Tag: குறுங்கதை

  • இப்படியும் ஏமாற்றுவாளா !

    ரா. பார்த்தசாரதி.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    நளினி எப்பொழுதும் எந்தக் கலர் புடவையில்சென்றாளோ அதே கலர் புடவையுடன் திரும்புவாள். எல்லா சேல்ஸ் மேனும் அவள் கையாள். வரும்போது சலவை புடவையுடன் வருவாள் …புதுப் புடவையை எடுப்பாள். அலங்கார அறைக்குள் சென்று உடுத்திய புடவையை அழகாக மடிப்பாள், விலை லேபிளை ஒட்டிவிட்டு, புதுப் புடவையை உடுத்துவாள். அக்கடை ஆட்களை வைத்தே உடுத்தியதை கலைக்கப்பட்ட புடவை குவியலில் கலந்திடுவாள்.. காமேராக்களும் பார்த்துக்கொண்டு இருந்தன.

    Share
  • ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்

    — கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    “நீங்கள்தான் கட்லட் செய்து வருவதாக எல்லாருக்கும் சொல்லி இருக்கின்றேன். வரும்போது 50 கட்லட்டுகளுடன் வாருங்கள்.”

    பிறந்தநாள் விருந்து தொடங்கியது.

    பிளேற் ஒன்றிற்குள் பலகாரங்களைப் போட்டுக் கொடுத்தார்கள். கட்லட்டைக் கடித்த போது கசந்தது.

    நண்பியைக் கூப்பிட்டேன். நாங்கள் கொண்டு வந்த கட்லட் எங்கே?

    “அது” எங்களுக்கு. நான் வேலை செய்யும் இட்த்திற்கு கொண்டு போகப் போகின்றேன். ‘இது’ நான் செய்தது. உங்களுக்கு!

    வேலை செய்யும் இட்த்தில் அவருக்குப் புகழ். இங்கே எனக்கு?

    Share
  • நிதி சேகரிப்பு

    — கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    சறிற்றிக்காக முப்பது டொலருக்கு சொக்கிளேற்றுகளை விற்க வேண்டும்.

    தாயாருடன் பிரணவன் அயல் வீடுகளுக்குச் சென்றான். இரண்டு டொலர்களுடன் கவலையாக வந்தான்.

    நாளை அடுத்த வீதிக்குச் செல்வோம் என்றார் அம்மா.

    மறுநாள் பிரணவன் பாடசாலை சென்றதும், தாயார் அடுத்த வீதிக்குச் சென்றார். மகனிடம் சொக்கிளேற் வாங்கும்படி நாணயக்குற்றிகளை அவர்களிடம் கொடுத்தார். பலர் காசை வாங்க மறுத்து, தாங்கள் மகனுக்கு உதவுவதாகச் சொன்னார்கள்.

    மாலையில் எல்லாவற்றையும் விற்று மகிழ்ச்சியில் வந்தான் மகன்.

    Share
  • பெண்ணியம்!

    — கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    logoகனகமணி ஆசிரியர். பெண்ணிய கருத்துகளில் ஈடுபாடு கொண்டவர்.

    கணவர் வீட்டு வேலைகள் செய்வதற்காக மலையகத்திலிருந்து ஒரு பெண்ணைக் கூட்டி வந்தார். கனகமணி இல்லாத சமயங்களில் அவர் அவளுடன் சில்மிஷம் புரிந்தார்.

    “அம்மாவிடம் சொல்வேன்” என்பாள். வேலை பறிபோய்விடும் என்பதால் சொல்லுவதில்லை.

    எல்லை மீறியபோது ஒருநாள் போட்டுடைத்தாள்.

    “இஞ்சை வரும் போது என்னிடம் கேட்டுவிட்டா வந்தாய்? நீயும் அவரும் பட்டது பாடு” என்றாள் கனகமணி.

    Share
  • லொட்டோ

    — கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    lotto-logo-ballsஎமது தொழிற்சாலை முகப்பில் ராஜாவின் பிரேதம் சூட்டுக் காயங்களுடன் கிடந்தது.

    ராஜா நன்றாக வேலை செய்வான். வேலை இடத்தில் பல பேரைச் சேர்த்து ‘பவர் போல்’ போடுவான். ஆரம்பத்தில் இலக்கங்களைச் சரி பார்த்த நண்பர்கள், காலப் போக்கில் அவனில் நம்பிக்கை வைத்து அவனிடமே முழுப் பொறுப்பையும் ஒப்படைத்தார்கள்.

    மாதங்கள் கடந்தன. திடீரென்று ஒருநாள் வேலை மாறி தொலைதூரம் போனான். அங்கே மாளிகை கட்டினான். இன்று கொலையுண்டு கிடக்கின்றான்.

    Share
  • தந்திரம்

    — கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    அனேகமாக கொட்டாஞ்சேனை பஸ் ஸ்ராண்டில், ஏதாவது நொண்டிச் சாட்டுகள் சொல்லிக் காசு கேட்டபடி நிற்பான் அவன்.

    காசு கிடைத்ததும் குடிப்பதற்காகச் சென்று விடுவான்.

    அன்றும் அப்படித்தான்.

    மருதானைக்குப் போக பஸ்சுக்குக் காசு வேண்டும் என்றான்.

    தரலாம், இதிலே நின்று கொள் என்றேன். என் கைகளைப் பார்த்தபடி நின்றான்.

    மருதானை பஸ் வந்தது. பஸ்சினுள் ஏறிக் கொள், நடத்துனரிடம் காசைக் குடுக்கின்கறேன் என்றேன்.

    மெதுவாக நழுவி விலகினான்.

     

     

    Share
  • அவரைப் போல …

    — கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

     

    பொங்கல் அன்று தவம் கோயிலுக்குப் போனபோது, மனைவியின் கைப்பையை சிறிது நேரம் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    அது அவரது தோள்ப்பட்டையில் இருந்து ஊஞ்சலாட்டம் ஆடியது.

    அந்தக் காட்சியை பல இளம் பெண்கள் பார்த்து விட்டார்கள்.

    “எங்களுக்கும் அவரைப் போல மாப்பிள்ளை வேணும்” என்று தமது பெற்றோரிடம் அன்புக் கட்டளை இட்டார்கள் அவர்கள்.

     

     

     

     

     

    Share
  • இமெயில் காதல் …

    –ரா. பார்த்தசாரதி.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    Love-Emailசுமதியும், சுரேஷும் ஒரே தெருவில் வசிப்பவர்கள். இருவரும் வெவ்வேறு கல்லூரி. அவர்களின் சந்திப்பே பஸ்சில்தான்.

    தினம் இருவரும் இமெயில் மூலமே தொடர்பு கொண்டு அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வர். நாளடைவில் இமெயில் நட்பு காதலில் முடிந்தது.

    சுரேஷ் படிப்பை முடித்து அயல்நாட்டு வங்கியில் பணியில் சேர்ந்தான். சுமதியின் சம்மதம் பெற அன்புடன் அவன் அனுப்பிய வார்த்தைகள்.

    Ennodu-Mattum Anbudan Iniya Life-ல் இணைவாயா !

    Share
  • லம்போகினி கார்

    –கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    wptv 3_luxury_cars_hit__tires_stolen_from _carமைத்துனருக்குக் கலியாணம். ரொறன்ரோ விமான நிலையத்திற்கு என்னை அழைக்க வந்திருந்தார். தனது லம்போகினி வாகனத்தைப் புகழ்ந்தபடியே வந்தார். வீட்டை அண்மித்ததும் ஹோட்டலிற்கு முன்னால் காரை நிற்பாட்டினார்.

    உணவை வாங்கி, காரில் ஏறியபோது ஸ்ராட் செய்ய மறுத்தது.

    “லம்போகினியும் பழுதாகுமா?”

    முழுசிப் பார்த்தான்.

    இரவு பதினொன்று. காரை அங்கேயே நிறுத்திவிட்டு, ஹோட்டலின் உரிமையாளரான மைத்துனரின் நண்பருடன் வீடு வந்தோம்.

    மறுநாள் காரை எடுக்கச் சென்றபோது, நான்குபக்கமும் செங்கல் அடுக்கப்பட்டு ரயர்கள் கழற்றப்பட்டிருந்தன.

     

     

     

    படம் உதவி: http://www.wptv.com/news/region-c-palm-beach-county/palm-beach/thieves-stole-tires-and-a-car-from-palm-beach-driveways

    Share
  • நான் ஓர் அகதி

    –கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    World Refugee Day 2013நான் சமீபத்து அகதி. நண்பன் 16 வருட அதிதி, பொறியியலாளன், (கொழுத்த) மனைவி சீதனம்.

    ஒருநாள் சந்தித்துக் கொண்டோம்.

    வாடகை வீட்டிலா இருக்கிறாய்? காசு தருகின்றேன். வீட்டை வாங்கு. கொஞ்ச வட்டிதான்.

    வீடு வாங்கினேன். காலம் மாறியது. வட்டி ஏறியது. வேலை நின்றது.

    மகனுக்கு வருத்தம், காசைத் தா மனமறியப் பொய் சொன்னான்.

    அற விலைக்கு வீட்டை விற்று தன் பணத்தை எடுத்தான்.

    மீண்டும் வாடகை வீட்டில் நான்.

     

     

     

    படம் உதவி: http://rabble.ca/multimedia/2013/06/world-refugee-day-2013

     

     

     

    Share
  • “நம்பிக்கை”

    — சரஸ்வதி ராசேந்திரன்.
    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    malaysia airline‘’இது ரொம்ப தப்பு ஆறுமுகம், உன்னை நம்பிய மக்களை மோசம் பண்ணுவது நம்பிக்கைத் துரோகம், வேண்டாம்ப்பா‘’ என்றான் விஷால்.

    மக்கள் கொண்டுவந்து கொட்டிய பணத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு வெளிநாட்டிற்கு ஓடிவிடும் நோக்கத்தோடு ஃபைனான்சியர் ஆறுமுகம் ஃப்ளைட்டில் பறந்தார் குடும்பத்தோடு. தவறு என்று தடுத்த நண்பனையும் சட்டை செய்யவில்லை.

    அடுத்த நாள் பேப்பரில் செய்தி:
    சென்னையிலிருந்து கிளம்பிய மலேசிய விமானத்தைக் காணவில்லை, அதிலிருந்த முன்னூறு பேர் என்ன ஆனார்களென்றே தெரியவில்லை.


     
     
     
     
     

    படம் உதவி: http://www.malaysiaairlines.com/my/en.html

    Share
  • இயல்புநிலை திரும்பியது …

    — தேமொழி.
    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    angry birdமலர் கவலையுடன் வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்தாள். மது வழக்கமாக வீடு வரும் நேரம் கடந்து இருட்டவும் துவங்கி விட்டது.

    ஒருவழியாக வாசல் கதவைத் திறந்தவன் சோர்வுடன், “வண்டியும் பிரேக் டவுன், செல்ஃபோனிலும் சார்ஜ் இல்லை,” என்றான்.

    அவனைக் கண்டதும் நிம்மதி அடைந்திருந்தவளுக்கு உடனே கோபம் வந்தது. “அதென்ன பொறுப்பில்லாத்தனம், எங்கேயும் ஃபோனே இல்லையா, அடுத்தவங்க கவலைப் படுவாங்களேன்னு கொஞ்சமாவது கருத்து இருந்தாத்தானே?” என்று சீறினாள். இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டாள் அவள்.

     

     

     

     

     

    படம் உதவி: http://www.scooppick.com/things-most-common-in-indian-wives/

    Share
  • அந்தரங்கம்

     ரா. பார்த்தசாரதி.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    photo albumதிருமணம் முடிந்து ஒரு வருடம் நெருங்கிற்று. சுரேஷுக்கு அவசரம்.

    அன்று இரவு சுமதியிடம், “இன்னிக்காவது காட்டுவாயா, இல்லையா?”

    “என்னஅவசரம்? பொறு சுரேஷ் ”

    “ஏமாற்றாதே சுமதி என்றான்” அருகில் சென்று ஒரு முத்தம்.

    “இன்னிக்கு இது போதும், நாளை காட்றேன்”

    மறுநாள் …..

    இரவு சுமதி கதவை மூடினாள். மிக நெருக்கமாக அமர்ந்தாள், திறந்து காட்டினாள் அவர்களின் திருமண புகைப்படங்களை.

    அன்று அவர்களின் திருமணநாள்..

     

     

     

     

     

     

    படம் உதவி: http://imgarcade.com/1/south-indian-wedding-photo-album-design/

    Share
  • “இடி இறங்கியது”

    — தேமொழி.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    buildingகொட்டும் மழையில் கட்டிடத்தை விட்டு வெளியேறியவன் மனம் வெறுத்திருந்தான். இப்போழுதே உயிர் போனால் எவ்வளவு பிரச்சனை தீரும் என மனம் ஏங்கினான்.

    “காத்திரு, உடனே அங்கு வந்துவிடுகிறோம்” என்று தொலைபேசிய நண்பர்கள்…. இல்லை…. அவனறியாமல் கஞ்சாக் கடத்தலில் அவனை மாட்டிவிட்டிருக்கும் துரோகிகள் சொன்னதைப் பொருட்படுத்தாமல் நடந்தான். கைப்பையிலோ கோடிக்கணக்கான குற்றப்பணம் கனத்தது. தப்பிக்க என்ன வழி?

    பெரும் சப்தம் கேட்டுத் திரும்பியபொழுது இடியிறங்கி அவன் வெளியேறிய கட்டிடம் தரை மட்டமாகியிருந்தது.

     

    படம் உதவி: http://www.stuff.co.nz/the-press/news/christchurch-earthquake-2011/4867859/Death-Zone

    Share
  • இவ்வளவுதான் உலகம்

    -கே.எஸ்.சுதாகர்

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    ரெலிவிஷனின் காலம் முடிந்து, ஐ-பாட் கொம்பியூட்டருடன் நேரம் கரைகின்றது. உள்ளங்கையில் உலகம் தெரிகின்றது.
    கழிவு அகற்றும் கவுன்சில் வாகனம் வருகின்றது. அதை வைப்பதற்கும் எடுப்பதற்கும் மாத்திரம் முன்புறம் போவதுண்டு. எதிர் வீட்டிலிருந்து ஒருவன் புன்னகைக்கின்றான். இதுவரையும் அங்கே ஒரு பெண்ணைத்தான் கண்டிருக்கின்றேன்.
    கடந்த டிசம்பரில் அந்த வீடு விற்பனைக்கு விடப்பட்டிருந்தது. இப்போது அடுத்த கிறிஸ்மஸ்.

    அவனே என்னை நோக்கி வருகின்றான்.

    அவன்!

    என்னுடன் வேலை செய்யும் சக நண்பன்.

    Share