சிவபெருமானின் அடி, முடியைக் காணாது தோல்வியுற்றனர்.

    ஆதி அந்தம் கடந்தவனை, முதலும் முடிவுற்றவனை இறுதியில் ஜோதிப் பிழம்பாக திருவண்ணாமலையில் கண்டு களித்தனர்.

    அதுவே ”லிங்கோத்பவ மூர்த்தி” ஆகும்.

    சிவ கார்த்திகை, விஷ்ணு கார்த்திகை என கார்த்திகை இரண்டாக கொண்டாடப்படுகிறது.

     திரிபுர அசுரர்களை அடக்கிய திருநாள் சிவகார்த்திகை என்றும்,

    மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க விஷ்ணு வாமன அவதாரம் எடுத்த நாள் விஷ்ணு கார்த்திகை என்றும் கொண்டாடப்படுகிறது.

    கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.

    கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுபவர்கள் புண்ணிய பலனை அடைவர்

    கார்த்திகைத் திருநாளன்று அவல் பொரியில் வெல்லத்தைப் பாகு காய்ச்சி ஊற்றி ‘கார்த்திகைப் பொரி’ செய்து நைவேத்தியம் செய்து வழிபடுவது சிறப்பு.

     கார்த்திகைப் பொரியில் ஒரு தத்துவம் உண்டு. வெண்மையாகவும், தூய்மையாகவும் இருக்கும் பொரியுடன் தேங்காய் துருவலைச் சேர்க்கிறோம்.

    தூய்மைக்கு அடையாளமாக வெல்லத்தைச் சேர்க்கிறோம்.

    வெண்ணீறு பூசிய சிவபெருமானை இந்த வெண்மையான நெல் பொரியும், வள்ளல் தன்மை கொண்ட மாவலியை தேங்காய் துருவலும் உணர்த்துகிறது.

    பக்திக்கு வசப்படும் இறைவன், பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பதே கார்த்திகைப் பொரி நமக்கு உணர்த்தும் தத்துவம்.

    சொக்கப்பானை வேய்ந்து பனை ஒலையால் சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர். ‘சொக்கப்பானையை வணங்குவது சொக்கப்பனை………’.

    சொக்கப்பனாகிய சிவனை ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை .

      கார்த்திகை சோமவாரத்தன்றும், தமிழக புராதன சிவாலயங்கள் யாவற்றிலும் அந்திப்பொழுதில் அதுவும் மகா பிரதோஷ காலத்தில் “நூற்றியெட்டு” சங்காபிஷேகம் இறைவனுக்குச் செய்யப்பட்டு வருவது வழக்கம்.

    இயற்கையாகவே ஐப்பசி, கார்த்திகை மாதத்தில், அதிக மழை பெய்யும்.  காலங்களில் பூச்சிகள் அண்டாமல் இருக்கவும், இல்லம் வெளிச்சம் பெறவும் வீட்டு வாசலில் விளக்குகளை ஏற்றி வைப்பதும், சொக்கப் பனை போன்ற தீபங்களை ஏற்றுதலும் வேண்டும்

    கார்த்திகைதீபம் உயரமாக மலைமீது ஏற்றப்படுவத்ற்கு விஞ்ஞான விளக்கம் உண்டு..

    சுழல் காற்றை சமன் செய்யும் குணம் அக்னிக்கு உண்டு..

    தை மாதம்  அறுவடையாக வேண்டிய பயிர்கள் பால்பிடிக்கும் பருவத்தில் காற்று சுழன்றடித்தால் விளைச்சல் பாதிக்கப்ப்டும்..

    அதனைக்குறைத்து திசைதிருப்பவே மலைமீதான தீபமும், வீடுகள் தோறும் ஏற்றிவைக்கும் தீபமும் பல்வழிகளில் பயன்படுகின்றன்..

    ஆன்மீகத் தேனில் குழைத்துத் தந்த அருமையான விழா..

    பன்முகப்பயன்பாடு..

    சந்திர ஒளிக்கிரணங்கள்,,,மலையின் ஆன்மீகக்கதிவீச்சு எல்லாம் கிடைக்கும் அரிய தத்துவ விளக்கம்…

    சகல ஜீவராசிகளும் பயன் பெறும் ஜீவகாருண்ய விழா.  

    ஐப்பசி பட்டாசு வெடிப்பும் வாணவேடிக்கைகளும் வெறும் விளையாட்டல்ல.. மழை அந்தப்பருவத்தில் பெய்தால் பயிர்கள் பாதிக்கப்படும்

    பட்டாசுகளின் கந்தகப்புகை மழை மேகங்களை கலைத்து வானிலையை சமப்படுத்தச் செய்த அற்புதக்கொண்டாட்டம்!  

    சமுதாயமாகசேர்ந்து பல கைகள் தட்டினால் ஓசை பெரு வெடிப்பாய் நிகழ்வதைப்போல வானிலை கால நிலையை மாற்றவே தீபத்திருநாட்கள் கொண்டாட்டம்.

    பெரும் புயலைத் தடுக்கும் வெப்பம் ..

    காற்றை திசைதிருப்பும் அழல்.

    உணர்ந்து மெய்சிலிர்க்கிறோம் நம் மெய்ஞானிகளை..

    Share
  • மரகதவல்லி மீனாட்சி !

     

     
    ராஜராஜேஸ்வரி ஜெகமணி


    யா தேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:
    நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமோ நம:                  

    அன்னையின் அன்பிற்கு ஈடாக ஏதும் இல்லை என்பதனாலேயே பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து இறைவன் அருள்வதாக இறைவனின் அடியார்கள் இறைவனைத் தாய்க்கு நிகராகக் கொண்டு வழிபட்டனர்.

    தாயின் வடிவில் அருள் புரியும் அன்னை பராசக்தி
    மதுரையில் மீனாட்சியாகஅருள் பாலிக்கிறாள்.

    அன்னை மீனாக்ஷி சின்னஞ்சிறு பெண்போல சிற்றாடை இடையுடுத்து பொற்றாமரைக்குளத்தருகில் கோவில் கொண்டு ஆட்சிபுரியும் மதுரையில் நவராத்ரி உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    பகல்- இரவு இரு வேளைகளிலும் ஒன்பது நாட்கள் பூஜை செய்வது நவராத்திரி விரதம் என்றும்; ஒன்பது இரவுகள் மட்டும் பூஜை செய்வது நவராத்திரி பூஜை என்றும்  அழைக்கிறோம்…

    முதல் மூன்று நாட்கள் அன்னை சக்தியையும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும்; கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வீடுகளிலும் கோவில் களிலும் கொலுப்படி அமைத்து வழிபடுகிறோம்..பத்தாவது நாளான விஜயதசமியை வெற்றித் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம்.

    சக்தி, செல்வம், ஞானத்தைத் தருவதாக  நவராத்திரி பூஜை அமைந்துள்ளது.

    மதுரை வீதிகளில் நடந்தாலே முக்தி.காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையில் வாழ்ந்தால் முக்தி

    தடாதகை, கோமளவல்லி, அங்கயற்கண்ணி, பாண்டிய ராஜகுமாரி, மாணிக்க வல்லி, சுந்தர வல்லி  என்றெல்லாம் அழைக்கப்படும் அன்னை மீனாட்சியின் விகரகம் சுத்தமான மரகத்தால் செதுக்கியது தேவலோகச்சிற்பியான மயன் !.

    மரகதவல்லி என்றும் அருமையாய் அழைக்கப்படுகிறாள் அன்னை !

    அன்னை மீனாட்சி கருணையே வடிவானவள் என்பதை அவளது நிறம் உணர்த்துகிறது…

    பொற்றாமரைக்குளம்  இறைவன் சோமசுந்தரேஸ்வரரால்  உருவாக்கப்பட்டது…
    பொற்றாமரைக்குளத்தில் தினமும் மலர்ந்த தங்கத்தாமரைகளால் சப்த ரிஷிகளும் அன்னை மீனாட்சியை ஆராதித்து வந்தார்களாம்.

    சங்கப்பலகைகொண்டு தமிழ்ப்புலவர்களை சோதித்த இடம் !

    மீன் , புழு , பூச்சிகள் என்று எந்த உயிரினமும்  வாழமுடியாத வரம் பெற்ற குளம் !

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய தமிழ்ப்புலவர்  நக்கீரர் இறைவனின் நெற்றிக்கண் வெப்பம் தாளாமல் குதித்த குளம் !

    மந்திரமாவது நீறு என்று கூண்பாண்டியனின் தீராத வயிற்றுவலியை  கோவில் பிரசாதம் சமைக்கும் அடுப்பின் சாம்பல் தீர்த்துவைத்து  உணர்த்தியது !

    மற்றவர்களின் கண்கள் இமைக்க வாய்ப்புண்டு; ஆனால், மீனின் கண்கள் இமைப்பதில்லை.

    மீன் இமைக்காமல், தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் தன்மையுடையது. அதுபோல், கயற்கண்ணியான மீனாட்சியும், தன் பக்தர்களை இரவும், பகலும் விழித்திருந்து பாதுகாக்கிறாள்.

    அவளது கண்கள் இமைப்பதில்லை என்பதால் தான், மதுரையும் தூங்கா நகராக விளங்குகிறது.

    மீன்தன் கண் பார்வையாலேயே தன் முட்டைகளை  போஷித்து  காத்து வளர்ப்பதைப்போல் தன் கண் இமையாமல் நம்மையையும் உ;லகத்து உயிர்களைப் பாதுகாத்து ரட்சிப்பதால் அன்னைக்கு மீனாட்சி என்று பெயர் …

    அன்னை மீனாக்ஷி தன் அருட்கண்களின் பார்வை பட்ட மாத்திரத்தில் அவளது சகல குழந்தைகளுமான புல்- பூண்டிலிருந்து ஆரம்பித்து பிரம்மாதி தேவர்கள்வரை எல்லோரையும் தனது கருணா கடாக்ஷத்தால் நனைத்து அறிவை, உயிரை வளர்த்து உய்வித்து விடுகிறாள்.

    .மதுரையில் மீனாக்ஷி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுவது கண்கொள்ளாக்காட்சி.

     மீனாட்சி அம்மனின் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக மீனாட்சி அம்மனுக்கு புதிதாக ஒரு வைர கிரீடம் தயாரிக்கப்பட்டுள்ளது. 11/2 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டு, 300 காரட் எடையுள்ள வைரக்கற்கள், 154 காரட் எடை கொண்ட மரகத, மாணிக்க, கற்கள் பதிக்கப்பட்டுள்ள வைரகீரிடம் அணிந்து அலங்காரமாய் காட்சி அளிக்கிறாள் அன்னை !

     

    Share