சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 2

9

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பிரான்சு

சமயங்கள் :

உலகிலே உள்ள மதங்கள், சமயங்கள் பலப்பல ! இன்ன காலத்தில் உருவானவை என அறுதி இட்டுச் சொல்லக் கூடிய மதங்கள் உண்டு – கிறித்துவம், இசுலாமியம்…போல. தோன்றிய காலம் இது எனக் கூற இயலாமல் தொன்று தொட்டுத் தொடர்ந்து வரும் மதங்களும் உண்டு – யூத மதம் மாதிரி. இம் மதங்கள் அத்தனையும் ஆசியக் கண்டத்தில் தோன்றியவையே!

அக் கண்டத்தில் உள்ள இந்தியாவில் தோன்றி வளர்ந்து வாழ்ந்த பெரிய மதங்கள் நான்கு எனலாம் : சமணம், புத்தம், சைவம், வைணவம்.

ஒரு கால கட்டத்தில், தமிழகத்தில், முன்னவை இரண்டும் ஓங்கி இருந்தன.கி.பி 5 -ஆம் நூற்றாண்டுக்குப் பின் சமணமும் புத்தமும் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டன ; தமிழ் நாட்டை விட்டே ஒழிக்கப்பட்டன. இவற்றை அழிப்பதிலும் ஒழிப்பதிலும் ஒன்றுபட்டு மும்முரமாக இருந்த சைவ வைணவச் சமயங்கள், பின்னர் தமக்குள் மோதிக்கொண்டன! இம் மோதலினால் சமயக் காழ்ப்பு பெருகி இருந்தாலும் தமிழுக்குப் பெரும் நன்மையே விளைந்தது. சமய இலக்கியங்கள் தோன்றின; ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழை வளர்த்தனர், போட்டி போட்டுக்கொண்டு. சிவனடியார் ஒரு கருத்தைப் பற்றிப் பாட அது போலவே வைணவக் கருத்தை அமைத்து ஆழ்வார் பாடல் பாடுவார். 7 -ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர் “குனித்த புருவமும் கோவைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்….” எனச் சிவபெருமானின் திருக்கோலத்தைப் பாடினார். அதற்கு எதிர்ப்பாட்டுப் போல 8 -ஆம் நூற்றாண்டின் தொண்டரடிப் ஆழ்வார், “பச்சை மாமலை போல் மேனி பவள வாய்க் கமலச் செங்கண் …”என்று பாடுகிறார். 8 -ஆம் நூற்றாண்டு ஆண்டாள் ‘திருப்பாவை’ பாட அதே பாணியில் 9 ஆம் நூற்றாண்டு மாணிக்கவாசகர் ‘திருவெம்பாவை’ பாடுகிறார். 7 – ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தர்.இவர் சித்திரக் கவியில் ஒன்றான தேர்ப் பந்தத்தில் எழுகூற்றிருக்கை பாடினார். பின்னர் 8- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வார் அது போலவே தாமும் பாடியதை என்னவென்று சொல்ல. ஆக இப்படிப் போட்டிபோட்டுக்கொண்டு சைவர்களும் வைணவர்களும் பக்தி இலக்கியங்களைப் பாடித் தமிழ் வளத்தைப் பெருக்கிச் சுவை கூட்டினர். (இதில் வரும் காலங்கள் விக்கிபீடியாவை அடிப்படியாகக் கொண்டவை ).

இச் சமயங்களுள் சைவம் தமிழ் நாட்டுக்கே உரியது என்பர். அதனால்தான் போலும் மாணிக்கவாசகரும் “தென்னானுடைய சிவனே போற்றி” எனப் பாடினார்.(காச்மீர் சைவம் வேறு ; கர்நாடகச் சைவம் பிற்காலத்தது). சரி சைவம் வைணவம் எனும் இவை இரண்டினுள் எது காலத்தால் முந்தியதாக இருக்கக்கூடும்? “சிவமே” என்று சைவர் சாதிப்பர் ; “இல்லை, இல்லை, வைணவம்தான்” என்று மல்லுக் கட்டுவர் வைணவர்! இதில் எது உண்மை? (முதல் பகுதியில் இக்கேள்வி – எது உண்மை?- கொஞ்சம் அலசப்பட்டிருக்கும்). இதில், இந்தச் சமயக் கணக்கில், வழக்கில் உண்மையைக் காண உதவிக்கு வருகிறது ஓர் அறிவியல் துறை.அதன் பெயர் ‘Anthropolgy’ ; மாந்தனியல் எனத் தமிழில் கூறலாம். மனித இனம், அதன் தோற்றம், வளர்ச்சி… பற்றி ஆராய்வது. அதற்குமுன், கணிதத்தைப் போல ஓர் அடிப்படையை (axiom) ஏற்றுக்கொள்ளவேண்டி இருக்கும்.

இறைவன் மனிதனைப் படைத்தானா?
மனிதன் இறைவனைப் படைத்தானா?

ஆண்டவன் ஐந்து நாள்களில் எல்லாவற்றையும் படைத்துவிட்டு ஆறாம் நாளில் ‘தன் சாயலாக’ மனிதனைப் படைத்தான் எனத் தோரா (Thora) ,திருமறை நூல் (Bible), திருக்குர்ஆன் சொல்லும். ஏனைய சமயங்களும் இறைவனே, மனிதனைப் படைத்தான் என்று கூறுகின்றன. ஒப்புக்கொள்ளப்பட்ட ஓர் அடிப்படையை மறுத்து அதற்கு மாறான வேறொரு அடிப்படையை வைத்து அதன் அடிப்படையில் சமன்பாடுகளைக் கட்டி எழுப்புவது உண்டு, கணிதத்தில்.

எளிமையாகச் சொல்லவேண்டுமானால், காட்டாக, யுக்ளிடின் வடிவ கணிதத்தில் இருந்து மாறுபட்ட வடிவ கணிதத்தைக் (non-Euclidean geometry) கூறலாம். யுக்ளிடின் வடிவ கணிதத்தில் முக்கோணம்; ஒன்றின் மூன்று கோணங்களின் கூட்டுத் தொகை 180 பாகை என்பது அடிப்படைக் கருத்து. கூட்டுத் தொகை 180 பாகைக்கு மிகையாகவோ குறைவாகவோ இருந்தால் என்ன ஆகும் என மாற்றி யோசித்தனர் சிலர்.(C. F. Gauss (1777-1855), N. Lobachevsky (1792-1856), J. Bolyai (1802-1860), and B. Riemann (1826-1866)).

யுச்ளிடின் கருத்து சம தளத்துக்கு (plane) மட்டுமே உண்மையாகும் ; உ(ரு)ண்டை (sphere, spherical body) வடிவுக்குச் சரிப்பட்டு வராது எனக் கண்டனர். விளைவு உ(ரு)ண்டை வடிவக் கணிதம் பிறந்தது. இதில் இணைகோடுகளுக்கு இடம் இல்லை ; பூமி போன்ற உ(ரு)ண்டை வடிவத்தின் மேல் உள்ள முக்கோணங்களின் கூட்டுத்தொகை 180 பாகைக்கு மிகையாகவோ குறைவாகவோதான் இருக்கும். இடம் – காலம் (space-time) பற்றிய தன் கருத்தை விளக்க மாமேதை ஐன்ஸ்டீன் இந்த உ(ரு)ண்டை வடிவக் கணிதத்தைத்தான் பயன்படுத்திகொண்டார். இதனால்தான் அண்டம் கோள வடிவில் உள்ளது என அவரால் நிறுவ முடிந்தது. இக்கணித எடுத்துக் காட்டைப் பின் பற்றி நாமும் கடவுள்தான் மனிதனைப் படைத்தான் என்ற கோட்பாட்டை மாற்றிப் பார்ப்போமே! இது ஒன்றும் புதுக் கருத்து இல்லை. மனிதன் தோன்றியதில் இருந்தே, இறை மறுப்பை இதயத்தில் ஏந்தியவர்களும் உண்டு ; இறை இருப்பைக் குருதியிலே கொண்டவர்களும் உண்டு. சரி, இனி, இறைவன் மனிதனைப் படைத்தான் என்பதை மாற்றி மனிதன்தான் கடவுளைப் படைத்தான் என்று வைத்துக்கொள்வோம்.

மிக மிக மிக…முற்காலத்தில் (10 000 ஆண்டுகள், 100 000 ஆண்டுகள்…ஏன் அதற்கும் முன்னால் என்று வைத்துக்கொள்ளுங்கள்!) ஆதி மனிதன் தனிமையில் வாழ்ந்தான் (சமூகம் இன்னும் உருவாகவில்லை). அவனுடைய முதல் உணர்ச்சி அச்சம்தான். இதனை நன்கு உணர்ந்துகொள்ள வேண்டுமானால் பிறந்த குழந்தையைக் கவனித்தால் போதும். தாயின் கருவறை என்ற பாதுகாப்பில் அவள் இதயத் துடிப்பையே லயமாக உணர்ந்து வாழ்ந்த குழந்தை கருப்பக் கால முடிவில் வெளியே தள்ளப் படுகிறது. இது வரை காணாத புதுச் சூழல்! இதுகாறும் உணர்ந்த லயத்தைக் காணோம்…எனவே அதன் முதல் உணர்ச்சி அச்சம். இந்த அச்சத்தின் காரணமாகவும் இது வரை தொப்புள் கொடி வழியாகக் கிடைத்து வந்த உயிர் வளி கிடைக்க வேண்டித் திணறியும் தன்னிச்சையாகக் குழந்தை அழுகிறது. தாயோ தாதியோ அதனைத் தூக்கி மார்போடு அணைக்கிறாள். குழந்தை மறுபடி அந்த லயத்தை உணருகிறது ; அதன் அச்சம் தணிகிறது. குழந்தை பிறந்தது முதல் 3 மாதம் வரை இப்படி மார்போடு அணைப்பது அதன் அழுகையை அமர்த்தும் என இக்கால மகப்பேற்றியல் அறிவுரை தருகிறது.

அடுத்து இன்னொன்றைக் கவனிக்கலாம். எது கிடைக்கிறதோ அதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும் குழந்தையின் கை.. இந்த ஆதரவைத் தேடுவதற்குக் காரணம் அதன் அச்சமே. வளர்ந்த பிறகும் இந்தப் பழக்கம் தொடர்கிறது – அச்சம் தோன்றும் போது கை தானாகவே ஆதரவு தேடி அன்னை, தந்தை, காதலன், காதலி… கரத்தைத் தேடும். தன் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் ‘அவள்’ (தாய் அல்லது தாதி) எங்கே தன்னை விட்டுப் பிரிந்துவிடுவாளோ என்ற அச்சத்தின் காரணமாக அவளோடு ஒட்டிக்கொண்டு அவள் பின்னாலேயே சுற்றுகிறது குழந்தை!

குழந்தையின் மனத்தில் உள்ளது போலவே, ஆதி மனிதனின் மனத்தில் அச்ச உணர்ச்சி வேரூன்றிக் கிடந்தது. இரவு வரும் போது, இருள் சூழும்போது காட்டு விலங்குகள் இரை தேடப் போகும் ஒலி, கொடிய விலங்குகள் எழுப்பும் ஒலிகள் (இத்தகு ஒலிகளை இளங்கோவடிகள் “கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் இடிதரும் உளியமும்…’ என வருணிப்பார்!)… அவன் அச்சத்தை அதிகம் ஆக்குகின்றன. மழையும் இடியும் அவனைக் கலக்குகின்றன! இப்படி நாலா புறமும் அச்சத்தால் சூழப்பட்ட மனிதனுக்கு ஏதாவது ஆறுதல் தேவைப்படுகிறது. ஆகவே, மகா சக்தி வாய்ந்த ஒன்றை அவன் கற்பனை செய்துகொள்கிறான். அது தன்னைக் காக்கும் என நம்புகிறான்.

இரவு முழுதும் கடும் மழை, கிடுகிடுக்கும் இடி முழக்கம், கண்ணைப் பறிக்கும் மின்னல்… அஞ்சி நடுங்கும் மனிதன் தான் படைத்துக்கொண்ட ‘அதனை’ நோக்கிப் புலம்புகிறான் ; தன்னைக் காக்கும்படி மன்றாடுகிறான்; இரவுப் பொழுதை இப்படி அச்சத்தில் கழிக்கும் மனிதன் ஒரு வழியாகக் கண்ணயர்கிறான். காலையில் கண் விழிக்கும் அவனுக்கு வியப்பு காத்திருக்கிறது : ஆம், இடி முழக்கம் இல்லை! மழைத் தூறலைக் காணோம்! இதமான வெயில், பதமான காற்று… ஆகா, எல்லாம் வல்ல ‘அது’ தன் வேண்டுகோளை ஏற்று அச்சத்தைக் களைந்துவிட்டது! அவனுக்குள் மகிழ்ச்சி. தன்னைக் காத்த ‘அதனை’க் கூப்பிட ஏதாவது பெயர் வேண்டுமே! தெய்வம், இறைவன், கடவுள்… என்று எதோ ஒரு பெயரைச் சூட்டுகிறான். அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் அல்லவா? தான் உண்ணும் உணவில் ஒரு பகுதியை (இறைச்சியோ, காய் கனியோ …)அதற்குத் தனியாக வைத்துப் பின் தான் உண்ணுகிறான். இப்படித் தெய்வம் ஒன்றைப் படைத்துக்கொண்ட மனிதன் நாளடைவில் வளருகிறான் ; உருவம் இல்லாமல் இருக்கும் தன் தெய்வத்துக்குத் தன்னைப் போலவே உருவம் தருகிறான். சிவந்த மண்ணில் உருவம் செய்ததால் அவன் இறைவன் அவனைப்போல் கருப்பாக இல்லாமல் சிவந்த நிறம் பெறுகிறது.

நாகரிகப் படிகளில் மனிதன் ஏறத் தொடங்கும் நிலை. தனக்குத் துணையாகத் துணை, இணை ஒன்றைத் தேடிச் சேர்த்துக்கொள்கிறான். நிர்வாணத்தை மறைக்க இலை, தழைகள் உதவுகின்றன, நாளடைவில் இவை மர உரிகளுக்கு இடம் தருகின்றன! இவற்றையே தன் கடவுளுக்கும் உடுத்தி அழகு பார்க்கிறான். இதுவரை உணவுக்காக முயல், பன்றி, மான், பறவைகள்… என வேட்டை ஆடி வந்த மனிதன் பாதுகாப்புக்காகச சிங்கம், புலி, யானை …போன்றவற்றையும் வேட்டை ஆடுகிறான். இவற்றின் தோல்களை ஆடையாக அணியும் இவன் அவற்றையே தன கடவுளுக்கும் ஆடையாக அணிவிக்கிறான். தான் கண்டு நடுங்கும் பாம்பை அஞ்சா நெஞ்சனாகக் கற்பனை செய்துகொண்ட தன் கடவுள் மீது படர விடுகிறான். மேலும் பெண்டு பிள்ளை எனச் சமூகமாக வாழத் தலைப்படுகிறான். அவன் உருவாக்கிய கடவுளுக்கும் பெண்டு பிள்ளைகள் உண்டு என்று நம்பத் தொடங்குகிறான். இப்படியாக மனிதன் தன் கடவுளைத் தன் சாயலாகவே படைத்தான் என்கிறது மானிடஉருபியல் (Anthropomorphology).

காண்க : http://en.wikipedia.org/wiki/Anthropomorphism
கண்ணப்பர் புராணமே இதற்குச் சரியான சான்று.

இப்படி உருவான கடவுள் சிவந்த நிறம் உடையவர் என்ற பொருளில் ‘சிவன்’ என அழைக்கப்படுகிறார். இவரை முதன்மையாகக் கொண்ட சமயம் சைவம் எனப் பெயர் பெறுகிறது.

இதற்கிடையில், பல்லாண்டுக் கணக்கில் காலம் பறந்தோடுகிறது ; மனிதன் முன்னேறுகிறான் ! தோலாடைகள் மறைந்து பஞ்சாடைகள் தோன்றி அதன் பின் பட்டும் பீதாம்பரமும் நகையும் நட்டும் அவனை அலங்கரிக்கின்றன. செம்மண்ணால் ஆன கடவுள் இப்போது கருங் கல்லில் வடிக்கப்படுகிறார் ; கரிய நிறம் உள்ள திருமாலாக உருப்பெறுகிறார். இவரை முதன்மையாகக் கொண்ட சமயம் வைணவமாகப் பெயர் சூட்டப்படுகிறது.

இந்த மானிடவுருபியல் கோணத்தில் பார்க்கும்போது, தமிழகத்தில் தோன்றி வளர்ந்து நின்ற சைவம் காலத்தால் முந்தியதாகவும் இங்குக் காலூன்றி வளர்ந்து வந்த வைணவம் பிந்தியதாகவும் விளங்குகின்றது புலப்படும். இந்தப் பழந்தமிழ்ச் சமயத்தைப்பற்றி இனிக் காண்போம்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 2

  1. ம்ம்… சரி ! போங்க போங்க உங்களுக்குத் தான்பாதைத் தெரியும் முன்னாடியேப்  போங்க  நாங்களும்  கூடவே வாரோம்! 🙂

  2. மனிதன் கடவுளைப் படைத்தான் என்ற கோணத்தில் தொடரும் தங்களது கட்டுரை மானிடஉருபியல் அடிப்படையில் மிக இயல்பாக உண்மைகளை விளக்குகிறது.

    அறியாமையால் தோன்றும் சந்தேகம்:

    தமிழகத்தில் சைவம் காலத்தில் முந்தையது என்றும் வைணவம் சற்றுப் பிந்தியது என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் நமது சங்க இலக்கியங்களில் சிவன் என்ற சொல் எங்கும் நேரடியாகப் பயன்படுத்தப் படவில்லை. ஆனால் திருமால் பற்றி விரிவான பாடல்கள் பாடப்பட்டுள்ளன. சைவம், வைணவம் என்ற பிரிவுகளும் இருந்ததாக குறிப்பிடப் படவில்லை என்றே கருதுகிறேன்.

  3. அன்பிற்கினிய நண்பர் ஆலாசியம் அவர்களுக்கு
    வணக்கம்!
    வாங்க வாங்க…நமக்கு
    முன்னாடி பெரும் ஞானிகள் இருவர் வழிகாட்டிப் போயிருக்கிறார்கள். அவர்கள்
    பின்னாடியே போவோம் வாருங்கள்.
    அன்படன்
    பெஞ்சமின்

  4. அன்புள்ள சச்சிதானந்தம் அவர்களுக்கு
    வணக்கம்.
    பாராட்டுக்கு நன்றி!
    சங்க இலக்கியத்தில் சிவன் பற்றிய குறிப்புகள் பல உண்டு என்பதைக்
    கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

    சங்க காலத்தில் சைவ – வைணவப் பேதங்கள் சச்சரவுகள் அதிகம் இல்லை.
    வட நாடு சென்று கனக விசயரை வென்று வருவன் என வஞ்சினம் கூறிய
    சேரன் செங்குட்டுவன் யானை மீது அமர்ந்து வலம் வரும் போது சிவன் கோவில் பிரசாதமான வண்ண மாலையைத் தலையில் அணிந்திருக்கிறான் ; அச்சமயம் திருவனந்தபுரத்தில் உள்ள திருமால் சேவடிப் பிரசாதமான மாலை அவனுக்கு அளிக்கப் படுகிறது. அதனையும் வாங்கித் தன் மார்பில் அணிந்துகொள்கிறான்.
    இதனை இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் கால்கோட் காதையில் பதிந்திருக்கிறார். (வரிகள் 72 முதல் 77 வரை):
    “ஆடகமாடத்து அறிதுயில்அமர்ந்தோன்
    சேடங் கொண்டு சிலர்நின்று ஏத்தத்
    தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
    வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
    ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
    தாங்கின னாகித் தகைமையில் செல்வுழி…”

    இரு சமயங்களும் சிலப்பதிகார காலத்தில்
    சண்டை சச்சரவு இன்றி சம அளவாக இருந்தமை புலனாகும்.
    அன்புடன்
    பெஞ்சமின்

  5. தங்களது இனிய விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா! மிக அழகான மிகப் பொருத்தமான காட்சியைக் கூறி மனம் மகிழச் செய்துவிட்டீர்கள். மீண்டும் எனது நன்றிகள்.

  6. மாந்தனியல், மானிடஉருபியல் துணை கொண்டு தர்க்க ரீதியில் விளக்கம் கொடுத்து சிந்தனைக்கு விருந்து படைத்துள்ளீர்கள் ஐயா.  

    செம்மண் சிலைகள்  கருங்கல் சிலைகளாக மாற்றமடைவது  மனிதன் கருவிகளைப் பயன்படுத்தும் திறனில்  கொண்ட வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அமைந்து இருப்பதும் புரிகிறது.

    வேட்டையை அடிப்படையாகக் கொண்ட  வாழ்வில் இருந்த சூழ்நிலைத் தாக்கங்கள் இறைவழிபடுதலிலும்  பிரதிபலித்தது என்ற விளக்கம் மிகவும் தெளிவாக விளங்க வைக்கிறது.

    அடுத்து மனித நாகரிகம் விவசாயத்திலும் கால்நடைகளை தங்கள் உணவிற்காக வளர்க்கத் தொடங்கிய பின் அவர்களது இறை வழிபாட்டு முறைகளும்  அடுத்த நிலையினை நோக்கிச் சென்றதும் விளங்குகிறது. 

    சச்சிதானதத்தின்  ஐயம் எனக்கும் தோன்றியது, அதனை நீக்க  தங்களது விளக்கம் மிகவும் உதவி புரிந்தது. 
    மிக நல்லதொரு தொடர். தொடர்கிறேன்.

    அன்புடன்
    ….. தேமொழி

  7. அன்புச் சகோதரிக்கு
    வணக்கம்

    தங்கள் மடல் ஊக்கம் தருகிறது..
    மிக்க நன்றி!
    தமிழில் வரவேண்டிய, வளர வேண்டிய அறிவியல் துறைகளில்
    (மானிடவியல், மானிடவுருபியல்)
    இவையும் அடங்கும்.
    அவை பற்றி என் கட்டுரையில் கோடி மட்டும் காட்டி இருக்கிறேன்.
    முழுதும் எழுத என் கட்டுரை இடம் தராது.
    இத்தொடர் கட்டுரை பலருக்கும் பயன் படின் பெரிதும் மகிழ்வேன்.

    நனி நன்றியன்
    பெஞ்சமின்

  8. அன்புச் சகோதரிக்கு
    வணக்கம்.
    மடலுக்கு நன்றி.
    தங்கள் ஆவலும் நம்பிக்கையும் வீண் போகா!
    அன்புடன்
    பெஞ்சமின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *