புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள் – பகுதி 3

4

 

-மேகலா இராமமூர்த்தி

 

(அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டில் நான் ஆற்றிய உரையின் தொடர்ச்சி)

மதிய உணவிற்குப்பின் சற்றே ஓய்வாக அமர்ந்திருந்தார் ’பிசிர்’ என்னும் அழகிய ஊரிலே வாழ்ந்துவந்த நற்றமிழ்ப் புலவரான ’ஆந்தையார்’. அவ்வூர் பாண்டிய நாட்டைச் சேர்ந்ததாகும்.

தன் உயிர்நண்பனும் சோழ அரசனுமாகிய கோப்பெருஞ்சோழனைப் பற்றிய நினைவுகள் மனத்திரையில் ஓட, தன்னை மறந்தவராய் அமர்ந்திருந்த ஆந்தையாரைக் கண்ட அவர் மனைவி அவரைநோக்கி, ”உங்களைக் காண ஊர்மக்கள் சிலர் வந்திருக்கிறார்கள்; சென்று காணுங்கள்” என்றுகூறச் சிந்தனை கலைந்து எழுந்திருந்த புலவர்பெருமான் தன்னைக் காண வந்தோரை வரவேற்று அவர்கள் வந்த காரணத்தை வினவினார். அவர்களோ, ”ஐயா! நாங்கள் வசதி படைத்தச் சீமான்களோ, செல்வந்தர்களோ அல்லர். மிகச் சாதாரணமான வாழ்வு நடத்தும் எளியோரே. நம் அரசனின் ஆட்சியில் வரி கட்டியது போக எங்களுக்குக் கட்டுவதற்குத் துணியும் மிஞ்சாது போலிருக்கிறதே! எதற்கெடுத்தாலும் வரி…வரி என்று குடிமக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் ஓர் கொள்ளைக்காரனாகவே அல்லவா மாறிவருகிறான் நம் அரசன் அறிவுடை நம்பி! எங்கள் துன்பத்திற்கு ஓர் விடிவே இல்லையா? தங்களைப் போன்ற சான்றோர்தான் இந்த அக்கிரமத்திற்கு ஓர் முடிவுகட்ட வேண்டும்” என்று வேதனையோடு தங்கள் நிலையை விளக்கிவிட்டு விடைபெற்றுச் சென்றனர்.

இதையெல்லாம் அருகிருந்தவாறே கவனித்துக் கொண்டிருந்த ஆந்தையாரின் மனைவி தம் கணவரை நோக்கி, ”ஏழைமக்கள் படும்பாட்டைக் கவனித்தீர்களா? இவர்களுக்காகவாவது நீங்கள்  நம் மன்னனை அவசியம் போய்ப் பார்க்கத்தான் வேண்டும்” என்றார்.

”நீ சொல்வது சரிதான்……நம் மக்கள்படும் துன்பம் என் மனத்தையும் வாள்கொண்டு அறுக்கின்றது. ஆயினும், இதுவரை நான் நம் மன்னன் அறிவுடை நம்பியோடு தொடர்போ, நட்போ கொண்டிருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், உறையூரிலிருந்து ஆட்சி செய்யும் கோப்பெருஞ்சோழனின் உயிர்நண்பனாகவேறு விளங்கிவருகிறேன். இவையெல்லாம் அறிவுடை நம்பிக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்; அவனை விடுத்துச் சோழ அரசனோடு நட்புப் பூண்டிருக்கும் என்னை அவன் வரவேற்பானா? நான் சொல்வதைக் கேட்டு நடப்பானா? என்ற ஐயம் என் மனத்தில் எழுகின்றது” என்றார் ஆந்தையார்.

”இந்த ஐயமே தேவையற்றது. இன்னொரு அரசனே உங்களிடம் நட்பாகப் பழகுகிறான் எனும்போது நம் அரசனும் உங்கள் நட்பை விரும்பவே செய்வான்; நீங்கள் சொல்லும் புத்திமதிகளைக் கேட்பான். ஆகவே தயங்காமல் நம் அரசனைச் சென்று காணுங்கள்” என்று ஆந்தையாருக்குத் தைரியமளித்தார் அவர் மனைவி.

“அப்படியா சொல்கிறாய்? நல்லது…..நாளை நம் மன்னனைப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை” என்றார் பிசிராந்தையார்.

மறுநாள் பொழுது இனிதே புலர்ந்தது. செங்கதிரோன் தன் ஒளிமுகத்தைக் காட்டிப் புன்முறுவல் பூத்தவாறே வானவீதியில் தன் பயணத்தைத் தொடங்கியிருந்தான். அவ்வேளையில் அரசனைக் காண்பதற்காகப் புறப்பட்டார் புலவர். வழக்கம்போலவே அரண்மனை வாயிலில் கெடுபிடிகள் அதிகமாக இருந்தன. அரசனைக் காண வந்திருப்பதாக ஆந்தையார் காவலர்களிடம் தெரிவிக்க, அவர்கள் அரசனின் அனுமதி பெறுவதற்காக உள்ளே சென்றனர். தன் அமைச்சர்களோடு ஏதோ விவாதித்துக் கொண்டிருந்த அறிவுடை நம்பி, பிசிராந்தையார் வெளியில் காத்திருக்கின்றார் என்பதைக் காவலர் வாயிலாய் அறிந்தவுடன் அவரைக் காணும் விருப்பம் கொண்டவனாய் உடனே அவரைக் காணச் சம்மதித்தான்.

மன்னன் தன்னை உடனே காண விரும்புகிறான் என்பதை அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த பிசிராந்தையார் உள்ளே சென்று கொலுமண்டபத்தில் வீற்றிருந்த மன்னனையும், அமைச்சர் பெருமக்களையும் வணங்கினார். இன்னும் சற்று நேரத்தில் அங்கே ஆடல், பாடல் நிகழ்வுகள் அரங்கேறவிருக்கின்றன என்பதற்கு அறிகுறியாக மகளிர் குழாம் ஒன்று ஒப்பனையோடு அம்மண்டபத்தின் ஒரு பக்கத்திலே காத்திருந்தது. அரசன், மக்கள் நலனைவிடக் கேளிக்கைகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறான் என்பதனை இவையெல்லாம் புலவருக்குத் தெளிவாய் உணர்த்தின.

நாட்டு நலன் பற்றியும், மக்களின் நல்வாழ்வு பற்றியும் அரசனுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்ந்துகொண்ட பிசிராந்தையார், தாம் சொல்லவேண்டிய செய்திகளை அரசன் நன்கு விளங்கிக்கொள்ளும் வகையில் உரைக்க விரும்பியவராய், “மன்னா! அடியேனின் வணக்கம்! உம்மைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பை என் பாக்கியமாய்க் கருதுகிறேன்” என்றார்.

அறிவுடை நம்பி புன்னகைத்தவாறே, ”இல்லை புலவரே! உம்மைச் சந்திப்பதை நான்தான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். சாதாரணப் புலவரா நீர்…! கோப்பெருஞ்சோழனையே உற்ற நண்பராகக் கொண்ட ஒப்பற்ற புலவரல்லவா!” என்று கூறிவிட்டு, என்னைத் திடீரென்று காணவந்ததன் காரணத்தை நான் அறியலாமா?” என்று வினவினான்.

”திடீர்ச் சந்திப்பு ஒன்றுமில்லை அரசே! நீண்ட நாட்களாகவே உம்மைக் காணவேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன்; அதற்கான சமயமும், வாய்ப்பும் இன்றுதான் கிடைத்தன.”

”அப்படியா, தங்கள் வருகைக்கு நன்றி! என்னிடம் ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?”

”ஆம் மன்னா! உனக்கு ஓர் கதை சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன்; கேட்க உனக்கு அவகாசம் இருக்கிறதா?”

“கதையா…என்ன கதை?”

”இது யானைக் கதை மன்னா! யானை எவ்வாறு உணவு உண்ணவேண்டும் என்பதை விளக்கும் கதை.”

கட கடவென்று சிரித்த நம்பி, ”வேடிக்கையான புலவரய்யா நீர்! கதை கேட்பதற்கு நானென்ன குழந்தையா?”

”இல்லை அரசே! இஃது குழந்தைகளுக்கான கதையில்லை; அரசனாகிய உனக்கான கதைதான். சொல்லட்டுமா….கேட்கிறாயா?”

”அப்படியானால் சரி! சொல்லுங்கள். கேட்கச் சித்தமாக இருக்கிறேன்.”

”மன்னா! விளைகின்ற நெல்லின் அளவு ஒரு மாவிற்கும் (இது நிலத்தின் அளவைக் குறிப்பது) குறைவாக இருப்பினும், அந்த நெல்லை முறையாக அறுவடை செய்துக் கவளம் கவளமாக யானைக்குக் கொடுத்தால், அஃது யானைக்குப் பலநாள் உணவாகும். மாறாக யானையையே வயலில் புகுந்து மேயவிட்டால் என்னவாகும்…? யானையின் வாயில் புகும் நெல்லின் அளவைவிட அதன் காலில் மிதிபட்டு அழியும் நெல்லின் அளவுதானே அதிகமாக இருக்கும்? அதனால் வயலும் நாசமாகும்; யானைக்கும் பயனில்லை.

நாட்டை ஆளுகின்ற அரசனும் இந்த யானையைப் போன்றவன்தான். அவனுடைய குடிமக்களோ விளைந்த பயிர்களையுடைய வயலைப் போன்றவர்கள். எனவே அரசன் குடிமக்களிடம் அளவாகவும், முறையாகவும் வரி வசூலிக்கவேண்டும். அப்போதுதான் இருவருக்குமே பயன் விளையும்; நாடும் செழிக்கும். அதைவிடுத்து, மக்கள்நலனில் சிறிதும் அக்கறையில்லாத அமைச்சர்கள், ஏனைய அரசியல் சுற்றத்தினர் ஆகியோரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மக்கள்பால் சிறிதும் அன்போ, பரிவோயின்றி அவர்களின் உழைப்பையும், பொருளையும் சுரண்டினால் அச்செயல் ‘யானை புகுந்த வயல்’ போல அல்லவா ஆகிவிடும்! விளைவு….? மக்களும் துன்புறுவர்; நாடும் அழிந்துவிடுமே! இதனை உனக்கு விளக்குவதற்காகவே இந்த யானைக் கதை” என்று மடைதிறந்த வெள்ளம் போல் பேசி நிறுத்தினார் பிசிராந்தையார்.

புலவரின் பொருள்பொதிந்த உரையைக் கேட்ட அறிவுடை நம்பி வாயடைத்துப் போனான். மக்களிடம் பரிவுகாட்டாத தன் செயலுக்காக வெட்கித் தலைகுனிந்தான். சற்று நேரம் அவையே அமைதியில் மூழ்கியிருந்தது. பின்பு, புலவரை நோக்கித் தணிந்த குரலில் பேசிய நம்பி, “என் அறிவுக் கண்களைத் திறந்துவிட்டீர்கள் புலவரே! இனி நான் குடிமக்களிடம் அதிக வரி வாங்க மாட்டேன்; அவர்தம் நல்வாழ்விற்கும், பாதுகாப்பிற்கும் பாடுபடுவதே என் இலட்சியம்!” என்று முழங்கினான்.

பிசிராந்தையாரும், ’வந்த வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டது’ என மகிழ்ந்து மன்னனை வணங்கி விடைபெற்றார்.

அவர் இயற்றிய காலத்தால் அழியாத காவியமான அப்பாடலை நாமும் காண்போமா?

”காய்நெல்   லறுத்துக்   கவளங்   கொளினே
மாநிறைவு   இல்லதும்   பன்னாட்கு   ஆகும்
நூறுசெறு   வாயினுந்   தமித்துப்புக்கு   உணினே
வாய்புகு   வதனினுங்   கால்பெரிது   கெடுக்கும்
அறிவுடை   வேந்தன்   நெறியறிந்து   கொளினே
கோடி   யாத்து   நாடுபெரிது   நந்தும்
மெல்லியன்   கிழவன்   ஆகி   வைகலும்
வரிசை   யறியாக்   கல்லென்   சுற்றமொடு
பரிவுதப   வெடுக்கும்   பிண்டம்   நச்சின்

யானை   புக்க   புலம்போலத்
தானும்   உண்ணான்   உலகமுங்   கெடுமே”  (புறம்: 184) என்பதே அப்பாடல்.

நம் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் பொய்யாமொழியும்,

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும். (குறள்: 448) என்றல்லவா கூறுகின்றது!

 அஃது உண்மைதான் போலும். அரசன் அறிவுடை நம்பியை நன்னெறிக்கண் செலுத்தாது அவன் விரும்பிய வழியிலெல்லாம் போக அனுமதித்தனர் அவன் அரசியல் சுற்றத்தார். ஆகவே அவனைத் திருத்தும் பொறுப்பைத் தாம்ஏற்று அவனை பெயருக்கேற்றபடி ’அறிவுடைய நம்பியாக’ மாற்றிய பெருமை நற்றமிழ்ப் புலவரும், சோழ அரசனின் உற்ற நண்பருமாகிய பிசிராந்தையாரையே சாரும்.

பிசிராந்தையாரின் பாடல்போலவே, வட மொழியில் எழுதப்பட்ட ’சுக்கிர நீதி’ என்ற நூலும் அரசன் மக்களிடம் வரி வாங்கவேண்டிய முறை பற்றிச் சிறப்பாய்ச் சொல்கின்றது. ”வண்டு மலரில் அமர்ந்து எப்படி அழகாகவும், அளவாகவும் தேனை உறிஞ்சுமோ, அதுபோல் அரசனும் மக்களிடம் அளவாகவும், அவர்களைத் துன்புறுத்தாமலும் வரி வாங்கவேண்டும். தேனைப் பருகி மகிழும் வண்டு அத்தோடு நில்லாமல் எப்படி ஒரு மலரின் மகரந்தத்தை இன்னொரு மலருக்கு எடுத்துச் சென்று மலர்களின் ’இனவிருத்திக்கும்’ உதவுகின்றதோ, அதுபோல் ஓர் நல்லரசன் மக்களிடம் வாங்கும் வரிப்பணத்தை மக்கள் நலத்திட்டங்களுக்காகவே பயன்படுத்தவும் வேண்டும்” என்பதையும் வலியுறுத்துகின்றது இந்நூல்.

இங்கு நாம் கண்ட செய்திகள் கால வேறுபாட்டைக் கடந்து எக்கால அரசியலுக்கும் பொருந்தக்கூடியவையே அல்லவா?

அடுத்து, ஒரே குடியில் தோன்றிய இரு அரசர்களுக்குள் தீராத கடும்பகை; அதனைத் தீர்த்துவைக்க விழைகின்றார் நல்லெண்ணம் கொண்ட புலவர் பெருந்தகை ஒருவர். அவருடைய முயற்சி வெற்றி பெற்றதா…?

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள் – பகுதி 3

  1. அருமை, தொடருங்கள் மேகலா, நானும் தொடர்கிறேன்.  துணிவுள்ள புலவர்களும், அவர்கள் கூறும் அறிவுரைகளை மனம்திறந்து ஏற்றுக்கொண்ட மன்னர்களும் பண்டைய தமிழகத்தின் தனிச்சிறப்பு போலும். இந்நாட்களில் துணிவுடன் எதிர்ப்பவர்கள் புவியில் இருந்தே காணாமல் போய் விடுவார்கள்.

    அன்புடன்
    ….. தேமொழி

  2. பழிக்கும், புலவருக்கும் அந்நாளில் மன்னர்கள் அஞ்சியது தெளிவாக தெரிகிறது. ஆனால் இன்று ஒரு எம்.எல்.ஏ வுக்குகூட புத்தி வேண்டாம் ஆலோசனைகூட சொல்ல முடியாது

  3. வரி வசூலை நெறிப்படுத்திய புலவரின் பாடல் அருமை. தாங்கள் அதனை விளக்கிய விதம் அதைவிட அருமை. நன்றி!

  4. கட்டுரையைப் பாராட்டி என்னை உற்சாகமூட்டி எழுதத் தூண்டுகின்ற அருமைத் தோழி தேமொழி, தோழர்கள் தனுசு, சச்சிதானந்தம் ஆகியோர்க்கு என் உளம்கனிந்த நன்றிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.