Tag: பிரான்ஸ் பெஞ்சமின் லெபோ

  • சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 5

    பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ

    கட்டுரையின் பகுதி 4 -இல் கூறியதை நினைவில் கொள்வோம் :

    சைவ சமயமும் அறிவியலும் இரு பெருங் கடல்கள். இவற்றுள் மூழ்கி முத்தெடுப்பது எளிதன்று. நம் ஆய்வைக் குறுகிய வட்டத்துக்குள் கொண்டுவந்தால் ஒழிய இது சாத்தியம் ஆகாது. எனவே நம் ஆய்வுப் பொருளாக அண்டம், பிண்டம் என்ற இரு பிரிவுகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். அண்டத்துள் பிண்டம் அடங்கும் ; பிண்டத்துள் அண்டம் அடங்கும். இதனை, சட்டமுனிஞானம் என்னும் சித்தர்

    “அண்டத்தி லுள்ளதே பிண்டம்
    பிண்டத்தி லுள்ளதே அண்டம்
    அண்டமும் பிண்டமும் ஒன்றே
    அறிந்துதான் பார்க்கும் போதே” என்பார்.

    திருமூலர் காலத்தில் இருந்து இன்றுவரை சைவப் பெரியார்கள் கருத்து இதுவே..ஒன்றை அறிந்தால் மற்றதை அறியலாம். இதனைத்தான் திருமூலர்,

    “பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
    அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில்
    வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார்
    கண்டிச் சிக்குநற் காயமு மாமே” என்கிறார்.

    அண்டம் என்ற பிரபஞ்சத்தின் பின்புற வாசலாகப் பிண்டம் என்ற உடம்பு இருக்கிறது. இப் பிண்டத்தை மீண்டும் மீண்டும் ஆய்ந்தால் – அதில் தியானித்தால் பூவின் தேனை வண்டு சுவைப்பது போல் இந்தக் காயம் என்பதன் வழியாகப் பிரபஞ்சத்தின் தேனை ருசிக்க (இரகசியத்தை அறிய) முடியும்.
    பிண்டத்தை ஆராய்ந்தால் அண்டத்தின் செய்திகள் தெரியவரும்.

    பிண்டம் என்பது நம் உடல். இதுதான் மையப் புள்ளி. இதற்கு உள்ளே இருப்பது பிண்டம் இதற்கு வெளியே இருப்பது அண்டம். நம் உடலுக்கும் (நமக்கு வெளியே இருக்கும்) அண்டத்துக்கும் ஏதாவது ஒப்புமை, தொடர்பு … இருக்குமா? இருக்க முடியுமா! இருக்கிறது என்று அறுதி இட்டுக் கூறுகிறது (அக்காலச்) சைவ சமயம். இக்கால அறிவியல் இது பற்றி என்ன சொல்கிறது? நீங்களே பாருங்கள் :

    – அளவிடற்கரிய அண்டம் (இது பற்றிப் பின்னர் பார்ப்போம்) மூடிய வடிவு (closed form) உடையது.. நம் உடலும் அப்படியே!!

    – கோடி கோடிக் கணக்கான விண்மீன்கள் அண்டத்தில் உண்டு. உடலில் கோடி கோடிக் கணக்கான உயிரணுக்கள் (cells) உள்ளன (ஏறக்குறைய 100 டிரில்லியன்)

    – அண்டம் சதா அசைந்துகொண்டே இருக்கிறது … மூலக்கூறுகள் அளவிலும் அணுத்துகள்கள் அளவிலும் (in motion on a molecular, cellular and atomic scale). உடலும் அப்படியே .

    – அண்டம் வளர்ந்துகொண்டே, விரிவடைந்து கொண்டே போகிறது.கருவிலே உருவான நாள்தொட்டு இறக்கும் வரை உடலும் வளர்கிறது, விரிவடைந்துகொண்டே போகிறது.

    – அண்டத்துக்கு ஆயிரம் ஆயிரம் (கருந்) துளைகள் (black-holes) ; உடலுக்கு? எலும்பு, தோல்… முதலியவற்றில் எத்தனை எத்தனை துளைகள்! குறிப்பாக ஒன்பது ஓட்டைகள் என்று சித்தர்கள் கேலி செய்வார்கள். (இஃது ‘ஓட்டை வீடு ஒன்பது வாயில்’ என்று கண்ணதாசன் பாடுவார்).

    – அண்டம் முழுக்க மின்துடிப்புகள் (electrical implulses) ;உடலிலும் அப்படித்தானே!

    – அண்டத்தில் உள்ள கருந்துளைகள் பொருளையும் ஆற்றலையும் (matter & energy) விழுங்கிக்கொண்டே உள்ளன ; உடலும் பொருளை (உணவை) யும் ஆற்றலையும் விழுங்கிக்கொண்டே இருக்கின்றது.

    – ஆற்றல் படுகைகளால் (interwoven in energy layers called the fabric of space ) நெய்யப்பட்டுள்ளது அண்டம். ; உடலோ என்பு, தசைகள் நரம்புகளால்
    நெய்யப்பட்டிருக்கின்றது.

    – அண்டத்தில் 70 விழுக்காடு நீரணுக்களே (hydrogen) ; நம் உடலில் அதே விழுக்காடு உள்ள நீர் (அணுக்கள்) உண்டு!

    – ஒருமையில் இருந்து பல்கிப் பெருகி உருவானது அண்டம் ; ஒற்றை உயிரணுவில் இருந்து உருவானதுதானே உடலும் .

    எனவே நாமும் திருமூலரைப் பின் பற்றி முதலில் பிண்டத்தைப் பார்ப்போம்.

    பிண்டம் என்பதற்கு ‘உடல்’, ‘கருப்பம்’, ‘சோறு’ என்று பொருள் தருகிறது நா.கதிரைவேற்பிள்ளை தொகுத்த தமிழ் அகராதி. இந்தப் பிண்டம், இந்த உடல் இந்தக் கருப்பம் (கரு) எப்படி உருவாகிறது? இதற்கு உரிய அறிவியல் விடையை, விளக்கத்தை அறியாதவர்களே அதிகம் பேர். கரு உருவாகும் அற்புதத்தை, வித்தையை அறியவேண்டுமானால் அறிவியல் துறைகள் பலவற்றின் அடிப்படை அறிவு மிகத் தேவை! அறிவியல் படித்தவர்களுக்கு இவை தெரிந்திருக்கும். மற்றவர்களுக்கு? அந்த மற்றவர்களுக்காக இங்கே அடிப்படை விளக்கங்கள் சில தரப்படுகின்றன.ஏற்கனவே அறிந்தவர்கள் இப்பகுதிகளை விடுத்து மேலே செல்லலாம். சரி, தேவைப்படும் அறிவியல் துறைகள் எவை? உயிரியல் (biology),சினையியல் (embriology), மகப்பேற்றியல் (Obstetrics.)…போன்றவை. தேவையான அளவு மட்டுமே இவை பற்றிய தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.

    பருப்பொருள்களுக்கு அடிப்படையாக அமைவன அணுக்கள் ; உயிர்ப் பொருள்களுக்கு அடிப்படை : செல்கள். உயிரணுக்கள் எனத் தமிழில் சொல்லலாம். மனித உடம்பில் 100 trillion (10 to the power of 18=1018 = 1,000,000,000,000,000,000 அதாவது ஒன்றுக்குப் பிறகு 18 சுண்ணங்கள் இட்டு எழுதவேண்டும்) உயிரணுக்கள் (செல்கள்) உண்டாம்.

    பல வகை உயிரணுக்கள் இருக்கின்றன. ஒவ்வோர் உயிரணுவும் முக்கியமான மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.

    உயிரணு மென்சவ்வு (Cell Membrane) – வெளியுறை
    குழியுருவு (Cytoplasm) – பாய்பொருள்
    கரு – (nucleus) – உயிரணுவின் கட்டுப்பாட்டு மையம். (மரபுத்தகவல்கள் அடங்கியுள்ள பகுதி).

    பல வகை உயிரணுக்கள் இருக்கின்றன. உயிரணு ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழில் புரிகின்றன. தசைத் திசுக்களை ஒருவகை உயிரணு உருவாக்கினால் வேறொரு வகை உயிரணுக்கள் மூளைத் திசுக்களை உருவாக்கும் ; எனவே என்புத் தோல் போர்த்த இவ்வுடம்பின் நரம்பு, இரத்தம், சதை, உள்ளுறுப்புகள்… என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை உயிரணுவால் உருவாக்கப்பட்டவையே என அறிக! இவை யாவற்றிலிருந்தும் வேறுபட்டு மாறுபட்டு இருப்பவை இனப்பெருக்கத்துக்கான செல்கள். இவற்றை ஆங்கிலத்தில் ‘gametes’ என்பர். ஆணில் உள்ள இந்தச் செல், விந்து (sperm, spermatozoa) எனப்படும் ; பெண்ணில் உள்ள இந்த இனப்பெருக்கச் செல்லுக்குச் சினை அல்லது ‘முட்டை (ova, ovum, oozite) என்று பெயர். ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபடும்போது இவ்விரண்டு செல்களும் தம்முள் இணைந்தால் ‘கரு’ உருவாகும். இந்தக் கருவை ஆங்கிலத்தில் ‘zygote’ என்று அழைப்பர். இவ்விரண்டு செல்களுக்கும் ஏனைய உயிரணுக்களுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு என மேலே பார்த்தோம். அப்படி என்ன பெருத்த வேறுபாடு, மாறுபாடு?

    எல்லாச் செல்களுக்கு உள்ளும் குரோமோசோம் (chromosomes) எனப்படும் நிறவணுக்கள் உண்டு. இவை செல்லின் நடுக் கருப்பகுதியில் (nucleus) பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். (இக் குரோசோம்களின் உள்ளே ‘genes’ – தமிழில் ‘மரபணுக்கள்’ உள்ளன. நம்மைப் பற்றிய தவல்கள் – நம் நடை, குண நலன்கள், பாவனை, பழக்க வழக்கங்கள்…- அடங்கிய பெட்டகம் இவை.)

    நிறவணுக்களில் இரண்டு வகை உண்டு : ஒன்று X வடிவு உடையது ; இது பெண்மை ; மற்றது y உருவில் இருக்கும் ; இஃது ஆண்மை. ஒவ்வொரு செல்லுக்கு உள்ளும் நிறவணு இணைகள் 23 ஆக மொத்தம் 46 குரோசொம்கள் இருக்கும். எல்லாச் செல்களுக்கும் இது பொருந்தும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் 22 இணைகளின் குரோசொம்கள் ஒரே மாதிரிதான் ; இவற்றை ‘autosommes’ என்பர். 23 -ஆவதாக இருக்கும்.குரோமோசொம்தான் பால் நிர்ணயிக்கும் குரோமோசோம் (sex chromosome) ஆகும். இஃதில் உள்ள இரண்டு குரோசோம்களில் இரண்டுமே XX ஆக இருப்பின் அதுதான் பெண் ஆகும் ; மாறாக, XY ஆக இருந்தால் அஃது ஆணாகும்.

    Chromosomes X Y

    பெண்ணின் சினை (முட்டை)க்குள் உள்ள 23 குரோமொசொம்களோடு ஆணின் விந்துவில் உள்ள 23 குரோமொசொம்கள் இணையும் போது செல் உருவாகத் தேவையான 46 குரோமொசொம்கள் எண்ணிக்கை நிறைவாகின்றது.. செல்லும் முழுமையாக உருவாகிறது. பின்னர் கருவாகிறது.

    ஆணின் பருவ காலத்தில் குமரப் பருவத்தில் உருவாகத் தொடங்கும் விந்தணுக்கள்
    கிழப் பருவம் வரை கூடத் தொடருகிறது.ஆண் தன் வாழ் நாளில் பலப் பல கோடி விந்தணுக்களை உருவாக்குகிறான். ஆனால் பெண்ணுக்கு இப்படி இல்லை!
    ஒன்று முதல் இரண்டு மில்லியன் முட்டைகளோடு பெண் பிறக்கிறாள். காலம் செல்லச் செல்ல முட்டைகளை இழக்கிறாள்! பூப்பெய்தும் போது அவளிடம் இருக்கும் முட்டைகள் நாலு லட்சம்தான். பூப்புப் புறப்பாட்டில் இருந்து மூப்படைந்து மாதப் போக்கு நிற்கும் வரை மாதம் தோறும் ஆயிரம் முட்டைகளை அவள் இழக்கிறாள். இந்த ஆயிரம் முட்டைகளில் ஒன்றுதான் முதிர்ச்சி அடைந்து முழு முட்டை ஆகிறது. சூல் பையில் இருந்து வெளி வரும் இந்த முட்டையை பலோப்பியன் குழாய் வரவேற்கிறது.இந்தச் சமயத்தில் கலவி நேர்ந்தால் கருத் தரிக்கும். இல்லையானால் அந்த முட்டை சிதைவுற்று வெளியேற்றப்படும். இதனைத்தான் மாதப் போக்கு என்கின்றனர். ஆண்களிடம் பல கோடி விந்தணுக்களை உருவாக்கும் இயற்கை பெண்களுக்கு மட்டும் ஓர வஞ்சனை செய்வது ஏன்? இந்தக் கேள்விக்கு விடை காண்பவர்களுக்கு நோபல் பரிசு காத்திருக்கிறது.

    முட்டையில் X என்ற ஒற்றை நிறவணு மட்டுமே இருக்கும். விந்தணுவிலோ X அல்லது Y என்று ஒற்றையாகவே நிறவணு இருக்கும். முட்டையில் உள்ள X உடன் விந்தணுவில் இருந்துவரும் X நிறவணு சேர்ந்தால், உருவாகும் கருவில் எல்லா நிறவணுக்களும் XX ஆக அமைந்து பெண் குழந்தை உருவாகும்.; அப்படி இல்லாமல் Y சேர்ந்தால் XY என ஆகி அது ஆணாக வளரும்.chromosomes_1 எனவே குழந்தை ஆணா பெண்ணா என நிர்ணயிப்பது ஆணில் உள்ள குரோமோசோமே தவிரப் பெண் இல்லை. இதை உணராத மூட ஆண்கள், தம் மனைவியர் பெண் பிள்ளை பெறும் போது அவர்களை இழித்தும் பழித்தும் பேசுவதும் வதைப்பதும் அவர்கள் மனத்தைச் சிதைப்பதும் எவ்வளவு கொடுமை! X நிறவணுதான் முழுமையானது ; ஆகவே முழுக்க முழுக்க X நிறவணுவால் உருவான பெண்ணே முழுமையான படைப்பு ஆகிறாள். ஆண்தான் அரைகுறை படைப்பு. அறிவியல் புகட்டும் அருமையான பாடம் இது. ஆண்கள் மட்டும் இதனை முழுமையாக உணர்ந்து முழு மனத்துடன் ஏற்றுக்கொண்டால் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை குறையும் ; நாளடைவில் முற்றாக மறையும்.

    இனி அடுத்த கட்டத்தைக் காண்போம் : பருவம் அடைந்த பெண் மாதம் தோறும் ஒரே ஒரு முட்டையை உருவாக்குகிறாள். கருப்பையின் இரு புறமும் கைகளை விரித்தால் போல் குழாய்கள் இரண்டு உள்ளன. இவற்றைப் பலோப்பியன் குழாய்கள் என்பர் (Fallopian tubes). இவற்றின் இறுதியில் சூலகங்கள் உள்ளன. முட்டை உருவாவது இங்கேதான். சூலகத்தில் உருவாகி முதிர்ச்சி பெறும் முட்டை, பலோப்பியன் குழாய் ஓரம் (விந்தணு வரவு நோக்கிக் காத்து) நிற்கும்,
    வாயிற் படியருகே கணவன் வரவுக்குக் காத்திருக்கும் மனைவி போல. அந்த நேரத்தில் கலவி ஏற்படுமானால் என்ன நேரும்?

    Vaginaஆண் வெளிப்படுத்தும் விந்து – நீர்மத்தில் (seminal fluid) நீச்சல் அடித்தபடி, வாலாட்டியபடி, ஆர்வமுடன் ஓடிவரும் பல்லாயிரக் கணக்கான விந்தணுக்கள் பெண் உறுப்பு வழியாகக் ‘கடை திறப்பு’ப் பாடியபடி, பாய்ந்தோடி முட்டையைத் தேடி வரும், கோட்டையை முற்றுகை இடும் போர் வீரர்களைப் போல. உண்மையிலேயே பொருத்தமான உவமை இது. பல்லாயிரக் கணக்கான விந்தணுக்கள் படைஎடுத்தாலும் முட்டையை நெருங்குபவை மொத்தமே 50, 60 விந்தணுக்கள் மட்டுமே. மற்றவை ? போரில் புறங்கொடா வீரர்களாய் மடிந்து போகும்.

    விசித்திரக் கோட்டை இது! இதற்கு வாயில் ஏதும் இல்லை! முட்டையை நெருங்கிய விந்தணுக்கள் எல்லாமே உள்ளே புக முடியாதபடி முட்டையின் (கோட்டைச்) சுவர் காத்து நிற்கும். விந்தணுவின் தலைப் பகுதியில் வேதியல் பொருள் ஒன்று உள்ளது, (nuclear war-head ஏந்திய இராக்கெட் போல). இப்பொருள் கோட்டைச் சுவற்றில் துளை இட்டு வழி செய்து தரும். இதன் வழியாக ஏதாவது ஒரு விந்தணு மட்டுமே வெற்றி வீரனாய் உள்ளே நுழையும். அதன்பின், எந்த விந்துவும் உள்ளே புகமுடியாதபடிக் கோட்டைச் சுவர் மாறிவிடும். எத்தனை அற்புதமான, நுட்பமான கோட்டை இது!

    இவ்வளவு நேரம், இவ்வளவு தூரம், விந்தணு வீரனை உந்தித்தள்ளி வர உதவிய வால் வெட்டுப்படும். உள்ளே நுழைந்த விந்தணுவில் உள்ள செல் ஒன்று ; முட்டையில் இருக்கும் செல் மற்றொன்று ; இவை இரண்டுமே நிறவணுக்களின் எண்ணிக்கை நிறைவடையாதவை. இவை இரண்டும் தம்முள் கலக்கின்றன. ஆண் விந்தணு தாங்கி வந்த X அல்லது Y நிறவணு முட்டைச் செல்லில் உள்ள X நிறவணுவுடன் இணையும் போது 23+23 =46 என்ற எண்ணிக்கை நிறைவாகிறது. இந்தக் கலப்பினால் ஒரே செல் உருவாகிறது.

    இந்த ஒரு செல் இரண்டாகப் பிரிகிறது ; பிறகு அவை நாலாக , எட்டாக, பதினாறாக , முப்பத்திரண்டாக …. பெருகுகின்றன . அதாவது 1>2>4>16>32>64….. இந்த நிலையில் அது கருவாக மலருகிறது. அதன் உள்ளே புதிய உயிர் துளிர்க்கிறது. (கவனிக்க : இதுவரை இருந்த முட்டைக்கு உயிர் கிடையாது! அஃது உயிர் இல்லாதது! ஆகவே அது நகர இயலாது!) இப்படி உருவான கரு, உயிர் பெற்றிருப்பதால் மெல்ல நகரும் ; பெருகிக்கொண்டே நகரும் அல்லது நகர்ந்துகொண்டே பெருகும். இப்படி நகர்ந்து நகர்ந்து வந்து கருக் குழியில் (கருப் பையில்) விழும். அப்பையின் சுவற்றில் ஒட்டிக்கொள்ளும். அக்கருவைச் சுற்றிப் பனிக்குடம் உருவாகத் தொப்புள் கொடி பிடிக்கத் தொடங்கும் அந்தக் கரு, வளர்ச்சி அடையத் தொடங்குகிறது. முதுகெலும்பு, கை கால்கள், மூளை, இதயம்… என உறுப்புகள் உருவாகி வளர முழுக் குழந்தையாக வளர்ச்சி பெற்று வளர்ந்து… குழந்தையாக வந்து விழுகிறது. பிறந்து அழுகிறது!. கருவாக உருவாகிக் குழந்தையாக உருமாறி வந்து பிறப்பதன் வித்தை, விந்தை இதுதான் என இன்றைய அறிவியல் விளக்குகிறது.

    இக்கால அறிவியல் விளக்கும் இந்த வித்தையை, விந்தையை அக்காலத் திருமூலர் எப்படி விளக்குகிறார் ?

    அடுத்த கட்டுரையில் படிக்கத் தவறாதீர்கள்!

    Share
  • சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 4

    பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ

    சைவ சமயம் பற்றிச் சுருக்கமாகப் பார்த்தோம். இச்சமயம் எப்படி அறிவியல் மையமாக விளங்குகிறது? சைவத்துக்கும் அறிவியலுக்கும் தொடர்பு இருக்குமா? இருக்கிறதா?… இப்படி ஆயிரம் கேள்விகள்….

    சைவ சமயத்தின் மையத்தில் இக்கால அறிவியல் உண்மைகள் உள்ளன. சைவ சமயத்தின் ஒவ்வொரு தத்துவமும் விஞ்ஞானத்துடன் பிணைந்துள்ளது. இதனை நம் நாட்டார் மட்டுமல்லாமல் மேனாட்டாரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

    இதோ சத்குரு சிவாய சுப்ரமுனியசுவாமி கூறுவதைக் கேட்போம். பெயரை பார்த்ததும் இது நம்ம ஊர் சாமி என முடிவு கட்ட வேண்டா! சாமி அச்சு, அசல் அமெரிக்கர் ; கலிபோர்னியாவில் உள்ள ஒக்லாந்தில் பிறந்தவர். இளமையிலேயே சைவத்தின் பால் ஈர்க்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் தீட்சை பெற்றுத் துறவி ஆனவர். இவர் என்ன சொல்கிறார் :

    “வருங் காலத்துக்கும் வளம் கூட்டும் சமயம் சைவம். தொழில் நுட்ப யுகமாகிய இந்தக் கால கட்டத்துக்கு வேறெந்த மதத்தையும் விட மிகப் பொருந்தி வரக்கூடிய ஒரே மதம். இது, முழுக்க முழுக்க இக்கால அறிவியலோடு ஒத்துப் போகும் தன்மை உடையது.”

    இன்னோர் அமெரிக்கர் : பெயர் – Theos Casimir Bernard சமய வல்லுநர், திபெத்திய புத்தமத ஆய்வாளர், யோகா வல்லுநர். இவருடைய கருத்து : “அறிவியல் அடிப்படையில், தர்க்க ரீதியில் பிரபஞ்சத்தை அலசி ஆயும் பண்பு சைவ சித்தாந்தத்துக்கு மட்டுமே உண்டு.”

    சைவ சித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்ற மலேசிய இளைஞர் சிவ.பரமசிவம் என்பவர் எழுதுகிறார் :

    “சைவ சமயமும் அறிவியலும் நட்புறவாகவே உள்ளன ; ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் இருக்கின்றன. சைவ சித்தாந்தம் உரைக்கும் உண்மைகளை அறிவியல் ஆய்வாளர்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் உறுதிப்படுத்துகின்றனர்.”

    பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். மேலே சோற்றுப் பருக்கைகள் மூன்று கொடுத்துள்ளேன். போதும் அல்லவா! அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று அடுக்குவதை விட நாமே நேரே சென்று காண்பது நல்லது தானே! எப்பொருள் யார், யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது தானே அறிவு.

    சைவ சமயமும் அறிவியலும் இரு பெருங் கடல்கள். இவற்றுள் மூழ்கி முத்தெடுப்பது எளிதன்று. நம் ஆய்வைக் குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வந்தால் ஒழிய இது சாத்தியம் ஆகாது. எனவே நம் ஆய்வுப் பொருளாக அண்டம், பிண்டம் என்ற இரு பிரிவுகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். அண்டத்துள் பிண்டம் அடங்கும் ; பிண்டத்துள் அண்டம் அடங்கும்.

    இதனை, சட்டமுனிஞானம் என்னும் சித்தர்
    “அண்டத்தி லுள்ளதே பிண்டம்
    பிண்டத்தி லுள்ளதே அண்டம்
    அண்டமும் பிண்டமும் ஒன்றே
    அறிந்துதான் பார்க்கும் போதே” என்பார்.

    சைவ சமய ஞானிகளும் பலர் உளர் ; அத்தனைப் பேர்களையும் இங்குக் கொண்டுவரும் வல்லமை ‘வல்லமைக்கும்’ இல்லை ; அடியேனுக்கும் இல்லை. ஆகவே அவர்களுள் இருவரை மட்டும் தேர்ந்தெடுப்போம். யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? அண்டம், பிண்டம் பற்றி அதிகமாக யார் பேசி இருக்கிறார்களோ அவர்களை! அவர்கள்: திருமூலர் என்னும் திருமூல நாயனார் (திருமூல சித்தர். என்றொருவர் 16 -ஆம் நூற்றாண்டில் இருந்திருக்கிறார் என்பதைக் கவனத்தில் கொள்க) ; மற்றவர் : மாணிக்கவாசகர். முன்னவர் பிண்டம் பற்றிப் பேசுகிறார் ; பின்னவர் அண்டத்தைப் பற்றி அழகாகக் கூறுவார். இக்கருத்தை முக்கோணமாகக் கற்பனை செய்து பார்க்கலாம்.

    முக்கோணத்தின் அடிப்படை : சைவசமயம் – அறிவியல் இணைந்த படுக்கைக் கோடு ; இடப்பக்கச் சாய் கோடு : திருமூலர் காட்டும் பிண்டம் ; வலப்பக்கச் சாய் கோடு : மாணிக்கவாசகர் விளக்கும் அண்டம். இவ்விரு சாய் கோடுகளும் மேல் நோக்கிச் செல்லுகின்றன. அவை இணையும் போது சைவ சமயம், அறிவியல் மையம் என்ற உச்சி கிடைக்கும்.

    Triangle

    இவ்விருவரும் நமக்குத் தெரிந்தவர்கள்தாம். இருப்பினும் அவர்களைப் பற்றிச் சில தகவல்கள் .

    திருமூலர் :

    5 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் எழுதிய நூல்களில், திருமந்திரம் தலையாயது எனினும், திருமூலர் அறுநூற் றொன்று, திருமூலர் வைத்தியம்,
    திருமூலர் ஞானம், திருமூலர் வழலைச் சூத்திரம், திருமூலர் பல திரட்டு,
    திருமூலர் வாதம் இருபத்தொன்று போன்ற மேலும் பல அரிய நூல்களையும் எழுதியுள்ளர். ‘திருமந்திரம்’ என்னும் இவ்வருள் நூலுக்குத் திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை. காண்க :

    பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
    சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
    மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
    உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே. (தி.10 பா.25)

    இவர் 63 நாயன்மார் வரிசையிலும் வருவார் ; 18 சித்தர்கள் வரிசையிலும் இடம் பெறுவார்! அறுபத்துமூன்று நாயன்மார்களை அறிமுகப்படுத்திப் பாடப்பெற்ற நூல் திருத்தொண்டத்தொகை, பாடியவர், நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர். இரண்டே இரண்டு பேரைத் தான் ‘பிரான்’ என்ற சொல்லைச் சேர்த்து அவர் பெருமைப் படுத்துகிறார். வேறு எந்த அடியார்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு. அந்த இருவருள் ஒருவர் பிள்ளையார்(சம்பந்தர்) இன்னொருவர் திருமூலர்.

    சம்பந்தரை எம்பிரான் என்றும், திருமூலரை நம்பிரான் என்றும் திருத்தொண்டத்தொகையில் போற்றியுள்ளார் :

    “`நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்” (தி.7 ப.35. பா.5)

    நம்பிரான் என்றால் எப்போதும் நம்மை விட்டுப் பிரியாதவன் என்று பொருள்.

    திருமூலர் 28 ஆகமங்களின் சாரமாகத் திருமந்திரத்தைச் செய்தருளினார். இது உண்மையென உணர்த்தும் விதத்தில், பெரியபுராணத்தில் திருமூலர் வரலாற்றை 28 பாடல்களில் அமைத்தார் சேக்கிழார் .

    இப்படிப்பட்ட பெருமைக்குரிய திருமூலரைப் பற்றிய கதைகள் பல. கூடுவிட்டுக் கூடு பாயும் கலையில் வல்லுநர் என்பர். ஆண்டுக்கு ஒரு பாடல் என்ற கணக்கில் இவர் 3000 பாடல்கள் எழுதியதாகச் சொல்வர். அதாவது இவர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தவராம்! இக்கட்டுக் கதைகளைத் தள்ளிவிட்டுப் பார்த்தால் இவர் எழுதிய 3000 பாடல்களும் கிடைத்துள்ளன என்பதே பெரிய செய்திதான். இவை கலி விருத்தத்தில் அமைந்தவை. நாலே அடிகள் ; ஒவ்வொரு அடியிலும் நாலே சீர்கள்! ஆனால் அவற்றில்தான் எத்தனை எத்தனை அரிய பெரிய கருத்துகள்!

    இக்கால மருத்துவ இயல் கூறும் கருவியல் (emriology) முதல் யோக சாத்திரங்கள், சைவ சித்தாந்தத் தத்துவங்கள், அறிவியல் கருத்துகள்… எனப் பலவும் இதில் பரந்து விரிந்து கிடக்கின்றன. காட்டாக ஒன்றைக் காட்டுகின்றேன் :

    அட்சரேகைகளை முதல் முதலில் எகிப்திய வானநூல் அறிஞர் டாலமியின் வரைபடத்தில் காண்கிறோம். அவர் கி.பி. 150 -இல் வாழ்ந்தவர். ஆனால் தீர்க்கரேகைகளையோ 18 -ஆவது நூற்றாண்டில் தான் காண்கிறோம். இதில் வியப்பு என்னவென்றால் இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இது குறித்துத் திருமூலர் அறிந்திருக்கிறார். அவர் இரண்டு திருமந்திரப்பாடல்களில் (2701,2708) மேரு, தில்லை (சிதம்பரம்), இலங்கை ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் (தீர்க்கரேகை) இருப்பதாகப் பாடுகிறார்! கற்பனைக் கதை இல்லை இது. அறிவியல் (புவியியல்) உண்மை. சிவன் இருக்கும் கைலாய மலை மேரு. இதில் இருந்து கீழ் நோக்கி நேர்க் கோடு வரைந்தால் அது சிதம்பரம் (சிவத்தலம்) வழியாகச் செல்லும். இக்கோட்டின் வலப்பக்கம் மேரு (கைலாய) மலை இருக்கும் ; இடப்பக்கம் (எக்காலத்தும்) சிவ பூமியாக (விளங்கும்) இலங்கை இருக்கும்.

    படம் காண்க :

     Meru-Chidambaram-Ceyon map

    இடைபிங் கலையிம வானோ டிலங்கை
    ஈடுநின்ற மேருநடுவாஞ் சுழுனை
    கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்
    படர்வொன்றி யென்னும் பரமாம் பரமன்றே
    – திருமந்திரம் 2708

    இந்தப் பாட்டில் இடகலை (இடப்பக்க நாசி) இமயத்திற்கும் பிங்கலை (வலப்பக்க நாசி) இலங்கைக்கும் ஒப்பிடப்படுகின்றன. சுழுமுனை எனப்படும் நடுநாசி தில்லைக்கு ஒப்பாகும் (நாசி = மூக்கு). இக்கருத்தையே உணர்த்தும் இன்னொரு பாடல் :

    மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
    கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்
    சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ
    மேலுஞ் சுழுனை இவை சிவபூ மியே. (2701).

    இப்படிப்பட்ட கருத்து வளம் மிக்க நூல் திருமந்திரம்.

    வேத ஆகமங்களின் முடிந்த முடிபாகிய சைவசமயத் தத்துவம் என்ற பொருளில் சித்தாந்தம் என்ற சொற்றொடரை முதன் முதல் வழங்கியவர் திருமூல நாயனாரே ஆவர்.

    ” ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” (2104)
    ( ‘உம்’மைக் கவனிக்க : ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ இல்லை!)

    ” என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
    தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” (திருமந்திரம் 81)

    “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” (திருமந்திரம் 147).

    இவை திருமூலர் திருவாய் மலர்ந்தருளியவை.

    மாணிக்கவாசகர் :

    திருவாதவூரார், மணிவாசகர் மாணிக்கவாசகர்.. என்றெல்லாம் பெயர் பெற்றவர்; அரிமர்த்தன பாண்டியன் அவைக்களத்தில் முதல் அமைச்சர் பதவி வகித்தவர்; “போருக்கு வேண்டும் அரபுப் புரவிகள், வாங்கி வாருங்கள்” என்று அரசன் பெரும்பொருள் கொடுத்து இவரை அனுப்பத் திருப்பெருந்துறை ஊரில் குருந்த மரத்தடியில் இருந்த ஈசன் இவரைத் தடுத்தாட்கொண்டான். குதிரை வாங்கக் கொண்டு வந்த பொருளை எல்லாம் ஆண்டவன் திருப்பணிக்குத் திருப்பிவிட்ட புரட்சிக்காரர். ‘மாணிக்கவாசகன்’ என இறைவனாலேயே பெயர் சூட்டப்பட்டவர். இறைவனே குருவாக அமையத் தீட்சை பெற்றவர். ஆதி காலம் முதலே சிவ பூமியாக விளங்கிய ஈழத்தில் புத்தமத ஆதிக்கம் ஏற்பட்டது. அதனைத் தடுக்க அங்கே சென்று புத்த பிக்குகளை வாதங்களில் வென்று சைவ சமயத்தை மீண்டும் நிலை நாட்டியவர் ; ஈழ அரசனின் ஊமை மகளைக் குணமாக்கிப் பேசவைத்தவர்… இவருக்காகவே ஈசன் பிட்டுக்கு மண் சுமந்தான், பிரம்படி பட்டான்…. நரிகளைப் பரியாக்கிப் பரிகளை நரியாக்கித் திருவிளையாடல் புரிந்தான், திருவெம்பாவை இவர் பாடக் கேட்டு மகிழ்ந்த இறைவன் “பாவை படிய வாயால் கோவை பாடு” என்று கேட்கத் திருக்கோவை பாடினாராம்….என ஏராளமாகக் கதைகள் உண்டு. இவர் இயற்றிய திருவாசகத்தைப் படித்து உருகியவர் பலருண்டு. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் மேனாட்டவரான ஜி யு போப். தன் மதத்தைப் பரப்பத் தமிழகம் வந்த இவர் திருவாசகத்தைப் படித்துத் திளைத்து அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். விளைவு, இவர் மேலதிகாரிகள் இவரைத் திரும்ப அழைத்துக்கொண்டதோடு நில்லாமல் கண்டிக்கவும் தண்டிக்கவும் செய்தனர். (திருவாசகத்தைப் படித்து உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எழுதிய கடிதத்தில் கண்ணீர்த் துளி விழுந்தது, தன் கல்லறையில் ‘இங்கே தமிழ் மாணவன் உறங்குகிறான்’ என எழுதச் சொன்னது… எல்லாம் கற்பனையின் பிற்புலத்தில் எழுந்த கதைகளே!) எப்படி இருப்பினும் திருவாசகத்தின் பெருமைக்கு இரண்டே இரண்டு சான்றுகள் போதும் : ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என இன்றும் வழங்கி வரும் (பழ) மொழி ; வள்ளலார் பாடிய வரிகள் : ,

    “வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்….ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!”.

    இத்திருவாசகத்தின் திருவண்டப் பகுதியில் மாணிக்கவாசகர் எழுதிய ஒவ்வொரு சொல்லையும் இக்கால அறிவியல் உண்மையே என உறுதிப்படுத்துகிறது.

    எப்படி இக்கால அறிவியல் கருத்துகள் சைவத்தின் நடுவில் கொலு இருக்கின்றன என்பதைக் காணலாம் அடுத்த பகுதியில். சைவ சமயத்தின் மாபெரும் ஞானிகள் இருவர் வழி காட்ட வருகிறார்கள்.

    Share
  • சைவ சமயம் அறிவியல் மையம் பகுதி 3

    பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பிரான்சு

    சைவம் :

    காலத்தால் முந்தியது சைவ சமயமே எனக் கண்டோம். மாந்தனியல் என்னும் அறிவியல் வழியாகவும் வரலாற்றுப் படியும் உண்மை இதுவென நிறுவப்பட்டுள்ளது.

    பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அரப்பா-மோகந்தஜாரோவில் இருந்த திராவிட இனத்தில் சிவ-சக்தி வழிபாடு இருந்தற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. நம் தமிழ் இலக்கியங்களைப் பொருத்த வரை, தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவிய நூல்களிலும் சிவன் அல்லது சைவம் என்ற சொற்கள் நேரடியாகப் பயன் படுத்தப்படாவிட்டாலும், சிவன் தொடர்பான செய்திகள் ஆங்காங்கே உள்ளன. திருக்குறளிலும் கூட சைவ சித்தாந்தக் கருத்துக்களை ஒத்த கருத்துகள் காணப்படுகின்றன.

    ‘பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
    நீலமணி மிடற்று ஒருவன்” எனச் சிவபெருமானைப் பற்றி ஒளவையார் கூறியுள்ளார்.

    சங்க இலக்கியத்தில் பயின்று வரக்கூடிய ‘தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோற்கே’ (புறம்) ‘ஈர்ஞ்சடை அந்தணன்,ஆலமர் செல்வன்’ (கலித்தொகை), ‘முக்கண்ணன் ‘(கலித்தொகை), ‘கறைமிடற்று அண்ணல்’, ‘முதுமுதல்வன்’, ‘ஆலமர் கடவுள்’ (புறம்), ‘மணிமிடற்று அண்ணல்’ (பரிபாடல்), ‘நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்’ (ஐங்குறு நூறு)… போன்ற சொல்லாட்சிகள் சிவனைக் குறிப்பதால்,சிவ வழிபாடு சங்க காலம் தொட்டு இருந்துள்ளது என்பதை அறியலாம்.

    தமிழ் இலக்கியங்களில் சிறந்த காப்பியமான சிலப்பதிகாரத்தில் “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்….’ எனச் சிவபெருமானைப் பிறவா யாக்கைப் பெரியோனாக இளங்கோவடிகள் கூறியுள்ளார்.

    “சைவ சமயத்தின் தோற்றம் கற்பனைக்கு எட்டாததாய் அமைந்துள்ளது; வரலாற்றுக் காலத்துக்கு உட்பட்ட சைவம் ஆரியர், ஆரியர்க்கு முற்பட்டவர் என்னும் இருவேறு நெறிகளின் இணைப்பேயாகும்” என்று வரலாற்று ஆசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் குறிப்பிடுகின்றார். “மொஹெஞ்சதரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், ஆரியருக்கு முற்பட்டதொரு நாகரிகம், திராவிட நாகரிகம் என்பதை ஐயமறத் தெரிவிக்கின்றன. இவ்வகழ்வாய்வுகளில் சைவ சமயம் பற்றிய – குறிப்பாகச் சிவனுக்கு அல்லது அதற்கு முற்பட்ட வடிவ வழிபாடு பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன. உலகின் மிகப் பழைய உயிரோட்டமுள்ள சமயம் சைவ சமயமேயாகும்” என்று சர். ஜான் மார்ஷல் என்னும் அகழ்வாராய்ச்சி அறிஞர் கூறியுள்ளார். மேலும் “மொஹெஞ்சதரோ – ஹரப்பா வெளிக்காட்டும் செய்திகள் பலவற்றால் சைவம் மிகப் பழைய கற்காலத்தும் அதற்கும் முற்பட்ட காலத்துக்குமான சமயம் என்றும் இந்த வகையில் உலகின் மிகப்பழைய சமயமாகச் சைவம் விளங்குகிறது” என்றும் ஜான் மார்ஷல் குறிப்பிடுகின்றார்.

    சைவம், தென்னிந்தியாவின் மிகப்பழைய, வரலாற்றுக்கு முற்பட்ட சமயம் ஆகும்; அது ஆரியருக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழக்கில் இருந்து வருகிறது என்று G.U.போப், திருவாசக ஆங்கில மொழி பெயர்ப்பு முன்னுரையில் குறிப்பிடுகின்றார். “காளியும் சிவனும் திருமாலும் வேத காலத்துக் கடவுளர்கள் அல்லர்; எனவே அவர்கள் ஆரியர்களைச் சேர்ந்தவர்களும் அல்லர். அவர்கள் திராவிடர்களைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு முடிவுக்கு வருவதற்கு இல்லை” என்று ‘இந்தியப் பண்பாட்டில் திராவிடக் கூறுகள்’ என்னும் நூலில் G. சிலேட்டர் என்னும் அறிஞர் குறிப்பிடுகின்றார்.

    மேற்குறிப்பிட்ட அறிஞர்களின் கருத்துகளிலிருந்து, சைவம் மிகத் தொன்மையான சமயம் என்பதும், பழந்தமிழர்கள் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர் என்பதும் புலப்படுகின்றன. (http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/m

    இவ்வாறு சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது. இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலரால் எழுதப்பட்டதும், சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் காணப்படுகின்றது. சைவ சித்தாந்தத்தை விளக்க, 12 -ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14 -ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் பதின்நான்கு நூல்கள் தோன்றின.

    1. சிவஞான போதம்

    2. சிவஞான சித்தியார்

    3. இருபா இருபது

    4. திருவுந்தியார்

    5. திருக்களிற்றுப்படியார்

    6. உண்மை விளக்கம்

    7. சிவப்பிரகாசம்

    8. வினா வெண்பா

    9. திருவருட் பயன்

    10. போற்றிப் பஃறொடை

    11. நெஞ்சுவிடுதூது

    12. கொடிக்கவி

    13. உண்மை நெறி விளக்கம்

    14. சங்கற்ப நிராகரணம்.

    இவை மெய்கண்ட சாத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.

    திருஞான சம்பந்தர் முதலிய 27 ஆசிரியர்கள் அருளிய பன்னிரு திருமுறை எனும் தொகுப்பைத் தோத்திரங்கள் என அழைப்பர். இந்தச் சாத்திரங்களும் தோத்திரங்களும் சைவ சமயத்தின் இரு விழிகள்.

    முதல் ஏழு திருமுறைகள் பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் , சுந்தரர் ; இவை தேவாரம் என அழைக்கப்படுகின்றன.

    எட்டாம் திருமுறை திருவாசகம், திருக்கோவையார் – மாணிக்கவாசகர் பாடியவை. ஒன்பதாம் திருமுறையில் ஒன்பதின்மர் பாடிய திருவிசைப்பா அடங்கும் ; இங்கும் ஒரு திருப்பல்லாண்டு உண்டு ; அதனைப் பாடியவர் , சேந்தனார். பத்தாம் திருமுறை இருபது நூல்களை உள்ளடக்கியது. இதில் மிகப் புகழ் பெற்ற திருமூலர் எழுதிய திருமந்திரம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை (பத்துப்பாட்டில் உள்ள அதே நூல்தான்) போன்றவை உள்ளன. பதினோராம் திருமுறையில் மொத்தம் பத்தொன்பது நூல்கள் உண்டு. சேக்கிழார் அருளிய பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறை ஆகும்.

    சைவ சமயப் பெருமைகள் :

    சைவத்துக்கெனப் பல பெருமைகள் உண்டு. சமயங்களில் மூத்தது என்பது முதல் பெருமை. “திறமான புலமை எனில் வெளி நாட்டார் அதை வணக்கம் செய்திடல் வேண்டும்” என்ற பாரதியின் கருத்துக்கு ஏற்ப, வெளி நாட்டு அறிஞர்கள் கூற்றுகள் சிலவற்றைக் காண்போம்

    – ஜி .யு .போப் , ” இந்தியாவில் உள்ள சமயங்கள் அனைத்திலும் சைவ சித்தாந்தமே மிக மேம்பட்டது என்பதில் ஐயம் இல்லை ” என்கிறார்.

    – முனைவர் கபில சுவபில் : “மனித சிந்தனைகளில் மிக முழுமையான, அறிவார்ந்த சிந்தனை சைவ சித்தாந்தமே!

    – H.R Hoyzington,the founder of church of South India ( CSI) : “சைவ சித்தாந்தத்தில் காணப்படும் மெய்யியல் உண்மைகள் கிரேக்க மெய்யியலிலோ இலத்தீன் மெய்யியலிலோ காண முடியாதவை.”

    நம் நாட்டு ஞானிகளும் சைவத்தைப் பெருமையாகப் பேசுகின்றனர் :

    தாயுமானவர் :
    “சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம் பொருளைக்
    கைவந்திடவே மன்றுள்வெளி காட்டுமிந்தக் கருத்தை விட்டுப்
    பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுதவேண்டாம் முத்திதருந்
    தெய்வ சபையைக் காண்பதற்குச் சேரவாருஞ் சகத்தீரே”

    ”சைவம் சிவனுடன் சம்பந்தமாவது” (திருமந்திரம், 1486) என்று திருமூலர் கூறுகிறார்.

    “ சைவத்தின் மேற்சம யம்வே
    றிலையதிற் சார்சிவமாந்
    தெய்வத்தின் மேற்றெய்வ மில்லெனும்
    நான்மறைச் செம்பொருள்வாய்
    மைவைத்த சீர்த்திருத் தேவார
    முந்திரு வாசகமும்
    உய்வைத் தரச்செய்த நால்வர்பொற்
    றாளெம்மு யிர்த்துணையே !”

    – சைவ எல்லப்ப நாவலர். திருவருணைக் கலம்பகம்.

    2) சைவசமயம் எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டு தாயகமாய் விளங்குவது. எந்தச் சமயத்தையும் புறக்கணிக்காது தழுவி நிற்கும் சமரசமுடையது.

    “யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமேயாகி ஆங்கே
    மாதொரு பாகனார் தாம் வருவர் “ — சிவஞான சித்தியார்

    “தென்னானுடைய சிவனே போற்றி
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!” – என்பது மாணிக்கவாசகர் தம் மணிவாசகம்.

    “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் “ என்று உலகிற்கு உணர்த்திய சமயம் சைவம் ஒன்றே .

    ஓரிறைக் கோட்பாட்டையும் உருவ அருவ வணக்கத்தையும் உரைப்பதுவும் சைவமே :

    “ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம்
    திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமோ !” – திருவாசகம் உரைக்கும் உண்மை!

    “விரிவிலா அறிவினர்கள் வேறொரு சமயஞ் செய்து
    எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும்” என்பது அப்பர் திருவாக்கு.

    “இறவாத இன்ப அன்பு
    வேண்டிப்பின் வேண்டு கின்றார்
    பிறவாமை வேண்டும் மீண்டும்
    பிறப்புண்டேல் உன்னை என்றும்
    மறவாமை வேண்டும் இன்னும்
    வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
    அறவாநீ ஆடும் போதுன்
    அடியின்கீழ் இருக்க” என்றார் காரைக்கால் அம்மையார்.

    (‘திருவிளையாடல்’ படத்தில் இக்கருத்தமைந்த பாடலை ஔவையார் பாடுவதாக ஏ.பி நாகராசன் அமைத்துவிட்ட காரணத்தால் இதனைப் பாடியவர் ஔவையாரே என்று இன்றளவும் தவறாகவே எண்ணிக்கொண்டிருக்கின்னர். இது போலவே, ‘ஒன்றே குலம் ; ஒருவனே தேவன்” எனச் சொன்னவர் அறிஞர் அண்ணாதுரை என்று ‘தம்பிகள்’ நம்பிக்கொண்டு உள்ளனர்.)

    சைவ சித்தாந்தம் :

    மனிதப் பிறவி எடுக்கும் உயிர்கள், (பசு எனச் சைவ சித்தாந்தத்தில் அழைப்பர்)
    பதியாகிய இறைவனோடு இணைய முடியாமல் பாசம் என்ற தளை தடுக்கிறது. இந்தப் பசு, பதி, பாசம் என்ற முக்கோணச் சிக்கலை அடிப்படையாகக் கொண்டதே சைவ சித்தாந்தம்.

    இதனை விளக்குவனவே 12 -ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் 14 -ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதின்நான்கு நூல்கள். இவற்றை மெய்கண்ட சாத்திரங்கள என்பர்.

    சைவச் சமயக் குரவர்கள் திருஞானசம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள், மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம், திருக்கோவையார், திருமூலர் அருளிய திருமந்திரம்., திருஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமாள் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிரு அருளாளர்கள் அருளிய திருவருட் பாடல்கள், சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம். முதலியவற்றைப் பன்னிரு திருமுறை என்பார்கள். இவற்றைத் தோத்திரப் பாடல்கள் என்றும் கூறுவது உண்டு. இவற்றின் அடிப்படையில் அமைந்ததுதான் சைவ சமயம்.

    3 ஓரிறைக் கோட்பாட்டையும் உருவ அருவ வணக்கத்தையும் உரைப்பதுவும் சைவமே.
    ஓரிறைக் கோட்பாட்டை உரைக்கும் முக்கிய சமயங்கள் : யூத மதம், கிறித்துவச் சமயம், இசுலாமிய மதம். அருவ வணக்கத்தை ஆதரிப்பவை யூத, இசுலாமிய மதங்கள்
    உருவ வணக்கத்தைப் பெரும்பாலான சமயங்கள் விலக்குவதில்லை : வைணவம், கிறித்துவம், புத்தம், சமண மதங்கள். ஆனால் இவை யாவற்றையும் ஏற்பது சைவ சமயத்தின் சிறப்பாகும் ( சிவலிங்கம் உருவ அருவ வணக்கத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு.)

    இனி இச்சைவ சமயம் எப்படி அறிவியல் மையமாக விளங்குகிறது எனக் காண்போம்.

    Share
  • சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 2

    பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பிரான்சு

    சமயங்கள் :

    உலகிலே உள்ள மதங்கள், சமயங்கள் பலப்பல ! இன்ன காலத்தில் உருவானவை என அறுதி இட்டுச் சொல்லக் கூடிய மதங்கள் உண்டு – கிறித்துவம், இசுலாமியம்…போல. தோன்றிய காலம் இது எனக் கூற இயலாமல் தொன்று தொட்டுத் தொடர்ந்து வரும் மதங்களும் உண்டு – யூத மதம் மாதிரி. இம் மதங்கள் அத்தனையும் ஆசியக் கண்டத்தில் தோன்றியவையே!

    அக் கண்டத்தில் உள்ள இந்தியாவில் தோன்றி வளர்ந்து வாழ்ந்த பெரிய மதங்கள் நான்கு எனலாம் : சமணம், புத்தம், சைவம், வைணவம்.

    ஒரு கால கட்டத்தில், தமிழகத்தில், முன்னவை இரண்டும் ஓங்கி இருந்தன.கி.பி 5 -ஆம் நூற்றாண்டுக்குப் பின் சமணமும் புத்தமும் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டன ; தமிழ் நாட்டை விட்டே ஒழிக்கப்பட்டன. இவற்றை அழிப்பதிலும் ஒழிப்பதிலும் ஒன்றுபட்டு மும்முரமாக இருந்த சைவ வைணவச் சமயங்கள், பின்னர் தமக்குள் மோதிக்கொண்டன! இம் மோதலினால் சமயக் காழ்ப்பு பெருகி இருந்தாலும் தமிழுக்குப் பெரும் நன்மையே விளைந்தது. சமய இலக்கியங்கள் தோன்றின; ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழை வளர்த்தனர், போட்டி போட்டுக்கொண்டு. சிவனடியார் ஒரு கருத்தைப் பற்றிப் பாட அது போலவே வைணவக் கருத்தை அமைத்து ஆழ்வார் பாடல் பாடுவார். 7 -ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர் “குனித்த புருவமும் கோவைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்….” எனச் சிவபெருமானின் திருக்கோலத்தைப் பாடினார். அதற்கு எதிர்ப்பாட்டுப் போல 8 -ஆம் நூற்றாண்டின் தொண்டரடிப் ஆழ்வார், “பச்சை மாமலை போல் மேனி பவள வாய்க் கமலச் செங்கண் …”என்று பாடுகிறார். 8 -ஆம் நூற்றாண்டு ஆண்டாள் ‘திருப்பாவை’ பாட அதே பாணியில் 9 ஆம் நூற்றாண்டு மாணிக்கவாசகர் ‘திருவெம்பாவை’ பாடுகிறார். 7 – ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தர்.இவர் சித்திரக் கவியில் ஒன்றான தேர்ப் பந்தத்தில் எழுகூற்றிருக்கை பாடினார். பின்னர் 8- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வார் அது போலவே தாமும் பாடியதை என்னவென்று சொல்ல. ஆக இப்படிப் போட்டிபோட்டுக்கொண்டு சைவர்களும் வைணவர்களும் பக்தி இலக்கியங்களைப் பாடித் தமிழ் வளத்தைப் பெருக்கிச் சுவை கூட்டினர். (இதில் வரும் காலங்கள் விக்கிபீடியாவை அடிப்படியாகக் கொண்டவை ).

    இச் சமயங்களுள் சைவம் தமிழ் நாட்டுக்கே உரியது என்பர். அதனால்தான் போலும் மாணிக்கவாசகரும் “தென்னானுடைய சிவனே போற்றி” எனப் பாடினார்.(காச்மீர் சைவம் வேறு ; கர்நாடகச் சைவம் பிற்காலத்தது). சரி சைவம் வைணவம் எனும் இவை இரண்டினுள் எது காலத்தால் முந்தியதாக இருக்கக்கூடும்? “சிவமே” என்று சைவர் சாதிப்பர் ; “இல்லை, இல்லை, வைணவம்தான்” என்று மல்லுக் கட்டுவர் வைணவர்! இதில் எது உண்மை? (முதல் பகுதியில் இக்கேள்வி – எது உண்மை?- கொஞ்சம் அலசப்பட்டிருக்கும்). இதில், இந்தச் சமயக் கணக்கில், வழக்கில் உண்மையைக் காண உதவிக்கு வருகிறது ஓர் அறிவியல் துறை.அதன் பெயர் ‘Anthropolgy’ ; மாந்தனியல் எனத் தமிழில் கூறலாம். மனித இனம், அதன் தோற்றம், வளர்ச்சி… பற்றி ஆராய்வது. அதற்குமுன், கணிதத்தைப் போல ஓர் அடிப்படையை (axiom) ஏற்றுக்கொள்ளவேண்டி இருக்கும்.

    இறைவன் மனிதனைப் படைத்தானா?
    மனிதன் இறைவனைப் படைத்தானா?

    ஆண்டவன் ஐந்து நாள்களில் எல்லாவற்றையும் படைத்துவிட்டு ஆறாம் நாளில் ‘தன் சாயலாக’ மனிதனைப் படைத்தான் எனத் தோரா (Thora) ,திருமறை நூல் (Bible), திருக்குர்ஆன் சொல்லும். ஏனைய சமயங்களும் இறைவனே, மனிதனைப் படைத்தான் என்று கூறுகின்றன. ஒப்புக்கொள்ளப்பட்ட ஓர் அடிப்படையை மறுத்து அதற்கு மாறான வேறொரு அடிப்படையை வைத்து அதன் அடிப்படையில் சமன்பாடுகளைக் கட்டி எழுப்புவது உண்டு, கணிதத்தில்.

    எளிமையாகச் சொல்லவேண்டுமானால், காட்டாக, யுக்ளிடின் வடிவ கணிதத்தில் இருந்து மாறுபட்ட வடிவ கணிதத்தைக் (non-Euclidean geometry) கூறலாம். யுக்ளிடின் வடிவ கணிதத்தில் முக்கோணம்; ஒன்றின் மூன்று கோணங்களின் கூட்டுத் தொகை 180 பாகை என்பது அடிப்படைக் கருத்து. கூட்டுத் தொகை 180 பாகைக்கு மிகையாகவோ குறைவாகவோ இருந்தால் என்ன ஆகும் என மாற்றி யோசித்தனர் சிலர்.(C. F. Gauss (1777-1855), N. Lobachevsky (1792-1856), J. Bolyai (1802-1860), and B. Riemann (1826-1866)).

    யுச்ளிடின் கருத்து சம தளத்துக்கு (plane) மட்டுமே உண்மையாகும் ; உ(ரு)ண்டை (sphere, spherical body) வடிவுக்குச் சரிப்பட்டு வராது எனக் கண்டனர். விளைவு உ(ரு)ண்டை வடிவக் கணிதம் பிறந்தது. இதில் இணைகோடுகளுக்கு இடம் இல்லை ; பூமி போன்ற உ(ரு)ண்டை வடிவத்தின் மேல் உள்ள முக்கோணங்களின் கூட்டுத்தொகை 180 பாகைக்கு மிகையாகவோ குறைவாகவோதான் இருக்கும். இடம் – காலம் (space-time) பற்றிய தன் கருத்தை விளக்க மாமேதை ஐன்ஸ்டீன் இந்த உ(ரு)ண்டை வடிவக் கணிதத்தைத்தான் பயன்படுத்திகொண்டார். இதனால்தான் அண்டம் கோள வடிவில் உள்ளது என அவரால் நிறுவ முடிந்தது. இக்கணித எடுத்துக் காட்டைப் பின் பற்றி நாமும் கடவுள்தான் மனிதனைப் படைத்தான் என்ற கோட்பாட்டை மாற்றிப் பார்ப்போமே! இது ஒன்றும் புதுக் கருத்து இல்லை. மனிதன் தோன்றியதில் இருந்தே, இறை மறுப்பை இதயத்தில் ஏந்தியவர்களும் உண்டு ; இறை இருப்பைக் குருதியிலே கொண்டவர்களும் உண்டு. சரி, இனி, இறைவன் மனிதனைப் படைத்தான் என்பதை மாற்றி மனிதன்தான் கடவுளைப் படைத்தான் என்று வைத்துக்கொள்வோம்.

    மிக மிக மிக…முற்காலத்தில் (10 000 ஆண்டுகள், 100 000 ஆண்டுகள்…ஏன் அதற்கும் முன்னால் என்று வைத்துக்கொள்ளுங்கள்!) ஆதி மனிதன் தனிமையில் வாழ்ந்தான் (சமூகம் இன்னும் உருவாகவில்லை). அவனுடைய முதல் உணர்ச்சி அச்சம்தான். இதனை நன்கு உணர்ந்துகொள்ள வேண்டுமானால் பிறந்த குழந்தையைக் கவனித்தால் போதும். தாயின் கருவறை என்ற பாதுகாப்பில் அவள் இதயத் துடிப்பையே லயமாக உணர்ந்து வாழ்ந்த குழந்தை கருப்பக் கால முடிவில் வெளியே தள்ளப் படுகிறது. இது வரை காணாத புதுச் சூழல்! இதுகாறும் உணர்ந்த லயத்தைக் காணோம்…எனவே அதன் முதல் உணர்ச்சி அச்சம். இந்த அச்சத்தின் காரணமாகவும் இது வரை தொப்புள் கொடி வழியாகக் கிடைத்து வந்த உயிர் வளி கிடைக்க வேண்டித் திணறியும் தன்னிச்சையாகக் குழந்தை அழுகிறது. தாயோ தாதியோ அதனைத் தூக்கி மார்போடு அணைக்கிறாள். குழந்தை மறுபடி அந்த லயத்தை உணருகிறது ; அதன் அச்சம் தணிகிறது. குழந்தை பிறந்தது முதல் 3 மாதம் வரை இப்படி மார்போடு அணைப்பது அதன் அழுகையை அமர்த்தும் என இக்கால மகப்பேற்றியல் அறிவுரை தருகிறது.

    அடுத்து இன்னொன்றைக் கவனிக்கலாம். எது கிடைக்கிறதோ அதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும் குழந்தையின் கை.. இந்த ஆதரவைத் தேடுவதற்குக் காரணம் அதன் அச்சமே. வளர்ந்த பிறகும் இந்தப் பழக்கம் தொடர்கிறது – அச்சம் தோன்றும் போது கை தானாகவே ஆதரவு தேடி அன்னை, தந்தை, காதலன், காதலி… கரத்தைத் தேடும். தன் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் ‘அவள்’ (தாய் அல்லது தாதி) எங்கே தன்னை விட்டுப் பிரிந்துவிடுவாளோ என்ற அச்சத்தின் காரணமாக அவளோடு ஒட்டிக்கொண்டு அவள் பின்னாலேயே சுற்றுகிறது குழந்தை!

    குழந்தையின் மனத்தில் உள்ளது போலவே, ஆதி மனிதனின் மனத்தில் அச்ச உணர்ச்சி வேரூன்றிக் கிடந்தது. இரவு வரும் போது, இருள் சூழும்போது காட்டு விலங்குகள் இரை தேடப் போகும் ஒலி, கொடிய விலங்குகள் எழுப்பும் ஒலிகள் (இத்தகு ஒலிகளை இளங்கோவடிகள் “கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் இடிதரும் உளியமும்…’ என வருணிப்பார்!)… அவன் அச்சத்தை அதிகம் ஆக்குகின்றன. மழையும் இடியும் அவனைக் கலக்குகின்றன! இப்படி நாலா புறமும் அச்சத்தால் சூழப்பட்ட மனிதனுக்கு ஏதாவது ஆறுதல் தேவைப்படுகிறது. ஆகவே, மகா சக்தி வாய்ந்த ஒன்றை அவன் கற்பனை செய்துகொள்கிறான். அது தன்னைக் காக்கும் என நம்புகிறான்.

    இரவு முழுதும் கடும் மழை, கிடுகிடுக்கும் இடி முழக்கம், கண்ணைப் பறிக்கும் மின்னல்… அஞ்சி நடுங்கும் மனிதன் தான் படைத்துக்கொண்ட ‘அதனை’ நோக்கிப் புலம்புகிறான் ; தன்னைக் காக்கும்படி மன்றாடுகிறான்; இரவுப் பொழுதை இப்படி அச்சத்தில் கழிக்கும் மனிதன் ஒரு வழியாகக் கண்ணயர்கிறான். காலையில் கண் விழிக்கும் அவனுக்கு வியப்பு காத்திருக்கிறது : ஆம், இடி முழக்கம் இல்லை! மழைத் தூறலைக் காணோம்! இதமான வெயில், பதமான காற்று… ஆகா, எல்லாம் வல்ல ‘அது’ தன் வேண்டுகோளை ஏற்று அச்சத்தைக் களைந்துவிட்டது! அவனுக்குள் மகிழ்ச்சி. தன்னைக் காத்த ‘அதனை’க் கூப்பிட ஏதாவது பெயர் வேண்டுமே! தெய்வம், இறைவன், கடவுள்… என்று எதோ ஒரு பெயரைச் சூட்டுகிறான். அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் அல்லவா? தான் உண்ணும் உணவில் ஒரு பகுதியை (இறைச்சியோ, காய் கனியோ …)அதற்குத் தனியாக வைத்துப் பின் தான் உண்ணுகிறான். இப்படித் தெய்வம் ஒன்றைப் படைத்துக்கொண்ட மனிதன் நாளடைவில் வளருகிறான் ; உருவம் இல்லாமல் இருக்கும் தன் தெய்வத்துக்குத் தன்னைப் போலவே உருவம் தருகிறான். சிவந்த மண்ணில் உருவம் செய்ததால் அவன் இறைவன் அவனைப்போல் கருப்பாக இல்லாமல் சிவந்த நிறம் பெறுகிறது.

    நாகரிகப் படிகளில் மனிதன் ஏறத் தொடங்கும் நிலை. தனக்குத் துணையாகத் துணை, இணை ஒன்றைத் தேடிச் சேர்த்துக்கொள்கிறான். நிர்வாணத்தை மறைக்க இலை, தழைகள் உதவுகின்றன, நாளடைவில் இவை மர உரிகளுக்கு இடம் தருகின்றன! இவற்றையே தன் கடவுளுக்கும் உடுத்தி அழகு பார்க்கிறான். இதுவரை உணவுக்காக முயல், பன்றி, மான், பறவைகள்… என வேட்டை ஆடி வந்த மனிதன் பாதுகாப்புக்காகச சிங்கம், புலி, யானை …போன்றவற்றையும் வேட்டை ஆடுகிறான். இவற்றின் தோல்களை ஆடையாக அணியும் இவன் அவற்றையே தன கடவுளுக்கும் ஆடையாக அணிவிக்கிறான். தான் கண்டு நடுங்கும் பாம்பை அஞ்சா நெஞ்சனாகக் கற்பனை செய்துகொண்ட தன் கடவுள் மீது படர விடுகிறான். மேலும் பெண்டு பிள்ளை எனச் சமூகமாக வாழத் தலைப்படுகிறான். அவன் உருவாக்கிய கடவுளுக்கும் பெண்டு பிள்ளைகள் உண்டு என்று நம்பத் தொடங்குகிறான். இப்படியாக மனிதன் தன் கடவுளைத் தன் சாயலாகவே படைத்தான் என்கிறது மானிடஉருபியல் (Anthropomorphology).

    காண்க : http://en.wikipedia.org/wiki/Anthropomorphism
    கண்ணப்பர் புராணமே இதற்குச் சரியான சான்று.

    இப்படி உருவான கடவுள் சிவந்த நிறம் உடையவர் என்ற பொருளில் ‘சிவன்’ என அழைக்கப்படுகிறார். இவரை முதன்மையாகக் கொண்ட சமயம் சைவம் எனப் பெயர் பெறுகிறது.

    இதற்கிடையில், பல்லாண்டுக் கணக்கில் காலம் பறந்தோடுகிறது ; மனிதன் முன்னேறுகிறான் ! தோலாடைகள் மறைந்து பஞ்சாடைகள் தோன்றி அதன் பின் பட்டும் பீதாம்பரமும் நகையும் நட்டும் அவனை அலங்கரிக்கின்றன. செம்மண்ணால் ஆன கடவுள் இப்போது கருங் கல்லில் வடிக்கப்படுகிறார் ; கரிய நிறம் உள்ள திருமாலாக உருப்பெறுகிறார். இவரை முதன்மையாகக் கொண்ட சமயம் வைணவமாகப் பெயர் சூட்டப்படுகிறது.

    இந்த மானிடவுருபியல் கோணத்தில் பார்க்கும்போது, தமிழகத்தில் தோன்றி வளர்ந்து நின்ற சைவம் காலத்தால் முந்தியதாகவும் இங்குக் காலூன்றி வளர்ந்து வந்த வைணவம் பிந்தியதாகவும் விளங்குகின்றது புலப்படும். இந்தப் பழந்தமிழ்ச் சமயத்தைப்பற்றி இனிக் காண்போம்.

    தொடரும்

    Share
  • சைவ சமயம் அறிவியல் மையம்! (பகுதி 1)

    பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பிரான்சு

    சமயமும் அறிவியலும் :

    சமயம் வேறு ; அறிவியல் வேறு! பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கருத்து இது. ஆனால்,சமயத்தைச் சார்ந்திருக்கவில்லை அறிவியல் ; அது போலவே சமயமும் அறிவியலைச் சார்ந்திருக்க வேண்டியது இல்லை. என்றாலும், அறிவியலுக்கும் சமயத்துக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி அறிஞர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்திருக்கின்றனர்.

    இரண்டும் தம்முள் முரண்பட்டவை என்ற கருத்து 19 -ஆம் நூற்றாண்டில் வலிமை பெற்று இருந்தது. இதனை ‘Conflict thesis’ என்பர். ஒன்றைச் சார்ந்து மற்றது இருக்கவில்லை! சமயம் சொல்வதை எல்லாம் அறிவியல் உறுதிப்படுத்த வேண்டும் என்றோ அறிவியல் கூறுகளைச் சமயம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றோ கட்டாயமில்லை. இவை இரண்டும் இணையாகச் செல்லும் இரு கோடுகள் ; என்றும் எங்குமே இணையாதவை. இது ‘Independance’ என அழைக்கப்படுகிறது. இதற்கு நேர்மாறான கருத்தும் உண்டு. அதாவது, இவை இரண்டுக்கும் பொதுப் பண்புகள் உள ; மதத்தில் இருக்கும் கருத்துகள் அறிவியலில் உண்டு ; அறிவியல் கூறும் கருத்துகள் சில, சமயத்தில் உள்ளன. இரண்டின் அடிப்படை நோக்கம் ஒன்றுதான் : உண்மையைத் தேடிக் கண்டறிவது.

    “உண்மையா? அது என்ன?” – கேட்டவன் பொந்தியுஸ் பிலாத்து (Pontius Pilatus). இரண்டாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு, உரோமைச் சக்கரவர்த்தி சார்பாகப் பாலத்தீன நாட்டை ஆண்டவன். ஏசு பிரானை விசாரிக்கும் பொது இக்கேள்வியை எழுப்புகிறான். (பைபிள் – யோவான் – அருளப்பர்- நற்செய்தி அதிகாரம் 18 : திருவசனம் 38). ஆனால் அவனுக்கு முந்திய காலத்திலும் சரி இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்பும் சரி அக்கேள்விக்கு விடைதான் கிடைத்தபாடில்லை! ஏனெனில் உண்மை சார்புடையது. இடம் காலத்தைச் சார்ந்திருப்பது.

    காட்டாக, இப்போது இந்தியாவில் மணி காலை 11.30 என வைத்துக்கொள்வோம். இந்தியாவில் இருந்து பிரான்சுக்குத் தொலைபேசியில் உரையாடும் ஒருவர் ‘மணி என்ன?’ என்று கேட்கிறார். பிரான்சில் இருப்பவர், ‘இங்கு, மணி இப்போது காலை 8.00!’ என்கிறார்! இவ்விரண்டு நேரங்களில் எது உண்மை? இரண்டுமே உண்மைதான்- எனவே காலம் இடத்தைப் பொருத்து உண்மை அமைகிறது. சமயங்களுக்கும் அவற்றில் இடம் பெறும் கதைகளுக்கும் இது பொருந்தும்.

    முழுமுதல் கடவுள் சிவன் எனச் சைவம் கூறும். ‘அடி, முடி தேடிய படலத்தில் பிரமன், திருமாலை விட உயர்ந்தவன் சிவனே என்று உணர்த்தப்படுகிறது. உண்மை இது எனக் கொள்வோம். வைணவத்தில் வைணவப் புராணக் கதையில் இது பொய்யாகிறது! வரங் கொடுத்தவன் தலையிலேயே கை வைக்கப் பத்மாசுரன் ஓடி வர, வரங் கொடுத்த சிவனைக் காப்பாற்ற திருமால் மோகினி அவதாரம் எடுத்து வரவேண்டி இருந்தது. இவ்விரண்டு கதைகளில் எது உண்மை? சைவக் களங்களில் முன்னது உண்மையானது ; வைணவச் சமயத்தில் பின்னதுதான் உண்மை! சரி, சமயங்கள் சொல்லும் இறைவன் உருவம் அற்றவனா? (‘ஒரு நாமம் ஓருருவம் இலார்க்கு’) உருவம் பெற்றவனா? (‘ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமா’ !) எது உண்மை? சமயங்களில்தான் இப்படிக் குழப்பங்கள் ; அறிவியலில் எப்படி?

    17-18 -ஆம் நூற்றாண்டின் மாபெரும் அறிவியல் அறிஞர் சர் ஐசக் நியுட்டன் ஒளியைப் பற்றி ஆராய்ந்தவர். 1704 -இல் இவர் optiks என்றோர் ஆராய்ச்சி நூல் எழுதினார். அதில் அவர் ஒளி, துகள்களாக உள்ளது, அது நேர்க் கோட்டில் பயணம் செய்கிறது என்று நிறுவினார். பெரிய அறிவியல் மேதை அல்லவா, ஆகவே அவர் கூற்றை 18 -ஆம் நூற்றாண்டு உண்மை என ஏற்றுக்கொண்டது. Robert Hooke (1635-1703), Christiaan Huygens (1629-1695) போன்றோர் ஒளிக்கு ‘அலை வடிவக் கொள்கையை’ (wave theory) ஏற்கனவே வகுத்துத் தந்திருந்தனர். அதனால் நியுட்டன் கருத்து உண்மை அல்ல என்று மெல்ல, மெல்ல மறைந்தது; காலக் காற்றில் கரைந்தது. ‘அலை’ கொள்கையே உண்மை என அறிவியல் அறிவித்தது. இவை இரண்டில் எது உண்மை? இருபதாம் நூற்றாண்டு மலர்ந்த போது Max Planck, Albert Einstein, Arthur Holly Compton…போன்றோரின் ஆய்வுகளால் ஒளி சில சமயம் துகளாகவும் சில போழ்து அலையாகவும் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், 19 ஆம் நூற்றாண்டிலேயே James Clerk Maxwell, Heinrich Hertz என்னும் அறிவியல் அறிஞர்கள் ஒளி வெறும் மின்காந்தக் கதிர்களே (elctromagnetic radiation) என நிறுவினர். இப்போது சொல்லுங்கள் ஒளி என்பது என்ன? துகளா? அலையா? துகள் -அலையா? மின்காந்தக் கதிரா? இவற்றுள் எது உண்மை?

    இப்படி அலசிப் பார்த்தால், உண்மை என்பது மாய மானாகத் துள்ளி ஓடிகொண்டே இருகிறதே தவிர எட்டிப் பிடிக்கவோ கட்டிப் போடவோ முடியவில்லையே! இருப்பினும் இந்த மாய மானைத்தான் சமயமும் அறிவியலும் துரத்திகொண்டே இருக்கின்றன.

    சமயம், உண்மையின் கொடுமுடியான இறைவனை அடையத் தேடுகிறது! அறிவியலோ இயற்கையின் இரகசியங்களைத் தேடி ஓடுகிறது. எனவே சமயத்துக்கும் அறிவியலுக்கும் உள்ள ஒற்றுமை ‘தேடல்’தான்.

    ஆற்றலுக்கும் பொருளுக்கும் உள்ள பிணைப்பைப் புகழ் பெற்ற தம் சமன்பாட்டால் (E= mC2 )நிறுவிய மாமேதை ஐன்ஸ்டீன்

    ‘சமயம் இல்லா அறிவியல் முடம்
    அறிவியல் இல்லா சமயம் குருடு’ என்கிறார்.
    (‘Science without Religion is lame ;
    Religion without science is blind’ ).

    அப்படி என்றால் சமயமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று உதவி செய்தால் முது சூரியர் இளஞ்சூரியர் என்ற இரட்டைப் புலவர்களைப் போல நலமாக உலவலாமே! இதனால் அறிவியலுக்கும் சமயத்துக்கும் அல்லது சமயத்துக்கும் அறிவியலுக்கும் தொடர்பு உண்டு பண்ணலாம்! ; ஒன்றில் காணப்படும் கருத்து மற்றதில் இருக்கும், இது கூறும் கருத்தை அது உறுதிப்படுத்தக் கூடும்…என்பதை மட்டும் நம் கருத்தில் கொள்வோம். இக்கால அறிவியல் கூறும் கருத்துகளை அக்காலச் சமயம் ஒன்று தனக்கே உரிய முறையில் கூறுகிறது ; அக்காலச் சமயம் சொல்லும் கருத்துகளை இக்கால அறிவியல் உறுதிப்படுத்துகிறது ! வியப்புதான், இல்லையா! அந்தச் சமயம் எது? அது கூறும் கருத்துகள் எவை? அவற்றை இக்கால அறிவியல் எப்படி உறுதிப்படுத்துகிறது? இவை பற்றித்தான் இங்கே காணப் போகிறோம்!

    ___________________________________________________________________.

    Share