தொலைத்ததும் .. கிடைத்ததும் …! – 3

ஜெயஸ்ரீ ஷங்கர்

ஷீலாவிடம் இந்த விஷயத்தைச் சொல்லலாமா… வேண்டாமா… என்ற குழப்பத்தில் மனது தவித்தாலும், கிராமத்து மண்ணுக்கே உரிய வெள்ளந்தியான மனோபாவத்தில் மலர் வேகமாக ஷீலா…ஷீலா என்று அவளை நோக்கி முகத்தில் பிரகாசத்துடன் ஓடுகிறாள்.

என்னாச்சுடி…சம்பளம் வாங்கிட்டியா?…சந்தோசத்தப் பாரு..ம்ம்…சொல்லு…எவ்ளோ கொடுத்தான் அந்தத் திருட்டுப் பய.?

தெரியுமாடி உனக்கு…? என்கிட்டே முன்னமே ஏன் சொல்லல. பாதிக்குப் பாதி தான் தந்துச்சு அந்தக் கொரங்கு. எனக்கு அப்பிடியே உடம்பெல்லாம் தீப்புடிச்சி எரிஞ்சிச்சு தெரியுமா? பண்றது திருட்டுத்தனம்…அதுல அதட்டல் வேற. நான் நல்லாக் கேட்டுபுட்டு தான் வந்தேன் என்ற மலர் பெருமையுடன் சொன்னவள் ஷீலாவிடம்…..ஆமா..அந்த மேனஜர் என்னிய பாக்கிங் ஆபீஸ்ல ஒரு சீரியல்ல நடிக்க அழைச்சாரு . ஒரு வாரத்துக்கு அஞ்சு ஆயிரமாம். நான் போகலாமுன்னு முடிவு செய்து வாரேன்னு சொல்லிப்புட்டேன். அதான் உன்கிட்டயும் சொல்லிப்புட்டு செய்யலாமே…என்று இழுக்கிறாள்.

அது எங்கிட்டு டீ …..இவளே….எனக்கு சொல்லவேயில்ல. நானும் வருவேனில்ல. அந்தாளு ஏதோ கேம் ஆடுதுன்னு தோணுது. சாக்றதயா இருடி..

ம்மம்ம்…என்று சொன்னவள் ,சிறிது நேரம் யோசித்து , என்ன உன் துட்ட அந்தப் பாண்டி பிடுங்கிடுச்சா..? என்று கேட்கிறாள்.

அம்புட்டும் நான் தரல.ஒரு முன்னூறு கொடுத்தேன். அம்புட்டுதான். எல்லாம் என் நேரம்டி. அலுத்துக் கொள்கிறாள் ஷீலா.

சரி வா…நாம போகலாம். நடக்க நடக்க ரோடு நீளமாவது போலிருந்தது மலருக்கு. பெரிய பெரிய கட்டிடங்கள் பயமுறுத்தியது. அங்கங்கே குழி தோண்டி வேலைகள் செய்து கொண்டிருக்க பக்கத்திலேயே கார்கள் பெருத்த ஹாரன் ஒலியோடு செல்லும் போது காதைப் பொத்திக் கொண்டு பயந்து நின்றாள் . தலைக்கு மேலே பெரிய பாலம் ஓட…அதற்கு பக்கத்தில் இரும்புக் கூண்டுகளோடு மனிதர்கள் நின்றிருப்பதை பார்த்து…இது என்ன சர்க்கஸ்ன்னு சொல்லுவாங்களே அதுவாடி…….!

….சீ.சீ…..அது ஒண்ணும் இல்லடி..இது மெட்ரோ ரயிலுக்கு வேலை நடக்குது. கீழ எடம் இல்லாங்காட்டிக்கு மேல கூட ரயிலு விடுவாங்களாம். பாண்டியன் தான் சொல்லுச்சு.

அப்போது பயங்கற சத்தத்துடன் சத்தத்துடன் “ஸ்பைஸ்ஜெட்” பறந்து இறங்கிக் கொண்டிருந்தது….!

அய்யே…..அய்யே….இதோ அங்கிட்டுப் பாரேன்…..விமானம்….விமானம்…..நான் இப்பத் தான் முத முத வாட்டிப் பாக்கறேன்…..எப்டி பறக்குதுடி..எங்கம்மாட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப் பட்டுகிடும்.. விமானம் எல்லாம் பார்த்திருக்காண்டு. ம்ம்ம்….என்று ஷீலாவை இடிக்கிறாள்.

டி….இரு…இரு…கொஞ்சம் நிதானத்துக்கு வா….காலு கீழ தானே இருக்குது…என்று குனிந்து மலரின் காலைப் பார்க்கிறாள்.

அடிப்போடி என்று வெட்கப் பட்டவள்….நாம இன்னைக்கே ரூம்ப காலி பண்ணீடலாமா..?

அது அம்புட்டு சுலபமில்ல…முதல்ல நீ வேணா கெளம்பு. அப்பால நான் காலி பண்ணிக்கறேன்.

மனசுக்குள் மகிழ்ந்தாள் மலர்விழி.இந்த கரப்பான்பூச்சி ரூம்புலேர்ந்து முதலில் தப்பிச்சால் போதும் என்றது அவளது மனம்.

அதோ பாருடி..அந்தப் பையன் சோளப்பொறி விக்கிறான்…வாங்கலாமாடி…மலர் துள்ளுகிறாள் ..எனக்கு வவுறு திங்கக் கேக்குது.

அது சோளப்பொறி இல்லடி…..பாப்புகானு ….! இங்கிட்டெல்லாம் அப்படித்தான் சொல்லுதுங்க.

அதென்ன பாப்புகானோ…நூர்ஜகானோ….எனக்கு ஒரு பாக்கெட்டு வாங்கு. எம்புட்டு இருக்கும்.

பத்து ரூவாடி….!

அடிப்பாவி….எங்கூர்ல ரெண்டு ரூவா தாண்டி..இங்கிட்டு கொள்ளையடிக்கிரானுவ…இத்தினிகாண்டு சோளம்…பொரிச்சா பொங்கீட்டு வரப்போவுது..அதுக்கு இம்புட்டு துட்டு எதுக்கு..? சரி வாங்கித் தொலை.

இதுக்கே இம்புட்டு இழுக்கறியே …..இம்புட்டுக்காண்டி வேகவெச்ச சோளத்தைக் கொடுத்து இருபத்தஞ்சு ரூபா கேட்ப்பான்…அத இன்னும் நீ பார்க்கலைன்னு வெளங்குது. ஒரு நாளு பாண்டியோட பாண்டிபஜார் போயிட்டு வந்தால் அம்புட்டும் வெளங்கும் .

அதென்னாடி …பாண்டிக்கு தனியா பஜாரு கூட அதும் பேருல இருக்குதா? நீ பெரியாள்டி .

மண்ணாங்கட்டி…….மொதல்ல அது ஏதாச்சும் வேலை வெட்டி பார்க்காதான்னு நான் கெடந்து தவிக்கிறேன்.

ஆமா…உன் ஆளு பாண்டிக்கு வேலை வெட்டி ஏதும் இல்லையா? அதான் சும்மாச் சும்மா இங்கிட்டே சுத்தி சுத்தி வராப்பல. அவனப் பாத்தா நல்லவனாவே தெரியல. எதுக்கும் தள்ளியே வெய்யி. இவன்லாம் உன் கழுத்துல தாலி கட்டி…நீ குடும்பம் நடத்தி……வாயில் பாப்கார்னை போட்டுக் கொண்டே ‘சவக் சவக் ‘ என்று மென்று கொண்டே பேசிக் கொண்டு நடக்கிறாள் மலர்.

அடி….பார்த்து வாடி எரும மாடு…! என்று ஷீலா மலரின் கைகளைப் பற்றி இழுக்கிறாள் .

எருமை மாடு ஒன்று நடந்து இவர்களைக் கடந்து சென்றது.

நீ என்னமோ என்னியத் தான் சொல்லுறேன்னு நெனைச்சு சுள்ளுன்னு எனக்கு எகிறிச்சு பாரு…!

பழையபடி குப்பைகளைக் கடந்து அந்த இருட்டு ரூம்புக்குள் நுழைந்து , தப்பித்தால் போதும் என்று தனது பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியேறிய மலர்விழி, அப்ப நான் அந்த மேனஜரை பார்த்து பேசி அந்தாளு எங்கிட்டு அழைச்சிட்டுப் போகுதோ அங்கன போய் இருக்கேன். இன்னும் பத்தே நாளு தான்..எம்புட்டு கெடைச்சாலும் எடுத்துக்கிட்டு ஊரைப் பார்த்து போயிடுவேன். அடுத்த மாசம் இந்நேரம் காலேஜுடி .

அந்தாளு முன்னமே சொல்லிருந்தா இந்த வாரமே அஞ்சாயிரம் அள்ளிருக்கலாம். அதென்னடி..எப்பப் பாரு நம்மளப் பார்த்து ஈ ன்னு இளிச்சுக்கிட்டே நிக்குது.

போட்டும் விடு மலரு. நா வேணா கூடத் தொணைக்கு வரட்டாடி ஷீலா கேட்கிறாள்.

வேணாண்டி…எனக்கே வளி தெரியிது. நீ பாவம்..போய் படு. நா வாரேன்.

மூச்சிரைக்க நடந்து வந்து ஆபீஸ் வாசல் படியில் பெட்டியை வைத்து விட்டு அங்கேயே மூச்சு வாங்க உட்காருகிறாள்.

அந்த அறைகுள்ளிருந்து ஜன்னல் வழியாக அவளது கண்கள் எட்டிப் பார்க்கிறது. இந்தாளு பாண்டிக்கு இங்கிட்டு என்ன வேலை….? அப்படி என்ன தான் பேசுறாரு மேனேஜர் சாரு இவன்கிட்ட..அதும் ஷீலா இல்லாத போது ..? எழுந்து நின்று காதைத் திட்டுகிறாள். மனசு சொல்கிறது அடியே…ஒட்டுக் கேட்க்குறது தப்புடி ….! மனசாட்சி சொல்லுகிறது….கவனமா கேளு…அதுங்க என்ன பேசுதுங்கண்டு…மண்ணாந்தையா நிக்காதேன்னு.

மனசாட்சிக்கு செவி சாய்த்து சுவரில் சாய்கிறாள் மலர்விழி.

0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

ஏண்டா….பாண்டி..நீ எப்பப்பாரு வந்து வந்து நிக்கறியே..வேலை வெட்டி ஒண்ணுமில்லியா? உத்தியோகம் புருச லட்சனம்டா..தெரியுமில்ல. மேனஜரின் கட்டைக் குரல் இவளின் காதை அடைத்தது.

எல்லாம் தெரியும்பு….வேலை இல்லாமலா சுத்துறோம்…..திருவான்மியூர்ல தீயடைப்பு இருக்குல்ல அங்கனக்குள்ள தான் இருக்குறேன்.
நமக்கு வேலை மென்னியப் பிடிக்கிறது தீவாளி சீசனப்பத்தான். எனக்கு தெனம் வேலை வேணும்முண்டா தெனம் எங்கிட்டாச்சும் தீ புடிச்சி எரியணும் . அது ஆவுற காரியமா…? அதான் அங்கிட்டுருந்து இப்படி ஒரு நடை வந்துட்டுப் போவேன்.

அப்ப அந்தப் புள்ள ஷீலா….சும்மானாச்சும் டாவடிக்கிறியா?

அய்யைய …..நான் கட்டிக்கப் போற பொண்ணுங்கன்னா…அது. நான் கழட்டி விட்டுட்டு போக பளகல. புரிஞ்சுக்கிடுங்க.

அடப் போப்பா…..இந்தக் காலத்துல பொண்ணுங்களே அப்படிப் பளகறதில்லை. காசப் பாத்ததும் கழண்டுகிடுங்க.

என்ன நீ ஒரு இருபதாயிரம் மாசம் தேத்துவியா..?

அம்புட்டு எங்கிட்டு…! நல்லாக் கேட்டீங்க போங்க..! நான் அஞ்சுக்கும் பத்துக்குமே முழி பிதுங்கி நிக்கிறவன்.

அப்ப ஒண்ணு செய்யி….நான் ஒரு அருமையான தொழில் சொல்லித் தரேன்…கமிஷனே களை கட்டும்….ஒரே வருஷத்தில .நீ எங்கிட்டோ போயிடுவே. எங்கன உனக்கு வேலையே இல்ல..பூரா பூரா வடக்குல தான். செல் போன் ல தான் பிசினெஸ் நடக்கும். நம்ம அமீர்பெட் ஆஞ்சநேயுலு தான் முதலாளி. மாட்டிக்கிடாம, மாட்டிவெக்காம காரியம் பண்ணி முடிச்சா…பணம் மூட்டைல வந்து எறங்கும் . இல்லாங்காட்டி…

இல்லாங்காட்டி…..?

நீயே பொணமா மூட்டைக்குள்ளார கட்டிவெச்சி கூவத்துக்குள்ளார எறங்கும்.

அப்படி என்ன புதுசா கெடைச்சிருக்கா ‘மகாலட்சுமி..”..? பயமுறுத்துற லட்சுமி.

இப்ப ஷீலா உங்கிட்ட மாட்டிச்சு பாரு, அதை அப்படியே மெதுவா நம்ப வெச்சு கிண்டி கூட்டியாந்துடு. அங்கிட்டிருந்து அப்படியே ஆந்திரா தள்ளி உட்றலாம் . அங்க நம்ப ஆளு இருக்கான். எப்டியும் அம்பது தேறும்.

ச்சே……இதெல்லாம் ஒரு பொளப்பா ….? இதுக்கெல்லாம் தான் பேரு இருக்கே. நான் இந்தப் பாவம் பண்ண மாட்டேன் ஆள விடுங்க.
பாண்டியனின் குரலில் நெகிழ்ந்தாள் மலர்விழி.

இதெல்லாம் உனக்கு செட் ஆவாதுடா…தள்ளி விட்டுட்டு காசை எண்ணிக்கிட்டு என்ஜாய் பண்ணிட்டு போயிட்டே இருப்பியா…பாவம்…புண்ணியம்னு பேசிக்கிட்டு…அலுத்துக் கொண்டான் மனேஜர்.

இந்தா….என்று டேபிளின் மீது தொப்பென்று விழுந்தது பணக்கட்டு. வேலையே பண்ணாதே….வெச்சுக்கோ அட்வான்ஸ்.இருபதாயிரம்..
கட்டைக் குரல் பேரம் பேசியது. அதே சமயம் இங்கிட்டிருந்து உசுரோட போவமாட்டே என்று பயமுறுத்தியது.

ரத்தம் உறைந்து போய் நாவுலர நடுங்கியபடி நின்றிருந்தாள் மலர்.

அடுத்தது என்ன…யூகிப்பதற்க்குள்..

பாண்டியன் பணத்துக்குள் விழுந்தான்…!

அப்ப …என் கணக்குல ரெண்டு அயிட்டம் எழுதிக்கிருங்க….முதல்ல ஷீலா. பெறவு மலரு.

வெளியில் நின்றிருத்த மலருக்குத் தூக்கி வாரிப் போட்டது. இருந்தும் அசட்டு தைரியம் நிற்க வைத்தது.

அப்டி வா வளிக்கி ..இதெல்லாம் இன்னும் ஒரு வாரத்துல முடிஞ்சிரணம். அந்த ஷீலாவை ஆந்திராவுக்கு அனுப்பிடு. இந்தப் புள்ள மலரை பாம்பேக்கு தள்ளி விட்டுடு, எப்படியும் ஒண்ணத் தாண்டிடும் உன் கமிஷன். பாரேன்…ஒரே வாரத்துல நீ லட்சாதிபதி. ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினான்….ராத்திரி இங்கன வந்துருறா கம்பெனிக்கி…..டாஸ்மாக்கே அந்த பீரோக்குளாற தான் இருக்கு.மேலும் ஆசை காட்டினான். பாண்டியனின் மனது நாயானது…..ரொட்டித் துண்டுக்கு வாலாட்டி குழைந்து நாக்கைத் தொங்கப் போட்டது.

பாண்டி பணத்தை எடுத்து அழுக்கு கர்சீப்பில் கட்டிக்கொண்டு விசிலடித்தபடியே……’தலைவா …..சொன்னபடி நான் ஒரு வாரத்தில் லட்ச்சாதிபதி..’ ஏமாத்திற மாட்டியே…!

நீ காரியத்த கவனிடா….உன்னிய நாங்க கவனிக்கிறோம்….வில்லனைப் போல சிரிக்கிறது கட்டைக் குரல் மேனேஜர் .

சரிங்கண்ணா…….அங்கிருந்து கிளம்புகிறான் பாண்டியன்.

அவசர அவசரமாக பையை எடுத்துக் கொண்டு தான் அப்போது தான் வந்தவள் மாதிரி உள்ளே நுழைகிறாள் மலர்.

அவளைப் பார்த்தவன்…..”கும்பிடப் போன …தெய்வம். …குறுக்கே வந்ததம்மா…அடக் குறுக்கே வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா……”
என்று பாடியபடியே…புருவத்தை உயர்த்திப் பார்க்கிறான்.

(தொடரும் )

About ஜெயஸ்ரீ ஷங்கர்

எழுத்தாளர்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க