Featuredஇலக்கியம்பத்திகள்

சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 4

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ

சைவ சமயம் பற்றிச் சுருக்கமாகப் பார்த்தோம். இச்சமயம் எப்படி அறிவியல் மையமாக விளங்குகிறது? சைவத்துக்கும் அறிவியலுக்கும் தொடர்பு இருக்குமா? இருக்கிறதா?… இப்படி ஆயிரம் கேள்விகள்….

சைவ சமயத்தின் மையத்தில் இக்கால அறிவியல் உண்மைகள் உள்ளன. சைவ சமயத்தின் ஒவ்வொரு தத்துவமும் விஞ்ஞானத்துடன் பிணைந்துள்ளது. இதனை நம் நாட்டார் மட்டுமல்லாமல் மேனாட்டாரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதோ சத்குரு சிவாய சுப்ரமுனியசுவாமி கூறுவதைக் கேட்போம். பெயரை பார்த்ததும் இது நம்ம ஊர் சாமி என முடிவு கட்ட வேண்டா! சாமி அச்சு, அசல் அமெரிக்கர் ; கலிபோர்னியாவில் உள்ள ஒக்லாந்தில் பிறந்தவர். இளமையிலேயே சைவத்தின் பால் ஈர்க்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் தீட்சை பெற்றுத் துறவி ஆனவர். இவர் என்ன சொல்கிறார் :

“வருங் காலத்துக்கும் வளம் கூட்டும் சமயம் சைவம். தொழில் நுட்ப யுகமாகிய இந்தக் கால கட்டத்துக்கு வேறெந்த மதத்தையும் விட மிகப் பொருந்தி வரக்கூடிய ஒரே மதம். இது, முழுக்க முழுக்க இக்கால அறிவியலோடு ஒத்துப் போகும் தன்மை உடையது.”

இன்னோர் அமெரிக்கர் : பெயர் – Theos Casimir Bernard சமய வல்லுநர், திபெத்திய புத்தமத ஆய்வாளர், யோகா வல்லுநர். இவருடைய கருத்து : “அறிவியல் அடிப்படையில், தர்க்க ரீதியில் பிரபஞ்சத்தை அலசி ஆயும் பண்பு சைவ சித்தாந்தத்துக்கு மட்டுமே உண்டு.”

சைவ சித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்ற மலேசிய இளைஞர் சிவ.பரமசிவம் என்பவர் எழுதுகிறார் :

“சைவ சமயமும் அறிவியலும் நட்புறவாகவே உள்ளன ; ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் இருக்கின்றன. சைவ சித்தாந்தம் உரைக்கும் உண்மைகளை அறிவியல் ஆய்வாளர்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் உறுதிப்படுத்துகின்றனர்.”

பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். மேலே சோற்றுப் பருக்கைகள் மூன்று கொடுத்துள்ளேன். போதும் அல்லவா! அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று அடுக்குவதை விட நாமே நேரே சென்று காண்பது நல்லது தானே! எப்பொருள் யார், யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது தானே அறிவு.

சைவ சமயமும் அறிவியலும் இரு பெருங் கடல்கள். இவற்றுள் மூழ்கி முத்தெடுப்பது எளிதன்று. நம் ஆய்வைக் குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வந்தால் ஒழிய இது சாத்தியம் ஆகாது. எனவே நம் ஆய்வுப் பொருளாக அண்டம், பிண்டம் என்ற இரு பிரிவுகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். அண்டத்துள் பிண்டம் அடங்கும் ; பிண்டத்துள் அண்டம் அடங்கும்.

இதனை, சட்டமுனிஞானம் என்னும் சித்தர்
“அண்டத்தி லுள்ளதே பிண்டம்
பிண்டத்தி லுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே” என்பார்.

சைவ சமய ஞானிகளும் பலர் உளர் ; அத்தனைப் பேர்களையும் இங்குக் கொண்டுவரும் வல்லமை ‘வல்லமைக்கும்’ இல்லை ; அடியேனுக்கும் இல்லை. ஆகவே அவர்களுள் இருவரை மட்டும் தேர்ந்தெடுப்போம். யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? அண்டம், பிண்டம் பற்றி அதிகமாக யார் பேசி இருக்கிறார்களோ அவர்களை! அவர்கள்: திருமூலர் என்னும் திருமூல நாயனார் (திருமூல சித்தர். என்றொருவர் 16 -ஆம் நூற்றாண்டில் இருந்திருக்கிறார் என்பதைக் கவனத்தில் கொள்க) ; மற்றவர் : மாணிக்கவாசகர். முன்னவர் பிண்டம் பற்றிப் பேசுகிறார் ; பின்னவர் அண்டத்தைப் பற்றி அழகாகக் கூறுவார். இக்கருத்தை முக்கோணமாகக் கற்பனை செய்து பார்க்கலாம்.

முக்கோணத்தின் அடிப்படை : சைவசமயம் – அறிவியல் இணைந்த படுக்கைக் கோடு ; இடப்பக்கச் சாய் கோடு : திருமூலர் காட்டும் பிண்டம் ; வலப்பக்கச் சாய் கோடு : மாணிக்கவாசகர் விளக்கும் அண்டம். இவ்விரு சாய் கோடுகளும் மேல் நோக்கிச் செல்லுகின்றன. அவை இணையும் போது சைவ சமயம், அறிவியல் மையம் என்ற உச்சி கிடைக்கும்.

Triangle

இவ்விருவரும் நமக்குத் தெரிந்தவர்கள்தாம். இருப்பினும் அவர்களைப் பற்றிச் சில தகவல்கள் .

திருமூலர் :

5 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் எழுதிய நூல்களில், திருமந்திரம் தலையாயது எனினும், திருமூலர் அறுநூற் றொன்று, திருமூலர் வைத்தியம்,
திருமூலர் ஞானம், திருமூலர் வழலைச் சூத்திரம், திருமூலர் பல திரட்டு,
திருமூலர் வாதம் இருபத்தொன்று போன்ற மேலும் பல அரிய நூல்களையும் எழுதியுள்ளர். ‘திருமந்திரம்’ என்னும் இவ்வருள் நூலுக்குத் திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை. காண்க :

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே. (தி.10 பா.25)

இவர் 63 நாயன்மார் வரிசையிலும் வருவார் ; 18 சித்தர்கள் வரிசையிலும் இடம் பெறுவார்! அறுபத்துமூன்று நாயன்மார்களை அறிமுகப்படுத்திப் பாடப்பெற்ற நூல் திருத்தொண்டத்தொகை, பாடியவர், நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர். இரண்டே இரண்டு பேரைத் தான் ‘பிரான்’ என்ற சொல்லைச் சேர்த்து அவர் பெருமைப் படுத்துகிறார். வேறு எந்த அடியார்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு. அந்த இருவருள் ஒருவர் பிள்ளையார்(சம்பந்தர்) இன்னொருவர் திருமூலர்.

சம்பந்தரை எம்பிரான் என்றும், திருமூலரை நம்பிரான் என்றும் திருத்தொண்டத்தொகையில் போற்றியுள்ளார் :

“`நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்” (தி.7 ப.35. பா.5)

நம்பிரான் என்றால் எப்போதும் நம்மை விட்டுப் பிரியாதவன் என்று பொருள்.

திருமூலர் 28 ஆகமங்களின் சாரமாகத் திருமந்திரத்தைச் செய்தருளினார். இது உண்மையென உணர்த்தும் விதத்தில், பெரியபுராணத்தில் திருமூலர் வரலாற்றை 28 பாடல்களில் அமைத்தார் சேக்கிழார் .

இப்படிப்பட்ட பெருமைக்குரிய திருமூலரைப் பற்றிய கதைகள் பல. கூடுவிட்டுக் கூடு பாயும் கலையில் வல்லுநர் என்பர். ஆண்டுக்கு ஒரு பாடல் என்ற கணக்கில் இவர் 3000 பாடல்கள் எழுதியதாகச் சொல்வர். அதாவது இவர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தவராம்! இக்கட்டுக் கதைகளைத் தள்ளிவிட்டுப் பார்த்தால் இவர் எழுதிய 3000 பாடல்களும் கிடைத்துள்ளன என்பதே பெரிய செய்திதான். இவை கலி விருத்தத்தில் அமைந்தவை. நாலே அடிகள் ; ஒவ்வொரு அடியிலும் நாலே சீர்கள்! ஆனால் அவற்றில்தான் எத்தனை எத்தனை அரிய பெரிய கருத்துகள்!

இக்கால மருத்துவ இயல் கூறும் கருவியல் (emriology) முதல் யோக சாத்திரங்கள், சைவ சித்தாந்தத் தத்துவங்கள், அறிவியல் கருத்துகள்… எனப் பலவும் இதில் பரந்து விரிந்து கிடக்கின்றன. காட்டாக ஒன்றைக் காட்டுகின்றேன் :

அட்சரேகைகளை முதல் முதலில் எகிப்திய வானநூல் அறிஞர் டாலமியின் வரைபடத்தில் காண்கிறோம். அவர் கி.பி. 150 -இல் வாழ்ந்தவர். ஆனால் தீர்க்கரேகைகளையோ 18 -ஆவது நூற்றாண்டில் தான் காண்கிறோம். இதில் வியப்பு என்னவென்றால் இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இது குறித்துத் திருமூலர் அறிந்திருக்கிறார். அவர் இரண்டு திருமந்திரப்பாடல்களில் (2701,2708) மேரு, தில்லை (சிதம்பரம்), இலங்கை ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் (தீர்க்கரேகை) இருப்பதாகப் பாடுகிறார்! கற்பனைக் கதை இல்லை இது. அறிவியல் (புவியியல்) உண்மை. சிவன் இருக்கும் கைலாய மலை மேரு. இதில் இருந்து கீழ் நோக்கி நேர்க் கோடு வரைந்தால் அது சிதம்பரம் (சிவத்தலம்) வழியாகச் செல்லும். இக்கோட்டின் வலப்பக்கம் மேரு (கைலாய) மலை இருக்கும் ; இடப்பக்கம் (எக்காலத்தும்) சிவ பூமியாக (விளங்கும்) இலங்கை இருக்கும்.

படம் காண்க :

 Meru-Chidambaram-Ceyon map

இடைபிங் கலையிம வானோ டிலங்கை
ஈடுநின்ற மேருநடுவாஞ் சுழுனை
கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்
படர்வொன்றி யென்னும் பரமாம் பரமன்றே
– திருமந்திரம் 2708

இந்தப் பாட்டில் இடகலை (இடப்பக்க நாசி) இமயத்திற்கும் பிங்கலை (வலப்பக்க நாசி) இலங்கைக்கும் ஒப்பிடப்படுகின்றன. சுழுமுனை எனப்படும் நடுநாசி தில்லைக்கு ஒப்பாகும் (நாசி = மூக்கு). இக்கருத்தையே உணர்த்தும் இன்னொரு பாடல் :

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்
சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ
மேலுஞ் சுழுனை இவை சிவபூ மியே. (2701).

இப்படிப்பட்ட கருத்து வளம் மிக்க நூல் திருமந்திரம்.

வேத ஆகமங்களின் முடிந்த முடிபாகிய சைவசமயத் தத்துவம் என்ற பொருளில் சித்தாந்தம் என்ற சொற்றொடரை முதன் முதல் வழங்கியவர் திருமூல நாயனாரே ஆவர்.

” ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” (2104)
( ‘உம்’மைக் கவனிக்க : ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ இல்லை!)

” என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” (திருமந்திரம் 81)

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” (திருமந்திரம் 147).

இவை திருமூலர் திருவாய் மலர்ந்தருளியவை.

மாணிக்கவாசகர் :

திருவாதவூரார், மணிவாசகர் மாணிக்கவாசகர்.. என்றெல்லாம் பெயர் பெற்றவர்; அரிமர்த்தன பாண்டியன் அவைக்களத்தில் முதல் அமைச்சர் பதவி வகித்தவர்; “போருக்கு வேண்டும் அரபுப் புரவிகள், வாங்கி வாருங்கள்” என்று அரசன் பெரும்பொருள் கொடுத்து இவரை அனுப்பத் திருப்பெருந்துறை ஊரில் குருந்த மரத்தடியில் இருந்த ஈசன் இவரைத் தடுத்தாட்கொண்டான். குதிரை வாங்கக் கொண்டு வந்த பொருளை எல்லாம் ஆண்டவன் திருப்பணிக்குத் திருப்பிவிட்ட புரட்சிக்காரர். ‘மாணிக்கவாசகன்’ என இறைவனாலேயே பெயர் சூட்டப்பட்டவர். இறைவனே குருவாக அமையத் தீட்சை பெற்றவர். ஆதி காலம் முதலே சிவ பூமியாக விளங்கிய ஈழத்தில் புத்தமத ஆதிக்கம் ஏற்பட்டது. அதனைத் தடுக்க அங்கே சென்று புத்த பிக்குகளை வாதங்களில் வென்று சைவ சமயத்தை மீண்டும் நிலை நாட்டியவர் ; ஈழ அரசனின் ஊமை மகளைக் குணமாக்கிப் பேசவைத்தவர்… இவருக்காகவே ஈசன் பிட்டுக்கு மண் சுமந்தான், பிரம்படி பட்டான்…. நரிகளைப் பரியாக்கிப் பரிகளை நரியாக்கித் திருவிளையாடல் புரிந்தான், திருவெம்பாவை இவர் பாடக் கேட்டு மகிழ்ந்த இறைவன் “பாவை படிய வாயால் கோவை பாடு” என்று கேட்கத் திருக்கோவை பாடினாராம்….என ஏராளமாகக் கதைகள் உண்டு. இவர் இயற்றிய திருவாசகத்தைப் படித்து உருகியவர் பலருண்டு. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் மேனாட்டவரான ஜி யு போப். தன் மதத்தைப் பரப்பத் தமிழகம் வந்த இவர் திருவாசகத்தைப் படித்துத் திளைத்து அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். விளைவு, இவர் மேலதிகாரிகள் இவரைத் திரும்ப அழைத்துக்கொண்டதோடு நில்லாமல் கண்டிக்கவும் தண்டிக்கவும் செய்தனர். (திருவாசகத்தைப் படித்து உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எழுதிய கடிதத்தில் கண்ணீர்த் துளி விழுந்தது, தன் கல்லறையில் ‘இங்கே தமிழ் மாணவன் உறங்குகிறான்’ என எழுதச் சொன்னது… எல்லாம் கற்பனையின் பிற்புலத்தில் எழுந்த கதைகளே!) எப்படி இருப்பினும் திருவாசகத்தின் பெருமைக்கு இரண்டே இரண்டு சான்றுகள் போதும் : ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என இன்றும் வழங்கி வரும் (பழ) மொழி ; வள்ளலார் பாடிய வரிகள் : ,

“வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்….ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!”.

இத்திருவாசகத்தின் திருவண்டப் பகுதியில் மாணிக்கவாசகர் எழுதிய ஒவ்வொரு சொல்லையும் இக்கால அறிவியல் உண்மையே என உறுதிப்படுத்துகிறது.

எப்படி இக்கால அறிவியல் கருத்துகள் சைவத்தின் நடுவில் கொலு இருக்கின்றன என்பதைக் காணலாம் அடுத்த பகுதியில். சைவ சமயத்தின் மாபெரும் ஞானிகள் இருவர் வழி காட்ட வருகிறார்கள்.

Print Friendly, PDF & Email
Share

Comments (6)

 1. Avatar

  அருமை,தொடர்கிறேன் ஐயா.
  ஆச்சர்யமாக இருக்கிறது நீங்கள் கொடுத்துள்ள தீர்க்கரேகை புவியியல் குறிப்புகள்.
  கூகிள் வரைபடத்தின் மூலம் கிடைத்த தகவல் கீழே:
  கைலாயம் =  Himalaya என்று கூகிள் வரைபடத்தில் குறிப்பிடப் படும் பகுதியின் தீர்க்கரேகை பாகை = Himalaya >>> 31.54109,79.841766

  இது ரிஷிகேஷ் பகுதியாகும். அங்குள்ள மகாதேவர் கோயிலின் இடக் குறிப்பையும்; தட்சிண கைலாயம்என்றழைக்கப்படும் இலங்கையின் தொன்மையான நகுலேஸ்வரம் சிவன் கோயில் இடக்குறிப்பையும், சிதம்பரம் கோயிலின் இடக்குறிப்பையும் காண்க. இதனை நீங்கள் நேர்க்கோட்டில் வரைபடத்தில் வரைந்து காட்டியுள்ளீர்கள். அந்த இடங்களின் தீர்க்க ரேகை பாகைக்குறிப்புகளே இவை.
  விளக்கத்திற்கு நன்றி.

  Himalaya >>> 31.54109,79.841766
  Rishikesh Neelkanth Mahadev Temple >>> 30.080908,78.341019
  Chidambaram Temple >>> 11.399356,79.693461
  Dakshina Kailasa Puranam/Naguleswaram Temple of Sri Lanka >>> 9.814179,80.012094

  முழு எண்ணாக்கினால் கைலாயம், சிதம்பரம், தட்சிண கைலாயம் இருப்பது 80 பாகையில்.வியப்பாக இருக்கிறது.

  அன்புடன்
  ….. தேமொழி 

 2. Avatar

  அன்புச் சகோதரி தேமொழி அவர்களுக்கு
  வணக்கம்!
  நல்லதோர் ஆராய்ச்சிப் பணி செய்திருக்கிறீர்கள்.
  நான் செய்யத் தவறியது.
  பாராட்டுகள்.

  தாங்கள் தரும் ஊக்கம் -அதனால்
  பெருகும் என் ஆக்கம்!
  நன்றி பல
  அன்புடன்
  பெஞ்சமின்

 3. Avatar

  தொல்தமிழர்களின் வானியல் அறிவுக்கு திருமூலரின் பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நன்றி ஐயா!

 4. Avatar

  நன்றி ஐயா!
  நம் இலக்கியங்களுள் புதைந்து கிடக்கும் அறிவுக்கருவூலங்களை
  அறியாமல் / அறிந்துகொள்ளாமல் /அறிந்துகொள்ள முயலாமல்
  ஒட்டைக் கூரையை வைத்துக் கொண்டு ஏழைகளாய் அல்லாடிகொண்டிருக்கிறோம்!

  அன்புடன்
  பெஞ்சமின்

 5. Avatar

  தாங்கள் தருகின்ற சைவ சமயம்சார் செய்திகளும், திருமூலர் பாடல்களும் படிக்கப் படிக்கப் பரவசப்படுத்துகின்றன. மணிவாசகப் பெருந்தகையின் பாடல்களில் ஒன்றிரண்டையும் தந்திருக்கலாமே!

  நல்லதோர் ஆய்வு ஐயா…தொடருங்கள்! பாராட்டுக்கள்!!

 6. Avatar

  அன்புச் சகோதரி மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு

  வணக்கம்.
  பாராட்டுகளுக்கு நன்றி பல.
  ஊக்கம் தரும் தங்கள் சொற்கள்
  ஆக்கம் தரும்.

  பிண்டத்துக்கு வழி காட்டத் திருமூலரும்
  அண்டத்துக்கு விளக்கம் தர மாணிக்கவாசகரும் உள்ளனர் என்பதை
  ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறேன்.

  பிண்டம் பற்றிய பகுதியில்
  மாணிக்கவாசகரின் மணி வாசகங்களையும்
  அங்கங்கே குறிப்பிட்டு உள்ளேன்
  இனி வரும் பகுதியில் கண்டு தெளிக!

  அண்டப் பகுதிக்கு வரும் போது
  முழுக்க முழுக்க வழிகாட்டப் போகும் பேராசிரியர்
  மணிவாசகப் பெருந்தகை தானே!

  இப்படிப்பட்ட அரிய பெரிய
  சித்தர்களும் ஞானிகளும் வளர்த்த தமிழ்
  இன்று திரைப்பட, ஊடக , இணையதளப்
  பித்தர்கள் வசம் மாட்டிக்கொண்டு
  படும் பாட்டை எண்ணினால் கண்ணில் குருதி கொப்பளிக்கிறது!

  அன்புடன்
  பெஞ்சமின்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க