சு.ரவி

வணக்கம், வாழியநலம்

இன்று மஹாகவி பாரதியார் நினைவு தினம்.

தமிழ் இலக்கியத்திற்குப் புத்துயிர் கொடுத்த கலைமகளின் தவப்புதல்வனை வணங்குவோம்!

பாரதியின் பாதமலர் போற்றும் கவிதையும், அன்னாரின் திரு உருவ ஓவியமும் காண்க!

பார்க்க, படிக்க, ரசிக்க…

Mahakavi Bharathiyar 1

மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்

உலைப்பாகை ஊற்றியது போலே என்றும்

ஒளிர்கின்ற விழிச்சுடர்கள், அதற்கு மேலே

தலைப்பாகை கம்பீரம், தரைகா ணாத

தருக்கோடு வான்நோக்கும் மீசை, நாட்டைக்

குலைப்பார்கை ஒடித்தெறியத் துடித் தெழுந்த

குமுறல்கள் ஊற்றெடுக்கும் நெஞ்சம்; அந்தக்

கலைப்பாவை தவமிருந்து பெற்றுத் தந்த

கவிச் செல்வம் பாரதியின் கழலே போற்றி!

கடவுளிடம் வரம்கேட்டபோதும் கூடக்

கைகட்டிக்கேட்காத தன்மானத்தன்

இடர்களையும், தடைகளையும் இமைப்போதில் தன்

இடர்களையும் கவிதைகளால் தகர்க்க வல்லான்

சுடர்கின்ற சொற்களுக்குச் சொந்தக் காரன்

ஸ்வரங்களிலே கவிதொடுத்த பாட்டுக் காரன்

மடமைகளும், பழமைகளும் மலிந்த நாட்டை

மலர்வனமாய் மாற்றவந்த தோட்டக் காரன்

அரசியலோ, அறிவியலோ, ஆன்மீகத்தின்

அடிவேரோ, அயல்மொழியில் கவிஞர் செய்த

அரியபல இலக்கியமோ ஏதானாலும்

அவன் தொட்டுப் பார்க்காத களமே இல்லை!

விரல்தடவி வாணியவள் மீட்டிப் பாடும்

வீணையவன்; கண்ணன் கைக் குழலும் ஆவான்!

வரகவியாய் வந்துதித்த ஸுப்ரஹ் மண்ய

பாரதியின் பாதமலர் போற்றி! போற்றி!

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “மஹாகவி பாரதியாருக்கு அஞ்சலி

  1. ஆஹா! ஆஹா! அருமை!
    இன்பத்தேன் வந்து பாயுது காதுகளிலே!!! 

    அற்புதமானக் கவிதை 
    அபாரமான கருத்துக்கள் 
    அத்தனையும் முத்து 
    அவன் தமிழர் தம் சொத்து 

    அவனை அழகாய் செதுக்கிய
    தங்கள் கரங்களுக்கு 
    தங்கக் காப்பிடனும்! 

    அன்னை பராசக்தி தங்களுக்கு 
    சர்வ சக்தியும் தந்தருளட்டும்!!!

    “அரசியலோ, அறிவியலோ, ஆன்மீகத்தின்
    அடிவேரோ, அயல்மொழியில் கவிஞர் செய்த
    அரியபல இலக்கியமோ ஏதானாலும்
    அவன் தொட்டுப் பார்க்காத களமே இல்லை!
    விரல்தடவி வாணியவள் மீட்டிப் பாடும்
    வீணையவன்; கண்ணன் கைக் குழலும் ஆவான்!
    வரகவியாய் வந்துதித்த ஸுப்ரஹ் மண்ய
    பாரதியின் பாதமலர் போற்றி! போற்றி!”

    அருமை! அருமை!! அருமை!!!
    கலைவாணியின் அருள் இது!!!

    பகிர்விற்கு மிக்க நன்றி!

  2. அருமை,அருமை பாடலும் ஓவியமும் அத்தனை அருமை. இந்த தமிழையும் பாரதியையும் எத்தனை போற்றினாலும் புகழ்ந்தாலும் சலிக்காது. நினைவு நாளில் நல்லதொரு கவிதை தந்த ரவி அவர்களுக்கு நன்றிகள் பல.

  3. அற்புதமான வரிகள்!!. படிக்கப் படிக்க பெருமிதத்தால் நெஞ்சம் விம்முகிறது. சொற்களை தொடுத்துச் செய்த ரத்தின ஆரம் இந்தப் பாடல். படத்திலிருக்கும் பாரதியின் முகத்தில் தெரியும் கம்பீரம், கவிதை வரிகளிலும் பிரதிபலிக்கிறது. அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி!!.

  4. அன்பின் இனிய தனுசு மற்றும் திருமதி பார்வதி இராமச்சந்திரன்,

    தஙள் இருவரின் ஊக்கம் தரும் கருத்துகளுக்கு என் மனமார்ந்த நன்றி.

    சு.ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *