ராஜேஸ்வரி ஜெகமணி

ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்”

திருமயிலையில் சாம்பலாகிய பெண்ணை உயிர்ப்பிக்க திருஞான சம்பந்தர் பாடிய மயிலையில் கொண்டாடப்படும் பல்வேறு சிறப்பு மிக்க திருவிழாக்களுள் திருவாதிரையும் ஒன்று.

ஆருத்ரா தரிசனம் சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் ஒன்று

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளோடு இணைந்து திருவாதிரை வருவதால் விண்ணிலிருந்து சந்திரன் தன்னை தலையில் அணிந்து சாப விமோசனம் அளித்த சிவபெருமானின் அன்பர்களை தன் பதினாறு அமுத கலைகளால் தழுவுகின்றான்.

ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாக
ஓருருவம் ஓர் நாமம் இல்லாத சிவ பெருமான் செம்பவள மேனி வண்ணன் என்பதனால் அவரை சிவப்பு நட்சத்திரமான திருவாதிரைக்கு உரியவனாக்கி அவரை திருவாதிரையான் என்றும் அழைத்தும் அந்த திருவாதிரையன்று, ஆடும் அந்த அம்பலக்கூத்தனை சிறப்பாக வழிபடுகின்றோம்..

ஆருத்ரா என்பது ஆதிரையை குறிக்கும் சொல். சிவனுக்கு உரிய ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை. எனவேதான் இந்த திருவாதிரை நாளில் ஆடல் அரசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது

ஆருத்ரா தரிசன விழா ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில்
அருள்பாலிப்பார்.

ஆண்டுக்கு ஓரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று சிலையில் சந்தனம் களையப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும்..

கும்பகோணத்தில், மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெறும்.

அன்று 16 கோயில்களிலிருந்து சிவகாமியுடன் நடராஜர் தனித்தனியே புறப்பட்டு, திருக்குடந்தைக்கு ராஜாவாகிய அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயிலைப் பிரதட்சணம் செய்கின்றனர்.

தொடர்ந்து கிழக்கு வீதியில் ஒவ்வொரு கோயிலிலிருந்தும் வந்த நடராஜரும், ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வரர் சுவாமிக்கு தங்களுடைய மரியாதையைச் செலுத்தும் வகையில் அர்ச்சனைகள் நடைபெறும்.

பதிலுக்கு,ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வர ஸ்வாமியும் அந்தந்த கோயிலுக்கு உண்டான ஸ்வாமிக்கு பதில் மரியாதை செய்வார்.

திருமணமான பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்கக் காண வேண்டிய விழா ஆருத்ரா தரிசனம்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புண்ணிய ஸ்தலமான சுசீந்திரம் அறம் வளர்த்த நாச்சியார் கோவில் பிரசித்தமானது.

“ஆடல்வல்லான்’ என்று போற்றப்படும் ஆனந்த தாண்டவமாடும் நடராஜரை வழிபட்டால், மகிழ்ச்சி என்றென்றும் நிலைக்கும்.

சிவபெருமானுக்குரிய வடிவங்களில் முதன்மையானது நடராஜர் வடிவமே. இவர் ஆடுவது ஆனந்த தாண்டவம். அம்பலவாணர், சபாபதி, கூத்தப்பெருமான், நடேசன், சித்சபேசன், நடராஜன், கனகசபாபதி, பொன்னம்பலம் என்ற பெயர்கள் உண்டு.

திருவாதிரை நட்சத்திரம் நாள் தில்லை அம்பலத்தரசனுக்கு சிறப்பான விரத நாளாகும்.

திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் செய்து சகல பாவங்கள், தோஷங்கள், தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெறலாம் ..

ஆருத்ரா தரிசனத்தன்று ஆதிரைக் களி படைக்கும் வழக்கம் உண்மையான பக்தியுடன் எளிமையான உணவு படைத்தாலும் ஆண்டவன் ஏற்றுக்கொள்வான் என்பதே தாத்பர்யம்

திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி.

எனவே மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது.

திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி தின்னாதவர் நரகக்குழி என்பது பழமொழி மூலம் பிரசாதத்தின் மகிமை விளங்கும்.

களி என்றால் ஆனந்தம் என்று ஒரு அர்த்தம் ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜரை நாம் உண்மையான உள்ளன்புடன் வழி பட்டால் அவர் நமக்கு உண்மையான ஆனந்தமான மோக்ஷத்தை வழங்குவார் என்பதை உணர்த்துவதே களி படைப்பதன் உள்ளார்த்தம்.

கோவை பேருரில் எம்பெருமானின் பின்னே பின்னி தொங்கவிடப்பட்டிருக்கும் ஜடா முடியையும் நாம் கண்டு ஆனந்தம் பெறலாம்.

சப்த விடங்க ஸ்தலமான திருநள்ளாற்றிலும் அருணோதய காலத்தில் ஒரே சமயம் நடராஜப் பெருமானுக்கும், தியாகராஜப் பெருமானுக்கும் அபிஷேகம் நடப்பதை நாம் கண்டு ஆனந்தம் அடையலாம்.

சுயம்புவாக தோன்றி மிகப்பெரிய திருவுருவமாக விளங்கும் திருநல்லம் என்னும் கோனேரி ராஜபுரத்திலும் திருவாதிரைத்திருவிழா பத்து நாள் மாணிக்கவாசகர் விழாவாக கொண்டாடப்படுகின்றது.

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர்குழாங்கள் திசையணைத்தும்
நிறைந்து
பாரார் தொல் புகல் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.

என்று ஆனந்த சேந்தன் பாடிப் பரவியபடி, திருமால், பிரம்மன், இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்து எம்பெருமான் ஆதிரைத் தேரோட்டத்தை காணும் அழகை தரிசிக்கும் திருநாளே திருவாதிரைத்திருநாள் ..

கோயிலின் உள்ளே சென்று வழிபட முடியாதவர்களுக்காக தானே வெளியே வந்து தேரார் வீதியில் திருத்தேரில் வந்து நடராஜப் பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் அருட்காட்சி அளித்து ஆனந்தம் பொழியும் அற்புதத்திருநாள் ..!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க